Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

எனது முதல் புத்தகம்


வாழ்வின் உன்னதமான நாள் என்று தான் இந்த நாளை சொல்லவேண்டும். ஏனென்றால், இன்றுதான் எனது முதல் புத்தகமான 'நம்பமுடியாத உண்மைகள்' வெளியாகியுள்ளது. மொத்தம் 288 பக்கங்கள், விலை ரூ.150. மல்டி கலர். 

2003-ம் ஆண்டு விளையாட்டுத்தனமாக அன்றைய மதுரை பதிப்பு ஆசிரியர் திரு ராஜன் அவர்களிடம் இதைப் பற்றி சொல்லியபோது, "அதெப்படிங்க, தினமும் தகவல் கொடுக்க முடியும்..!" என்று கேட்டார். நான் "முடியும்! நிறைய தகவல்கள் இருக்கின்றன" என்றேன். அதன்பின் பதிப்பு மேலாளர் திரு சொக்கலிங்கம் அவர்களிடம் இது குறித்து பேசினோம். அவர் "முதலில் 6 மாதத்திற்கான தகவல்களை கொண்டு வாருங்கள்! பார்ப்போம்!" என்றார். உறுதியான பதில் கிடைக்கவில்லை. 


ஆறு மாதத்திற்கான தகவலை முடிக்க எனக்கு இரண்டு மாதம் தேவைப்பட்டது. அதன்பின் அவற்றை கொண்டு சென்று கொடுத்தேன். அப்போதும் முடிவான ஒரு பதில் கிடைக்கவில்லை. பொறுமையாக காத்திருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து நான் எழுதிக்கொடுத்த 'தினம் ஒரு தகவல்' நாளிதழில் வந்தது. அன்று மனம் முழுவதும் ஒரே மகிழ்ச்சி. 60 ஆண்டுகளுக்கும் மேல் வந்துகொண்டிருக்கும் 'தினத்தந்தி'யில் அதுவரை இல்லாத புதிய பகுதியாக அது இணைந்தது. என்னவோ நேற்றுதான் எழுதத்தொடங்கியது போல் இருக்கிறது. அதற்குள் 12 வருடங்கள் ஓடிவிட்டன. 4,100 தகவல்கள் வந்துவிட்டன.

ஆரம்பத்தில் மதுரை பதிப்பில் மட்டும் வந்த 'தினம் ஒரு தகவல்' ஒரு மாதத்திலேயே அனைத்து பதிப்புகளிலும் வெளிவர தொடங்கியது. பல பாராட்டுகள், சில சங்கடங்கள், சில மிரட்டல்கள் என்று இதற்கும் ஒரு சரித்திரம் இருக்கிறது. 


முதல் மிரட்டல் வந்தது விநாயகர் சதுர்த்தி அன்று. நான் தொகுத்துக் கொடுத்த ஒவ்வொரு தகவலிலும் என்றைக்கு அது வரவேண்டும் என்ற தேதி கொடுத்திருந்தேன். அதன்படியே தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் விநாயகர் சதுர்த்தியன்று நான் கொடுத்திருந்த தகவல் வில்லங்கமானது. அந்த தேதியில் விநாயகர் சதுர்த்தி வருகிறது என்று ஐந்து மாதங்களுக்கு முன்பு எனக்கு தெரியவில்லை.


முன்பெல்லாம் தவறு செய்த மனிதனுக்கு எப்படி தண்டனை உண்டோ, அப்படியே தவறு செய்த விலங்குகளுக்கும் தண்டனைக் கொடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் ஒரு சர்க்கஸ் யானைக்கு திடீரென்று மதம் பிடித்து முன் வரிசையில் அமர்ந்திருந்த நான்கு பேரை பந்தாடிக் கொன்று விட்டது. 

அந்த யானையின் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. யானைக்கு தூக்குத் தண்டனை. மிகப் பெரிய கிரேனில் இரும்பு சங்கிலி கழுத்தை இறுக்கியபடி உயரத்தில் உயிரற்று தொங்கிக் கொண்டிருந்த யானை படத்துடன் அது பற்றிய தகவல் வந்திருந்தது. அன்று நாடே யானை முகத்தானாகிய விநாயகரை கொண்டாடிக் கொண்டிருக்க, இங்கு அதே யானை தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. 

அன்று காலையிலேயே ஒரு மதவாத அமைப்பிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல். அதன்பின் போலீஸ் பாதுகாப்பு என்று திகிலுடன் அன்றைய நாள் கடந்தது. 


ஒருமுறை திண்டுக்கல்லுக்கு அருகில் திப்பு சுல்தான் யுத்தம் செய்ததாக எழுதியவுடன் அப்படியொரு சண்டையே நடக்கவில்லை என்று ஒரு வரலாற்று ஆய்வாளர் காட்டமாக லெட்டர் எழுத, ஆதாரம் காட்டிய பின்தான் அமைதியானார். 

'மரணமில்லா மனித வாழ்வு' என்று ஒரு தகவலை படித்துவிட்டு, 'நான் சாகும் தருவாயில் இருக்கிறேன்.  என்னை எப்படியாவது மரணமில்லா வாழ்வுக்கு அழைத்து செல்லுங்கள்' என்று ஒருவர் ஐந்து வருடமாக தூங்கவிடாமல் என்னை பாடுபடுத்திய நிகழ்வை தனிப் பதிவாக எழுதலாம்.

ஒருமுறை இயக்குனர் ஷங்கரிடமிருந்து போன். நான் எழுதிய ஒரு தகவல் அவரின் அடுத்த படத்திற்கான கருவாக மாறியிருந்தது. அது குறித்து அவரது உதவி இயக்குனர் பலமுறை என்னிடம் விவாதித்திருக்கிறார். இதையும் தனிப் பதிவாக பின்னாள் எழுதுகிறேன். 


இப்படி பல சுவாரசியங்கள் இந்த தகவல்களுக்குப் பின் ஒளிந்திருக்கின்றன. அவற்றை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

புத்தகம் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். மாணவர்களுக்கான தகவல்கள் இந்த புத்தகத்தில் அதிகம் உள்ளன. அதனால் உங்களின் குழந்தைகளுக்கும் இதை தாரளமாக வாங்கிக் கொடுக்கலாம். அது அவர்களுக்கு மிகவும் பயன்படும். 

நண்பர்களுக்கு அன்பளிப்பாக தரவும்,  பிறந்தநாள், திருமணநாள் பரிசாக கொடுப்பதற்கும்,   பயணத்தின் போது படிப்பதற்கும் ஏற்ற புத்தகம். வாங்கிப் பயனடையுங்கள்.! 

தங்களின் மேலான ஆதரவை என்றும் விரும்பும்,

எஸ்.பி.செந்தில் குமார். 





தினத்தந்தியில் வந்த விமர்சனம்


நண்பர் திரு.கரந்தை ஜெயக்குமார் பார்வையில் 
'நம்பமுடியாத உண்மைகள்' 


நண்பர் திரு.வெங்கட் நாகராஜ் பார்வையில் 
'நம்பமுடியாத உண்மைகள்


ஆன்லைனில் புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.. 



=====================================================================

புத்தகம் கிடைக்குமிடம், வெளியூர்களில் இருப்பவர்கள் வாங்கும் முறை இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.    







40 கருத்துகள்

  1. மட்டற்ற மகிழ்ச்சி நண்பரே மென்மேலும் வளர (அமிதாப்பச்சன், சத்யராஜைவிட) வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. எனது மற்றொரு நூல் வெளியாவதைப் போல் மகிழ்ச்சியாக உள்ளது. இப்பகுதிக்காக தாங்கள் எடுத்த முயற்சிகள், சிரமங்கள் ஆகியவற்றைப் படிக்கும்போது மிகவும் வியப்பாக இருந்தது. தங்களின் மன உறுதியும், எழுத்தின்மீதான ஈடுபாடும் இச்சாதனைக்குக் காரணம். வாழ்த்துக்கள். தொடர்ந்துஎழுதுங்கள். வாசிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது மற்றொரு நூல் வெளியாவதைப் போல என்னைக் கவர்ந்த வரிகள். தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. தாங்கள் இன்னும் இன்னும் பல நூல்களை எழுத வாழ்த்துக்கள் நண்பரே!!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகவும் பிடிக்கும்.
    எல்லாம் புதிய தகவல்கள்ஆக இருக்கும்
    அதோடு எழுத்து நடையும் சூப்பர்.

    அந்த நம்பிக்கையில் நிச்சையம் புத்தகம் வாங்கி படிக்க முடிவு செஞ்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகம் வாங்கி படித்துப் பார்த்து கருத்தை சொல்லுங்கள். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேஷ் !

      நீக்கு
  5. சுவாரஸ்யமான பதிவு. உங்களுடைய புதிய நூல் வெளியீட்டிற்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்! இந்த நூலை வாங்கி ( விலைக்குத்தான்) படிக்கிறேன். திருச்சி தினத்தந்தியிலும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இது போன்று இன்னும் பல உங்களுடைய நூல்கள் வெளிவர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்சி தினத்தந்தியிலும் கிடைக்கும். எஜெண்டிடமும் கிடைக்கும். பெரிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கும். படித்துப் பார்த்து கருத்தைச் சொல்லுங்கள் நண்பரே!
      வாழ்த்துக்களுக்கு நன்றி!

      நீக்கு
  6. முதல் புத்தகம் முதல் குழந்தை மாதிரி! அதன் ஸ்பரிசமும் அது பிறந்த முதல் விநாடியும் என்றேன்றும் மனதில் அழியாதிருக்கும்! இது போன்ற மகிழ்ச்சியான தருணங்கள் அடிக்கடி உங்கள் வாழ்க்கையில் ஏற்பட மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவ மொழிகள் உண்மையாகத்தான் இருக்கும். எனக்கும் அப்படிதான் உள்ளது. வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ!

      நீக்கு
  7. இது ஒரு இனிய தொடக்கம் மட்டுமே!பல புத்தகங்கள் படைத்துச் சிறப்படைய வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  8. இத்தனை ஆண்டுகளால் எழுதி
    இதுதான் முதல் வெளியீடா
    இதுவும்
    நம்ப முடியாத உண்மையாகத்தான் இருக்கிறது
    நண்பரே
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையே ஒருவகையில் நம்ப முடியாத உண்மையாகத்தான் இருக்கிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  9. பணியுமாம் என்றும் பெருமை என்பது இதை தானா!!! இத்தனை பெரிய பணியை செய்து முடித்திருக்கிறீர்கள், ஆனால் எத்தனை இயல்பாய் எழுதி இருக்கிறீர்கள்!! வாழ்த்துகள் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் புகழ்ச்சி என்னை கூச வைக்கிறது.
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  10. யம்மாடியோவ் தங்களைப் பற்றிய தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன. எத்தனை படைப்புகள்! இவ்வளவு விசயங்களை உங்களுக்குள் வைத்துக் கொண்டு எங்களை ஏதோ நாங்கள் தகவல்கள் தருவது போன்று பல முறை நீங்கள் சொல்லி இருக்கின்றீர்கள்! இதுதான் நிறை குடம் தளும்பாது என்பது!!!!! குன்றின் மீதிட்ட விளக்கு!

    மட்டற்ற மகிழ்ச்சி. நிச்சயமாக புத்தகம் எங்கள் அகத்திற்குள் வந்து விடும்! எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! தாங்கள் மேலும் பல புத்தகங்கள் வெளியிட!!!!

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னடக்கத்துடன் சொன்னாலும் உங்களின் தகவலுக்கு நான் ஒரு விசிறி! பல நேரங்களில் வியக்கவைத்திருக்கிறது. வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே!

      நீக்கு
  11. நல்ல தகவல்கள் ஆகவே நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன். மேலும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன் நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கிப் படிக்கிறேன் என்பதே மிகப் பெரிய வாழ்த்துத்தான். வருகைக்கு நன்றி சகோ!

      நீக்கு
  12. 12 ஆண்டுகளில் 4100 தகவல்களா? கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது. நிச்சயம் இந்த நூலை வாங்கிப் படிப்பேன். தங்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக படித்து கருத்தைச் சொல்லுங்கள். அடுத்த புத்தகத்திற்கு உதவியாய் இருக்கும்.

      நீக்கு
  13. பெருமை கொள்ளத்தக்க சாதனை தான். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. செந்தில்குமார் உங்களின் பனிரெண்டு ஆண்டுகால உழைப்பு நூல் வடிவில் வருவது மிக மிக மகிழ்ச்சி .எப்போதும் சாதனைகளுக்கு பின்னால் வேதனைகளுக்கு பஞ்சமில்லை என்பதை உங்கள் கருத்துக்கள் சொல்லி நின்றாலும் அவை இப்போது உங்கள் மனதில் இருந்து மறைந்திருக்கும்
    என் நினைக்கிறேன் .உங்கள் எழுத்தை பத்திரிகையில் வாசித்ததில்லை ,இங்கு மட்டும்தான் வாசித்திருக்கிறேன் நண்பரே ,பெருமை கொள்ளத்தக்க சாதனையின் பின்னால் இருக்கும் உழைப்பினை
    நான் எண்ணிப்பார்க்கின்றேன் ..மென் மேலும் சாதனைகள் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  15. குறிஞ்சி மலரை விடவும் மகத்தான வெளியீடு இது என்பேன் அத்தனை அற்புதமானச் சிந்தனைக்களஞ்சியம் நிறைந்தது. ஒவ்வொரு எழுத்திலும் தங்களின் தேடலுக்கான முயற்சி பாராட்டுக்குரியது.
    தேடல் தொடரட்டும் இது போன்ற பல நூல்கள் வெளியிட வாழ்த்துக்கள்.
    நான் உலகம் சுற்றும் வாலிபர் என்றும் சாதனையாளர் என்றும் கூறுவது மிகையாகாது பாருங்கள் தங்கள் தேடல் அதுவும் தன்னிம்பிக்கையான 12 ஆண்டு கால தொடர் முயற்சியை சாதனை என்பதைவிட வேறென்ன சொல்லி பாராட்ட முடியும்.
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  16. சுவாரஸ்யமான சாதனை.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அம்மா!

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே!

    ஆச்சரியத்தில் இமை மூடமறந்த விழிகளுடன் நிற்கின்றேன்!

    அற்புதம் சகோதரரே! உங்கள் முயற்சி திருவினையாகியிருக்கின்றது!
    கடும் உழைப்பிற்குக் கிட்டிய நல்ல அங்கீகாரம்!
    சொல்லிய விடயங்கள் மிகுந்த சுவாரஸ்யம். ! மிக மிகச் சிறப்பு!

    புத்தகத்தினை வாங்கிட முயல்கின்றேன்!
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
    மென்மேலும் உங்கள் சாதனைகள் பல்கிப் பெருகட்டும்!..

    த ம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் முதல் வருகைக்கும் முதல் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ!
      தங்கள் வலைத்தளத்தையும் தொடர்கிறேன்!

      நீக்கு
  18. இந்த நூலுக்கும், இனி வரப்போகின்ற நூல்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் சகோ,
    முன்பே செல்லில் படித்துவிட்டேன்.உடன் வாழ்த்த முடியல. நன்றி.

    பதிலளிநீக்கு
  20. புதிய படைப்பை பிரசவித்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை