வெள்ளி, ஜனவரி 30, 2015

ஆண்கள் கர்ப்பம்: இது உண்மையா?

விஞ்ஞானம் நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்திருக்கிறது தெரியுமா?
ஆண்களை கர்ப்பமாகும் அளவுக்கு..!

சில ஆய்வுகள் அப்படித்தான் சொல்கின்றன. இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆய்வு ஆண்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெண்களை நிலைகுலைய செய்துள்ளது.

விஷயம் இதுதான்...!

சுற்றுச்சூழல் நிறுவனம் ஒன்று இங்கிலாந்து நதிகளில் ஆய்வு நடத்தியது. அந்த நதிகளில் வாழும் மீன்களில் பாதிக்கு மேற்பட்ட ஆண் மீன்களின் விரைப்பைகளில் விந்தணுக்களுக்குப் பதிலாக சினை முட்டைகள் இருந்தன. இதைப்பார்த்து விஞ்ஞானிகள் திகைத்து போயினர்.


இது எப்படி நடந்தது?

நாகரிக உலகில் பெரும்பாலான பெண்கள் கரு உருவாகாமல் இருப்பதற்காக கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுகிறர்கள். இப்படி சாப்பிடும் மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் கலந்து உள்ளது. இது பெண் தன்மையை உருவாக்கும்.

இந்த ஈஸ்ட்ரோஜென் சிறுநீரில் வெளியேறி சாக்கடை வழியாக நதிகளில் கலக்கிறது. அந்த நதி நீரை மீன்கள் குடிப்பதால் அவைகளுக்கு இந்த கதி  ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால், ஈஸ்ட்ரோஜென் கலந்த நதி நீரை தானே மக்களும் குடிக்கிறார்கள்.

இதுதான் ஆண்களின் கவலை...!

கடந்த 30 வருடங்களில் ஆண்களின் விந்து உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு வாழ்க்கை நடைமுறையும் ஒரு காரணம் என்றாலும், ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் விந்து உற்பத்தி குறைந்து ஆண்மை பாதிக்கப்படலாம் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஹார்மோன் ஊசி போடப்படும் கோழிகளை சாப்பிடுவதாலும் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைகிறது என்றும் அந்த ஆய்வு மேலும் சொல்கிறது.

இதற்கு எதிராகவும் சில மருத்துவர்கள் கருத்து சொல்கிறார்கள் கருத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் அளவு மிகக் குறைவாகத்தான் உள்ளது. அவற்றால், ஆண்மை பாதிக்கும் என்று சொல்லமுடியாது. ஒரு ஆணுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை 2 கோடி இருந்தால் போதுமானது. அதற்கு குறைவாக இருந்தால்தான் அது ஆண்மைக் குறைவு எனப்படுகிறது. ஆண்மைக்குறைவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

மேலும் ஆண் மீனை பெண் மீனாக்க மிகக் குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜென் போதும். ஆண்களை அவ்வளவு சுலபமாக பெண்ணாக மாற்ற முடியாது என்று ஆறுதல் தெரிவிக்கிறார்கள்.

வெளிநாடுகளில் கழிவு நீரை சுத்திகரித்துதான் ஆற்றில் விடுகிறார்கள். என்னதான், சுத்தப்படுத்தினாலும் ஈஸ்ட்ரோஜென் அளவை நீக்க முடியாது. இப்படியே நிலைமை போனால் ஒருவேளை, ஆண் கர்ப்பம் தரிக்கும் நாளும்கூட வரும் என்று பெரிய குண்டை போடுகிறார்கள் விஞ்ஞானிகள். எதற்கும் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்தான் இது.    

கொக்கென நினைத்தாயோ கொங்கணவா..!

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!' என்று உடலின் நிலையாமையை பற்றி சித்தர்கள் நிறைய சித்தாங்களை பாடல்களாக பாடியுள்ளனர். அதற்கேற்ப சித்தர்கள் அடிக்கடி ஒரு உடலுக்குள் இருந்து மற்றொரு உடலுக்குள் கூடுவிட்டுகூடு பாய்ந்து விடுவார்கள். அப்படி மாறும் பொழுது தங்கள் உடல் அழியாமல் காக்கும் நெறியும் தெரிந்து வைத்திருந்தார்கள்.

காயசித்தி, வாதசித்தி, யோகசித்தி, ஞானசித்தி என அனைத்து சித்திகளும் கைவரப்பெற்றவர் கொங்கணவர். கொங்குநாட்டு கோவில் வாசலில் வயிற்றுப்பிழைப்புக்காக, இரும்பை உருக்கி அதில் பாத்திரம் செய்து வியாபாரம் நடத்திய பெற்றோர்கள் கொடுத்துச்சென்ற உடல் அல்ல கொங்கணவரின் உடல்.

பெற்றோர்கள் செய்து வந்த அதே தொழிலைத்தான் கொங்கணவரும் செய்தார். ஆரம்பத்தில் வறுமை வாட்டியெடுத்தாலும், பின்னாளில் மாடமாளிகையில் சகல செல்வங்களுக்கும் அதிபதியாக வாழ்ந்தார்.
சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் எப்போதும் தொண்டூழியம் செய்து வந்தார். இவரை நாடி வரும் சித்தர்கள், இவரது முற்பிறவி நோக்கம் ஈடேற ஞானப்பாலை புகட்டினர்.

ஒருநாள் கொங்கணவர் சன்னியாசியாகி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அடர்ந்த காடுகளையும், மலைகளையும் கடந்தார். கற்பக மூலிகைகளை கண்டார். சித்தர்களின் பரிச்சயம் ஏற்பட்டது. அது பல வெளிச்ச எல்லைகளை காட்டியது. இப்படி காடுகளில் அறிய மூலிகைகளை தேடிக் கொண்டிருந்த போது ஓரிடத்தில் நிறைய அழுகுரல்கள் கேட்டன. பளிங்கர் இன இளைஞன் ஒருவன் இறந்து போயிருந்தான். அந்த துக்கம் தாளாமல் உற்றார் உறவினர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர். இந்த துயர சம்பவம் கொங்கணவரை வாட்டியெடுத்தது. அவர்கள் துயர்போக என்ன செய்யலாம்என்று நினைத்தார்.

கொங்கணவருக்குத்தான் கூடுவிட்டு கூடுபாயும் கலை கைவந்ததாயிற்றே!. பளிங்கர் இளைஞன் மீது பாவப்பட்ட கொங்கணவர் மறைவான ஒரு இடத்திற்கு சென்று தனது உடலை துறந்துவிட்டு அந்த இளைஞனின் உடலுக்குள் புகுந்து கொண்டார். சுற்றிலும் சுற்றத்தார் அழுதுகொண்டிருக்க, துயிலில் இருந்து எழுபவன் போல் அந்த இளைஞன் உயிர்பெற்று எழுந்தான். அனைவரும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர்.

கூட்டமும் கலைந்தது. அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர். அப்போது அங்கு கொங்கணவ சித்தரின் உயிரற்ற உடல் மறைவான இடத்தில் இருப்பதை பார்த்துவிட்டனர். உயிரில்லா உடலை அப்படியே விட்டுப் போகும் பழக்கம் பளிங்கர்களுக்கு கிடையாது. அதனால் ஆங்காங்கே சிதறிக் கிடந்த மரப்பட்டைகளை ஒன்றாக சேர்த்து உடலை எரித்து சாம்பலாக்கினர்.
சித்தருக்கு எந்த சரீரமும் சொந்தமில்லை தான்.  உயிர்வாழ ஒரு கூடு வேண்டும். அப்படி ஒரு கூடாகத்தான் பளிங்கர் இளைஞனின் உடல் கொங்கணவ சித்தருக்கு கிடைத்தது.

கொங்கணவ சித்தர் காடுமலைகளில் அலைந்துதிரிந்து அரிய மூலிகைகளை அனைத்தையும் தெரிந்து கொண்டார். காயசித்திகளையும், மகாசித்தர் போகர், அகத்தியர் என்று பல சித்தர்களையும் சந்தித்து ஞானம் பெற்றார். ஆனந்த புனலில் மூழ்கியபடி நிஷ்டையில் ஆழ்ந்தார். அப்போது பார்த்து வானத்தில் பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் கொங்கணவரின் கண் இமையில் எச்சமிட்டது. சித்தரின் இமைப்பகுதி திறக்க கோபக்கனல் பட்டு அந்த கொக்கு எரிந்து சாம்பலானது.

பொதுவாக சித்தர்கள் நிஷ்ட நிலைக்கு சென்றால் ஆகாரம் இல்லாமல் நீண்டகாலம் இருப்பார்கள். கொங்கணவரும் நீண்டநாட்களாக ஆகாரம் இன்றி இருந்தார். கொக்கு நிஷ்டையை கலைத்ததால் சித்தருக்கு பசியெடுத்தது. ஒரு வீட்டுக்கு முன் நின்று உணவு கேட்டார்.

அந்த வீட்டுப்பெண் கொங்கணவரை கண்டுகொள்ளவே இல்லை. தனது கணவரின் பாதங்களை நீரால் கழுவி உடைகளை களைந்து உணவருந்த தலைவாழை இலைபோட்டு தண்ணீர் தெளித்து பதார்த்தங்களை பரிமாறினாள்.

பசியுடன் வாசலில் காத்திருந்த கொங்கணவ சித்தர் அத்தனை காட்சிகளையும் பார்த்து பொறுமை இழந்தார். ஆனாலும் அந்த பெண்மணி கண்டுகொள்ளவே இல்லை. கணவனுக்கு உணவு பரிமாறி தாகம் தீர்த்து கைகழுவ உதவி செய்து தாம்பூலம் மடித்து கொடுத்து கணவனை ஓய்வெடுக்க செய்தார்.

வீடுகளில் பத்துபாத்திரம் தேய்க்கும் ஒரு சாதாரண மானுடப்பெண் ஒரு கவளம் சோற்றுக்காக இத்தனை நேரம் காத்திருக்க வைத்துவிட்டாளே என்று கோபம் பொங்க, கண்கள் சிவக்க முறைத்துபார்த்தார்.

‘என்ன கொங்கணவா.. என்னை கொக்கென்று நினைத்தாயா?’ என்று அவரது கோபத்தை கண்டுகொள்ளாமல் அந்த பெண் கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத கொங்கணவர் அதிர்ந்து போய்விட்டார். ஞானிகளுக்கு மட்டும் தான் இது சாத்தியம். நொடிப்பொழுதில் மனதில் தோன்றும். இதை 'பிராதிபா' என்பார்கள். மனம் தூய நிலையிலும் சாத்வீகமும் நிறைந்த ஞானிகளுக்கே இது கைகூடுகிறது. தூயமனம் ஒளியை பிரதிபலிக்கிறது. இந்த ஒளியின் வெளிச்சத்தினால் ஞானிகள் உலகில் நிகழும் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும் உணர்ந்து வெளிப்படுத்தவும் முடிகிறது.

ஆனால் சாதாரண மானிட பெண்ணான இவளால் இது எப்படி சாத்தியமாயிற்று? மனமானது நம்மிடத்தில் தான் இருக்கிறது என்றாலும் நமக்கே தெரியாத ஆழ்கடல் ரகசியங்கள் அதனுள் புதைந்து கிடக்கின்றன. இந்த பூமியில் சாதாரண பெண்ணிடம் கூட அதீத சித்து இருப்தைக்கண்டு வெட்கமுற்ற கொங்கணவர் அந்த இடத்தை விட்டே அகன்றார். மனம் நொந்து போனார். தனது தவ வலிமையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்என்று நினைத்தார்.

அதற்காக ஒரு இடம் தேடி கானகத்தில் அலைந்தார். அப்போது ஜோதி சொரூபமாக கவுதம மகரிஷி ஒரு சமாதியில் இருந்து வெளிப்பட்டார். அவரை வணங்கிய கொங்கணவர், தன்னைப்பற்றிய எல்லா விபரங்களையும் கூறி முடித்தார்.

‘சுவாமி, நான் இன்னும் அதிகமான தவ வலிமையும் சித்தியும் அடைய வேண்டும், அதற்கு தாங்கள் தான் அருள வேண்டும்’ என்றார்.

‘நான் அது ஆனேன் என்பது வேதாந்தம். அது நான் ஆனேன் என்பது சித்தாந்தம். முன்னதில் நான் என்ற முனைப்புதான் முன்னதாக நிற்கும். ஆன்மா முன்னே நிற்க பிரம்மம் பின்னே நிற்கும். பின்னதில் பிரம்மம் முன்னே நிற்க ஆன்மா பின்னே நிற்கும். நீ இன்னும் உயர் சித்தி பெற சமாதி நிலை தேவை. அதற்கேற்ற இடம் இதுதான்’ என்று ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார், கவுதம மகரிஷி.

கொங்கணவர் பள்ளமாக இருந்த அந்த இடத்தில் இறங்கினார். மழை பொழிந்தது-. பூமி மூடிக்கொண்டது. துக்கம் இல்லாத ஒளிமயமான மனநிலை மனதை உறுதிப்படுத்தியது. ஒன்றையே மனம் நினைத்து அதிலே நிலைத்திருப்பது தான் சமாதி நிலை. 12 ஆண்டுகள் தொடர்ந்து சமாதி நிலையில் இருந்தார், கொங்கணவர்.

பற்றற்ற சித்தருக்கும் சித்துகள் மீதான ஆசை பற்றற்று போகவில்லை. சமாதி நிலையில் இருந்து திரும்பிய கொங்கணவர், மேலும் உயர்ந்த நிலையை அடைய வரங்கள் பெறுவதற்காக யாகங்களை தொடங்கினார். இது கவுதம மகரிஷிக்கு கோபத்தை வரவழைத்தது.

அவர், கொங்கணவரிடம், ‘சித்தர்கள் வாழ்க்கை வேறு, முனிவர்கள் வாழ்க்கை வேறு. சித்தர்கள் எப்போதும் முனிவர்கள் ஆவதில்லை. சாபங்களும், வரங்களும் அருளும் சக்தி எங்களுக்கு மட்டுமே உண்டு. உனது அதீத ஆசைக்கு பிரதிபலன் எனது சாபம் தான். இதோ பிடி சாபத்தை’ என்று கூறி சாபமிட்டார்.

‘சுவாமி என்னை மன்னியுங்கள்! சாபம் என்று ஒன்று உண்டெனில் விமோசனமும் உண்டல்லவா... அதற்கு வழி சொல்லுங்கள்’ என்றார். அதற்கு அவர் நீ தில்லை வனத்துக்கு சென்று தாயாரை துதித்தால், சாபவிமோசனம் பெறுவாய் என்றார். தில்லை வனத்தில் தாயாரை துதித்தபோது பராசர முனிவர் அங்கு வந்தார். தமது ஞான திருஷ்டியால் அனைத்தையும் அறிந்து கொங்கணவருக்கு சாபவிமோசனம் கொடுத்தார். முனிவர்களைப்போல் யாகங்கள் வளாப்பதற்கும் வரம் தந்தார். கொங்கணவரும் யாகம் செய்ய தொடங்கினார், அந்த யாகத்திற்கு கவுதம மகரிஷி நேரில் வந்து ஆசிர்வதித்தார்.

வியாழன், ஜனவரி 29, 2015

சீனாவில் சமாதியடைந்த காலாங்கிநாதர்

சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர் என்ற பெயர் காலாங்கிநாதருக்கு உண்டு. காலாங்கிநாதர் திருமூலரின் சீடர்களில் முதன்மையானவர். காற்றை உடலாகவும், காலனால் நெருங்க முடியாதவராகவும் இருந்தார். இதனாலே மூவாயிரம் வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்ந்தவர்.

    இவ்வாறு இவர் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த திரேதாயுகத்தில் மிகப்பயங்கரமான பிரளயம் ஏற்பட்டது. மழையும் புயலும் ஒன்று சேர்ந்து கோரத்தாண்டவம் ஆடியது. காணும் இடமெல்லாம் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, நீரில் மூழ்கியது.

    மரம், செடி, கொடிகள் எல்லாம் நீருக்குள் ஐக்கியமாகின. மக்கள் அனைவரும் உயரமான மலையை நோக்கி ஓடினர். காலங்கிநாதரும் ஒரு பெரிய மலைமேல் ஏறினார். வெள்ளம் குறைந்தபாடில்லை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. காலாங்கிநாதரும் மலை உச்சியை நோக்கி ஏறிக் கொண்டே இருந்தார்.

    இப்படியொரு பெரிய பிரளயம் தன் வாழ்நாளில் அவர் கண்டதில்லை. மக்கள் எல்லோரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். கனத்த துயரம் அவர் நெஞ்சை வாட்டியது. வேதனையோடே மலை உச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அந்த மலையின் ஓரிடத்தில் ஏராளமான சித்தர்கள் தங்கியிருந்தனர். கூட்டமாக ஒரே இடத்தில் நிறைய சித்தர்களைக் கண்டதில் சோக மனதிலும் மகிழ்ச்சி பூத்தது. அவர்களுக்கு தனக்குத் தெரிந்த காயகல்ப முறைகளையும், ரசவாத வித்தைகளையும் கற்றுத் தந்தார்.

    “காலங்கியாரே! இதற்கு மேல் எங்களால் உயரமாக செல்லமுடியவில்லை. ஆதனால்தான் இங்கேயே நின்றுவிட்டோம். நீங்கள் உயரே ஏறிச்சென்று உயிர்பிழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி வழியனுப்பிவைத்தனர்.

    காலாங்கியரும் உயரே சென்றார். அங்கே ஒரு அழகான குளம் ஒன்று இருந்தது. குளத்தின் கரையில் ஒரு புலி அமைதியாக படுத்துக் கிடந்தது. அது உண்மையான புலி இல்லை என்பதை புரிந்து கொண்டார். நிஐப்புலி என்றால் இந்நேரம் பாய்ந்திருக்க வேண்டும். இந்த புலி யாரோ ஒரு சித்தர். மனிதர்களின் தொந்தரவுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக புலி வடிவம் தாங்கி அங்கே மறைந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அந்த சித்தரை வணங்கிவிட்டு மேற்கொண்டு தன் பயணத்தை தொடர்ந்தார்.

    அதன்பின் காலங்கிநாதர் பல காலம் அந்த மலை மேலே தவம் செய்தார். அந்த மலையின் பெயர் சதுரகிரி மலை. ஒரு நாள் காலங்கிநாதர் தவத்தில் இருந்த போது அவர் முன்னால் மனித முகம் கொண்ட ஒரு ஆமை வந்தது. அது ஆமை உருவில் உள்ள சித்தர் என்பதை அறிந்து கொண்ட காலங்கியார் அவரை வணங்கினார். அவரும் ஆசீர்வாதம் செய்துவிட்டு மறைந்தார். பின்னர் வராகரிஷி முன் தோன்றினார்.
   
    “காலாங்கிநாதா ! காலம் பல கண்டவன் நான். ஆனால் என்னை இதுவரை யாரும் கண்டதில்லை. புனிதமானவர்கள் கண்களுக்கு மட்டுமே நான் தெரிவேன். சிறிதும் மனச்சோர்வு கொள்ளாமல் தொடர்ந்து தவம் செய்து வரும் உனக்கு நிச்சயம் இறையருள் கிட்டும்” என்று கூறி ஞான உபதேசம் செய்து மீண்டும் சமாதி நிலைக்கு சென்றுவிட்டார்.

    அதன்பின் காலாங்கிநாதர் சதுரகிரி மலை மீது உலாவி சிங்க சித்தர், வாமன சித்தர், பரசுராமசித்தர், ராமசித்தர், பலராமசித்தர், கிருஷ்ணசித்தர், குதம்பைச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், வேதாந்த சித்தர், தவசித்தர், போகசித்தர், கற்கிமுகிச் சித்தர் போன்ற பல சித்தர்களை சந்தித்து சித்த வித்தைகளைக் கற்றுக் கொண்டார்.

    ஒரு நாள் காலாங்கிநாதர் ஆழ்ந்த தவத்தில் இருந்த போது அவரின் தவத்தை கலைக்கும் விதமாக ஒரு மனிதனின் அழுகுரல் கேட்டது. தவம் கலைந்து எழுந்தார். தன் காலில் விழுந்து வணங்கி அழும் மனிதனிடம் ‘என்ன பிரச்சனை உனக்கு?’ என்று கேட்டார்.
   
    “சித்தர் பெருமானே! நான் ஒரு வணிகன். எனக்கு நீண்ட நாட்களாக மனதுக்குள் ஒரு ஆசை உண்டு. எப்படியாவது சிவன் கோவில் ஒன்றை கட்டியாக வேண்டும் என்று, அதற்காக எனது வீடு வாசல், தோட்டம் எல்லாவற்றையும் விற்று வேலையைத் தொடங்கினேன். நினைத்தது போல் கோவில் வேலை சுலபமாக இல்லை. கோவில் பாதியிலே நிற்கிறது. மேற்கொண்டு வேலையைத் தொடங்க என்னிடம் பொருள் எதுவும் இல்லை. வறுமை வேறு வாட்டி எடுக்கிறது. பல நாள் பட்டினியாக இருக்கிறேன். கோவில் விஷயம் என்பதால் அரசன் முதல் செல்வந்தர்கள் உதவி கேட்டுப்பார்த்துவிட்டேன். யாரும் உதவ முன்வரவில்லை அப்போதுதான் உங்களைப்பற்றி கேள்விப்பட்டேன். தாங்கள் நின்று போன சிவாலயப்பணி தொடர்ந்து நடைபெற வழிசெய்ய வேண்டும்” என்று அழுதான்.

    கதறி அழும் வணிகரை காலாங்கியார் கண்டு கொள்ளவேயில்லை. அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். வணிகனும் அவரை விடுவதாக இல்லை. இரவு பகல் பாராமல் காலாங்கியாருக்கு சேவை செய்தாவது அவரது கல் மனதை கணிய வைத்துவிட வேண்டும் என்று முடிவில் இருந்தான். அந்த முடிவோடே காலாங்கிநாதருடன் தங்கிவிட்டான்.

    காலாங்கியார் எவ்வளவோ சொல்லியும் அவன் அவரை விட்டு செல்வதாக இல்லை. துறவியான தன்னிடம் எதை எதிர்பார்க்கிறான் என்றும் புரியவில்லை.

    இரவு நேரங்களில் அந்த வணிகன் தூக்கமில்லாமல் “நான் என்ன செய்வேன்? எப்படி ஆலயத்தைக் கட்டி முடிப்பேன். எப்போது சிவனை பிரதிஷ்டை செய்து வணங்குவேன்? யாரும் எனக்கு உதவமாட்டேன் என்கிறார்களே. சிவனே..! இனி நான் என் செய்வது?” என்று ஓயாமல் பிதற்றிக் கொண்டேயிருந்தான்.
   
    உண்மையிலேயே இந்த வணிகன் ஆலயம் கட்டும் ஏக்கத்தில்தான் தன்னிடம் வந்துள்ளான் என்பதை அறிந்த காலாங்கிநாதர் அவனுக்கு உதவ முன்வந்தார். மலையின் மீது பல பகுதிகளில் அலைந்து திரிந்து பல அரிய மூலிகைகளைக் கொண்டு வந்து ஒன்று சேர்த்தார். அவற்றைக் கொண்டு வகாரத் தைலம் உருவாக்கினார்.

    அந்த வகாரத்தைலத்தை கொண்டு பொன்னை உண்டாக்கினார். பின் வணிகனைப் பார்த்து, “வணிகரே! சிவாலயம் கட்ட உதவி கேட்டு என்னிடம் வந்தீர். இதோ கோவில் கட்ட உமக்கு எவ்வளவு பொன் தேவையோ அவ்வளவற்றையும் நீ எடுத்துக்கொள். கோவிலை சிறப்பாக கட்டி முடி” என்றார்.

    வணிகனுக்கோ மனம் கொள்ளாத மகிழ்ச்சி காலாங்கிநாதருக்கு நன்றி சொல்லி தேவையான பொன்னை எடுத்துக்கொண்டு கிளம்பினான். கோவிலையும் சிறப்பாக கட்டி முடித்தான்.

    ஆனாலும் வணிகருக்காக சித்தர் சேகரித்த மூலிகை வகாரத்தைலம் தொடர்ந்து பொங்கிக் கொண்டேயிருந்தது. அதைப் பார்த்த காலாங்கிநாதர் பொங்கிவரும் அந்த தைலத்தை ஒரு கிணற்றில் தங்கச் செய்தார். தங்கம் உருவாக்கக் கூடிய இந்த தைலம் யாராவது கெடுமதி கொண்டவர்கள் கையில் கிடைத்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த அவர்.

    அந்தக் கிணற்றின் மீது மிகப்பெரிய பாறையை வைத்து மூடினார். அதோடு விட்டுவிடாமல் அந்த பாறையை யாரும் நகற்றிவிடக்கூடாது என்பதற்காக நான்கு திசைகளிலும் வராகி, காளி, பேச்சியம்மை, கருப்பண்ணன் போன்ற காவல் தெய்வங்களை நியமித்துவிட்டுச் சென்றார்.

    அதன்பின்னர் வேறிடம் சென்று தவத்தில் ஈடுபட்டார். ஒருமுறை தன்னிலை மறந்து சமாதியில் ஆழ்ந்துவிட்டார். அப்படியே காலங்கள் பலவும் கடந்துவிட்டன. இதனைக்கண்ட திருமூலர் தன்னுடைய சீடரான காலாங்கி முன் தோன்றினார்.

    “காலாங்கி! நீயே திடீரென்று சமாதியில் ஆழ்ந்துவிட்டால் எப்படி? சித்தர்களின் மரபு வழிவழியாக வளர வேண்டாமா? என்னிடம் உரிமைகொண்டு நீ பெற்ற உபதேசத்தை நல்லவர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களுக்கு உபதேசம் செய். அதுதான் உன் கடமை அதை எப்போதும் தவறாதே!” என்று கட்டளையிட்டார்.

    குருவின் கட்டளைக்கு கீழ்படிந்தார் காலாங்கிநாதர். சுகன குளிகையின் உதவியோடு வான்வெளி வழியாக உலகமெங்கும் சென்றார். நல்லவர்களுக்கு ஞான உபதேசம் செய்தார். அடிக்கடி சீன தேசம் சென்றார். பிறகு அங்கேயே சமாதி அடைந்தார். தாம் கண்ட அதிசயங்களை சீன மக்களுக்கு கூறினார்.

    போகர் சீனாவிற்கு அடிக்கடி செல்வதே தனது குருநாதரான காலாங்கிநாதர் சமாதியை தரிசிப்பதற்காகத்தான் என்று சொல்லப்படுகிறது. சீன நாட்டிற்கு வந்ததும் தனது குரு காலாங்கி நாதர் சமாதியடைந்திருக்கும் முக்காதக் கோட்டைக்குள் மிகவும் சந்தோஷமாக நுழைந்து மேற்கு புற வாசல் வழியாக சமாதியின் அருகில் சென்று நின்று கை கூப்பி வணங்குவார். உடனே சமாதியின் கதவு திறக்கும். அங்கு இன்னிசை வாத்தியங்கள் முழங்க… ஒளிமயமாக காலாங்கி நாதர் தோன்றி போகருக்கு தரிசனம் தருவார்.

    காலங்கி நாதர் சீனாவில் சமாதி கொண்டிருப்பதாக போகர் குறிப்பிடுகிறார். ஆனால் தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் காலாங்கிநாதர் முக்தி அடைந்ததாகவும் சொல்கிறார்கள்.

புதன், ஜனவரி 28, 2015

ஹஜ் புனித பயணம்

உலகின் மிக நீண்ட புனித யாத்திரை

புனித யாத்திரைகள் எப்போதுமே  கடினமானதுதான். அதிலும் ஹஜ் போன்ற நீண்ட தூர பயணங்கள் தரும் சிரமங்களைவிட பரவசம் அதிகம். முன்பெல்லாம் ஹஜ் யாத்திரை கடல் பயணங்களாகவே இருந்தன. பயணம் முடிந்து வீடு திரும்புவது அபூர்வமான  காரியம். அதனால்தான் இதனை இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் கடைசியாக வைத்திருக்கிறார்கள்.

காபா
ஒரு மனிதன் தான் சம்பாதித்தவற்றில் குறிப்பிட்ட அளவு தானம் செய்து, தனது குடும்பத்தினர் தொடர்ந்து வாழ்வதற்கான எல்லா வசதிகளையும் செய்துவிட்டு இறுதியாகத்தான் இந்த யாத்திரை தொடங்கவேண்டும். பெரும்பாலும் அந்திம காலம்தான் இதற்கு ஏற்றதாக இருக்கும். அப்போதுதான் இந்தப் பயணத்தை மேற்கொள்வார்கள்.

அப்போதைய கடல் பயணம் மிக நீண்டதாகவும் கடினமானதாகவும்  இருந்தது. உயிரோடு வீடு திரும்பும் வாய்ப்பு குறைவு. ஹஜ் பயணி ஒருவர் தனது யாத்திரையின் போது இறந்துப் போனால் அது புனிதம். அதனால் புனித மண்ணில் இறப்பதை பெருமையாக கருதினார்கள். 

இன்று காலம் மாறிவிட்டது. விமானங்கள் சொகுசாய் அழைத்துச் செல்கின்றன. இறங்கியவுடன் ஏஸி காரில் பாலைவனத்தில் பயணம் என்று கிட்டத்தட்ட ஒரு சுற்றுலா போல் மாறிவிட்டது. 

பணம் மட்டும் கை நிறைய இருந்தால் போதும். அலுப்பு இல்லாத ஒரு யாத்திரைதான் ஹஜ் புனித யாத்திரை. 

அதிலும் சிரமங்கள் இருக்கிறது என்கிறார்; மெக்காவிற்கு 40 முறை சென்று, அதில் 6 முறை ஹஜ் புனித கடமையை நிறைவேற்றிய அன்வர் சமத் அவரிடம் பயணம் பற்றி கேட்டோம். அவர் முதலில் சென்றதற்கும் தற்போதைக்கும் உள்ள வித்தியாசங்களை கூட துல்லியமாக கூறினார்.

ஹாஜி அன்வர் சமத் மனைவி மற்றும் மகளுடன் 
"நபிகள் நாயகம் பிறந்த புனித மண்ணை வணங்கி வரவேண்டும் என்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் ரத்தத்தில் கலந்து போன ஒன்று. அந்த வாய்ப்புக்காக வாழ்நாள் முழுவதும் காத்திருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஏனென்றால் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ஹஜ் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் இத்தனை பேர் என்று சவுதி அரேபியா இலக்கை நிர்ணயித்துள்ளது. 

மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒதுக்கீடு நடக்கிறது. ஒரு நாட்டில் ஒரு கோடி முஸ்லீம்கள் இருந்தால் அந்நாட்டில் இருந்து 10,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் வருடந்தோறும் 1.70  லட்சம் யாத்திரிகர்கள் ஹஜ் புனிதப் பயணத்திற்கு செல்கின்றனர். இதற்கான விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விட மிக அதிக அளவில் இருப்பதால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 70 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு கட்டாயம் வாய்ப்பு தரப்படுகிறது. அதனால் ஹஜ் பயணத்திற்கான வாய்ப்பு ஒருவருக்கு கிடைப்பதே இறைவன் செயல்!

நான் சவுதி அரேபியாவில்  தொழில் செய்து வருவதால் என்னால் நினைத்த நேரத்தில் சென்று வர முடிந்தது. இது அல்லாஹ்வின் கருணை!

அரபாவில் தொழுகை 
பொதுவாக புனித யாத்திரைகள் எல்லாமே நடைப்பயணம் கொண்டதாகவே இருக்கும். ஹஜ் பயணமும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் சென்ற ஒவ்வொரு முறையும் வயதானவர்கள் நடக்க முடியாமல் சிரமப்படுவதை கண்டு மனம்
வருந்தியிருக்கிறேன். ஹஜ் பயணத்தில் 60 சதவிகிதத்திற்கு மேல் 60 வயதைக் கடந்தவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் படும்பாடு பரிதாபமானது.

அதனால், ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்தவுடனே பெரியவர்கள் தினமும் 5 முதல் 8 கி.மீ. வரை நடந்து பயிற்சி எடுப்பது நல்லது. 

இதை நான்கைந்து மாதம் தொடர்ந்து  மேற்கொண்டால்தான் அரஃபா முதல் முஸ்தலிஃபா வரை 8 கி.மீ. தொலைவை கடக்க முடியும். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் இந்த பயணத்திற்கு வரும் முஸ்லீம்கள்  எல்லோருமே வசதியானவர்கள். இவர்கள் பெயருக்குகூட நடப்பதில்லை. அதனால்தான் இங்கு நடப்பதில் சிரமப்படுகிறார்கள். ஹஜ் பயணத்திற்கு உங்கள் கால்களை பத்திரமாக வைத்திருப்பது மிக முக்கியம். 

இதுமட்டுமல்ல, மக்கா கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் இருக்கும் நகரம். இங்கு நம்மூரைப் போல் ஆக்ஸிஜன் அதிகம் இருக்காது. வேகமாக நடந்தால்  மூச்சுத் திணறல் ஏற்படும். இஹ்ராம் உடை உடுத்தி நடப்பதிலும் ஆண்களுக்கு பிரச்சினை இருக்கிறது. அதனால் நடைப்பயிற்சி  மேற்கொள்ளும்  போதே உள்ளாடை எதுவும் அணியாமல் வேஷ்டி மட்டும் அணிந்து நடைப்பயிற்சி செய்து வந்தால் இஹ்ராம் உடையில் நடக்க உதவியாக இருக்கும். சிரமங்கள் பல இருந்தாலும் இதுவொரு தனித்துவமான அனுபவம்.

ஹஜ் யாத்திரை என்பது இறைவனுடன் ஒன்றாகும் அடையாளம். ஒரு முஸ்லீம் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இது இறைவனை வணங்குவதற்கான உன்னதமான முறை.

ஹஜ் புனிதப் பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது. இந்த கடமையை துல்ஹஜ் மாதத்தின் 8வது நாள் முதல் 12-ம் நாள் வரை செய்ய வேண்டும். 

சென்னையிலிருந்து 6 மணி நேர விமானப் பயணத்தில் ஜெட்டா விமான நிலையத்திற்கு போய்விடலாம். அங்கிருந்து 108 கி.மீ. சாலை வழியாக பயணித்து மினா(மக்கா) வந்து விடலாம்.

மக்காவிற்கு வந்து சேர்ந்தவுடனே எல்லோரையும் 'ஹாஜி' என்றே அழைக்க வேண்டும். இங்கிருந்தே ஹாஜிக்களின் புனிதப் பயணம் தொடங்குகிறது. 

அவர்கள் சாதாரண உடையில் இருந்து ஓரங்கள் மடித்து தைக்கப்படாத இஹ்ராம் என்ற உடைக்கு மாற வேண்டும். வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த புனித உடையை உடலைப் போர்த்திக் கொள்வது போல் அணிந்து கொள்ள வேண்டும். 

இதுதான் ஹஜ் பயணத்திற்கான உடை.  இறைவன் முன் இருப்பவரும் ஒன்றுதான், இல்லாதவனும் ஒன்றுதான் என்பதை உணர்த்ததுவதற்கான அடையாளம் இந்த உடை.

ஹஜ்ஜின் முதல் நாள் மினாவில்தான் தங்க வேண்டும். மக்காவிலிருந்து  கிழக்கு பக்கமாக அராஃபா செல்லும் வழியில் பயணித்தால் 8 கி.மீ. தொலைவில் மினா வந்துவிடும். மினா என்பது ஒரு ஊரின் பெயர். இதற்கு 'விருப்பம்'  என்ற அர்த்தம் உண்டு.

 இந்த ஊரில் இரண்டு நீளமான தெருக்கள் உள்ளன. மிகப்பெரிய கட்டடங்களும் இருக்கின்றன. ஆனால் அவை எப்போதும் காலியாகவே இருக்கும். ஹஜ்  ஆரம்பமாகும் அந்த ஐந்து நாட்கள் மட்டுமே வாடகைக்கு விடுவார்கள். 1400 வருடங்களாகவே ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காகவே  இந்த இடத்தை ஒதுக்கி வைத்துள்ளார்கள். 

இங்கு குடியிருப்பது, கடைகள் வைப்பது போன்றவற்றை தடை செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் இங்கு தங்கியிருந்து தான் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள், என்பதால் இது புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது.

இங்கு 30 லட்சம் ஹஜ் பயணிகள் தங்கக்கூடிய அளவுக்கு பெரிய மைதானம் உள்ளது. இதில் எளிதில் தீப்பிடிக்காத ஏஸி வசதி கொண்ட கூடாரங்களை சவுதி அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

மினாவில் அமைக்கப்பட்டுள்ள ஏஸி கூடாரங்கள்
தீர்க்கதரிசியான இப்ராஹீம் தனது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முயற்சித்த இடமும் இதுதான். அதனால் இங்கு குர்பானி கொடுப்பதுதான் விஷேசம். இதுபோக ஜம்ரா என்ற சைத்தான் மீது கல் எரியும் இடமும்  இங்குதான் உள்ளது.

ஹஜ் பயணத்தின் மிக முக்கிய கடமை உம்றா செய்வது. உம்றா என்பது காஃபாவை ஏழுமுறை இடமாக சுற்றி வருவது. ஒவ்வொரு முறை சுற்றி வரும்போது அவர்கள் புனிதக் கருங்கல்லை முத்தமிடுவார்கள். அதிகமான  கூட்டம் காரணமாக கருங்கல்லை நெருங்க முடியாதவர்கள் தங்கள் வலது கையை உயர்த்தி காண்பித்தால் போதும். 

தவாஃப் செய்யும்போது சாப்பிடக்கூடாது. தண்ணீர் வேண்டுமானால் குடிக்கலாம். ஆண்கள் முதல் மூன்று சுற்றுகளை வேகமாக ஓடிச் செய்ய வேண்டும். மீதம் உள்ள நான்கை நடந்து நிறைவு செய்யலாம். முதல் மூன்று சுற்றுக்களின் போது 'அல்லாஹூ அக்பர்'  என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே செய்யவேண்டும். நான்கு சுற்றுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இங்கு வரும் ஹாஜிக்கள் பக்தி பெருக்கால்  ஏழு சுற்றுக்கும் 'அல்லாஹூ அக்பர் ' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே சுற்றுகிறார்கள்.

ஏழு சுற்றுகளை முடித்தப்பின் மகாமு இப்ராஹீம் எனப்படும் இடத்தில் தொழவேண்டும். காஃபாவை சுற்றி ஹாஜிகள் நடக்கும் இடத்தை முக்தாஃப் என்று அழைப்பார்கள்.

கருங்கல்லை முத்தமிடுதல்
தவாஃப் செய்து முடித்தவுடன் இந்த ஹாஜிக்கள் சஃயு என்ற ஓட்டம் ஓட வேண்டும். ஐயாயிரம் வருடத்திற்கு முன்பு இப்ராஹீமின் மனைவி ஹாஜர் தன் மகன் இஸ்மாயில் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தேடி ஓடியது போல் ஓட வேண்டும்.ஸஃபா-மர்வா என்ற இரண்டு மலைகளுக்கு இடையே ஏழு தடவை ஓட வேண்டும்.  

இப்படி ஓடிய ஹாஜர் அல்லாஹ் இடம் வேண்டியதால்தான் ஜம் ஜம் புனித நீர் கிடைத்தது. ஸஃபா-மர்வா இரண்டுமே சொர்க்கத்தின் வாசல்கள் என்றும் இங்கு துஆக்கள் செய்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபிகள் கூறியுள்ளார்கள். 

இந்த ஓட்டத்தின் போது முன்பு அதிக உயிர் சேதம் ஏற்பட்டது. இப்போது தனிப்பாதைகள் அமைக்கப்பட்டு  ஏஸி வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பு வெயிலில் அலைந்து உம்றாவை முடிக்கும் நிலை மாறி குளு குளு வசதியில் சுகமாய் முடியும் வண்ணம் மாறியிருக்கிறது.

சயு ஓட்டம்
அடுத்த நாள் ஹாஜிக்கள் மினாவிற்கு சென்று இரவுப் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். மறுநாள் அரஃபா மலைக்கு செல்வார்கள். மினாவிற்கும் அராஃபாவிற்கும் 17 கி.மீ. தூரம் ஆகும். 

அரஃபா என்றால் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளுதல் என்று பொருள். இறைவன் வானத்திலிருந்து ஆதமை இலங்கை பகுதியிலும், ஹவ்வாவை ஜித்தாவிலும் இறக்கினார். இருவரும் அழுது புலம்பி பாவமன்னிப்பு கேட்டபின் ஆதமும் ஹவ்வாவும் சந்தித்தது, ஒருவரையொருவர் புரிந்து  கொண்ட இடம் அந்த அரஃபா மலை.

இங்குதான் முகம்மது நபி தனது கடைசி சொற்பொழிவை நிகழ்த்தினார். அதனை நினைவுப்படுத்தும் விதமாக இங்கு கூடியிருக்கும் அனைவரும் குர்ஆனைப் படிக்கிறார்கள். அரஃபாவில் தங்கும் காலம் நடுப்பகலில் தொடங்கி சூரியன் மறையும் முன் முடிகிறது. இங்கு மதிய நேரத்தை கழிக்காவிட்டால் ஹஜ் பயணம் முழுமையடையாது.

அரபா மலையில் தங்கல்
சூரியன் மறைந்தப்பின் அரஃபா மலையைவிட்டு அராஃபா மைதானத்திற்கு செல்வார்கள். 8 மைல் நீளமும், 4 மைல் அகலும் கொண்ட இந்த மைதானத்தில்தான் இரவு நேரத்தை கழிப்பார்கள். இந்த அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அது 70 ஹஜ்ஜூக்கு சமமாகும் என்று நபிகள் கூறியுள்ளார்.

அரஃபா மலைக்கும் மினாவிற்கும் இடையே முஸ்தலிஃபா என்று இடம் அமைந்துள்ளது. இங்குதான் சைத்தானின் மீது எறிவதற்காக 70  பொடி கற்களைப் பொறுக்கிக் கொள்ள வேண்டும். பாலைவனம் நிறைந்த சவுதி அரேபியாவில் இங்கு மட்டும்தான் பொடிக்கற்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான ஹாஜிக்கள் கோடிக்கணக்கான
கற்களை எடுத்தும் கல் பற்றாக்குறை வந்ததில்லை. இது இறைவனின் அற்புதமே!

மினாவில் ஜம்ரதுல் எனும் சாத்தானின் மீது கல்வெறிவார்கள். சாத்தான் என்பதால் முரட்டுத்தனமாக வெறி கொண்டு எறிவார்கள். அல்லாஹ்வின் கட்டளைப்படி இப்ராஹிம் தன் மகனை பலியிடத் தயாராகும் போது மூன்று முறை அழைத்தும் அவர் வரவில்லை. அதனால் மூன்று பெரிய தூண்கள் இங்கிருக்கின்றன. இதன் மேல் எறியும் கற்கள் மலைபோல் குவிந்துவிட 2004-ம் ஆண்டு அந்தக் கற்களைக் கொண்டே பெரிய தூண்களை அமைத்துவிட்டார்கள்.

தொட்டியுடன் கூடிய சுவராக மாற்றிவிட்டார்கள். இந்த தொட்டியில் எறியும் கற்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த கடமையை முடித்த பின்பு விலங்குகளை பலியிடும் சடங்கு நடைபெறும். ஒருவர் ஒரு ஆட்டையோ, அல்லது 7 பேர்
சேர்ந்து ஒரு ஒட்டகத்தையோ மாட்டையோ குர்பானியாக பலியிடுவார்கள். இந்த இறைச்சியை தொண்டு நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதும் அனுப்பி வைப்பார்கள். இது முடிந்த பின் ஆண்கள் தலைமுடியை சவரம் செய்துவிடுவார்கள். பெண்கள் சடையில் இருந்து ஒரு அங்குல முடியை காணிக்கையாக கொடுப்பார்கள்.

ஹிரா குகை
அடுத்து ஹிரா குகை! ஹஜ்ஜின் கடமைகளில் இந்த குகை இல்லாவிட்டாலும் ஜபலுந்தூர் மலையின் உச்சியில் இருக்கும் ஹிரா குகை பாரம்பரிய புனிதம் மிக்கது. 6 அடி நீளமும், உயரமும், இரண்டே கால் அடி அகலமும் கொண்ட இந்த சின்னஞ்சிறிய  குகையில் நபிகள் நாயகம்  தவம் செய்தார். அப்போதுதான் முதன் முதலாக குர்ஆனின் ஐந்து வசனங்கள் சொல்லப்பட்டது. 

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக 23 ஆண்டுகளில் முழு குர்ஆனும் இறக்கி வைக்கப்பட்டது.  இந்த குகையை நேரில் பார்ப்பவர்கள் இங்கு எப்படி நபிகள் இரவு பகலாக தவம் செய்தார்களோ என்ற வியப்பு ஏற்படுவதை தவிர்க்க இயலாது.
தலைமுடியை வெட்டிக் கொண்டபின் ஹாஜி அனைவரும் மக்காவில் இருக்கும் அல்-ஹராம் பள்ளி வாசலுக்குச் சென்று மற்றொரு தவாஃப்  செய்வார்கள். காஃபாவை சுற்றி வருவார்கள். அன்றிரவை மீண்டும் மினாவில் கழிப்பார்கள்.

மறுநாள் மீண்டும் சைத்தான் மீது  கல் எறிவார்கள். மக்காவில் எல்லா கடமையும் முடித்தப்பின் 470 கி.மீ. தொலைவில் உள்ள மதீனாவுக்கு செல்வார்கள். அங்கு நபிகள் தோற்றுவித்த பள்ளிவாசலுக்கு  சென்றுவிடுவார்கள். 

'இந்தப் பள்ளியில் எவர் ஒருவர் இரண்டு ரத்அத் தொழுகிறாரோ அவருக்கு ஒரு உம்றா செய்த பலன் கிடைக்கும்' என்று நபிகளே கூறியிருக்கிறார். மதீனாவில் நபிகளின் துணைவி மற்றும் இஸ்லாம் மார்க்க தலைவர்கள் பலரின் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் இருக்கின்றன. இந்தப் பள்ளிக்கு 'மஜ்ஜிதுல் குபா' என்று பெயர்.

மஜ்ஜிதுல் குபா
தனது 53வது வயதில் நபிகள் மதினாவிற்குள் நுழைந்த போது அவர் ஏறிவந்த ஒட்டகம் ஒரு இடத்தில் அமர்ந்தது. இந்த இடத்திலேயே ஒரு பள்ளி வாசல் கட்டினார். ஈச்ச மரத் தூண்களை உத்தரமாகவும், ஈச்சந்தட்டிகளை கூரையாகவும் அமைத்து இதை உருவாக்கினார். மழைப் பெய்தால் மழைநீர் ஒழுகி மண் தரை முழுவதும் சகதியாகிவிடும். தொழுகை நடத்த முடியாத அளவிற்கு பாழ்பட்டு விடும்.

இதனைப் பார்த்த ஒரு பெரியவர் நபிகளிடம் இந்தப் பள்ளி நிலைத்து நிற்குமா? என்று கேட்டார். 'ஒரு நாள் வரும், அப்போது மக்கள் உள்ளே நுழைய இதன் வாயிலில் காத்து நிற்பார்கள்' என்றார். எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தை. தற்போது இந்த பிரமாண்ட பள்ளி வாசலில் 8 லட்சம் மக்கள் தொழுகிறார்கள். இரவு 11 மணிக்கு கதவு அடைக்கப்படும்.

அதிகாலை தொழுகைக்காக கதவு திறக்கப்படுவதை எதிர்பார்த்து லட்சக்கணக்கான மக்கள் காத்து நிற்கிறார்கள் எல்லாம்
நபிகளின் மகிமை '' என்று தனது பயண அனுபவத்தை  விரிவாகக் கூறி முடித்தார் அன்வர் சமத்

நமக்கும் ஹஜ் பயணம் முடிந்து திரும்பிய
திருப்தி கிடைத்தது!
ஜம் ஜம் நீர்


காயசித்தி யோகம் தந்த காகபுஜண்டர்

து மலர்கள் சூழ்ந்த நந்தவனம்!

இதமான தென்றலும் மலர்களின் மணமும் ஒன்று சேர்ந்து மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் பூஞ்சோலையாக அது திகழ்ந்தது. அதன் ஊடே ஒரு ஓடை ரம்மியமாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஓடையில் இரண்டு அன்னப்பறவைகள் மது அருந்திக் கொண்டிருந்தன. மது போதையில் அவைகள் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருந்தன. அதை சிவபெருமான் பார்த்து விட்டார். சிவனின் ஞான திருஷ்டி அந்த அன்னங்களின் மேல் பட்டதும் சிவகலையானது காக உருவத்துடன் பதித்து விட்டது.

அதன் பிறகு பெண் அன்னம் 20 முட்டைகளைப் பொரித்தது. அவை அனைத்தும் அன்னக் குஞ்சுகளாக வெளிவந்தன. 21-வது முட்டை மட்டும் சிவகலை பதிந்து காக்கைக் குஞ்சாக வெளிவந்தது. அதுவே வளர வளர தவயோகம் மிளிரும் காகபுஜண்ட முனிவராக பரிணாமம் அடைந்தது.
‘அபிதான சிந்தாமணி'யில் காகபுஜண்டரைப் பற்றி இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
காகபுஜண்டர்
கலியுக காலத்தில் உஜ்ஜயினி நாட்டில் வேதங்கள் கற்றுத் தேர்ந்த, சிவபூஜைகள் செய்து வந்த அந்தணர் ஒருவர் இருந்தார். அவரிடம் காகபுஜண்டர் சரணடைந்தார். அந்தணரும் அவருக்கு சிவ மந்திரங்களை உபதேசித்து வந்தார். காகபுஜண்டருக்கு திருமால் அடியவர்களையும் அந்த நெறியை பின்பற்றுபவர்களையும் ஏனோ சுத்தமாக பிடிக்கவில்லை.
ஆனால் அவருக்கு சிவமந்திரம் கற்றுக் கொடுத்த குருநாதரோ சிவபூஜை செய்து வந்த போதும் திருமால் மீது அபிமானமும், பற்றும் கொண்டிருந்தார்.

 தனது சீடர் திருமால் அடியார்களை வெறுப்பது அந்தணருக்கு வருத்தம் அளித்தது. அது குறித்து எத்தனையோ முறை உபதேசம் செய்தும் காகபுஜண்டர் திருந்துவதாக இல்லை. மேலும் திருமால் மீது அபிமானம் கொண்டதாலே தனது குருநாதருக்கு ஏகப்பட்ட துரோகங்களை செய்து வந்தார். இத்தனை இருந்தும் தனது சீடர் மீது எந்தவித கோபமும் வெறுப்பும் கொள்ளவில்லை அந்த அந்தணர்.

ஒருமுறை மகாகாலர் ஆலயத்தில் சிவநாமஜெபம் செய்து கொண்டிருந்த போது, குருநாதர் வருவதை தெரிந்து கொண்டும், தெரியாதவர் போல் அவரை காகபுஜண்டர் அலட்சியப்படுத்தினார். இதனைக் கண்ட மகாகாலருக்கே கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. உடனே... 

“அடே மூடனே! கர்வம் கொண்டவனே! குருவை மதிக்கத் தெரியாதவனே! நான் உன்னை சபிக்கிறேன். நான் உனக்கு தண்டனை தராவிட்டால் வேதமுறைகளே பாழாகிவிடும். எவன் ஒருவன் குருவிடம் அருவருப்புக் கொள்கிறானோ அவன் கோடியுகம் பூமியில் ஆழ்ந்து கிடந்து புழுப்பூச்சிகளாய் 16 ஆயிரம் பிறவி எடுத்து அல்லல் படுவான். நீ பாம்பாகக் கடவாய். பெரிய மரப்பொந்தில் சென்று விழுந்து கிடப்பாய்!" என்று சாபம் கொடுத்தார்.

இதைக் கேட்டதும் காகபுஜண்டரைவிட குருநாதர் துடிதுடித்துப் போனார். சிவபெருமானை துதித்து மன்றாடி கேட்க மகாகாலர் காட்சியளித்தார்.

“இறைவா! அறியாமல் தவறிழைத்த என் சீடனிடம் கருணை காட்டி சாப மங்களம் உண்டாக அருள் புரிய வேண்டும்” என்றார்.

“அந்தணரே! உன் சீடன் செய்த கொடிய பாவம், உனது மனித பண்பால் கருணைக்கு ஆளானது. ஆனாலும் என் சாபத்தை நான் வீணாக்க மாட்டேன். இவனுக்கு ஆயிரம் பிறவிகள் உண்டு. இருந்தாலும், பிறப்பாலும் இறப்பாலும் வரும் பொறுக்க முடியாத துன்பங்கள் இவனைத் தீண்டாது. எந்த பிறவியிலும் இவனது தத்துவ ஞானம் குறையாது. காகபுஜண்டனே! இனிமேலாவது ஞானியரை மதிக்காமல் நடந்து கொள்வதை மாற்றிக் கொள்!  இனி உன் உள்ளத்தில் ராம பக்தி மலரும்!" என்று கூறி மறைந்தார்.

அதன்பின் காகபுஜண்டர் விந்திய மலையில் மலைப் பாம்பாக வாழ்ந்து உயிர் நீத்தார். உடைகளை மாற்றுவது போல் பிறவிமேல் பிறவி எடுத்து பல பிறவிகளைக் கண்டு விட்டார்.

ஒரு சமயம், சதுரகிரி மலையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். காகபுஜண்டர். அப்போது போகர் முனிவரிடம் முதன்மை சீடர்களாக தன்மார்த்தன், சீவலன், சதுர்புஜன், தின்மதியன், கொற்றவன் என்ற ஐந்து சீடர்கள் இருந்தார்கள், இவர்கள் காகபுஜண்டரின் ஆசி பெறுவதற்காகவே அவரது ஆசிரமத்துக்கு அருகே குடில்களைப் போட்டு வசித்து வந்தனர்.
ஒரு நாள், அந்த சீடர்களில் சிறியவனான கொற்றவன் தனது அண்ணன்களுக்கு காய், பழங்களை உணவாக உண்பதற்காக கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த காட்டுக்குள் பலாப்பழம் வாசனை மூக்கைத் துளைத்தது. சற்று தொலைவில் ஒரு பலா மரம் இருந்தது. அதில் ஒரு பலாப்பழம் வெடித்து தேன் வழியும் சுளை பிதுங்கி இருந்தது. ஆசையோடு நெருங்கி அதை எடுத்து சுவைத்தான்.

மறுகணமே கண்கள் இருட்டிக் கொண்டு மயக்கம் வந்தது. ஆசிரமம் அந்த இடத்தில் இருந்து வெகு தொலைவு இருந்தது. கண்டிப்பாக நடந்து போக முடியாது. இது ஏதோ விஷக்கனிதான். இனி உயிர் பிழைக்க முடியாது. இறப்பதற்கு ஒன்றும் பயமில்லை. ஆனால் தன்னை தேடி வரும் அண்ணன்கள் இந்த பலாப்பழத்தை சாப்பிட்டு அவர்களும் இறந்து விட்டால்... என்ன செய்வது? வேக வேகமாக ஒரு மரக்குச்சியை எடுத்து மண்ணில் எழுதினார்.

“அண்ணன்களே! இந்த மரத்தில் இருக்கும் பலாச்சுளையை பறித்து உண்டேன். உடனே மயக்கமானேன்! இனி நான் பிழைப்பது கடினம். இந்த கனியை யாரும் உண்ண வேண்டாம். எச்சரிக்கை!” என்று எழுதி வைத்தான் உடனே மண்ணில் சாய்ந்தான்.

சற்று நேரத்தில் அண்ணன்கள் அங்கு வந்தனர். மணலில் எழுதியிருப்பதை படித்தனர், அதிர்ச்சியுற்றனர். உடனே கொற்றவனின் உடலை பாதுகாப்பாக இலை சருகுகளைக் கொண்டு மூடினர். உடலுக்கு காவலாக ஒரு சகோதரனை மட்டும் விட்டுவிட்டு மற்ற மூவரும் வேகவேகமாக காகபுஜண்டரிடம் சென்றனர். நடந்த எல்லாவற்றையும் கூறினர்.

“வருந்தாதீர்கள் வாலிபர்களே! நன்றாக பழுத்து வெடித்த அந்த கனியின் வாசனையால் ஈர்க்கப்பட்ட ஒரு நாகம் ஒன்று அந்த தேன் சுளை மீது வாய் வைத்திருக்கிறது. அந்த நேரம் பார்த்து காற்று வீசித் தொலைய பலாக்கனி அசைந்திருக்கிறது. உடனே அந்த நாகம் தனக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்து அந்தக் கனியை தீண்டி தன் விஷத்தை அதனுள் பாய்த்து விட்டது. அதை உங்களது தம்பி சாப்பிட்டதால் மூர்ச்சையாகி விழுந்து விட்டான்.”

“சுவாமி, நீங்கள் தான் எங்களின் சகோதரனைக் காப்பாற்ற வேண்டும்”.

காகபுஜண்டர் தனக்கு அருகில் இருந்த நாகதாலி மூலிகையை எடுத்து அதில் மந்திரம் ஓதிக் கொடுத்தார்.

“இந்த மூலிகையை நன்றாக கசக்கி அதன் சாறை கொற்றவனின் தேகமெங்கும் தடவுங்கள். எல்லாம் சரியாகி, தெளிர்ச்சியோடு எழுவான்” என்றார். அப்படியே அவர்களும் செய்தனர், கொற்றவனும் எழுந்து வந்தான்.

மகிழ்ச்சியோடு மீண்டும் காகபுஜண்டரிடம் வந்த ஐந்து சகோதர்களும் அவருக்கு நன்றியினைக் கூறி, “குருதேவரே! தாங்கள் மரணம் இல்லாமல் வாழும் ரகசியத்தை நாங்களும் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டனர்.

காகபுஜண்டர் ரகசியத்தை கட்டிகாத்துக் கொள்பவரில்லை. சீடர்கள் கேட்டவுடன், கற்பக மூலிகைகள் மற்றும் இறவா வரம் குறித்த ரகசியங்களை சொல்லலானார், “இந்த சதுரகிரி மலையில் உள்ள மகாலிங்க மூர்த்தியின் கோவிலுக்கு வடக்கே ஒரு நாழிகை நேரம் நடந்து போனால் முண்டக வனம் ஒன்று தென்படும். அந்த வனத்தின் வடமேற்கு மூலையில் முண்டக மரம் ஒன்று உண்டு. அந்த மரத்தின் இலைகள் ஆலமர இலைகளைப் போல சிறியதாக இருக்கும். காய்கள் பார்ப்பதற்கு கல்லத்திகாய் போல இருக்கும். அந்த மரத்தை லேசாகத் தட்டினாலே பால் கசிந்து வரும். அந்தப்பாலை அரைக்காற்படியாக எடுத்து முப்பது நாட்களுக்கு சாப்பிட்டால் மூர்ச்சையாகி விழுந்து விடுவீர்கள். அப்போது அருகில் ஒருவர் இருந்து பசுவின் பாலை சுண்டக் காய்ச்சி, அதில் தேன் விட்டு அடிக்கடி, ஒரு கரண்டி வீதம் கொடுத்துக் கொண்டே வரவேண்டும். இப்படி செய்தால் மூர்ச்சை தெளிந்து விடும்.
மூர்ச்சை தெளிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உடலில் இருந்து சட்டை போன்று தோல் கழலும், அப்போது தேகம் பொன்னிறமாக மின்னும். மலஜலம் வெளியேறும். பின்பு தேகம் காய சித்தியாகும்” என்று சொல்லி முடித்தார். சீடர்கள் அவரை கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தனர். காகபுஜண்டரிடம் காயசித்தி யோகம் அறிந்து இறவா நிலை பெற்ற தாங்கள் பாக்கிவான்களே என்று சகோதர சீடர்களுக்கு பெருமிதம் ஏற்பட்டது.

திங்கள், ஜனவரி 26, 2015

பியர் கிரில்ஸ் : சாகஸம் இவர் மூச்சு

மேஸான் காடாக இருந்தாலும் சரி; ஆர்டிக் பனியாக இருந்தாலும் சரி; சஹாரா பாலைவனமாக இருந்தாலும் சரி; ஒற்றை ஆளாக கடந்து வருபவர்தான் பியர் கிரில்ஸ்...!

இங்கெல்லாம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா இருக்கும்...?! கண்ணுக் கெட்டிய தூரம் வரை கட்டாந்தரை தான் கண்ணில் படும். கொதிக்கும் வெயில், உறைய வைக்கும் குளிர்.  இதில் நடந்து, கண்ணில் தட்டுப்படும் பாம்பு, பல்லி, புழுக்களை சாப்பிட்டு உயிரோடு தப்பி வருவது எப்படி என்பதை, ஒவ்வொரு எபிஸோடிலும் நமக்கு சொல்லித் தருவதுதான் இவர் வேலை!

பியர் கிரில்ஸ்
 டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். சாகஸத்திற்காகவே பிறந்த இவர் வாழ்நாளில் நிஜமாக செய்த சாதனைகள் நிறைய...!

வட அயர்லாந்தில் 1974-ல் பிறந்தவர் பியர். சாகஸப் பயணி, எழுத்தாளர், உற்சாகம் தரும் பேச்சாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தலைமை சாரணர் என்று பல முகங்கள் கொண்டவர். இவரது 8 வயதில் இவரின் தந்தை எவரெஸ்ட் சிகரத்தின் படம் ஒன்றை கையில் கொடுத்தார். 'அந்தப்படம்தான் தன்னை சாகஸம் நோக்கி அழைத்துச் சென்றது' என்கிறார் பியர். 1998 மே 16-ல் எவரெஸ்ட் சிகரத்தை உச்சியை அடைந்த போது பியர் கிரில்ஸ்தான் உலகிலேயே மிகச்சிறிய வயதில் எவரெஸ்ட் ஏறியவர். அப்போது அவரின் வயது 23. அதுவொரு புதிய கின்னஸ் சாதனை!

அந்த சாதனை நீண்ட நாள் நீடிக்கவில்லை. 2001-ம் ஆண்டு நேபாளத்தைச் சேர்ந்த டெம்பா ட்ய­ரி என்ற 16 வயது சிறுவன் எவரெஸ்ட் தொட்டதுதான் இப்போதைக்கு இளவயது சாதனை. ஆனாலும் பிரிட்டனைச் சேர்ந்தவர்களில் குறைந்த வயது சாதனை இவருடையதுதான்.

 25,000 அடி உயரத்தில் உணவு
எட்மண்ட் ஹிலாரி "ஏற முடியாத சிகரம்' என்று கூறிய 'அமா டாப்லாம்' சிகரத்தையும் இவர் ஏறிப் பார்த்து விட்டார். உலகிலேயே மிக உயரமான இடத்தில் வெட்டவெளியில் முறையான இரவு உணவை முடித்து சாதனைப் புரிந்தார். இதற்காக 25,000 அடி உயரத்தில் ஹாட் ஏர் பலூனில் பறந்தபடி சாப்பிட்டு கட்டியுள்ளார்.

 200 முறைக்கு மேல் பாராசூட்டில் இருந்து குதித்திருக்கிறார். இது போல் இன்னும் நிறைய...! பியர் கிரில்ஸின் முழுப் பெயர் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ் என்பது. கிரில்ஸ் குழந்தையாக இருக்கும் போது இவரின் அக்கா 'பியர்' (கரடி) என்று இவரை செல்லமாக அழைத்ததையே தனது பெயராக்கிக் கொண்டார்.


சிறுவயதிலேயே தனது தந்தையிடம் இருந்து மரம் ஏறுவதற்கும் படகில் செல்வதற்கும் கற்றுக் கொண்டார். டீன் ஏஜ் பருவத்தில் கராத்தே பயின்று பிளாக் பெல்ட் பெற்றார். அதன்பின் யோகாவிலும் சீனக் கலையான நிஞ்சுட்சூவிலும் முழுத் தேர்ச்சிப் பெற்றார். சிறுவயதிலேயே ஸ்கவுட்டில் சேர்ந்தார். இன்று இவர்தான் உலக ஸ்கவுட்டின் தலைவர். அதாவது தலைமை சாரணர். ஆங்கிலம், ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச் மொழிகள் இவருக்கு அத்துப்படி. 2000-ம் ஆண்டில் ஷாரா கிரில்ஸ் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவருக்கு ஜெஸ்ஸீ, மராமடுகே, ஹக்கிள் பெர்ரி என்ற மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.

பள்ளிப் படிப்பு முடித்தவுடன் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது கிரில்ஸின் கனவு. இதற்காகவே சிக்கிம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் பகுதிகளிலும் இமயமலையிலும் ஹைக்கிங் செய்து வந்தார். பின்னர் யுனைடெட் கிங்டம் சிறப்பு படையில் சர்வைவல் இன்ஸ்பெக்டராகவும், பேட்ரோல் மெடிக்காகவும் பணிபுரிந்துள்ளார்.

1996-ல் கென்யாவில் ஃப்ரீஃபால் பாராசூட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது விபத்து ஏற்பட்டது. பாராசூட்டின் மேற்பகுதி 1,600 அடி உயரத்தில் வரும் போது கிழிந்து விட்டது. இதனால் தரையில் வேகமாக வந்து மோதி விழுந்தார். அவர் மேல் பாராசூட் விழுந்தது. முதுகெலும்பில் மூன்று உடைந்து போய் விட்டது. இவரின் கன்டிஷ­னைப் பார்த்த டாக்டர்கள் இவர் எழுந்து நடப்பது சந்தேகமே!என்றனர். ஆனால் தன்னம்பிக்கை நிறைந்த கிரில்ஸ் 18 மாதங்களில் எழுந்து நடக்கத் தொடங்கினார். அதோடு நிற்கவில்லை.

தனது சிறுவயது லட்சியமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். முதுகெலும்பு உடைந்து இரண்டு வருடத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்தார்.

அதன்பின் பல காயங்கள், அறுவை சிகிச்சைகள் எதற்குமே கிரில்ஸ் கலங்கவில்லை. தனது சாகஸத்தை நிறுத்தவில்லை. ஆபத்துக்கள் இவரைக் கண்டு ஓடின. மனித நடமாட்டமே இல்லாத, உலகின் பார்வையில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் தன்னந்தனியாக ஒரு மனிதன் மாட்டிக் கொண்டால் அவன் எப்படி தப்பி வருவது? அவன் உயிர் வாழ என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை விலாவாரியாக காட்டுவதுதான் இவர் நிகழ்ச்சியின் நோக்கம்.

இவர் உயிரோடு இருக்கும் பூச்சிகள், புழுக்கள், தவளைகள், நத்தைகள், மீன்கள், பல்லிகள் எல்லாவற்றையும் அப்படியே  சாப்பிடக் கூடியவர். புரதம் நிறைந்த இந்த உணவை சாப்பிட்டால்தான் காட்டில் உயிர் வாழ முடியும் என்பார். அதனால் எல்லாவற்றையும் கேமரா முன் கடித்துச் சாப்பிடுவார். பார்க்கும் நமக்குத்தான் குமட்டும்!


ஒருமுறை சஹாரா பாலைவனத்தைக் கடக்கும் போது தண்ணீர் கிடைக்காமல் தனது  சிறுநீரை குடித்தார். இறந்து கிடக்கும் ஒட்டகத்தின் வயிற்றை அறுத்து அதற்குள் இருக்கும் தண்ணீரைக் குடித்தார். இக்கட்டான சூழலில் எப்படி உயிர் வாழ்வது என்பதை காண்பிப்பதற்காக இந்த மனிதர் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இவை எல்லாம் 'பார்ன் ஸர்வைவர்' என்ற டிவி தொடராக ஒளிபரப்பானது. அதுதான் தற்போது ஆசியாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு டிஸ்கவரி சேனலில் 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்று ஒளிபரப்பாகி வருகிறது.

இவரைப் பற்றிய சர்ச்சைகளுக்கும் அளவில்லை. ஒரு தனிமனிதனை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எப்படி காட்டில் தவிக்க விடலாம்? என்று ஒரு சர்ச்சை எழுந்தது. இதற்கு பின்னர்தான் நிகழ்ச்சியின் துவக்கத்தில் பியர் கிரில்ஸூக்கு தனி மனித பாதுகாப்பு விதிகளின் படி உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று துவங்கும் முன் போடத் தொடங்கினார்கள்.

மனைவி ஷாரா கிரில்ஸ் உடன்
பியர் கிரில்ஸ் ஒபெராவின் ஃப்ரே டாக் ஷோ முதற்கொண்டு உலகின் பிரபலமான அத்தனை டாக்ஷோக்களிலும் பேசியுள்ளார். விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவர் எழுதிய முதல் புத்தகம் "ஃபேசிங் அப்!' இது யுனைடெட் கிங்டமின் சிறந்த 10 புத்தகங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது பற்றி 'ஃபேசிங் தி ஃப்ரோஸன் ஓ­ன்' என்ற இரண்டாவது புத்தகத்தில் எழுதினார். இது சிறந்த ஸ்போர்ட்ஸ் புத்தகத்திற்கான விருதை பியர் கிரில்ஸூக்கு பெற்று தந்தது.

'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி இப்போது ஐந்தாவது சீஸன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் வரும் காட்சிகள் எல்லாம் சித்தரிக்கப்படுகின்றன என்பது அவற்றில் ஒன்று.


காட்டில் இருக்கும் குதிரையை கிரில்ஸ் ஓட்டுவதாக காண்பிக்கப்பட்டது. உண்மையில் அந்த குதிரை அப்போது பயந்து போய் இருந்தது. அது அருகில் எங்கோ இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டது என்றும், பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இடம் ஹாலிவுட் படங்களை எடுக்கும் ஹவாயில் உள்ள ஒரு தீபகற்பமே என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஸர்வைவல் ஆலோசகர் மார்க் வியனெர்ட் குற்றம் சாட்டியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக இங்கிலாந்தில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சேனல் 4 நிறுவனம் இவை "டாக்குமென்டரிகள் அல்ல. இப்படி ஒரு சூழலில் மனிதன் மாட்டிக் கொண்டால் எப்படி வாழ்வது? என்பதை கற்றுத்தரும் வழிகாட்டு நிகழ்ச்சிதான்' என்றது. சர்ச்சையோ சாகஸமோ பியர் கிரில்ஸைப் பொறுத்தவரை அவர் ஒரு சாகஸ நாயகனே...! காட்சிகள் சில செயற்கையாக உருவாக்கி எடுத்திருக்கலாம். ஆனால் அவர் உருவாக்கி கின்னஸில் இடம்பெற்ற சாதனைகள் பொய்யல்லவே...!!!ஒயின் திருவிழா

மேற்கு
மஹாராஷ்டிரா - சுலா வினியார்ட்ஸ்

நீங்கள் ஒரு ஒயின் பிரியர் என்றால், இந்த தகவல் உங்களுக்குத்தான். நீங்கள் கட்டாயம் இங்கு செல்ல வேண்டும். இந்தியாவின் முதல் 'வினியார்ட் ரிஸார்ட், சுலா' தான். இங்கு ஒயினை ருசிக்கலாம்... ஓய்வை மயக்கத்தில் கழிக்கலாம்... ஒயின் தயாரிப்பை பார்வையிடலாம்... திராட்சை காலால் மிதித்து பிழியலாம்... இது போக வடிகட்டுவதை பார்க்கலாம்... என எல்லாமே த்ரில் அனுபவம்தான்.


ஒரு ஆய்வு என்ன சொல்கிறது என்றால், ஒயின் குடிப்பது ஆரோக்கியமாம். சும்மாவே நம்மாளுக காஞ்ச மாடு கம்மங்கொல்லையிலே பாய்ஞ்ச மாதிரி பாய்ந்து மாய்ந்து குடிப்பார்கள். இப்படி ஆய்வு வேறு சொல்லிவிட்டால் கேட்கவா வேண்டும்...!


ஒயின் ஆரோக்கியத்தை கொடுக்கிறதோ இல்லை - 'சுலா'விற்கு அருகில் உள்ள 'கங்காபூர்' ஏரிக்கரையில் நடப்பது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். ஒவ்வொரு  வருடமும் ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்களில் சுலா ஃபெஸ்ட் என்ற ஒயின் திருவிழா நடைபெறும். அப்போது உணவு, ஒயின், கலை, பேண்டசி நான்கும் சேர்ந்து கலந்த கலவை புத்துணர்வையும் கொண்டாட்டத்தையும் தரும்.

இங்கிருந்து ஒரு மணி நேரம் பயணித்தால் 'பண்டார்தரா ஏரி' வருகிறது. அங்கு ஒரு நாள் பிக்னிக் சென்று வருவது கொண்டாட்டம் மிக்கதாக இருக்கும்.


வினியார்ட் ரிசார்ட்டில் உள்ள அறைகளும் சூட்டுகளும் கூட ஒயினை பிரதிபலிப்பது போல்தான் அமைத்திருக்கிறார்கள். அந்தச் சூழலில் தங்குவதே மயக்கமான மகிழ்ச்சிதான்!

எப்படி போவது?

மும்பையிலிருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள நாசிக் நகருக்கு வந்து விட்டால், அங்கிருந்து சுலா வினியார்ட் வந்து விடலாம். மும்பையிலிருந்து 4 மணி நேர கார் பயணத்தில் இங்கு வந்து சேரலாம்.

எங்கு தங்குவது?


சுலா ரிஸார்ட் தவிர வேறு எங்கும் தங்க முடியாது. இருவர் ஓர் இரவு தங்கக் கட்டணம் ரூ.7,500. முன்பதிவு அவசியம். 0253-2230141 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

===

ஞாயிறு, ஜனவரி 25, 2015

சுற்றுலா செலவை இப்படியும் குறைக்கலாம்

சுற்றுலா தற்போது மிக எளிமையானதாகவும் அத்தியவசியமனதகவும் மாறிவிட்டது. அதில் நம் மனநிலையை பொறுத்து செலவழிப்பதும் உண்டு.ஆனாலும், பயணத்தின் இடையே சிறு சிறு செலவுகள் ஒன்று சேர்ந்து நம்மை பல இடையுறுகளில் சிக்க வைக்கும். இத்தகைய செலவுகளை சமாளிப்பதற்கு முன் கூட்டியே சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

சுற்றுலா செல்லும் முன் நாம் எடுத்து செல்ல வேண்டியவற்றை பட்டியல் இட வேண்டும். அதன் மூலம் கடைசி நேர அரிபரியை தவிர்க்கலாம். சப்பட்டு விஷயத்தில் அந்தந்த உள்ளூர் உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், நாம் தங்கிருக்கும் ரெஸ்டாரண்டில் சாப்பிடுவதற்கு பதிலாக வெளி உணவகங்களில் சாப்பிடுவதன் மூலமும் பணத்தை கணிசமாக மிச்சப்படுத்தலாம். அந்தந்த ஊர் உணவினை சாப்பிடுவது பயணத்தின் தனி ருசியை கூட்டும்.


சுற்றுலா தலங்களுக்கு ஆப்-சீஸனில் செல்வதன் மூலம் பணத்தை இரண்டு மடங்கு சேமிக்கலாம். சீஸன் டைமில் எல்லாம் யானை விலை, குதிரை விலை தான்...!

மேலும் அங்கிருக்கும் கூட்டத்திலிருந்தும் விடுபட முடியும். இந்நாட்களில் விமானங்கள் மற்றும் விடுதிகள் வசூலிக்கும் கட்டண கொள்ளையிலிருந்தும்  தப்பிக்கலாம்.

இணையம் வழியே விமான சேவை நிறுவனத்தின் இணையதளத்தில் அல்லாமல் இதுபோன்ற சேவைகளை தொகுத்து வழங்கும் நிறுவனங்களில் விமான பயணச்சிட்டுக்களை பதிவு செய்தல் நமக்கு குறைவான செலவே ஆகும்.

குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாவது பதிவு செய்ய வேண்டும். நேரம் குறையக் குறைய கட்டணம் அதிகரிக்கும். இரவு அல்லது பின்னிரவு விமானங்களை தேர்ந்தெடுப்பதை விட பகல் நேர விமானங்களில் பயணம் செய்வது செலவை குறைக்க மட்டுமல்ல, மேகத்தினூடே பயணம் செய்வதையும் ரசிக்க முடியும்.

அது மட்டுல்லாமல் மே-ஜூன் மாதங்களில் 8 முதல் 10 சதம் விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. எனவே சீஸனை தவிர்ப்பது நல்லது.

வெளிநாட்டு சுற்றுலா என்றால், வெளிநாட்டிற்கு சென்றவுடன் ஒரு சர்வதேச சிம் கார்டையோ அல்லது அந்த நாட்டு சிம் கார்டையோ வாங்கி கொள்வதானால் குறைந்த செலவில் நாம் பேச முடியும்.


நாம் தங்குவதற்கான விடுதிகளை, இணையத்தில் பதிவு செய்வதைவிட நேரில் சென்று பதிவு செய்தல் அங்கிருக்கும் சலுகைகளையும், தங்குமிடத்தையும் பார்த்து, பட்ஜெட் ஹோட்டல்களையும் தேர்ந்தெடுக்க வழிவகுக்கும். அடுக்குமாடிகளை தேர்ந்தெடுத்தல் சிறந்தது. குறைந்த செலவில் பால்கனி மேல் உல்லாசக் காற்று வாங்கலாம். மேலும் குழந்தைகளுக்கு இலவசமாக தங்கும் வசதி அளிக்கும் விடுதிகளை தேர்ந்தெடுக்கலாம்.

சுற்றிப் பார்ப்பதற்கு அங்குள்ள பஸ், மெட்ரோ ரயில் போன்ற சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். விடுதிகள் ஓய்வு நாட்களில் இலவசமாக சுற்றிப்பார்க்க அழைத்துச் செல்கின்றனவா என்பதை உறுதி  செய்த பின்னரே நாம் செல்ல வேண்டும். அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்க்கான கூப்பன்கள் மற்றும் தள்ளுபடிகளை தேர்ந்தெடுக்கலாம்.

சுற்றுலாவின் நினைவாக ஒன்றிரண்டு பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். அப்படியே வாங்கி ஆக வேண்டும் என்ற ஆசையிருந்தால், உள்ளூர் மார்க்கெட்டில் வாங்குங்கள். வாங்கும் அதே பொருள் சுற்றுலாத் தலத்தில் இருந்தால் அதன் விலை அதிகமாக இருக்கும்.

சுற்றுலாவை இப்படி திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம் சேமிப்பையும், சந்தோஷத்தையும் அதிகரிக்கலாம். பயணம் என்றாலே மகிழ்ச்சி என்ற அனுபவத்தையும் உணரலாம்.

பழங்குடியாக ஒரு நாள்

கிழக்கு

நாகாலாந்து - யாங் கிராமம்

ழக்கமான சுற்றுலா பெரும்பாலானவர்களுக்கு போரடிக்க தொடங்கிவிட்டது. வித்தியாசமாக எங்காவது போய் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்ற இடம்தான் ´யாங் கிராமம்.


பழங்குடிகளின் கிராமமான இங்கு நாம் தங்கலாம்; அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் கலந்து கொள்ளலாம்; அவர்களுடன் சென்று ஆரஞ்சு மரத்தில் ஆரஞ்சு பழங்களைப் பறிக்கலாம்; நெல் வயல்களில் ஏர் உழலாம்; களை எடுக்கலாம்; காட்டுக்குள் சென்று தேன் எடுக்கலாம்; பசுக்களில் பால் கறக்கலாம்; அடுப்பெரிக்க சுள்ளிகளைப் பொறுக்கி வரலாம். இப்படி அவர்களின் அன்றாட வேலைகளை செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வோடு ஒன்றலாம்.


´யாங் கிராமத்தினர் ஒருகாலத்தில் விலங்குகள் மற்ற பழங்குடி மனிதர்களின் தலையை வேட்டையாடி வருவார்களாம். மிகக் கொடுமையான இந்த வேட்டையில் ஈடுபட்டவர்கள் இன்னமும் அந்த கிராமத்தில் இருக்கிறார்கள். இவர்கள் தங்களை 'கோன்யாக் பழங்குடி' என்று கூறுகிறார்கள். அவர்களை பார்க்கலாம், அவர்களுடன் பேசலாம், ஆனால் அவர்கள் தலைகளை வேட்டையாடியதை மட்டும் தப்பி தவறிகூட கேட்டுவிடக்கூடாது. அது அவர்களை கோப படுத்தும்.

நீங்கள் விரும்பினால் வீட்டுப் பெண்கள் தயாரிக்கும் ரைஸ் பீர் நிகழ்வில் கலந்து கொள்ளலாம். இங்கு உணவுக்காக பயன்படுத்தப்படும் காய்கறிகள்
இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது. சுத்தமான சுகாதாரமான காய்கள் குறைந்த விலைக்கு கிடைக்கிறது.


இங்கு செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு சில நடைமுறைகளை கைடுகள் சொல்லித் தந்து விடுகிறார்கள். அதன்படி நாம் அவர்கள் முன்பு செய்து வந்து தலைகளை வேட்டையாடுவது பற்றி கேட்கக் கூடாது. கிராமத்து டார்மிட்டரியில் ஆண்களும், பெண்களும் கலந்து தங்கும் அவர்களின் பாரம்பரிய வழக்கம் பற்றி விவாதிக்கக்கூடாது.

வித்தியாசமாக மலைக்கிராமத்தில் பழங்குடி வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடம் ´யாங்!

எப்படி போவது?

நாகாலாந்து தலைநகர் கொஹிமாவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் ´யாங்' கிராமம் உள்ளது. வாடகை காரில் 8 மணி நேரம் பயணம் செய்து ´யாங்' சேரலாம். காரைத் தவிர வேறு போக்குவரத்து வசதி இங்கில்லை.

எங்கு தங்குவது?

பழங்குடியினரின் வீடுகளிலே தங்கலாம். வீடுகளின் வசதியைப் பொறுத்து ரூ.1,500 முதல் ரூ.7,000 வரை வீடுகள் உள்ளன. முன்பதிவு கட்டாயம். 
கடற்கரை நகரம்


ஆந்திரப்பிரதேசம் - விசாகப்பட்டணம்

வ்வொரு வருடமும் புயலால் அடித்து நொறுக்கப்படும் ஒரு நகரம்தான் விசாகப்பட்டணம். வருடம் தவறாமல் பெரும் புயல்கள் வந்து இங்கு நலம் விசாரித்துப் போகின்றன. எத்தனை முறை புயல்கள் நகரை துவம்சம் பண்ணினாலும் அதிலிருந்து உடனே மீண்டு விடுகிறது. தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது, இந்த நகரம்.

கைலாசகிரி

விசாகப்பட்டணம் சுற்றுலாவுக்கும் சிறந்த இடம். ஆந்திராவில் இரண்டாவது பெரிய நகரம் இதுதான். மற்ற நகரங்களைவிட அழகான கடற்கரைகளையும், மலைவாசஸ்தலங்களையும் கொண்ட நகரம். அதோடு சுவையான உணவும் கிடைக்கக்கூடிய இடம்.

இங்கிருக்கும் ராமகிருஷ்ணா கடற்கரை நகர எல்லைக்குள் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை. இங்கு உள்ளூர்வாசிகளும் சுற்றுலா பயணிகளும் விருப்பத்தோடு வருகிறார்கள். 'யாரடா' மற்றும் 'கங்காஹம்' கடற்கரைகள் கொஞ்ச தூரத்தில் இருக்கின்றன. கூட்டம் குறைவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இரண்டு கடற்கரைகளும் அற்புதமான பிக்னிக் ஸ்பாட்.


விசாகப்பட்டணம் அருகில் உள்ள 'கொண்டா எரி' நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடம். சுற்றுலாப்பயணிகள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். விசாகப்பட்டணக் கடற்கரைகள் நீந்துவதற்கு ஏற்றதல்ல. ஆபத்தானது. பாதுகாப்பற்றது. வழிகாட்டிகளின் ஆலோசனைப்படி செயல்படுவதே நல்லது. அருகில் உள்ள ஹில் ஸ்டேஷ­னான கைலாசகிரிக்கு சென்று கேபிள் காரில் போவதன் மூலம் நகரின் அழகையும் கடற்கரைகளையும் பறவை பார்வையில் பார்க்கலாம்.

பறவை பார்வையில் விசாகப்பட்டணம் கடற்கரை

விசாகப்பட்டணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் 'பவிகொண்டா' என்ற இடத்தில் பழமையான புத்த வளாகத்தைப் பார்க்கலாம்.

எப்படிப் போவது?

ஹைதராபாத்திலிருந்து 600 கி.மீ. தொலைவில் விசாகப்பட்டணம் உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பெரிய நகரங்கள் பலவும் விசாகப்பட்டணத்துடன் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் இணைந்துள்ளது.

எங்கு தங்குவது?


'தி பார்க் (0891-3045678) ஹோட்டல்' தங்குவதற்கு ஏற்ற இடம். இருவர் ஓர் இரவு தங்கக் கட்டணம் ரூ.9000.
===

வியாழன், ஜனவரி 22, 2015

வளையல் அணிவித்த சிவபெருமான்

       அந்த காலத்தில் தாருக வனம் என்ற ஒரு வனம் இருந்தது. அங்கு ரிஷிபத்தினிகள் நிறைந்திருந்தனர். அவர்கள் கற்பு நிலையில் மேன்மையோடு இருந்தனர். தங்கள் மனைவியரின் கற்பு மீது அசைக்கமுடியாத பெருமை கொண்டிருந்தனர் ரிஷிகள். இந்த ரிஷி பத்தினிகளின் கற்பு நிலையை அளந்துகாட்ட வேண்டும் என்று ஆர்வம் கொண்டார் சிவபெருமான்.

    அதற்காகவே பிட்சாடனர் கோலம் கொண்டார். மன்மதனே வந்து நின்றானோ என்று எண்ணும் அளவுக்கு அவர் மேனி எழில் கொண்டிருந்தது. அவரின் அழகும், திருவுருவமும், பாடும் அமுத கீதமும் கேட்பவரை மதி இழக்க வைத்தது. அழகோ மங்கையர்களை மையல் கொள்ள செய்தது.

    தாருகவனத்தில் நுழைந்த பிட்சாடனரைப் பார்த்து ரிஷிபத்தினிகள் தங்கள் நிலை மறந்தனர். பிச்சையிடுவதற்கு அருகில் வந்த பெண்கள் தவமூர்த்தியின் வசீகரம் கண்டு மதிமயங்கி காதல் கொண்டனர். 

காமத்தால் மோகனச்சிறைப்பட்ட பத்தினிகள் அவரின் பிச்சைப் பாத்திரத்தில் பிச்சையுடன் தங்கள் வளையல்களையும் போட்டுவிட்டனர். நாணம் இழந்து நின்றனர். இடுப்பில் அணிந்திருந்த மேகலையும் நழுவியது. மேலாடைகள் நெகிழ்ந்து அவிழ்ந்தன.

    ஆடைகள் கூட பாரமாக இருந்தது. அதிலிருந்து விடுபட்ட ரிஷிபத்தினிகள் பெருமானை நெருங்கி நின்றனர். இமைக்காமல் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். என்ன அழகு! எத்தனை அழகு…! என்று புகழ்ந்தனர். அனைவரும் கரம் குவித்தனர். திருவடியில் விழுந்து வணங்கினர்.

    “இனி எங்களுக்கு எல்லாமே நீங்கள்தான்…!” என்று மோகத்தோடு கூறினர். அருகே சென்று அவரை ஆவலோடு கட்டித் தழுவ முயன்றனர். இறைவன் அவர்கள் கையில் சிக்காமல் விலகிச் சென்றார்.

    மீண்டும் மீண்டும் பெண்கள் முயல… இறைவன் விலகி விலகியே சென்றார். இறுதியில் தோற்றுப்போன ரிஷிபத்தினிகள், “எங்கள் தவிப்பை தீர்த்து வைப்பீர்கள், என்று பார்த்தால் நீங்கள் எங்களை தழுவாது ஏமாற்றம் தருகிறீர்களே! ஆனாலும் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

 இருந்தாலும் தங்களைப் பார்த்த மாத்திரத்தில் நழுவி விழுந்த மேலாடைகளையாவது எங்களுக்கு உடுத்தி விடுங்கள். கையில் இருந்து கழன்று விழுந்த வளையல்களை எங்கள் கைகளிலாவது இட்டு விடுங்கள். எங்களின் தவிப்பை மேலும் கூட்டாதீர்கள்…!” என்று பரிதாபமாக வேண்டி முறையிட்டனர். 

    இறைவன் சிரித்துக் கொண்டே “எல்லாவற்றையும் நாளை வந்து இடுவோம்!” என்று கூறி மறைந்தார்.
    தாருகவனத்துப் பத்தினிகள் பிச்சைமூர்த்தி கவர்ந்து சென்ற நாணத்தையும் மனத்தையும் மீட்க முடியாமல் தவித்தனர். ஆடைகளும் வளையல்களும் இல்லாமல் நின்றிருந்தனர். வெளியில் சென்றிருந்த ரிஷிகள் தங்கள் இருப்பிடம் திரும்பினர். தங்கள் மனைவியர் நின்றிருந்த அலங்கோல நிலையைக் கண்டு அதிர்ந்தனர். 

என்ன நடந்தது? என்பதை தங்கள் ஞான திருஷ்டியால் உணர்ந்தனர். தங்கள் பத்தினிகளை கவர்ந்து சென்றது இறைவனான சோமசுந்தரப் பெருமானே என்பதை தெரிந்து கொண்டனர்.

    இருந்தாலும், கற்பு நிலையில் தவறிய தங்கள் மனைவியின் செயலை ரிஷிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “பத்தினிகளே! நீங்கள் உங்கள் நிலை மறந்தீர்கள்! மதி மயங்கினீர்கள்! பெண்களின் உயர்ந்த நெறியில் இருந்து தவறினீர்கள்! அதனால் நீங்கள் ரிஷி பத்தினிகள் என்ற உயர்ந்த நிலையில் இருந்து, சாதாரண மனிதர்களாக பிறக்கப் போகிறீர்கள். மதுரை மாநகரில் வாழும் வணிகர் குல மகளிராய்ப் பிறப்பீர்கள்!” என்று சாபம் இட்டனர். 

    ரிஷி பத்தினிகளும் தங்கள் தவறை உணர்ந்தனர். அதற்கு இந்த சாபம் சரியான தண்டனைதான் என்று நினைத்தனர். ஆனால் சாபம் என்று ஒன்றிருந்தால் அதற்கு விமோசனம் என்ற ஒன்றும் இருக்கும்.

    “சுவாமி! அறியாமல் மனதை பறிகொடுத்துவிட்டோம். மதியிழந்துவிட்டோம். இது எங்களின் மாபெரும் தவறுதான். இதற்காக தாங்கள் கொடுத்த சாபத்தை ஏற்கிறோம். ஆனால் இந்த சாபத்தில் இருந்து நாங்கள் விமோசனம் பெறுவது எப்போது?” என்று வேண்டி கேட்டனர்.

    “மதுரை மாநகரத்து இறைவனாகிய சோமசுந்தரப் பெருமான் எப்போது நேரில் வந்து உங்கள் கைகளைத் தொடுகிறாரோ அன்று நீங்கள் சாபம் விலகப் பெருவீர்கள்” என்று கூறினர் ரிஷிகள்.

    ரிஷிபத்தினிகள் அனைவரும் சாபத்தால் மனம் தளர்ந்தார்கள். மதுரை மாநகரில் வணிகர்; குலத்தில் பெண்களாய்ப் பிறந்தனர். வருடங்கள் உருண்டோட வளர்ந்து பருவ வயதை அடைந்தனர். அழகும் இளமையும் பூத்துக் குலுங்கும் மங்கைகளாக திகழ்ந்தனர்.

    அப்போது குல பூஷண பாண்டியன் மதுரையை ஆட்சி செய்துவந்தான். அந்தப் பெண்களின் அழகு மதுரை நகர் முழுவதும் பேசும் பேச்சாக இருந்தது. இந்த மகளிரின் மனம் கவர்ந்து செல்லும் ஆணழகன் யாரோ என்று ஏக்கம் கொண்டனர்.

    எல்லாம் அறிந்த சிவபெருமான் பண்டைய ரிஷி பத்தினியர் பெற்ற சாபத்தை நினைவு கூர்ந்தார். அவர்களுக்கு கருணை காட்ட திருவுளம் கொண்டார். தனது தெய்வீக திருமேனியை மறைத்துக்கொண்டார். சாதாரணமான வளையல் விற்கும் வணிகராக வேடம் புனைந்தார். வணிக மகளிர் ரிஷி பத்தினியாக இருந்த போது அவர்களிடம் இருந்து கவர்ந்து வந்த அதே வளையல்களை மீண்டும் அவர்களிடமே சேர்ப்பது என்று எண்ணம் கொண்டார். அந்த வளையல்களையெல்லாம் ஒரு பட்டுக் கயிற்றில் ஒன்றாக கோர்த்துக் கொண்டார்.

    உலகையே காக்கும் இறைவன் ஒரு சாதாரண வணிகனாக மதுரை வீதிகளில் வலம் வந்தார். வேதம் கூறும் தம் திருவாயில் “வளையல் வாங்கலியோ, வளையல்” என்று உரக்கக் கூறிக் கொண்டே சென்றார்.

    வணிகர் குலப் பெண்கள் இருக்கும் பகுதிக்கு வந்தார். அம்மானை ஆடிக் கொண்டிருந்த பெண்கள் காந்தமாய் ஈர்க்கும் அந்தக் குரலைக் கேட்டு மெய்மறந்து நின்றனர். குரலிலே இத்தனை வசீகரம் என்றால், அவர் உருவம் எவ்வளவு எழில் மிகுந்ததமாக இருக்கும் என்று தாபம் கொண்டனர். வீதிக்கு ஓடிவந்தனர். குரல் வந்த திசையைப் பார்த்தனர். அங்கு வளையல் விற்பவராக சிவபெருமான் வந்து கொண்டிருந்தார். 

மன்மதனையே மிஞ்சும் பேரழகு கொண்டிருந்தார். பருவ மங்கையர் அவர் மீது வைத்த பார்வையை மீட்க முடியாமல் போராடினர். தங்களை அறியாமலே மனம் மோகமுற்று, காதல் வயப்பட்டு, காமம் கொண்டதை தடுக்க முடியவில்லை.

    முதலில் அச்சம் முதலான நான்கு குணங்களும் வந்து மோகத்தை தடைபோட்டு நிறுத்தின. ஆனால் அந்த தடை வெகுநேரம் நிலைக்கவில்லை. பலாவை மொய்க்கும் ஈக்களாக வளையல் வியாபாரியை பெண்கள் மொய்த்தனர். மருதாணி இட்ட கைகளுக்கு வளையல் போட்டுவிடுமாறு கெஞ்சி நின்றனர். தங்களின் மங்கலக் கைகளை அவர் முன்னே நீட்டினர். 

    வணிகப் பெருமானும் தனது திருக்கரத்தால் மங்கையரின் மெல்லிய கைகளை மென்மையாகப் பற்றினார். கரங்களைத் தொட்ட மாத்திரத்தில் காதல் மயக்கம் கொண்டனர் பெண்கள். பற்றிய கைகளை இதமாக இறுக்கி வளையல்களை இட்டால். வலியில்லாமல் வழுக்கியபடி வளையலுக்குள் கை சென்றது. இதுநாள் வரை வளையல் போடுவது வலி மிகுந்த ஒன்றாகவே அந்தப் பெண்களுக்கு இருந்தது.

    இப்போதுதான் வலியில்லாத வளையல் அணிவிப்பை அனுபவித்தனர். மங்கையரின் கைகளைப்பற்றி முகிழ்ப்பித்துப் பலவகையான நல்ல வளையல்களைப் போட்டுவிட்டார். பெருமானின் திருக்கரத்தின் இதமும் மென்மையும் மங்கையருக்குள் காதலைப் பெருக்கிறது.

    வளையல் அணிந்து திரும்பிச் சென்ற மங்கையர் மனம் இழந்தவராக மீண்டும் ஏதாவது ஒரு காரணம் கூறி வணிகரிடம் திரும்பத் திரும்ப வந்தனர். யாருமே அவரை விட்டு அகலவில்லை. விலகிச் செல்லவும் மனமில்லாமல் அருகிலேயே நின்றனர். அவர்களின் மனமும் நெகிழ்ந்தது.

    “வணிகரே! நாங்களும் எவ்வளவோ வளையல்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாங்கள் கொண்டுவந்திருக்கும் வளையல் மட்டும் இதுவரை நாங்கள் பார்க்காததாக இருக்கிறது. இந்த வளையல்கள் எல்லாம் எங்களைப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது. உங்களை விட்டுப்பிரிய எங்களுக்கு மனமில்லை. நாளையும் நீங்கள் வளையல் போட வரவேண்டும். அப்போதுதான் எங்கள் மனம் நிம்மதி பெறும். கொஞ்சம் பொறுங்கள். நாங்கள் வாங்கிய வளையலுக்கான விலையைத் தருகிறோம். பெற்றுக்கொள்ளுங்கள்” என்றனர்.

    வசீகரப்புன்னகை சிந்திய வணிகர் “அதற்கென்ன? நாளை வந்து விலையை வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி மறைந்தார்.

    நகர வீதிகளில் வளையல் விற்ற வணிகரைப் பற்றிய பெருமை மக்கள் மத்தியில் பரவியது. வணிக மங்கையரின் சிந்தை கவர்ந்து சென்றவர் சிவபெருமான்தான் என்பதை உணர்ந்தனர். பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஆனந்தம் கொண்டனர்.

    சிவபெருமானே தனது திருக்கரத்தால் பெண்களின் கரம் தொட்டு வளையல் அணிவித்ததால் வணிககுல மங்கையர்கள் அனைவரும் கர்ப்பம் தரித்தனர். முருகப் பெருமானை போன்ற அழகும் அறிவும் கொண்ட நல்மக்களை பெற்றனர். அவர்கள் அனைவரும் வளர்ந்து வாலிபர்களாகி எல்லோரும் பெருமைப்படும்படியான வீரமும், வெற்றியும் களிப்பும் கொண்டு வாழ்ந்தனர். வணிக மாதர் அனைவரும் சிவபெருமான் திருவருளால் மண்ணில் சில காலம் வாழ்ந்து பின்னர் சிவலோகம் சென்றனர். 

திங்கள், ஜனவரி 19, 2015

காளிதேவிக்கு கட்டளையிட்ட பிராந்தர்

வரை சித்தர் என்றே அந்த ஊர் மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அவருக்கு அவரது தாய், தந்தையர் நாராயணன் என்று பெயரிட்டிருந்தார்கள். ஆனால் யாரும் அந்த பெயர் கொண்டு அவரை அழைக்கவில்லை. அவரது செயல்கள் எல்லாம் புரியாத புதிராக பைத்தியகாரத்தனமாக தெரிந்ததால், அவரை எல்லோரும் பிராந்தர் என்றே அழைத்தார்கள். 'பிராந்தன்' என்றால் கிறுக்கன் என்ற பொருள் சேர நாட்டில் உண்டு.

    பிராந்தன் என்று மக்கள் அவரை அழைக்க நிறைய காரணங்கள் இருந்தன. அவர் யாருடனும் பேசமாட்டார். எப்போதும் தனியாக இருப்பார். திடீரென்று சிரிப்பார். உளறலாக  பேசுவார். காரணம் இல்லாமல் அழுவார். திடுதிடுவென்று ஓடுவார். யாரையும் பொருட்படுத்தாமல் ஆட்டம் ஆடுவார். சட்டென்று சலனம் எதுவும் இல்லாமல் சிலை போல் நிற்பார். இந்த விசித்திர நடவடிக்கைகள் எல்லாம் அவருக்கு பைத்தியம் என்ற பட்டத்தை தேடித்தந்தன.

    ஆனால், மனதுக்குள் அவர் ஒரு சித்தயோகி என்பதை யாருமே புரிந்து கொள்ளவில்லை. தினமும் பகல்பொழுது முடிந்து இரவு தொடங்கிவிட்டால் ஒவ்வொரு வீடாகச் சென்று பிச்சை எடுப்பார். கொஞ்சம் அரிசி கிடைத்ததும், தனக்கு அது போதுமானதாக இருந்தால், உடனே ஊருக்கு மையத்தில் இருக்கும் பொதுக் குளத்துக்கு நடையை கட்டுவார்.

    அந்தக் குளத்துக்கு அருகே வசிக்க வீடின்றி தவிக்கும் அடித்தட்டு மக்கள் ஏராளமான பேர் சமைத்துக் கொண்டிருப்பார்கள். தான் பிச்சையெடுத்த அரிசியை பிராந்தரும் அடுப்பு மூட்டி சமைப்பார். சாதம் தயாரானதும் குளத்துக்கு சென்று ஆனந்தமாக குளிப்பார். திருநீறு கீற்றுகளை நெற்றியிலும் உடலிலும் இட்டுக்கொள்வார். மனம் வலிமை பெற தியானத்தில் அமர்வார். தியானம் முடிந்ததும், தான் சமைத்த உணவை அமிர்தமாக அருந்திவிட்டு அங்கேயே படுத்துக்கொள்வார்.

    பிராந்தர் இருந்த ஊரின் எல்லையில் ஒரு குன்று இருந்தது. தினமும் அந்த குன்றுக்கு செல்வார். குன்றின் அடிவாரத்தில் உருண்டையான கனமான கல்லை உருட்டியபடியே மலை உச்சியை அடைவார். மிகவும் கடினமான செயலான மலை மீது கல்லை கொண்டு போகும் வேலையை தினமும் செய்வார். களைப்பு ஏற்பட்டதும் சிறிது நேரம் ஓவ்வெடுத்துக்கொள்வார். பின்னர் மீண்டும் கல்லை மேலே உருட்டிக் கொண்டே மலை உச்சியை சென்று சேருவார்.

    மலை உச்சிக்கு கல்லை கொண்டு சென்றதும் அந்தக் கல் கீழே உருண்டு விடாதபடி கல்லின் அடியில் நான்கு பக்கமும் சிறு சிறு கற்களை வைத்து பாதுகாப்பாக நிறுத்தி வைப்பார். கல் நகராது, உருண்டு விடாது என்று உறுதி செய்து கொண்டபின் அதன் மீது ஏறி பத்மாசனக் கோலத்தில் அமர்வார். தியானம் செய்வார்.

    மலைக்கு கீழே உள்ள மக்கள் பிராந்தர் செய்யும் செயலை வேடிக்கையாக பார்ப்பார்கள். ஏன் இப்படி தினமும் செய்கிறார்? என்று புரியாமல் தவிப்பார்கள்.

    எந்த ஒரு பலனும் இல்லாத போது எதற்காக இத்தனை கஷ்டப்பட்டு கல்லை மேலே கொண்டு செல்கிறார்? என்று விடை கிடைக்காமல் யோசித்துக் கொண்டிருக்கும் போதே பிராந்தர் அந்தக் கல்லை மலை மேல் இருந்து கீழே உருட்டி விடுவார். அதோடு விட்டு விடாமல் வேகமாக உருண்டு வரும் கல்லோடு சேர்ந்தே ஓடி வருவார். அப்போது கைகளை தட்டிக்கொண்டு ஆவேசமாக சிரித்தபடி கீழே இறங்குவார்.

    வேகமாக வரும் கல் நம் மீது மோதி விடுமோ என்ற பயத்தில் மக்கள் சிதறி ஓடுவார்கள். அடிவாரம் கல் வந்து சேர்ந்ததுமே பிராந்தரும் வந்துவிடுவார்.

    சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்வார். அதற்குள் மாலை நேரம் வந்துவிடும். வழக்கம் போல் பிச்சை எடுப்பார். அந்த அரிசியில் சமைத்து, குளித்தபின் உணவு உண்டு உறக்கம் கொள்வார்.

    மறுநாள் விடிந்ததும் மீண்டும் கல்லை மேலே உருட்டி உருட்டிச் செல்வார். பின் மேலே இருந்து கீழே உருட்டி விடுவார். அதனுடனே ஓடிவருவார். தினமும் நிகழும் இந்த நிகழ்வுக்கு என்ன காரணம் என்று யாராலும் அறிந்து கொள்ள முடியவில்லை.

    இப்படி போய்கொண்டிருந்த போது ஒரு நாள் மாலை பிச்சை எடுத்த அரிசியோடு பிராந்தர் குளத்துக்கரைக்குச் சென்றார். அரிசியை சமைக்கலாம் என்றால் அங்கே யாரும் சமைக்கவில்லை. அடுப்பும் இல்லை.

    யோசித்துக் கொண்டே நின்றார். எப்படியும் சமைத்தாக வேண்டுமே? என்ற எண்ணத்தில் பிராந்தர் நேராக மயானம் சென்றார். மயானத்தில் கற்கள் இருந்தன. அந்த கற்களை அடுப்பு போல் மூன்று பக்கமும் வைத்து சிதறிக் கிடந்த காய்ந்த குச்சிகளை ஒன்று திரட்டி மயானத்தில் மனித உடலை எரித்துக் கொண்டிருக்கும் நெருப்பை எடுத்து சுள்ளிகளில் வைத்து தீப்பற்றச் செய்தார். அதில் உணவை சமைத்தார். சமைத்த உணவை அருந்திவிட்டு, மயானத்திலே படுத்து அயர்ந்து தூங்கிவிட்டார்.

    இருள்மண்டிக் கிடந்த அந்த மயானத்தில் நள்ளிரவு நேரத்தில் காளிதேவி வந்தாள். மயானம் முழுவதும் உலாவந்த காளி அங்கு நித்திரை கொண்டிருந்த பிராந்தரை பார்த்தாள். தன்னை கவனிக்காமல் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த மானிடனை விழித்தெழ செய்ய வேண்டும் என்று நினைத்த காளிதேவி, தனது கால் சலங்கை சத்தம் கேட்கச் செய்வதற்காக பூமியே அதிரும்படி ஓங்கி மிதித்து ஒலி எழுப்பினாள்.

    சலங்கை சத்தம் ‘கணீர், கணீர்’ என்று கேட்டு அந்தப் பகுதியின் நிசப்தத்தை குலைத்தது. ஆனாலும் இந்த சத்தம் எதையும் பிராந்தர் கண்டு கொள்ளவில்லை. பிராந்தர் தொடர்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

    தான் இத்தனை செய்தும் கண்டுகொள்ளாமல் தூங்குபவனை எப்படியாவது எழுப்பியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு காளிதேவி பூமியே இரண்டாகப் பிளக்கும் அளவுக்கு பூமியை உதைத்தாள்.

    அந்த பேரொலியின் ஓசை கேட்டு லேசாக கண் விழித்து பிராந்தர், படுத்த நிலையிலே, “ஏனம்மா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறாய்?, காது செவிடாகும்படி அதிர்ந்து நடக்கிறாய்” என்று பிராந்தர் கேட்டதும், காளிதேவிக்கு தூக்கிவாரிப் போட்டது.

    தனது கொடூரமான உருவத்தைக் கண்டு கூட இந்த பூமியில் பயப்படாத ஒரு மானிடன் இருக்கிறானா என்று பிரம்மித்தவளாய் “ஏய்! யார் நீ?” என்று அதட்டிக்கேட்டாள்.

    “நானா….! என்னையா யாரென்று கேட்கிறாய்? 'நான்' யார்...?! என்பதை தெரிந்து கொள்ளத்தானே இன்று வரை முயல்கிறேன். எனக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனக்கே விடை தெரியாத போது நான் எப்படி உனக்கு சொல்வேன். அப்படிச் சொன்னாலும் உனக்குப் புரியுமா?"

    “நான் காளிதேவி என்பதாவது உனக்குத் தெரியுமா?"

 “அது தெரியுமே! கோபமும் ஆவேசமும் கொண்ட இந்த முகமும், கனல் பறக்கும் இந்த கண்களும், கறுப்பான நிறமும், கோரமான பற்களும் படபடவென்று கொட்டும் வார்த்தைகளும் நீ காளிதேவிதான் என்பதை காட்டுகிறது. இதை நீ வாய்திறந்து வேறு சொல்ல வேண்டுமா...?” என்று கேட்டார்.

    எந்தவொரு சலனமும் இல்லாமல் இப்படி தெளிவாக பதில் சொல்லும் இந்த மானிடன் சாதாரண மானிடனல்ல. இவன் ஒரு சித்தனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் காளிதேவி.

    அஞ்சாமையும் தெளிவும் இப்பதைக் கண்டு பரவசப்பட்ட காளிதேவி தனது கொடூரமான உருவத்தை மறைத்து அழகு திருமேனியோடு தேவதைப்போல் தோன்றினாள்.

    “சித்தரே! எனது தரிசனம் பெற்றவர்கள் நிறையப் பலனைப் பெறுவார்கள். நீங்களும் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்” என்று காளிதேவி கூறினாள்.

    “அம்மா தேவியே! என்னுடைய வலது காலில் வெகு நாட்களாக யானைக்கால் நோய் இருந்து வாட்டிக் கொண்டிருக்கிறது. அந்த நோயை வீக்கத்தை எனது இடது காலுக்கு மாற்றித்தர முடியுமா?" என்று கேட்டார் பிரந்தார்.

    “என்ன சித்த புருஷரே! எல்லோரும் இருக்கும் நோய் தன்னைவிட்டு நீங்க வேண்டும் என்றுதான் இறைவனிடம் வரம் கேட்பார்கள். நீங்கள் என்னவென்றால் வலது காலில் உள்ள நோயை இடது காலுக்கு மாற்றச் சொல்லி கேட்கிறீர்களே! வேண்டுமானால் சொல்லுங்கள் உங்கள் இரண்டு காலையும் ஆரோக்கியமான காலாக சரிசெய்து விடுகிறேன்” என்றாள் காளிதேவி.

    “தேவி இந்த நோய் எப்படி வந்தது என்று உனக்கு தெரியாதா?”

    “தெரியும். உத்தமான உன்னதமான ஒரு ஞானியை நீ போன பிறவியில் உன் வலது காலால் உதைத்துவிட்டாய். அதனால்தான் இந்தப்பிறவியில் உனக்கு யானைக்கால் வந்திருக்கிறது” என்றாள்.

    “தாயே! பிறவி என்பதே பாவத்தை அனுபவிக்கத்தானே. அதனால்தான் நான் போன பிறவியில் செய்த பாவத்தை அனுபவிக்காவிட்டால், இதற்காக நான் இன்னமொரு பிறவி எடுத்தாக வேண்டும். அந்த பாவத்தை உன்னால் அழித்துவிட முடியும் என்றால், என் இரு கால்களையும் சரிசெய்துவிடு” என்று பிராந்தர் காளிதேவியிடம் கேட்டார்.

    “அது என்னால் மட்டுமல்ல யாராலும் முடியாது? மகனே...! செய்த பாவத்துக்கு பலனை அனுபவிப்பதுதான் பிறவியின் பயன். அதனால் நீ வேறு ஏதேனும் வரம் கேள்."

    “தேவியே, தூணைச் சிறு துரும்பாகவும், துரும்பை பெரும் தூணாகவும் மாற்ற என்னால் முடியும். ஆனால் நான் எனது பாவவினையை அனுபவிக்கவே விரும்புகிறேன். ஆனாலும் பிறவியிலே உயர்ந்த பிறவியாகிய மனிதப் பிறவியைப் பெற்ற மனிதர்கள் அனைவரும் நினைவாலும் நடத்தையாலும் விலங்கைவிட கீழான நிலையிலேயே இருக்கிறார்கள். அதை மாற்ற முடியவில்லை."

    “பிராந்தரே, அவர்களை மாற்ற வேண்டும். மேம்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் அவ்வப்போது உங்களைப் போன்ற ஞானிகள் படைக்கப்படுகிறார்கள். நீங்கள்தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

    “ஏறுவது மிகமிகக் கடினம். இறங்குவது வெகு சுலபம். இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காககத்தான் தினமும் பெரிய கல்லை சிரமப்பட்டு மலைமேல் ஏற்றிக் காட்டுகிறேன். பின்பு அதை கீழே உருட்டி விடுகிறேன். கீழே வரும் கல்லைக் கண்டு எல்லோரும் பயந்து ஓடினார்களே தவிர, யாரும் 'ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று என்னிடம் கேட்பதில்லை. அவரவர் விதிப்படி அவரவர்கள் மதியும் இயங்குகிறது. புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே அவர்கள் அறிவு நல்வழியில் செல்லும். இல்லையென்றால் மோசமான பாதையை பின் தொடர்ந்து செல்லும். சரி தாயே! நீ இப்படி கோலத்தில் இருப்பது பார்ப்பவர்களை திகைப்படையச் செய்யும். போய் ஒரு ஓரமாக மறைவாக நீ சென்று நடமாடு” என்று பிராந்தர் கூற காளிதேவியும் மறைந்து விடுகிறாள்.

 பிராந்தர் பல்வேறு இடங்களுக்கும் காடுமலையெல்லாம் சுற்றித்திரிந்து தவயோகம் செய்து சமாதி நிலையடைந்தார். இவரின் செயல்கள் யாருக்கும் புரியாத காரணத்தாலே இவரை பிராந்தர் என்றே சித்தர் இலக்கியமும் கூறுகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...