செவ்வாய், மார்ச் 31, 2015

உயிர் எங்கே..? பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பு

ம் காதல் காவியங்களில் எல்லாம் காதலன் காதலியிடம் நீதான் என் உயிர் என்பான். மாயஜால கதைகளில் ஏழு கடல், ஏழு மலை கடந்து தனது உயிரை கூண்டில் இருக்கும் கிளியின் உடலில் அரக்கன் வைத்திருப்பான்.

உண்மையில் உயிர் அத்தனை எளிதானதா? நினைத்த இடத்தில் நினைத்த மாதிரி வைத்துகொள்ள முடியுமா?

உயிர் என்பது மற்றவர்கள் வைத்துக்கொள்ளும் பொருள் அல்ல. உயிர் தொட்டுப்பார்க்க கூடிய விஷயமும் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த உயிர் நம் உடலில் எங்கிருக்கிறது? மற்ற உயிரினங்களிடம் எங்கிருக்கிறது? என்பது சிதம்பர ரகசியம் போல் விஞ்ஞானத்துக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தது.

சுவாசிப்பதும், இதயத் துடிப்பும்தான் உயிர் என்றால் அது தவறு. அவைகளெல்லாம் வெறும் செயல்பாடுகள் தானே தவிர உயிர் இல்லை. இதயமும் நுரையீரலும் கூட சுற்றும் பம்பரம் போல்தான். சுற்ற வைப்பது எது? இதுதான் உயிர் என்று யாரும் கண்டு சொல்லவில்லை.

இதயமும் நுரையீரலும் தான் உயிர் என்றல் கனடா நாட்டில் 230 பாரன்ஹீட் வெப்பத்தில் வென்னீர் ஊற்றுகளில் வாழும் பாக்டீரியாக்களுக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் என்று எதுவும் இல்லை என சூடம் அணைத்து சத்தியம் செய்கிறார்கள்.

உயிர் இந்த இடத்தில்தான் இருக்கிறது என்று சொல்லக்கூடிய பொருள் இல்லை. எனவேதான் அறிவியல் அது எங்கிருக்கிறது என்று துருவித்துருவி தேடத் தொடங்கியது. கடைசியாக உயிரின் ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டார்கள்.


இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு இதுதான். உயிர் என்பது நமது உடலில் இருக்கும் செல்களில்தான் ஒளிந்திருக்கிறது. உடலில் மொத்தம் 10 கோடி செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லின் மையத்தில் இருக்கும் உட்கரு என்கிற நீயூக்ளியசில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.

இந்த குரோமோசோம்களில் டி.என்.ஏ. என்று சொல்லக்கூடிய ஆக்ஸ்ரிபோ நீயூக்ளிக் அமிலம் என்ற ஏணி வடிவ பொருள் உள்ளது. இந்த டி.என்.ஏ.-வை விரித்தால் 5 அடி நீளம் நீளும். இதுதான் நமது உயிரின் ஆதாரம். இதில்தான் ஜீன்கள் உள்ளன.

ஜீன்கள்தான் நாம் கருவாக உருவாகும்போது நமது பெற்றோர்களின் உடல் அமைப்பு, குணங்கள், பரம்பரை நோய்கள் ஆகியவற்றை கொண்டு வந்து நம்மிடம் சேர்கின்றன. நமது உயிரின் ரகசியமே ஜீன்களில்தான் உள்ளது என்பதை அறிவியல் கண்டுபிடித்துவிட்டது.

'கியூமன் ஜீனோம்' என்ற விதிப்படி மனிதன் மற்றும் ஜீவராசிகளின் ஜீன்களில் உள்ளே என்ன பதியப்பட்டிருக்கிறது என்பதை தனித்தனி வகையாகப் பிரித்து தேடிக் கொண்டிருக்கிறது விஞ்ஞானம்.

இன்னும் 50 ஆண்டுகளில் ஜீன்கள் பற்றிய விவரம் முழுவதும் மனிதன் கைக்கு வந்துவிடும். அப்போது உயிரை செயற்கையாகக் கூட உருவாக்கிவிடுவான்.

எனவே நமது உயிர் நமது செல்களில் உள்ள ஜீன்களில்தான் இருக்கிறது. கடந்த ஆயிரம் ஆண்டில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இதுதான்.

அதனால் சிகரெட், மது போன்ற செல்களை பாழ்படுத்தும் பழக்கங்களை
விட்டொளிப்பதுதான் நம் உயிருக்கு நாம் செய்யும் மரியாதை..!


ஞாயிறு, மார்ச் 29, 2015

ஆணுக்கு தெரியாமல் பெண் பேசிய ரகசிய மொழி

லகில் வித்தியாசமான நாடு என்றால் அது சீனாதான். நம்மை வியக்க வைக்கும் பல்வேறு தகவல்களை சரித்திரம் முழுவதும் தனக்குள்  வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த 'பெண்ணின் மொழி'.

மனித நாகரிக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்களை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெண்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். இதை புரிந்து கொண்ட பெண்கள் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண்கள் போல் நடிக்கத் தொடங்கினார்கள்.

நுஷு எழுத்துக்கள்
 சீனப் பெண்கள் ஒருபடி மேலே போய் தங்களுக்கு எழுதப் படிக்கக் கூட  தெரியாது என்பது போல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல. பல நூற்றாண்டுகள் இந்த நடிப்பு தொடர்ந்தது. அப்போது பெண்கள் தங்களுக்கு என்று தனி எழுத்து வடிவம் பயன்படுத்த தொடங்கினார்கள்.

பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள். நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று அர்த்தம்.

தங்கள் பெண்கள் இப்படி எழுத்துரு கொண்ட மொழியை பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்பதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் சொன்னார்கள் பெண்களால் ரகசியத்தை காப்பாற்றமுடியாது என்று.


சீன மொழி எழுத்துக்கள் பெரிதாகவும் கம்பீரமாகவும் இருக்கும். 'நுஷு' எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடு கிறுக்கியது போல் இருக்கும். ஓவியங்களிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம். பார்டர் போல் எழுத்துக்களை பயன்படுத்தி தகவலை சொல்லிவிடுவார்கள்.

விசிறியில் நுஷு எழுத்துக்கள்
பெண்கள் ஆண்களின் கண்ணில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போன பெண்கள் அங்கு தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாக தெரிவித்தார்கள்.

ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும் பேத்திக்கும் கற்று தந்து வழிவழியாக காப்பாற்றி வந்தார்கள். பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களை கூசாமல் பேசிய மொழி இது.  

தற்போது நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை என்பது வேதனையான ஒன்று.  யாங் ஹுஅன்ய் என்ற 98 வயது பெண் 2004-ம் ஆண்டு இறந்த போது நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழி தெரிந்த கடைசி பெண்.

பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட திகட்ட சொன்ன ஒரு மொழி இன்று உயிர்ப்போடு இல்லை. நூற்றாண்டுகள் கடந்து  ரகசியமாக வளர்ந்த மொழியை இப்படி சாக விட்டுவிட முடியுமா..! அதற்காகத்தான் சீன அரசு நுஷு மொழியை பாரம்பரிய மொழியாக அறிவித்து அதற்காக ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.

ஏகப்பட்ட கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் இருக்கும் இன்றைய பெண்கள் கூட இப்படி ஒன்றை உருவாக்கமுடியுமா என்பது சந்தேகமே! அதனால் தான் சீன ஒரு வித்தியாசமான நாடு.மஹாராஜாவாக வாழுங்கள்

ங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்துவதற்கு முன்பு சக்கரவர்த்திகளும் மஹாராஜாக்களும்தான் நம்மை ஆண்டார்கள். எதிரிகள், சூழ்ச்சி, யுத்தம் என்று பாதகமான அம்சங்கள் நிறைய இருந்தாலும்.... ராஜாக்கள் வாழ்வே தனிதான். டாம்பீகமும், படோடபமும் நிறைந்த அந்த வாழ்வை சாதாரண மனிதர்கள் உணர்ந்து கொள்ளவே முடியாது. அதை உணரச் செய்வதுதான் மஹாராஜா எக்ஸ்பிரஸின் நோக்கம். எட்டு நாட்கள் சுற்றுலாவில் உங்களை பாரம்பரியம் மிக்க ராஜாவின் வாழ்க்கையை நிஜத்தில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

இதுதான் மஹாராஜா எக்ஸ்பிரஸ்
2010-ல் 'இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரே­ஷனும்', 'காக்ஸ் அண்ட் கிங்ஸ் இந்தியா'வும் இணைந்து மேற்கொண்டதே இந்த 'மஹாராஜா எக்ஸ்பிரஸ்' சுற்றுலா. இன்றைக்கு இது உலகிலேயே மிக உயர்ந்த ஆடம்பர ரயில் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. ரயிலில் 'பிரஸிடென்ஷியல் சூட்' என்ற ஸ்டார் ஹோட்டல் சமாச்சாரங்களையெல்லாம் கொண்டு வந்தது இதில்தான்.

இந்த எக்ஸ்பிரஸில் மொத்தம் 23 கேரேஜ் இருக்கும். அதில் சுற்றுலா பயணிகளாக வரும் மஹாராஜாக்கள் தங்குவதற்கென்று 14 கேரேஜூக்கள் இருக்கின்றன. சாதாரணமாக 23 பெட்டிகள் கொண்ட ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டிக்கு 72 பேர் என்ற விகிதத்தில் 1,656 பேர் பயணிக்க முடியும். ஆனால் இந்த எக்ஸ்பிரசில் வெறும் 88 பேர் மட்டுமே பயணிக்கிறார்கள்.

இந்த 88 பேரிடம் 1656 பயணிகளின் கட்டணத்தையும் வசூலித்து விடுகிறார்கள். இப்போது புரிகிறதா இதன் பயணக்கட்டணம் ஏன் காஸ்ட்லியாக இருக்கிறது என்று. பிரஸிடென்ஷியல் சூட் டுக்காகவே தனியாக ஒரு கேரேஜ் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோக டைனிங், பார், லாஞ்ச், ஜெனரேட்டர், ஸ்டோர், தண்ணீரை சுத்திகரிக்கும் நிலையம் என்று பலவும் மற்ற கேரேஜ்களில் அமைக்கப்பட்டுள்ளன.

சிவப்பு கம்பள வரவேற்பு, பிளாட்பாரத்தில் தெரிகிறதா..!
பயணிகள் தங்கும் 14 கேரேஜிலும் 43 தனித்தனி கேபின்கள் உள்ளன. இதில்தான் 88 விருந்தினர்கள் தங்குகிறார்கள். பைவ் ஸ்டார் ஹோட்டலில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ அத்தனையும் இந்த நகரும் அரண்மனையில் உள்ளது.

'மயூர் மஹால்'
இருக்கைகள், படுக்கைகள், எல்லாமே அரண்மனை வடிவத்திலே அமைந்துள்ளன. இந்தப் பயணத்தின் மூலம் இந்திய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும். பழங்கால கோட்டைகள், அரண்மனைகள் பற்றிய விவரங்கள் வழிகாட்டிகள் மூலம் தெளிவாக அறியலாம். யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதிகளை அதிகம் கொண்ட சுற்றுலா திட்டம் இது. வனவிலங்குகளை ரசிக்க நே­னல் பார்க்குகளும் உள்ளன. உள்ளூர் கலைஞர்களின் நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியும், இந்தியர்களின் சிறப்பு அம்சமான விருந்தோம்பலும் இந்த பயணத்தின் சிறப்பு.

இவையெல்லாம் ராஜாக்கள் காலத்து பழக்க வழக்கங்களாகவே உள்ளனவே. நவீன வசதிகள் இல்லையா? என்று கேட்பவர்களுக்கு...ஏன் இல்லை? என்ற பதிலைத்தான் மஹாராஜா எக்ஸ்பிரஸ் தருகிறது. உடைமாற்ற தாராளமான இடம், ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஏற்றபடி ஏஸியை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி, 24 மணி நேர மருத்துவ வசதி, இலவச வை-ஃபை, இன்டர்நெட் இணைப்பு, எலெக்ட்ரானிக் ஸ்மோக் டிடெக்ஷ­ன் சிஸ்டம், லைவ் டெலிவிஷ­ன், சிசிடிவி கேமரா, டைரக்ட் இண்டர்நே­னல் டயல் டெலிபோன், அட்டாச்டு பாத்ரூம், அவசர உதவிக்கு ஹெலிகாப்டர், ஆம்புலன்ஸ் வசதி போன்ற எல்லாமே இதில் இருக்கிறது. மஹாராஜாவில் ஏறியது முதல் பயணம் முடிந்து இறங்கும் வரை சுற்றுலாப்பயணிகளை தலைமேல் வைத்து தாங்குகிறார்கள் இதன் பொறுப்பாளர்கள்.

ஓடும் ரயிலில் அரட்டை
இந்த எக்ஸ்பிரஸில் இரண்டு டைனிங் கேரேஜ்கள் உண்டு. ஒன்றின் பெயர் 'ரங் மஹால்'. அதாவது வண்ணங்களின் அரண்மனை, மற்றொன்று 'மயூர் மஹால்'. அதாவது மயில் அரண்மனை. இங்கு உணவும் ராஜ மரியாதையோடு பரிமாறப்படுகிறது. இந்த ரயிலில் சாகஸத்திற்கும், சீரிய பண்புகளுக்கும், காதலுக்கும் இடமுண்டு. தேனிலவு தம்பதிகளுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தரும் சுற்றுலா இது.

உணவகம்
மஹாராஜா எக்ஸ்பிரஸ் 5 வகையான சுற்றுலாக்களை நடத்துகிறது. அதில் முதன்மையானது ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா! 8 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா மும்பையில் தொடங்கி அஜந்தா, உதய்பூர், ஜோத்பூர், பிகானீர், ஜெய்பூர், ரத்தம்பூர், ஆக்ரா வழியாக டெல்லியில் முடிகிறது.

ஒவ்வொரு ரூமுக்குமான வரவேற்பு அறை
அஜந்தா குகை, ராஜஸ்தான் அரண்மனைகள், கோட்டைகள், தாஜ்மஹால், யானைகளின் போலோ விளையாட்டு, சைட் ஸீயிங் டூர், ஸ்பா போன்றவையும் இதில் உள்ளன. மொத்தத்தில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தையும், எட்டு நாட்கள் மஹாராஜா வாழ்க்கையையும் தரும் சுற்றுலா இது. வாழ்நாளில் ஒருமுறையாவது போய்வர வேண்டிய சுற்றுலா இது.

----------------------------------------------------------------------------------------------------------------
'ஹெரிடேஜ் ஆப் இந்தியா' என்ற இந்த எட்டு நாட்கள் சுற்றுலாவுக்கான கட்டணங்கள் கீழே தந்துள்ளேன்.
மொத்தம் நான்கு வகையான கட்டணங்கள் உண்டு.
-----------------------------------------------------------------------------------------------------------------
டீலக்ஸ் கேபின்
 ரூ.2,00,138 (10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கட்டணம்.
 இதுவே பெரிவவர்களுக்கு ரூ.4,60,276.

ஜூனியர் சூட்
ரூ.2,89,674 (குழந்தைகளுக்கு)
ரூ. 5,78,762. (பெரியவர்களுக்கு)

சூட்
 ரூ.4,03,788 (குழந்தைகளுக்கு)
ரூ.8,07,576 (பெரியவர்களுக்கு)

பிரசிடென்ஸியல்  சூட்
ரூ.6,96,388 (குழந்தைகளுக்கு)
ரூ.13,86,924. (பெரியவர்களுக்கு)
------------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளி, மார்ச் 27, 2015

திருவள்ளுவர் பிறந்த மண்ணில் ஒரு பயணம்

ன்னியாகுமரி என்றதுமே முக்கடலும் கடலுக்குள் உயர்ந்து நிற்கும்  திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும்தான்  நினைவில் வந்து போகும். படகுத் துறையில் இருந்து திருவள்ளுவர் சிலையைப் பார்க்கும்போது அதன் பிரமாண்டமும் கடலின் மத்தியில் எழுந்து நிற்கும் அழகும் நமக்குள் இனம்புரியா ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். இவ்வளவு பெரிய சிலையை இங்கு வைக்க என்ன காரணம் என்ற கேள்வியும் மனதில் எழும்.

படகு துறையிலிருந்து திருவள்ளுவர் சிலை 
திருவள்ளுவர் என்ற உடனே வரலாற்று ஆய்வாளரும் 'ஆய்வுக் களஞ்சியம்' மாத இதழ் ஆசிரியருமான டாக்டர் எஸ். பத்மநாபன் என் நினைவில் வந்து நின்றார். திருவள்ளுவர் குறித்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் அவர். வள்ளுவரைக் குறித்து கேட்டதுமே "வாங்க வள்ளுவர் பிறந்த ஊரைப் பார்த்து வருவோம்'' என்று அவரது ஸ்கார்பியோவில் அழைத்துச் சென்றார்.

கரை கண்டேஸ்வரர் ஆலயம்
கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் முட்டம் கடற்கரையில் இருந்து  5 கி.மீ. தொலைவிலும் அந்தக் கிராமம் இருந்தது. அதன் பெயர் திருநாயனார்குறிச்சி. எளிமையான கிராமம், மற்ற கிராமங்களைப் போலவே நவீன வடிவம் பூண்டிருந்தது.  அங்கிருக்கும் கரை கண்டேஸ்வரர் ஆலயம் முன் எங்களது கார் நின்றது.

"இதுதான் திருவள்ளுவர் பிறந்த ஊர்" என்றார்.

வள்ளுவர் பிறந்த அந்த புனிதமான மண்ணில் கால் பதிக்கிறோம். மனதுக்குள் ஏதோ ஒரு சிலிர்ப்பு முழுவதுமாக ஆட்கொள்கிறது. பின் காலாற கிராமத்து தெருக்களில் நடந்தோம். பசுமை பூத்துக் குலுங்கும் வயல்களுக்குள் உலாவினோம். மனம் முழுவதும்  வள்ளுவர் பற்றிய பெருமிதம் தொற்றிக் கொண்டிருந்த நேரம்.  அதே வேளை என் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியையும் பத்மநாபன் சாரிடம் நேரடியாகவே கேட்டேன்.

பளிங்கினால் ஆனா யானை சிற்பம் - விவேகனத்தர் பாறை 
"வள்ளுவர் இங்குதான் பிறந்தார்! என்பதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? '' என்று கேட்டேன்.

"நிறைய ஆதாரங்கள் இருந்ததால்தான் மூன்று முதல்வர்களிடம் இதைப்பற்றி என்னால் பேசமுடிந்தது.  எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூன்று பேரிடமும் எனது ஆய்வு குறித்து பேசியிருக்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளாக திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறேன். எனது ஆய்வுகளில் தலைசிறந்தது என்றால் அது 'திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்'  என்ற எனது கண்டுபிடிப்புதான். இதை 1989 டிசம்பர் மாதம் மொரீஷியஸ் தீவில் நடைபெற்ற ஏழாவது அனைத்துலக தமிழ் மாநாட்டில் பேசினேன்.  பின் அதையே புத்தகமாக வெளியிட்டேன். அதை அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் வெளியிட்டார்.

மைலாப்பூர்தான் திருவள்ளுவர் பிறந்த இடம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வள்ளுவருக்காக வள்ளுவர் கோட்டம் அமைத்த கலைஞருக்கு இதை நம்புவது கடினமாக இருந்தது.  ஆதாரங்களோடு நான் எழுதிய தகவல்களை அவரால் மறுக்க முடியவில்லை. அதன் மூலம் வள்ளுவர் பற்றிய பொய்யான பல கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.  அதன்படி திருவள்ளுவர் வள்ளுநாட்டை ஆண்ட மன்னர், வள்ளுவ நாட்டின் ஒரு பகுதியான முட்டத்தை அடுத்துள்ள திருநாயனார்குறிச்சியில் பிறந்து, மதுரையில் சில காலம்  தங்கி, மயிலாப்பூர் சென்று மறைந்தார். இதற்கான ஆதாரங்கள் திருக்குறளிலேயே எனக்கு கிடைத்தன.

கிட்டத்தட்ட திருக்குறளில் 50-க்கும் மேற்பட்ட சொற்கள் இந்தப் பகுதியில் மட்டுமே பேசப்படும் தனிச் சொற்கள் உள்ளன. 'இன்னைக்கு ஒரே மடியா இருக்கு' என்பது சாதாரண பேச்சு மொழி. மடி என்றால் சோம்பல். திருவள்ளுவர் மடியின்மை என்று ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். தமிழகத்தில் வேறெங்குமே சோம்பலை மடி என்று சொல்வதில்லை. இங்கு அது சாதாரண பேச்சுத் தமிழ்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கரைபுரண்டு ஓடும் நீரை மட்டுமே வெள்ளம் என்று சொல்லுவார்கள். குமரி மாவட்டத்தில் மட்டும்தான்  கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர் போன்றவற்றையும் வெள்ளம் என்பார்கள். இதை வள்ளுவர் 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு '  என்று குறிப்பிடுகிறார். இந்த மண்ணில்தான் தாமரை பூத்த தடாகங்கள் அதிகம். குடிக்க வெள்ளம் வேண்டும் என்பது இங்கு பேச்சு வழக்கில் உள்ளது.  மற்ற இடங்களில் இப்படி பேசினால் சிரிப்பார்கள்.  குமரி மாவட்டத்தில் வெள்ளம் என்றால் தண்ணீர் என்று பொருள். இதனை அப்படியே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.

அதேபோல் எழுவாய் உயர்தினையாக இருந்தாலும், பயனிலை அஃறிணையாகக் கூறுவது இந்த மக்களின் வழக்கம்.' அப்பா வரும்', 'அம்மா பேசும்', 'மாமா முடிக்கும்' இப்படி பல. இதை  அப்படியே திருக்குறளில் பயன்படுத்துகிறார் வள்ளுவர். 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன் கண்விடல்'  இந்த குறளில், இதனை இவன் முடிப்பவன்  என்று கூறாமல் முடிக்கும் என்று கூறுவது, குமரித் தமிழ் இங்கு பேசுகின்றது.

அதேபோல் உணக்கின் என்ற வார்த்தையும், ஒரு பங்கு மண், கால் பங்கு ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி  உரம் கூட தேவையில்லாமல் அந்த நிலத்தில் பயிர் செய்யலாம் என்பதை வள்ளுவர் 'நொடி புழுதி கஃசா  உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்' என்று குறிப்பிடுகிறார். இதில் உணக்கின் (காய வைத்தல்) என்ற வார்த்தையை குமரி மாவட்டத்தில் மட்டுமே மக்கள் பேசுகின்றனர்.

மீன்கள் மிணு மிணுப்பிற்கு மயங்கும் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு. முட்டம், கடியப்பட்டினம் மீனவர்கள் தூண்டிலில் ஜரிகையை இணைத்து மீன் பிடிப்பதில் வல்லவர்கள். இப்படி தூண்டிலில் பொன் இழையை வைத்து மீன் பிடிக்கும் வழக்கத்தை 'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்ற தூஉம், தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று' என்று குறிப்பிடுகிறார். இத்தகைய  தூண்டில் முறை திருவள்ளுவர் பிறந்த திருநாயனார் குறிச்சிக்கு அருகில் மட்டும்தான் உள்ளது. வேறு எங்கும் இல்லை. இந்த ஊரின் பழைய பெயர்தான் கடியப்பட்டினம்.

இவற்றையெல்லாம்விட ஓர் அரிய சான்றினை கூறுகிறேன்.  இதுதான் திருவள்ளுவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதற்கு மிக அரிதான சான்று. 'வரைவின் மகளிர்' என்ற தலைப்பில் விலைமகள்களைப் பற்றி கூறுகிறார்.  'பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில், ஏதில் பிணைந்தழீ இயற்று' என்பது அந்தக்குறள்.

வாடிக்கையாளர்களை மிகவும் அன்போடு தழுவுவதாக நடிக்கும் ஒரு விலைமகளின் செயல் இருட்டறையில் முன்பின் தெரியாத ஒருவரின் பிணத்தைத் தழுவுவது போலாகும் என்று கூறுகிறார். பிணம் தழுவுதல் என்பது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்தது. திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அனுப்புவார்கள். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தை தழுவி வரவேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்கள். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கூலிக்காக முன் பின் தெரியாத பெண்ணின் பிணத்தை தழுவிய இளைஞனையும், பணத்திற்காக எந்த உடலையும் தழுவும் விலைமகளையும் வள்ளுவர் ஒப்பிட்டுக் கூறுகிறார். மலை நாட்டிலுள்ள பிணம் தழுவும் வழக்கத்தை வள்ளுவர் தமது நூலிலே குறிப்பிட்டிருப்பது அவர் குமரி மண்ணிலே பிறந்தவர் என்பதற்கான அசைக்க முடியாத சாட்சி'' என்றார் உறுதியான குரலில் பத்மநாபன்.

 வள்ளுவன் கல் பொற்றை
திருநாயனார் குறிச்சியை வலம் வந்த நாங்கள் அடுத்து சென்றது, வள்ளுவன் கல் பொற்றை என்ற இடத்திற்கு.எங்களுடன் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், டாக்டர் சிதம்பரநாதன் ஆகியோரும் சேர்ந்து கொண்டார்கள். இந்த இடத்திற்கும் திருவள்ளுவருக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது.  தடிக்காரங்கோணம்  அருகே உள்ள கூவைக்காடு என்ற இடத்தில்தான் இந்த மலை இருக்கிறது. இது அந்த காலத்திய ஊட்டி, கொடைக்கானல் போல் குளுமையாக இருந்திருக்க வேண்டும்.  இந்த மலையில்தான் திருவள்ளுவரும், அவர் மனைவியும் ஓய்வெடுக்க வருவார்கள். தேனும் தினைமாவும் விரும்பி உண்பார்கள். அப்படி அவர் தங்கி இளைப்பாறிய இடம்தான் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

வள்ளுவன் கல் பொற்றையில் டாக்டர் பத்மநாபன், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், டாக்டர் சிதம்பரநாதன் ஆகியோருடன் நான்
சிறிய மலையின் மீது ஏறிய எங்கள் கார் ஒரு இடத்தில் நின்றது. எங்களுக்கு எதிரில் கருமை நிறத்தில் பெரிய பாறை ஒன்று சிறு குன்று போல் இருந்தது. "அதுதான் வள்ளுவன் கல்பொற்றை''  என்றார் பத்மநாபன். அதன் உச்சியில் பொறிக்கப்பட்டுள்ள பாதம் 'வள்ளுவர் பாதம்' என்று அழைக்கிறார்கள் இங்குள்ள பழங்குடிமக்கள்.

டாக்டர் பத்மநாபன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தும், அதன்பின் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கும் போதும் திருவள்ளுவரைப்பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வந்திருக்கிறார். திருவள்ளுவர் சிலை இங்கு வருவதற்கான காரணத்தை ஆதாரத்தோடு சொல்லி முடித்தார்.

திருவள்ளுவர் பிறந்த ஊரான திருநாயனார் குறிச்சியும், அவர் மலைவாழ் மக்களோடு ஓய்வெடுத்த வள்ளுவன் கல் பொற்றை இரண்டு இடங்களையும் பத்மநாபன் சாரின் துணையோடு பார்த்தப்பின் எனது பயணம் கன்னியாகுமரியை நோக்கி நகர்ந்தது.

விவேகானந்தர் பாறை
கன்னியாகுமரி என்றதுமே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது விவேகானந்தர் பாறை.  இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சிறிய பாறைத் தீவில் விவேகானந்தர் பாறை அமைக்கப்பட்டுள்ளது.  1892-ல் சுவாமி விவேகானந்தர் இங்கு நீந்தி வந்து தவம் புரிந்திருக்கிறார் என்றும்,  அதன் நினைவாகவே விவேகானந்தர் பாறை உருவாகியுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

மிகப் பெரிய தேசிய சின்னமாக விளங்கும் விவேகானந்தர் பாறை ஏக்நாத் ரானடே என்ற தனி மனிதரின் தன்னிகரில்லா உழைப்பின் வெளிப்பாடு.  முதலில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலை நடைபெறும் போதே பிரச்சினை கிளம்பியது. கிறிஸ்துவ மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட குமரியில் புனித சவேரியருக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்பது அவர்களின் ஆசை. அதற்காக மிகப் பெரிய சிலுவை ஒன்றைக் கொண்டு போய் அங்கு  வைத்தார்கள். விஷயம் கோர்ட்டுக்குப் போனது. அதில் இந்தப் பாறை விவேகானந்தர்  பாறைதான் என்று தீர்ப்பு வந்தது.  இரவோடு இரவாக சிலுவையை எடுத்துச் சென்றனர். அதே வேளையில் கலவர சூழ்நிலை உருவானது. அதன்பின் பாறை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு யாரும் நுழை முடியாதபடி பாதுகாப்பு போடப்பட்டது.

தியான மண்டபம்
1963ல் அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் சிறிய நினைவகம் கட்டுவதற்கு அனுமதி தந்தார். மத்திய அரசின் பண்பாட்டு துறை அமைச்சராக இருந்து ஹூமாயூன் கபீர் நினைவுச் சின்னம் அமைத்தால் பாறையின் இயற்கை அழகு போய்விடும் என்று அனுமதி மறுத்தார். இனி வேறு வழியில்லை, பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆதரித்தால் மட்டுமே நினைவகம் எழுப்ப முடியும் என்ற நிலை.

டெல்லியில் மூன்று நாட்கள் முகாமிட்டு 323 எம்பிக்களின் கையெழுத்தை விவேகானந்தர் நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக வாங்கினார் ஏக்னாத்.  ஆனால் 15 அடிக்கு 15 அடி என்ற மிகக் சிறிய அளவில் கட்டுவதற்கு மட்டுமே பக்தவச்சலம் அனுமதி தந்தார்.  அதையும் கடந்து மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளின் நிதி, பொதுமக்களின் நிதியோடு கட்டுமானப் பணியைத் தொடங்கியது.  6 வருடங்களாக உருவான நினைவகம் 1970-ல் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.


ஆறு அறைகள் கொண்ட தியான மண்டபம் ஒன்றும், விவேகானந்தர் நின்ற நிலையில் ஒரு வெண்கல சிலை அமைக்கப்பட்ட சபா மண்டபமும், முக மண்டபமும் அமைக்கப்பட்டன.  இந்தப் பாறையில் குமரி பகவதியம்மன் ஒற்றைகாலில் நின்று தவம் செய்ததாக ஒரு ஐதீகம்  உண்டு. அந்த பாதச் சுவடு பாறையில் இருப்பதால் அதற்கென்று ஸ்ரீ பாத மண்டபம் ஒன்று கட்டுப்பட்டுள்ளது.


விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து உண்டு. தமிழ்நாடு அரசு பூம்புகார் போக்குவரத்துக் கழகம் இவற்றை இயக்கி வருகிறது. இதற்கு இரண்டு வித கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.  சாதாரணக் கட்டணம் ரூ.34. (சிறப்புக் கட்டணம் ரூ.169). இதில் ரூ.29 படகுக்கான கட்டணமாகவும், ரூ.5 திருவள்ளுவர் சிலைக்கான கட்டணமாகவும் சேர்த்தே வசூலித்து விடுகிறார்கள். இதுபோக விவேகானந்தர் பாறைக்கு விவேகானந்தர் மண்டபத்திற்கு நுழைவுக் கட்டணமாக ரூ.20 விவேகானந்தா கேந்தரா மூலம் வசூலிக்கப்படுகிறது.

1970ல் செப்டம்பர் 2-ல் இந்திய ஜனாதிபதி வி.வி.கிரி இதனை திறந்து வைத்தார்.  5 வருடம் கழித்து 1975ல் விவேகானந்தர் பாறை அமைந்திருக்கும் பெரிய பாறைக்கு அருகில் உள்ள சிறிய பாறையில் 8  அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு ஒரு சிலையை எழுப்ப வேண்டும் என்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு ஏக்நாத் ரானடே ஒரு கடிதம் எழுதினார்.  1976ல் சட்டமன்றத்தில் திருவள்ளுவருக்கு 30 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார்.  1979-ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல் நாட்டினார்.  அதன்பின் எந்த வேலையும் நடைபெறவில்லை. மீண்டும் 1990-ல் பணி தொடங்கப்பட்டது. 10 வருடமாக கட்டுமானப் பணி முடிந்து 1.1.2000-த்தில் புத்தாயிரம் ஆண்டில் திருவள்ளுவர் சிலை கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது.


திருவள்ளுவர் சிலை செய்யும் பணி கன்னியாகுமரி, அம்பாசமுத்திரம், சங்கராபுரம் ஆகிய  மூன்று இடங்களில் நடைபெற்றது.  அம்பாசமுத்திரத்தில் இருந்து 5,000 டன் கற்களும், சங்கராபுரத்தில் இருந்து 2,000 டன் உயர்வகை கிரானைட்  கற்களும் கொண்டு உருவாக்கப்பட்டது.   மொத்தம் 3,681 பெரிய கற்களால்  சிலை வடிவமைக்கப்பட்டது.  இதில் 15 டன் வரை கனமான கற்களும்  உள்ளன.  பெரும்பான்மையான  கற்கள்  3 முதல் 8 டன் எடை கொண்டதாக இருந்தன. கற்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்காக 18,000 துளைகள் போடப்பட்டுள்ளன.  இது பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டடம் போன்றது.  உலகத்திலேயே வேறு எங்கும் இப்படியொரு கருங்கல் சிலை அமைக்கப்படவில்லை.


பீடம் 38 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. அது திருவள்ளுவர் கூறும் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலை பொருட்பால்  இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிக்கும் விதமாக கடல் மட்டத்திலிருந்து 30 அடி உயரம் கொண்ட பாறையின் மீது 133 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.  சிலையின் மொத்த எடை 7,000  டன், இதில் சிலையின் எடை 2,500 டன், பீடத்தின் எடை 1,500 டன், பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை 3,000 டன், முகம் 10 அடி உயரமும், தோள்பட்டை அகலம் 30 அடியும் கொண்ட இந்த பிரமாண்ட சிலை தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலை இருக்கும் சிறிய பாறைக்கும் இடையே 200 அடி இடைவெளிதான் உள்ளது. இந்த இரண்டு சிறு தீவுகளையும் இணைக்கும் விதமாக பாலம் கட்ட வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் நெடுநாளைய விருப்பம். இணைப்பு பாலம் இல்லாத காரணத்தால் அங்கிருந்து திருவள்ளுவர் பாறைக்கும் படகில் போகவேண்டியுள்ளது.


தென் பகுதியில் உள்ள இந்தியாவின் கடைசி நிலத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இரண்டு தத்துவ ஞானிகளின் நினைவாக நினைவுச் சின்னங்கள் அமைந்திருப்பது நம் எல்லோருக்கும் பெருமையே...!

புதன், மார்ச் 25, 2015

இப்போதும் வாழும் 'மாதொருபாகன்' கலாசாரம்

னித குலத்தின் மிக நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் 'கற்பு' என்ற புனிதமெல்லாம், மிக சமீபத்தில் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் என்பது 'மானுடவியல்' படித்தவர்களுக்கு தெரியும்.

மாதொருபாகனில் வரும் வறடிக்கல் சுற்றும், பதினாலாம் நாள் திருவிழாவும் பலவடிவங்களில் பல்வேறு சமூகங்களில் இருந்தவைதான். இன்றைக்கும் கூட இப்படிப்பட்ட சமூகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது, சில வருடங்களுக்கு முன்பு வரை ஆணுக்கு பெருமையான சமாச்சாரமாக இருந்தது. அதைப் போலவே சில சமூகங்களில் ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்வதும் சாதாரண நிகழ்வாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு இனம் தான் 'டுரோக்பா'.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லாடக் மாவட்டத்தில் தாணு என்ற இடத்தில்தான் இந்த இன மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் ஒரு பெண் தன் விருப்பத்துக்குகேற்ப எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இவர்கள் கொண்டாடும் 'கர்ப்பம் தரிக்கும் திருவிழா' மாதொருபாகனை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் வினோதம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திருவிழா நடைபெறும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் பவுர்ணமி நாட்கள் தான் அதற்கென்று ஒதுக்கப்பட்ட நாட்கள். இந்த விழாவில் கருத்தரிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.


விழா நாட்களில் திறந்தவெளியில் பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் அனைத்து ஆண்களும் பெண்களும் ஒன்று கூடுவார்கள். முதலில் இதற்கென்றே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட மதுவகையை அனைவரும் அருந்துவார்கள்.
பின்னர் இசைக்கருவிகள் இசைக்க ஆடிபாடுவார்கள். நேரம் ஆக ஆக போதை தலைக்கேறும். உடைகள் குறையும். முடிவில் நிர்வாண நடனம் ஆடுவார்கள்.

அதன்பின் ஆணும் பெண்ணும் வெட்டவெளியிலே ஒன்று கூடுவார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் என்று விடிய விடிய உறவு நீடிக்கும். இப்படி தாங்கள் உறவு கொள்வதை மற்ற இன மக்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஊர் எல்லையில் பலத்த காவல் போட்டிருப்பார்கள். அதை மீறி யாரும் உள்ளே போகமுடியாது.

இந்த இன மக்கள் இப்படி தாறுமாறாக உறவு கொள்வதால் இவர்களுக்கு பாலியல் நோய்கள் அதிகம் வருகின்றன. முறையற்ற உறவு மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு தருகின்றன. இதனாலே இந்த இனம் வேகமாக அழிந்து வருவதாக ஜம்மு காஷ்மீர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

படம்: felix features

===


செவ்வாய், மார்ச் 24, 2015

'ஓசோன்' வாசம் எனக்கு பிடிக்கலை

துரையில் மழை பெய்வது அபூர்வம். கடந்த வாரம் அப்படி அபூர்வமாக மதுரைக்கு மழை வந்தது . கூடவே மீன் மார்க்கெட்டுக்குள் நுழைந்தது போல் ஒரு வீச்சம்.


"என்னப்பா, இப்படி ஒரு வாடை அடிக்கிறதே?!" என்று என் மகன் கேட்டான்.

"இதுதான் ஓசோன் வாசம்..!" என்றேன்.

அவனால் நம்பமுடியவில்லை.

"போங்கப்பா, ஓசோன் நமக்கு எவ்வளவு நன்மை செய்கிறது. அது போய் இப்படி நாத்தம் அடிக்குமா..?"

நல்லவற்றில் நல்ல மணம்தான் வரும் என்பது அவன் நம்பிக்கை.

"ஓசோன் வெறும் நன்மையை மட்டுமே செய்யவில்லை. அது தீமையையும் செய்கிறது..!" என்றேன்.

நான் சொல்ல சொல்ல அவன் கண்கள் ஆச்சர்யத்தில் அகல விரிந்தன. ஏனென்றால், ஓசோன் ஒரு நல்ல வாயு என்று மட்டுமே அவனுக்கு போதிக்கப் பட்டிருந்தது.

சூரிய ஒளியில் இருந்து வெளிப்படக்கூடிய, தீங்கு செய்யும் 'அல்ட்ரா வைலட் ரேஸ்'-யை கட்டுப்படுத்தி, நல்ல கதிர்களை மட்டும் நமக்கு வழங்கும் வேலையைத்தான் ஓசோன் செய்கிறது.  மனிதனுக்கு தோல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய புற ஊதா கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பும் இயற்கை 'பில்டர்'தான் ஓசோன்.


'ஓசோன்' ஒரு வாயு. இளநீல வண்ணம் கொண்டது. இதன் மூலக்கூறில் மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இருக்கின்றன. கிரேக்க மொழியில் 'ஓசோன்' என்றால் வாசம் என்று பொருள்.

லேசான மீன் வாடை கொண்டது. ஓசோன் இடி மின்னலுடன் கூடிய காற்று வீசும் போது மீன் வாடையை நுகரமுடியும். அதுதான் ஓசோனின் மணம். அதிகாலையில் கடற்கரையில் நடக்கும் போதும் இதை உணர முடியும்.

ஓசோன் நன்மையையும் செய்யும். தீமையையும் செய்யும். ஓசோன் தாழ்வான உயரத்தில் இருக்கும் போது காற்றை அசுத்தப்படுத்தும். மனிதர்கள், விலங்குகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும். சில தாவரங்கள் கருகிப் போகும்.

இதே ஓசோன் பூமியை விட்டு அதிகமான உயரத்தில் இருக்கும் போது சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களை தடுத்து. பூமிக்குள் ஊடுருவாமல் தடுத்து விடும். கடல் மட்டத்திலிருந்து 13 முதல் 20 கிலோ மீட்டர் வரையிலான உயரத்தில் ஓசோன் படலம் படர்ந்திருக்கிறது.

சூரியனில் இருந்து வெளியேறும் அதிக அளவு அலைவரிசை உள்ள 'அல்ட்ரா வயலட்' கதிர்களில் 97 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை ஓசோன் படலம் உறிஞ்சிக்கொள்வதால், அந்த கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது.

பூமியில் ஓசோன் வாயுவின் அளவு குளிர்கலங்களில் சற்றே அதிகமாக இருக்கும். அதிலும் மார்கழி மாதத்தில் மிக அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

அதிகாலையில் கோலம் போடும் பெண்களும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் இதை கருத்தில் கொள்வது நல்லது. இல்லையென்றால் நுரையிரலின் கொள்ளவை குறைப்பது, நெஞ்சுவலி, தொண்டைக்கரகரப்பு, இருமல் போன்றவை இதன் பாதிப்பால் வரும்.

சி.எப்.சி.எனப்படும் 'ப்ளோரோ கார்பன்' மற்றும் பி.எம்.சி. எனப்படும் 'ப்ரோமொப்ளுரோ கார்பன்' ஆகிய வேதிப் பொருட்களுடன் புற ஊதா கதிர்கள் வினைபுரியும் போது குளோரின் மற்றும் புரோமின் வாயுக்கள் தனியே வெளியிடப்படகின்றன.

இந்த வாயுக்களின் ஒரு மூலக்கூறு ஓசோன் வாயுவின் ஒரு லட்சம் மூலக்கூறுகளை சிதைக்கின்றன. அப்போது ஏற்படும் இடைவெளிகள் மூலம் உறிஞ்சப்படாத புறஊதா பூமியில் நுழைகின்றன. இதைதான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது என்கிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு 4 % ஓசோன் படலம் குறைகிறது. இதற்கு 76 % மனிதர்களின் செயல்பாடுகள்தான் காரணம். இததான் பெரும் கொடுமை. ஒரு சதவீதம் ஓசோன் குறைந்தால் 1 முதல் 1.5 லட்சம் கண்பார்வை இழப்பு ஏற்படும். தாவரங்களின் டி.என்.எ. பாதிக்கப்படும். உணவு உற்பத்தி குறையும், ஒளிசேர்க்கை பாதிக்கப்படும். மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும், நோயெதிர்ப்பு சக்தி குறையும், கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.

அதனால் குலோரோப்ளுரோ கார்பன் கலந்துள்ள பூச்சிகொல்லிகள் மற்றும் ஸ்பிரெக்கள் பயன்படுத்துவதை விவசாயிகள் குறைத்துக்கொள்ள வேண்டும். ப்ரோமோ மீத்தேன் கலந்த ரசாயன இடு பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.

மோட்டார் வாகனங்களை குறைத்து கொள்ள வேண்டும். சைக்கிளில் செல்வது, நடந்து போவது உடலுக்கு நல்லது. ஒசோனுக்கும் நல்லது. ஏர் கண்டிஷனர், பிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்தால் ஓசோன் ஓட்டை விழுவதை தடுக்கலாம்.

இப்படி நீண்ட விளக்கத்தோடு 'தினத்தந்தி'க்கு நான் எழுதிய ஓசோன் கட்டுரையை வாசித்துக் காட்டினேன். பிரமிப்போடு கேட்டவன், "ஆனாலும் ஓசோன் வாசம் எனக்கு பிடிக்கவேயில்லை" என்று கூறி ஓடிவிட்டான்.

அந்த மழையின் குளிர்காற்றில் ஓசோனின் மணம் இன்னும் கலந்தே இருந்தது.

===

ஞாயிறு, மார்ச் 22, 2015

பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 2

பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 1  - ன்  தொடர்ச்சி

காலை நேரம் என்பதால் டீ குடித்து முடித்த கையோடு அன்றைய நாளிதழ்களை தந்தார்கள். தமிழ், கன்னடம், ஆங்கிலம், இந்தி நாளிதழ்களில் நமக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ரயிலில் இருக்கும் அனைவர் கையிலும் அன்றைய நாளிதழ்கள் இருப்பது அம்சமாக இருந்தது.

ரயிலுக்கு வெளியே காட்சிகள் வெகு வேகமாக பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன. ரயிலின் அசுர வேகம் எதுவுமே உள்ளுக்குள் தெரியவில்லை. புறப்பட்டு ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. நான்-ஸ்டாப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அரக்கோணம், காட்பாடி போன்ற பெரிய ரயில் நிலையங்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் பின்னால் ஓடின.

வேகத்தையும் வெளிக் காட்சிகளையும் ரசித்துக் கொண்டிருந்த என்னை 'சார்' என்ற அழைப்பு திரும்ப வைத்தது. திரும்பிய என்னிடம் ரயில் வாட்டர் பாட்டிலை கொடுத்தார், ஒருவர். அவருக்குப் பின்னால் இன்னொருவர் காலை ப்ரேக் பாஸ்ட்டை தந்து போனார்.

ஏசி சேர் கார்
மற்ற ஏசி சேர் கார்களில் இருப்பதுபோலவே இதிலும் நமக்கு முன்னால் இருக்கும் இருக்கையின் பின்புறத்தில் சிறிய டேபிள் போன்ற அமைப்பு இருக்கிறது. ஆனால் அவைகளை விட சற்று மேம்பட்ட வடிவத்தில் இது இருக்கிறது. உணவை சாப்பிட வசதியாக இருந்தது.

சதாப்தியில் இரண்டு வகையான வகுப்புகள் உள்ளன. முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் சேர் கார், இது பெரும் பணக்காரர்களுக்கு. அடுத்து வெறும் ஏசி சேர் கார் நம்மைப் போல் வசதி இல்லாதவர்களுக்கு. முதல் வகுப்பில் ஒரு வரிசைக்கு (2+2) நான்கு இருக்கைகள் இருக்கும். காலை நீட்டிக் கொள்ள நிறைய இடம் இருக்கும். சொகுசான வசதிகள் கூடுதலாக இருக்கும்.

சாதாரண ஏசி சேர் கார் கூட மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ளதுபோல் இல்லாமல் சிறப்பாக உள்ளது. மற்றவற்றில் ப்ரவுன் கலர் அல்லது நீல நிறத்தில்தான் இருக்கைகள் இருக்கும். இங்கு பச்சை வண்ணத்தில் பூ வேலைப்பாடுகளுடன் கொஞ்சம் பணக்காரத்தனத்தை காட்டியபடி இருக்கைகள் இருக்கின்றன.

முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் சேர் கார்
சதாப்தி எக்ஸ்பிரஸ் சிலவற்றில் சினிமா பார்க்கும் வசதி இருக்கிறது. இவற்றில் டிவி சேனல்களும் பார்க்கலாம். கலை உணவு முடிந்த சற்று நேரத்தில் லெமன் ஜூஸ் வந்தது. குடித்து முடித்து ரிலாக்ஸ் ஆவதற்குள் வண்டியின் வேகம் குறைந்தது.

காலை 10.45 மணி பெங்களூர் ரயில் நிலையம் வந்தது. நாலேமுக்கால் மணி நேரமாக நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த ரயில் கொஞ்சம் நின்று நிதானித்து இளைப்பாறியது.

நீண்ட தொலைவு பெரிய பெரிய ஊர்களில் கூட நிற்காமல் வந்தது. பெட்டியின் உட்புற அலங்காரம், இடையிடையே நமக்கு வேண்டியதை கொடுத்துக் கொண்டிருப்பது என்று சதாப்தியின் பயணம் சிறப்பாகவே தெரிந்தது.

பெங்களூரில் 10 நிமிடம் நின்ற சதாப்தி மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது. மறுபடியும் வாட்டர் பாட்டில், ஜூஸ், மதியம் மீல்ஸ், ஸ்வீட் என்று வரிசைக் கட்டி வந்தது கொண்டிருந்தன. ரயில் மீண்டும் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

உள்ளே எப்போதும் ஒருவிதமான அமைதி நிலவிக்கொண்டிருந்தது. எனக்குப் பக்கத்தில் ஒரு ஹை-கோர்ட் லாயர் அமர்ந்திருந்தார். பெங்களுரிலிருந்து மைசூர் போவதற்குள் கேஸ்கட்டை முழுவதும் படித்து முடித்துவிட்டார்.

சாதாரணமான மற்ற ஏசி சேர் கார்களில் கூடப் பயணிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்கிறார்கள். இங்கு என்னமோ இனம் புரிய மௌனம் நிலவுகிறது. யாரும் பேசிக் கொள்வதில்லை. எல்லோரும் ஒருவித இறுக்கத்தில் சிக்கிக் கொண்டது போல் இருக்கிறார்கள்.

வசதி கூடக் கூட மனிதனின் பழகும் தன்மை குறைந்து விடும் போல் தெரிகிறது. மிதமிஞ்சிய வசதியும் கூட மனிதனின் ரசனையைக் குறைத்துவிடும் போலத் தோன்றியது.

மதியம் ஒரு மணிக்கு மைசூர் வந்து சேர்ந்தேன். 500 கி.மீ. பயணம் செய்து வந்த அலுப்புக் களைப்பு சிறிதும் இல்லை. அது சதாப்தி கொடுத்த சௌகர்யம்.

டிக்கெட் கவுண்டர்
மைசூர் வந்த பின் அங்கிருக்கும் ரயில் மியூசியத்தைப் பார்க்கவில்லை என்றால் பயணம் முழுமையடையாது. டெல்லியில் தேசிய ரயில் மியூஸியத்தைத் தொடங்கியப் பின், மற்றொரு ரயில் மியூசியம் தொடங்க வேண்டும் என்று நினைத்தார்கள். 1979-ல் கிருஷ்ணராஜா சாகர் ரோட்டில் புதிதாக அதனை அமைத்தார்கள்.

நேரோகேஜ் என்ஜின்
திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மியூஸியத்தில் மைசூரில் முதன்முதலாக இயக்கப்பட்ட நீராவி என்ஜின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கடுத்து ஆஸ்டின் ரயில் மோட்டார் கார் உள்ளது. இது சாலையில் ஓடும் கார்தான். அதை விலைக்கு வாங்கி அதில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி, டயருக்குப் பதில் இரும்பு சக்கரங்களைப் பொருத்தி ரயில் தண்டவாளத்தில் ஓடும் விதமாக மாற்றியிருக்கிறார்கள். உண்மையில் ஒரு கார் தண்டவாளத்தில் ஓடுவது வியப்பான ஒன்றுதான்.

ஆஸ்டின் கார்
மைசூர் மகாராஜா பயணம் செய்த நவீன வசதி கொண்ட இரண்டு ரயில் கோச் இங்குள்ளன. மகாராணிச் செல்வதற்கென்று தனியாக மகாராணி சலூன் உள்ளது. மகாராணிக்காக அலங்கரிக்கப்பட்ட கட்டில், மேக்கப் சாதனங்கள், டைனிங் டேபிள், ராயல் டாய்லெட் எல்லாம் உள்ளன.

மகாராணி சலூன்  
1900-ல் பெங்களூரில் இருந்து தும்கூருக்கு இயக்கப்பட்ட நேரோகேஜ் ரயில் என்ஜின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. ரயில்வே எப்படியெல்லாம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை இந்த மியூஸியத்தில் தெரிந்துக் கொள்ளலாம். திங்கட்கிழமை விடுமுறை. மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மியூஸியம் திறந்திருக்கும். நுழைவுக் கட்டணம் ரூ.10.


இந்தியாவின் இரண்டாவது ரயில் மியூசியத்தைப் பார்வையிடுவது இன்றைய தலைமுறையினருக்கு அவசியமான ஒன்றாகும்.

===
சனி, மார்ச் 21, 2015

பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 1

யணம் எப்போதுமே அலாதியானது. பயணம் தரும் பரவசம் வேறு எதிலும் கிடைக்காத புதிய அனுபவம். பயணத்தில் நாம் சென்று சேர்ந்த இடங்களை பெருமையாக பேசுகிறோம்..!

என்றைக்காவது நாம் பயணித்த வாகனங்களை பெருமை பேசியிருக்கிறோமா..?

கார், பஸ், ரயில், விமானம் என்று மாறி மாறிப் பயணிக்கிறோம். ஆனாலும், அந்த வாகனங்களை நாம் பெருமைப் படுத்தியதேயில்லை.
அதிலும் பொது வாகனங்களை நாம் கண்டு கொண்டதில்லை. பஸ்ஸும் ரயிலும் நம்மைச் சுமந்து சென்ற இடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் ரயில் எப்போதுமே ஸ்பெஷல்தான்..!

ரயில் ஒரு நகரும் வீடு. ரயிலில் ஓடியாட இடம் இருப்பதால் அது குழந்தைகளுக்குச் சொர்க்கம். கழிவறை இருப்பதால் பெண்கள், முதியவர்களுக்கு அது வசீகரம். படுப்பதற்கும், உட்கருவதற்கும், அரட்டை அடித்து, புத்தகம் வாசிப்பதற்கும் வசதியிருப்பதால் நமக்கும் அது ஆனந்தம். இது மட்டுமா ரயிலைப் பிடிப்பதற்கு... இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.


ரயிலுக்கும் எனக்கும் பால்ய வயது பந்தமுண்டு. சிறுவயதில் இருந்தே ரயில் என் வாழ்வோடு இன்னைந்தே வந்திருக்கிறது. எர்ணாகுளம், போத்தனூர், சங்ககிரி துர்க்கம், சேலம் எனச் சிறுவயதில் நான் குடியிருந்த வீடுகள் எல்லாமே ரயில்வே காலனிக்கு நடுவிலே இருந்தது. அந்த வீடுகளுக்கு முன் ரயில்வே டிராக் இருந்தததால் எப்போதும் ரயில்கள் தடதடவென ஓடிக்கொண்டே இருக்கும்.

காதைக் கிழிக்கும் ரயிலின் விசிலும், பதற வைக்கும் தண்டவாளச் சத்தமும் சிறுவனாயிருந்த எனது இரவு தூக்கத்தை விரட்டி மிரட்டின. ஆனாலும் ரயிலை மனம் விரும்பவே செய்ததது. என்னதான் யானை கரிய பெரிய உருவமாக இருந்தாலும், மிரள வைத்தாலும் சிறு வயது முதலே அதனுடனான ஈர்ப்பு நம்மை விட்டு போவதில்லை. ரயிலும் அப்படித்தான்..!

ரயிலுக்கும் எனக்குமான நெருக்கம் அதோடு நின்றுவிடவில்லை. ரயில் என்ஜினிலும் என்னை பயணிக்க வைத்தது. சிறுவயதில் ரயில் என்ஜினில் பயணிப்பது பிரமிப்பான அனுபவம். என் தந்தை ரயில்வேயில் பணிபுரிந்ததால் இவையெல்லாம் சாத்தியமானது. இப்போதெல்லாம் ரயில் என்ஜினில் டிரைவர்களை தவிர வேறு யாரும் பயணிக்கக்கூடாது என்ற விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று அப்படியில்லை, அதனால் எனது சிறுவயது சாகசப் பட்டியலில் ரயில் என்ஜின் பயணமும் சேர்ந்துக்கொண்டது.

கிட்டத்தட்ட எல்லாவகையான எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணித்துவிட்டேன். ஆனாலும் 'சதாப்தி'யில் பயணிக்க வேண்டும் என்பது எனக்கொரு கனவாகவே இருந்தது. இந்தியாவில் மிக உயர்ந்த சேவை தரும் ரயில்கள் சதாப்தியும் ராஜ்தானியும்தான்.

ராஜ்தானி நீண்ட தூரம் பயணிக்கும் ரயில். ராஜ்தானி என்ற ஹிந்தி வார்த்தைக்கு 'த கேபிடல்' என்று அர்த்தம். தேசத்தின் தலைநகரான நியூ டெல்லியை மாநில தலைநகரங்களுடன் இணைக்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்.

1969-ல் முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நியூ டெல்லியிலிருந்து ஹவுராவுக்கு போகும் போது இந்தியாவின் மிக வேகமான ரயிலாக அதுதான் இருந்தது. 1.445 கி.மீ. தூரத்தை 17 மணி 20 நிமிடங்களில் அனாவசியமாக கடந்து பிரமிப்பை ஏற்படுத்தியது. இன்றைக்கு ராஜ்தானி வேகத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சதாப்தியும் துரண்டோவும் முதல் இரண்டு இடங்களை பிடித்துக்கொண்டன.

தற்போது இந்தியாவில் மிக வேகமான எக்ஸ்பிரஸ் 'போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்'தான். மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் அது செல்கிறது. சதாப்தி என்றால் 100 என்று அர்த்தம். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு விழாவின் நினைவாக 1988 முதல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.


சதாப்தி ஒரு பகல் நேர எக்ஸ்பிரஸ். இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும். முழுவதும் ஏஸி வசதி செய்யப்பட்ட நவீன ரயில் பெட்டிகளைக் கொண்டது. இதன் தூரம் 300 முதல் 700 கி.மீ.க்குள் இருக்கும். ஒரே நாளில் புறப்பட்ட ரயில் நிலையத்திற்கு மீண்டும் வந்து சேரும் விதமாக இயக்கப்படும்.

இப்படிப்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மைசூர் சென்று சேரும் எக்ஸ்பிரஸ் அது. காலை 6 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸில் 5.40-க்கே அமர்ந்துவிட்டேன்.

ஜன்னலோர சீட்.. மிகப் பெரிய கண்ணாடி ஜன்னல், வேடிக்கைப் பார்க்க வசதியாக இருந்தது. வெயில் அடித்தால் அதன் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள கனமான சிவப்பு நிற திரை இருந்தது. எனக்கு பயணத்தில் பராக்கு பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதனால் திரையை ஓரங்கட்டி வைத்தேன்.

ஏசியின் குளுமை அதிகமாகவே சில்லிட்டது. சரியாக 6 மணிக்கு ரயில் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் சுடச்சுட டீ, காபி வந்தது. உணவு வகைகளை பரிமாறுவதற்கென்றே ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் தனித்தனியாக ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் ஸ்நாக்ஸ், உணவு என பயணிகளின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். இதற்கான தொகையை டிக்கெட்டோடு சேர்த்து வாங்கி விடுகிறார்கள்.

                                                                                                                                           -தொடரும்


பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 2


வெள்ளி, மார்ச் 20, 2015

பேயோடு வாழ்க்கை நடத்தும் பெண்கள்

'பேயை பார்த்ததுண்டா?' என்று ஆண்களிடம் கேட்டுப் பாருங்களேன்.
உடனே 'பேயை பார்ப்பதா..? 20 வருஷமா அதோடுதானே குடும்பம் நடத்துறேன்..!' என்று அபத்தமான ஜோக் அடிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால், நிஜமாகவே பேயோடு குடும்பம் நடத்தும் பெண்கள் இருக்கிறர்கள்.

இறந்து போனவர்களை உயிரோடு இருப்பவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் சீனாவிலும் சூடானிலும் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் இந்த பழக்கம் இன்றும் தொடர்வதுதான் வேடிக்கை. இவர்கள் இப்படி பேயை திருமணம் செய்து  கொள்வதற்கும்  பல காரணங்களை வைத்திருக்கிறார்கள்.ஒருவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணம் நடக்கும் முன்பே மணமகனோ அல்லது மணமகளோ இறந்து விட்டால், அவர்களின் சொத்தும் உறவுமுறைகளும் கை விட்டு போய் விடக்கூடாது என்பதற்காக இறந்து போனவரின் ஆவியோடு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

நம்மூரைப் போலவே இந்த மூடநம்பிக்கை திருமணங்களில் அதிகம் பாதிக்கப்படுவது அங்குள்ள பெண்கள்தான். ஊரைக்கூட்டி, விருந்து வைத்து, இறந்து போனவர்களோடு திருமணம் முடிந்த கையோடு, அந்த பெண்ணை விதவையாக்கி மூலையில் உட்கார வைத்து விடுவார்கள். வாழ்நாள் முழுவதும் விதவையாக மணமகனின் குடும்பத்தோடு, இல்லாத புருஷனை நினைத்துக்கொண்டு கண்ணீர் மல்க வாழ வேண்டும்.


இதுவே இறந்து போன மணமகளை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இப்படி சட்டங்களோ சடங்குகளோ கிடையாது. ஆவியோடு திருமணம் நடந்து முடிந்த நாலு நாட்கள் கழித்து உயிரோடு இருக்கும் இன்னொரு  பெண்ணுடனான திருமணத்திற்கு நாள் குறித்து விடுவார்கள்.

விதவைப்பெண்கள் வாழ்வதற்காகவே ஊரின் ஒதுக்குப்புறமாக ஒரு விடுதி இருக்கும். அங்குதான் விதவைப்பெண்கள் தங்களின் கடைசி காலம் வரை வாழ்வை கழிக்க வேண்டும். சீனர்களின் குடும்ப அமைப்புப்படி திருமணம் ஆகாத பெண்களுக்கு சமூகத்தில் எந்த அந்தஸ்த்தும் கிடையாது.

வசதியற்று, ஏழ்மை காரணமாக திருமணம் ஆகாமலேயே இருக்கும். பெண்களை இதுபோன்று இறந்து போனவர்களோடு திருமணம் முடித்து மணமகன் குடும்பத்து உறுப்பினர் ஆக்கிவிடுவார்கள்.

இறந்து போனவர்களின் ஆவிகள் அவர்களின் குடும்பத்தினரின் கனவிலோ, அல்லது ஆள் மூலமாகவோ, "இங்கே நான் தனிமையில் தவிக்கிறேன். எனக்கு உடனே திருமணம் செய்து வையுங்கள்!" என்று கேட்குமாம். ஆவியின் வேண்டுகோளை தட்டாது, உடனே யாரவது ஒரு ஏழை அபலைப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.


ஏதோ பேயக்குதானே திருமணம் செய்து வைக்கிறோம் என்று ஏனோதானோ திருமணம் நடத்தி விடமாட்டார்கள். பேய் திருமணங்களிலும் ஜாதகம் பார்த்தல், பொருத்தம் பார்த்தல், நிச்சயதார்த்தம், திருமண சடங்கு, வரதட்சணை என்று அத்தனை அம்சங்களும் உண்டு.

திருமணத்தின் போது  மணப்பெண்ணின் அருகில் இறந்துபோனவரின் அடையாளமாக அருகில் துணியால் செய்யப்பட்ட ஒரு ஆண் பொம்மை இருக்கும். அதுதான் மணமகன். காலம் பூராவும் உயிரற்ற அந்த பொம்மையொடுதான் வாழவேண்டும். இதுதான் பேயை கட்டிக்கொண்டு வாழும் பெண்களின் நிலைமை..!


வியாழன், மார்ச் 19, 2015

கடல்நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா?

டல்நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா? என்றொரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மனிதன் குடிக்கும் நீரெல்லாம் வியர்வை, சிறுநீர் என வெளியேறிக் கொண்டே இருக்கிறது. அதனால் மேலும் மேலும் நீரைக் குடிக்கிறான். மனிதர்களின் நீர் தேவை பெருகிக் கொண்டே போகின்றன. இப்படியே போனால் ஒரு நாளில் குடிப்பதற்கு நல்ல தண்ணீரே இல்லாத நிலை ஏற்படும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.


ஒருவேளை அப்படி ஏற்பட்டு விட்டால் மனிதன் கடல் நீரை குடித்து உயிர் வாழ முடியுமா? சிருநீரகம்தான் நமது உடலில் நீரை தனியாக பிரித்தெடுக்கிறது. இது சுத்தப்படுத்தும் கருவியாக செயல்படுகிறது. 

நம் உடலில் உள்ள கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஏனைய கழிவு உப்புகளையும் வெளியேற்றி சிறுநீர் வழியாக அனுப்புகிறது. சிறுநீர் உப்பு கரித்த சுவையில் இருப்பதற்கு இதுவே காரணம். இந்த உப்புகள் சிறுநீரைவிட கடல்நீரில் அதிக விகிதத்தில் இருப்பதால் தான் கடல் நீரை நம்மால் குடித்து பழகி கொள்ள முடியவில்லை. நம் உடலும் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. 

ஆனாலும், ஏ.பாம்பார்ட் என்ற பிரெஞ்ச் விஞ்ஞானி தனந்தனியாக படகில் நடுக்கடலில் நல்ல நீரை எடுத்துக்கொள்ளாமல் கடல் நீரை குடித்தே எந்த நோயும் வராமல் 45 நாட்கள் வரை தாக்குபிடித்தார். அத்தோடு தன் பரிசோதனையை முடித்துக்கொண்டார்.


அப்படியானால் கடல் நீரில் வாழும் மீன் இனங்கள் உப்பு நீரை உட்கொண்டா வாழ்கின்றன என்ற கேள்வி எழுகிறது. மீனின் சிறுநீரகங்கள் மிகமிகச் சிறியவை அதோடு அசுத்தங்களை பிரித்தெடுக்கும் திறனும் அற்றவை. மாறாக மீன்களின் கழுத்து செதில்களில் நீரை சுத்தப்படுத்தும் மிகச் சிறந்த அமைப்பு ஒன்று உள்ளது. 

இது மீன்களின் ரத்தத்தில் உள்ள கழிவு உப்புகளை கூட பிரித்து எடுத்து சளி பொருளாக செதில் வழியாக வெளியேற்றி விடுகிறது. மீன்களின் செதில்களில் இத்தகைய சளிப்பொருள் அதிகம் தங்கியிருந்தால் நாம் அந்த மீன்களை உணவுக்காக வாங்குவதில்லை. கழிவுகள் அதிகமாக செதில் பகுதியில் சேர்ந்திருப்பது மீன் இறந்து அதிக நேரம் ஆகிவிட்டதை குறிக்கும். 

சரி, கடல்நீரை குடிக்கலாமா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

புதன், மார்ச் 18, 2015

உலகின் முதல் போலி டாக்டர் கட்டிய மருத்துவக்கோயில்

போலிகள் எல்லா காலத்திலுமே உலகில் இருந்திருக்கிறார்கள். அதிலும் போலி டாக்டர்கள் சரித்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்தே மக்களை மயக்கி வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.

ஆதாரப்பூர்வமான முதல் போலி டாக்டர் ஜேம்ஸ் கிரஹாம் என்பவர்தான். பிரிட்டனைச் சேர்ந்த இவர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும், பாதியிலே படிப்பை விட்டு விட்டவர்.

அவர் வாழ்ந்த காலம் 18-ம் நூற்றாண்டு. மின்சாரம் என்ற அற்புதம் கண்டுபிடிக்கப்பட்ட புதிது. அந்த மின்சாரத்தை வைத்துத்தான் மோசடி செய்யத் தொடங்கினார். அதற்காக அமெரிக்கா பக்கம் ஒதுங்கினார். அங்குதான் மின்சாரம் பரவலாக உபயோகத்தில் இருந்தது.

மின்சாரம் மூலம் எல்லோரும் விளக்கு எரிய வைக்க, கிரஹாமோ எல்லா நோய்களுக்கும் மின்சாரம்தான் சிறந்த மருந்து என்ற புது யுக்தியை பயன்படுத்தி ஏமாற்ற தொடங்கினார். மின்சாரத்தின் சூட்சுமங்களை தெரிந்துக் கொண்டார்.


அதன்பின் 1775-ல் அமெரிக்காவிலிருந்து மீண்டும் பிரிட்டன் திரும்பினார். லண்டனில் 'மருத்துவக்கோயில்' என்ற மாளிகை ஒன்றைக் கட்டினார். அதில் பிரமாண்டமான ஒரு அறையை உருவாக்கினார். அதற்கு 'விண்ணுலக படுக்கை' என்று பெயரிட்டார்.

அந்த படுக்கை 12 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. அந்த படுக்கையில் குறைந்த அளவில் அதிர்வை தரும்  வகையில் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருக்கும்படி செய்தார்.

குதிரையின் வாலில் உள்ள முடியை கொண்டு மெத்தை செய்து அதன் மீது ரோஜாப்பூக்களை பரப்பி வைத்தார். அதன் மீது பட்டு விரிப்பும் விரித்தார். இந்த படுக்கையில் இருப்பவர்களை எல்லா பக்கங்களிலும் இருந்தும் பிரதிபலிக்கும் வகையில் நிலைக்கண்ணாடிகளை அமைத்தார். நறுமணம் கமழும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு, உணர்வைத் தூண்டும் வகையில் கிளர்ச்சியூட்டும் இசை அந்த அறையில் ஒளித்துக்கொண்டு இருக்கும்படி செய்தார்.

இந்த படுக்கையில் ஆணும் பெண்ணும் உறவு கொண்டால் இதுவரை அவர்கள் வாழ்வில் அடையாத உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிப்பார்கள் என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கிரஹாம் விளம்பரம் செய்தார். எதிபார்த்ததைவிட விளம்பரம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

கிரஹாம் கட்டியிருந்த மருத்துவக்கோயில் முன் ஏராளமான ஆண்களும் பெண்களும் கண்களில் இன்பக் கனவுகளோடு கூடினர். போட்டிப் போட்டுக்கொண்டு அறையை முன்பதிவு செய்தனர். உறவு கொள்ள வரும் ஜோடிகளிடம் 'எப்படி உறவுக் கொள்ள வேண்டும்?' என்று அவர் எழுதிய புத்தகத்தையும் சந்தடி சாக்கில் விற்பனை செய்து வந்தார். கொஞ்ச காலத்திற்கு இதை வைத்தே ஓட்டினார்.

எதிர்ப்பார்த்தபடி எந்த மாற்றமும் இல்லாததால் கிரஹாமின் சாயம் வெளுக்கத் தொடங்கியது. லண்டன் வாசிகள் வெகு சீக்கிரத்திலே உண்மையை உணர்ந்தார்கள். இன்றைக்கும் கூட போலி டாக்டர்கள் ஆண்மைக்குறைவு, நீண்ட நேர இன்பம் என்ற போர்வையில்தான் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

ஆனாலும் முதல் போலி டாக்டரே பிரமாண்டமாக ஏமாற்றியிருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது இப்போது இருப்பவர்கள் சாதாரணமாகத் தோன்றுகிறார்கள்.


செவ்வாய், மார்ச் 17, 2015

சுவடிகளைச் சேகரித்தவர்

டந்த வாரம் 'சுவடிகளைத் தேடி' என்ற தலைப்பில் கரந்தையார் எழுதிய போதே இவரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்ற பெயர் கொண்ட இந்த ஆங்கிலேயத் தமிழறிஞரை யாருக்கும் தெரியாது. தமிழகத்தின் பெரு நகரங்களில் கே.கே.நகர், அண்ணா நகர் போல எல்லீஸ் நகரும் இருக்கும்.

அதுவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கிய குடியிருப்புகளுக்கு இந்த பெயரை வைத்திருப்பார்கள். வைத்தவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.


எல்லீஸ் என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் ஒருவர் இருந்தார். 'சகுந்தலை' போன்ற படங்களை  இயக்கியவர். எல்லீஸ் ஆர் டங்கன்  அவர் பெயர். அவருடைய பெயரில் தான் இந்த நகரங்கள் அமைந்திருக்கின்றன என்பதுதான் பலரின் எண்ணம். அந்தளவுக்கு இந்த அறிஞரை யாருக்கும் தெரியாது.

இங்கிலாந்தில் பிறந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ் ஒரு ஆங்கிலேயர். சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக விளங்கியவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்த் துறை செயலாளராக சென்னைக்கு வந்தார்.

எட்டாண்டுகள் அந்த வேலையைச் செய்தார். அதன்பின் சென்னை கலெக்டராக பதவி உயர்வு பெற்று 10 ஆண்டுகள் பணியாற்றினார். சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதற்காக பல இடங்களில் கிணறுகளை தோண்டினார். அந்த கிணற்றின் அருகே தமிழில் கல்வெட்டு அமைத்தார். அதில் 'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு' என்ற நீரின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பொறித்திருந்தார்.

இவரது பொறுப்பின் கீழ் இருந்த நாணயச்சாலையில் திருவள்ளுவர் உருவம் பதித்த இரண்டு நாணயங்களை வெளியிட்டார். பிரிட்டிஷ் மகாராணிகளின் உருவம் மட்டுமே பதித்து வரும் அந்தக் காலக்கட்டத்தில் இது பெரும் புரட்சி.

  கலெக்டரான பின் அவர் பல இந்திய மொழிகளை கற்றார். அந்த மொழிகளில் அவருக்கு தமிழே மிகவும் பிடித்திருந்தது. 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் இவர்தான்.

தமிழ் மொழியை தெரிந்து கொண்டதோடு அவர் நின்று விடவில்லை. தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளுக்கு விரிவான விளக்கம் எழுதினார். அதை முழுதாக முடிக்கும் முன்னே மரணத்தைத் தழுவினார்.

அவரின் திருக்குறள் விளக்கவுரை அரைகுறையாகவே அச்சிட்டு வெளியிடப்பட்டது.  யாரும் சொல்லாத பல விளக்கங்களை புதுமையாக சொன்ன அறிஞர் என்று தமிழறிஞர்கள் இவரை பாராட்டினர்.

தமிழ் மீது தணியாத தாகம் கொண்ட எல்லீஸ், பண்டைய இலக்கியங்களை சேகரித்து பாதுகாக்கவும் செய்தார். குறிப்பாக வீரமாமுனிவர் எழுதிய நூல்களை சேகரிப்பதற்காக தனது சொத்துக்களின் பெரும்பகுதியை விற்று செலவு செய்தார். அப்படி அவர் தேடும் போது கிடைத்த பொக்கிஷம்தான் 'தேம்பாவணி' என்ற காவியம். இவரது முயற்சி இல்லையென்றால் இந்த காப்பியம் நமக்கு கிடைக்காமலே போயிருக்கும்.

தமிழரின் சிறப்புகள் பற்றி பல ஆய்வுக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். அந்தக் காலக்கட்டத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. அதற்காகவே சென்னையிலிருந்து மதுரை வந்தார்.  தமிழோடு தொடர்பு கொண்ட பல இடங்களைப் பார்த்தார். இங்கும் ஏராளமான சுவடிகளைச் சேகரித்தார்.

அதன்பின் ராமநாதபுரம் சென்றார். அங்கிருந்த தாயுமானவர் சமாதியை கண்டுருகினார். அப்போது அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது. அது எதிரிகளால் வைக்கப்பட்டதா என்ற விவரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக சுய உணர்வை இழந்தார்.

மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் மதுரைக்கு வரும் முன்னே மரணம் அவரைத் தழுவிக்கொண்டது. 1819 மார்ச் 10-ல் மதுரையைப் பார்க்க வந்த எல்லீஸ் மீண்டும் சென்னை திரும்பவே இல்லை.

சென்னையிலும் மதுரையிலும் அவர் சேகரித்து வைத்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் கேட்பாரற்று கிடந்தன. பெரிய அறைகளில் மலை போல் குவிந்திருந்த ஓலைச் சுவடிகளை ஏலம் விட ஆங்கிலேய அரசு முடிவு செய்தது.

அந்த சுவடிகளின் மகத்துவம் அறியாத தமிழர்கள் யாரும் அவற்றை  விலை கேட்க முன்வரவில்லை. பல மாதங்கள் பயனற்றுக் கிடந்த சுவடிகளை செல்லரிக்கத் தொடங்கின.

பல ஆண்டுகள் அலைந்து திரிந்து, சொத்தை விற்று, சேகரித்த பொக்கிஷங்கள் எல்லாம் சென்னையிலும் மதுரை கலெக்டர் பங்களாவிலும் பல மாதங்கள் விறகாக எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

தமிழின் பெருமை உணர்ந்து, அதற்கு தொண்டாற்றிய எல்லீஸின் கனவும் சுவடிகளோடு சுவடியாக எரிந்து போனது. அவரை மறக்கக் கூடாது என்பதற்கு தான் எல்லீஸ் நகர் என்று அரசு பெயர் வைத்தது. ஆனால் யார் அந்த எல்லீஸ் என்று யாருக்குமே தெரியாததுதான் வேதனையின் உச்சம்..!ஞாயிறு, மார்ச் 15, 2015

ஒரு இரவுக்கு ரூ.50 லட்சம்

லகில் உள்ள சில ஹோட்டல்களில் ஓர் இரவு தங்குவதற்கு செலவழிக்கும் கட்டணத் தொகையில் நம்மூரில் ஒரு வீடே வாங்கிவிடலாம். நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் காஸ்ட்லி ஹோட்டல்கள் சில இங்கே...
உலகின் முக்கியஸ்தர்கள் எல்லாம் இங்குதான் தங்குகிறார்கள். நீங்களும் ஒரு முக்கியஸ்தர் என்றால் இந்த ஹோட்டல்களில் தங்கலாம்..! மகிழ்ச்சியில் திளைக்கலாம்..!

1.பிரஸிடென்ட் வில்சன் ஹோட்டல்,
ஜெனிவா, ஸ்விட்சர்லாந்த்.
கட்டணம் ரூ.50,22,000.

ந்த ஹோட்டலில் இருக்கும் 'ராயல் பென்த் ஹவுஸ் சூட்' தான் உலகிலே மிக அதிகமான கட்டணம். இங்கு ஓர் இரவு தங்குவதற்கு ரூ.50,22,000.


இந்த சூட்டில் தங்கி ஜெனிவா ஏரியின் அழகைப் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். மொத்தம் 12 அறைகள் உள்ளன. அதனுடன் இணைந்த 12 மார்பிள் பாத்ரூம்கள். 103 அங்குல எல்.இ.டி. டி.வி., டால்பி சவுண்ட் சிஸ்டம், பில்லியர்ட்ஸ் விளையாட்டுத் தளம், லைப்பரரி, பார் எல்லாம் இருக்கிறது.


வி.ஐ.பி.க்கள் என்றாலே எதிரிகள் ரவுண்டு கட்டி நிற்பார்கள். அதனால் இந்த ரூம் முழுவதும் குண்டு துளைக்காத புல்லட் ப்ரூப் கொண்டு அமைத்திருக்கிறார்கள். முற்றிலும் பாதுகாப்பான அறை. இந்த அறையில் ஒரே நேரத்தில் 40 பேர் வரை தங்கலாம். இங்கிருக்கும் டைனிங் டேபிளில் 26 பேர் அமர்ந்து சாப்பிடலாம்.

பெரிய மனுஷங்க மத்தியில இந்த ராயல் பென்த் ஹவுஸ் மிகப்பிரபலம். ரஷ்ய அதிபர் புடினுக்கு பிடித்த அறை இதுதான்.
===

2.ராஜ் பேலஸ்,
ஜெய்ப்பூர், இந்தியா.
கட்டணம் ரூ.48,12,000

ந்தியாவை ஏழை நாடு என்று யார் சொன்னது? கோடீஸ்வரர்கள் வாழும் நாடு என்று சொல்கிறது இந்த ஹோட்டல். இங்கு ஒரு இரவு தங்குவதற்கு கட்டணம் ரூ.48,12,000.


ராஜாக்கள் ஆண்ட காலமெல்லாம் போய்விட்டது. ஆனால், அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் பல நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன. சில அரண்மனைகள் மட்டும் இன்றைக்கும் பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. 1995 வரை சும்மா கிடந்த ஜெய்ப்பூர் அரண்மனையை அமர்களமான ஹோட்டலாக மாற்றிவிட்டார், மன்னர் பரம்பரையின் தற்போதைய இளவரசி ஜெயேந்தர குமாரி.


இங்கிருக்கும் 'த பிரஸிடென்சியல் சூட்'தான் ஆசியாவிலேயே பெரிய சூட். 1,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. தனி நீச்சல் குளம், தங்க இழைகளும், தந்தங்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிகளும் உள்ளன. இங்கிருந்து பிங்க் சிட்டியான ஜெய்ப்பூர் நகரை முழுவதுமாக பார்க்கலாம்.
===

3. போர் சீஸன்ஸ் ஹோட்டல்,
நியூயார்க், அமெரிக்கா.
கட்டணம் ரூ.35,96,000

ந்த ஹோட்டலில் உள்ள 'டை வார்னர் பெண்ட் ஹவுஸ் சூட்'டில் ஓர் இரவு தங்குவதற்கு கட்டணம் ரூ.35,96,000.


நியூயார்க்கில் பெரியதும் உயரமனதுமான ஹோட்டல் இதுதான். மொத்தம் 52 மாடிகள் கொண்டது. ஒவ்வொரு அறையின் சுவரும் தங்கம் மற்றும் பிளாட்டினம் கொண்டு வேலைப்பாடு செய்திருக்கிறார்கள்.


 இந்த அறையில் இருந்து 360 டிகிரி கோணத்தில் நியூயார்க் நகரை கண்டு ரசிக்கலாம். வாட்டர் பால் விளையாட்டு, லைபரரி, பியூட்டி சலூன், ஸ்பா, பெரிய பியானோ இசைக் கருவியும் இந்த அறைக்கான தனி சிறப்பு.
===

4. ஹோட்டல்  மார்டினேஸ்,
 கேன்ஸ், பிரான்ஸ்.
கட்டணம் ரூ.23,25,000


ர்வதேச திரைப்பட விழாவை வருடம் தவறாமல் கொண்டாடி குதுகலிக்கும் நகரம் கேன்ஸ். இங்கிருக்கும் மார்டினேஸ் ஹோட்டலில் உள்ள 'பெண்ட் ஹவுஸ் சூட்' உலகிலேயே அதிக கட்டணம் கொண்ட அறைகளில் நான்காவது இடத்தைப் பிடிக்கிறது. இந்த அறையில் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.23,25,000.


தனியார் பீச், பியானோ பார், சிட்டி ரூம், டைனிங் ரூம், இரண்டு பெட்ரூம், ஸ்பா பாத் போன்ற பல வசதிகள் இருக்கின்றன. டெரஸில் நின்றபடி கேன்ஸ் வளைகுடாவை பார்த்து ரசிக்கலாம்.
===


5. பாம்ஸ் கேஸினோ ரிஸார்ட்,
லாஸ் வேகாஸ், அமேரிக்கா.
கட்டணம் ரூ.22,00,194.


ந்த ஹோட்டலில் இருக்கும் 'ஹக் ஹெப்னர் ஸ்கை வில்லா'வில் தங்க கட்டணம் ரூ.22,00,194. மூன்று பெட்ரூமுடன் கூடிய இரண்டு தளங்கள் கொண்ட ரூம். டாப் அப் பிளாஸ்மா டிவி, ஜிம், மசாஜ், பயர் பிளேஸ், போக்கர் டேபிள் என சகலவிதமான சந்தோஷங்களும் இந்த ஹோட்டலில் நிரம்பிருப்பதால், இது பேச்சுலர்களின் சாய்ஸாக இருக்கிறது.


லாஸ் வேகாஸ் என்றாலே சூதாட்ட நகரம்தான். அதன்பின் அங்கு தங்குபவர்களுக்கு எல்லா வசதியும் இல்லாவிட்டால் எப்படி? விலையுயர்ந்த மது வகைகள், அனைத்து நாடுகளின் 'கால் கேர்ள்ஸ்' 
என்று பிரமாண்டமாக இருக்கும். அதனால்தான் இந்த ஹோட்டலை 'ஒரிஜினல் ப்ளேபாய் மேன்சன்' என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
===
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...