புதன், நவம்பர் 19, 2014

மாதவிலக்கு ஆண்!


லகின் மிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலை சமீபத்தில் டைம் இதழ் வெளியிட்டது. 2014-ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், ஜப்பான் பிரதமர் ஷன்ஸோன்று நீளும் இந்த பட்டியலில் நான்கு இந்தியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, அர்விந்த் கெஜ்ரிவால், அருந்ததி ராய், முருகானந்தம் தான் அந்த நால்வர்கள். முதலில் இருக்கும் மூவரும் பிரபலமானவர்கள். எல்லோருக்கும் தெரிந்தவர்கள். ஆனால் கடைசியாக இருக்கும் முருகானந்தம்...? 

யார் இவர்? 
என்ற கேள்வியோடு அவரின் ஊரான கோயம்புத்தூருக்கு கிளம்பினேன். முருகானந்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் விசாரிக்கக்கூடாது, வட இந்தியாவுக்குப் போக வேண்டும். அதிலும் மலைவாழ் பழங்குடியினரிடம் கேட்க வேண்டும்.... அப்போது தெரியும் முருகானந்தம் எத்தகைய சாதனையாளர் என்று...?! 

அந்த சாதனை தான் அவரை உலகின் செல்வாக்கு மிக்க 100 மனிதர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது. பெண்கள் கூட தங்களுக்குள் பேசக் கூச்சப்படும் ஒரு வி­ஷயத்தை ஆராய்ந்து, முழுமையாக ஆராய்ச்சி செய்து அதற்கு எளிய தீர்வையும் தந்திருக்கிறார் இவர். 

ஒரு ஆணாக, பிறந்து, ஆணாகவே வாழ்ந்து, தனது உடலில் ரத்தம் சொட்டும் பையைப் பொருத்திக் கொண்டு பெண்களின் மாத விலக்கைப் பற்றி ஆராய்ச்சி செய்த முதல் ஆண் உலகிலேயே இவர்தான்..!


அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேசி விட்டு இந்தியா திரும்பி இருந்த வரை 'ஜென்ட்ஸ் ஸ்டைல்' இதழுக்காக சந்தித்தேன்.
எளிமையான மனிதர். உலகம் முழுவதும் விமானத்தில் பறந்து கொண்டிருப்பவர். சாதாரண மனிதர்கள் முதல் துபாய் அரசர் அல்நைன் ஷேக் வரை பழக்கம் வைத்திருப்பவர். புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உரையாற்றுபவர் என்று அறியப்பட்ட அருணாச்சலம் முருகானந்தம், தனது நாப்கின் தயாரிப்பு இயந்திரங்களின் மத்தியில் ஒரு மூலையில் சாதாரண ஸ்டீல் டேபிள், சேரில் அமர்ந்திருந்தார். இத்தனை உயரம் தொட்டவர் என்ற எந்தவொரு அடையாளமும் அவரிடம் இல்லை. அவரிடம் கலந்துரையாடியதிலிருந்து...

அருணாச்சல முருகானந்தம்
 "கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். எங்கள் குடும்பம் வறுமையோடு பின்னிப் பிணைந்தது. அப்பா அருணாச்சலம் ஒரு நெசவாளி. குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரம் அவர்தான். நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது ஒரு சாலை விபத்தில் அப்பா அகால மரணமடைந்தார். குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமும் நின்று போனது. குடும்ப பாரம் முழுவதும் என் தோளுக்கு மாறியது. படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பட்டறை வேலைக்குப் போனேன். என் தாய் வனிதாவும், பண்ணை வேலைக்குப் போனார். 

எனக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும்போதே அறிவியல் கண்காட்சியில் முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொறிக்கும் இயந்திரத்தை தயார் செய்து விருது பெற்றேன்.
பள்ளி விட்டு நின்ற பின் பல வேலைகள் செய்தேன். பட்டறை வேலை, மெஷின் டூல் ஆப்ரேட்டர், யான் விற்பனை ஏஜெண்ட், வெல்டர் என்று... வாழ்க்கை ஓடிக்கொண்டே இருந்தது. இதற்கிடையே திருமணம் வேறு. ஆனால், அதுதான் திருப்புமுனையை ஏற்படுத்தியது. என் வாழ்வில் நுழைந்த மனைவி சாந்தி மூலம்தான் என் பிறப்புக்கான அர்த்தம் தெரிந்தது. 

ஒருநாள் என் மனைவி வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மரத்தில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டு போனாள். அதை மறைத்து மறைத்து கொண்டு போனாள். 

'நான் அது என்ன?' என்று கேட்டேன். 'இது உங்களுக்கு தேவையில்லாத விஷ­யம்.இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம்' என்றாள். அவள் கையைப் பிடித்துப் பார்த்தேன். வடவடப்பான அழுக்கு அப்பிய துணி, எனது டூவீலரைக் கூட அதை வைத்து நான் துடைக்க மாட்டேன். அப்படிப்பட்ட மோசமான துணியைத்தான் அந்த மூன்று நாட்களில் என் மனைவி உபயோகிக்கிறாள்.

'நாப்கின் வாங்க வேண்டியது தானே...?' என்றேன். உடனே பதில் வந்தது. 'சானிடரி நாப்கின் வாங்கினால் பால் வாங்க முடியாது. காபி குடிக்க முடியாது' என்றாள். 

எதற்கு அவ்வளவு விலை அதிகம். அதில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள கடைக்குச் சென்று வாங்கினேன். என்னை ஏற இறங்கப் பார்த்த கடைக்காரர் ஒரு நியூஸ் பேப்பரில் அதைச் சுற்றி கொடுத்தார். எனது 29-வது வயதில் முதன் முதலாக சானிடரி நாப்கினை தொட்டுப் பார்த்தேன். பிரித்துப் பார்த்தேன். உள்ளுக்குள் 10 கிராம் பஞ்சு இருந்தது. அதன் விலை 10 பைசா தான். ஆனால் 40 மடங்கு கூடுதலான விலையாக விற்கப்படுகிறது. இதை சாதாரண பெண்கள் பயன்படுத்தும் வகையில் மலிவு விலையில் கொடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்லாம்? என்று யோசித்தேன். 

டெக்ஸ்டைல் நிறுவனங்கள் நிறைந்த கோயம்புத்தூரில், பஞ்சிலே புரளும் பெண்கள் ஏன் அந்த மூன்று நாட்களுக்கு அழுக்குத் துணிகளை உபயோகிக்க வேண்டும்? இந்த கேள்வி மீண்டும் மீண்டும் என் மனதில் தோன்றிய படியே இருந்தது.மனது அதைப் பற்றியே சிந்தித்தது. 

உடனே நூல் தயாரிக்க உதவும் பஞ்சை வைத்து நாப்கினை தயாரித்தேன். நான் முதன் முதலில் உருவாக்கிய நாப்கின், எனக்கு தோல்வியை மட்டுமல்ல. அவமானத்தையும் தேடித் தந்தது.
எனது நாப்கின்களுக்கு எனது மனைவியும் எனது சகோதரிகளும்தான் சோதனைக் கூட எலிகள். அவர்கள் எனது முதல் நாப்கினை முகத்திலேயே தூக்கி எறிந்தார்கள். இந்த நாப்கினை விட துணியே மேல் என்றார்கள். 

பருத்தி பஞ்சு ரத்தத்தை உறிஞ்சினாலும் உறிஞ்சிய வேகத்தில் வெளியே தள்ளும் என்பதை அதன்பின் புரிந்து கொண்டேன். அப்படியென்றால் நாப்கின் பஞ்சு வேறு. அது என்ன? என்று கண்டுபிடிக்கவே எனக்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டன. 

பைன் மரப்பட்டையிலிருந்து தயாராகும் செல்லூலோஸ் என்ற பஞ்சு தான் உறிஞ்சும் தன்மையிலும் தக்க வைத்துக் கொள்வதிலும் சிறந்தது என்று கண்டுபிடித்தேன். அதற்குப் பிறகுதான் எனக்கு நிஜமான சவால்களே தோன்றின. செல்லூலோஸ் இந்தியாவில் கிடைக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். 

உலகம் முழுவதும் சானிடரி நாப்கின் தொழிலை இரண்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் தங்களின் கைப்பிடிக்குள் வைத்துள்ளன. அந்த நிறுவனங்கள்தான் 120 பிராண்டுகளில் நாப்கின்களை வெளியிட்டு வருகின்றன. அதனால் தயாரிப்பு முறையை பரம ரகசியமாக வைத்திருக்கின்றன.

செல்லூலோஸ் பஞ்சை வாங்கினால் தான் மேற்கொண்டு நாப்கினை பற்றிய ஆராய்ச்சியை தொடர முடியும் என்ற நிலை. 9-ம் வகுப்போடு படிப்பை பாதியில் நிறுத்திய நான், எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் அதற்கான மூலப் பொருட்களை ஐ.எஸ்.டி. கால் செய்து கேட்டேன்.

 ஒவ்வொரு முறையும் டயல் செய்யும் போது 400 ரூபாய்க்கு மேல் செலவானது. ஐஎஸ்டி கால்களுக்கு மட்டுமே ரூ. 7,000 செலவானது. அப்போதுதான் மூலப்பொருட்களை சிறிய அளவில் கொடுக்க மாட்டார்கள்.  கண்டெய்னராக கப்பலில் மட்டுமே அனுப்புவார்கள் என்பது தெரிந்தது. உங்களின் "வெஸல் சைஸ்' என்ன என்று எதிர்முனையில் நளினமான ஆங்கிலத்தில் ஒரு பெண் குரல் கேட்டது. அப்போதுதான் நான் ஒரு பெரிய டெக்ஸ்டைல் மில் ஓனர் என்று பொய் சொல்லி சாம்பிள் அனுப்ப சொல்லி கேட்டேன். அவர்களும் அனுப்பி வைத்தார்கள். 

வந்து சேர்ந்ததோ அட்டையில் அழுத்தம் கொடுத்து பொதியப்பட்ட பஞ்சு. அது ஒரு துளி ரத்தத்தைக்கூட உறிஞ்சவில்லை. அழுத்தம் மூலம் அட்டை போல் மாற்றப்பட்ட கடினமான பஞ்சை பிரித்தெடுக்க ஒரு தொழில்நுட்பம் உள்ளது. அது தெரியாத காரணத்தால் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட செல்லூலோஸ் காட்டன் அட்டைகள் பல காலம் குப்பைகள் போல் என் வீட்டில் குவிந்து கிடந்தன. 

பஞ்சைப் பிரித்தெடுக்க டிபைபரே­ஷன் என்ற தொழில்நுட்பத்தையும் அதற்கான இயந்திரத்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினேன். அப்போதுதான் சரியான நாப்கினை தயாரிக்க வேண்டும் என்றால் மாதவிலக்குப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுதான் எனக்கு பைத்தியக்காரன் என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது. ஊரைவிட்டு வெளியேற்றியது. என் மனைவியை பிரிய வைத்தது. 

எனது நாப்கினில் சிறுசிறு மாற்றம் செய்து மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் கொடுத்தேன். இதற்காக 20 மாணவிகளிடம் பேசியிருந்தேன். உடன் படிக்கும் மாணவர்களே அந்த மாணவிகளிடம் பேசத் தயங்கும் காலத்தில் ஒரு ஒர்க்ஷாப் மனிதனான நான் சந்தித்து பேசினேன். அவர்களும் சம்மதித்தனர். நாப்கினை உபயோகித்தனர். ஆனால், அவர்களிடம் வெளிப்படையான உண்மையான கருத்துக்கள் கிடைக்கவில்லை. அதனால் நானே என்னை பரிசோதனைக்கு உட்படுத்தினேன்.


பெண்களின் பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்காக செயற்கையான கருப்பையை பொருத்தினேன். அது ஃபுட்பால் பிளாடர். அதற்குள் ஆட்டு ரத்தத்தை ஊற்றி, அதில் சிறு துளையிட்டு என் இடுப்பில் கட்டிக் கொண்டேன். 

அதோடு 
நடந்தேன்.... 
ஓடினேன்... 
சைக்கிள் ஓட்டினேன்...

எல்லா வேலைகளையும் செய்தேன். இதன் மூலம் வெளியேறும் ரத்தத்தை என்னுடைய நாப்கின் எப்படி உறிஞ்சுகிறது என்று ஆராய்ந்தேன். 

உலகிலேயே இப்படி சோதனை செய்த ஆண் நானாகத்தான் இருப்பேன்.
எனது உள்ளாடைகளில் இருந்த இந்த ரத்தம் பட்ட கறையை ஊருக்கு பொதுவான கிணற்றில் வைத்து துவைத்த போது முருகானந்தத்துக்கு பால் வினை நோய் வந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கும், எனக்கும் தவறான உறவு இருக்கிறது என்று ஊர் சொல்லத் தொடங்கியது. இதையெல்லாம் நம்பிய என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து சென்றாள்.
ஆனாலும் என் ஆர்வம் குறையவில்லை. 

பெண்கள் உபயோகித்து தூக்கி எறிந்த, ரத்தக்கறை படிந்த நாப்கின்களை வீட்டுக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தேன். வீடு முழுக்க உபயோகித்த நாப்கின்கள் மலையாக குவிந்தன. என் அம்மா எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக நினைத்தார். எனக்கு சமைத்து போட முடியாது என்று கூறி என்னை விட்டு சென்றார்.

எனது கிராமமோ என்னை ஊரை விட்டே விலக்கி வைக்க முடிவு செய்தது. அதற்கு முன் நானே முந்திக் கொண்டு ஊரை காலி செய்து கோயம்புத்தூர் வந்து விட்டேன். என் மனைவி போய் விட்டார். என் தாய் உதறி விட்டார்... ஊர் விலக்கி விட்டது. தனிமை மட்டும்தான் எனக்கு சொந்தமாக இருந்தது. அது எனது ஆராய்ச்சியை மேலும் மெருகேற்றியது. 

நான்கு வருட விடாமுயற்சிக்குப் பிறகு குறைந்த விலை நாப்கின் தயாரிக்கும் மெஷினை உருவாக்கினேன். இந்த மெஷினின் விலை 80,000 ரூபாய்தான். ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ள மெஷின் ₹3.5 கோடி. இந்த மெஷினில் தயாரிக்கப்படும் நாப்கின் 4-5 ரூபாய் விலைக்கு விற்கப்படுகிறது. எனது மெஷினில் 8 மணி நேரத்தில் 1000 பேட்கள் தயாரிக்கலாம். ஒன்றின் விலை 1.50-2 ரூபாய் தான்.
மெஷினை தயாரித்தப்பின் அதற்கான காப்புரிமையைப் பெற்றேன். இந்த மெஷினை கிராமத்து பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு வாழ்வாதாரத்தை தர வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்தேன். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தம்தரி மாவட்டத்தில் குர்ஜரீஸ் என்ற பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் கால்நடைகளுடன்தான் வாழ்வார்கள். ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள். இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். அந்த மலைக்கிராமத்துக்கு கழுதை மேல் மெஷினை வைத்து கொண்டு போனேன். மென்மையாக நாப்கின் உபயோகிப்பது குறித்து அவர்களுக்குப் புரிய வைத்தேன். ஒன்றரை வருடத்தில் மாற்றம் தெரிந்தது. கல்வியைப் பற்றி தெரியாத ஒரு சமூகத்தில், ஒரு பெண் தன் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பினார். பெண்கள் முன்னேறினால் போதும். அந்த குடும்பமே முன்னேறும். 

அந்த நேரத்தில் தான் தேசிய கண்டுபிடிப்புக்காக ஜனாதிபதி விருது எனக்கு கிடைத்தது. என்னைப் பற்றி இந்தியாவில் உள்ள எல்லா பத்திரிகைகளும், டி.வி.யும் கூறின. நான் திடீரென்று பிரபலமானதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் எனக்கு ஒரு போன் வந்தது. தழுதழுத்த குரலில் "என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அது எனது சாந்தியுடைய குரல்தான். ஐந்தரை வருடங்களுக்குப் பின் அந்த குரலைக் கேட்டேன். 

எனது சொந்தங்கள் மீண்டும் என்னை வந்து சேர்ந்தன. இன்றைக்கு இந்தியாவில் 23 மாநிலங்களில் 1,300 கிராமங்களிலும், 7 நாடுகளிலும் எனது மெஷின் விற்பனை ஆகி வருகிறது. என்ன, என் மகள் நாப்கின் உபயோகிக்கும் வயதில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவள் இப்போதுதான் யூ.கே.ஜி. படிக்கிறாள்'' என்று உணர்வுகள் பொங்க கூறி முடித்தார் அருணாச்சலம் முருகானந்தம். 

1997-ல் தொடங்கி 2005-ல் ஆய்வில் வெற்றி கண்ட முருகானந்தம் தனது லோ-காஸ்ட் நாப்கின் மெஷினை தனது லாபத்திற்காகவும், பேராசைக்காகவும் பயன்படுத்தவில்லை. வறியவர்களுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்காகவுமே தயாரித்துக் கொடுத்தார்.
பெண்மைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட முருகானந்தத்திற்கு சரியான நேரத்தில் சரியான கெளரவத்தை கொடுத்திருக்கிறது "டைம்' இதழ்.  அவரை நாமும் வாழ்த்துவோம்.!
திங்கள், நவம்பர் 17, 2014

ஐம்பதில் வந்த கல்யாண ஆசை


ல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்தப் பின்னே துறவறம் என்கின்றன வேதங்கள். ஆனால், சங்கர குலத்தில் தை மாதத்தில் மக நட்சத்திரத்தில் பிறந்த சிவவாக்கியர்,   பிறக்கும் போதே”’  சிவ சிவ’ என்ற நாமத்தை சொல்லிக் கொண்டே பிறந்தவர்.   அவருக்கும் இது பொருந்துமா ? 

ஆண், பெண் என்ற இரண்டு உடல்கள் ஒருமனதோடு ஒன்றிணைந்து போகமாகிய இன்பம் பெறுவது உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இது இல்லாமல் யாரும் பிறப்பதில்லை. சிவ வாக்கியரும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

வாலிப வயதிலே காலத்தின் தத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் உணர்ந்தவர் அவர். என்னதான் உணர்ந்திருந்தாலும் அவரது அடி மனதில் ஒரு மனக்குறை இருந்து வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. இந்த மன குழப்பத்துடனே அவர் காசிக்குச்  சென்றார்.

காசி நகரின் தெருவோரத்தில் ஒருவர் செருப்பு தைத்து தொழில் செய்து வந்தார். அவர் காற்றை கட்டுக்குள் கொண்டுவரும் பிரணாயாமம் தெரிந்தவர். அவர் ஒரு சித்தர். தனக்கு ஒரு நல்ல சீடன் வேண்டு மென்று நித்தம், நித்தம் இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார். 

அவரிடம் சிவ வாக்கியர் வந்து சேர்ந்தார். “ அய்யனே ! என் மனக்குறையை சொல்லவே இங்கு வந்தேன் ” என்றார். வந்திருப்பவர்தான் தனக்கு ஏற்ற சீடர் என்பதை உணர்ந்த அந்த சித்தர், “ அப்பனே ! செருப்பு தைத்த காசு என்னிடம் இருக்கிறது. இதை எடுத்துப்போய் என் தங்கை கங்கா தேவியிடம் கொடு. இதோ இந்த பேய் சுரைக்காய் ஒரே கசப்பாக இருக்கிறது. இதன் கசப்பை கழுவி வா ! ”  என்றார்.

சிவ வாக்கியருக்கு ஒன்றும் புரியவில்லை. மனக்குறையை தீர்த்துக் கொள்ளலாம் என்று இங்கு வந்தால், இவரோ காசையும், சுரைக்காயையும் கொடுக்கிறாரே என்று யோசித்தப்படி நதிக்கரைக்கு வந்தார்.

சித்தரின் காசை நதியின் மீது வைக்க போனார், அப்போது வளையல் அணிந்த ஒரு பெண்ணின் கை அந்த காசை பெற்றுக் கொண்டு உடனே மறைந்தது. இதெல்லாம் சிவ வாக்கியரை ஆச்சர்யப்பட வைக்க வில்லை. அவர் தன்னிடமிருந்த பேய் சுரைக்காயை கழுவிக் கொண்டு போய் சித்தரிடம் கொடுத்தார்.

“ வந்து விட்டாயா  அப்பனே ! நான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன். கங்கா தேவியிடம் கொடுத்த காசு எனக்கு மறுபடியும் வேண்டும்... இதோ இந்த தோல் பைக்குள்  நீர் இருக்கிறது. இதையே காங்கா தேவியாக நினைத்து காசைக்கேள்..”  என்றார்.

சிவ வாக்கியரும் சித்தர் சொன்னபடியே கேட்டார். மறு வினாடியே தோல் பைக்குள் இருந்து வளையல் அணிந்த பெண்ணின் கை வெளியில் வந்தது. அதன் கையில் அதே காசு இருந்தது. சிவ வாக்கியர் அந்த காசை எடுத்து  சித்தரிடம் நீட்டினார்.

ஏனோ, அந்த வளைக்கரம் சிவ வாக்கியரின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதை கவனித்த சித்தர், “எனக்கேற்ற மாணவனாக நீபக்குவம் பெற்றுள்ளாய். முக்தி நிலை வரும் வரை நீ இல்லறத்தில் இருக்க வேண்டும். உன்னிடம் இந்த பேய் சுரைக்காயையும், கொஞ்சம் மணலையும் தருகிறேன். இந்த இரண்டையும் கலந்து உனக்கு உணவு சமைத்து கொடுக்கும் பெண்ணே உனக்கு ஏற்றவள். அவளை மணந்து இல்லறம் நடத்து ”என்று கட்டளையிட்டார்.

சிவ வாக்கியரின் மனக்குறையே இதுதான். இத்தனைக் காலமும் இல்லாமல் காலம் போன காலத்தில் இப்படியொரு ஆசை ஏற்பட்டதே என்று யாரிடமும் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளே மருகினார். அப்போது சிவ வாக்கியருக்கு வயது 51. இந்த வயதில் தான் அவருக்கு இல்லற நாட்டம் ஏற்பட்டது.

இதை சித்தர் புரிந்து கொண்டு இல்லறத்தில் ஈடுபட அனுமதி அளித்தார். பின்பு பல உபதேசம் செய்தார். சித்தர் பாதம் தொட்டு வணங்கி அங்கிருந்து புறப்பட்டார் சிவ வாக்கியர். வழியில் தவ ஞானமும் பெற்றார். உடலால் பெறுகின்ற இன்பம் சரீர சந்துஷ்டி என்கிற சிற்றின்பம். ஆன்மாவின் நிம்மதியே ஆத்ம சந்துஷ்டி என்கிற பேரின்பம். இதற்கான கல்வி நெறிதான் யோக சாஸ்த்திரம். இவற்றை எல்லாம் பாடல் மூலம் சொல்லிக் கொண்டே சென்றார் சிவ வாக்கியர். சிலர் அவரை சித்தர் என்றனர், சிலரோ அவரை பித்தர் என்றனர்.

சிவ வாக்கியர் எதிர்பட்ட பெண்களிடம் எல்லாம்அழாத குறையாக  “இந்த பேய் சுரைக்காயையும், மணலையும் பிசைந்து உணவு படைக்கும் பெண் உங்களில் யாரும் உள்ளனரோ ? ” என்று கேட்டுக் கொண்டே சென்றார்.

சிவ வாக்கியர் இளமையான தோற்றமும், அழகும் கொண்டவர். அதனால், பெண்கள் அவர் மீது காதல் வயப்பட்டனர். ஆனாலும், இந்த கேள்வியை கேட்டதும் எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டனர். இவரை பைத்தியம் என்றனர்.

இப்படி பெண்ணை தேடி, தேடி சலித்து போன சிவ வாக்கியர் கடைசியாக குறவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றார். அங்கு ஒரு குடிசையின் வாசலில் ஒரு கன்னிப் பெண் அமர்ந்திருந்தாள். வாசலில் பிளக்கப்பட்ட மூங்கில்கள் கட்டுக் கட்டாக கிடந்தன.

“வீட்டில் யாரும் இல்லையாம்மா? ” என்று அந்த பெண்ணிடம் கேட்டார்.

“தாங்கள் யார் ? எனது பெற்றோர்கள் கூடை முடைய மூங்கிலை வெட்டி வர காட்டுக்கு சென்றிருக்கிறார்கள்”  என்றாள்.

“ஒரே தாகமாக இருக்கிறது. தண்ணீர் கிடைக்குமா? பெண்ணே ! ”  கேட்ட மாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள் அந்த பெண்.

“பெண்ணே ! நான் பசியில் இருக்கிறேன் !  சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு பசி தாங்கமுடியவில்லை என்னிடம் ஒரு பேய் சுரைக்காயும், கொஞ்சம் மணலும் இருக்கிறது. இதை வைத்து சமைத்து எனக்கு உணவளிக்க முடியுமா? ”

மற்ற பெண்களை போல் இந்த பெண் ஓடி ஒளியவில்லை, ஏளனமாக சிரிக்க வில்லை, இடக்கு மடக்காக கேள்விகள் கேட்கவில்லை. செருப்பு தைக்கும் சித்தரிடம் சீடனாக சிவ வாக்கியர் சென்ற போது எப்படி சித்தர் சொன்ன எந்த ஒரு வேலைக்கும் எதிர் கேள்வி கேட்காமல் சிவ வாக்கியர் செய்து முடித்தாரோ... அதே போல் இவரின் கட்டளைக்கு அந்த பெண்ணும் எந்த கேள்வியும் கேட்க வில்லை. பக்குவப்பட்ட அந்த கன்னிப்பெண் பேய் சுரைக்காயையும், மணலையும் பிசைந்து, குறையேதும் மில்லாத உணவு சமைத்து சாப்பிட அழைத்தாள்.


சிவ வாக்கியருக்கு ஆச்சர்யம் !   உணவின் சுவை பிரமாதமாக இருந்தது. குருநாதர் அடையாளம் காட்டியப் பெண் இவள்தான் என்ற முடிவுக்கு வந்தார்.

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் வந்தனர். வீட்டில் சிவ வாக்கியர் இருப்பதைக் கண்டு திகைத்தனர். அந்தப் பெண் தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறினாள். பேய் சுரைக்காயையும், மணலையும் உணவாக சமைக்கப்பட்டதை கேள்விப்பட்டு அவர் ஒரு சித்தராகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவரின் பெற்றோர்கள் வந்தனர்.

“ அய்யா, நீங்கள் இல்லாதபோது உங்கள் வீட்டுக்கு வந்தேன். உங்கள் பெண் எனக்கு அற்புதமான உணவு சமைத்து பரிமாறினாள். எதிர்த்துப் பேசாத  ஒரு பொருமையான பெண்ணை தவம் செய்வதற்கு துணையாக இதுநாள் வரை தேடி வந்தேன் . கிடைக்க வில்லை. மிக நல்ல குணநலன்களும் பண்புகளும் கொண்ட உங்கள் பெண்ணை நானே மணந்து கொள்ள விரும்புகிறேன்." சிவ வாக்கியர் கூறியதும், பெற்றோர்கள் திகைத்துப் போயினர்.

அவர்களின் திகைப்பைப் பார்த்து “ஏன் ? உங்கள் பெண்ணை மணந்து கொள்ள எனக்கு தகுதி இல்லையா? ” என்று கேட்டார்.

“சுவாமி, தாங்கள் எங்கள் இடத்திற்கு வந்ததே நாங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். எங்கள் குலவழக்கப் படி திருமணத்திற்கு பிறகு தாங்கள் எங்கள் இல்லத்தில் தான் தங்க வேண்டும். அனைத்தும் அறிந்த தாங்களை எங்களுடன் வைத்துக் கொள்ள சிறிது தயக்கம்! அதுதான்...!”  என்றனர்.

சிவ வாக்கியர் மறுப்பெதுவும் கூறவில்லை.  குறவர்களின் வழக்கத்தை ஏற்றுக் கொண்டார். அவர்கள் முறைப்படி ஒரு வெண்கலத்தை தட்டி ஓசை எழுப்பி திருமணத்தை அங்கேயே நடத்தினார்கள்.

காசி சித்தரின் கட்டளைப் படி சிவ வாக்கியர் பெண்ணின் வீட்டிலேயே தங்கினார். அந்தக் குறப்பெண்ணுடன் இல்லறம் மேற்கொண்டார். என்னதான் மனக்குறை இருந்தது என்று இல்லறத்தை அவர் மேற் கொண்டாலும் ஆசைகளற்ற நிலையிலேயே இருந்தார்.

அவர்களின் இல்லறக் கடமைகளில் ஒன்றான மூங்கில் வெட்டி முறம் செய்வததற்காக தினமும் காட்டுக்கு போய்  மூங்கில்களை வெட்டி வந்தார்.

சித்தர்கள் ஞான நிரை எய்தும் போது இந்த பிரபஞ்ச ரகசியம் அனைத்தும் திரை அகன்று விலகி விடுகிறது. மனதின் அகக்கண் திறக்கும் போது புறக்கண்ணுக்கு புலணாகாதெதல்லாம் புலப்படுகிறது. பிற்காலத்தில் பொய்யான ஆச்சாரங்களை எதிர்த்து தன் கருத்துக்களை பார பட்­சம்மின்றி கூறினார். உனக்குள் கடவுள் இருக்கிறார். வெளியே தேடி அலையாதே என்று பட்டவர்த்தனமாக பாடினார் சிவ வாக்கியர்.

இப்படியாக ஒரு பக்கம் இல்லறம், மறு பக்கம் ஞானம் என்று இரட்டை குதிரையில் பயணித்தார் சிவ வாக்கியார்.

மறுநாள் காலை காட்டிற்குள் சென்ற சிவவாக்கியர் அங்கு பருத்து உயரமாக வளர்ந்திருந்த மூங்கிலை வெட்டினார். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. 

மூங்கில் வெட்டப்பட்ட இடத்திலிருந்து பொடிப் பொடியாக சின்ன சின்னதாக தங்கத்துகள் கொட்டிக் கொண்டே இருந்தது. அதனைக் கண்டு சிவ வாக்கியர் திகைத்து போனார்.

இறைவா இது என்ன சோதனை? பற்றற்ற எனக்கு தங்கத்தை காட்டி சோதிக்கிறாயா ? இறைவனே ? நான் உன்னிடம்முக்தி மட்டும் தானே கேட்டேன். புத்தியை பேதலிக்க வைக்கும் இந்த யுக்தி எனக்கு தேவைதானா? சித்தி தரும் சிவனே உன்னால் முடியா விட்டால் பேசாமல் இருக்க வேண்டியதானே என்னை ஏன் பயம் கொள்ள வைக்கிறாய்? என்றபடி அங்கிருந்து வேகமாக ஓடினார்.

அப்போது அந்த வழியாக மூங்கில் காட்டுக்குள் வந்து கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் தலை தெறிக்க ஓடி வந்த சிவ வாக்கியரை நிறுத்தி "சுவாமி எதற்காகஇப்படி பயந்து ஓடுகிறீர்கள்?" என்று கேட்டனர்.

"நான் ஒரு மூங்கிலை வெட்டினேன். அதற்குள் இருந்து ஆட்கொல்லி பூதம் வெளிவந்தது. அதைப் பார்த்து தான் பயந்து ஓடி வந்தேன்" என்று சிவவாக்கியர் தங்கமாக குவிந்த கிடந்த மூங்கிலை காட்டினார்.

தங்கத்தை பார்த்து பரவசப்பட்டுப் போன அந்த இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். தங்கத்தின் அருமை தெரியாத பைத்தியக்காரன். இந்த தங்கத்தை வைத்து ராஜ வாழ்க்கை வாழலாமே என்று கூறிய அந்த இளைஞர்கள் கொட்டிக் கிடந்த தங்கத்தை மூட்டையாகக் கட்டினார்கள்.

பொழுதும் போனது... 
இரவும் வந்தது... 
பசி அனைவரின் காதை அடைத்தது. இனி சாப்பிடாமல் தங்க மூட்டைகளை சுமந்து போக முடியாது என்ற நிலை. இளைஞர்கள் பக்கத்து ஊரில் உணவு வாங்கி வருவதென நினைத்தனர். இருவர் உணவு வாங்கச் சென்றனர். இருவர் தங்கத்துக்கு பாதுகாப்பாக காவல் இருந்தனர்.

உணவு வாங்கி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த இருவருக்கும் ஒரு கொடூர எண்ணம் தோன்றியது. அதன்படி அவர்கள் இருவருமே மற்ற இருவர்களை உணவில் விஷம் வைத்து கொன்று விட்டு, முழு தங்கத்தையும் தாங்களே பங்கிட்டு கொள்வதாகத் தீர்மானித்தனர். அதற்காக வாங்கிச் செல்லும் உணவில் விஷத்தைக் கலந்தனர்.

அவர்கள் கொண்டு வந்த உணவை காத்துக் கொண்டிருந்த இருவரிடமும் கொடுத்தனர். சாப்பிடுவதற்கு முன் "எங்களுக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. நீங்கள் அந்த கிணற்றில் நீர் இருக்கிறதா?"  என்று பாருங்கள் என்றனர்.

உணவு கொண்டு வந்தவர்கள் கிணற்றின் மேல் நின்று பார்த்தனர். தங்கத்துக்கு காவல் இருந்த இரண்டு பேரும் அவர்களை பின்னால் இருந்து கிணற்றுக்குள் தள்ளி விட்டனர். சிறிது நேரம் தண்ணீரில் தத்தளித்த இருவரும் மூச்சு திணறி இறந்தனர்.

அதன் பிறகு தள்ளிவிட்ட இருவரும் விஷம் கலந்த உணவை உண்டனர். சிறிது நேரத்தில் அவர்களும் இறந்தனர்.

காலையில் மூங்கில் வெட்ட வந்தார் சிவவாக்கியர். நான்கு இளைஞர்களும் இறந்து கிடப்பதை பார்த்த அவர் 'அட!அந்த ஆட்கொல்லி அதற்குள் நான்கு பேரையும் அநியாயமாகக் கொன்று போட்டு விட்டதே!' என்று மனம் வருந்தி, அங்கிருந்து சென்றுவிட்டார். சிவவாக்கியர் முற்றிலும் ஆசையை துறந்து ஞானியாகவே இறுதிவரை இறந்தார்.

சித்தர்களுக்கு மற்றொரு சித்தரின் தவ வலிமை நன்றாக தெரியும். இப்படித்தான் கொங்கணவச் சித்தர் ஒருமுறை வான் வழியே போய்க் கொண்டிருந்தார். கீழே நந்தவனத்தில் சிவவாக்கியர் உணவுக்காக கீரையைப் பிடுங்கிக் கொண்டிருந்தார். அப்போது சிவவாக்கியரின் தவ ஒளி வான்வெளி எங்கும் நிறைந்திருந்தது. அந்த நந்தவனத்துக்குள் இறங்கினார். இரண்டு சித்தர்களும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

சிவவாக்கியரின் தவவலிமையை நன்கறிந்தவர் கொங்கணவச் சித்தர். அதன்பின் அடிக்கடி வந்து சிவவாக்கியரை பார்த்துசென்றார். இப்படி அவர் வரும் போதெல்லாம் சிவவாக்கியர் சாதாரண குறவர் இனத்தை சேர்ந்தவரைப் போல் எப்போது பார்த்தாலும் மூங்கிலைப் பிளப்பதும், முறம், கூடைகள் செய்வதமாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். சதா சர்வ காலமும் வேலை செய்து கொண்டிருப்பவருக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார்.


ஒரு முறை சிவவாக்கியரைத் தேடி கொங்கணவச் சித்தர் அவரது வீட்டுக்கே வந்து விட்டார். அந்த நேரம் பார்த்து வீட்டில் சிவ வாக்கியர் இல்லை. அவரது இளம் மனைவி மட்டுமே இருந்தார். வீட்டினுள் வந்த கொங்கணவர், சிவவாக்கியர் மனைவியிடம் வீட்டில் உபயோகப்படுத்தப் படாமல் வீணாய் கிடக்கும் இரும்புத் துண்டுகளைக் கொண்டு வா என்றார்.

வீடு முழுவதும் தேடி, மூலை முடுக்கில் இருந்த இரும்புத் துண்டுகளையெல்லாம் கொண்டு வந்து கொடுத்தாள். அவற்றை எல்லாம் கொங்கணவர் தங்கமாக மாற்றிக் கொடுத்து விட்டு அங்கிருந்து மறைந்து  போனார்.

மாலையில் காட்டுக்குள் மூங்கில் வெட்டப்போன சிவவாக்கியர் வீடு திரும்பினார். கணவரிடம்  மனைவி கொங்கணவச் சித்தர் வந்து போனதையும், இரும்புத் துண்டுகளை எல்லாம் தங்கமாக மாற்றிக் கொடுத்து விட்டுப் போனதையும் சொல்லி விட்டு தங்கமாக மாறிய இரும்புத் துண்டுகளை கணவர் முன் வந்து கொட்டினார்.

சிவவாக்கியர் தங்கத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார். 'இது என்ன சோதனை? எல்லாம் அறிந்த கொங்கணவர் தன்னைச் சோதிக்கிறாரா? அல்லது அதீத பாசத்தால் இப்படிச் செய்தாரா?' என்று குழம்பிப் போனார்.

உடனே மனைவியை அழைத்தார் சிவவாக்கியார். "இந்த ஆட்கொல்லி அசுரனை ஒரு விநாடி கூட வீட்டுக்குள் வைத்திருக்கக் சுடாது. உடனே கொண்டு போய் பாழும் கிணற்றில் போட்டு விட்டு வா!" என்றார்.

அவர் மனைவியும் எந்தப் பேச்சும் மறுத்துப் பேசாமல் தங்கத்தைக் கொண்டுபோய் கிணற்றில் போட்டார். பின்னொரு நாளில் நன்பகல் சூரியன் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பாறையின் மீது சிவவாக்கியர் சிறுநீர் கழித்து விட்டு தன் மனைவியை அழைத்தார். இந்த பாறையின் மீது தண்ணீரை ஊற்று என்றார்.

சொன்ன படியே அவர் மனைவியும் பாறையின் மீது தண்ணீரை ஊற்றினார். ஊற்றிய உடனே குபீர் என்று புகை வந்தது. புகை மறைந்த பின் பாறை முழுவதும் தங்கமாக மாறி தகதக வென ஜொலித்தது. சிவவாக்கியரின் சிறுநீரில் ரசவாத தன்மை இருப்பதால் இந்த அற்புதம் நிகழ்ந்தது.

சிவவாக்கியர் தனது மனைவியை அழைத்தார். தங்கமாக மாறியிருந்த பாறையை காண்பித்து "கொங்கணவச் சித்தர் சில துண்டுகளை தானே தங்கமாக் கொடுத்தார். இப்போது பார் இந்த பாறை முழுவதும் தங்கமாக இருக்கிறது. உனக்கு வேண்டியதை வெட்டி எடுத்துக் கொள்!" என்றார்.

"சுவாமி! தங்களுக்கு மனைவியான பாக்கியத்தை பெற்ற பின் உங்களை விட எனக்கு தங்கம் ஒன்றும் உயர்ந்தது இல்லை. எனக்கும் இந்த தங்கம் ஆட்கொல்லி பூதம் தான்!" என்று கூறி அவரும் பற்றற்ற நிலைக்கு வந்து விட்டார்.

ஆனால், சிவவாக்கியரின் சீடர்களுக்கு மட்டும் எப்பொழுதும் ரசவாத வித்தை மீதே கவனம் இருந்தது.  அந்த வித்தையைக் எப்போது குரு கற்றுத் தருவார் என்பதிலேயே அவர்கள் கவனமாக இருந்தனர். சிறந்த தவ வலிமையும், யோக நெறியும் உடைய சித்தர்களுக்குத்தான் ரசவாதம் சாத்தியமாகிறது.

தங்கத்தின் மீது பற்று இல்லாதவருக்கே தங்கத்தை உருவாக்கும் வித்தை கைக்கூடும். சித்தர்கள் பலரும் ரசவாத வித்தையில் கை தேர்ந்தவர்கள். அவற்றைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த அனுபவங்களை மற்றவர்களுக்கு காணிக்கையாக்குகிறார்கள்.

"சித்தர்கள்  சாதாரணமாக தென்பட மாட்டார்கள். பற்றற்ற பார்வையிலே சித்தர்கள் தெரிவார்கள். குறத்தி மகளாக இருந்தாலும் தங்கத்தை ஆட்கொல்லி என்று வெறுத்த ஞானி என்பதால்தான்  எனது மனைவியின் கண்களுக்கு கொங்கணவர் தெரிவது சாத்தியமானது!" என்று சீடர்களுக்கு விளக்கம் கொடுத்தார் சிவவாக்கியர்.

பற்றற்று போவதுதான் ஆன்மிகத்திற்கான முதற்படி என்பதை சீடர்களும் உணர்ந்தனர்.ஞாயிறு, நவம்பர் 09, 2014

கர்ப்பிணி வடிவில் கன்னி மேரி

சென்னை மின்சார ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் பரங்கிமலை ரயில் நிலையத்தை கடக்கும் போதெல்லாம் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உந்தித் தள்ளும். தூரத்தில் தெரியும் செயின்ட் தாமஸ் மவுண்ட் என்கிற பரங்கிமலை ஏதோ ஒரு விதத்தில் என்னை ஈர்த்துக்கொண்டே இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.மலையின் மேல் உள்ள இயேசு நாதர் சிலை 

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவின் வரைபடத்தை தயாரிக்க ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. அந்த வேலைக்கு "தி கிரேட் இண்டியன் ஆர்க்' என்று பெயரும் இட்டது. கர்னல் வில்லியம் லாம்டன் என்பவர் இந்த மகத்தான பணிக்காக நியமிக்கப்பட்டார். அவர் இந்திய நில அளவைப் பணியைத் தொடங்கிய இடம் தாமஸ் மவுண்ட். 1802-ல் ஆரம்பித்து 40 வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் பல பகுதிகளுக்கு அலைந்து வரைபடத்தை உருவாக்கிய லாம்டன் தனது 70-வது வயதில் மஹாராஷ்டிரத்தில் இறந்து விட்டார்.


அவருக்குப் பின் அந்தப் பணி தாமஸ் எவரெஸ்ட் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த எவரெஸ்ட் தான் சர்வே பணியில் உலகிலேயே உயரமான மலை சிகரத்தைக் கண்டறிந்தார். அதுவரை ஆண்டீஸ் சிகரம்தான் உலகிலேயே உயரமான சிகரம் என்று நம்பி வந்தார்கள். அந்த நம்பிக்கையை உடைத்து உலகின் உயரமான சிகரம் இந்தியாவின் இமயமலையில் இருக்கிறது என்ற உண்மையை ஆதாரத்தோடு தாமஸ் எவரெஸ்ட் முன் வைத்தார்.

எவரெஸ்ட் தலைமையிலான சர்வே குழு இந்த சிகரத்தைக் கண்டுபிடித்ததால் அந்த சிகரத்திற்கு மவுண்ட் எவரெஸ்ட் என்று அவர் பெயரே வைக்கப்பட்டது. இந்த சர்வே மூலம் இந்தியா எவ்வளவு பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு. ஒவ்வொரு இடமும் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. வெள்ளையர்கள் இந்திய மன்னர்களோடு போரிட்டு வெற்றி பெற இந்தியாவின் நில அமைப்பு குறித்த துல்லியமான வரைபடமே காரணமாக இருந்தது.

"அவர் லேடி ஆஃப் எக்ஸ்பெக்டேஷ­ன்'
தேவாலயம்


நிலத்தை  சர்வே எடுத்து மேப் வரைவது அன்றைக்கு சுலபமான விஷயமில்லை . எல்லாவற்றையும் காகிதங்களிலே குறித்தாக வேண்டும். "தியோடலைட்' என்ற ஒரேயயாரு கருவி தான் சர்வே பணிக்காக உருவாக்கப்பட்டிருந்தது. 500 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த கருவியை காடு மேடு மலைகள் என்று கழுதைகளும் இந்திய அடிமைகளும் தூக்கிச் சென்றனர். இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்தக் கருவியை முதன் முதலாக தாமஸ் மவுண்ட் உச்சிக்கு கொண்டு போய் சென்னை நகரை வரைபடமாக்கினார் லாம்டன். அதன் நினைவாக கருவி வைக்கப்பட்ட இடத்தில் கர்னல் வில்லியம் லாம்டனுக்கு மார்பளவு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

கர்னல் வில்லியம் லாம்டன்
சிறுவயதிலேயே படித்திருந்த இந்த வரலாற்று நினைவுகள்தான் என்னை பரங்கிமலை பக்கம் இழுத்ததற்கு காரணம். பரங்கிமலையில் ரயில் நின்றது. அங்கிருந்து வழி கேட்டேன். 3 கி.மீ. தொலைவு என்றார்கள். சீதோஷ்ணம் இதமாக இருந்ததால் நடந்தேன். மெட்ரோ ரயிலுக்கான பணிகள் படுவேகமாக நடந்து கொண்டிருந்தன. அதைக் கடந்து சென்றேன்.

பரங்கிமலையை நெருங்க நெருங்க ஏதோ ராணுவ முகாமுக்குள் வந்தது போல் உணர்வு ஏற்பட்டது. ராணுவ அலுவலர்கள், பணியிடங்கள் சாலையின் இடது பக்கமும், ராணுவ குடியிருப்புகள் சாலையின் வலது பக்கமும் இருந்தன. ராணுவத்திற்கே உரித்தான நிசப்தமான அமைதி எங்கும் நிலவியது. தூரத்தில் யாரோ ஒரு கமாண்டர் தனது குழுவுக்கு "சவுதான்', "வீஷ்ரம்', "பாயேமூட்', "த ஹினே மூட்' என்று டிரில் எடுத்துக் கொண்டிருந்தார்.
ராணுவ அதிகாரிகள் பயிற்சி எடுக்கும் ஆபீஸர் ட்ரைனிங் அகாடமியை கடந்து தாமஸ் மலையின் அடிவாரத்தில் வந்து நின்றேன்.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு இதமாக இருந்த வெயில் இப்போது அதன் உச்சப்பட்ச உக்கிரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. என் உடையயல்லாம் வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தது. இன்னும் மலைமீது ஏற வேண்டும்.

சிறிய மலைதான்! ஆனால் வெயிலின் வீச்சு மலைப்பைத் தந்தது. ஆனாலும் பாதை சுலபமாகத் தான் இருந்தது. மரங்களின் நிழல்கள் இதம் தந்தன. மலைப்பாதையின் வழியில் படிகளில் ஏறினேன். மொத்தம் 134 படிகள். இயேசு நாதர் சிலுவையில் அறைய கொண்டு சென்ற காட்சிகள் சிலைகளாக செதுக்கப்பட்டிருந்தன. அதனாலே இந்த மலைப்பாதை புனிதப் பாதை என்ற பெயர் பெற்றுள்ளது.
மலைபதையில் உள்ள சிலைகள்

இந்த மலைக்கு நிறைய காதல் ஜோடிகள் வந்திருப்பார்கள் போல் தெரிகிறது. ஏனென்றால் வழி நெடுகிலும் "இது புனிதப்பாதை. காதலர்கள் சங்கமிக்கும் இடமல்ல' என்ற பலகைகள் அதிகம் இருக்கின்றன. நான் சென்ற நேரத்தில்ஒரு காதல் ஜோடி கூட கண்ணில் படவில்லை என்பது புனிதத்திற்கு மதிப்பு கொடுப்பதாக இருந்தது. 300 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சிக்கு வந்த போது "அவர் லேடி ஆஃப் எக்ஸ்பெக்டேஷ­ன்' தேவாலயம் உள்ளது. கன்னிமேரி கர்ப்பிணி தோற்றத்தில் வீற்றிருப்பது இங்கு மட்டுமே பார்க்கக்கூடிய காட்சி.


கர்ப்பிணி வடிவில் கன்னி மேரி
இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனிதர் தாமஸ் உயிர் நீத்த இடம் இது. அதனால் தான் இந்த மலைக்கு புனித தாமஸ் மலை என்று பெயர் வந்தது. கிறிஸ்துவ மதத்தை இந்தியாவுக்கு முதன்முதலில் கொண்டு வந்தவர் இவர். கேரளா வழியாக தமிழகம் வந்த இவர் கேரளாவில் 6 தேவாலயங்களையும் தமிழ்நாட்டின் திருவிதாங்கோட்டில் ஒரு தேவாலயமும் என்று மொத்தம் 7 தேவாலயங்களை உருவாக்கியுள்ளார். கன்னியாகுமரி அருகில் உள்ள சின்ன முட்டம் பகுதியிலிருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு சென்னை வந்தார்.

புனிதர் தாமஸ் இந்த மலையில் உள்ள ஒரு பாறையில் தனது கைப்படவே ஒரு சிலுவையை செதுக்கி அதனை வணங்கி வந்தார். ஒருநாள் சிலுவையை வணங்கி கொண்டிருக்கும்போது ஒருவர் ஈட்டியால் குத்தி தாமஸை கொன்று விட்டார். தாமஸின்  ரத்தம் சிந்திய சிலுவை தேவாலயத்தில் இருக்கும் ஆல்டரில் உள்ளது. இப்போதும்கூட  மலை அந்த சிலுவையில் ரத்தமும் வியர்வையும் தோன்றி மறைவதாக சொல்லப்படுகிறது. ரத்தம் சிந்திய மலை என்பதால் இது புனிதத்துவம் பெறுகிறது. தாமஸ் கொல்லப்படும் சித்திரத்தை தேவாலயத்திற்குள் பார்க்கலாம். தாமஸ் மட்டுமல்ல, இயேசுவின் 12 சீடர்களின் படங்களும் அவர்கள் கொலை செய்யப்பட்ட விதங்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

தாமஸின்  ரத்தம் சிந்திய சிலுவை

இந்த தேவாலயம் 1523‡ல் போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்டது. அவர்கள் இயேசுவை விட அவரது தாய் கன்னி மேரியையே தெய்வமாக வணங்குவார்கள். கருவுற்றிருக்கும் மேரி மாதா தனது குழந்தையின் வரவுக்காக காத்திருக்கும் விதத்தில் "அவர் லேடி ஆஃப் எக்ஸ்பெக்டே­ன் தேவாலயம்' கட்டப்பட்டது.

இந்த தேவாலயம் 16-17 ம் நூற்றாண்டுகளில் கடலில் பயணம் செய்து வரும் போர்த்துக்கீசியர்கள், ஆர்மீனியர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருந்திருக்கிறது.
புனித தாமஸ் இறந்ததாக கருதப்படும் இடத்தில் "ஆல்டர்' வைக்கப்பட்டுள்ளது. உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத மேரி மாதா ஓவியத்தை இங்கு பார்க்க முடியும். குழந்தை இயேசுவை கையில் ஏந்தியபடி இருக்கும் மேரி மாதா உருவம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் நேரில் பார்த்து செயின்ட் லூக் என்பவர் வரைந்தது. கி.பி.50-ம் ஆண்டு வரையப்பட்ட இந்த ஓவியத்தை செயின்ட் தாமஸ் கடைசி வரை தன்னுடனே வைத்து வழிபட்டு வந்தார். அந்த ஓவியம் ஆல்டர் அருகே வைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட செயின்ட் தாமஸ் மவுன்ட் கிறிஸ்துவ மதத்தினருக்கு மட்டுமல்ல, சுற்றுலாவாசிகளும் பொருத்தமான இடம். மலையின் மீதிருந்து பார்த்தால் ஒரு பகுதியில் சென்னை நகரத்தைப் பார்க்கலாம்.

கி.பி.50-ம் ஆண்டு வரையப்பட்ட ஓவியம்

மறுபக்கத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானங்கள் வந்து இறங்கும் ரன்வேவையும் விமானத்தில் பயணிகள் ஏறுவதையும் இறங்குவதையும் பார்க்கலாம். ஒருநாள் பிக்னிக்கிற்கு ஏற்ற இடம்.
தேவாலயத்தின் சார்பாக மதியம் இங்கு வரும் யாத்ரிகர்களுக்கு அன்புணவு என்கிற பெயரில் அன்னதானம் நடைபெறுகிறது.
தேவாலயத்திற்குள் புனித தோமையர் உபயோகித்த 115 பொருட்கள், உடல் உறுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இவையயல்லாம் புனிதத்தின் சின்னங்களே. செயின்ட் தாமஸ் மவுண்ட் ஒரு ஆவணப் பெட்டகம்!

இங்கு சென்று திரும்பினால் மன திருப்தி ஏற்படுவதை தவிர்க்க முடியாது!


புனித தோமையர் உபயோகித்த 115 பொருட்கள்


எழில்மிகு மலை முகடு

வியாழன், நவம்பர் 06, 2014

தெற்கேயும் ஒரு எல்லோரா


ழுகுமலையைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அங்கு போக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றவில்லை. என் முகநூலில் இருந்த ஜெர்மனி தேசத்து நண்பர் ஒருவர் கழுகுமலையைப் பற்றி சிலாகித்துப் பேசினார். அந்த அற்புதத்தை இதுவரை நான் பார்த்ததில்லை, என்றதும் 'அட! அற்ப பதரே...!' என்று என்னை மனதுக்குள் திட்டித் தீர்த்திருப்பார். நமது கலைப் பொக்கிஷங்களைப் பற்றி நம்மை விட வெளிநாட்டினர் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.


அந்த உரையாடலுக்குப் பின் கழுகுமலையைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற தீராத வேட்கை என்னுள் குடிகொண்டது.
ஒரு நல்ல நாள், காலைப் பொழுதில் மைசூரிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில்பட்டிக்கு டிக்கெட் எடுத்து ஏறிக் கொண்டேன். கழுகுமலைக்கு கோவில்பட்டி வழியாகத்தான் போயாக வேண்டும். ரயில் சீமைக்கருவேலம் செடிகளுக்கு நடுவே போய்க் கொண்டிருந்தது.

அன்று வெயில்  இல்லை!

லேசான மேகமூட்டம்... 

இதமான சாரல்...
குளுமையான காற்று...
பயணத்தை இனிமையாக்க இது போதாதா...?!


இப்படிப்பட்ட சூழல் மனிதர்களை விட மயில்களுக்கு மிகவும் பிடிக்கும்.

திருமங்கலத்தைக் கடந்து விட்டால் ரயில் பாதை அருகே நிறைய மயில்கள் பறந்து திரியும்! 

நமக்கு நல் அதிர்ஷ்டம் இருந்தால், அந்த மயில்கள் தோகை விரித்து ஆடுவதையும் பார்க்கலாம்.

இயற்கையின் இனிமையை ரசித்தபடி கோவில்பட்டி வந்து சேர்ந்தேன்.
பகல் ரயிலில் ஒரு சௌகர்யம் இருக்கிறது. நாம் எந்த ஊருக்கு அருகில் பயணிக்கிறோமோ அந்த ஊர் தின்பண்டங்களை ரயிலில் விற்று வருவார்கள்.
மணப்பாறை முறுக்கு, கடம்பூர் போளி,  ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வரிசையில் கோவில்பட்டி கடலை  மிட்டாயக்கும் இடம் உண்டு. இதற்கு ருசியும் அதிகம்!

கோவில்பட்டியில் இறங்கினேன். மதுரையிலிருந்து 92 கி.மீ. பயணித்து வந்திருந்தேன். இங்கிருந்து இனி பஸ்ஸில் போகவேண்டும்.

கழுகுமலை இங்கேயிருந்து சங்கரன்கோவில் போகும் வழியில் 25வது கி.மீ. தொலைவில் இருக்கிறது.

பஸ் நிலையத்தில் சங்கரன்கோவில் செல்லும் பஸ் தயாராக உறுமிக் கொண்டு நின்றது. அதில் ஏறினேன்.

கோவில்பட்டி நகர எல்லையைக் கடந்து சங்கரன் கோவில் ரோட்டில் பயணிக்கும் போதே கிராமிய மணம் காற்றோடு கலந்து வருகிறது. இந்தப் பகுதிக்கும் பறவை, விலங்கு போன்ற உயிரினங்களுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருக்கிறது போலும். ஊர் பெயர்கள் குருவி குளம், வானரமுட்டி, நாலாட்டின் புத்தூர், கழுகுமலை என்று அவைகளின் பெயரிலேயே இருக்கிறது. ஒருவழியாக கழுகுமலை வந்து சேர்ந்தேன். கழுகுமலை பஸ் நிலையமும் சமணர் மலையும், ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல் அருகருகே இருக்கின்றன. நடந்து செல்லும் தொலைவில் மலைமீது ஏறுவதற்கான நுழைவு வாயில் இருக்கிறது.

  மலையின் உயரமும் குறைவுதான். 300 அடி. உயரத்தை விட அகலமாக பரவியிருக்கும் மலை இது. சமணர்கள் வாழ்ந்த மலைகள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. பெரும் பாறை தான் அவர்களின் இலக்காக இருந்திருக்கிறது. மரங்கள், செடிகள் சூழ்ந்த மலைகçe அவர்கள் விரும்பவில்லையோ என்னவோ தெரியவில்லை. யானை மலை, கீழ்க்குயில் குடி, அரிட்டாப்பட்டி, நாகமலைப்புதுக்கோட்டை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் இருக்கும் சமணர் மலைகள் இதைத்தான் ஞாபகப்படுத்துகின்றன. விதிவிலக்காக சிதறாலைச் சொல்லலாம். அங்குதான் கொஞ்சம் பசுமை கண்ணுக்குத் தெரிகிறது. கழுகுமலையின் படிக்கட்டுகளில் ஏறினேன். 15 நிமிடங்களில் உச்சியை அடைந்து விடலாம். உயரம் செல்ல செல்ல கீழே தெரியும் காட்சிகள் ஆச்சரியமாக விரிந்தது. உயரத்திலிருந்து பார்க்கும்போது பூமித்தாய் பசுமைப் போர்வையை தன் மீது அடர்த்தியாக போர்த்திக் கொண்டதுபோல் இருந்தது. எங்கும் பசுமை. கண்ணை குளிர்ச்சியாக்கியது. மலையின் கிழக்குப் பக்கம் வெட்டுவான் கோயில் இருக்கிறது. இதை தென்னகத்தின் எல்லோரா என்று சொல்கிறார்கள். எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில்தான் ஒரே கல்லில் பாறையின் மேலிருந்து கீழ்பக்கமாக செதுக்கிக் கொண்டே வருவார்கள். இந்தக் கோயிலும் அதே பாணியில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

ல்லோராவின் பாறை கடினத்தன்மையற்றது. கழுகுமலையோ கடினமான பாறையால் ஆனது. இந்த கடினமான பாறையை 25 அடி ஆழத்திற்கு நான்கு புறமும், வெட்டி எடுத்து. நடுமையத்தில் அழகிய கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள். கி.பி.8ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் உருவாக்கப்பட்டகோயில், முழுமை பெறாமல் பாதியோடு நிற்கிறது. கோபுர சிகரமும், கருவறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. கோயில் கோபுரத்தில் உமாமகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் காணப்படுகின்றன. விமானத்தின் மேற்கு திசையில் நரசிம்மரும். வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் உள்ளன. அவற்றுக்கு கீழே யாளி வரிகளும், கமோதகமும் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. ஒரு சிற்பக் களஞ்சியமாக இந்த இடம் உள்ளது. இந்த வெட்டுவான் கோயிலிருக்கும் மலையின் பெயரை அரைமலை என்று சொல்கிறார்கள். பாண்டியன் பராந்தக நெடுஞ்செழியன் காலத்தில் இங்கு நிலைப்படை ஒன்று இருந்ததாம். வரலாறு இப்படி சொன்னாலும் உள்ளூர் மக்கள் வெட்டுவான் கோயிலைப் பற்றி சிறப்பான கதையயான்றை சொல்கிறார்கள். 

பாண்டிய நாட்டில் மிகப் புகழ்பெற்ற ஒரு சிற்பி இருந்தான். அவன் சிலை செதுக்கும் நேர்த்தியைக் கண்டு அவன்தான் தெய்வ தச்சன் என்று அழைக்கப்படும் மயன் என்றே நம்பினர். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். மிகச் சிறியவன். கோயில் திருவிழாவில் திரண்டிருந்த கூட்டத்தில் மகனை தொலைத்து விட்டான். அதன்பின் எங்கெங்கோ தேடியும் மகன் கிடைக்கவில்லை. மகனுக்காக பல நாட்கள் அழுது புலம்பினான். பிறகு மனதை தேற்றிக் கொண்டு இந்த மலைக்கு வந்தான். சமணத் துறவிகள் சிலைகள் வடித்துக் கொடுத்துக் கொண்டு இங்கேயே தங்கி விட்டான். இந்த மலையே அவனது உலகமானது.


சில வருடங்கள் கழித்து மலையின் கீழ்பகுதியிலிருந்து கல் செதுக்கும் ஒலி கேட்கத் தொடங்கியது. அதைப் பெரிதாக அவன் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மலைக்கு மேலே வருபவர்கள் எல்லாம் அந்த சிற்பியைப் பற்றியே பேசினார்கள். சிலர் இவனிடம் கீழே ஒரு இளைஞன் என்னமாக சிலை செதுக்குகிறான் தெரியுமா? ஒவ்வொன்றும் கண்களை விட்டு அகலாத அழகு! பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது...! என்று சொன்னார்கள். வருபவர்கள் எல்லாம் புதிதாக முளைத்த அந்த சிற்பியைப் பற்றியே பேசியது இவனுக்கு வெறுப்பைத் தந்தது?

ஒரு நாள் கோபத்துடன் தன் கையிலிருக்கும் உளியைக் கீழே சிலை செதுக்கும் இளம் சிற்பியை நோக்கி வீசி எறிந்தான். அவன் அப்பா...! என்று அலறி விழுந்தான். அந்த இறுதிக்குரல் சிற்பியை இழுத்தது. போய் பார்த்தால் திருவிழாவில் காணாமல் போன அவனுடைய மகன். உளி தலையை இரண்டாக வெட்டியிருந்தது. மகன் செதுக்கிய சிற்பங்களைப் பார்த்து மலைத்துப் போய் நிற்கிறான். மகனை மடியில் போட்டு அழுகிறான். இப்படி சிற்பி பாதியிலேயே இறந்து போனதால் கோயிலும் முடிவு பெறாமல் இருக்கிறது என்றும் வெட்டியதால் வெட்டுவான் கோயில் என்று பெயர் வந்ததாகவும், பாறையிலிருந்து வெட்டியயடுக்கப்பட்ட கோயில் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். சிலைகள் ஒவ்வொன்றும் பேசும் அழகு. கோயிலின் முகப்பின் அன்னியோன்யமாகப் பேசிக் கொண்டிருக்கும் சிவன்-பார்வதி சிற்பங்களை வேறு எங்கும் பார்க்க முடியாது. 

பொதுவாக கோபுரங்களிலில் காணப்படும் சுதைச் சிற்பங்கள் இங்கு கருங்கல்லில் நுணுக்கமான அழகுடன் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. நடன மாதர்களின் சிற்ப அழகும் வியக்க வைக்கிறது. இதுபோன்ற ஒரு கலைப்படைப்பு மேலைநாடுகளில் இருந்திருந்தால் இந்நேரம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டிருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குக் கூட இதன் அருமை தெரியவில்லை.

  
வெட்டுவான் கோயிலிலிருந்து மலையின் மேற்கு பகுதியில் சென்றால் பாறையின் சரிவில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் வரிசையாக உள்ளன. சமணர்கள் தங்களின் குரு, தாய், தந்தை, மகன், மகள் நினைவாக இந்த சிற்பங்கçe உருவாக்கியிருக்கிறார்கள். சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயரை வட்டெழுத்துக்களாகப் பொறித்தும் வைத்துள்ளார்கள். 

மூன்று வரிசைகளாக இந்த சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. சேலைகளுக்கும், பார்டர்களுக்கும் பயன்படுத்துவது போன்ற வடிவமைப்பை அந்த காலத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். சமணர்கள், தியானம் செய்த குகையும் இங்குள்ளது. சமீப காலத்தில் ஒரு அய்யனார் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவிலின் பின்புற சுவருக்கும், பாறைக்கும் இடையே இருக்கும் சிற்பங்களின் அழகு வெளியே தெரியாமல் கோவில் சுவர் மறைத்திருக்கிறது. நமது மக்களுக்கு கலைகளின் அழகும், பாரம்பரியத்தின் பெருமையும் தெரியவில்லை என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணத்தை பார்க்க முடியாது. அய்யனார் கோயில் அருகே செல்லும் பாதை வழியாக மேலே சென்றால் அங்கு ஒரு மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பார்த்து திரும்பலாம். எல்லா மலைகளிலும் இருப்பது போல் இங்கும் குரங்குகள் தொல்லை இருக்கிறது. வெட்டுவான் கோயிலில் இருந்து சமணர் சிற்பங்களுக்கு போகும் வழியில் ஒரு சிறிய குளம் இருக்கிறது. சமணர்கள் நீராடுவதற்கும் அருந்துவதற்கும் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 
கழுகுமலையில் இருக்கும் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கழுகாசலமூர்த்தி முருகன் கோயில். அருணகிரிநாதர் இந்தத் தலத்தைப் பற்றி பாடியிருக்கிறார். மலையைக் குடைந்து குகைக்குள் மூர்த்தி அமைக்கப்பட்டுள்ளதால் இதைக் குடவறைக் கோயில் என்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு விமானம் கிடையாது. மலையே விமானமாக திகழ்கிறது. கருவறையில் வள்ளி, தெய்வானையோடு முருகன் காட்சியளிக்கிறார். மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல் முருகனின் வாகனமாக மயில் இடது பக்கத்தில் காட்சி தருகிறது. இது கோயிலின் தனிச்சிறப்பு. இங்குள்ள மூர்த்திக்கு ஒரு முகமும் 6 கரங்களும் தான் உள்ளது. தென்னிந்தியாவிலேயே இந்தக் கோயில் மட்டும்தான் இப்படி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு அடுத்ததாக சிறப்பு பெற்றது இந்தக் கோயில். இதை தென்பழனி என்று அழைக்கிறார்கள். 

இங்குள்ள மலையின் கற்பாறையைக் குடைந்து மூர்த்தி அமைக்கப்பட்டிருப்பதால் இது குடவறைக் கோயில் ஆகும். சுற்றுப்பிரகாரம் கிடையாது என்பதால் மலையைச் சுற்றித்தான் வர வேண்டும். அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் போது இந்தத் தலத்தில் தங்கி பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோவிலும் பாண்டிய மன்னர்களால் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோயிலை எட்டயபுரத்து ஜமீன் வழி வாரிசுகள் நிர்வகித்து வருகின்றனர். சிற்பங்களும், ஓவியங்களும் சிறந்து விளங்கும் ஒரு கலைக்கூடமாகவே கழுகாசலமூர்த்தி கோயில் விளங்குகிறது. அரிதான பல வரலாற்று பொக்கி­ங்கள் நிறைந்த இடம் கழுகுமலை. நீங்களும் ஒருமுறை வந்து பாருங்கள்...!
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...