Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஓர் அகதியின் செஞ்சோற்றுக் கடன் - 1


ஸ்பைருலினா வளர்ப்பு தொட்டி
கதி என்ற சொல் மிகவும் வலி நிறைந்தது. நாடற்றவன் என்பதுதான் அதன் பொருள். தனக்கென எந்த நாடும் சொந்தமில்லாதவனே அகதி. இதையெல்லாம் விஞ்சி நிற்கும் கொடுமையான மற்றொரு சொல் ஒன்றும் இருக்கிறது.  அதுதான் 'ஏதிலியர்'.

அகதி என்பவனுக்குக் கூட நாட்டைத் தவிர வேறு ஏதாவது ஒன்று சொந்தமானதாக இருக்கும். ஆனால், ஏதிலியர்களுக்கு நாடு மட்டுமல்ல வேறு எதுவுமே சொந்தமாக இருக்காது. அகதி என்பதற்கு இணையான தமிழ் சொல் ஏதிலியர்தான். அப்படியொரு ஏதிலியராக இலங்கையில் இருந்து இந்தியா வந்தவர்தான் க.இரத்தினராஜ சிங்கம்.

க.இரத்தினராஜ சிங்கம்
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பு முடிந்ததும், 'உதயன்' நாளிதழில் செய்தியாளராகவும், புகைப்படக் கலைஞராகவும் பணிபுரிந்தார். சாமானியர்களே சிங்களர் மத்தியில் வசிப்பது கஷ்டம். இவரோ பத்திரிகையாளர். கேட்கவா வேண்டும். 

கொடுமைகளின் பல உச்சத்தை தொட்டவர். சிங்கள ராணுவத்தின் அச்சுறுத்தலும், போர்ச்சூழலும் அவரை தாய்நாட்டை விட்டே விரட்டியடிக்க இந்தியாவிற்கு ஏதிலியராக வந்து சேர்ந்தார். 

இங்கு வந்து சேர்ந்து 23 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று அவர் தன் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. தனக்கு வாழ வாய்ப்பளித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் செஞ்சோற்றுக் கடன் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

பண்ணையின் பெயர் பலகை
சென்னையிலிருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள நாவலூர் என்ற பகுதியில் ஐ.டி. நிறுவனங்களுக்கு நடுவில் தனது பண்ணையை வைத்திருக்கிறார் ரத்தினராஜ சிங்கம். அவரது பண்ணையில் அவரை சந்தித்தேன். தீர்க்க முடியாத செஞ்சோற்றுக் கடனைப் பற்றி அவர் கூறியபோது எனது கண்களும் கலங்கத்தான் செய்தன. இனி அவரது வார்த்தைகளில்..

"வீடிழந்து நாடிழந்து ஏதிலியராக இந்தியா வந்த எங்களை இருகரம் கூப்பி வரவேற்று வாழ்வளித்தது தமிழகம்தான். அப்போது 112 அகதிகள் முகாம் தமிழகத்தில் இருந்தன. அந்த முகாம்களில் வாழும் மக்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த ஊட்டச்சத்துக்காக வெளிநாடுகளில் இருந்து நிதி வந்து கொண்டிருந்தது. அந்த நிதி 2000-ம் ஆண்டு தடைபட்டது. இதனால் ஊட்டச்சத்து கொடுக்கும் வேலையும் முகாம்களில் நின்று போனது. 

அதன்பின் கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் மிகவும் துயருற்றார்கள். அவர்களின் கரு தானாக கலைந்தது, நோயுற்ற குழந்தைகள் பிறந்தன. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. 

நின்று போன ஊட்டச்சத்து உணவுக்கு மாற்றாக எதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இருந்தோம். அபோதுதான் டாக்டர் சிவலிங்கம் எங்களுக்கு 'ஸ்பைருலினா' என்ற சுருள்பாசிப் பற்றி தகவல் கொடுத்தார். அதே நேரத்தில் மதுரையில் ஒரு நிறுவனம் இது பற்றிய பயிற்சி கொடுத்து வருவது தெரிந்தது. 

அதில் நாங்கள் 8 பேர் கலந்து கொண்டோம். எங்களுக்கு ஸ்பைருலினா வளர்ப்பு பற்றி பயிற்சி கொடுத்தார்கள். பயிற்சி முடிந்ததும் எல்லோருக்கும் வளர்ப்பதற்காக 'தாய்' சுருள் பாசியைக் கொடுத்தார்கள். அதை ஆர்வமாக சென்னை எடுத்துவந்து வளர்க்க முயன்றபோது எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு சுருள் பாசி கூட பெருகவில்லை. அதன் பின்னர்தான் நாங்கள் பஸ்ஸில் கொண்டு வந்த முறை சரியில்லை என்று தெரிந்து கொண்டோம். அதன்பின் மீண்டும் மதுரையிலிருந்து ஸ்பைருலினாவை கொண்டு வந்து வெற்றிகரமாக வளர்த்தோம்.

நாங்கள் வளர்த்த ஸ்பைருலினாவை அகதிகள் முகாமில் இருந்தவர்களுக்கு ஊட்டச்சத்தாக கொடுத்தோம். எம் மக்கள் இதை சாப்பிட தொடங்கியப் பின் கரு கலையவில்லை. குழந்தைகள் நோய்வாய்ப் படவில்லை. குழந்தைகள் இறந்து பிறக்கவில்லை. மக்களின் வாழ்வு நன்றாக இருந்தது. 

பெண்களின் கூந்தல் உதிரவில்லை, மாறாக அடர்த்தியாக வளர்ந்தது. சோர்வு விலகியது. விளையாட்டில் ஆர்வம் வந்தது. ஞாபக சக்தி கூடியது. அல்சர் போன்ற பல நோய்கள் எங்கள் மக்கள் மத்தியில் காணமல் போனது. ஸ்பைருலினா சிறந்த ஊட்டச்சத்து மிக்க இணையுணவு எனபதை நாங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டோம். 

கிட்டத்தட்ட 4 வருடங்களாக எங்களின் அகதி மக்களுக்கு மட்டுமே இந்த ஊட்டச்சத்து உணவை கொடுத்து வந்தோம். அதை வளர்ப்பதற்கான பயிற்சியும் கொடுத்து வந்தோம். இதன் பலன்களை கண்கூடாக பார்த்த இந்திய மக்கள் எங்களுக்கும் இந்த பயிற்சியை கொடுங்கள் என்று கேட்டார்கள்.

பறவைப் பார்வையில் வளர்ப்பு தொட்டிகள் 
எங்களை மகிழ்வாக வாழவைத்த இந்த மக்களுக்கு ஏதாவது கைமாறு செய்யவேண்டும் என்ற எண்ணம் எங்களின் அடி மனதில் ஆழமாக இருந்தது. அதனால்தான் 2004-ல் சுனாமி தாக்கியபோது நாங்கள் கடலுக்குள் ஓடிப்போய் எம் இந்திய மக்களை காப்பாற்றினோம். நிர்கதியாக நின்ற அவர்களுக்கு கொடுப்பதற்கு எங்கள் கையில் எதுவும் இல்லை. ஆனாலும், அவர்களுக்கு ஆறுதலாக நின்றோம். 

அவர்கள் சுனாமியால் வீடு, மக்கள், சொந்தபந்தம், உடமைகளை இழந்து நின்றிருந்தார்கள். எங்களுக்கு தெரியும் ஏதும் இல்லாதவர்களின் வலி என்னவென்று, அந்த வலியை குறைப்பதற்காகவே அன்று ஓடோடி வந்தோம். அதுவும் கூட ஒரு செஞ்சோற்றுக் கடன்தான். ஆனால், அது போதாது. எங்களின் செஞ்சோற்றுக்கடன் இன்னும் பாக்கி இருக்கிறது. 

கிட்டத்தட்ட எங்களைப் போன்ற நிலையில்தான் அவர்களும் இருந்தார்கள். இருவரிடமும் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. அதற்காக எங்களை வாழவைத்த மக்களை அப்படியே விட்டுவிட முடியுமா?

நீரிலிருந்து ஸ்பைருலினாவை பிரித்தெடுக்கும் காட்சி 
அப்போதுதான் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஸ்பைருலினா வளர்ப்பைப் பற்றி இந்திய மக்களுக்கு கற்றுத்தர தொடங்கினோம். 10 வருடங்களாக தொடர்ந்து அதை செய்து வருகிறோம். இதுவரை 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அதில் 70 பேர் உற்பத்தியாளர்களாக மாறியிருக்கிறார்கள். 700 பேர்  வேலைப் பார்த்து வருகிறார்கள்.

ஸ்பைருலினா கடவுளால் வழங்கப்பட்ட அமுதசுரபி. புரதம் அதிகம் உள்ள உணவுத் தாவரம். சுலபமாக ஜீரணமாகும் தன்மை கொண்டது. மனித உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியம் தரும் உணவாக மட்டுமல்லாது, அழகு சாதனப் பொருட்களாகவும் ஸ்பைருலினா பயன்படுகின்றது. குளிர்பானம், பிஸ்கட், சேமியா, அப்பளம், கடலை மிட்டாய், கேக், சாக்லேட் போன்ற உணவுப் பொருட்களை அதிலிருந்து  தயாரிக்கின்றோம்.

சோப், ஹேர் ஆயில், பேஷியல், ஷாம்பூ போன்ற அழகு சாதனங்களாகவும் இதை தயாரிக்கின்றோம். இதுபோக, இரண்டாம் தர ஸ்பைருலினாவை கால்நடைகளுக்கு உப உணவாகக் கொடுக்கிறோம். இதனால் பாலின் தரம் கூடுகிறது. கோழிகள் இடும் முட்டைகள் கூடுதல் ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கிறது.

ஸ்பைருலினா 3.5 கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றியது. நீலப்பச்சை பாசியினம் சுற்றுச்சூழல் கூறுகளில் உண்டான மாறுதல்களையும் தாங்கி வளரும் திறன் படைத்த நுண்ணுயிர்ப் பாசி.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்ட 'காமாலினொலினிக்' என்ற அமிலம் தாய்ப்பாலில்தான் அதிகம் உள்ளது. அதற்கடுத்தபடியாக அதிகமாக இருப்பது ஸ்பைருலினாவில் மட்டுமே.

ஸ்பைருலினாவை பெரிய அளவிலும் வளர்க்கலாம். சிறிய அளவில் வீட்டுத் தேவைக்கு மட்டும் மீன் தொட்டிகளில் கூட வளர்க்கலாம். ஆனால், சற்று பெரிய அளவில் செய்வதற்கு நல்ல இடம் வேண்டும்.

                                                                                                                    - நாளையும் தொடரும்

36 கருத்துகள்

  1. ஸ்பைருலினா பற்றிய தகவல் புதியது... நன்றி... தொடர்கிறேன்...

    திரு. க.இரத்தினராஜ சிங்கம் அவர்களின் மன உறுதிக்கு பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்பைருலினாவைதான் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் உணவு. மிக சிறந்த ஊட்டச்சத்து.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  2. வணக்கம் நண்பரே நலமா ?
    பயனுள்ள நல்லதொரு விடயம் தொடர்கிறேன்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் நண்பரே! பயணம் இனிதாக முடிந்ததா..?
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  3. ஸ்பைருலினா பற்றிய புதிய செய்தி அறிந்தேன். நன்றி ! எப்படி வளர்ப்பது தேய்ந்தால் நாமும் முயற்சி செய்யலாம் அல்லவா!

    திரு. க. இரத்தின ராஜசிங்கம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள் !
    நன்றி ! வாழத்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவில் வளர்ப்பைப் பற்றி தெரிவிக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  4. திரு க.இரத்தினராஜ சிங்கம் போற்றுதலுக்கு உரியவர்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  5. இலங்கையில் இருந்து இந்தியா அடைக்கலம் தேடிவந்த இரத்தின ராஜசிங்கம் தனக்கு அடைக்கலம் தந்த நாட்டிற்றுக்கு சேவை செய்வது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே!
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  6. நல்ல முயற்சி. நல்ல சிந்தனை இரத்தின ராஜசிங்கம் பாராட்டுக்குரியவர். அவரையும் அவரது அரிய பணியையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவையெல்லாவற்றையும் விட நல்ல மனிதர்.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  7. வாழ வந்த இடத்தில் பலருக்கும் வாழ வைக்கும் இரத்தின ராஜசிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. அருமையான பகிர்வு. படங்களைப் பார்த்தால் வீட்டு மாடிகளில் தற்காலிக தொட்டிகள் அமைத்து கூட வளர்க்கலாம் போல் தெரிகிறது. பயிற்சி, வளர்ப்பு, அறுவடை, விற்பனை சந்தை போன்ற மேலதிக தகவல்களை வரக்கூடிய பதிவுகளில் எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கேட்கும் எல்லா விவரங்களும் கொடுக்க முயற்சிக்கிறேன். வருகைக்கு நன்றி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  10. பதிவுகள் இதுபோல இருந்தால் எல்லோர்க்கும் நலமே என்ற என்னத்தை விளைவித்த பதிவு தோழர்.
    தொடர்கிறேன்.
    தம +

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்,
    அருமையான பகிர்வு,
    வாழ்த்துக்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
  12. பாராட்டுக்குரிய மனிதர்.
    புதிய சொற்கள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  13. ஸ்பைருளினா பற்றி சிறிது தெரியும்! விளக்கமாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. இரத்தின ராஜ சிங்கம் அவர்களைப் பற்றியும் ஸ்பைருலினா பற்றியும் நல்லதொரு பகிர்வு நண்பரே! இதன் மகத்தான மருத்துவ குணங்கள் பற்றிச் சொல்லி மாளாது.

    ஜப்பானில் இது ஜப்பான் ஆல்கே என்று சொல்லப்படுகின்றது. ஒக்கினாவா தீவில் ஆழ்கடல் தண்ணீரில் நிறைய வளர்க்கப்படுகின்றது. கடல் தண்ணீர் அதிகம் சத்து தருவதாகவும் ஜப்பானியர் சொல்லிக் கேட்டதுண்டு. ஜப்பானியர்களின் க்ரீன் டீ கல்ச்சரில் இந்தக் கடல் பாசி கலக்கப்பட்ட டீயும் உண்டு. இப்போது இது நீங்கள் சொல்லி இருப்பது போல் பௌடராகவும், மாத்திரைகளாகவும் இன்னும் பல வடிவங்களிலும் வரத் தொடங்கிவிட்டது.

    காளான் வளர்ப்பில் எப்படி விஷம் கலக்க வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகின்றதோ அதே போன்று இந்தப் பாசியிலும் டாக்சின் கலக்க வாய்ப்புண்டு. பாசியில் எந்தவித டாக்சினும் கிடையாதுதான். ஆனால் அது வேறு ஒருவித ஆல்கேயுடன் கலந்துவிட்டால்...என்றும் ஜப்பானியர் சொல்லிக் கேட்டதுண்டு..

    (கீதா: மகன் கற்ற கராத்தே ஒக்கினாவா கோஜுரியு ஸ்டைல். 15 வருடங்களுக்கு முன்பே இந்த ஸ்பைருலினா டீ குடித்த அனுபவம் உண்டு...சூடாக இல்லை. குளிர்சாதனப் பெட்டியில் வைத்துத்தான். அது பெரிய பெரிய கேன் களில் கிடைக்கும். வித விதமான சுவைகளில். பாசியுடன், தேனும் கலந்து தயாரிக்கப்பட்ட டீ யும் உண்டு. நல்ல சுவையாக இருக்கும்....)

    நல்லதோர் பதிவு. தொடர்கின்றோம் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம் போல விரிவான தகவல்களை கொடுத்து அசத்திவிட்டீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நேரமின்னமை காரணமாக தாமதமாக வந்துள்ளேன். தவறாக கருத வேண்டாம்.

      நீக்கு
  15. அருமையான பதிவு நண்பரே! இதன் தொடர்ச்சியை படிக்க காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ச்சியை டைப் செய்து வைத்திருந்தேன். வைரஸ் தாக்குதலால் அழிந்து விட்டது. மீண்டும் டைப் செய்து கூடிய விரைவில் பதிவிடுகிறேன். வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  16. அடடா! இந்தப்பகிர்வை எப்படியோ படிக்கமுடியாமல் போனதே. தங்களின் வலைச்சர அறிமுகப்பதிவைப் படித்ததுமே தங்கள் எல்லா பகிர்வையும் தினம் ஒன்றாக படிக்க எண்ணமிட்டேன் ஆனாலும் நேரம் வாய்க்கவில்லை இனித்தொடர வேண்டும்.
    இரத்தின ராஜசிங்கம் பெயருக்கேற்ற தன்மை அவரிடம் இருக்கிறது. இதன் தொடர்ச்சி வெளியிட்டுவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சகோ!
      இதன் தொடர்ச்சியை தட்டச்சு செய்து வைத்திருந்தேன். அது அழிந்துவிட்டது. மீண்டும் தட்டச்சு செய்ய நேரமில்லை. அதனால்தான் தாமதமாகிறது. விரைவில் பதிவிடுகிறேன்.

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை