சனி, ஜூன் 06, 2015

வருடத்தில் 100 நாட்கள் நாடகம் நடைபெறும் கிராமம்கிராமத்துக் கோயில் திருவிழா என்றால் அதில் ஒரு கரகாட்டம், ஒரு நாடகம், ஒரு பாட்டுக் கச்சேரி, ஒரு ஆடல்பாடல், ஒரு பட்டிமன்றம் என்று விதவிதமான நிகழ்ச்சிகள் இருக்கும். ஆனால் வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் நாடகத்தை மட்டுமே திருவிழாவாக கொண்டாடும் ஒரு கிராமம் மதுரைக்கு அருகே இருக்கிறது. அதுவும் ஒன்றிரண்டு நாடகங்கள் அல்ல, 100 நாடகங்கள். ஒவ்வொரு வருடமும் இந்த 100 நாட்கள் நாடகத் திருவிழா நடைபெறுகிறது.

அந்த கிராமத்தின் பெயர் வலையங்குளம். மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நான்குவழிச் சாலையில் 22-வது கி.மீ. தொலைவில் அந்த கிராமம் அமைந்துள்ளது.

கிராமங்களின் அழகே திருவிழாக்களில் தான் இருக்கிறது என்பார்கள். இந்தக் கிராமமும் அதற்கு விலக்கல்ல. இங்கு திருவிழா 100 நாட்கள் தொடர்ந்து களைக்கட்டுகிறது. இவையெல்லாமே இங்கே குடிகொண்டிருக்கும் தானாக தோன்றிய தனிலிங்கப் பெருமாளுக்காகத்தான்.

இந்த விஞ்ஞான உலகத்தில் கூட இந்தக் கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் கோயிலுக்கு வெளியே இருந்தபடி கடவுளை வணங்குவது விநோதமாக தெரிகிறது. கோவிலுக்கு முன்பே நாடக மேடை அமைந்துள்ளது. இந்த மேடையே அந்த ஊர் மக்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். காலில் செருப்பணிந்து இந்த மேடை அருகே யாரும் போக மாட்டார்கள். நாடகத்தை தவிர வேறு எந்த நிகழ்ச்சியையும் இதில் அரங்கேற்ற முடியாது.

இப்படி நாடகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் எப்படி வந்தது? என்று கிராம முன்னாள் தலைவர் செல்லத்துரையிடம் கேட்டபோது, "இந்தக் கோயிலில் இருக்கும் தனிலிங்கப் பெருமாள் ஒரு நாடகப் பிரியர். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதானே பக்தர்களின் கடமை. அதைதான் செய்கிறோம்.

பக்தர்களின் வேண்டுதலை பகவான் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடனாக அவரவருக்குப் பிடித்த நாடகம் போடுவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். தங்களது காணிக்கையாக நாடகத்தை  நடத்துகிறார்கள்.

இந்த பாரம்பரியம் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியில் திருவிழா ஆரம்பமாகும். அன்று முதல் தினமும் நாடகம் நடக்கும்.

முதல் நாடகம் எப்போதும் 'அபிமன்யு சுந்தரி'தான். 425 வருடங்களுக்கு முன்பு இந்த நாடகம் நடந்து கொண்டிருந்த போதுதான் திருமலை நாயக்கர் வந்தார். நாடகத்தை பார்த்து உள்ளம் மகிழ்ந்து பாராட்டினார். அதனால் அந்த நாடகத்தில் நடித்தவர்களுக்கு 'திருமலை மெச்சினார்' என்ற பெயர் வந்தது.

இன்றைக்கும் திருவிழாவின் முதல் நாடகமான 'அபிமன்யு சுந்தரி'யை திருமலை மெச்சினார் பரம்பரையில் வந்தவர்களே நடித்து தொடக்கி வைப்பார்கள். தினமும் ஒரு நாடகம் வீதம் 100 நாடகங்கள் நடைபெறும்.

சித்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில்  இறங்கும் நாளான சித்ரா பௌர்ணமியில் நாடகத்தை முடிப்போம். கடைசி நாடகம் முடிந்ததும் பட்டாபிஷேகம் நடத்தி சமபந்தி உணவுடன் திருவிழா முடியும்" என்றார்.


ஒவ்வொரு நாளும் நாடகம் தொடங்குவதற்கு முன் ஊர் மந்தையில் இருந்து தீப்பந்தங்களை மேளதாளத்துடன் எடுத்து வருவார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில் தீப்பந்தங்கள்தானே நாடகத்திற்கான வெளிச்சம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த சம்பிரதாயம் இன்னமும் தொடர்கிறது.

தீப்பந்தம் மேடைக்கு வந்ததும், கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. ஊர் பெரியவர்கள் அனைவருக்கும் மரியாதையை செய்தபின் நாடகம் தொடங்குகிறது. சரியாக இரவு 10 மணிக்கு தொடங்கும் நாடகம் விடியற்காலை 5 மணிக்கு முடிகிறது. அதுவரை கோயில் நடை திறந்தே இருக்கும். நாடகத்தை கோயிலில் இருக்கும் தெய்வம் பார்த்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

நாடகம் நேர்த்திக்கடனாக மாறியதற்கு ஒரு சம்பவத்தை சொல்கிறார், 'திருமலை மெச்சினார்' மலைச்சாமி. "ஒரு முறை இந்த பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. பஞ்சம் தலைவிரித்தாடியது. மழை வேண்டி மக்கள் நாடகம் நடத்துவதாக வேண்டுதல் வைத்தார்கள். மழை வந்தது. ஊர் செழித்தது. மக்கள் நன்றிக்கடனாக அடுத்த வருடம் நாடகத்தை நடத்தினார்கள். அன்றிலிருந்து இந்தப் பழக்கம் அனைவரையும் தொற்றிக்கொண்டது." என்கிறார்.

இங்கு நாடகத்தை நேர்த்திக்கடனாக போட நினைப்பவர்கள். நினைத்தவுடன் போட்டுவிட முடியாது. அதற்கு தேதி கிடைக்காது. ஒரு வருடத்திற்கு முன்பே ரூ.100 கொடுத்து முன்பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். ஒதுக்கப் பட்ட நாளில் சம்பந்தப்பட்டவர்கள் நாடகம் நடத்திக்கொள்ளலாம்.


ஒரு நாடகம் நடத்த குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். இதுவே சினிமா நடிகர்களை வைத்து என்றால் 60,000 முதல் ஒரு லட்சம்  வரை செலவாகும். அவரவர்கள் தகுதிக்கேற்ப நாடக நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை நாடக கலைஞர்களும் இங்கு வந்து நடித்திருக்கிறார்கள்.

எப்படிப்பட்ட மனக்குறையோடு வந்து நின்றாலும் நாடகம் போடுவதாக தனிலிங்க பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் உடனே அது நிறைவேறிவிடுகிறது. மழலைச்செல்வம் வேண்டி சரணடையும் தம்பதிகள் அடுத்த வருடமே தங்கள் மழலையோடு வந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள் என்று பெருமையோடு கூறுகிறார்கள் ஊர் மக்கள்.29 கருத்துகள்:

 1. மிகவும் ஆச்சர்யமான விடயமாக இருக்கிறதே நண்பரே நம்பிக்கையே வாழ்க்கை வாழ்க அந்த ஊர் மக்கள்...
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்பிக்கைதான் வாழ்க்கை. உண்மையான வார்த்தை.

   நீக்கு
 2. அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று அந்தக்கால நாடக நோட்டிசில் போடுவார்களம்’அதுபோல இருக்கிறது,.பாராட்டுக்குரிய கிராமத்தவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மழை பெய்தாலும் இந்த ஊரில் நாடகம் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
   வருகைக்கு நன்றி!

   நீக்கு
 3. வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

  நாடகக்கலை பின்னாளில் நலியும் என்று தெரிந்து தான் கடவுள், ஆயகலைகள் 64 லில் ஒன்றான நாடகத்தை நடத்துகிறார் போலும் என்றே தோன்றுகிறது....இப்பதிவை படிக்கும் போது எனக்கு......நன்றி.

  சில விஷயங்கள் தெய்வ பக்தி, நம்பிக்கை, என்பன வாயிலாக காப்பாற்றப் பட்டு வருகிறது.

  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னமும் நாடக கலைஞர்களை வாழ் வைப்பதில் இந்த ஊருக்கு பெரும் பங்கு உண்டு.
   கருத்துக்கு நன்றி!

   நீக்கு
 4. ஆண்டு முழுதும் நாடகம் என்ற தகவல் வியப்பைத் தருகிறது. எங்கள் ஊரில் சித்திரை திங்களில் சிறுத்தொண்ட நாயனார் நாடகம் போடுவார்கள். அது கூட இப்போது நின்றுவிட்டது. இந்த பதிவு என்னை பழைய நாட்களுக்கு அழகித்து சென்றது உண்மை. தகவலுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 5. மிகவும் வியப்பளிக்கிறது நண்பரே
  நாடகக் கலை அழிந்து வரும் இக்காலத்தில்
  இம் முயற்சி சாதனை போற்றுதலுக்கு உரியது
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படியோ நம்பிக்கையில் நாடக கலை வளர்கிறது.
   வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 6. #நாடகம் போடுவதாக தனிலிங்க பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் உடனே அது நிறைவேறிவிடுகிறது#
  இதைவிட நல்ல நாடகம் இருக்க முடியாது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை, பகவானே!

   நீக்கு
 7. நமது கலையைப் போற்றித் தொடரும் அப்பெருமக்களைப் போற்றுவோம். இவ்வாறான நிகழ்வு நடப்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. மக்களின் ஈடுபாடும் கலைஞர்களின் ஆர்வமும் நெகிழவைத்துவிட்டது. இவ்வாறான ஓர் அரிய நிகழ்வைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. நாடகம் போடுவதை நேர்த்திக் கடனாகச் செய்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. அதுவும் தேதி கிடைக்கக் காத்திருந்து நேர்த்திக் கடனாக நாடகம் போடுவது - மழலைச் செல்வம் வேண்டி செய்வது - நம்பிக்கையைக் காட்டுகிறது. இவர்களது நம்பிக்கையுடன் நாடகக் கலையும் வளருவது மகிழ்ச்சியான செய்தி தான். வாழ்க அவர்கள் நம்பிக்கையும், நாடகக்கலையும்!
  தகவல் சொன்ன உங்களுக்குப் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் ரஞ்சனியம்மா,
   தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   தொடர்ந்து வாருங்கள்!

   நீக்கு
 9. மழலைச்செல்வம் வேண்டி சரணடையும் தம்பதிகள் அடுத்த வருடமே தங்கள் மழலையோடு வந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள் என்று பெருமையோடு கூறுகிறார்கள் ஊர் மக்கள்.--ஆச்சச்ரியமாகத்தான் இருக்கிறது நண்பரே..த.ம.9

  பதிலளிநீக்கு
 10. சுவையான செய்தி
  வாழ்த்துக்கள் ..
  வாட்சப்பில் இணைப்புடன் பகிர்கிறேன் ..
  முகநூலிலும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாட்சப்பில் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிகள்.

   நீக்கு
 11. வலையங்குளம் பற்றிய வலையில் கொண்டு வந்து அறிய வைத்தமைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 12. மிக ஆச்சரியமான ஆனால் சுவையான, சுவாரஸ்யமான வித்தியாசமான ஒரு செய்தி. இது ஒரு வேண்டுதலுக்காக நிறைவேற்றப்படுவதானாலும், அது நம்பிக்கையோ மூடநம்பிக்கையாகவே கூட இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் இது நாடகக் கலையை இக்காலத்திலும் கூட வளர்க்கும் ஒரு நல்ல நிகழ்வாகவே நேர்மறையாக நோக்கலாம் இல்லையா? இதனால் நாடகக் கலைஞர்களுக்கும் நல்லதுதானே! நல்ல ஒரு விடயம்....

  இதனைப் படித்ததும், இது போன்ற ஊர் திருவிழாக்கள் பற்றி சுவாமி ராமகிருஷ்ணர் அவர்கள் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகின்றது. ஊர் திருவிழாக்களை நாம் உதாசீனமாக நினைக்கக் கூடாது. அது பல சுற்றுப்பட்டுக் கிராமங்களில் உள்ளோருக்கும் அவர்களது வயிற்றுப் பிழைப்பிற்கு வழி வகுக்கின்றது. இந்திய கிராம மக்களுக்கு இது வரப்பிரசாதம். கடவுள் நம்பிக்கை என்பது ஒரு புறம், கிராம மக்களுக்கு அவ்வளவாகச் செலவில்லாத ஒரு ரிலாக்சேஷன், பொருளாதார ரீதியாக என்று இப்படிப்பட்ட கோணத்தில் சிந்திக்க வைத்தது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமாக வந்தாலும் வழக்கம் போல் விரிவாக கருத்திட்டு அசத்திவிட்டீர்கள். மிக்க நன்றி!

   நீக்கு
 13. அந்தக் காலத்தில் கிராமங்களில் தெருக் கூத்துகளே அதிகம்!

  பதிலளிநீக்கு
 14. நண்பரே! வலையங்குளம் நாடக விழா படங்களை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியுமா? maduraivaasagan@gmail.com

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...