Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நீர்வழிச் சாலை அமைத்திருந்தால் சென்னை இப்படி ஆகியிருக்காது! - 2


நீர்வழிச் சாலை அமைத்திருந்தால் சென்னை இப்படி ஆகியிருக்காது! - 1 

நேற்றைய பதிவின் தொடர்ச்சி.  இதற்கு முந்திய பதிவை வாசிக்காதவர்கள் அதை படித்த பின் இதை வாசித்தால் தான் பிரச்சனை தெளிவாக புரியும்.

ன் நதிநீரை இணைக்க வேண்டும் என்ற கேள்வி பலமுறை நம்மிடம் எழுகிறது. இதற்கு முன் தமிழ் நாட்டின் இயற்கை அமைப்பையும் கொஞ்சம் தெரிந்து கொண்டால் இன்னும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

இந்திய மக்கள் தொகையில் 7 சதவீதம் மக்களைக் கொண்டது தமிழ்நாடு. ஆனால், இந்திய நீர்வளத்தில் தமிழ்நாடு பெறுவது வெறும் 3 சதவீதம் மட்டுமே. இதுவே நாம் நீர் பற்றாக்குறையில் இருக்கிறோம் என்பதற்கான அச்சாரம்.

அதோடு, தமிழ் நாட்டின் மொத்த நீர்வளமும் மழையை நம்பியே இருக்கிறது. தமிழகத்தின் உட்பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 848 மி.மீ. முதல் 946 மி.மீ. வரை மழை பொழிகிறது. மலைப் பிரதேசங்களிலும் கடற்கரை சமவெளியிலும் 1,666 மி.மீ. வரை மழை பெய்கிறது. இந்த மழைகளையும் கொண்டுவந்து சேர்ப்பது இரண்டு பருவமழைகள் தான்.

வடகிழக்குப் பருவமழை
இவைகள்தான் தமிழகத்திற்கு பெரும்பங்கு நீரைக் கொண்டு வந்து சேர்கின்றன. ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும்  தென் மேற்குப் பருவமழையின் புண்ணியத்தாலும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்குப் பருவ மழையின் புண்ணியத்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது.

இதிலும் அதிக நீரைத் தருவது வடகிழக்கு பருவமழைதான், அதாவது, 46 சதவீதம். அதற்கு அடுத்தபடியாக தென்மேற்குப் பருவமழை 35 சதவீதத்தையும், கோடை மழை 14 சதவீதத்தையும், குளிர் கால மழை 5 சதவீதத்தையும் கொடுக்கிறது.

நிலமேற்பரப்பு நீர்
இப்படி மழை மூலமும் மற்ற மாநிலங்கள் மூலம் நமக்கு கிடைக்கும் நீரை 'நிலமேற்பரப்பு நீர்' என்கிறோம். இது நம்மிடம் 24,160 மில்லியன் கன மீட்டர் இருக்கிறது. இதோடு நமது நிலத்தடி நீரையும் சேர்த்தால் தமிழகத்தின் மொத்த நீர் வளம் 46,540 மில்லியன் கன மீட்டராகும். இதுதான் நமது நீர்ச் செல்வம். இதைக் கொண்டுதான் நமது எல்லா நீர்த் தேவைகளையும் பூர்த்தி செய்யதாக வேண்டும்.

நமக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்னை என்னவென்றால் நிலமேற்பரப்பு நீரை சேமிப்பதுதான். இந்த நீரை சேமித்து ஒரு இடத்தில் தேக்கினால்தான் நிலத்தடி நீரை உயர்த்த முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக 1960-களிலேயே நிலமேற்பரப்பு நீரில் 95 சதவீதத்தை பயன்படுத்தி பழகிவிட்டோம். அதனால் நம்மால் நீரை சேமிக்க முடியவில்லை.

கிராமங்களிலும் ஆழ்துளைக் கிணறு 
அதற்கு மேல் நீர் தேவை என்ற நிலை வந்த போது பூமியை துளையிட துவங்கினோம். 'ஆழ்துளை கிணறு' என்ற புதிய தொழிநுட்பத்தில் நிலத்தடி நீரை முடிந்தவரை மொத்தமாக உறிஞ்சினோம். இதிலும் இயற்கை நமக்கு துணை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழ் நாட்டின் நிலத்தடி பரப்பை எடுத்துக் கொண்டால் அதில் 73.4 சதவீதம் கடினமான பாறைகள் கொண்டது.

அதனால் நிலமேற்பரப்பு நீர் பூமிக்குள் ஊடுருவி நிலத்தடி நீராக மாறுவது அத்தனை சுலபமில்லை. ஆயிரம் வருடங்களுக்கு மேலாக பூமித்தாய் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைத்திருந்த நீரைத்தான் இப்போது மொத்தமாக உறிஞ்சிக்கொண்டிருக்கிறோம். இதுவும் கொஞ்ச நாளைக்குத்தான்.  

இப்படி சிக்கலான நிலப்பரப்பை கொண்ட பூமியை விவசாயத்தில் பொன் விளையும் பூமியாக மாற்றிய பெருமை நமது முன்னோர்களையே சேரும். அவர்கள்தான் குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் என்று வழிந்தோடும் நீரை சேமித்து நீர் மேலாண்மையை மேன்மைப் படுத்தியவர்கள். இந்த நீர்நிலைகள் நமது முன்னோர்களின் ஆயிரம் ஆண்டு அனுபவ பொக்கிஷங்கள்.

வைகை நதி
இதற்கு மதுரை வைகை நதியை ஒரு உதாரணமாக சொல்லலாம். வைகை இன்று போல் சங்க காலத்தில் வறண்ட நதியாக இருக்கவில்லை. கரை கொள்ளாத அளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருந்த நதி. இந்த நதி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுப்பதற்காக ஏகப்பட்ட கண்மாய்களையும் குளங்களையும் உருவாக்கினார்கள். 

ஒரு குளத்தை உருவாக்க ஆழ்ந்த அனுபவ அறிவு வேண்டும். நமது முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நதியின் போக்கையும் அதில் ஓடும் நீரின் ஓட்டத்தையும் அறிந்து, நதியை விட பள்ளமாக உள்ள சம உயரம் கொண்ட நிலப் பரப்பை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். 

அதன் ஒரு பக்கத்தில் நீண்ட கரை எழுப்பி, நீரை தேக்கும் விதமாக அமைத்தார்கள். நிலத்தின் தன்மை, அங்கு நிலவும் தட்பவெப்பம், எவ்வளவு நீர் தேவை, நீர் வரத்து, அங்கு பயிர் செய்யப்படும் பயிர்கள், மரங்கள் போன்ற பல காரணிகள் அந்த நீர்நிலையை எவ்வளவு பெரிதாக உருவாக்க வேண்டும் என்பதை தீர்மானித்தன. 

அதன்படி வைகை ஆறு பாயும் இடங்களில் எல்லாம் இருப்பக்கமும் ஏராளமான குளங்கள், கண்மாய்களை உருவாக்கினார்கள். எந்தளவுக்கு என்றால், வைகை நீர் கடலில் சென்று கலக்காத அளவிற்கு. சீறிப் பாய்ந்த ஆற்றின் நீரை குளங்களுக்குள் அடக்கி வைத்தார்கள். 

ஆர்பரித்து ஓடும் ஒரு நதியின் மொத்த நீரையும் குளங்களில் அடக்குவது என்றால் அது சாதாரணக் காரியமா? அதற்கு எத்தகைய ஞானம் வேண்டும். நம் முன்னோர்களுக்கு அது அதிகமாகவே இருந்திருக்கிறது.

ஆர்.எஸ்.மங்களம் கண்மாய்
வைகையின் கடைசி கண்மாயாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்களம் கண்மாய் இருக்கிறது. இதுதான் தெற்காசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய கண்மாய். இந்த கண்மாய் நிறைந்து வழிந்தால்தான் அதன் உபரி நீர் கடலில் சென்று கலக்கும். அதனால் வைகை கடலில் கலப்பது அபூர்வமானதாக இருக்கிறது.

இப்படி வியக்க வைக்கும் தொன்மையான நீர் மேலாண்மையைக் கண்டு ஆங்கிலேய பொறியாளர்களே அசந்து போய் தமிழர்களிடம் இருந்து உலகம் கற்றுக் கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது என்றார்கள். 

நம் முன்னோர்கள் உருவாக்கிய குளங்களில் நிறைய அழித்துவிட்டோம். அப்படியும் அழியாமல் தமிழ்நாட்டில் இப்போதும் 39,202 குளங்கள் இருக்கின்றன. அதையாவது பாதுகாப்போம். அதற்கு தண்ணீர் வேண்டுமே..! 

நாம் ஏற்கனவே நிலமேற்பரப்பு நீரை முற்றிலும் பயன்படுத்தி விட்டோம். அது போதாது என்று நிலத்துக்கு அடியில் உள்ள நீரையும் துளைப் போட்டு உறிஞ்சிவிட்டோம். பின் எப்படி 39,202 குளங்களை நிரப்புவது..?

அதைப் பற்றி நாளை பார்ப்போம்.

                                                                                                                                           -தொடரும் 


36 கருத்துகள்

  1. இருக்கும் குளங்கள் ஏரிகளையாவது காப்பாற்ற வேண்டும்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். காப்பாற்றியே ஆகவேண்டும் நம் சந்ததிகளுக்காக

      நீக்கு
  2. நீர் மேலாண்மை பற்றி இன்னும் கொஞ்சமாக... ஏன் விளக்கமாக அடுத்த பதிவு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் தோழர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடுங்கள்... அப்போது தான் கருத்திட வரும் அன்பர்கள் எளிதாக வாக்கு அளிக்க முடியும்... நன்றி...

      நீக்கு
    2. விளக்கமாக கூறவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற தயக்கமும் இருக்கிறது.

      நீக்கு
    3. தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.

      நீக்கு
  3. உண்மைதான்...பழந்தமிழரின் பண்பை உணரும் தருணம் இது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் பாரம்பரிய பெருமையை உணராமலே வெள்ளைக்காரனுக்கு கொடி பிடித்திருக்கிறோம்.

      நீக்கு
  4. வியக்க வைக்கிறது நமது முன்னோரின் ஏற்பாடு மட்டுமல்ல ,உங்கள் விளக்கமான பதிவும் கூட :)

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமையாக, விளக்கமாக எழுதி வருகிறீர்கள் செந்தில்குமார்!! இனிய பாராட்டுக்கள்!!
    நம் முன்னோர்களுக்கு சல்யூட் வைக்கும் அதே வேளையில் இந்த பரந்த அறிவும் விஷய தானமும் சுமூகத்தின் மீதான அக்கறையும் நம் அரசியல்வாதிகளுக்கில்லையே என்ற ஆதங்க‌மும் ஏக்கமும் மனதில் எழுகிறது. கடந்த 20 வருடங்களில் அதிகப்ப‌டியான நீரைத் தேக்கி வைக்க நம் அரசாங்கம் என்ன செய்தது என்றும் எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நீர் மேலாண்மையை நம்மிடம் இருந்து பறித்தவர்கள் ஆங்கிலேயர்கள். 200 ஆண்டு ஆட்சியில் நீர்நிலைகளை சிதைத்ததில் அவர்களுக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  6. நீராதாரங்கள் பற்றிய தெளிவான பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

    மழையால் ஓரளவு சுத்தமான கூவம் , அடையாறு நதிகளை போக்குவரத்துக்குப் பயன்படுமாறு திட்டம் வகுக்க வேண்டும்..

    படகு விட்ட ஓலா கம்பெனி சேவை தொடரட்டும்..சாலைப் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புகள் உருவாகலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி அம்மா!
      நன்றாக பராமரித்தால் கூவம் மற்றும் அடையாறு இரண்டுமே படகு போக்குவரத்து ஏற்றதுதான். 30 வருடங்களுக்கு முன்பு இந்த ஆறுகளில் படகு போக்குவரத்தும் நடந்து கொண்டுதான் இருந்தது என்பது பலருக்கும் தெரியாது.

      நீக்கு
  7. வைகை நதி நீர் கடலில் சென்று கலக்காவண்ணம் குளங்கள் கட்டினார்கள் நமது முன்னோர்கள் என்ற செய்தி வியக்கவைத்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு விவரம் தெரிந்து 25 வருடங்களுக்கு முன் மதுரையில் வெள்ளம் வந்த போது வைகை ஆற்றை தனியாக அடையாளம் காண முடியாத அளவுக்கு எங்கும் வெள்ளமாய் இருந்தது. அப்போது ஆர்.எஸ்.மங்களம் கண்மாய் நிறைந்து வைகை கடலில் கலந்தாக கேள்விப்பட்டேன். அது உண்மையா என்று தெரியவில்லை.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  8. அருமையான தகவல்களை தந்தமைக்கு பாராட்டுக்கள்! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. பின் வரும் உயிரினங்கள் வாழ வேண்டும் என்றால் வாழ்கின்ற உயிரினங்கள் போராடியே ஆக வேண்டும். ஆனால் வாழ்கின்ற உயிரினங்களில் ஆகப் பெருமபல... சுயநல மிக்கதாகவும் தான் தோன்றித்தனமாகவவும் உள்ளது.... இவ்வாழ் உயிரின்ஙகள் தியாகம் செய்யாமல் எதையும் சாதிக்க முடியாது என்பது திண்ணம்.

    பதிலளிநீக்கு
  10. வியக்கவைக்கும் தகவல்கள்....உங்கள் பதிவு ஆதாரப்பூர்வமாகவும்,அழகியலோடுமுள்ளது...

    பதிலளிநீக்கு
  11. அருமையான பதிவு. மனிதனின் சுயநலம் அவன் அறிவை அழிக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. பதிவு அருமை நண்பரே! தமிழ் நாட்டில் நீர் மேலாண்மை மிகவும் அவசியமாகி வருகின்றது. இப்போதேனும் குளங்கள் ஏரிகள் கண்மாய்கள் காக்கப்பட்டால் எதிர்காலத்தில் இடர்கள் வாராது இருக்கும்..செய்வார்களா? பார்ப்போம்...

    கீதா: அடையார், கூவத்தில் முன்பு படகுகள் சென்றுகொண்டிருந்தன. இன்னும் கூட கூவத்தில் போட் ஜெட்டி இருக்கின்றது சில இடங்களில். இப்போதும் ஒரு சில நீர்ப்போக்குவரத்துப் பற்றிப் பேசப்பட்டது. ஆனால், அதற்கு முன் எல்லா நீர்நிலைகளையும் தூர்வாரி விரிவு படுத்த வேண்டும் கழிவுகள் கொட்டுவதிலிருந்து விடுவிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல நீர் வளம் பெருகும். பார்ப்போம் இந்த இயற்கைச் சீற்றம் கற்றுக் கொடுத்தப் பாடத்தை எவ்வளவு தூரம் உள்வாங்கியிருக்கின்றார்கள் என்று.

    பதிலளிநீக்கு
  13. பதிவு பயனுள்ள விடயங்கள் நண்பரே தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  14. வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    பதிலளிநீக்கு
  15. வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    பதிலளிநீக்கு
  16. மிகவும் பயனுள்ள பதிவு.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. வைகை நீர் அணைக்கட்டு நீர் மேலாண்மையில் என்ன பங்கு வகிக்கிறது. வைர முத்துவின் எழுத்தில் வைகை அணை கட்டும்போது ஏற்பட்ட இடர்கள் பற்றிப் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இங்கு குறிப்பிடுவது ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு முந்தைய நீர் மேலாண்மையை. நம் பாரம்பரிய நீர் பகிர்தலை சிதைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் தான்.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  18. வணக்கம்
    இப்படியான கருத்துக்களை இலாபம் தேடும் அரசியல் வாதிகள் படிப்பார்கள் என்றால் நிச்சயம் திருந்த வாய்ப்பு இருக்கு... இப்படியான இடருகள் வராது.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை