வெள்ளி, மே 29, 2015

அமெரிக்க ஜனாதிபதியை ஈர்த்த இந்திய விவசாயி


குடிவாடா நாகரத்தினம் நாயுடு

ரு விவசாயிடம் பேட்டி எடுப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. நானென்ன நான்..!  ஒரு மாநில முதல்வரே இவரது பண்ணை விஜயத்தை ஒரு நாள் நிகழ்ச்சியாக வைத்திருக்கும் போது; ஆந்திர அரசு இவரைப் பற்றிய பாடத்தை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு சேர்த்திருக்கும் போது; அமெரிக்க ஜனாதிபதியே இவரை தேடி இந்தியா வந்திருக்கும் போது நான் எம் மாத்திரம்..!
பள்ளிப் பாடமாக நாகரத்தினம்
நான் ஹைதராபத்தில் இறங்கிய போது அவர் அங்கு இல்லை. டெல்லியில் இருந்தார். தேசிய அளவில் நடைபெறும் சாதனை விவசாயிகள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அவருக்கு அன்று பாராட்டும் 10 லட்சம் பணமும் ரொக்கமாக அளிக்கப்படுகிறது. அந்த நிகழ்சிக்காக அவர் அங்கு போயிருக்கிறார்.  திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகும் என்றார்கள். இரண்டு நாட்களாக ஹைதரபாத்தை சுற்றி திரிந்தேன். மூன்றாவது நாளில் அவர் வீட்டில் போய் நின்றேன். வசதியான வீடு..!

செழிப்பான பணத்தில் கட்டியது என்பதை வீட்டின் தோற்றமே காட்டியது. காலிங் பெல்லை அழுத்தி காத்திருந்தேன். நான் யாருக்காக இத்தனை கி.மீ. பயணித்து வந்தேனோ அவர்தான் கதவை திறந்தார். அந்த மாமனிதரின் பெயர்  குடிவாடா நாகரத்தினம் நாயுடு.

இந்த பெயர்தான் மதுரையிலிருந்து ஹைதராபாத் வரை என்னை அழைத்துக் கொண்டு போனது. தில்சுக் நகரில் உள்ள கெளதம் நகர் காலனியில் அவர் வீடு இருந்தது. வீடு முழுவதும் விருதுகள் அலங்கரித்து நின்றன. 336 விருதுகள், 9 சர்வதேச விருதுகள் என்று வீடு கொள்ளா பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.

தென்னாப்பிரிக்காவில் கொடுத்த விருது
என்னை வரவேற்ற அவர் முதலில் அவரது வீடு முழுவதையும் சுற்றிக் காண்பித்தார். பாத்ரூம் பிட்டிங்க்ஸ் கூட எங்கிருந்து வரவழைத்தது என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு இதையெல்லாம் செய்கிறார் என்று தெரியவில்லை.

"வீட்ட முழுசா பாத்துட்டீங்களா..! எப்படி இருக்கு..?"

"ஒரு டாக்டரோட வீடு மாதிரி 'ரிச்'சா இருக்கு..!"

"அதுக்காகத்தான், வீட்ட சுத்தி காண்பிச்சேன். ஒரு விவசாயி, டாக்டர் மாதிரியோ என்ஜினியர் மாதிரியோ ஏன் வாழ முடியாது? அவர்களும் வசதியாக வாழ முடியும் என்பதுதான் எனது கான்செப்ட். இதை மற்ற விவசாயிகளுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான், உங்களுக்கு வீடு முழுவதும் சுத்திக் காண்பிச்சேன். இந்த வீடு கூட என்ஜினியர் உதவியில்லாமல் நானே டிசைன் செய்து வடிவமைத்து கட்டியதுதான்" என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கொடுத்தார்.

அவர் சொன்ன மாதிரியே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் குடி இருக்கும் கௌதம் காலனி கூட வசதியானவர்கள் வாழும் இடம் தான். மேற்கொண்டு அவர் பேசியதிலிருந்து...

"நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் பாலகிருஷ்ணபுரத்தில்தான். எனது தாய் தந்தையரும் விவசாயிகள்தான். பள்ளிப்படிப்பை எனது சொந்த ஊரில் முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்காக சென்னை ரயிலேறினேன். அங்கு 'டிப்ளமோ இன் எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங்' படித்து முடித்தேன். அதன்பின் அண்ணா சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். நல்ல வேலை, நல்ல சம்பளம். ஆனாலும் என் மனம் நிலை கொள்ளவில்லை. என் நாட்டமெல்லாம் விவசாயமாகவே இருந்தது.

மனைவி மகளுடன் நாகரத்தினம்
விவசாயத்தில் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னை தூங்க விடாமல் செய்தது. இரண்டு வருடங்களில் வேலையை விட்டு விட்டு ஹைதராபாத் வந்தேன். அதற்குள் திருமணமும் முடிந்தது. கையில் சேமித்து வைத்திருந்த பணத்திற்கு ரெங்காரெட்டி மாவட்டத்தில் தரமதி பேட்டை என்ற இடத்தில் 17 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். கரடுமுரடான பாறைகள் நிறைந்த அந்த இடம் விவசாயத்திற்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள். துணிந்து வாங்கினேன். என்னிடம் இருந்த பணத்திற்கு அப்படிப்பட்ட நிலம்தான் கிடைத்தது. முழுவதும் தரிசாக கிடந்த அந்த நிலத்தை வளமாக்கி விளைவிக்க போராடினோம்.

நாகரத்தினத்தின் பசுமையான வயல்
“நான், எனது மனைவி சத்யவதி, எனது தாயார் மூவரும் இரவு பகலாக கடினமாக உழைத்து தரிசு நிலத்தை தங்கம் விளையும் பூமியாக மாற்றினோம். இப்போது எனது நிலத்தில் ஊட்டி, கொடைக்கானலில் வளரும் பூச்செடிகளையும், காபி செடிகளையும் கூட வளர்க்க முடிகிறது. அந்தளவிற்கு வளமிக்க மண்ணாக நிலம் மாறியுள்ளது. விவசாயி என்பவன் எதையும் வெளியில் காசு கொடுத்து வாங்கக் கூடாது என்பதுதான் எனது எண்ணம்.

அவனுக்கு வேண்டிய உணவை அவனே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். நான் விவசாயத்திலே சம்பாதித்து, அதிலே சாப்பிட்டு, அதிலே வருமானமும் பார்க்கிறேன். நான் ஒரே வகையான பயிர்களை நிலம் முழுவதும் வளர்ப்பதில்லை. கலப்பு பண்ணை முறையில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறேன்.

'திருந்திய நெல் சாகுபடி' முறையில் நெற்பயிர்கள்
2003-ம் ஆண்டு இந்தியாவில் 'திருந்திய நெல் சாகுபடி' முறையை முதன்முதலாக பயன்படுத்தி ஒரு ஹெக்டேருக்கு 15.4 டன் நெல்லை உற்பத்தி செய்து சாதனைப் படைத்தேன். இதுநாள் வரை இதுதான் அதிக விளைச்சலுக்கான சாதனையாக உள்ளது. என்னை பின்பற்றி அடுத்த ஆண்டு ஆந்திராவில் உள்ள 10,500 விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில், பயிரிட்டார்கள். இதற்காக பல இடங்களுக்கு சென்று பேசினேன். வெளிநாடுகளில் இருந்தும் என்னை அழைத்தார்கள்.

இந்த நிலையில்தான் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி எனக்கொரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார். அதற்காக எனது நிலத்துக்கு அருகில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைத்து, எனது பண்ணையில் ஒருநாள் முழுவதும் இருந்தார். ஒரு சாதாரண விவசாயியை தேடி மாநில முதல்வர் வந்தது அதுதான் முதல் முறை.

அந்த நிகழ்ச்சிக்கு பி.பி.சி., சி.என்.என்.தொலைக்காட்சி முதற்கொண்டு இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் ஒரு மாதத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள்? என்று கேட்டார். இதன்மூலம் தனது ஆட்சியில் விவசாயிகள் மிக நன்றாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் மூலம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதுதான் அவர் எண்ணம்.


நான் வருமானத்தை சொல்லவில்லை. மாநிலத்திலே மிக அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு அதிகாரியை விட நான் அதிகமாக சம்பாதிக்கிறேன். நிம்மதியாக இருக்கிறேன் என்றேன்.

அதற்கடுத்த ஆண்டு 2006-ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தார். அவர் தனது நிகழ்ச்சியில் என்னை சந்திப்பதையும், ஒரு நிகழ்ச்சியாக வைத்திருந்தார். எனது விவசாய முறையை அறிந்த அவர், ஒரு விவசாயி, ஒரு விஞ்ஞானியை விட மேன்மையானவர் என்றார். என்னை அமெரிக்கா வரும்படி அழைத்தார். 'எனது சேவை எனது தாய் நாட்டுக்கே' என்ற கொள்கையில் உறுதியாக இருந்த நான் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்.

இந்த அலங்கார மலர் ஒன்றின் விலை ரூ.250
நான் பிழைக்க முடியாமல், பிழைக்கத் தெரியாமல் விவசாயத்திற்கு வரவில்லை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விவசாயத்திற்கு வந்தேன். இந்த 17 ஏக்கர் நிலத்தை ரூ. 3.4 லட்சத்திற்கு வாங்கியபோது என்னிடம் வேறு எந்த பணமும் இல்லை. இன்றைக்கு எனது சொத்தின் மதிப்பு 17 கோடி ரூபாய். விவசாயம் மூலமே இந்த வருமானம் வந்தது. என்னால் முடியும்போது மற்ற விவசாயிகளாலும் முடியும். என் சொத்து மதிப்பை பகிரங்கமாக வெளியிடுவதற்கு  காரணமே, விவசாயம் நஷ்டம் தரும் தொழில் என்று விவசாயிகளே நினைக்கிறார்கள். திட்டமிட்டு பயிரிடுங்கள் பூமித்தாயைப்  போல் அள்ளிக் கொடுப்பவள் யாரும் இல்லை. அதற்கு நானே உதாரணம்.


இயற்கை ஒத்துழைத்தால் உணவு உற்பத்தி செய்வது வெகு சுலபம். பெரும்பாலான விவசாயிகள் விளைவிப்பதோடு தங்களின் கடமை முடிந்ததாக நினைக்கிறார்கள். இங்கு சந்தைப்படுத்துவதுதான் கடினம். அதை சரியாக செய்தாலே போதும். விவசாயம் பணம் கொட்டும் ஒரு தொழிலே தான்.

வாட்டி எடுக்கும் வெயிலில் கூட காப்பி செடி
எனது நிலத்தில் இதுவரை செயற்கை உரங்கள். பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தியது இல்லை. அதனால் மண் வளம் மிக நன்றாக இருக்கிறது. எந்த வகை செடியையும் என்னால் இதில் வளர்க்க முடியும். விளைபொருட்களை நேரடியாக மக்களிடம் விற்கிறேன்.

வசதியானவர்கள் திருமணத்தில் தோரணமாக தொங்கவிடப் படும் அலங்கார மலர் 
எனது பொருட்களின் உற்பத்தியைவிட தேவை அதிகம் இருக்கிறது. அதனால் 20 கிலோ அரிசி கேட்பவர்களுக்கு 10 கிலோதான் கொடுப்பேன். இயற்கையான முறையில் விளைவித்த பொருள் என்றால் மார்க்கெட்டில் விலை அதிகம். நான் அதிக விலைக்கும் விற்பதில்லை. ஒரு கிலோ அரிசி ரூ.45 என்றால், எனது விலை ரூ.47 ஆகத்தான் இருக்கும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதால் இதுவே எனக்கு நல்ல லாபம். ஆர்கானிக் முறையில் விளைந்த பொருள் சாதாரண விலைக்கே கிடைப்பதால் வாடிக்கையாளருக்கும் லாபம்.


பெரும்பாலான விவசாயிகள் ஒரே தடவையில் பணக்காரர் ஆகவேண்டும் என்று பயிரிடுகிறார்கள். ஒரே பயிர் பயிரிடக்கூடாது. விவசாயி பலவகை பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நான் 75 வகையான பொருட்களை உற்பத்தி செய்கிறேன். மாங்காய் மரங்களில் மட்டும் 35 வகைகள் உள்ளன. பெரிய இடத்து திருமணங்களில் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த அலங்கார மலர்களில் 40 வகையை இங்கு பயிரிட்டுள்ளேன். இந்த வகை மலர் ஒன்று ரூ.250  வரை விலை போகும். முகூர்த்த காலங்களில் இதன் விற்பனை நல்ல லாபத்தை தரும். இதுபோக மலர்களை பொக்கே செய்து அனுப்புவேன். இது சீஸன் வருமானம். தேங்காயை அப்படியே விற்றால் லாபம் குறைவு. அதனால் தேங்காய் எண்ணெய் எடுத்து அதை விற்றால் லாபம் அதிகம். தேங்காய் நாரை உரமாக போட்டு விடுகிறேன். இதனால் இரட்டிப்பு லாபம். இது மாத வருமானம்.

