Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

முதல் பதிவர் சந்திப்பு.. முதல் அனுபவம்.. - 2

முதல் பதிவர் சந்திப்பு.. முதல் அனுபவம் தொடர்ச்சி

காலை உணவை முடித்து, வலையுலகில் சாம்ராஜ்யம் நடத்தும் பதிவர்களில் சிலரை அங்கே சந்தித்துவிட்டு, மீண்டும் தரை தளமான விழா அரங்கிற்குள் நுழைந்தேன். காலியாக இருந்த இருக்கைகளில் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

மெல்ல மெல்ல விழா களைக்கட்ட தொடங்கியது. விழாக் குழுவினருக்கு தனி உடை கொடுத்திருந்தது பதிவர்களுக்கு பலவகையிலும் உதவியது என்று தான் சொல்லவேண்டும். அவர்களிடம் விழா குறித்த எந்த சந்தேகங்களையும் தயங்காமல் கேட்க முடிந்தது.

"வாங்க.. பயணமெல்லாம் எப்படி இருந்துச்சு?" என்று உற்சாக புன்னகையோடு கேட்டார் நண்பர் ஒருவர். நான் நமக்கு பின்னால் வருபவரை தான் கேட்கிறார் என்று திரும்பி பார்த்தால் அங்கு யாரும் இல்லை.

"என்னத்தான் கேட்டீங்களா?" என்றேன். "ஆமா..! நான் மகா சுந்தர்." என்றபோது  திகைத்துப் போனேன். அவரின் பதிவுகளை நான் படித்ததில்லை என்றாலும் அவரின் பெயரை அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். எனது திகைப்புக்கு காரணம் மிக நெருங்கிப் பழகியவர்களை வரவேற்பதுபோல் என்னை வரவேற்றதுதான். இந்த அன்யோன்யம் பொதுவாக விழாக் குழுவினர் எல்லோரிடமும் இருந்தது. விழாவை மறக்கமுடியாமல் செய்ததில் இந்த உபசரிப்புக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது.

அரங்குக்குள் பதிவர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தார்கள். எல்லோருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து வரவேற்றுக் கொண்டிருந்தது, விழாக்குழு. அந்த சிவப்புக் கம்பளத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தவரை எங்கோ பார்த்தது போல் இருந்தது, நினைவலைகளை கொஞ்சம் வலைப்பூ பக்கம் கொண்டு சென்றதில், அவர் நம்ம ஊர்க்காரர் தமிழ்வாசி பிரகாஷ். அவருக்கு என்னை தெரியாது என்பதால் நானே அறிமுகமாகிக் கொண்டேன். கொஞ்சம் பேசினோம்.


அதன்பின் தனியாக அமர்ந்திருந்த திருப்பதி மகேஷை சந்தித்தேன். நான் கணித்தது சரியாக இருக்குமா என்ற சந்தேகத்தோடு அவரிடம் கேட்டேன். என் கணிப்பு சரிதான் அவர் திருப்பதி மகேஷ் தான். "சார், உங்களோட சதாப்தி பயணத்தைதான் முதன்முதலாக படித்தேன். அப்போதிருந்தே உங்கள் எழுத்து எனக்கு பிடித்துவிட்டது." என்றார். எனது பதிவுகளில் பின்னூட்டம் இடுபவர்களில் மகேஷ் முக்கியமானவர். ஆனால் ஏனோ சமீபத்தில் அவரது பின்னூட்டத்தை அதிகம் பார்க்க முடியவில்லை.

மகேஷிடம் பேசிவிட்டு எழுந்த போது இரண்டு பெண்கள் எதிரே வந்தார்கள். அவர்களில் ஒருவர் தென்றல் சசிகலா என்று நினைத்தேன். அது சரியாகவே இருந்தது. எனது பழைய பதிவுகளைக் கூட தேடி தேடி படித்து கருத்திடும் சகோ அவர். கவிதைகளில் காவியம் படைத்துக் கொண்டிருப்பவர். அவரை நேரில் கண்டது பெரும் மகிழ்ச்சி.


அவருடன் இருந்தவர் ஆர்.உமையாள் காயத்ரி என்று தெரிந்ததும் எனக்கு பேரதிர்ச்சி. அவர் எகிப்தில் இருப்பதாக படித்த ஞாபகம். நம்மையெல்லாம் சந்திப்பதற்காக எகிப்தில் இருந்து வந்திருக்கிறாரே அவரை சிறப்பாக வரவேற்க வேண்டும் என்று எண்ணி முடிப்பதற்குள் "நான் ஆறு மாசமா தேவகோட்டையில்தான் இருக்கிறேன்" என்றார். நான் வரவேற்பை ஒத்தி வைத்தேன்.

சமையல் பதிவுகளை படங்களோடு போட்டு கலக்கிக் கொண்டிருந்தவர் சமீபத்தில் வலைப்பக்கமே காணோம். மீண்டும் வாருங்கள். வித்தியாசமான உணவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே தில்லையகத்து துளசிதரன் வந்தார். பதிவில் மட்டுமே பார்த்த அவரை நேரில் கண்டது பேரானந்தம். கொஞ்சமாக பேசினோம். நிறைவாக பேசினோம். அதற்குள் ஒரு மின்னல் பதிவர் வந்தார்.

துளசி சாரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது "கீதா மேம் வரவில்லையா?" என்று கேட்டேன். "வந்திருக்காங்களே..!" என்று பின்னால் திரும்பினார். அங்கு மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தார் கீதா. வந்த வேகத்தோடு இரண்டே இரண்டு வார்த்தை பேசிவிட்டு மாயமாய் மறைந்தார். அதன்பின் அவரை பார்க்கவே முடியவில்லை. பின்னூட்டத்தில் மட்டும் பெரிய புராணத்தையே சொல்லும் அவர் நேரில் ஆத்திச்சூடி போல் தான் பேசுகிறார். அதாவது இரண்டு வார்த்தை மட்டும்.


அதன் பின் நான் சந்தித்தது பதிவுலகின் மும்மூர்த்திகளை. மூத்த பதிவர்களான அவர்கள் மூவரும் ஒரேஇடத்தில் குழுமியிருந்தது எனது பாக்கியம். புலவர் ராமானுசம் அய்யா, ஜி.எம்.பி. அய்யா, பழனி கந்தசாமி அய்யா ஆகிய மூவரும்தான் அவர்கள். நெடுநாள் பழக்கம்போல் பழகிய ஜி.எம்.பி. அய்யாவையும் புலவர் அய்யாவையும் மறக்க முடியாது. கந்தசாமி அய்யா பிஸியாக இருந்ததால் கொஞ்சமாகத்தான் உரையாட முடிந்தது.

நான் ஏதோ பெரிய ஆள் போல ஜி.எம்.பி. அய்யா அவரின் துணைவியார் மற்றும் மகனை அழைத்து என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய அன்பை என்றும் மறக்க முடியாது. நன்றி அய்யா.

அரங்கிற்குள் நுழைந்ததிலிருந்தே நான் ஒருவரை தேடிக்கொண்டே இருந்தேன். அவர் என் கண்ணில் சிக்கவே இல்லை. பலமுறை அவரிடம் போனில் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவரிடம் நான் உதவிதான் கேட்டிருக்கிறேன். அத்தனை முறையும் மனம்கோணாமல் அதை செய்து கொடுத்திருக்கிறார். அவரை ஒருமுறை கூட நேரில் பார்த்ததில்லை. அவர் பெயர் திண்டுக்கல் தனபாலன்.

இப்போது கண்ணில் சிக்கி விட்டார். மேடைக்குமுன் விழாவின் நேரலை ஒளிபரப்புக்கான ஆயத்த பணிகளில் மும்மரமகாக ஈடுபட்டிருந்தார். அவரிடம் சென்று பேசினேன். "வாங்க..வாங்க..!" என்று வரவேற்றவரை மேற்கொண்டு பேசமுடியாமல் கடமை அழைத்துச் சென்றது.

அந்த நேரத்தில் விழா தொடக்கத்துக்கான அறிவிப்பு வந்தது. எல்லோரும் இருக்கை தேடி அமர்ந்தோம். எனக்கருகே மீண்டும் தேவியர் இல்லம் ஜோதிஜி, அவருக்கருகில்  மூங்கில் காற்று டி.என்.முரளிதரன், அப்படியே கொஞ்சம் வலது பக்கம் திரும்பிப் பார்த்தால் மணவை ஜேம்ஸ் அய்யா மீண்டும் பாக்கியவான் ஆனேன். பெரும் பதிவர்கள் மத்தியில் நான்.

                                                                                                                                           - தொடரும்


53 கருத்துகள்

  1. இப்பத்தான் விழாத் தொடக்க நிகழ்வா? அய்யா..! . தொடர்கதை பாணியில் ...அப்போது ..? (தொடரும்) என்று போடவிலலையே தவிர, அடுத்து யாரைச் சந்திப்பீர்களோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டீர்களே! சரளமான நடை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் வந்து கருத்துக்கள் வழங்கிய அய்யாவுக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  2. வணக்கம் நண்பரே! ஒரு நாவலை படிப்பதுபோல விறுவிறுப்பாய் ..மீண்டும் சந்தித்த மகிழ்ச்சி!

    சில நாட்களாக தங்கள் தளம் வரவில்லை காரணம் உடல்நிலை பிரச்சனை! இனி தவறாமல் முதலாளக வருவேன் நண்பரே!

    முதல் சந்திப்பில் என்னையும் குறிபிட்டமைக்கு நன்றிகள் நண்பரே!
    என்னை வரவேற்றதும் முதலாக நீங்கள்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது உடல்நலம் தேவலாமா? தொடர்ந்து வாருங்கள்! வருகைக்கு நன்றி!

      நீக்கு
  3. விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போன வருத்தம் உங்கள் பதிவின்மூலம் தவணை முறையில் குறைந்துகொண்டே வருகிறது. நேரடி ஒளிபரப்பிற்கான பரபரப்புடன் உங்கள் தொடர் தொடர்கிறது .

    வாழ்த்துக்கள் செந்தில் குமார்.

    கோ

    பதிலளிநீக்கு
  4. தங்களுக்கே உரிய அழகு எழுத்து நடையில் விழாப்பதிவு மிகச் சிறப்பு சகோதரரே!

    மிகத்துல்லியமான படங்களுடன் பதிவர்களை யார்யாரென விபரித்த விதமும் அருமை!
    குறிப்பாகத் தோழி தென்றல் சசிகலா, உமையாள் காயத்திரி ஆகியோரைப் படத்தில் காணக் கிடைத்ததும் மிக மகிழ்வே!
    பதிவர் சந்திப்புக்கு வர இயலாத குறை நீங்குகிறது உங்கள் பதிவினால்!

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!
    த ம +1

    பதிலளிநீக்கு
  5. ஆவலாக உள்ளது அடுத்தது என்னன்னு...

    பதிலளிநீக்கு
  6. எழுதுபவர்களுக்கு அதிக நிதானம் தேவை என்று அதிக காலம் எழுதிய எழுத்தாளர் ஒருவர் எனக்கு அறிவுரையாகக் கூறினார். உங்களிடம் அது அதிகமாக இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் தலையே(ஜோதிஜி) உங்களை பாராட்டுகிரது என்றால் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்தான்

      நீக்கு
    2. மிக தாமதமாக பதிவிடுவதை நிதானம் என்று சொல்கிறீர்களா ஜி!
      வருகைக்கு நன்றி! தங்களை சந்தித்ததும் மறக்கமுடியாத நிகழ்வே!

      நீக்கு
    3. கண்டிப்பாக ஜோதிஜி அவர்களின் பாராட்டு. இத்தனை பதிவர்களை சந்தித்தது எல்லாமே கொடுத்து வைத்திருந்தால்தான் கிடைக்கும்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  7. சுவாரஸ்யமாக செல்லும் தொடர். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, இந்த பதிவிலும் தங்களின் படங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி!

      நீக்கு
  8. ஆகா
    மீண்டும் புதுகைக்கு அழைத்துச்சென்று விட்டீர்கள்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  9. நாங்கள் சந்திக்க விடுபட்ட, பல நண்பர்களைப் பற்றி பகிர்ந்துள்ள விதம் அருமையாக உள்ளது. தங்களது பாணியில் அமைந்த கட்டுரை எங்களை மறுபடியும் புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்றுவிட்டது. புதுக்கோட்டையில் உக்ளைக் கண்டதில் மகிழ்ச்சி. தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தங்களை சந்தித்து உரையாடியதில் பெரும் மகிழ்ச்சி!

      நீக்கு
  10. உங்களுடைய அழகிய வர்ணனை உங்கள் கூடவே அரூபமாய்த் தொடர்வது போன்ற பிரமையைத் தோற்றுவிக்கிறது. நேர்த்தியான எழுத்தும் நிதான நடையும் விழா குறித்த பகிர்வுகளும் அருமை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  11. உடன் வந்த நினைவை ஏற்படுத்துகிறது பதிவு! அருமையான நடை! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  12. அஹஹஹஹ ஆத்திச் சூடி!!! நான் நாலடியார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்...ஹஹ்ஹ இப்போது ஆத்திச் சூடி!!

    ஐயோ சகோ, என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கும் உங்களுடன் நிறைய பேசமுடியவில்லை என்ற வருத்தம் உண்டு. அன்று உங்களைக் கண்டுவிட்டு, திருமிகு ஜோதிஜி அவர்களிடம் நானும் துளசியும் பேசிக் கொண்டிருந்தோம் அவர் எங்களைப் பற்றி வியந்து அதான் கருத்திடல், பதிவுகள் பற்றி..ச் சொல்லிக் கொண்டிருக்க அப்போது நீங்களும் அவர் அருகில்தான் இருந்தீர்கள். எனக்குத் தொலை பேசி அழைப்பு யாரு நம்ம மீசைக்காரர்தான் கில்லர்ஜி..அவரது மருமகன் வருகின்றார் என்று...பின்னர் அடுத்து தொலைபேசி அழைப்பு, விழா குறித்து ...பின்னர் விழா தொடங்கிடவே அருகில் இருந்து பேச முடியாமல் போய்விட்டது சகோ. நான் ஆத்திச் சூடி அல்ல ஒரு நாலடியார்னு வைச்சுக்கங்களேன்...ஆனால் பிறர் பேசும் விஷயங்களை உள்வாங்கிப் பேச ஆரம்பித்தால் நான் நிறையவே புராணம்தான் ஹஹஹ்..

    நான் அதிகம் யாருடனும் பேசவில்லை சகோ. ஏன் எனது தோழி மைதிலியிடம், சசிகலா, உமையாளிடமும் கூட...பேசாததற்கு ஒரு முக்கியக் காரணம் எனது செவி கேளாமை. நான் ஹியரிங்க் எய்ட் உபயோகிப்பவள். ஆனால் அதில் ஒரு பெரிய தொல்லை பல சத்தங்களுக்கிடையில் நம்முடன் பேசுபவரின் குரல் அவ்வளவு சரியாகக் கேட்பதில்லை. பின்னால் ஒலிக்கும் குரல்கள், சத்தங்கள்தான் கேட்கின்றது. எனக்கு ஒன் டு ஒன் கான்வெர்சேஷன் தான் சரிவருகின்றது....அதுவும் அருகில் இருந்தால் மட்டுமே. இரு நாற்காலிகள் தள்ளி இருந்தாலும் சரியாகக் கேட்பதில்லை. அதுவும் சத்தத்தின் இடையில். அதனால்தான் சகோ.

    ( நாங்கள் மிகவும் மதிக்கும், எழுத்துகளில் மிரட்டும் ஜோதிஜி அவர்கள் மிகவும் எளிமையாகப் பேசினார் ஆனால் அவரிடமும் என்னால் அதிகம் பேச முடியவில்லை. என்பதும் எனது வருத்தம்.)

    உங்கள் இருவரிடமும் இடைவேளையின் போது பேசலாம் என்றிருந்தேன். ஜோதிஜி அவர்கள் ஞானாலயா சென்றார்கள். உங்களைப் பார்க்க முடியவில்லை. பின்னர் நாங்கள் கொஞ்சம் சீக்கிரமாகச் சென்று விட்டோம். துளசியின் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாததாலும் அவர் குடும்பத்துடன் வந்திருந்ததாலும்.

    உங்களைக் கண்டிப்பாக மதுரையில் வந்து சந்திக்கின்றேன். நீங்கள் சென்னை வந்தாலும் எனக்குச் சொல்லுங்கள் சகோ உங்களை என் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன். சந்திக்கலாம். நான் மிகவும் மகிழ்வேன்...

    மிக்க நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் என்னை மன்னித்துவிடுங்கள் கீதா மேம், ஏற்கனவே நீங்கள் இதைப்பற்றி பதிவு எழுதியிருந்தீர்கள். நான் தான் உங்களை பார்த்த மகிழ்ச்சியில் அதை மறந்துவிட்டேன்.
      மனித காதுகளுக்கு மட்டும்தான் நமக்கு வேண்டிய ஒலிகளை தனியாக பிரித்துக் கேட்கும் திறன் இருக்கிறது. அதனால்தான் எத்தனை கூச்சலிலும் நமக்கு வேண்டியவர்களின் குரலை மட்டும் தனியாக பிரித்து கேட்க முடிகிறது. மெஷினால் அப்படி முடியாது.
      நானும் இந்த பதிவில் கூட உங்களின் அவசரத்தை கொஞ்சம் கலாய்த்து எழுதலாமே என்றுதான் எழுதினேனே தவிர மற்றபடி சீரியஸாக எதுவும் இல்லை. தவறு இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
    2. அட! என்ன மன்னிப்பு சகோ. இதென்ன ஃபார்மாலிட்டி? என்னை நீங்கள் நன்றாகக் கலாய்க்கலாம் . கலாய்த்தலை மிகவும் விரும்புபவள். நீங்கல் சுதந்திரமாகக் கலாய்க்கலாம். உண்மையா நீங்கள் ஆத்திச் சூடி நு சொன்னத ரொம்ப ரசித்தேன்...

      ஆஹா பதிவு கூட உங்கள் நினைவில் இருக்குதே...நன்றி சகோ...

      நீக்கு
  13. துளசி : நண்பரே தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் சந்திக்க ஆசைதான். உங்கள் புத்தகம் எங்கள் கையில். வாசிக்கின்றோம். எனவே பதிவு உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பதிவுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

      நீக்கு
  14. ஆஹா! நீங்களும் செக்யூரிட்டி போட்டுட்டீங்களா...ஹஹஹ தளத்திற்குள் பின்னூட்டம் உள்ளே அனுமதிக்கவில்லை. ரோபோ அல்ல என்று நிரூபிக்கச் சொல்லுகின்றது..நாங்கள் உங்கள் நண்பர்கள் என்று சொன்னாலும் கேட்கவில்லை உங்கள் செக்யூரிட்டி..ஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எந்த செக்கியூரிட்டியும் போடவில்லையே. எனக்கு எதுவும் தெரியவில்லை. டிடியிடம்தான் கேட்க வேண்டும்.தகவலுக்கு நன்றி!

      நீக்கு
  15. அழகாக விழாவை நடத்துகின்றீர்கள் நண்பரே பார்த்துக்கொண்டே வருகிறேன் நாம் சமையலறையில் பேசிக்கொண்ட விடயத்தை மட்டும் வெளியில் சொல்லி விடாதீர்கள் தொடர்கிறேன்....
    தமிழ் மணம் 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நமக்குள்ள இருக்கற ரகசியம். யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.

      நீக்கு
  16. அன்புள்ள அய்யா,

    பதிவர் சந்திப்பில் என்னையும் சந்தித்ததைக் குறிப்பிட்டது மிகுந்த மகிழ்ச்சி.

    நன்றி.
    த.ம.9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அருகிலேயே அமர்ந்திருந்த தங்களை வெகு நேரம் தெரியாமலே இருந்திருக்கிறேன். தங்களை சந்தித்தது மகிழ்ச்சியான நிகழ்வு அய்யா!

      நீக்கு
  17. மீண்டும் ஒருமுறை இல்லை... இல்லை... பலமுறை இனிய நினைவுகளில் மூழ்கினேன்...

    தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  18. நடுவில் நகைச்சுவை கலந்து,சுவையான பகிர்வு

    பதிலளிநீக்கு
  19. மிகவும் சுவாரஸ்யமாக எழுதிக்கொண்டு வருகிறீர்கள்! புதுகைக்கு நேரில் போக முடியாத குறை தீர்ந்தது!

    பதிலளிநீக்கு
  20. நேரில் வராதகுறையை போக்கும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  21. நான் நேரில் வந்து கலந்துகொள்ளாத குறையை தங்களது பதிவு போக்கிக்கொண்டிருக்கிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  23. விழாவில் நேரில் கலந்து கொள்ள முடியாத என் போன்றவர்களுக்கு உங்கள் பதிவுகள் மூலம் விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி நண்பரே.

    இன்னும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. நிகழ்வுகளை....
    வரிசைப்படி,
    சொல்லிச் செல்லும் விதம்...
    ரொம்பவே அருமை!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை