வியாழன், பிப்ரவரி 05, 2015

டாப்ஸ்லிப்-கொங்கு தேசத்தின் குட்டி ஊட்டி

ந்த முறை எனது பயணம் டாப்ஸ்லிப்பை நோக்கியிருந்தது. ஒரு நாள் யதார்த்தமாக நண்பர் கார்த்திக்கேயனிடம் டாப்ஸ்லிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் டாப்ஸிலிப் போவதாக இருந்தால், கட்டாயம் சோமண்ணாவைப் பார்க்க வேண்டும். அவர் உங்களுக்கு எல்லா உதவிகளும் செய்வார் என்று கூறி, தொலைபேசி எண்ணை கொடுத்தார்.

சோமண்ணாவிற்கு போன் செய்தேன். "இப்பெல்லாம் ஒரே வறட்சியா இருக்கு!  நீங்க வந்தாலும் திருப்தியா இருக்காது'' என்றார். அப்படி அவர் சொன்னது 'மே' மாதத்தில்... மழை என்ற கொடையை 6 மாதங்களாக டாப்ஸ்லிப் அறியாது இருந்த காலம் அது.
டாப்ஸ்லிப்
அதன்பின் டாப்ஸ்லிப்பை நானும் மறந்து போயிருந்தேன். ஒரு நாள் சோமண்ணாவிடம் இருந்து போன், "இப்ப வாங்களேன்! நல்ல சீஸன்!'' என்றார். ஆமாம், மதுரை கூட மழையில் குளித்து குளிர்ந்திருந்த நேரம்.

ஒரு நாள் காலை பஸ்ஸில் பொள்ளாச்சிக்கு பயணமானேன். ஐந்து மணி நேர அலுப்பான பயணத்திற்குப் பின் பொள்ளாச்சியில் இறங்கினேன். அங்கிருந்து சேத்துமடைக்கு சிட்டி பஸ்ஸில் 45 நிமிட பயணம். அங்கு சென்று இறங்கியதும், சோமண்ணா அனுப்பி வைத்த நபர் டூ வீலரோடு தயாராக காத்து இருந்தார்.

ஒருவேளை டூவீலரில் தான் டாப்ஸ்லிப் போக வேண்டுமா! வனப்பகுதியில் டூவீலருக்கு அனுமதி கிடையாதே என்று பலவகையில் யோசித்தேன். எனது சிந்தனைக்கு பதிலளிக்கும் விதமாக அந்த புதிய நபர் பேசினார்.

"சோமண்ணா காட்டேஜ் மலை அடிவாரத்துல இருக்கு. அங்கிருந்துதான் டாப்ஸ்லிப் மலைப்பாதை ஆரம்பம்" என்றார். டாப்ஸ்லிப்பின் குளிர் அங்கேயே ஆரம்பித்து விட்டது போல் குளுமை இருந்தது.

பேசிக்கொண்டே நான்கு கி.மீ. வந்து விட்டோம். வழிநெடுக 'வெஸ்டர்ன் காட்ஸ்' என்ற வழிகாட்டுப் பலகைகள் எங்களை வரவேற்றுக் கொண்டே இருந்தன. அந்த வெஸ்டர்ன் காட்ஸ்தான் சோமண்ணாவின் ரிஸார்ட்ஸ் என்பது அங்கு போனதும் தான் எனக்கு தெரிந்தது.
நான் தங்கி இருந்த அறை
நல்ல பசுமையான சூழலில் எக்கோ பார்க்கில் இருப்பது போல் தூய்மையாக அந்த இடம் இருந்தது. எனக்காக ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்தார்கள். இங்கு ஒவ்வொரு அறையும் தனித் தனியாக தள்ளித் தள்ளியிருந்தன. ஒரு பண்ணைக்குள் இருக்கும் வீடு போல் அவைகள் இருந்தன. ஸ்விம்மிங் பூல், வை-ஃபை என்று நவீன அம்சங்களும் அங்கிருந்தன. தங்குவதற்கு அருமையான இடம். மன அமைதி கிடைக்குமிடம்.
நீச்சல் குளம் 
மதிய உணவு முடிந்ததும், ""கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு, மாசாணியம்மன் கோயில் போயிட்டு வந்துருங்க'' டூவீலரை என் கையில் தந்து விட்டு போனார் சோமண்ணா.

ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின் மாசாணியம்மன் கோயிலுக்காக பொள்ளாச்சி நோக்கி பயணம் செய்தேன். ரோட்டின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்த மரங்கள், உயரத்தில் கிளைகளால் ஒன்றையொன்று தொட்டு உறவாடிக் கொண்டிருந்தன.
மாசாணியம்மன் கோயில்
அடர்த்தியான மர நிழல் அந்த பகல் வேளையிலும் ரோட்டில் இருளைக் குவித்திருந்தது. அதில் பயணிக்கவே ரம்மியமாக இருந்தது.

நான்கு வழிச்சாலையில் நாம் இழந்தது இந்த நிழல் தரும் மரங்களையும், குளுமையையும் தான். அப்படி இழந்த குளுமை இந்தச் சாலையில் அனுபவித்தபடி பயணித்தேன்.
கோயில் கடை 
ஆனை மலை வந்ததும் மாசாணியம்மன் கோயிலுக்கு சென்றேன். அது ஒரு பெண்களின் கோயில். பெண் வயதுக்கு வரும்போது உடலில் ஏற்படும் பலவித  மாற்றங்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் நிவாரணம் தரும் அம்மன் இந்த மாசாணியம்மன், என்றொரு நம்பிக்கை பெண்கள் மத்தியில் இருக்கிறது.

ராவணன் சீதையை கவர்ந்து சென்ற பிறகு அவளை மீட்க ராமர் இவ்வழியே சென்றதாகவும், அந்த நேரத்தில் மயானத்தில் பராசக்தியின் வடிவமாக இருந்த மாசாணியம்மனை ராமர் வழிப்பட்டதாகவும் வரலாறு இருக்கிறது. இந்த அம்மன் மயானத்தில் சயனித்த நிலையில் இருப்பதால் "மயானசயனி' என்ற பெயர் காலப்போக்கில் "மாசாணி' என்று மாறியது.
அரைபட காத்திருக்கும் மிளகாய் 
இங்கு மிளகாய் அரைத்து அம்மனின் மீது சாந்து பூசினால் தொலைந்து போன விலையுயர்ந்த பொருட்கள் திரும்பக் கிடைத்து விடும் என்பது நம்பிக்கை. இதற்காகவே இங்கு இருக்கும் ஆட்டுக் கல்லில் தொடர்ந்து மிளகாய் அரைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
மாசாணியம்மன் கோயில் உள்ளே 
ஆனைமலையில் பாயும் உப்பாற்றின் வடகரையில் கிடந்த நிலையில் 17 அடி நீளத்தில் மாசாணியம்மன் சிலை உள்ளது. பொதுவாக எல்லா கோயில்களிலும் தரிசனம் முடிந்த பின் வலம் வருவார்கள். மாசாணியம்மனுக்கு வலம் வந்தப்பின் தன்னை வணங்கினால்தான் பிடிக்கிறது போலும். எல்லா பக்தர்களும் முதலில் வலம் வந்து, அதன் பின்னே அம்மனை வணங்குகிறார்கள்.

அம்மன் தரிசனம் முடிந்து மீண்டும் வெஸ்டர்ன் காட்ஸூக்கு திரும்பினேன்.

"காலை ஏழு மணிக்கு டாப்ஸ்லிப்புக்கு பஸ் இருக்கிறது. காலையில் சீக்கிரமே கிளம்பிடுங்க!" என்று சோமண்ணா கூறினார்.

மறுநாள் காலை எழுந்து அவதி அவதியாக குளிரையும் பொருட்படுத்தாமல் கிளம்பி, பஸ்ஸுக்காக காத்திருந்தேன். மழைத்தூறல் போட்டுக் கொண்டே இருந்தது. 'மிஸ்ட்' வேறு இயற்கையை ரசிக்க முடியாமல் திரை போட்டது. இதே சூழ்நிலை நீடித்தால் என்னால் ஒரு போட்டோக் கூட எடுக்க முடியாது.

நேரம் ஏழு மணியைக் கடந்து விட்டது. இன்னமும் எனக்கான பஸ் வரவில்லை. மலைப்பாதை ஆரம்பிக்கும் இடத்தில் செக் போஸ்டில் காத்திருந்தேன். ஏழு மணிக்குப் பிறகு தான் வாகனங்களை மலைப்பாதையில் அனுமதிக்கிறார்கள்.
செக் போஸ்ட்
கேரளாவிலிருந்து கல்லூரி மாணவ மாணவிகள் வந்திருந்த சுற்றுலா பஸ் ஒன்று செக் போஸ்ட் திறப்பிற்காக காத்து நின்றிருந்தது. நான்கு இளைஞர்கள் இரண்டு பைக்கில் வந்திருந்தார்கள். மலைப்பாதையில் செல்ல அனுமதி கேட்டு வனக்காவலர்களிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள். விலங்குகள் நடமாடும் இடத்தில் டூவீலரில் செல்வது உயிருக்கே ஆபத்து என்று அவர்களை திருப்பி அனுப்பினர்.

டாப்ஸ்லிப்புக்கு பஸ்ஸில் போவது என்ற முடிவு அபத்தமானது. ஒரு நாளைக்கு இரண்டு பஸ்கள் மட்டுமே பொள்ளாச்சியில் இருந்து பரம்பிக்குளம் போகிறது. இந்த பஸ்களை தவறவிட்டால் போவதற்கு வேறு பஸ்கள் இல்லை. அதனால் சொந்த வாகனம் அல்லது வாடகை காரில் டாப்ஸ்லிப் போவதுதான் உத்தமம்.

சோதனைச் சாவடியில் தனியார் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. குறிப்பாக மது வைத்திருக்கிறார்களா என்றுதான் பார்க்கிறார்கள். மது முற்றிலும் தடை செய்யப்பட்ட வனப்பகுதி இது. காரில் இசை கேட்கக் கூடாது என்ற கண்டிஷனோடு அனுமதிக்கிறார்கள்.

எனக்கான பஸ் வந்தது.

போட்டோ எடுக்க வசதியாக டிரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்து கொண்டேன்.  சோதனைச்சாவடி நுழைவாயிலை கடந்த உடனே மலைப்பாதை ஆரம்பித்து விடுகிறது.
குறுகலான மலைப்பாதை
குறுகலான மலைப்பாதை, மோசமான ரோடு என்ற வகையில்தான் சாலை இருந்தது. அடர்ந்த மரங்களுக்கு இடையே சூரியன் வரலாமா என்று அனுமதி கேட்பது போல் இலைகளுக்கு இடையே எட்டிப் பார்த்து கொண்டிருந்தான்.

பறவைகள் எழுப்பும் விதவிதமான ஒலிகள் மனதுக்கு ரம்மியம் தந்தது. வனவிலங்குகள் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தேன். திடீரென்று கூட்டம் கூட்டமாக மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன.

டாப் ஸ்லிப் வந்து சேர்ந்தேன். அங்கு வரையாடுகள் கண்ணில் பட்டன. டாப்ஸ்லிப்பில் யானை சஃபாரி, ஜீப் சஃபாரி எல்லாம் இருக்கிறது. நான் சென்ற நேரத்தில் மழை அதிகம் இருந்ததால் இரண்டு சஃபாரிகளுமே கேன்ஸலாகி இருந்தன.
கேரளா எல்லை
டாப்ஸ்லிப்பை கடந்ததுமே தமிழக எல்லை முடிந்து கேரளா ஆரம்பித்து விடுகிறது. பரம்பிக்குளம் வனச்சரகம் கேரளாவின் பராமரிப்பில் இருக்கிறது. பேசாமல் தமிழக வனங்களையும் கேரளாவே பராமரித்துக் கொள்ள விட்டுவிடலாம் போல் இருக்கிறது. தமிழகத்தை விட வனங்களை கேரளாவும் கர்நாடகாவும் நன்றாக பராமரிக்கிறார்கள்.

பரம்பிக்குளம் எல்லையில் கேரளத்தின் வன சோதனை மையத்தில் எல்லா வாகனங்களையும் அனுமதிப்பதில்லை. வனத்திற்கு சொந்தமான வாகனங்கள், சரணாலயத்தில் தங்குபவர்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
நாங்கள் பயணம் சென்ற வேன்
மற்றவர்கள் சரணாலயத்தை பார்வையிட வேண்டுமென்றால் அதற்காக வேன் சஃபாரி தயாராக இருக்கிறது. இந்த வேன் சஃபாரியில் பயணம் செய்வதற்கு 18 பேர் வேண்டும்.

பஸ்ஸில் இருந்து 4 பேர் தான் இறங்கினோம். அதிலும் நான் ஒருவன்தான் சுற்றுலா பயணி. மற்றவர்கள் உள்ளூர்வாசிகள். நான் மட்டும் ஒற்றையாளாக சஃபாரிக்கு டிக்கெட் கேட்டேன். 18 பேர் வந்தால்தான் சஃபாரி என்றார்கள் டிக்கெட் கவுண்டரில்.

""வருவார்களா...?'' என்றேன்.

"இது சீஸன் காலமில்லை. அதனால் வர மாட்டார்கள்" என்று நெற்றியில் அடித்தது போல் சொன்னார். கடைசியாக வந்ததே வேஸ்ட் என்று நினைத்து வெளியே வந்தபோது, ஒரு ஏஸி வேன் ஆடம்பரமாக வந்து நின்றது. உள்ளே இருந்து இரண்டு வெள்ளைக்கார தம்பதிகள் இறங்கினர். டிரைவருடன் சேர்த்து ஐந்து பேர்.

'இது போதாதே..!'

நினைத்து முடிப்பதற்குள் 18 டிக்கெட்டையும் மொத்தமாக வாங்கி முடித்திருந்தார்கள். கவுண்டரில் இருந்த அலுவலர் என்னையும் அவர்களோடு இணைந்து கொள்ளச் சொன்னார்.

நானும் 180 ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட்டை அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டேன். அந்த ஐவரோடு நானும் இணைந்து அறுவராக புறப்பட்டோம்.

முதலில் வனத்தில் விளையும் பொருட்களை விற்கும் 'வனஸ்ரீ' அங்காடியை அறிமுகப்படுத்தினார்கள். 'சஃபாரி முடித்ததும் இங்கு இறக்கி விடுவோம். உங்களுக்கு வேண்டிய பொருட்களை அப்போது வாங்கிக் கொள்ளலாம்' என்று கைடு கூறினார்.

ஊட்டி, மூணாறு போன்ற பல இடங்களில் மனித அடிமைகள் செயற்கையாக உருவாக்கிய தேயிலைத் தோட்டங்கள் தான் அழகை கூட்டுகின்றன. ஆனால், பரம்பிக்குளம், டாப்ஸ்லிப் இயற்கையான வன அழகு.

அடர்ந்த  தேக்கு மரங்கள் நிறைந்திருக்கும் இந்த வனப்பகுதியை உருவாக்கியதில் ஹ்யூகோ வுட் என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு நிறைய பங்கு இருக்கிறது. அவர் இல்லையென்றால் இன்று நாம் பார்க்கும் வனம் இல்லை.

வுட் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். டாப்ஸ்லிப்பில் உள்ள தேக்கு மரங்களை வெட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைப்பதுதான் அவருக்கான வேலை.

மரங்கள் மீது அளவில்லா பிரியம் கொண்ட வுட்டுக்கு ஒவ்வொரு மரத்தையும் வெட்டும் போதும் மனம் வலிக்கும். அவர்தான் மரத்தை வேரோடு அழித்து விடாமல் மண்ணில் இருந்து இரண்டடி உயரம் விட்டு வெட்டும் முறையை அறிமுகப்படுத்தினார்.

அதனால் மண் அரிப்பு தடுக்கப்பட்டது. வெட்டிய மரங்கள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கின. இதோடு தனது வேலையை முடித்துக் கொள்ளவில்லை. எப்போதும் அவர் தனது 'கோட்' பைகள் நிறைய தேக்கு விதைகளை வைத்திருப்பார்.

காட்டில் பல இடங்களில் நடந்த அவர். தான் நடக்கும் இடங்களில் எல்லாம் தனது குடை கம்பியில் நிலத்தை துளையிட்டு அதில் ஒரு தேக்கு மர விதையைப் போட்டு மூடி வைப்பார்.

காடு முழுவதும் அவர் விதைத்த விதைகள்தான் இன்று பெரிய மரங்களாக வளர்ந்து நிற்கின்றன. பெரிய பெரிய அணைகளைக் கட்டிய இன்ஜினியர்கள் அவர்களின் உடலை அந்தந்த அணைகளிலேயே புதைப்பது போல் இந்தக் காட்டை உருவாக்கிய வுட்டின் விருப்பப்படி அவரது உடல் இந்த வனத்தில்தான் புதைக்கப்பட்டது.

அந்த சமாதி எங்கிருக்கிறது என்று எங்கள் கைடிடம் கேட்டேன். அப்படியொரு சம்பவத்தையே அவர் கேள்விப்பட்டதில்லை என்று சொன்னபோது எனக்கு வேதனையும் வெறுப்பும்தான் மிஞ்சியது. எவ்வளவு சுலபமாக அந்த மாமனிதனை நாம் மறந்திருக்கிறோம்.

அந்த வனத்தில் எங்கோ ஒரு மூலையில் அவரின் சமாதி தான் வளர்த்த தேக்கு மரப் பிள்ளைகளின் உதிர்ந்த சருகுகளால் மூடப்பட்டு இருக்கும். அதற்குள் அமைதியான உறக்கத்தில் வுட் இருப்பார்.

எங்கள் வேன் அடர்ந்த வனத்துக்குள் நின்றது. கீழே இறங்கினோம். எதிரே வானுயர்ந்த தேக்கு மரம் நின்றிருந்தது. 'கன்னிமாரா' என்ற இந்த மரம்தான் உலகிலேயே மிக வயதான தேக்கு மரம். கிட்டத்தட்ட 460 வருடங்களாக பல தலைமுறைகளைக் கடந்து நிற்கிறது.
உலகிலேயே அதிக வயதான கன்னிமாரா தேக்கு மரம் 
48.50 மீட்டர் உயரமும் 6.57 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரமாண்ட மரம் "மஹாவிருக்ஷா புரக்சார்' விருதைப் பெற்றுள்ளது. இந்த மரத்தை வெட்டினால் ஒரு ஊருக்கே வீடு கட்டலாமே என்று வேன் கைடிடம் ஆங்கிலேயர் கேட்க, எதுவும் செய்ய முடியாது. 65 வயது கடந்த எந்த தேக்கு மரமும் உபயோகப்படாது. வெட்டினால் பொடிப்பொடியாக உதிர்ந்து விடும் என்றார்.

இந்த மரத்திற்கு அடுத்தபடியாக அதிக ஆயுள் கொண்ட உயிரினங்கள் இங்கு வாழும் ஆமைகள் என்றார். காட்டில் ஆமைகள் வாழுமா? 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் ஆமைகள் இங்கு அதிகம். ஆச்சரியமான தகவல்.

மீண்டும் எங்கள் பயணம் பரம்பிக்குளம் நோக்கி நகர்ந்தது. காட்டின் பாதையில் வேன் வந்தபோது திடீரென்று டிரைவர் நிறுத்தினார். கைடு கீழே இறங்கி வேகமாக, சாலையை விட்டு கடந்து ஒரு 20 அடி சென்று எதையோ எடுத்து வந்தார்.

நாங்கள் என்னவோ ஏதோ என்று பரபரத்துப் போயிருக்க கையில் பிஸ்கட் கவரோடு வந்தார். எங்களிடம் காட்டி, "பிளாஸ்டிக்! இதை யாரோ போட்டு சென்று விட்டார்கள். விலங்குகள் சாப்பிட்டால் இறந்து விடும்" என்றார். கேரளா இந்த விஷயத்தில் முதன்மையாக இருக்கிறது.
மர வீடு
ஏரிக்கரையோரம் அழகான இரண்டு மர வீடுகள் இருக்கின்றன.இங்கு தங்கியபடி ஏரியின் அழகையும், வனத்தின் செழுமையையும் ரசிப்பது இனிமையான ரசனை.
தூனக்கடவு ஆணை
பரம்பிக்குளம் பகுதியில் தூனக்கடவு ஆணை, பரம்பிக்குளம் ஆணை என்று இரண்டு அணைகள் உள்ளன. இரண்டுமே காமராஜர் கட்டியது. அதிலும் ஒரு அணையிலிருந்து மற்றொரு அணைக்கு 8 கி.மீ. நீள சுரங்கப்பாதையில் தண்ணீர் செல்கிறது. இந்த அணைகள் இருப்பது கேரளாவில். ஆனால் இதன் தண்ணீர் முழுவதும் தமிழ்நாட்டுக்கு..!
பரம்பிக்குளம் அணை
காமராஜர் என்ற மாமனிதருக்கு தமிழகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. நான் செல்லும் இடங்களிலெல்லாம் அவர் கட்டிய அணைகள்தான் அப்பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கியுள்ளன.

எங்கள் கைடு 50 முறையாவது காமராஜர் பெயரை உச்சரித்திருப்பார். அந்த வெள்ளையர்கள் மனதில் கூட அவர் பெயர் ஆழமாக பதிந்து விட்டது.
பரம்பிக்குளம் ரவுண்டாணா
பரம்பிக்குளம் அணையையும் வளைத்துப்போட கேரளா முயன்று வருகிறது. 'ஒரு கறிவேப்பிலையைக் கூட சுயமாய் உற்பத்தி பண்ண துப்பு இல்லாதவர்கள் மலையாளிகள்' என்பார் மலையாள எழுத்தாளர் சக்காரியா. ஆனால், கேரளத்துக்காரர்களுக்கு தண்ணீர் மீதான காதல் மட்டும் தீர்வதேயில்லை. என்றைக்கு இதுவும் முல்லைப் பெரியாறு போல் வெடிக்கப்போகிறதோ தெரியவில்லை.

ஒருவழியாக எங்களின் சஃபாரி முடிவுக்கு வந்தது. விலங்குகளின் சரணாலயத்தில் எங்கள் கண்ணில் பட்டது மான்களும் ஒரேயொரு காட்டு யானை மட்டுமே! ஆனாலும் இயற்கை அழகு மனதை நிறைத்தது.

மீண்டும் ஏறிய இடத்துக்கே வந்து இறங்கினோம்!

எனக்கான பஸ் மீண்டும் மாலையில்தான் இருக்கிறது என்றார்கள். அதற்காக நான் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டும். அந்த வெளிநாட்டினர் வந்த வேனில் 10 பேர் போகலாம். அவர்கள் நால்வர் மட்டுமே இருந்ததால் அவர்களிடம் கேட்டேன். மகிழ்ச்சியோடு அவர்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டார்கள்.

நான் தங்கியிருந்த வெஸ்டர்ன் காட்ஸில் இறக்கி விட்டார்கள். வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த வெள்ளையர்கள் மூன்று மாதமாக இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

 நான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி கூறினேன். பிரமித்துப் போனார்கள். தங்கள் டூர் புரோக்கிராமில் மதுரை இல்லை. அடுத்த முறை வரும்போது மதுரையையும் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள்.

நான் 'ஹாலிடே நியூஸ்' இதழை அவர்களிடம் கொடுத்தேன். அந்த இதழில் வேல்ஸ் நாட்டைப் பற்றிய கட்டுரை ஒன்று இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்ததும் அவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. 'என்னுடைய நாடு..!' என்று குதூகலித்தார்கள். நானும் என் நினைவாக அந்த இதழை அவர்களுக்கே கொடுத்து விட்டேன்.

மறக்க முடியாத ஒரு பயணமாக டாப்ஸ்லிப் அமைந்திருந்தது.  


9 கருத்துகள்:

 1. நல்ல இடுகை. ஊட்டியைப்போல வணிகமயமாகாமல் டாப்ஸ்லிப் பாதுகாக்கப்படுவது சிறப்பு. என்னையும் வெகுவாகக் கவர்ந்த இடம். “டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்” கட்டுரையில் மேலும் சில தகவல்கள் உள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே!
   முதன் முறை வருகைக்கு வணக்கம்!
   அருமையான ஒரு இணைப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. கூடிய விரைவில் ஹுயூஹோ வூட் வாழ்ந்த வீட்டைப் பார்த்து வருவேன்.

   நீக்கு
 2. நல்ல கட்டுரை!

  உண்மையாக மறக்க முடியாத பயணம் தான் நண்பரே! ம்ம்ம்ம் இங்கும் சென்றிருக்கின்றோம்...இதே இடங்கள்! மிகப் பழைய தேக்குமரம் கன்னிமாரா, பரம்பிக் குளம் அணை, தூனக்கடவு அணை, டாப்ஸ்லிப், அங்கிருக்கும் யானைகள் கேம்ப் என்றும், இதே டாப் ஸ்லிப்பின் கேரளத்துப்பக்கத்திலிருந்து மூணாறு....அங்கிருந்தும் பார்த்திருக்கின்றோம். வரையாடு, மான் கள், யானை, பறவைகள் என்று பல. அப்பொதெல்லாம் கேமரா இல்லை எனவே படங்கள் எடுக்கவில்லை. கேரளத்துக் காரர் என்ன சொன்னார் தெரியுமா? பரம்பிக் குளம் இருப்பது எங்கட நாட்டுல, வெள்ளம் மாத்ரம் தமிழனுக்கு! அங்ங்ன நங்களு தரும் போ முல்லைப் பெரியாறினு மாத்ரம் எந்தினா வழக்குண்டாக்குனு...என்று அவர் கேட்ட கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை.

  ஆனால் சக்காரியா சொன்னது போல், அவர்களுக்கு நம் தமிழ் நாட்டிலிருந்துதான் எல்லாக் காய்கறிகளும் செல்கின்றன. ஆனால் அவர்கள் தமிழ் நாட்டைப் பற்றி மிகவும் கேவ்லமாகப் பேசுவார்கள். ,,முடிந்தால் சின்னார் சென்று வாருங்கள். அங்கு மர வீட்டிலும், பழங்குடி மக்கள் வாழ்ந்த வீட்டிலும் தங்கிப் பாருங்கள். மர வீடு எடுப்பதாக இருந்தால் ஆற்றின் கரையில் ஒரு வீடு உண்டு அதை எடுட்துக் கொள்ளுங்கள்!! நாங்களும் அந்த சமாதி பற்றி அறிந்து கொண்டு உலாந்தி எனும் இடத்திற்குச் சென்றோம்...டாப் ஸ்லிப்பிலிருந்து 3 கிமீ தூரம் இருக்கும் என்று நினைக்கின்றென்...

  வுட் அவர்களின் அந்த முறை கோப்பிஸ் என்று சொல்லப்படுகின்றது. பின்னர் உண்ணிச் செடிகள் தேக்கு மரங்கள் மட்டுமல்ல மற்றமரங்களையும் வளர விடாமல் செய்வதால் அதை அழிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சொன்னார்கள் கேரளத்துக்காரர்கள்.

  இன்னும் எழுதலாம் பதில் பெரிதாகிவிடும்...

  மிக அருமையான கட்டுரை நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே,
   இந்த பதிவுக்கு 45-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் வந்திருந்தன. அவைகள் எல்லாம் .இன் என்பதை .காம் என்று மாற்றிய போது இழந்தேன். அந்த வருத்தம் இப்போதும் உண்டு.

   தங்களின் பின்னூட்ட கருத்துக்களை பார்க்கும் போது இழந்த கருத்துக்களை மீண்டும் பார்ப்பதுபோல் மகிழ்ச்சி.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

   நீக்கு
 3. நாங்களும் . காம் மாற்றினோம் ஆனால் கருத்துகள் எதுவும் இழந்ததாகத் தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு உதவியவர் டிடி..நம் பதிவர் நண்பர் திண்டுக்கல் தனபால் அவர்கள்...அவரைக் கேட்டுப்பாருங்களேன்.....ஏதேனும் செய்ய முடியுமா என்று...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர்களே,
   எனக்கும் வழிகாட்டி டிடி சார்தான். நான் கூகுள் ப்ளசின் மூலம் பின்னூட்டம் இடும்படி அமைத்திருந்தேன். எனக்கு வலை தொழில்நுட்பம் தெரியாததால் அப்படி நடந்தது.
   அந்த முறை கருத்துக்கள் இடுபவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்று மாற்றி அமைத்தவர் டிடி சார் தான். ஆனால் அப்போதே பழைய கருத்துக்கள் போய்விடும் என்றும் கூறினார்.
   நீங்கள் வைத்திருக்கும் முறையில் வெளிநாட்டினர் உங்கள் வலைதளத்தை பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். இப்படி குறைபாடுகள் இருக்கும் செட்டிங்சை மாற்ற வேண்டும் என்று நினைத்து நாங்கள் மாற்றிய போதுதான் பழைய கருத்துக்கள் அத்தனையும் மறைந்து போனது.
   மிக அற்புதமான கருத்துக்கள் எல்லாம் போனது. வேதனைதான்.
   இருப்பினும் ஆலோசனை தந்த தங்களுக்கு என் நன்றிகள்.

   நீக்கு
 4. அழகான இயற்கை எழில் கொஞ்சும் டாப்ஸிலிப் இப்படி ஒரு இடம் இருப்பது என்பதே தங்கள் பகிர்வின் மூலமே காண்கிறேன். தாங்கள் சென்று வந்தீர்கள் என்பது மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு தான். காமராசர் செய்த அற்புதப் பணியின் அடையாளங்கள் இன்னும் அவர் பெயர் போற்ற விளங்குகின்றன என்பது பெருமைப்படவேண்டிய ஒன்று. ஹியூகோவுட் என்ற மகத்தான மனிதரை அவர்கள் மறந்தது எப்படி? அவர் நினைவாக ஒரு நினைவிடம் அமைத்து அவர் செயல்களை பதிந்து வைத்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...