Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

காதலில் கசிந்துருக ஓர் இடம்




காதலர்களுக்கு பிடித்த மாதம் என்றால் அது ஃபிப்ரவரிதான். அந்த மாதத்தில் தான் 'காதலர் தினம்' வருகிறது. காதலர்களுக்கு மட்டுமல்ல புதுமண தம்பதிகளுக்கும் அதுதான் பரவசம் தரும் மாதம்! பூக்கள் பூத்து குலுங்குவது அந்த மாதத்தில்தான்...! குளிரின் தாக்கம் குறைந்து கத கதப்பான பருவத்தை காலம் எதிர் நோக்குவதும் அந்த மாதத்தில்தான்...! அதனால்தான், ஃபிப்ரவரி மாதம் காதலுக்கு ஏற்றதாக இருக்கிறது.


புதிதாக திருமணம் முடிக்கும் தம்பதிகள் பலர் என்னிடம் ஹனிமூன் செல்ல தோதான இடம் பற்றி கேட்பார்கள். எனது வேலையே ஊர் சுற்றுவதுதான் என்பதால் இதற்கான விடையை என் மூலம்  தேடுவார்கள். நானும் முடிந்த அளவு நல்ல இடமாக சொல்வேன். அந்த பட்டியலில் புதிதாக இணைந்திருக்கும் ஒரு இடத்திற்கு தான் இப்போது நான் போய்கொண்டிருக்கிறேன்.


தேனி மாவட்டத்தில் கூடலூர் பக்கத்தில் கழுதைமேடு என்ற இடம்தான் அது. அங்குள்ள 'ஹார்வெஸ்ட் ஃபிரெஷ் ஃபார்ம்', ஹனிமூன் ஜோடிகளுக்கு மிகச் சிறந்த இடம். இயற்கை கொஞ்சி விளையாடும் இடம். பசுமையான இயற்கைக்கு காதலை தூண்டிவிடும் தன்மை இயல்பாகவே உண்டு. அதனால்தான், காதலர்கள் ஊட்டி, கொடைக்கானல் என்று பசுமையும் இயற்கையும் போட்டிபோடும் பிரதேசத்துக்கு படை எடுக்கிறார்கள். இந்த இடமும் அப்படித்தான், பசுமை பரந்து கிடக்கிறது.


கம்பம் பள்ளத்தாக்கு பகுதி என்பதை ஒவ்வொரு அங்குலமும் எழிலால் நிருபிக்கின்றன. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடம் என்பதால் குளுமை குடிகொண்டிருக்கிறது.

கேரளா மாநிலம் எர்ணகுளத்தை சேர்ந்த குரியன் ஜோஸ் என்பவர்தான் இந்த இடத்தின் உரிமையாளர். பாழ்பட்டுக் கிடந்த 35 ஏக்கர் நிலத்தை வாங்கி அதனை பண்ணை சுற்றுலாவுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்திருக்கிறார்.

குரியன் ஜோஸ் தனது சகோதரருடன்
விவசாயத்தை விட்டு பாரம்பரிய விவசாயிகளே வெளியே வந்து கொண்டிருக்கும்போது, 'மெரைன் கெமிக்கல்' பட்டம் பெற்று, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் ஒரு தொழிலதிபர் விவசாயத்தை தொடங்கியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.


நிலத்தை வாங்கிய உடனே அதை பண்ணைச் சுற்றுலாவாக மாற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டார் செயற்கை உரங்கள் இல்லாமல், இயற்கையில் விளையும் மாதுளைகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல கிராக்கி இருப்பதை தெரிந்து கொண்ட குரியன், தான் வாங்கிய 35 ஏக்கர் நிலத்தில் 25 ஏக்கர் நிலத்தை மாதுளை செடிகள் வளர்ப்பதற்காக ஒதுக்கி விட்டார்.

இன்றைய வணிக உலகில் பெரும் ஆதரவு பெற்று வரும் ஆர்கானிக் விளைபொருட்களை மட்டுமே தனது தோட்டத்தில் விளைவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியவருக்கு, மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு பெரும் தெம்பைக் கொடுத்து, மேலும் உற்சாகப்படுத்தியது.

மாதுளையோடு தனது விவசாய ஆசையை நிறுத்திக் கொள்ளாமல் 2,000 தென்னை மரங்கள், 1,500 தேக்கு மரங்கள், 350 தோதஹத்தி மரங்கள், 250 சந்தன மரங்கள், 100 பப்பாளி மரங்கள் என்று எல்லாவற்றையும் பயிரிட்டு அத்தனையிலும் இயற்கை முறை விவசாயத்தையே பின்பற்ற தொடங்கிவிட்டார்.


விவசாய நிலங்களில் வேறு ஏதாவது வருமானத்திற்கு வழி செய்யலாமே என்று நினைத்த போது அவர் மனதில் உருவானது தான் பண்ணைச் சுற்றுலா. இதன்மூலம் விவசாயத்தையும், நமது பாரம்பரிய முறைகளையும் சுற்றுலாப்பயணிகளுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தார். அதன்படியே தொடங்கி விட்டார்.

கம்பம் நகரில் இருந்து குமுளி போகும் பாதையில் கூடலூரை கடந்து லோயர் கேம்புக்கு சற்று முன் வலது புறத்தில் வரும் சாலையில் திரும்பி 4 கி.மீ. பயணித்தால் குரியனின் தோட்டம் வந்து விடுகிறது.

இந்த தோட்டத்திற்கு நேரடியாக நம்மை அவர்கள் அழைத்துச் செல்வதில்லை. தோட்டத்திற்கு 2 கி.மீ. முன்பே நமது பயணம் மாட்டு வண்டிக்கு மாறி விடுகிறது. விருந்தினர்களை தனது தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே இங்குள்ள கிராமத்தில் மாட்டு வண்டி தயாராக இருக்கிறது.


நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரத்தில் வளர்ந்த இன்றைய தலைமுறைக்கு மாட்டு வண்டிப் பயணம் ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.

மாட்டு வண்டியில் வயல்வெளிகள் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை சென்று திரும்பி தோட்டத்திற்கு செல்வது மறக்க முடியாத ஒன்றாக வாழ்நாள் முழுவதும் நிலைக்கும்.


பண்ணைக்குள் வந்த விருந்தினர்களை ஸ்டார் ஹோட்டல்களில் வரவேற்பது போல் வரவேற்கிறார்கள். மலர் மாலை அணிவித்து, ஃப்ரெஷ் ஜூஸ் கொடுத்து களைப்பைப் போக்குகிறார்கள்.

இது முடிந்த பின் அறைக்குள் சிறிது நேரம் ஓய்வு. விருந்தினர்கள் தங்குவதற்கென்றே மூன்று அறைகள் இங்கு இருக்கின்றன. ஆங்கிலேயர்களின் காலனி வீடுகளை நினைவுக்கு கொண்டு வரும் விதமாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.


குளியலறை கண்ணாடிகளால் மறைக்கப்பட்டுள்ளன. விருப்பம் இருக்கும் ஹனிமூன் ஜோடிகள் தங்கள் துணை குளிக்கும் அழகை பார்த்து ரசிக்கலாம். அத்தனை உயர் தொழில்நுட்பத்தில் பாத்ரூம், டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளன.


படுக்கை விரிப்புகளும் அறையின் அலங்காரமும் ஸ்டார் ஹோட்டல் அறைகளை நினைவுக்கு கொண்டு வருகின்றன. பகல் நேரத்திலும் சரி, இரவிலும் சரி, இங்கு பறவைகளின் ஒலி, இலைகள் அசையும் ஓசை மட்டுமே கேட்கிறது. இந்த இடம் அமைதி நிரம்பிய அழகான இடம் என்பதை ஒவ்வொரு நிமிடமும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.


ஓய்வு முடிந்ததும் தோட்டத்துக்குள் ஒரு பயணம். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து போகலாம், சைக்கிளில் வலம் வரலாம், இல்லை மாட்டு வண்டிதான் பிடித்திருக்கிறது என்றால் அதிலும் வலம் வரலாம்.

எனக்கு வழிகாட்டியாக மேலாளர் ஜான் ஜோசப் கூடவே வந்தார். விவசாயம் பற்றியும் அதன் தன்மைப் பற்றியும் விளக்கினார்.

சுற்றிலும் பசுமையான மலைகள் அரண் போல நிற்க அதன் நடுவே வயல் வெளிகள் அதன் அருகே பண்ணைத் தோட்டம் எல்லாமே இயற்கையின் கொடை. நம்மை எங்கோ அழைத்து செல்கின்றன.


மாதுளைத் தோட்டம், தென்னை மரம், பப்பாளி மரம், மூலிகைத் தோட்டம், இயற்கை உரம் தயாரிக்கும் இடம், பயோ-கேஸ், மாட்டுப்பண்ணை, வளர்ப்பு பறவைகள் என பலவற்றையும் காட்டி நமக்கு விளக்கம் கொடுக்கிறார் ஜான்.


இங்கு சமையல் கூட பயோ-கேஸ் மூலம் தான். காபி, டீ-க்கு பயன்படுத்தும் பாலும் கூட நாட்டு மாடுகளில் இருந்து ஆர்கானிக் முறையில் கறக்கப்படுபவைதான். அதனால் ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான காற்று, அமைதியான சுற்றுச்சூழல் என்று காதலர்கள் கொண்டாட இங்கு நிறைய வி­ஷயங்கள் இருக்கின்றன.


தனது தோட்டத்தில் இரண்டு காட்சி கோபுரங்களை வைத்திருக்கிறார் குரியன். அதன்மீது ஏறிப்பார்க்கும் போது கம்பம் பள்ளத்தாக்கின் முழு அழகையும், தோட்டத்தின் எழிலையும் ஒரு சேர கண்டுகளிக்க முடியும்.


இரவில் கேம்ப் ஃபயர், மியூஸிக்கல் டான்ஸ் போன்றவையும் உண்டு. தனிமையும் இனிமையும் ஒன்று சேருவதால் தேனிலவு தம்பதிகள் காதலில் கசிந்துருக ஏற்ற இடம் இது.

காதலர்களுக்கு மட்டுமல்ல. பள்ளிக்குழந்தைகள் சுற்றுலா, கார்ப்பரேட் டூர், குடும்பச் சுற்றுலா போன்ற பலவற்றுக்கும் ஏற்ற இடம் இது. ஜான் ஜோசப்பின் மொபைல் எண்: 95780 72722  தொடர்பு கொள்ளுங்கள். மறக்க முடியாத பயண அனுபவத்தைப் பெறுங்கள். 



44 கருத்துகள்

  1. eppothum pol ungalathu pathivu super sir.

    puthiya sutrula thalam .

    arimuka paduthimaikku nandri.

    puthithaka thirumanam aana nanparkalukku solkiren.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேஷ்!

      நீக்கு
  2. அழகான இடம் ஐயமில்லை! கட்டணம் உண்டா! தகவல் இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக கட்டணம் உண்டு, அதுவும் மலைக்க வைக்கும் விலையில். அதனால்தான் நம்ம நாட்டவர்களை விட வெளிநாட்டினர் இங்கு அதிகமாக வருகின்றனர்.

      நீக்கு
  3. வணக்கம்.

    இடங்களுக்குப் பதிவின் வழியாகச் செல்லும் போதே குளிரூட்டுகிறது உங்கள் எழுத்து.


    தொடர்கிறேன்.

    த ம 4

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்,
    தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்,
    அழகிய புகைப்படங்கள், அருமையான விளக்கம்,
    பார்க்கத் தூண்டுகின்றன இடங்களை,
    வாழ்த்துக்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!

      நீக்கு
  5. புதியதொரு சுற்றுலா தளம் பற்றி அறிந்தேன்! குரியன் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. இங்கு தேனிலவு செல்பவர்க்கு ஒரு பூலோக சொர்க்கத்தைக் காட்டியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  7. அற்புதமான இடம்... செல்ல வேண்டும்... கைபேசி எண்ணை குறித்துக் கொண்டேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்று வாருங்கள். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  8. கண்ணுக்குக் குளுமையான மிக அழகான படங்களுடன், அற்புதமான தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். ஆனால் இப்போ இது டூ லேட்.

    03.07.1972 இல் இதைத் தாங்கள் என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். அப்போ நீங்க பிறந்திருக்கவே மாட்டீங்களோ என்னவோ !!!!! :)

    இன்று 03.07.2015 :) இருப்பினும் இதைப்படித்தது ஓர் பேரெழுச்சி ஏற்படத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. உடனே புறப்பட்டுச் செல்ல வேண்டும் போல உள்ளது.

    ஏதோ இவற்றையெல்லாம் இந்தப்பதிவிலாவது இன்று பார்த்ததில் ஓர் தனி மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. பசுமையான தங்களின் இந்தப் பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதே பிறந்துவிட்டேனய்யா, குழந்தை என்பதால் பதிவெழுத முடியவில்லை.
      மற்றபடி தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

      நீக்கு
  9. தங்கள் பதிவைக் கண்டு திரு வை.கோபாலகிருஷ்ணன் பேரெழுச்சி கொண்டதாகக் கூறியுள்ளார். அவருக்கு மட்டுமல்ல. பலருக்கும் ஏற்பட்டிருக்கும். உங்கள் பதிவுகளுக்கு முத்தாய்ப்பாக அமைவது புகைப்படங்களே. பகிர்வுக்கு நன்றி.
    தினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி அய்யா, தங்களின் பேட்டியையும் படித்துவிட்டேன். மிக அருமை. நன்றி!

      நீக்கு
  10. கண்ணுக்கு குளிர்ச்சியாய் ரம்மியமாய் இருக்கிறது ,கழுதை மேடு என்ற பெயர்தான் உதைக்கிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தகாலத்தில் சுமைகளை மலை மீது சுமந்து செல்ல கழுதைகளை இங்கே கட்டி வைத்திருப்பார்களாம் அதனால்தான் அப்படி ஒரு பெயர். நமக்கு பெயரா முக்கியம்...!!

      நீக்கு
  11. திருமணம் முடிந்து வெளி நாடு செல்ல நினைப்போருக்கு, நம் நாட்டிலேயே அதுவும் நமது மாநிலத்திலேயே இருக்கும் அருமையான இடத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. எமக்கும் அதுக்கும் வெகு தூரம் நன்றி!! த.ம.10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூரமாக இருந்தாலும் வருகை தந்தமைக்கு நன்றி!

      நீக்கு
  13. எவ்வளவு அழகாக இருக்கிறது குளிர்மையாய் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது. நன்றி! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  14. தங்கள் வர்ணனை மற்றும் படங்களே அந்த இடத்திற்கு போகவேண்டுமென்கிற ஆவலை காதலர்களுக்கு மட்டுமல்ல இயற்கையை ரசிக்கும் அனைவரிடமும் ஆவலைத் தூண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக இயற்கை விரும்பிகளுக்கு அருமையான இடம்தான். வருகைக்கு நன்றி!

      நீக்கு
  15. கழுதைக் காடு தெரியும்....பார்த்திருக்கின்றோம்...ஆனால் இந்தப் பண்ணைத் தகவல் புதிது...குறித்துக் கொண்டோம்....மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  16. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (04/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்துவிட்டேன் நண்பரே! தங்கள் தகவலுக்கு நன்றி!

      நீக்கு
  17. அழகிய ஒரு இடத்தைப் பற்றி அருமையான ஒரு தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  18. ஆஹா...அருமையான இடமாக அல்லவா...இருக்கிறது. படிக்கையிலேயே கண்ணும் மனமும் குளிர்கிறது....முடியும் போது போக வேண்டும் என ஆவல் எழுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கமான இடங்களை பார்ப்பதைவிட இதுபோன்ற இடங்களை பார்ப்பது கூடுதல் மகிழ்ச்சி தரும்.
      வருகைக்கு நன்றி சகோ!

      நீக்கு
  19. அழகான இடமாகத் தெரிகிறது. குறித்து வைத்துக் கொண்டேன். முடிந்த போது அங்கே சென்று பார்த்து வருவேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் முறையாக வருகை புரிந்து கருத்திட்ட நண்பர் வெங்கட்ராஜ் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
      கட்டாயமாக பார்த்து வாருங்கள். பயணம் பற்றி எழுதும் தங்களுக்கு இந்த இடம் பலவகையில் துணைபுரியும்.

      நீக்கு
  20. தங்களின் அருமையான பதிவுகளுக்கு எழில் சேர்ப்பது உங்களின் அழகான புகைப்படங்கள்...

    தொடர்பு எண்ணும் கொடுத்தமைக்கு நன்றி. பட்ஜெட் இடம் கொடுக்குமானால் அடுத்த முரை இந்தியா வரும்போது ...

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே! தங்களின் பதிவை படித்துவிட்டு கருத்திடுகிறேன்.

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை