Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

படைவீரர்களுக்கு தண்ணீர் தந்த பெருமான்

    ராஜேந்திரப்பாண்டியன் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். தனது தந்தை குலபூஷண் பாண்டியன் காலத்தில் சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடலாக காஞ்சியை ஆட்சி செய்து வந்த காடுவெட்டிய சோழன் மதுரை வந்து சொக்கநாதரை தரிசனம் செய்துவிட்டு சென்றான். அதன்பின் பலமுறை சொக்கரை தரிசனம் செய்ய விரும்பினான்.

    அதற்காக பாண்டியனிடம் தோழமைக் கொள்ள விரும்பினான். தோழமைக்காக அவ்வப்போது பல பொருட்களை காணிக்கையாக ராஜேந்திரப் பாண்டியனுக்கு அனுப்பிவந்தான். சோழன் அனுப்பிய சுகர்ணாபரணம் பொன்னாடை முதலியவற்றை பாண்டியன் ஏற்று மகிழ்ந்தான். அதற்கு ஈடாக பாண்டியனும் பல வகையான பொருட்களை பரிசாக அனுப்பி வைத்தான். இதனால் சோழன் மிகவும் மனம் மகிழ்ந்தான். தனது மகளை பாண்டியனுக்கு கொடுத்து பாண்டியனை தன் மருமகனாக ஆக்கிக் கொள்ள முடிவு செய்தான்.

    அந்த திருமண முடிவு பாண்டிய மன்னனின் தம்பியான ராஜசிம்மனுக்கு தெரியவந்தது. தம்பி பழிபாவத்துக்கு அஞ்சுபவன் அல்ல. வஞ்சக நெஞ்சகம் கொண்டவன். அவனுக்கு சோழ மன்னனின் மகள் அழகில் ஒரு கிறக்கம் இருந்தது. எப்படியாவது அந்த அழகு மங்கையை அடைந்தாக வேண்டும் என்று மாறாத விருப்பமும் இருந்தது.

இந்த எண்ணத்தோடு காஞ்சிபுரம் சென்று சேர்ந்தான். தன்னை நாடிவந்த ராஜசிம்மனுக்கு சோழன் தனது பரிவாரங்களுடன் சென்று வரவேற்றான். அரண்மனை சேர்ந்த ராஜசிம்மன் தனது ஆசையையும் சோழனின் மகள் மீது கொண்ட காதலையும் மன்னனுக்கு தெரிவித்தான். இதைக் கேட்ட சோழன் அண்ணனுக்கு திருமணம் செய்ய நினைத்த தனது மகளை தன்னை தேடி வந்து தன் மகள் மீது விருப்பம் கொண்ட தம்பிக்கே கொடுக்க முன் வந்தான்.

திருமணமும் நடந்தது. ராஜசிம்மன் சோழனின் மருமகன் ஆனான். திருமணம் முடிந்த சில மாதங்களிலே சோழனின் மனமும் சிந்தனையும் விபரீதமாக மாறியது. பாண்டியனை வெற்றிக்கொண்டு பாண்டிய நாட்டையும் தன் மருமகனுக்கு கொடுக்க நினைத்தான்.

    அதை நிறைவேற்றும் பொருட்டு தனது பெரும்படையுடனும்; தனது மருமகனின் யுத்த தந்திரமுடனும் பாண்டிய நாடு நோக்கிச் சென்றான். யுத்த பேரிகைகள் முழங்க படைகள் சென்றன. மதுரை மாநகரை நெருங்கி விட்டன சோழனின் படைகள். படைகள் நெருங்கும் செய்தி ஒற்றர்கள் மூலம் ராஜேந்திரப் பாண்டியனுக்கு தெரிவிக்கப்பட்டது.

    சூழ்ச்சியால் நெருங்கிவரும் இந்த படையை எப்படி எதிர்கொள்வது என்று பாண்டியனுக்கு தெரியவில்லை. குழப்பமான மனநிலையில் தெய்வ நம்பிக்கைதான் சரியான வழிகாட்டுதலை வழங்கும் என்று நினைத்த பாண்டிய மன்னன் சோமசுந்தரக் கடவுளின் சன்னதிக்கு சென்று முறையிட்டான்.

    “அனைவரையும் காக்கும் அற்புதப் பெருமானே! அன்றொரு நாள் இரவு நேரம் தங்களை தரிசிக்கும் எண்ணத்தோடு வந்து தங்களின் கருணையால் தங்களின் தரிசனம் கிடைக்கப் பெற்ற காடுவெட்டிய சோழன் இன்றைக்கும் வந்துள்ளான். இப்போது அவன் உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் பாதகனாக வந்துள்ளான். போர்க்கோலம் பூண்டு மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறான். அவன் தங்களின் பக்தன். அன்று அவனது பக்திக்கு ஈடு செய்த பெருமானாகிய தாங்கள்தான் அவனது பகைமைக்கும் ஈடு செய்து அருள வேண்டும்!" என்று சிவபெருமானிடம் வேண்டி நின்றான்.

    “பாண்டிய மன்னனே! பயப்படாதே! உனது படையுடன் செல். சோழனை எதிர்த்துப் போரிடு! போரில் உனக்கு வெற்றி கிடைக்கும்படி யாம் செய்வோம்!” என்று அசரீரி எழுந்தது. அதனைக் கேட்டு ஆனந்தம் கொண்ட அரசன், இறைவனின் காலடியில் விழுந்து வணங்கினான். பின் தன் அரண்மனை சென்று சேர்ந்தான்.
   
    அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து சிவபூஜைகளை செய்து முடித்தான். தனது படைகளை அழைத்துக் கொண்டு சோழனை எதிர்த்துப் போரிடப் புறப்பட்டான். சோழனின் படையும், பாண்டியனின் படையும் எதிரெதிரே நின்றன. சோழனின் படை சமுத்திரம் என்றால், பாண்டியனின் படை ஒரு சிறு ஓடை என்று சொல்லும் அளவுக்கு சிறியதாக இருந்தது.

    போர் தொடங்கியது.

    இரண்டு படைகளும் கடுமையாக மோதின. இடி முழக்கம் போல ஒலியும், புயல் போல புழுதியும் கிளம்பின. சண்டமாருதம் போன்ற வேகம் உண்டானது. பாண்டியனின் சிறிய படை சோமசுந்தரப் பெருமானின் திருவருளால் பெரிய படை போல் தெரிந்தது. பாண்டிய மன்னனின் வீரர்கள் ஒவ்வொருவரும் சோழ வீரர்களுக்கு பல வீரர்களாகத் தெரிந்தார்கள்.

    தாக்குதல், அந்த தாக்குதலைத் தடுத்தல், எதிர்தாக்குதலுக்கு வியூகம் அளித்தல், எதிர்தாக்குதல் செய்தல், பிரயோகம், அதற்கு எதிர்ப்பிரயோகம் என்று போர் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

விடியற்காலையில் தொடங்கியப் போர் நண்பகல் உச்சி வெயிலில் மிகவும் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. சூரியனின் கடுமையான கிரணங்களால் வீரர்கள் களைப்படைந்தனர். தாகமெடுத்தது. தண்ணீர் கிடைக்காமல் திண்டாடினர். பெரும் தாகத்தால் பரிதவித்தனர்.

    பாண்டிய படைவீரர்கள் இப்படி வாடி வதங்குவதைக் கண்ட சிவபெருமான் அந்த படைகளுக்கு நடுவே நான்கு கால்களைக் கொண்ட ஒரு தண்ணீர்ப் பந்தலை அமைத்தார். பந்தலுக்கு நடுவே மையப்பகுதியில் விபூதி அணிந்த தவக்கோலத்தோடு நின்றிருந்தார். பந்தலுக்கு நடுவே பெரும் பானைகளில் ஆற்று நீர் நிரம்பியிருந்தது. பானையில் இருக்கும் நீரை ஒரு கமண்டலத்தில் எடுத்து, தாகத்தோடு தன்னை நாடிவரும் வீரர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார்.

    தாகம் தீர்ந்து புத்துணர்ச்சிப் பெற்ற பாண்டிய வீரர்கள் அசுர பலம் பெற்றவர்களாக சோழனின் படையை பலமடங்கு உக்கிரத்தோடு தாக்கினர். இந்த எதிர்தாக்குதலை அவர்களால் தாங்க முடியவில்லை. போதாக்குறைக்கு தாகத்தால் சோழப் படைகள் களைப்புற்றன. தொடர்ந்து போராட, யுத்தம் செய்ய தெம்பு இல்லாமல் துவண்டு போயின. பாண்டிய சேனைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சின்னாபின்னப்பட்டுப் போய் நாலுபக்கமும் சிதைந்து ஒடின.

    வெற்றி வாகை சூடிய பாண்டிய படைகள் சோழனின் படையை புறமுதுகிட்டு ஓட வைத்தன. படை வீரர்கள் காடுவெட்டிய சோழனையும் அவனது மருமகனாகிய ராஜசிம்மனையும் கைது செய்தார்கள். அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு மதுரை நகர் நோக்கி வீர நடை போட்டது பாண்டியபடைகள். இருவரையும் பாண்டிய மன்னன் ராஜேந்திர பாண்டியனிடம் கொண்டு வந்து நிறுத்தினர்.

    பாண்டிய மன்னனுக்கு ஒரே குழப்பம். தன் முன் சிறைப்பட்டு நிற்கும் காடுவெட்டிய சோழன் நீண்ட நாட்களாக நட்பை பாராட்டிய மன்னன். ராஜசிம்மனோ உடன் பிறந்த தம்பி இவர்களை எப்படி தண்டிப்பது? என்று யோசனை செய்த மன்னன் ராஜேந்திர பாண்டியன் இருவரையும் அழைத்துக் கொண்டு சோமசுந்தரப் பெருமான் முன் கொண்டு போய் நிறுத்தினார். 

“எம் பெருமானே! இவர்களுக்கு தண்டனைத்தரவோ சிறையில் அடைக்கவோ என் மனம் இடம் கொடுக்கவில்லை. எல்லாம் அறிந்த இறைவனே! தங்களது திருவுள்ளம்தான் என்ன என்பதை எனக்கு எடுத்துரைப்பீர்களா?" என்று வேண்டி வணங்கி நின்றான்.

    பாண்டியனின் வேண்டுகோளுக்கு செவிசாய்ந்த பெருமான் “பாண்டியனே! நீ அறவழி தெரிந்தவன். தர்மத்தின் வழிநடப்பவன். இறைபக்தி கொண்டவன். உன் இஷ்டம் எதுவோ? அதன்படியே செய். நான் என்றும் உன்னுடன் இருப்பேன்” என்று அசரீரியாக ஒலித்தது சிவபெருமானின் குரல்.

    இதனைக் கேட்டு மகிழ்வு பெற்ற மன்னன் தெய்வ வாக்கை மனதில் நிறுத்தி, தான் விரும்பியபடியே தர்மசாஸ்திரங்களின் நெறிதவறாமல் காடுவெட்டிய சோழனுக்கு சில தேர்கள், யானைகள், குதிரைகள், வீரர்கள், தங்க ஆபரணங்களை கொடுத்து வழியனுப்பிவைத்தான். 

தனது தம்பியான ராஜசிம்மனுக்கு தனது நாட்டில் சிறு பகுதியை தனியாகப் பிரித்துக் கொடுத்து அந்தப் பகுதிக்கு அரசனாக முடிசூட்டினான். எல்லா உயிர்களையும் காப்பவனாகிய கடவுள் அருளாலே பல வளமும் பெருக அரசாட்சி செய்து நல்லதொரு மன்னனாக பிற்காலத்தில் பெரும் பெயரெடுத்தான் ராஜேந்திரபாண்டியன்.

1 கருத்துகள்

  1. அரசர்கள் ஆட்சியில் ஆன்மீகம் குறித்த பகிர்வு வெகு சிறப்பாக இருந்தது. மன்னிக்கும் மனப்பாங்கை அரசர் போதிப்பதாக இருந்தது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை