Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஆரம்பத்தில் அல்லாடி, ஏற்றம் கண்ட ஏ.வி.எம்.


ஏ.வி.எம். ஸ்டுடியோவின் ஒரு பகுதி அப்பார்ட்மெண்டாக மாறப்போகிறது என்ற செய்தியை இன்று படித்ததன் விளைவே இந்த பதிவு.

இந்த ஸ்டுடியோ சென்னையில் தொடங்கி, பின் தேவகோட்டையில் சிறிது காலம் இயங்கி, மீண்டும் சென்னைக்கே வந்த கதை சுவாரஸ்யமானது. 


ஏ.வி.எம். நிறுவனத்தின் நிறுவனரான ஏ.வி.மெய்யப்பன் செட்டியார் புதுமையாக எதையாவது செய்து கொண்டே இருப்பார். அதற்காக முதலீடு செய்வதற்கும் தயங்காதவர். ஆரம்பகாலத்தில் காரைக்குடியில் 'ஏவி அண்டு சன்ஸ்' என்ற பெயரில் இசைத் தட்டுகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். அதை பெரிய அளவில் விரிவு படுத்தினார். 1932-ல் தென்னிந்தியா முழுவதற்கும் விற்பனை உரிமையைப் பெற்றார். சிறிய ஊரில் இருந்து பெரிதாக சிந்தித்தவர்.


அதன் பின் சென்னையில் சிவம் செட்டியார், நாராயண அயங்கார் என்ற இருவரை சேர்த்துக் கொண்டு 'சரஸ்வதி ஸ்டோர்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஜெர்மனியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஓடியன் கிராமபோன் கம்பெனியுடன் ஒப்பந்தம் ஒன்று செய்து வியாபாரத்தை விரிவு படுத்தினார். 

அந்த காலத்தில் கிராமபோன் இசைத் தட்டுக்களில் கர்னாடக இசைப் பாடல்கள் மட்டுமே வெளிவரும். அதில், 'வண்ணான் வந்தானே...' போன்ற கிராமியப் பாடல்களை முதன் முதலில் இசைத்தட்டாக வெளியிட்டது சரஸ்வதி ஸ்டோர்ஸ்தான். அந்த பாடல் வரலாறு காணாத விற்பனை தொட்டது. 

அந்த வெற்றி தந்த தெம்பில் 1935-ல் 'சரஸ்வதி சவுண்ட் புரொடக்க்ஷன்' என்ற சினிமா கம்பெனியை தொடங்கினார்கள். 'அல்லி அர்ஜுனா', 'ரத்னாவளி' என்ற இரண்டு படங்களை இப்படி எடுத்தார்கள். இரண்டுமே செட்டியாருக்கு திருப்தியளிக்கவில்லை.

அல்லி அர்ஜுனா 1935
சொந்தமாக ஒரு ஸ்டுடியோ இல்லாததால் தரமற்ற கேமராவைக் கொண்டு படங்கள் எடுப்பதால், படங்களின் தரம் குறைகிறது என்று எண்ணிய அவர், இந்த இரண்டு படங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் சொந்த ஸ்டுடியோ உருவாக்கம் எண்ணத்தை தோற்றுவித்தது. 

சொந்த ஸ்டுடியோவிற்காக சென்னையில் இடம் தேடினார்கள். மைலாப்பூர் கபாலி டாக்கிஸ் அருகில் ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதன் உள்ளே விஜயநகர மகாராஜா என்ற மாளிகை ஒன்று இருந்தது. அதில் பேய்கள் நடமாடுவதாக பேச்சு. அதனால் அந்த பகுதியில் யாரும் நடமாட மாட்டார்கள்.

பேய், பிசாசுப் பற்றி கவலைப் படாத செட்டியாரும் அவரது பங்குதாரர்களும் அந்த மாளிகையை வாடகைக்கு எடுத்தார்கள். மாதம் 325 ரூபாய் வாடகை. அரண்மனை மாளிகை பிரகதி ஸ்டுடியோவாக மாறியது. முதன் முதலாக ஒரு தெலுங்கு படத்தை தயாரித்தார்கள்.

அன்றைக்கெல்லாம் நடிகர்களுக்கு மாத சம்பளம்தான். நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் 67 ரூபாய் 8 அணா. 1941-ல் 'சபாபதி' என்ற படத்தை தயாரித்து இயக்கினார் மெய்யப்ப செட்டியார். அதன்பின் 1945-ல் 'ஸ்ரீவள்ளி' படத்தை  பிரகதி ஸ்டுடியோவில் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இந்த படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், ருக்மணி நாயகன் நாயகியாக நடித்திருந்தார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ஸ்ரீவள்ளி 1940
1934-ல் இருந்து 1940 வரை சினிமா துறையில் நஷ்டத்தையே சந்தித்து வந்த செட்டியாருக்கு 'சபாபதி' சிறிய ஏற்றத்தை தந்தது. 'ஸ்ரீவள்ளி'யோ உச்சத்திற்கு கொண்டு போனது. அந்த மகிழ்ச்சியை கொண்டாட காஷ்மீர் சென்று வந்தார்.

சென்னை திரும்பிய செட்டியாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரின் பங்குதாரர்கள் வேறு தொழிலில் ஈடுபட முடிவு செய்திருந்தார்கள். பேய் பங்களாவாக இருந்த மாளிகை பிரகதி ஸ்டுடியோவாக மாறியப் பின் செல்வாக்கு கூடியது. அதனால், அதை 7 லட்ச ரூபாய்க்கு விலை பேசிவிட்டார்கள்.

செட்டியாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியாக தயாரித்த 'ஸ்ரீவள்ளி' வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தது. இனி கூட்டு சேராமல் தனியாக தொழில் செய்வது என்று செட்டியார் தீர்மானித்தார்.

ஆனால், அப்போது உலக யுத்தம் தொடங்கி இருந்த நேரம். பிலிம் இறக்குமதியில்லை. இருந்தாலும் பிலிமுக்கு ஆர்டர் கொடுத்தார். யுத்தம் முடிந்ததும் அனுப்பி வைக்கச் சொன்னார். யுத்தம் முடிந்தது. பிலிம் மட்டுமல்லாமல் கேமரா, ஒலிப்பதிவு கருவி ஆகியவற்றை வாங்கினார்.

எல்லாம் வந்து விட்டது. ஆனால், சென்னை நகர் முழுவதும் மின்சாரம் இல்லை. யுத்தம் காரணமாக அமலில் இருந்த மின்வெட்டு நீக்கப் படாமலே இருந்தது. தொடர்ந்து இருளில் இருக்கும் சென்னையில் ஸ்டுடியோ ஆரம்பிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த செட்டியார் சொந்த ஊரான காரைக்குடியில் புதிய ஸ்டுடியோவை தொடங்க நினைத்தார்.

காரைக்குடிக்கு வந்த செட்டியாருக்கு முதல் பிரச்சனையாக இருந்தது மின்சாரம்தான். இப்போது போல் அந்த காலத்தில் மின்சாரம் அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை. காரைக்குடி பகுதிக்கு மின்சார விநியோகம் செய்து கொண்டிருந்த 'மீனாட்சி சுந்தரேஸ்வரர் கார்பரேஷன்' என்ற நிறுவனம் 50 கிலோவாட் மின்சாரம் தருவதாக உறுதி தந்தது. அதுவும் நகருக்கு வெளியேதான் தர முடியும் என்றது.


செட்டியார் காரைக்குடிக்கு வெளியே இடம் தேடினார். தேவகோட்டை ரஸ்தா அருகே ஒரு நாடகக் கொட்டகை இருந்தது. அதை தேவகோட்டை ஜமீன்தார் சோமநாதன் செட்டியார் கட்டியிருந்தார். அந்த நாடகக் கொட்டகைக்கு ரூ.2,000-மும், சுற்றிலும் இருக்கும் வெறும் காலி இடத்திற்கு ரூ.1,000-மும் என மாத வாடகைக்கு அந்த இடத்தை பேசி முடித்தார், செட்டியார்.

இதுதான் ஏ.வி.எம்.மின் முதல் ஸ்டுடியோ. நாடகக் கொட்டகைதான் படப்பிடிப்பு தளம். சுற்றிலும் இருந்த வேற்று இடங்களில் சின்ன சின்ன குடிசைகள் அமைக்கப்பட்டன. அதில்தான் நடிகர், நடிகைகள் தனித்தனியாக தங்கிக் கொண்டார்கள். அங்கு மேகப் செய்வதற்கும், ஒத்திகைப் பார்ப்பதற்கும் தனித்தனி குடிசைகள் அமைக்கப் பட்டிருந்தன.

'நாம் இருவர்'. 1947
இங்கு முதன் முதலாக எடுத்தப் படம் 'நாம் இருவர்'. 1947-ம் வருடம் பொங்கலன்று மதுரையில் வெளியிடப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்துதான் (மார்ச்) சென்னையில் வெளியானது. படம் மாபெரும் வெற்றி. மகாகவி பாரதியின் தேசப்பக்தி பாடல்களை முதன் முதலாக  சினிமாவில் பாடலாக பயன்படுத்தியது இந்த படத்தில் தான். விடுதலை வேட்கை கொழுந்துவிட்டு எரிந்த நேரத்தில் இந்த பாடல்கள் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலித்தன.

நாம் இருவர் போஸ்டர்
அடுத்த ஆண்டே 'வேதாள உலகம்'  வெளிவந்தது. இந்த படமும் பிரமாண்டமான வெற்றி. தமிழ்நாட்டைக் கடந்து இந்தியா முழுவதும் செட்டியாருக்கு சினிமா உலகில் மதிப்பும் மரியாதையும் கூடியது.

தனது நாடகக் கொட்டகையில் எடுத்த இரண்டு படங்களும் வசூலை அள்ளிக் குவிப்பதைப் பார்த்த தேவகோட்டை ஜமீன்தாருக்கு மனம் மாறியது. 300 ரூபாய்க்குக் கூட பெறுமானம் இல்லாத அந்த இடத்திற்கு செட்டியார் 3,000 ரூபாய் வாடகையாக கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதாது தனக்கு 10,000 ரூபாய் வாடகை வேண்டும் என்றார். இது மாபெரும் கொள்ளை என்று நினைத்த செட்டியார் மீண்டும் சென்னைக்கே தனது ஸ்டுடியோவை கொண்டு செல்ல முடிவெடுத்தார்.

அதற்காக சென்னையில் இடம் தேடினார். அப்போது எஸ்.எஸ்.வாசன் தனது ஜெமினி ஸ்டுடியோவை விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி செட்டியாரிடம் கூறினார். "உங்கள் ஸ்டுடியோவோ மவுண்ட் ரோட்டில் நல்ல இடத்தில் இருக்கிறது. ஏராளமான பொருட்களும் இருக்கின்றன. அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. கேமரா, ரெக்கார்டிங் மெஷின் எல்லாம் என்னிடம் ஏற்கனவே இருப்பதால் எனக்கு காலி இடம் மட்டும் போதும்." என்றார்.

வடபழனி கோயிலுக்கு சற்று தொலைவில் ஒரு முஸ்லிம், தோல் கிடங்கு ஒன்றை வைத்திருந்தார். அப்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த நேரம். நிறைய முஸ்லிம்கள் இந்தியாவில் வாழப் பிடிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்படி சென்றவர்களில் ஒருவர்தான் தோல்ஷாப் சாயபு. அவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் அகதி சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் பிரஜையாக மாறிவிட்ட தோல்ஷாப் சாயபுவின் 10 ஏக்கர் நிலத்தை ரூ.37,500-க்கு வாங்கினார். சென்னையில் ஏ.வி.எம். ஸ்டுடியோ உதயமானது. தேவகோட்டை ரஸ்தாவில் ஸ்டுடியோ இருந்த போது தொடங்கிய பட வேலைகளை மீண்டும் சென்னையில் தொடங்கி படத்தை வெளியிட்டார், செட்டியார். படத்தின் பெயர் 'வாழ்க்கை'

ஜமீன்தாரின் பணத்தாசை மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ஒருவேளை காரைக்குடியும் தேவகோட்டையும் மிகப் பெரிய திரைப்பட நகரங்களாக கூட மாறியிருக்கலாம்.

யார் கண்டது..?!

சிதிலமடைந்த நிலையில் ஏ.வி.எம்.ஸ்டுடியோவின் உட்பகுதி

28 கருத்துகள்

  1. ஏவிஎம் என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் பின்னால் உள்ள உழைப்பினைத் தாங்கள் பதிந்தமைக்கு நன்றி. புகைப்படங்கள் பதிவுக்கு வலுவூட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதன் முதலாக வருகை தந்து கருத்திட்ட அய்யாவுக்கு நன்றி!

      நீக்கு
  2. முதலில் வணக்கமும், நன்றியும் நண்பரே...
    எனக்கு தங்கள்மீது சிறிய கோபமான பொறாமையும்கூட காரணம் நான் வெகுநாட்களாக இதனைக்குறித்து எழுத வேண்டுமென நினைத்துக்கொண்டே இருந்தேன் முடிவில் இந்தமுறை நேரடியாகவே கேமராவுடன் சென்று சிதிலமடைந்து கிடக்கும் நமது பழைய ஏவியெம் ஸ்டுயோவை புகைப்படம் எடுத்து ஆதாரத்துடன் எழுதும் போது கூடுதல் ரசனை கிடைக்கும் என்கு நினைத்திருந்தேன் தாங்கள் முந்தி விட்டீர்கள்
    இதில் உள்ள தகவல்கள் அனைத்துமே நான் அறிந்ததே..

    ஆம் தேவகோட்டை மிகப்பெரிய நகரமாக உருவாக வேண்டியதே... அது தடைபட்டதற்க்கு அவரும் ஒரு முக்கிய காரணமே... 80 எனக்கு தெரியும்.
    பழைய படங்களில் பெரும்பாலானவை தேவகோட்டை ஸ்டுடியோவில் மட்டுமல்ல தேவகோட்டை வீதிகளையும் காணலாம் ஆனால் தேவகோட்டை சினிமாவுக்கு பல கலைஞர்களை தந்து இருக்கிறது...
    பதிவுக்கு நன்றி நண்பரே...
    தமிழ் மணம் 222

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,
      நான் தங்களிடம் சொல்லியபடியே தேவகோட்டையைப் பற்றி பதிவிட்டுவிட்டேன். தாங்களும் இதைப் பற்றி எழுத இருந்தது எனக்கு தெரியாது. நீங்கள் உள்ளூர்காரர் என்பதால் இன்னும் நிறைய தகவல்கள் தெரிந்திருக்கும். அதனால் பதிவிடுங்கள் நண்பரே, நானும் காத்திருக்கிறேன். இறுதியாக நீங்கள் கூறிய அனைத்தும் உண்மைதான்.
      வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி!

      நீக்கு
  3. ஏ வி எம் அவர்களின் வரலாறு ஓர் அளவே தெரியும் இன்று விரிவாக அறிந்தேன்!

    பதிலளிநீக்கு
  4. aruputhamaga soli irukega. devakotai endru padikum pothu nanbar killerg than nenivel varuvaar.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. ஏவிஎம்மின் தனித்துவமே அதன் வாசலில் சுற்றும் பூமி. :))

    பதிலளிநீக்கு
  7. திரு KILLERGEE அவர்களை முந்திக்கொண்டு அவரது ஊரில் ஆரம்பிக்கப்பட்ட AVM திரைப்பட நிறுவனம் பற்றியும் திரு A.V.மெய்யப்ப செட்டியார் அவர்களைப் பற்றிய தகவல்கலையும் பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றைக்கு மெய்யப்ப செட்டியார், இன்றைக்கு கில்லர்ஜி! என்றைக்கும் தேவகோட்டையில் அவர் ராஜ்யம்தான்.

      நீக்கு
  8. அருமையான பதிவு! அறிந்தவையே என்றாலும் தாங்கள் தொகுத்தளித்தமை மிகவும் அற்புதம் அழகான நடை....திரைப்படத் துறையில் அவர் ஒரு ஜாம்பவான் தான்....

    பகிர்வுக்கு மிக்க நன்றி...படங்களும் அருமையான் படங்கள்...இறுதியில் நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் சரியே....தேவ கோட்டை திரைப்படத் துறையின் கோட்டையாகியிருக்க வேண்டியய்து மிஸ் ஆகிவிட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக் கருத்துரைக்கும் நன்றி, நண்பரே!

      நீக்கு
  9. அட! நம்ம கில்லர் ஜியின் பதிவுக்கு முன்னரேயே பதிவிட்டமைக்கு எங்கள் இந்த வில்லங்கத்தாரின் மனமார்ந்த வாழ்த்துகள்!!! நன்றிகள்...நண்பரே! ஹ்ஹாஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்லங்கத்தாருக்கு இப்படியொரு சந்தோஷம்... ம்ம்....

      நீக்கு
    2. ஏற்கனவே மீசைக்கார நண்பர் என் மீது கோவத்தில் இருக்கிறார். நீங்கள் வேறு இன்னும் கோவப்பட வைத்துவிடுவீர்கள் போல...

      நீக்கு
  10. இதுவரை அறியாத தகவல்கள். வெற்றி எளிதில் வந்துவிடவில்லை என்பது மட்டும் தெரிகிறது.
    நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா வெற்றிக்குப் பின்னும் கடின உழைப்பும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்கத்தான் செய்கிறது.

      நீக்கு
  11. அர்த்தமுள்ள பதிவு, நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் தமிழ்சினிமா நூற்றாண்டு பார்வை எனும் 3 நாள் கருத்தரங்கிற்கு தகவல்கள் திரட்டிய போது இது குறித்து கள ஆய்வு செய்து சேகரித்த தகவல்கள்,,,,,,,,,
    தங்கள் பதிவு அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வரலாற்றுப் பதிவேட்டில்
    அழிக்கமுடியாத பெயர்
    ஏவிஎம் என்ற மூன்றெழுத்து

    பதிலளிநீக்கு
  13. தளராத முயற்சி என்றும் வெற்றியே என்பதற்கு AVM அவர்களும் ஓர் சிறந்த உதாரணம்...

    பதிலளிநீக்கு
  14. ஏவி எம்மின் வளர்ச்சி பற்றிய சிறந்த பதிவு.ல தரமான படங்களைத்தந்த நிறுவனம் அல்லவா.
    த ம 9

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை