Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஹஜ் புனித பயணம்

உலகின் மிக நீண்ட புனித யாத்திரை

புனித யாத்திரைகள் எப்போதுமே  கடினமானதுதான். அதிலும் ஹஜ் போன்ற நீண்ட தூர பயணங்கள் தரும் சிரமங்களைவிட பரவசம் அதிகம். முன்பெல்லாம் ஹஜ் யாத்திரை கடல் பயணங்களாகவே இருந்தன. பயணம் முடிந்து வீடு திரும்புவது அபூர்வமான  காரியம். அதனால்தான் இதனை இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் கடைசியாக வைத்திருக்கிறார்கள்.

காபா
ஒரு மனிதன் தான் சம்பாதித்தவற்றில் குறிப்பிட்ட அளவு தானம் செய்து, தனது குடும்பத்தினர் தொடர்ந்து வாழ்வதற்கான எல்லா வசதிகளையும் செய்துவிட்டு இறுதியாகத்தான் இந்த யாத்திரை தொடங்கவேண்டும். பெரும்பாலும் அந்திம காலம்தான் இதற்கு ஏற்றதாக இருக்கும். அப்போதுதான் இந்தப் பயணத்தை மேற்கொள்வார்கள்.

அப்போதைய கடல் பயணம் மிக நீண்டதாகவும் கடினமானதாகவும்  இருந்தது. உயிரோடு வீடு திரும்பும் வாய்ப்பு குறைவு. ஹஜ் பயணி ஒருவர் தனது யாத்திரையின் போது இறந்துப் போனால் அது புனிதம். அதனால் புனித மண்ணில் இறப்பதை பெருமையாக கருதினார்கள். 

இன்று காலம் மாறிவிட்டது. விமானங்கள் சொகுசாய் அழைத்துச் செல்கின்றன. இறங்கியவுடன் ஏஸி காரில் பாலைவனத்தில் பயணம் என்று கிட்டத்தட்ட ஒரு சுற்றுலா போல் மாறிவிட்டது. 

பணம் மட்டும் கை நிறைய இருந்தால் போதும். அலுப்பு இல்லாத ஒரு யாத்திரைதான் ஹஜ் புனித யாத்திரை. 

அதிலும் சிரமங்கள் இருக்கிறது என்கிறார்; மெக்காவிற்கு 40 முறை சென்று, அதில் 6 முறை ஹஜ் புனித கடமையை நிறைவேற்றிய அன்வர் சமத் அவரிடம் பயணம் பற்றி கேட்டோம். அவர் முதலில் சென்றதற்கும் தற்போதைக்கும் உள்ள வித்தியாசங்களை கூட துல்லியமாக கூறினார்.

ஹாஜி அன்வர் சமத் மனைவி மற்றும் மகளுடன் 
"நபிகள் நாயகம் பிறந்த புனித மண்ணை வணங்கி வரவேண்டும் என்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் ரத்தத்தில் கலந்து போன ஒன்று. அந்த வாய்ப்புக்காக வாழ்நாள் முழுவதும் காத்திருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஏனென்றால் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ஹஜ் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் இத்தனை பேர் என்று சவுதி அரேபியா இலக்கை நிர்ணயித்துள்ளது. 

மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒதுக்கீடு நடக்கிறது. ஒரு நாட்டில் ஒரு கோடி முஸ்லீம்கள் இருந்தால் அந்நாட்டில் இருந்து 10,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் வருடந்தோறும் 1.70  லட்சம் யாத்திரிகர்கள் ஹஜ் புனிதப் பயணத்திற்கு செல்கின்றனர். இதற்கான விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விட மிக அதிக அளவில் இருப்பதால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 70 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு கட்டாயம் வாய்ப்பு தரப்படுகிறது. அதனால் ஹஜ் பயணத்திற்கான வாய்ப்பு ஒருவருக்கு கிடைப்பதே இறைவன் செயல்!

நான் சவுதி அரேபியாவில்  தொழில் செய்து வருவதால் என்னால் நினைத்த நேரத்தில் சென்று வர முடிந்தது. இது அல்லாஹ்வின் கருணை!

அரபாவில் தொழுகை 
பொதுவாக புனித யாத்திரைகள் எல்லாமே நடைப்பயணம் கொண்டதாகவே இருக்கும். ஹஜ் பயணமும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் சென்ற ஒவ்வொரு முறையும் வயதானவர்கள் நடக்க முடியாமல் சிரமப்படுவதை கண்டு மனம்
வருந்தியிருக்கிறேன். ஹஜ் பயணத்தில் 60 சதவிகிதத்திற்கு மேல் 60 வயதைக் கடந்தவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் படும்பாடு பரிதாபமானது.

அதனால், ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்தவுடனே பெரியவர்கள் தினமும் 5 முதல் 8 கி.மீ. வரை நடந்து பயிற்சி எடுப்பது நல்லது. 

இதை நான்கைந்து மாதம் தொடர்ந்து  மேற்கொண்டால்தான் அரஃபா முதல் முஸ்தலிஃபா வரை 8 கி.மீ. தொலைவை கடக்க முடியும். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் இந்த பயணத்திற்கு வரும் முஸ்லீம்கள்  எல்லோருமே வசதியானவர்கள். இவர்கள் பெயருக்குகூட நடப்பதில்லை. அதனால்தான் இங்கு நடப்பதில் சிரமப்படுகிறார்கள். ஹஜ் பயணத்திற்கு உங்கள் கால்களை பத்திரமாக வைத்திருப்பது மிக முக்கியம். 

இதுமட்டுமல்ல, மக்கா கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் இருக்கும் நகரம். இங்கு நம்மூரைப் போல் ஆக்ஸிஜன் அதிகம் இருக்காது. வேகமாக நடந்தால்  மூச்சுத் திணறல் ஏற்படும். இஹ்ராம் உடை உடுத்தி நடப்பதிலும் ஆண்களுக்கு பிரச்சினை இருக்கிறது. அதனால் நடைப்பயிற்சி  மேற்கொள்ளும்  போதே உள்ளாடை எதுவும் அணியாமல் வேஷ்டி மட்டும் அணிந்து நடைப்பயிற்சி செய்து வந்தால் இஹ்ராம் உடையில் நடக்க உதவியாக இருக்கும். சிரமங்கள் பல இருந்தாலும் இதுவொரு தனித்துவமான அனுபவம்.

ஹஜ் யாத்திரை என்பது இறைவனுடன் ஒன்றாகும் அடையாளம். ஒரு முஸ்லீம் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இது இறைவனை வணங்குவதற்கான உன்னதமான முறை.

ஹஜ் புனிதப் பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது. இந்த கடமையை துல்ஹஜ் மாதத்தின் 8வது நாள் முதல் 12-ம் நாள் வரை செய்ய வேண்டும். 

சென்னையிலிருந்து 6 மணி நேர விமானப் பயணத்தில் ஜெட்டா விமான நிலையத்திற்கு போய்விடலாம். அங்கிருந்து 108 கி.மீ. சாலை வழியாக பயணித்து மினா(மக்கா) வந்து விடலாம்.

மக்காவிற்கு வந்து சேர்ந்தவுடனே எல்லோரையும் 'ஹாஜி' என்றே அழைக்க வேண்டும். இங்கிருந்தே ஹாஜிக்களின் புனிதப் பயணம் தொடங்குகிறது. 

அவர்கள் சாதாரண உடையில் இருந்து ஓரங்கள் மடித்து தைக்கப்படாத இஹ்ராம் என்ற உடைக்கு மாற வேண்டும். வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த புனித உடையை உடலைப் போர்த்திக் கொள்வது போல் அணிந்து கொள்ள வேண்டும். 

இதுதான் ஹஜ் பயணத்திற்கான உடை.  இறைவன் முன் இருப்பவரும் ஒன்றுதான், இல்லாதவனும் ஒன்றுதான் என்பதை உணர்த்ததுவதற்கான அடையாளம் இந்த உடை.

ஹஜ்ஜின் முதல் நாள் மினாவில்தான் தங்க வேண்டும். மக்காவிலிருந்து  கிழக்கு பக்கமாக அராஃபா செல்லும் வழியில் பயணித்தால் 8 கி.மீ. தொலைவில் மினா வந்துவிடும். மினா என்பது ஒரு ஊரின் பெயர். இதற்கு 'விருப்பம்'  என்ற அர்த்தம் உண்டு.

 இந்த ஊரில் இரண்டு நீளமான தெருக்கள் உள்ளன. மிகப்பெரிய கட்டடங்களும் இருக்கின்றன. ஆனால் அவை எப்போதும் காலியாகவே இருக்கும். ஹஜ்  ஆரம்பமாகும் அந்த ஐந்து நாட்கள் மட்டுமே வாடகைக்கு விடுவார்கள். 1400 வருடங்களாகவே ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காகவே  இந்த இடத்தை ஒதுக்கி வைத்துள்ளார்கள். 

இங்கு குடியிருப்பது, கடைகள் வைப்பது போன்றவற்றை தடை செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் இங்கு தங்கியிருந்து தான் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள், என்பதால் இது புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது.

இங்கு 30 லட்சம் ஹஜ் பயணிகள் தங்கக்கூடிய அளவுக்கு பெரிய மைதானம் உள்ளது. இதில் எளிதில் தீப்பிடிக்காத ஏஸி வசதி கொண்ட கூடாரங்களை சவுதி அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

மினாவில் அமைக்கப்பட்டுள்ள ஏஸி கூடாரங்கள்
தீர்க்கதரிசியான இப்ராஹீம் தனது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முயற்சித்த இடமும் இதுதான். அதனால் இங்கு குர்பானி கொடுப்பதுதான் விஷேசம். இதுபோக ஜம்ரா என்ற சைத்தான் மீது கல் எரியும் இடமும்  இங்குதான் உள்ளது.

ஹஜ் பயணத்தின் மிக முக்கிய கடமை உம்றா செய்வது. உம்றா என்பது காஃபாவை ஏழுமுறை இடமாக சுற்றி வருவது. ஒவ்வொரு முறை சுற்றி வரும்போது அவர்கள் புனிதக் கருங்கல்லை முத்தமிடுவார்கள். அதிகமான  கூட்டம் காரணமாக கருங்கல்லை நெருங்க முடியாதவர்கள் தங்கள் வலது கையை உயர்த்தி காண்பித்தால் போதும். 

தவாஃப் செய்யும்போது சாப்பிடக்கூடாது. தண்ணீர் வேண்டுமானால் குடிக்கலாம். ஆண்கள் முதல் மூன்று சுற்றுகளை வேகமாக ஓடிச் செய்ய வேண்டும். மீதம் உள்ள நான்கை நடந்து நிறைவு செய்யலாம். முதல் மூன்று சுற்றுக்களின் போது 'அல்லாஹூ அக்பர்'  என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே செய்யவேண்டும். நான்கு சுற்றுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இங்கு வரும் ஹாஜிக்கள் பக்தி பெருக்கால்  ஏழு சுற்றுக்கும் 'அல்லாஹூ அக்பர் ' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே சுற்றுகிறார்கள்.

ஏழு சுற்றுகளை முடித்தப்பின் மகாமு இப்ராஹீம் எனப்படும் இடத்தில் தொழவேண்டும். காஃபாவை சுற்றி ஹாஜிகள் நடக்கும் இடத்தை முக்தாஃப் என்று அழைப்பார்கள்.

கருங்கல்லை முத்தமிடுதல்
தவாஃப் செய்து முடித்தவுடன் இந்த ஹாஜிக்கள் சஃயு என்ற ஓட்டம் ஓட வேண்டும். ஐயாயிரம் வருடத்திற்கு முன்பு இப்ராஹீமின் மனைவி ஹாஜர் தன் மகன் இஸ்மாயில் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தேடி ஓடியது போல் ஓட வேண்டும்.ஸஃபா-மர்வா என்ற இரண்டு மலைகளுக்கு இடையே ஏழு தடவை ஓட வேண்டும்.  

இப்படி ஓடிய ஹாஜர் அல்லாஹ் இடம் வேண்டியதால்தான் ஜம் ஜம் புனித நீர் கிடைத்தது. ஸஃபா-மர்வா இரண்டுமே சொர்க்கத்தின் வாசல்கள் என்றும் இங்கு துஆக்கள் செய்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபிகள் கூறியுள்ளார்கள். 

இந்த ஓட்டத்தின் போது முன்பு அதிக உயிர் சேதம் ஏற்பட்டது. இப்போது தனிப்பாதைகள் அமைக்கப்பட்டு  ஏஸி வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பு வெயிலில் அலைந்து உம்றாவை முடிக்கும் நிலை மாறி குளு குளு வசதியில் சுகமாய் முடியும் வண்ணம் மாறியிருக்கிறது.

சயு ஓட்டம்
அடுத்த நாள் ஹாஜிக்கள் மினாவிற்கு சென்று இரவுப் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். மறுநாள் அரஃபா மலைக்கு செல்வார்கள். மினாவிற்கும் அராஃபாவிற்கும் 17 கி.மீ. தூரம் ஆகும். 

அரஃபா என்றால் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளுதல் என்று பொருள். இறைவன் வானத்திலிருந்து ஆதமை இலங்கை பகுதியிலும், ஹவ்வாவை ஜித்தாவிலும் இறக்கினார். இருவரும் அழுது புலம்பி பாவமன்னிப்பு கேட்டபின் ஆதமும் ஹவ்வாவும் சந்தித்தது, ஒருவரையொருவர் புரிந்து  கொண்ட இடம் அந்த அரஃபா மலை.

இங்குதான் முகம்மது நபி தனது கடைசி சொற்பொழிவை நிகழ்த்தினார். அதனை நினைவுப்படுத்தும் விதமாக இங்கு கூடியிருக்கும் அனைவரும் குர்ஆனைப் படிக்கிறார்கள். அரஃபாவில் தங்கும் காலம் நடுப்பகலில் தொடங்கி சூரியன் மறையும் முன் முடிகிறது. இங்கு மதிய நேரத்தை கழிக்காவிட்டால் ஹஜ் பயணம் முழுமையடையாது.

அரபா மலையில் தங்கல்
சூரியன் மறைந்தப்பின் அரஃபா மலையைவிட்டு அராஃபா மைதானத்திற்கு செல்வார்கள். 8 மைல் நீளமும், 4 மைல் அகலும் கொண்ட இந்த மைதானத்தில்தான் இரவு நேரத்தை கழிப்பார்கள். இந்த அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அது 70 ஹஜ்ஜூக்கு சமமாகும் என்று நபிகள் கூறியுள்ளார்.

அரஃபா மலைக்கும் மினாவிற்கும் இடையே முஸ்தலிஃபா என்று இடம் அமைந்துள்ளது. இங்குதான் சைத்தானின் மீது எறிவதற்காக 70  பொடி கற்களைப் பொறுக்கிக் கொள்ள வேண்டும். பாலைவனம் நிறைந்த சவுதி அரேபியாவில் இங்கு மட்டும்தான் பொடிக்கற்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான ஹாஜிக்கள் கோடிக்கணக்கான
கற்களை எடுத்தும் கல் பற்றாக்குறை வந்ததில்லை. இது இறைவனின் அற்புதமே!

மினாவில் ஜம்ரதுல் எனும் சாத்தானின் மீது கல்வெறிவார்கள். சாத்தான் என்பதால் முரட்டுத்தனமாக வெறி கொண்டு எறிவார்கள். அல்லாஹ்வின் கட்டளைப்படி இப்ராஹிம் தன் மகனை பலியிடத் தயாராகும் போது மூன்று முறை அழைத்தும் அவர் வரவில்லை. அதனால் மூன்று பெரிய தூண்கள் இங்கிருக்கின்றன. இதன் மேல் எறியும் கற்கள் மலைபோல் குவிந்துவிட 2004-ம் ஆண்டு அந்தக் கற்களைக் கொண்டே பெரிய தூண்களை அமைத்துவிட்டார்கள்.

தொட்டியுடன் கூடிய சுவராக மாற்றிவிட்டார்கள். இந்த தொட்டியில் எறியும் கற்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த கடமையை முடித்த பின்பு விலங்குகளை பலியிடும் சடங்கு நடைபெறும். ஒருவர் ஒரு ஆட்டையோ, அல்லது 7 பேர்
சேர்ந்து ஒரு ஒட்டகத்தையோ மாட்டையோ குர்பானியாக பலியிடுவார்கள். இந்த இறைச்சியை தொண்டு நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதும் அனுப்பி வைப்பார்கள். இது முடிந்த பின் ஆண்கள் தலைமுடியை சவரம் செய்துவிடுவார்கள். பெண்கள் சடையில் இருந்து ஒரு அங்குல முடியை காணிக்கையாக கொடுப்பார்கள்.

ஹிரா குகை
அடுத்து ஹிரா குகை! ஹஜ்ஜின் கடமைகளில் இந்த குகை இல்லாவிட்டாலும் ஜபலுந்தூர் மலையின் உச்சியில் இருக்கும் ஹிரா குகை பாரம்பரிய புனிதம் மிக்கது. 6 அடி நீளமும், உயரமும், இரண்டே கால் அடி அகலமும் கொண்ட இந்த சின்னஞ்சிறிய  குகையில் நபிகள் நாயகம்  தவம் செய்தார். அப்போதுதான் முதன் முதலாக குர்ஆனின் ஐந்து வசனங்கள் சொல்லப்பட்டது. 

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக 23 ஆண்டுகளில் முழு குர்ஆனும் இறக்கி வைக்கப்பட்டது.  இந்த குகையை நேரில் பார்ப்பவர்கள் இங்கு எப்படி நபிகள் இரவு பகலாக தவம் செய்தார்களோ என்ற வியப்பு ஏற்படுவதை தவிர்க்க இயலாது.
தலைமுடியை வெட்டிக் கொண்டபின் ஹாஜி அனைவரும் மக்காவில் இருக்கும் அல்-ஹராம் பள்ளி வாசலுக்குச் சென்று மற்றொரு தவாஃப்  செய்வார்கள். காஃபாவை சுற்றி வருவார்கள். அன்றிரவை மீண்டும் மினாவில் கழிப்பார்கள்.

மறுநாள் மீண்டும் சைத்தான் மீது  கல் எறிவார்கள். மக்காவில் எல்லா கடமையும் முடித்தப்பின் 470 கி.மீ. தொலைவில் உள்ள மதீனாவுக்கு செல்வார்கள். அங்கு நபிகள் தோற்றுவித்த பள்ளிவாசலுக்கு  சென்றுவிடுவார்கள். 

'இந்தப் பள்ளியில் எவர் ஒருவர் இரண்டு ரத்அத் தொழுகிறாரோ அவருக்கு ஒரு உம்றா செய்த பலன் கிடைக்கும்' என்று நபிகளே கூறியிருக்கிறார். மதீனாவில் நபிகளின் துணைவி மற்றும் இஸ்லாம் மார்க்க தலைவர்கள் பலரின் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் இருக்கின்றன. இந்தப் பள்ளிக்கு 'மஜ்ஜிதுல் குபா' என்று பெயர்.

மஜ்ஜிதுல் குபா
தனது 53வது வயதில் நபிகள் மதினாவிற்குள் நுழைந்த போது அவர் ஏறிவந்த ஒட்டகம் ஒரு இடத்தில் அமர்ந்தது. இந்த இடத்திலேயே ஒரு பள்ளி வாசல் கட்டினார். ஈச்ச மரத் தூண்களை உத்தரமாகவும், ஈச்சந்தட்டிகளை கூரையாகவும் அமைத்து இதை உருவாக்கினார். மழைப் பெய்தால் மழைநீர் ஒழுகி மண் தரை முழுவதும் சகதியாகிவிடும். தொழுகை நடத்த முடியாத அளவிற்கு பாழ்பட்டு விடும்.

இதனைப் பார்த்த ஒரு பெரியவர் நபிகளிடம் இந்தப் பள்ளி நிலைத்து நிற்குமா? என்று கேட்டார். 'ஒரு நாள் வரும், அப்போது மக்கள் உள்ளே நுழைய இதன் வாயிலில் காத்து நிற்பார்கள்' என்றார். எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தை. தற்போது இந்த பிரமாண்ட பள்ளி வாசலில் 8 லட்சம் மக்கள் தொழுகிறார்கள். இரவு 11 மணிக்கு கதவு அடைக்கப்படும்.

அதிகாலை தொழுகைக்காக கதவு திறக்கப்படுவதை எதிர்பார்த்து லட்சக்கணக்கான மக்கள் காத்து நிற்கிறார்கள் எல்லாம்
நபிகளின் மகிமை '' என்று தனது பயண அனுபவத்தை  விரிவாகக் கூறி முடித்தார் அன்வர் சமத்

நமக்கும் ஹஜ் பயணம் முடிந்து திரும்பிய
திருப்தி கிடைத்தது!




ஜம் ஜம் நீர்






1 கருத்துகள்

  1. ஹஜ் பயணம் பற்றி இன்றே தெரிந்துகொண்டேன். புனிதப்பயணம்இன்று எல்லாம் மாற்றம் கண்டதைப்போல எளிதான பயணமாகி விட்டது போல. இந்த மதத்தினரும் பலியிடுவது குறித்து இன்று தான் தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை