Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நீர்வழிச் சாலை - 3 : நீர் மேலாண்மை

மது குளங்களை எப்படி நீரால் நிரப்புவது என்ற கேள்வியோடு நேற்று முடித்திருந்தோம். மேற்கொண்டு போவதற்குள் நமது நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தமிழர்களின் நீர் மேலாண்மையைப் பற்றி விரிவாக கூறுங்களேன் என்று கேட்டிருந்தார். அவருக்காக நமது பாட்டன் பூட்டன்கள் போற்றி பாதுகாத்த நீர் மேலாண்மை இங்கு. பார்ப்போம். 

தமிழர்களின் நீர் பாசன முறைகளை பற்றி ஏராளமான சங்க கால பாடல்கள் இருக்கின்றன. தமிழில் புலமைப் பெற்ற நண்பர் ஊமைக்கனவுகள் போன்றவர்கள்தான் அவற்றை விளக்கமாக சொல்லமுடியும். என்னால் முடிந்த வரை இங்கு சொல்கிறேன்.


இன்றைக்கு நாம் மழைநீர் சேமிப்பு என்று அடித்துக் கொள்கிறோமே அந்த மழைநீரை அற்புதமாக சேமித்து வைத்து அதை வருடம் முழுவதும் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தியவர்கள் நமது முன்னோர்கள். அலங்கள், தருவைகள், ஏந்தல்கள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், கிடங்குகள், மலங்கன்கள் என்று பல பெயர்களில் நீர்நிலைகளை உருவாக்கி மழைநீரை சிறைப் பிடித்து வைத்தவர்கள்.

வருடத்தில் சில மாதங்கள் மட்டும் பெய்யும் மழையை வருடம் முழுவதும் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் தெரிந்தவர்கள். இன்று நாம் சந்தித்துவரும் நீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு அன்றே தீர்வு சொல்லியவர்கள். அதனால்தான் ஒரு ஏரியின் வடிவம் ஆயிரம் ஆண்டு அனுபவத்தில் வந்த அறிவுப் பொக்கிஷம் என்கிறார்கள் வல்லுநர்கள்   

இந்த நீர்நிலைகளில் சில இயற்கையாக உருவாக்கியிருக்கும். பலவற்றை மனிதர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய குளங்கள் இருக்கின்றன. மன்னர்கள் ஏற்படுத்தித்  தந்த ஏரிகள் உள்ளன. மன்னர்களின் பிரதான கடமைகளில் ஒன்றாக நீர்நிலைகளை உருவாக்குவது இருந்தது.

கோவில்களைக் கட்டிய மன்னர்களைவிட ஏரிகளை உருவாக்கிய மன்னர்கள் அதிகம். கோவில்கள் இன்றும் உயிர்ப்போடு இருப்பதால் அதைக் கட்டிய மன்னர்களை நமக்கு தெரிகிறது. நீர்நிலைகளை நாம் மரணிக்க விட்டதால் அதை உருவாக்கிய மன்னன் பெயரும் அதனோடு சேர்ந்தே மரணித்துப் போனது.


நீருக்கான சட்டங்களும் அன்று கடுமையாக இருந்தன. ஒரு ஏரிக்குப் போகும் நீரை மறித்து இன்னொரு ஏரி கட்டுவதோ, கால்வாய் அமைத்து நீரை வேறுபக்கம் திருப்புவதோ மரண தண்டனை பெற்றுத்தரும் குற்றமாக இருந்தது.

மதுரை சோழவந்தான் கிராமத்திற்கு அருகில் இருக்கும் குருவித்துறை வல்லப பெருமாள் கோவிலில் இருக்கும் கி.மு.1117-ம் ஆண்டு கல்வெட்டு 'காலுக்கு  மேல் கால் கல்லலாகாது' என்று குறிப்பிடுகிறது. ஒரு கால்வாய்க்கு முன்னே இன்னொரு கால்வாய் அமைக்கக் கூடாது என்கிறது.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்பே நாம் நீர் மேலாண்மையில் பெற்றிருந்த ஞானத்திற்கு இது எடுத்துக்காட்டு. இந்த அறம் சீரழிந்ததால்தான் இன்று காவிரி நீருக்காக கர்நாடகாவோடு மல்லுக்கு நிற்கிறோம்.

தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மிகப் பெரிய நீர் சமூகம் ஒன்று இருந்தது. இவர்கள்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்தவர்கள். நதியில் ஓடும் நீரை ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்த்து, அதை சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் இவர்களது வேலை.

பெருக்கெடுத்து ஓடும் நதியின் நீரை கால்வாய் வழியாக ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பது சாதாரண காரியமில்லை. அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை. அது இவர்களிடம் மண்டிக்கிடந்தது. ஆற்றில் நீர் குறைவாக போகும் போதும் அந்த நீரை ஏரிக்கு கொண்டு வருவது எப்படி? என்ற நுணுக்கம் கற்றிருந்தார்கள்.

ஆற்று நீரை முழுவதுமாக தடுத்து தமது ஏரியை மட்டும் நிரப்பிக்கொள்ளாமல் தமக்கு அடுத்ததடுத்து இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆற்று நீரை எப்படி பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்? என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்தவர்கள் இவர்கள். இந்த நீர் சமூகத்தின் அந்த பிரிவினருக்கு 'நீராணிக்கர்கள்' என்று பெயர். ஆற்று நீரை நீர்நிலைகளுக்கு கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு இவர்களுடையது.

நீரைக் கொண்டு வந்து சேர்த்தால் கடமை முடிந்ததா? அந்த நீரை கட்டிவைத்து காக்க வேண்டுமல்லவா அவர்களுக்கு 'நீர்க்கட்டியார்' என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பு கொண்டவர்கள். ஏரியில் மீன்பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள காலங்களில் ஏரி நிலத்தில் விவசாயம் செய்வது போன்ற ஏரிக்குள் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் நீர்க்கட்டியார் அனுமதி வேண்டும்.


ஒரு ஏரியின் உயிர் அதன் கரையில் தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, தன்னை நம்பி வாழ்ந்த மக்களையும் அழித்துவிடும். அதனால்தான் ஏரியின் கரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும். அந்த வேலையைப் பார்ப்பவர்களுக்கு 'கரையார்' என்று பெயர். இவர்கள்தான் ஏரி கரைக்கு முழுப்பொறுப்பு.

என்னதான் கரையை வலுப்படுத்தினாலும் எதிரிகளால் எப்போதும் ஏரிகளுக்கு ஆபத்து இருந்து கொண்டேதான் இருந்தது. ஒரு ஏரியை உடைத்தால் சுலபமாக ஒரு நாட்டின் பொருளாதரத்தை ஆட்டம் காண வைத்துவிட முடியும். ஏரிகளை உடைப்பது மிகப் பெரிய பாவம் என்று சங்க கால பாடல்கள் சொன்னாலும் இதை மதிக்காத ஒன்றிரண்டு மன்னர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். நேர்மையான முறையில் போரிட்டு வெல்லமுடியாத எதிரிகள் இப்படி நீர்நிலைகளை அழித்தொழிப்பதும் உண்டு. அந்த ஏரியை பாதுகாக்க நியமிக்கப்பட்டவர்களே 'குளத்துக் காப்பாளர்கள்'. இவர்கள் ஏரிக்குள் அத்துமீறி நுழைபவர்களையும் விரட்டியடித்தனர்.


ஒரு ஏரி என்பது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஆடு மாடுகள் விழுந்து இறந்து போவதும், சில சமயம் மனிதர்கள் இறந்து போவதும் நடப்பதுண்டு. அப்படி விழுந்து மாண்டவற்றை அப்புறப்படுத்த ஏரியில் தேவையின்றி வளரும் தாவரங்கள், பாசிகள் போன்றவற்றை அழித்து ஏரியை தூய்மைப் படுத்த ஏற்படுத்தப் பட்டவர்கள்தான் 'குளத்துப் பள்ளர்கள்'. இவர்கள்தான் ஏரியின் சுத்தத்துக்கு பொறுப்பு.

ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் மூலம் வயல்களின் வாசல் வரை கொண்டு வந்த சேர்க்கும் பொறுப்பு 'நீர்வெட்டியார்', 'நீர் பாச்சி' என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர்கள்தான் வயல்களுக்கான நீரை கண்காணிப்பவர்கள்.

பாசனத்திற்காகவும் வெள்ளத்தின் போதும் நீரை திறந்து விடுவதற்காக ஏரிக்கரைகளில் மதகு, மடை, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் இருந்தன. இந்த மடைகளை திறந்து மூடுவதற்கு ஒரு பிரிவினர் இருந்தனர் அவர்களுக்கு 'மடையர்கள்' என்று பெயர்.

இப்படி நீர் மேலாண்மைக்கென்றே நீர் சமூகங்கள் இருந்தன. இவர்களுக்கு ஊதியமாக விளையும் தானியங்களும் நெல்லும்  தரப்பட்டன. தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்திருந்து, விவசாயத்தை மேன்மைப்படுத்திய இந்த நீர் மேலாண்மை சமூகங்ககளைப் பட்டினிப்போட்டு, உணவளிக்காமல் ஊரைவிட்டு ஓடஓட விரட்டி அடித்த சரித்திரமும் உண்டு.

அதைப் பற்றி நாளைப் பார்ப்போம்.

                                                                                                                                           -தொடரும்.


23 கருத்துகள்

  1. படிக்கப் படிக்க மிகுந்த சுவாரஸ்யமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான, அழகான, சுவாரஸ்யமான, பயனுள்ள, விழிப்புணர்வு ஊட்டும் பசுமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  3. வியக்க வைக்கும் செய்திகள் நண்பரே
    தொடருங்கள்
    நனறி

    பதிலளிநீக்கு
  4. அறிய விடயங்கள் நண்பரே தொடர்கிறேன்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  5. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
    சில வேண்டுதல்கள்...

    இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
    மணிதம் இன்னும் மரிக்கவில்லை
    என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
    நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
    நிறையவே நாம் ஜாக்கிரதையாக
    செயல்பட வேண்டிய தருணம் இது...

    அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
    வேண்டுதல்கள்..

    1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

    2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

    3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

    4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

    5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

    நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

    உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. மிக மிக மிக அருமையான பதிவு நண்பரே/சகோ.

    தமிழரின் நீர் மேலாண்மை குறித்த தகவல்கள் அனைத்தும் சுவாரசியாமாக இருக்கின்றன. பல தகவல்கள் தெரிந்து கொண்டோம். அதுவும் இன்றியமையாத தகவல்கள். அருமை அருமை...மனம் ஆதங்கத்துடன்...இப்போது என்பதை நினைத்து
    கீதா: இந்தக் கருத்துடன்.....சகோ எனது இன்றைய பதிவின் அடுத்த பகுதியில் இதில் உள்ள சில தமிழ் வார்த்தைகளை (சிறப்பு) எடுத்துக் கொள்ளலாம் அல்லவா உங்கள் அனுமதியுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது சிறப்புகள் பலவற்றையும் நாம் இழந்து விட்டோம். அதில் நீர் மேலாண்மையும் ஒன்று.

      தாரளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

      வருகைக்கு நன்றி நண்பர்களே,

      நீக்கு
  7. நெட் பிரச்சினை. இப்போதுதான் படிக்க முடிந்தது. தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான, இதுவரை அறியாத தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. தமிழரின் நீர் மேலாண்மை குறித்த தகவல்கள் அருமை ....இன்றியமையாத தகவல்கள் நன்றி, நன்றி .

    பதிலளிநீக்கு
  11. மிக அருமையான பதிவு . நண்பரே தொடரட்டும் உங்கள் நற்பணி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை