Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சரித்திரம் படைத்த விவசாயி

“முடியாது...இது நடக்காது..!" என்று எடுத்த காரியத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்பவர்கள் பல பேர். 'ஏன் முடியாது? ஏன் நடக்காது? என்னால் முடியும்...!' என்று தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கி வெற்றிகரமாக முடித்துக் காட்டுபவர்கள் சில பேர். அந்த சில பேரில் ஒருவர் முருகேசன். இவரிடம் முடியாது என்று 'சவால்' விட்டது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்!

பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்தான் ஒரு முடிவை வேளாண் துறை அறிவிக்கிறது. அப்படி தமிழகத்தில் இதை விளைவிக்கவே முடியாது என்று அறிவித்த ஒன்றை, அதே தமிழகத்தில் அதுவும் வறட்சியின் உச்சம் நிலவும் பூமியில் விளைவித்து, தமிழகத்தை மட்டுமல்ல... இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார், இவர்.

தனது விளைபொருளை தரத்தில் இந்தியாவில் 'நம்பர் ஒன்' என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார். அந்த விளைபொருள் அல்போன்ஸா மாம்பழம். 
"எப்படி உங்களால் இந்த சரித்திர சாதனையை செய்ய முடிந்தது?" என்ற கேள்வியோடு சிவகங்கை மாவட்டம் எ.கருங்குளம் எம்.எம்.பண்ணையின் உரிமையாளர் எம்.முருகேசனை சந்தித்தேன்.
எம்.முருகேசன்

சிரித்துக் கொண்டே "வாங்க! நிலத்தில் மரக்கன்று நட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து விட்டு வருவோம்" என்று தனது டாடா சஃபாரியில் என்னையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். தென்னந்தோப்பு, பண்ணைக்குட்டைகள் என்று நான்கு கிலோமீட்டர் தூரம் கடந்து வெட்ட வெளியான ஓர் இடத்தில் சஃபாரி நின்றது.

வனத்துறை இலவசமாகக் கொடுத்த மரக்கன்றுகளை 300 ஏக்கர் நிலத்தில் நடும் பணி மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்த பின் மீண்டும் சஃபாரி புறப்பட்டது. அவரின் மகன் மதிபாலன் காரை ஓட்டி வந்தார். கிட்டத்தட்ட 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட அவரது பண்ணையில் 15 கி.மீ. நீளத்துக்கு கனரக வாகனங்கள் போய்வரும் அளவிற்கு தரமான சாலைகளை அமைத்துள்ளார் முருகேசன்.
பண்ணைக்குள் செல்லும் சாலை

இந்தியாவில் மிகப்பெரிய பண்ணை வைத்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் நிலத்தில் கூட இப்படி சாலைகள் அமைக்கப்படவில்லை என்று தன் நிலத்தை பார்வையிட்ட வட இந்திய ஆய்வாளர்கள் கூறியதாக பெருமிதத்துடன் கூறுகிறார் முருகேசன். 

தொடர்ந்து கட்டாந்தரையை பொன்விளையும் பூமியாக மாற்றிய அந்த ரகசியத்தையும், தான்பட்ட கஷ்டங்களையும் ஒருசேர சொன்னார்.

"இந்தக் கருங்குளம்தான் நான் பிறந்து வளர்ந்த மண். விவசாயக் குடும்பம்தான் எங்களுடையது. தண்ணீர் இல்லாமல் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த காலம் அது. இந்த மண்ணுக்கே உரிய வறட்சி மற்றவர்களைப் போலவே என்னையும் பிழைப்பு தேடி வேறு ஊருக்குத் துரத்தியது. 

நானும் போனேன். 10-ம் வகுப்பு வரை படித்திருந்த எனக்கு கிளார்க் வேலை கிடைத்தது. நான்கு  வருடம் கழித்து 1974-ல் ஒரத்த நாட்டில் 'முருகன் ஜூவல்லரி' என்ற பெயரில் நகைக்கடை ஒன்றை தொடங்கினேன். பரிச்சயம் இல்லாத தொழில். எங்கள் இன மக்கள் யாருமே நகைக்கடை வைத்ததில்லை. ஆனாலும் வெற்றி கிடைத்தது. 

அடுத்து, 1980-ல் பொள்ளாச்சியில் 'ஸ்ரீதிருமலை ஸ்டீல்ஸ் கார்ப்பரேஷ­ன்' என்ற பெயரில் இரும்பு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். கடின உழைப்பு என்னை மிக உயரத்துக்கு கொண்டு போனது. சிறந்த தொழில் அதிபர் என்ற தமிழக அரசின் விருது என்னைத் தேடி வந்தது. என்னதான் தொழிலில் சாதித்தாலும் விவசாயத்தின் மீது இருந்த ஈர்ப்பு என்னை தூங்க விடாமல் அதன் பக்கம் இழுத்துக் கொண்டே இருந்தது.

அந்த சமயத்தில்தான் எங்கள் மக்கள் இந்த மண்ணைவிட்டு கொத்து கொத்தாக பஞ்சம் பிழைக்க தஞ்சாவூர் பக்கம் வந்து கொண்டு இருந்தார்கள். இது என் மனதை ரணமாக மாற்றியது விவசாயம் மிகவும் பின்தங்கியிருந்த காலகட்டம் அது. அதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்த ஊரான கருங்குளத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினேன். தென்னந்தோப்பும், மாந்தோப்பும் உருவாக்கினேன். 

அப்போதுதான் அல்போன்ஸா மாம்பழம் நல்ல விலைக்குப் போவது தெரிய வந்தது. உடனே வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை அணுகினேன். அவர்கள் தமிழகத்தில் இது வராது என்றார்கள். அதற்கான மண்வளம் நம்மிடம் இல்லை என்றார்கள். இதைக்கேட்ட பின்பு அல்போன்ஸா மீது தீவிர பிடிப்பு ஏற்பட்டது. எப்பாடு பட்டாவது நமது பண்ணையில் அல்போன்ஸாவை விளைவித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.
அல்போன்ஸா மாமரங்கள்

முதலில் எனது நிலத்தின் மண்ணை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தேன். 

இதுதான் விவசாயத்தின் மிக முக்கியமான பணி. அதற்கடுத்து நிலத்தடி நீரை டெஸ்ட் செய்தேன். இரண்டுமே மாம்பழ விவசாயத்துக்கு சாதகமாக இருந்தது. முதலில் சோதனை அடிப்படையில் 20 ஏக்கர் நிலத்தில் மாந்தோப்பு அமைத்தேன். மாம்பழத்தின் முதல் தரமான ரத்தினகிரி மாங்கன்றுகளை மஹாராஷ்டிராவில் இருந்து வாங்கி வந்தேன்.

செயற்கை உரங்கள் மண்வளத்தை பாழ்படுத்தும் என்பதை 25 வருடங்களுக்கு முன்பே நான் உணர்ந்து இருந்தேன். அதனால் செயற்கை உரங்களைப் பயன்படுத்துவது இல்லை என்ற முடிவை அப்போதே எடுத்தேன். அதற்காக 15 டன் மண்புழுக்களை வாங்கி வந்து நிலத்தில் விட்டேன். 10 மீட்டருக்கு ஒரு மரம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 40 மரங்கள், 8 மீட்டருக்கு ஒரு மரம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 66 மரங்கள் நட்டேன். மண்புழுக்களால் மண்வளம் செழித்தது.

நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ள மாவட்டம் என்பதால் 4 பண்ணைக் குட்டைகளை அமைத்தேன். அதன்மூலம் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் வற்றாமல் பார்த்து கொண்டேன். சொட்டுநீர் பாசனம் செய்தேன். இதிலும் இரண்டு மரத்துக்கு ஒரு கேட் வால்வு என்ற கணக்கில் பண்ணை முழுவதும் கேட் வால்வு அமைத்திருந்தேன். இதனால் கடைக்கோடியில் இருக்கும் மரத்துக்கும் போதிய அளவு தண்ணீர் கிடைத்தது. அதனால் விளைச்சல் ஒரே விதமாக இருந்தது.

பின்னர் மரத்துக்கு இடையே களைகள் வளர்ந்து விடாமல் இருப்பதற்காக 3 வாரங்களுக்கு ஒருமுறை உழுது கொண்டே இருப்போம். களை சுத்தமாக அழிக்கப்படுவதால் மரம் செழித்து வளர்ந்தது. நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதால் தரமான மாம்பழத்தை உருவாக்க முடிந்தது. இப்படி விளைவிப்பதோடு ஒரு விவசாயி தனது வேலையை முடித்துக் கொள்ளக்கூடாது. அதை சந்தைப்படுத்த வேண்டும். ஒரு விவசாயி வியாபாரியாக மாறும்போது அவனுக்கு 90 சதவீதம் லாபம் கிடைக்கிறது. இந்த சந்தைப்படுத்துதல் தான் எங்கள் வளர்ச்சியின் புதிய அணுகுமுறை. 

இதை மனதில் வைத்து தான் சந்தைப்படுத்துவதற்கு தீவிர முயற்சி எடுத்தோம். இதில் எனது மகன் மதிபாலன் எடுத்துக்கொண்ட முயற்சி பிரமிப்பானது. மும்பையில் ஒரு அல்போன்சா மாம்பழம் ரூ.60-க்கு விற்கிறது. வெளிநாடுகளில் ஒரு பழமோ 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அப்படியென்றால் வெளிநாட்டுக்கும் வட இந்தியாவிற்கும் மாம்பழத்தை அனுப்பி வைப்பதுதான் கூடுதல் லாபம் என்று நினைத்தேன்.

முதலில் வட இந்திய வியாபாரிகள் இதை ரத்தினகிரி மாம்பழம் என்று சொல்லி விற்கலாம். நன்றாக விற்பனை ஆகும் என்றார்கள். நாங்கள்தான் எங்களின் சொந்த பிராண்டில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தோம். அதன் பலன்தான் இன்றைக்கு ரத்தினகிரி மாம்பழத்தை விட தரத்திலும் சுவையிலும் சிறப்பான மாம்பழமாக இந்தியாவில் நம்பர் ஒன்னாக எங்களின் மாம்பழம் இருக்கிறது.

இதற்கு காரணம் நாங்கள் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்ததுதான். ரத்தினகிரி மாம்பழம் என்று கூறி விற்பனை செய்திருந்தால் எடுத்தவுடனேயே நன்றாக விற்பனை நடந்திருக்கும். அதே வேளையில் எங்களின் தனித்தன்மை வெளியே தெரியாமல் போயிருக்கும். அன்று பொறுமை காத்தோம். இன்று பெருமை கொண்டோம்" என்று நீண்ட விளக்கத்தை கூறி முடித்தார் முருகேசன்.

"வட இந்தியாவிற்கு மாம்பழங்கள் போய் சேர ஐந்தாறு நாட்கள் ஆகிவிடுமே...? அதுவரை மாம்பழம் கெட்டுப் போகாமல் இருக்குமா...?" என்று கேட்டதற்கு நாங்கள் மாம்பழத்தை பறிப்பது இல்லை. காம்போடு சேர்த்து கட் செய்து விடுவோம். ஒவ்வொரு மாம்பழத்திலும் 3 அங்குலம் நீளம் கொண்ட காம்பு இருக்கும். 

இந்த மாம்பழங்களை மூன்று வகையாக நாங்கள் பிரிப்போம். ஒரு பெட்டியில் 48 மாம்பழங்கள் வைப்பது பெரிய வகை. நடுத்தர வகையில் 60 மாம்பழங்கள் வைக்கலாம். சிறிய வகையில் 72 மாம்பழங்கள் வைக்கலாம். பெட்டியில் வைக்கோலும், பேப்பரும் வைத்து பேக் செய்வோம். இவற்றை பேக் செய்வதற்காகவே ஜார்க்கண்டில் இருந்து ஆட்கள் வருவார்கள். வைக்கோலின் கதகதப்பால் மாம்பழம் மெதுவாக பழுக்கத் தொடங்கும். 5 நாட்கள் கழித்து அங்கு போய் இறங்கும்போது இயற்கையான முறையில் மாம்பழம் பழுத்திருக்கும். சுவையும் அலாதியாக இருக்கும்.
மகன் மதிபாலன் மற்றும் தோட்ட தொழிலாளியுடன் முருகேசன்

விவசாயம் நமது நாட்டின் முக்கியத் தொழிலாகும். விவசாயத்தில் புரட்சியும், புதுமைகளும் செய்பவர்கள் வரலாற்று ஏடுகளில் பதியப்படுகிறார்கள். காலத்துக்கு ஏற்ப வேளாண்மை துறையில் மாற்றங்கள் கொண்டு வருவது ஒவ்வொரு விவசாயியின் கடமை. பணப்பயிர் சாகுபடி பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்தரக்கூடிய ஒன்று. 

இளைய தலைமுறையினர் விவசாயத்தில் இருந்து தடம் புரண்டு சென்று விடாமல் இதில் சாதிப்பதற்கு பல சாதகமான வாய்ப்புகள் உள்ளது என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்." என்று கூறும் முருகேசன் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி ஒன்றை சொந்தமாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்து வருகிறது. அவரது கனவு கூடிய விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

எம்.முருகேசன் - 94865 61677

11 கருத்துகள்

  1. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  2. புதுவை வேலு அய்யாவுக்கு பணிவான வணக்கங்கள்,
    எனது வலைப்பக்கம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்!

    இது போன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பதிவிட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

    மீண்டும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. அல்போன்சாவின் வரலாறறிந்தேன்.
    பாரிசில் கிடைத்தது இப்போ இறக்குமதிக்குத் தடை. இதனுடன் ஒருவகைக் காளான் வகை நோய் ,இங்குள்ள தாவரங்களுக்குப் பரவுகிறதாம்.
    இலங்கையில் இவ்வகையில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே!

      தங்களின் பின்னூட்டம் மூலம் பிரான்ஸ் மற்றும் இலங்கையில் இந்த கனியின் தற்போதைய நிலை குறித்து தெரிந்து கொண்டேன்.

      நீக்கு
  4. எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் விவசாயத்தின் மகிமையை உணர்ந்து தானும் உயர்ந்து இளைய தளைமுறையினரையும் உணர வைத்த பாங்கு பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  6. நல்லதோர் இடுகை. சிறந்த பகிர்வு.

    நேரம் அமையும் வேளை இந்த சுட்டி உரல்களை பார்வையிட:

    முடிந்தால் இதனை முயற்சித்துப் பாருங்கள். நல்ல ஒரு உட்கொள்ளக் கூடிய பண்டம்.

    http://coconutboard.gov.in/coconut.htm#sugar

    இது என்ன ஏன் எப்படி என்பது பற்றிய மேலதிக தகவல்களிற்கு, கீழ்க்கண்ட உரல்களினை உரசிப் பார்க்க.

    http://demo.dodotechnologies.in/digest/index.php/health/item/410-palakkad-coconut-producer-company-and-cftri-join-hands-to-take-neera-to-newer-heights

    http://www.coconutboard.nic.in/Producer-companies.htm

    http://www.coconutboard.gov.in/

    http://www.coconutboard.in/innov.htm

    http://coconutboard.gov.in/coconut.htm#sugar

    http://indpad.blogspot.in/2015/10/dovetailing-coconut-farmers-in-palakkad.html

    தொடர்பு கொள்ள வேண்டின் : http://www.keralacoconut.com/contact-us

    Padmanbhan B, Vice President - B2B sales,PCPCL +91 - 9495098243


    ------------****---------****----------****------------

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_17.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி பதிவுகளை சென்று பார்க்கிறேன். வருகைக்கும் நன்றி!

      நீக்கு
  7. நகரங்களில் வாழ்பவர்களுக்கு கிராமங்களில் இருந்து வரும் விவசாயத்தின் அருமை தெரியாது
    பணமே பிரதானமாக கருதி வாழும் இவர்களுக்கும் விவசாயியின் இந்த பிரதான பதிவுக்கு தலை வணங்கி வாழ்த்துகிறேன்
    நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை