புதன், ஏப்ரல் 29, 2015

தானாக தீப்பிடித்து எரியும் மனிதர்கள்னிதன் எப்படி தானாக எரிவான்? இப்படி ஒரு கேள்வியை யாரிடமாவது கேட்டால், 'அது எப்படி முடியும்..?!' என்பதுதான் எல்லோரின் பதிலாக இருக்கும். அறிவியலும் கூட அப்படித்தான் சொல்லும். ஆனால் இயற்கை அவ்வப்போது வெகு அபூர்வமாக சில மனிதர்களை தானாகவே எரித்து விடுகிறது.

கடந்த 300 ஆண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக 200 மனிதர்கள் எரிந்து போய் இருக்கிறார்கள். 1673-ல் ஒரு விசித்திரமான வழக்கு ஒன்று பிரான்ஸ் கோர்ட்டுக்கு வந்தது. வழக்கமான கணவன்-மனைவி சண்டைதான் அது. மனைவி இறந்து விட்டார். கொன்றது கணவன் தான் என்பது வழக்கு. கோர்ட்டு தீர்ப்போ வேறு மாதிரி இருந்தது. கணவர் குற்றமற்றவர். அவர் மனைவி தானாக எரிந்து விட்டார் என்று தீர்ப்பளித்தது. அது எப்படி ஒரு பெண்ணால் தானாக எரிய முடியும்? என்று உலகம் முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது.

கால் மட்டும் எரியாத நிலையில்
இந்த தீர்ப்பு பிரான்ஸ் நாட்டு அறிஞர் ஜேம்ஸ் ரூபாண்ட் என்பவரை மிகவும் சிந்திக்க வைத்தது. அவர் மனித உடல் தானாக எரிவது குறித்து ஆராயத் தொடங்கினார். மனித உடலில் தானாக எரியும் அளவுக்கு எந்த வேதிப் பொருட்களும் இல்லை. பின் இது எப்படி நிகழ்கிறது?


அதிலும் மனிதன் தானாக தீப்பிடித்து எரியும் போது முழுவதுமாக எரிந்தப்பின் அந்த இடத்தில் கருகிய மண்டையோடு அல்லது கருகிய கால்கள், கைகள் மட்டுமே இருக்கும். மற்ற பகுதிகள் எல்லாமே சாம்பல் குவியலாக குவிந்து கிடக்கும்.

அதே வேளையில் வீட்டின் மற்ற பகுதிகள், இறந்தவருக்கு அருகே உள்ள பொருட்கள் போன்றவற்றில் நெருப்பு எரிந்தற்கான அடையாளம் இருக்கவில்லை. இதனை ஆங்கிலத்தில் 'ஸ்பாண்டேனியஸ் ஹுயூமென் கம்பஷன்' என்கிறார்கள்.

இப்படி தானாகவே எரிந்து போனவர்கள் பெரும்பாலும் மது அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு அதீத போதையில் இருக்கும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது.

இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மிக மெதுவாகவும் உடல் முழுவதும் எரியும் வரையிலும் நடைபெறுகிறது. எரிந்து முடிந்தவுடன் மண்டை ஓடு, கை, கால்கள் தான் மிஞ்சுகின்றன.


சில சம்பவங்களில் முதுகெலும்பு தவிர மற்ற பகுதிகள் எரிந்து சாம்பலாகின்றன. அதனால், குடிகாரர்களுக்கு மட்டும்தான் இது ஏற்படுகிறது என்பதை ஏற்க முடிவதில்லை.

மேலும் தானாக உடல் எரியும் போது உருவாகும் வெப்பம், மின்சார சுடுகாட்டில் ஏற்படும் வெப்பத்தைவிட அதிகம். சுமார் 600 டிகிரி சென்டி கிரேடு வெப்பம். இப்படி மிதமிஞ்சிய வெப்பநிலை இருந்தும்கூட, அவர்களுக்கு அருகில் உள்ள காகிதங்கள் கூட எரியவில்லை என்பதுதான் அதிசயம்.

1951-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி புளோரிடாவில் வாழ்ந்து வந்த 67 வயதான மேரி ரீட்சர் என்ற பெண் இப்படி தான் இறந்தார். நாற்காலியின் கைபிடியை பிடித்தபடியே அவரது உடல் கருகிக் கிடந்தது. மண்டை ஓடு, இடது கால், முதுகெலும்பு கருகிய நிலையிலும், மற்ற பகுதிகள் சாம்பல் குவியலாகவும் மாறியிருந்தன. இதை சாதாரண விபத்து என்று போலீஸ் பைலை மூடியது.

1998 நவம்பர் 17-ந் தேதி கைசெல் என்ற 67 வயது பெண் தந்து இருக்கையில் அமர்ந்தபடி இறந்திருந்தார். செருப்புடன் கூடிய அவரது இடது கால் மட்டும் தரையில் ஊன்றியபடி இருந்தது. மற்ற பகுதிகள் எல்லாம் எரிந்து சாம்பலாகி இருந்தன. வீட்டின் மற்ற பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை.

தமிழகத்தில் ராகுல்
சமீபத்தில் நமது தமிழகத்தில் கூட திண்டிவனத்தில் ராகுல் என்ற குழந்தைக்கு இதைப்போன்ற பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் இது தானாக எரியும் நோயில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

மனித உடல் ஏன் இப்படி தானாக எரிகிறது? என்ற கேள்விக்கு இன்னமும் விடை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானம் திணறிக்கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை கடவுள் செயல் என்று கூறி விடுகின்றனர். மனிதன் தானாக எரிவதும் இப்போதைக்கு கடவுள் செயலாகவே இருக்கிறது.
செவ்வாய், ஏப்ரல் 28, 2015

சிக்கிம் - கஞ்சன் ஜங்கா


வைரச் சிகரம்லகின் மூன்றாவது மிக உயர்ந்த சிகரமான கஞ்சன் ஜங்காவை வைரச் சிகரம் என்றுதான் அழைக்கிறார்கள். பனி மூடிய இந்த சிகரத்தில் பட்டுத் தெறிக்கும் சூரியக் கதிர்களால் ஏற்படும் ஜொலிப்பு வைரம் மின்னுவது போலவே இருக்கும் என்கிறார்கள். அந்த சிகரத்தை சிக்கிம் மாநிலத்திலிருந்து பார்க்கலாம். கஞ்சன் ஜங்கா சிகரத்தில் ஏறி சாகஸம் புரிபவர்களும் சிக்கிம் வழியாகத் தான் மேலே ஏற முடியும்.


மலையேறுபவர்களுக்காக கோச்சாலா என்ற பகுதியை அரசு திறந்து விட்டிருக்கிறது. இதனால் இந்தியப் பகுதியில் இருந்து கஞ்சன் ஜங்கா சிகரம் ஏறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது.


கஞ்சன் ஜங்காதான் உலகின் அழகான சிகரம் என்று பெயர் பெற்றது. காலையில் சூரியன் உதிக்கும் போது சிகரத்தின் உச்சியில் மட்டுமே சூரிய ஒளி படும்போது கீழே இருக்கம் இடங்கள் எல்லாம் மறைந்து விடும். சிகரம் அந்தரத்தில் தொங்குவது போல் காட்சியளிப்பது வாழ்நாளில் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி.


எப்படி செல்வது?

அருகில் உள்ள ரயில் நிலையம் நியூ ஜல்பைகுரி, (221 கி.மீ.) சிலிகுரி (137 கி.மீ.), அருகில் இருக்கும் நகரம் சிக்கிம் தலைநகர் காங்டாக். ஏப்ரல், மே மாதங்கள் சீஸன் காலமாகும்.

எங்கு தங்குவது?

காங்டாக் நகரில் உள்ள ஹோட்டல் சகோரிகா (03592 206958) தங்குவதற்கு ஏற்ற 2 ஸ்டார் ஹோட்டல். இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.1,926.
===

படங்கள் : கூகுள் இமேஜ்


ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

ரசிக்க சில ரயில் நிலையங்கள்யிலில் பயணம் செய்வதே ஒரு அலாதியான அனுபவம். ரசனைமிக்க இந்த அனுபவம் ரயில் பயணத்தில் மட்டுமல்ல, அவை நின்று செல்லும் ரயில் நிலையங்களிலும் உண்டு. அதிலும் சில ரயில் நிலையங்கள் ரசிக்கத்தக்க கட்டடக்கலையில் மிளிர்கின்றன. பாரம்பரியம், பிரமாண்டம், நவீனம் என்ற மூன்று வகையிலும் முதன்மையாக விளங்கும் இந்த ரயில் நிலையங்கள் சுற்றுலாவிலும் சிறந்து விளங்குகின்றன.

பாரம்பரியம்

பாரம்பாரியத்தில் இந்தியாவை அடித்துக் கொள்ளமுடியாது. உலகில் பல நாடுகளை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தாலும், இயற்கை வளம் நிறைந்த இந்தியாவிற்கு எல்லாமே விரைவாக கிடைத்தன. அப்படி கிடைத்தவற்றில் ரயில்வேயும் ஒன்று.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்
அவர்கள் உருவாக்கிய இந்திய ரயில் நிலையம் ஒன்று யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அதன் பெயர் 'சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்'. இது மும்பை ரயில் நிலையத்தின் பெயர். 1887-ல் கோத்திக் மற்றும் மொஹல் கட்டடக்கலையை இணைந்து உருவாக்கிய அழகின் உச்சம் இது. பெடரிக் வில்லியம் ஸ்டீபன் என்பவர்தான் இந்த பொக்கிஷத்தை வடிவமைத்தவர். 


முதலில் விக்டோரியா டெர்மினல் என்று பிரிட்டிஷ் மகாராணியின் பெயரைத்தான் வைத்தார்கள். 1996 வரை அதே பெயர்தான் நீடித்தது. அதன்பின்தான் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் பெயரை இதற்கு வைத்தார்கள். 


இந்தியாவின் மிக பிஸியான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று. 18 நடைமேடைகளை கொண்ட நிலையம். மும்பைக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த ரயில் நிலையத்தை ரசிக்காமல் திரும்புவதில்லை. பிரமாண்டம் 


'கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ்'
இந்தியாவிற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் என்றால், அமெரிக்காவிற்கு 'கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ்' தான். நியூயார்க்கின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்று இந்த சுரங்க ரயில் நிலையம். அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடங்களில் இது ஆறாவது இடத்தில் இருக்கிறது.


வருடத்திற்கு 2.6 கோடி பயணிகள் இந்த ரயில் நிலையத்தின் மூலம் பயணிக்கிறார்கள். உலகத்திலேயே அதிகமான பிளாட்பாரங்கள் கொண்ட ரயில் நிலையமும் இதுதான். மொத்தம் 44 பிளாட்பாரங்கள். அமெரிக்க சுற்றுலா பட்டியலில் கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ் முதன்மையாக இருக்கிறது.
நவீனம்

நவீனத்தின் உச்சம் என்று சொன்னால் அது பெல்ஜியம் நாட்டில் உள்ள 'லீஜ்-கெலமைன்ஸ்' ரயில் நிலையம்தான். உலகில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் விக்டோரியா காலத்திலும் எட்வர்ட் ஆட்சியிலும் கட்டப்பட்டவையாகவே இருக்கின்றன. 

'லீஜ்-கெலமைன்ஸ்' ரயில் நிலையம்
நவீன ரயில் நிலையங்கள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தால் நம் கண் முன் வந்து நிற்பது லீஜ்-கெலமைன்ஸ் தான். 2009-ல் திறக்கப்பட்ட இந்த நிலையம் அதற்குள் உலக சுற்றுலா பயணிகளின் செல்லமாக மாறி இருக்கிறது. 


ஸ்டீல், கண்ணாடி, வெள்ளை காங்கிரிட் கொண்டு அமைக்கப்பட்ட 105 அடி உயர எலிவேஷன், அனைவரையும் வசீகரித்து இழுக்கிறது. பெல்ஜியத்தின் நம்பர் ஒன் சுற்றுலா மையமாக இது திகழ்கிறது. 

ஸ்டீல் கண்ணாடி கூரை 

படங்கள்: கூகுள் இமேஜ்


வெள்ளி, ஏப்ரல் 24, 2015

'கிளாப்' அடித்தலில் இத்தனை விஷயமா..!

சினிமா துறையில் நீண்ட காலமாய் இருக்கும் நண்பர் ஒருவரை சந்தித்தேன். பரஸ்பர நல விசாரிப்புக்கு பிறகு பேச்சு சினிமாவை நோக்கி திரும்பியது. நடிகர் நடிகைளில் தொடங்கி தொழில்நுட்பத்தில் வந்து முடிந்தது.

நமக்கெல்லாம் சினிமா ஷூட்டிங் என்றாலே நடிகர்கள் மற்றும் கேமரா தான் நினைவுக்கு வரும். அதற்கு அடுத்தபடியாக நமது நினைவுக்கு வருவது 'கிளாப்' அடிப்பதுதான். இது எதற்காக என்ற கேள்வி அடிக்கடி தோன்றும். அதையே அவரிடம் கேட்டேன். அதில் ஸீன் மற்றும் டேக் நம்பர் இருக்கும் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும். ஆனால், இந்த கிளாப் போர்ட் இல்லாமல் ஒரு சினிமா படத்தை உருவாக்கவே முடியாது என்று நண்பர் கூறினார். இதனால் தான் பட பூஜையின் போது கிளாப் போர்ட், ஸ்கிரிப்ட் வைத்து பூஜை போடுகிறார்கள் என்றார்.


பொதுவாக சினிமா நாம் திரையில் பார்ப்பது போல் வரிசையாக கிரமமாக எடுக்கப்படுவதில்லை. மாறி மாறி காட்சிகளை எடுப்பார்கள். இவற்றையெல்லாம் எடிட்டிங்கில் ஒன்றாக தொடுப்பார்கள். இதற்கு உதவுவதுதான் 'கிளாப் போர்ட்' என்றார்.

மேலும் அவர், "இப்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் காட்சியும் ஒலியும் ஒரே இடத்தில் பதிவாகிறது. இந்த வசதியெல்லாம் ஆரம்பக் கால சினிமாவில் இல்லை. ஷூட்டிங்கில் கேமரா மூலம் பிலிமில் காட்சி பதிவாகும். வசனம் என்பது கேமராவுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒலிப்பதிவு நாடாவில் பதிவாகும். இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும் மந்திரக் கோல் இந்த கிளாப் போர்ட்.


ஒரு கிளாப் போர்டில் பல விஷயங்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். எடுக்கப் போகும் ஷாட், ஸீன் நம்பர், டேக் நம்பர், இன்டோர், அவுட்டோர் போன்ற எல்லா விவரங்களும் அதில் இருக்கும். இந்த விவரங்களை எல்லாம் சத்தமாக சொல்லித்தான் கிளாப் போர்டை 'டொக்' என்று அடிப்பார்கள்.  அந்த 'டொக்'தான் பிலிம் காட்சிக்கும் ஒலிநாடா ஆடியோவுக்குமான இணைப்பு பாயிண்ட்.

ஷூட்டிங் முடிந்த பின்பு லேப்பில் பிலிமை பிரிண்ட் போட்டு முடிந்ததும், கிளாப் அடிக்கும் இடத்தையும், ஆடியோ டேப்பில் பதிந்திருக்கும் 'டொக்' சத்தத்தையும் சரியாக பொருத்தினால் வசனமும் வாயசைப்பும் கச்சிதமாக பொருந்திகொள்ளும். 


இந்த 'கிளாப்' அடித்தலை 'சவுண்ட் கிளாப்', 'சைலண்ட் கிளாப்', 'எண்டு கிளாப்' என்று மூன்று வகையாக பிரிக்கிறார்கள். பொதுவாக கிளாப் போர்டில் படப்பிடிப்பு நடக்கும் தேதி, காட்சியின் இரவு-பகல் அம்சம் குறித்த விவரம், வசனம் உள்ளதா இல்லையா என்ற விவரம், காட்சி எண், ஷாட் எண் மற்றும் டேக் எண் ஆகியவை இருக்கும். 

வசனம் இல்லாத காட்சி என்றால் கிளாப் அடிக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்தக் காட்சியில் ஒலிப்பதிவு கருவியே இருக்காது. பிறகு எதற்கு தேவையில்லாமல் 'டொக்' சத்தம். கேமரா ஓட ஆரம்பித்ததும் கிளாப் போர்டை மட்டும் கேமரா முன் சில நொடிகள் காண்பித்து எடுத்துக் கொள்வார்கள். அதில் அந்த காட்சியின் எண், ஷாட் எண் மற்றும் டேக் எண்  போன்ற விவரங்கள் இருக்கும். இதைத்தான் 'சைலண்ட் கிளாப்' என்கிறார்கள்.

'சவுண்ட் கிளாப்'பில் படபிடிப்பை போலவே சத்தமும் முக்கியத்துவம் பெறுகிறது. கேமராவில் வெறும் காட்சிகளும் உருவமும் மட்டுமே பதிவாகும் வசனமோ சத்தமோ பதிவாகாது என்பதால் தனியாக 'நாகரா' என்ற ஒரு ஸ்பூல் டேப் ரிக்கார்டரில் ஒலிப்பதிவு செய்வார்கள். இந்த இரண்டையும் ஒன்றாக்குவதுதான் சவுண்டு கிளாப்பின் வேலை. கேமரா ஓடத்தொடங்கியதும் கிளாப் அடிக்கப் படுகிறது. அது படமாக பதிவாகிறது. அதே சமயம் கிளாப் அடிக்கும் சத்தம் நாகர டேப்பில் பதிவும் ஆகிறது. 

'எண்டு கிளாப்' என்பது லாங் ஷாட்டாக வரும் காட்சிகளிலும் சில கஷ்டமான காட்சிகளை படமாகும் போதும் இதை பயன்படுத்துகிறார்கள். இந்த மாதிரி காட்சிகளை படமாக்கும் போது சிலவற்றில் காட்சி தொடங்கும் நேரத்தில் கிளாப் அடிக்க முடியாது. இதனால் இத்தகைய காட்சிகளை முதலில் எடுத்து விடுவார்கள். 

ஷாட் முடிந்த பிறகும் கேமரா ஓடிக்கொண்டே இருக்கும். அப்போது பிரேமிற்குள் ஓடிச்சென்று கிளாப் போர்டை தலைகீழாக பிடித்துக் கொண்டு அடிப்பதுதான் எண்டு கிளாப். படத்தொகுப்பின் போது தலைகீழாக கிளாப் போர்ட் வந்தால் அதற்கு முன்புதான் காட்சி எடுக்கப் பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். 

தற்போது டிஜிட்டல் கிளாப் போர்ட், அக்ரிலிக் கிளாப் போர்ட், எல்.இ.டி. கிளாப் போர்ட் என்று கிளாப் போர்டுகள்  நவீன வடிவம்  பெற்றுள்ளது." என்று முடித்தார் அவர். 

அம்மாடி, கிளாப் அடித்தலில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா..!புதன், ஏப்ரல் 22, 2015

மீன்பிடித்து விளையாட ஒரு சுற்றுலாகலிபோரே
தூண்டிற்காரனின் சொர்க்கம்

வெயில் சுட்டேரிக்கிறதா... குளுமையான இடம் தேடி போக மனம் துடிதுடிக்கிறதா... ஊட்டியும் கொடைக்கானாலும் போரடிக்கிறதா.. அப்படியென்றால் உங்களுக்கு ஏற்ற இடம் 'கலிபோரே' தான்.

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் இருந்து 95 கி.மீ. தூரம் பயணித்தால் கலிபோரே வந்துவிடுகிறது.

அடர்ந்த காடு, அச்சத்தை தோற்றுவிக்கும் அமைதி, இடைவிடாமல் எங்கோ ரீங்காரமிடும் தேனீக்களின் ஓசை, சலசலத்து ஓடும் காவேரி ஆறு, சூரிய ஒளிக்கு தடைபோட்டு நிற்கும் உயர்ந்த அர்ஜுனா மரங்கள், கால்களுக்கு வலிமை  சேர்க்கும் கரடு முரடான பாதைகள் இவை போதாதா சொர்க்கத்தை மண்ணுக்கு கொண்டு வர... போதும்தான்.!

'தூண்டிற்காரனின் சொர்க்கம்'
அதனால்தான் இந்த இடத்திற்கு 'தூண்டிற்காரனின் சொர்க்கம்' என்று காரணப் பெயரும் வைத்துவிட்டார்கள் சுற்றுலாவாசிகள்.

1980-ல் பொழுதுபோகாதா இரண்டு வெள்ளையர்கள் இங்கு வந்து மீன்பிடித்து பொழுதுபோக்கினார்கள். அவர்கள் பெயர் மார்டின் கிளார்க், ராபார்ட் ஹிவிட். ஒருநாள் அவர்கள் தூண்டிலில் 41.76 கிலோ எடையும், 1.70 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் சுற்றளவும் கொண்ட மகாசீர் மீன் கிடைத்தது. தினமும் இப்படி மீன்கள் தூண்டிலில் சிக்கின. ஒரு மாதத்துக்குள் 40 மீன்கள்..!  இந்த இடம் அடர்ந்த வனம் என்ற நிலை மாறி  மீன்பிடி முகாமாக மறுவடிவம் கொள்ள இததான் காரணம்.

மகாசீர் மீன்
இங்கு இப்படி மீன்பிடித்து இயற்கையோடு இணைந்து விளையாடும் சுகமே தனிதான். மீன்களை மனிதன் பிடிப்பதே உணவுக்காகத்தான். ஆனால், கலிபோரேவின் கதையே வேறு. இங்கு மீன்கள் உணவுக்காக பிடிக்கப்படுவதில்லை. மகிழ்ச்சிக்காகவும் விளையாட்டுக்காகவும் பிடிக்கப்படுகிறது. இப்படி பிடித்த மீன்களை மீண்டும் ஆற்றிலே விட்டுவிடுவார்கள். இதுதான் மீன்பிடித்து விளையாடும் சுற்றுலா.

மகாராஜாக்கள், கவர்னர்கள், மந்திரிகள் வேட்டையாடி திரிந்த இந்த காடுகளில் இன்று எதையும் வேட்டையாடக் கூடாது என்று சட்டம் தடைப் போட்டு நிற்பதால் மீன் பிடித்து பின் விடும் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த இடத்துக்கருகில் பீமேஸ்வரி, தொட்டம்கலி, காவேரி மீன்பிடி முகாம் என்று மேலும் மூன்று மீன்பிடித்து விளையாடும் மையங்கள் இருக்கிறன்றன. ஒவ்வொன்றும் காட்டுக்குள்ளே நதியின் கரையோரத்திலே நடந்து போக வழிகள் உண்டு. அதுவே ஒரு நல்ல ட்ரெக்கிங் அனுபவத்தை தரும். 


இங்கு மீன்களைப் பிடிப்பதற்காக 'ஆங்லிங்' என்ற தூண்டிலை வாடகைக்கு விடுகிறார்கள். இந்த தூண்டிலின் விஷேசம் என்னவென்றால், தூண்டிலில் மீன்கள் மாட்டிக்கொன்டப் பின் சிறிது நேரத்தில் தானகவே விடுபட்டுவிடும். ஒவ்வொருவரும் எத்தனை மீன்களை பிடித்தார்கள் என்று  கணக்கு வைத்து எண்ணி விளையாடலாம். 

இங்கு மகாசீர் என்ற பெரிய மீன்களை தவிர கெளுத்தி, கெண்டை போன்ற பல வகை மீன்களும் கிடைக்கின்றன. பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தொழில் முறையில் மீன்களை பிடித்து விற்பனை செய்யும் மீனவர்களும் இங்குண்டு. 

மலபார் ராட்சஸ அணில்
காவிரிக் கரையோரத்தில் அமைந்த இந்த வனப்பகுதியில் காட்டுப்பன்றி, சாம்பார் மான், புள்ளி மான், ராட்சஸ அணில், சிறுத்தை, யானை, மலபார் ராட்சஸ அணில், குள்ள நரி, முதலைகள், ஆமைகள், பச்சோந்திகள், நாகப்பாம்புகள், மலைப்பாம்புகள் போன்ற அனைத்துவகையான உயிரினங்களையும் பார்க்கலாம். 


இதுபோக 230 வகைப் பறவைகளையும், பலவித மூலிகைச் செடிகளையும் இங்கு சாதரணமாக தரிசிக்கலாம். அடர்ந்த வனப் பகுதி என்பதால் இயற்கையின் அழகு முழுவதும் இங்கு கொட்டி கிடக்கிறது. மீன் பிடிப்பதற்கென்றே குடில்கள் அமைத்திருக்கிறார்கள். இந்த குடில்களுக்கு போகும் பாதைகள் தான் கரடு முரடாக இருக்குமே தவிர குடில்கள் பட்ஜெட் ஹோட்டல்களை ஞாபகப்படுத்தும் அளவிற்கு தரமாகவே இருக்கின்றன.


இங்கு பரிசலில் போய்வருவதும் படகில் பயணம் செய்வதும் மறக்கமுடியாத அனுபவத்தை தரும். 'தில்' இருப்பவர்கள் அகன்று ஓடும் காவேரி ஆற்றை நீந்திக் கடந்து அக்கரையில் இருந்து 'டாட்டா' காட்டலாம். இன்னும் கொஞ்சம் 'தில்' இருந்தால் மலை முகட்டில் தைரியமாக பைக் ஓட்டலாம், இல்லையென்றால் காலார நடக்கலாம், பாறையில் கயிற்றைப் பிடித்து ஏறலாம். 


இப்படி ஏகப்பட்ட  சாகசங்களும் இங்கு குவிந்திருக்கின்றன. இயற்கை அழகும், பறவைகளின் ஓசையும் வாழ்நாள் முழுவதும் நினைவை விட்டு நீங்காத இடம் இது. மின்சாரம் இல்லாத காடு என்பதால் குடில்களுக்குள் லாந்தர் விளக்குதான்.  மொபைல் போன்ற நவீன சாதனங்கள் எதுவும் இங்கு வேலை செய்யாததால் இயற்கையை முழுமையாக கொண்டாடலாம்.

இதெல்லாம் சரி, ஊட்டி, கொடைக்காணல் போல் குளிருமா என்று கேட்கலாம். குளிருக்கும் குளுமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. குளிர் கொஞ்சம் கொடுமையானது. குளுமை எப்போதும் இனிமையானது. கலிபோரேவில் நிலவுவது குளுமை. அதுவும் ரசிக்கும்படியான குளுமை. 

ஜங்கிள் லாட்ஜஸ் ரிசார்ட்ஸ்
உடனே பெட்டிப் படுக்கையோடு கிளம்புகிறவர்களுக்கு ஒரு டிப்ஸ். முதலில் 'ஜங்கிள் லாட்ஜஸ் ரிசார்ட்ஸ்' (080-40554055) என்ற குடில் அமைப்பளர்களுக்கு ஒரு போன் போடுங்கள். முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இப்போதைய நிலவரப்படி ஒருவர் ஒரு இரவு தங்க கட்டணம் உணவுடன் சேர்த்து ரூ.4,400/- வசூலிக்கிறார்கள். 

மீன் பிடிப்பதற்கான 'ஆங்லிங்' தூண்டிலுக்கான ஒரு நாள் வாடகை ரூ.2,000/- 

சீசன் காலம்: செப்டம்பர் - ஏப்ரல்.


படங்கள்: கூகுள் இமேஜ்

திங்கள், ஏப்ரல் 20, 2015

வேதனை பதிவு தந்த சாதனைனிதனின் உணர்வோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிக கவனம் பெரும் என்பது உண்மையே. நேற்று முன் தினம் நான் பதிவிட்ட 'மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு' என்ற பதிவு  எனது வலைப்பூ வரலாற்றில் சாதனை படைத்த பதிவாக மாறிவிட்டது.பொதுவாக நான் வெளியிடும் பதிவுகள் அதிகபட்சமாக 500 பார்வைகள் வரை போகும். பயணம் குறித்த பதிவு என்றால் 1,000 - த்தை தாண்டும். அவ்வளவுதான். ஆனால் பதிவிட்ட 24 மணி நேரத்துக்குள், (அதாவது நேற்று ஞயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குள்) 11,400 பேர் அந்த ஒரு பதிவை மட்டும் படித்திருக்கிறார்கள் என்றால் அது சாதனைதானே! அன்று ஒருநாள் மட்டும் மொத்தமாக 12,998 பேர் வந்திருக்கிறார்கள். எனது வலைப்பக்கத்தில் வருகை தந்தவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 38,000 லிருந்து 51,000 ஆக உயர்ந்தது.


இதெல்லாம் ஒரு சாதனையா என்று அனுபவம் வாய்ந்த பதிவர்கள் சொல்லலாம். தவழும் குழந்தைக்கு எழுந்து நிற்பதே சாதனைதான். ஓட்டமாக ஓடும் பெரியவர்களுக்கு நிற்பது சாதனையாக தெரியாது. அந்த தவழும் குழந்தை நிலையில்தான் நான் இருக்கிறேன்.

இப்போதைய கணக்குப்படி இந்த பதிவு 14,100 என்ற எண்ணிக்கையை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

வேதனை மிகுந்த இந்த பதிவை இத்தனை பேரிடம் கொண்டு சேர்த்ததில் பதிவர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் நிறைய பங்கிருக்கிறது. அவர்கள் தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டதால்தான் இது நிகழ்ந்தது.

 அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.


அன்புடன்

எஸ்.பி செந்தில்குமார்


சனி, ஏப்ரல் 18, 2015

மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு


ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். இன்று அவளுக்கு 'புனித சடங்கு'. இந்த சடங்கு அங்கு வாழும் 98% பெண்களுக்கு செய்யப்படுள்ளது. இது ஒரு கொடூரமான சடங்கு.

கேட்கவே மனம் பதைபதைக்கும் கொடூரம்! உலகம் எப்படி மூடநம்பிக்கையில் திளைத்திருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம்! இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

பிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளில் கூட இந்த அடையாளம் காணப்படுகிறது. அதுதான் இந்த சடங்கு 3,000 ஆண்டுகள் பழமை  மிக்கது என்று உலகுக்கு காட்டுகிறது.

தற்போதும் கூட 28 ஆப்பிரிக்கா  நாடுகளில் இந்த பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98% பெண்களுக்கு இந்த சடங்கு பெருமையோடு நடத்தப் பட்டிருக்கிறது.

இங்கு பெண்ணாகப் பிறந்த எல்லோருக்குமே கட்டாயமாக இதை செய்கிறார்கள். அப்படி செய்யாத பெண்கள் தீட்டு கழியாத புனிதமற்ற பெண்களாக கருதி வெறுத்து ஒதுக்குகிறார்கள். அந்த சடங்கின் பெயர் 'பெண் சுன்னத்'. உலக சுகாதார மையம் இதை 'பெண்ணுறுப்பு சிதைவு' என்கிறது.

அந்த நாடுகளில் எல்லாம் இந்தக் கொடுமை போற்றுதலுக்குரிய புனிதமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாடுகளில் வாழும் 13 கோடி பெண்களின் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 6,000 பெண்களுக்கு இது  நடத்தப்படுகிறது.

எதனால் இப்படி..?

அவர்கள் புனிதமாக கருதும் கலாச்சார விதி, 'பெண்கள் சைத்தானின் வடிவங்கள். அவர்களைப் பார்த்தால் பாலுணர்வு மட்டுமே தோன்றும். அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள். ஆகவே அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் அவர்கள் ஒழுக்கத்தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கியமாய் இருப்பார்கள்.' என்கிறது.

மேலும்  யோனி வெட்டும் முறையும் அதில் கூறப்படுகிறது. இதனாலே இது பெண்களின் மறுக்க முடியாதா சம்பிரதாயமாக முக்கியத்துவம் பெறுகிறது.


பெண்களின் 4 வயது முதல் 10 வயதுக்குள் இதை செய்து விடுகிறார்கள். இதை செய்த பின் பெண்ணின் செக்ஸ் ஆர்வம் முற்றிலுமாக அழிந்துவிடும். மிக சொற்பமாக மனதளவில் மட்டுமே பாலியல் எண்ணம் தோன்றும்.

இயல்பாக பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஏற்படக்கூடிய கிளர்ச்சியும், எழுச்சியும் இந்த சடங்குக்குப் பிறகு ஏற்படுவதில்லை. இதனால் இந்தப் பெண்கள் தவறான வழியில் போகமாட்டார்கள். வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். செக்ஸ் உணர்வு இல்லாததால் காலம் முழுக்க கற்போடு இருப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆணாதிக்கம் திணித்த பெண் அடிமைத்தனமும் இதன் பின்னே இருக்கிறது.

சரி, அப்படி என்னதான் நடக்கிறது இந்த சடங்கில்...???

இளகிய மனம் படைத்தவர்கள் இந்த வீடியோவை 
தயவுசெய்து பார்க்க வேண்டாம்..! 


இதை ஆங்கிலத்தில் 'பீமேல் ஜெனிடல் மியுட்டிலேஷன்' என்பார்கள். தமிழில் பெண்ணுறுப்பு சிதைவு. பெண்ணுறுப்பில் 'க்ளிட்டோரியஸ்' என்ற பகுதிதான் உணர்ச்சி மிகுந்தது. ஆணுக்கு உடலில் எந்த இடத்தில் ஆணுறுப்பு இருக்குமோ, அதே இடத்தில் பெண்ணுக்கு இருக்கும் ஆணுறுப்பின் எச்சம்தான் 'க்ளிட்டோரியஸ்'.

ஆணுறுப்பில் எந்தளவுக்கு உணர்ச்சி இருக்குமோ அதே அளவு உணர்ச்சி சிறியதாக மொட்டுப் போல் இருக்கும் க்ளிட்டோரியசிலும் அப்படியே இருக்கும். உணர்வு ததும்பும் இந்த பாகத்தை வெட்டி எடுப்பதுதான், பெண்ணுறுப்பு சிதைவின் முதல் பகுதி.


இந்த வெட்டும் வேலையை செய்வது டாக்டர்களோ அறுவை சிகிச்சை நிபுணர்களோ இல்லை. வயது முதிர்ந்த கிழவியோ அல்லது பெண்ணின் தாயோ தான். எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் கதற கதற ரண வேதனையோடு அறுத்தெரிவதுதான் முதல் நிலை. மருத்துவத்தில் இதற்கு 'க்ளிட்டோரிடேக்டமி' என்று பெயர்.

சடங்கின் இரண்டாம் நிலை, யோனியின் பக்கவாட்டில் இருக்கும் உதடுகளை வெட்டி எடுப்பது. இந்தப் பகுதிதான் உறவின்போது பெண்ணுக்கு இன்பத்தை அதிகப்படுத்துவது. அதையும் பிளேடால் அறுத்து எடுத்துவிடுவார்கள். இதனை 'லேபியாபிளாஸ்டி' என்று மருத்துவம் சொல்கிறது.

அதன்பின் மூன்றாம் நிலை, பெண்ணுறுப்பின் நுழைவு வாசலை ஊசி நூல் கொண்டு தைத்து மூடிவிடுவது. சிறுநீர், மாதவிலக்கு திரவம் வெளியேற சின்னதாக இரண்டு துளை மட்டும் ஏற்படுத்தி விடுவார்கள். இதற்கு 'வெஜைனாபிளாஸ்டி' என்ற மருத்துவப் பெயரும் உண்டு.

 இதை செய்வதற்கு வீட்டில் உள்ள கத்தி, பிளேடு, கண்ணாடி துண்டு, கத்திரி, சாதாரண ஊசி நூலையே பயன்படுத்துகிறார்கள்.


மூன்று நிலையும் முடிந்த பின்னே பெண்ணின் தாய் உறவினர்களிடம் வந்து 'என் மகள் பெண்ணாக மலர்ந்துவிட்டாள்' என்று மகிழ்ச்சியோடு சொல்வார். உடனே மதுவோடு விருந்து டாம்பீகமாக நடக்கும். உள்ளே வீட்டின் பின்புறத்தில் ஒரு மூலையில் இரண்டு காலையும் சேர்த்துக் கட்டிய நிலையில் தாங்கமுடியாத வேதனையோடு பெண்ணாக மலர்ந்த சிறுமி கதறி அழுது கொண்டிருப்பாள். இனி அந்தப் பெண் உணர்ச்சியற்ற ஜடம்.


காயங்கள் ஆறுவதற்காக 40 நாட்கள் கால்களை சேர்த்தே கட்டிப்போட்டு விடுவார்கள். கொடுமைகள் நிறைந்த இந்த சடங்கு உருவாக்கும் வலி, வேதனை, அதிர்ச்சி, பலவிதமான உடல் சார்ந்த நோய்களை பெண்ணுக்கு கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான பெண்கள் இதற்கு பின் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.


இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் இதை பெண்கள் தொடர்ந்து செய்து கொள்வதற்கு காரணம் அசைக்க முடியாத மத மற்றும் மூட நம்பிக்கைதான். இந்த சடங்கு பெண்ணுக்குரிய தீட்டை மறைத்துவிடும். உடலில் உள்ள துர்நாற்றத்தை நீக்கிவிடும். முகம் அழகு பெறும், பெண்மை அதிகரிக்கும் என்று ஏகப்பட்ட நம்பிக்கைகள் போதிக்கப்படுகின்றன.

பெண்ணுக்கு திருமணமானவுடன் கணவன்தான் பெண்ணுறுப்பின் தையலைப் பிரிப்பான். அவள் இன்னும் கன்னிதான் என்பதற்கான சாட்சி அந்த தையல்தான்.

பெண்ணுறுப்பின் வாசலை குறுக்கி தையல் போடுவது உடலுறவின் போதும் குழந்தை பிறப்பின் போதும் தாங்க முடியாத வலியையும் சிக்கலையும் உருவாக்குகிறது. இதனால் பிரசவத்தின் போது குழந்தை இறப்பதோ தாய் இறந்து போவதோ அதிகமாக நடக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் முட்டாள்தனமான சடங்குதான் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது.

எகிப்து நாட்டில் ஒரு 12 வயது சிறுமிக்கு இந்த சடங்கு செய்யும் போது வலி தாங்க முடியாமலும் அதிக உதிரம் வெளியேறியதாலும் இறந்துவிட்டாள். அது அங்கு பெரிய போராட்டமாக வெடித்தது. அதை தொடர்ந்து 2007-ம் ஆண்டு இந்த சடங்கை எகிப்து அரசு தடை செய்தது. ஆனாலும் மற்ற நாடுகளில் இந்த கொடூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


சிறு வயதில் இந்த சடங்கை செய்து கொண்டு பின்னாளில் மிகப் பெரும் மாடலாக வலம் வந்த வாரிஸ் டேரி என்ற சோமாலியப் பெண் இதை 'தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்' என்கிறார்.

சிறுவயதில் அவருக்கு நடந்த சடங்கை இப்படி சொல்கிறார்,

"நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.

பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.

பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.

‘த்துப்..’

பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.

நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.

அடுத்த நொடி…

‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.

படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.

‘அய்யோ…!’ -நரக வேதனை.

அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.

‘கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’

ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.

சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.

தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.

ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன."


வாரிஸ் டேரி
என்ன கொடூரம்..! அதோடு நிறுத்தவில்லை வாரிஸ், இந்த சடங்கால் தனது செக்ஸ் உணர்வு முற்றிலும் காணமல் போனதை இப்படி சொல்கிறார்.

"செக்ஸ் என்றால் என்ன? இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.

வாரிஸ் டேரி
3,000 ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்தவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது. சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைக்காது. கூர்மையான பாறைக் கற்கள்தான்.

நான் பிழைத்துவிட்டேன். ஆனால், லட்சக் கணக்கான என் சகோதரிகள்? அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?

மத அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து என்று நண்பர்கள் அஞ்சுகிறார்கள். இருக்கட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கவேண்டும் என்று குரானில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள்!’’ என்று நடைபெறும் அயோக்கியத்தனத்தை தட்டிக் கேட்கிறார்.

பெண்ணுறுப்பு சிதைவுக்கு எதிரான இயக்கத்துக்கு இவரைத்தான் தூதுவராக உலக சுகாதார அமைப்பு நியமித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 6-ம் நாளை உலக பெண்ணுறுப்பு சிதைவு எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வாரிஸ் டேரி வாழ்க்கையை சொல்லும் புத்தகம்
மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலம் வரை எந்த பிரச்சனையும் இல்லை. அவனே ஓரிடத்தில் நிலையாக தங்கி சொத்து சுகங்களை சேர்த்தப் பின் தனது வாரிசில் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவன் பெண்ணை படுத்திய பாடு இருக்கிறதே..

உலகம் உள்ள வரை ஆணிணத்துக்கு பெண்ணிடம் இருந்து மன்னிப்பு கிடைக்காது. இத்தனை பாவம் செய்த ஆண் என்ன பரிகாரம் செய்து அந்த பாவங்களை கழுவப் போகிறானோ தெரியவில்லை.

இதை எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள பெண்களுக்கு கல்வியறிவோ பொருளாதார சுதந்திரமோ இல்லை. அதனால் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னமும் இந்த சடங்கு செய்த பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லும் அந்த நாட்டு ஆண்களை என்ன செய்வது..??!!

ஐ.நா. சபை இதை மனித உரிமை மீறல் என்று சொல்லியும் குறைந்த பாடில்லை..
வெள்ளி, ஏப்ரல் 17, 2015

சிக்னலில் காத்திருக்கும் தவிப்பான நேரம்போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது ஏற்படும் எரிச்சல் சொல்லிமாளாது. சில நேரங்களில் நிமிடக்கணக்கில் நேரம் ஓடிக்கொண்டே இருக்கும். யார் இந்த நேரத்தை 'செட்' செய்தது என்று நொந்து கொள்ள வைக்கும். இந்த நேர நிர்ணயத்திற்குப் பின்னால் ஒரு 'சயின்ஸ்' இருக்கிறது.

பெருநகரங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவால். பல இடங்களில் சிக்னல்கள், ஆங்காங்கே போலீஸ் நின்றாலும், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியதாகிவருகிறது.

குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்குவோம்.என்று கணக்கிட்டு முன்னதாகவே புறப்பட வேண்டியுள்ளது.பெருநகரங்களில் இயங்கும் சிக்னல்கள் அனைத்திலும் நேரம் குறிக்கப்பட்டிருக்கும். அந்த வழித்தடத்தில் ஒவ்வொரு திசையிலும் ஒரு குறிப்பிட்ட வினாடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

காலை முதல் மாலை வரை எல்லா நேரத்திலும் அந்த சிக்னல்கள் ஒரே மாதிரி காத்திருக்கும் நேரத்தை காண்பிப்பதில்லை. நேரத்திற்கு ஏற்ப அங்கு காத்திருக்கும் நேரமும் மாறும்.

உதாரணமாக ஒரு முக்கிய சாலை சந்திப்பில் கிழக்கில் இருந்து மேற்காக செல்ல வாகனங்கள் 'பீக் ஹவர்' நேரங்களில் 180 வினாடிகள் காத்திருக்கிறது என்றால், பிற நேரங்களில் அது 150, 120, 80, 60 வினாடிகள் என மாறிக்கொண்டே இருக்கும்.


சரி, இந்த போக்குவரத்து சிக்னல்களுக்கு எப்படி நேரத்தை நிர்ணயிக்கிறார்கள்? அங்குதான், தண்ணீர் ஒப்பீடு வருகிறது. அந்த சிக்னலை ஒவ்வொரு வினாடியும் கடந்து செல்லும் வாகனங்களை வைத்து அதை தண்ணீருடன் ஒப்பிட்டு இந்த விநாடிகளை நிர்ணயிக்கிறார்கள்.

சாதாரணமாக, நீரோட்டம் தடையில்லாமல் செல்லும் போது அந்த இடத்தை அது வேகமாக ஓடி கடந்து விடும். இதில் நீர் தேங்கி நிற்பதில்லை. இதை தடையற்ற நீரோட்டக் காலம் என்கிறார்கள். இது நெரிசலின்றி போக்குவரத்து செல்லும் நேரத்தை குறிக்கும். இதனை 'ரன்னிங் ஸ்டேடஸ்' என்று குறிப்பிடுகிறார்கள். அந்த நேரங்களில் சிக்னல்களில் மிக குறைந்த வினாடிகளே காத்திருக்கும் நேரத்தை  நிர்ணயிக்கிறார்கள்.

அடுத்தது 'ஸ்லோரன்னிங் ஸ்டேடஸ்'. போதுமான சரிவு இல்லாத இடத்தில் செல்லும் நீர் மிக மெதுவாக செல்லும். இதை போக்குவரத்தோடு ஒப்பிடும்போது நெரிசல் இருக்கும். ஆனால், தேங்காத நிலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருக்கும். இது காலை 8 மணிக்கு முன்பும் மாலை 7 மணிக்கு பின்பும் உள்ள நிலை. இந்த நேரத்தில் 'பீக் ஹவர்' காலத்தை விட பாதியாக சிக்னல் நேரத்தை நிர்ணயம் செய்வார்கள்.


அடுத்ததாக 'ஸ்லோவாக்கிங் ஸ்டேடஸ்'. இது தேங்கி இருக்கும் நிலை. தண்ணீர் செல்லமுடியாமல் ஆங்காங்கே ஏற்பட்ட தடைகளால் தேங்கி நிற்பது. அதுபோன்று ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பல பகுதிகளில் இருந்தும் வருவதால் போக்குவரத்து தேக்க நிலையை அடைவதை குறிக்கும்.

அந்த நேரத்தில் ஒவ்வொரு திசையிலும் இருந்து ஒரு வினாடிக்கு வரும் வாகன எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் 'பீக் ஹவர்' எனப்படும் காலை மாலை நேர பகுதி. இந்த நேரத்தில் மிக அதிக வினாடிகள் சிக்னலில் காத்திருக்க வேண்டி வரும்.

எனவே, சிக்னலில் டிஜிட்டல் மீட்டர் காட்டுவது ஒரு தனி மனிதன் நிர்ணயிக்கும் நேரம் அல்ல. தண்ணீரின் ஓட்டத்துடன் வாகனங்கள் ஓட்டத்தை ஒப்பிட்டு பல ஆய்வுகளை நடத்தித்தான் காத்திருக்கும் நேரத்தை நிர்ணயிக்கிறார்கள்.

இனி சிக்னலில் காத்திருக்கும் போது, "இவர்கள் இஷ்டத்துக்கு நேரத்தை வைத்துவிடுகிறார்கள்" என புலம்ப மாட்டீர்கள்தானே.!


வியாழன், ஏப்ரல் 16, 2015

எம்.ஜி.ஆர்.-யை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை எல்லீஸ் டங்கன்மிழ் சினிமாவில் ஒதுக்கி புறம்தள்ள முடியாத மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் எல்லீஸ் ஆர்.டங்கன். இவர் ஒரு அமெரிக்கர். ஆனால், அமெரிக்காவில் ஒரு படம் கூட எடுத்ததில்லை. இவர் தனது சினிமா தாகத்தை தீர்த்துக்கொள்ள தேர்ந்தெடுத்த இடம் இந்தியா, அதிலும் தமிழ்நாடு.

எல்லீஸ் ஆர்.டங்கன்
 அமெரிக்காவில் இவர் படம் எடுக்காமல் இந்தியா வந்ததற்கு காரணம் இருக்கிறது. ஆரம்பக் கால தமிழ் சினிமாவில் பிராமணர்கள் ஆதிக்கம் இருந்ததுபோல், அமெரிக்காவின் பல துறைகளிலும் யூதர்களின் கையே ஓங்கியிருந்தது. சினிமாவிலும் அவர்களே முழு ஆதிக்கம் செலுத்தினர். அவர்களுடன் போட்டிபோடுவது சாதாரணமான விஷயமில்லை. இன்றைக்கும் கூட புகழ்பெற்று விளங்கும் பல ஹாலிவுட் இயக்குநர்கள் யூதர்களே. ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

'சதிலீலாவதி'யில் எம்.ஜி.ஆர்.
எல்லீஸ் ஆர்.டங்கனின் முதல் படம் 1936-ல் வெளிவந்த 'சதிலீலாவதி'. ஆனந்த விகடனில் எஸ்.எஸ்.வாசன் தொடராக எழுதிய கதையே அது. அந்த படத்தில்தான் எம்.ஜி.ஆர்.ஒரு துணை கதாபத்திரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டார்.

இந்தியாவின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டு விலகாதவர்களாகவே அன்றைய பெண்கள் இருந்தார்கள். அதைதான் தமிழ் படங்களும் சித்தரித்து வந்தன. இதை மாற்றி மதுக் கோப்பைகளை கையில் ஏந்திய மங்கையர்கள் கவர்ச்சி நடனம் ஆடும் கிளப் டான்ஸ் பாடல்களை தனது முதல் படத்திலேயே அறிமுகம் செய்தார். படம் மாபெரும் வெற்றியைக் கொண்டாடியது.

'அம்பிகாபதி' படப்பிடிப்பில்
டங்கனின் இரண்டாவது படம் 1937-ல் வெளிவந்தது. அன்றைய சூப்பர் ஸ்டாரான தியாகராஜாபாகவதர் நடித்த 'அம்பிகாவதி' படம்தான் அது. எந்த சூழ்நிலையிலும் தான் நடிக்கும் படத்தில் எந்த நடிகையுடனும் நெருங்கி நடிப்பதில்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வந்தார். ஆனால், அப்படிப்பட்ட  பாகவதரையே அந்த படத்தின் கதாநாயகியுடன் நெருக்கமாக நடிக்க வைத்தார் டங்கன். அதனால், திரையுலகின் முதல் 'காதல் மன்னன்' என்ற பட்டம் பாகவதரை வந்து சேர்ந்தது.


அதன்பின், 1940-ல் இவர் இயக்கிய 'சகுந்தலை' படத்திலும், 1945-ல் வெளியான 'மீரா' படத்திலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியை முக்கியமான வேடத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில்தான் முதன்முதலாக  குளோஸ்-அப் காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. திரை முழுவதும் தெரிந்த சுப்புலட்சுமியின் முகத்தைப் பார்த்து பார்த்து பரவசமடைந்தார்கள் ரசிகர்கள்.

'மீரா'வில் எம்.எஸ்.சுப்புலட்சுமி 
1950-ல் இவர் இயக்கி வெளிவந்த 'மந்திரகுமாரி' படத்தில் முதன்முதலாக டிராலி ஷாட்டை அறிமுகபப்டுத்தினார். டிராக் அமைத்து அதன் மீது டிராலியில் கேமராவை வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன.

'மந்திரிகுமாரி'யில்  எம்.ஜி.ஆர்.
காரின் மீது பிளாட்பாரம் போன்ற அமைப்பை உருவாக்கி, கேமராவை அதன் மீது வைத்து நடிகர்கள் குதிரைகளின் மீது வேகமாக பாய்ந்துவரும் காட்சியை அற்புதமாக படமாக்கி காண்பித்தார். அதன் பின்னர்தான் இந்த தொழில் நுட்பங்கள் எல்லாம் தமிழ் படங்களில் பயன்படுத்தப்பட்டன.

ஹாலிவுட் டெக்னிக்கை தமிழில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர், எல்லீஸ் ஆர்.டங்கன் தான். தமிழ் சினிமா புதிய உயரங்களை தொடுவதற்கு அஸ்திவாரம் அமைத்தவர், டங்கன் என்பதை மறுக்க முடியாது.
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...