எனது பண்ணையில் 12 பசுமாடுகள் வைத்துள்ளேன். எந்த மாட்டிற்கும் நோய் வந்து ஊசியோ மருந்தோ கொடுத்ததில்லை. இயற்கையாக அது எவ்வளவு பால் கொடுக்குமோ அதை மட்டும் நாம் எடுத்துக் கொண்டாலே போதும். மாடுகளில் மற்ற மருத்துவ செலவுகள் எதுவும் வராது. பால் மூலம் தினசரி வருமானம் வரும்.

பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நாகரத்தினம்
ஒரு விவசாயிக்கு தினசரி வருமானம், வார வருமானம், மாத வருமானம், 6 மாதத்திற்கு ஒரு முறை வருமானம், ஆண்டு வருமானம் என்று ஐந்து வகையான வருமானங்கள் உண்டு.

அதை சரியாக திட்டமிட்டு செய்தாலே போதும். யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. நான் வங்கிக் கடனாகவோ அரசாங்க மானியமாகவோ ஒரு பைசா கூட பெற்றதில்லை. இது சுயமரியாதை அதிகம் கொண்ட தொழில். விவசாயி பிச்சைக்காரனில்லை. ஒரு டாக்டர், என்ஜினீயரைவிட விவசாயி என்று சொல்வதில் பெருமையடைகிறேன்” என்று கூறி தனது தோட்டத்துக்கு என்னை அழைத்துப் போனார். அங்கு பள்ளி மாணவ-மாணவிகள் இவருக்காக காத்திருந்தார்கள்.

உணவு உற்பத்தியாகும் இடத்தை பார்வையிடும் மாணவிகள்
“மாணவர்களுக்கு விவசாயம் சம்பந்தமான விழிப்புணர்வு தருவதை எனது கடமையாக வைத்துள்ளேன். இதுவரை 35 ஆயிரம் மாணவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். நகரத்தில் வளர்ந்த இன்றைய தலைமுறையினரிடம் அரிசி எங்கிருந்து வருகிறது? என்று கேட்டால் சூப்பர் மார்க்கெட் என்று பதிலளிப்பார்கள். அவர்களுக்கு அரிசி உருவாகும் இடத்தையும், ஒரு விவசாயி எத்தனை சிரமப்பட்டு அதை உருவாக்குகிறான் என்பதும் தெரிந்தால்தான் விவசாயத்தின் அருமை தெரியும். வருங்காலத்தில் அதை அழியவிடாமல் பாதுகாப்பார்கள்" என்று கூறும் நாகரத்தினம் பற்றி ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ஒரு பாடமாக ஆந்திர அரசு வைத்துள்ளது.


தலைவர்களைப் பற்றி தான் பள்ளிக்கூட மாணவர்கள் படிப்பார்கள். ஆனால் விவசாயம் அதைவிட முக்கியம் என்று உணர்ந்த அரசு இதைச் செய்திருக்கிறது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றதாலே ஏராளமான மாணவர்கள் நாகரத்தினத்தை நேரில் வந்து சந்தித்து செல்கிறார்கள். வாழும்போதே மற்றவர்களுக்கு பாடமாக வழிகாட்டியாக அமையும் அதிர்ஷ்டம் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அந்த அதிர்ஷ்டம் நாகரத்தினத்திற்கும் கிடைத்திருக்கிறது.

வைர வியாபாரியின் மகன் யுவேஷ்
நாகரத்தினத்தைப் பற்றி தெரிந்த பலரும் அவரை விவசாயத்திற்கான மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் அப்படி ஒருவர்தான் யுவேஷ். ஹரியானாவைச் சேர்ந்தவரான இவரது குடும்பத் தொழில் வைர வியாபாரம்.  இவர் நாகரத்தினத்தைத் தனது தந்தை என்றே சொல்கிறார். அவர் மூலம் விவசாயத்திற்கு ஈர்க்கப்பட்ட யுவேஷ் பகலில் விவசாய வேலைகளையும், மாலையில் தனது குடும்பத் தொழிலான வைர வியாபாரத்தையும் பார்த்து வருகிறார். இப்படி பலருக்கும் மாபெரும் உந்து சக்தியாக நாகரெத்தினம் நாயுடு இருந்து வருகிறார் என்பது விவசாயத்துக்கே பெரிய விஷ­யம்தான்.

நாகரத்தினத்தின் மார்கெட் உத்தி மிகவும் வித்தியாசமானது. தனது தோட்டத்தில் விளையும் வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் முதலியவற்றை தினமும் பறித்து வந்து தனது வீட்டு வாசலில் வைத்து விடுகிறார். அதன் அருகே ஒரு பேப்பரில் காய்கறிகளின் விலையை எழுதி வைத்து, பக்கத்திலே ஒரு உண்டியலையும் வைத்து விடுகிறார். வேண்டியவர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு அதற்கான தொகையை உண்டியலில் போட்டு விடுகிறார்கள். இதற்காக ஆட்கள் யாரும் இருப்பதில்லை.

 எல்லாமே இயற்கை முறையில் விளைவிப்பதால் 10 கி.மீ. தொலைவில் இருந்து கார் எடுத்து வந்து வாங்கிப்போகும் வாடிக்கையாளர்களும் இவருக்கு உண்டு. இவரது பண்ணையில் இருந்து வரும் பால் ஆர்கானிக் என்பதால் அதற்கும் வரவேற்பு மிக அதிகம்.

எல்லோர் மனதிலும் தோன்றும் கேள்வியே எனக்கும் தோன்றியது. "உண்டியலில் விற்ற பொருளுக்கு சரியாக பணம் வந்துவிடுகிறதா..?" என்று கேட்டேன். "நாம் அவர்களை நேர்மையாளர்களாக நம்பினால் அவர்களும் அப்படியே நடந்து கொள்ளவார்கள். இங்கு நம்பிக்கைதான் முக்கியம்!" என்றார்.

இவரைத் தேடி ஒரு மாநில முதல்வர் வந்ததற்கும் அமரிக்க ஜனாதிபதி வந்து அவர் நாட்டுக்கே அழைத்ததற்கும் காரணம் இப்போதுதான் தெரிந்தது.

நாகரத்தினம் பெரிய கோடீஸ்வரர். அவர் நினைத்தால் பி.எம்.டபிள்யு. காரையே வீட்டு முன் நிறுத்தலாம். ஆனால், அவரிடம் ஒரு டூவீலர் கூட கிடையாது. எங்கு போவது என்றாலும் பொது வாகனத்தையே பயன்படுத்துகிறார். ஏனென்று கேட்டால், "அவைகள் சுற்றுச்சூழலை பாழ் படுத்துகிறது. கூடுமான வரை நான் பூமி மாசு படுவதை தள்ளிப் போடப் பார்க்கிறேன்." தீர்க்கதரிசியாக கூறினார்.

ஒரு மாபெரும் மனிதரை சந்தித்த திருப்தியோடு அவரிடமிருந்து விடைப்பெற்றேன்.

மென்மேலும் சாதனை சிகரங்களை எட்ட நாமும் வாழ்த்துவோம்!

விவசாயம் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு நாகரத்தினத்தை தொடர்பு கொள்ளலாம். தமிழிலேயே பதிலளிப்பார்.

குடிவாடா நாகரத்தினம் நாயுடு
ஹைதராபாத்.
மொபைல் : 094404-24463.வியாழன், மே 28, 2015

அழிக்கப்பட வேண்டிய 500, 1000 ரூபாய் நோட்டுகள்

ந்த தலைப்பு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கலாம். ஆனாலும் உண்மை அதுதான். அழிக்கப்பட வேண்டிய நோட்டுக்களாகத்தான் 500 மற்றும் 1000 நோட்டுகள் இருக்கின்றன.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க வேண்டுமா? அல்லது சீரழிக்க வேண்டுமா? வேறொன்றும் செய்ய வேண்டாம், கொஞ்சம் கள்ள நோட்டுக்களை அச்சடித்து மக்கள் மத்தியில் புழங்க விட்டால் போதும். அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு விடும். நிதிநிலை சரிந்து விடும்.

அதனால்தான் பகை நாடுகள் எதிரி நாட்டின் கரன்சியை தங்கள் நாட்டில் அச்சடித்து விநியோகிக்கின்றன. அப்படிதான் பாகிஸ்தானில் இருந்து எராளமான 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் இந்தியாவிற்குள் வருகின்றன.

எப்போதும் ஒரு நாட்டின் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளே கள்ளப் பணமாக அச்சடிக்கப் படுகின்றன. இதற்கு காரணமும் இருக்கிறது. கள்ள நோட்டை ஒவ்வொரு முறை மாற்றும் போதும் அதில் நிறைய 'ரிஸ்க்' உள்ளது. 500 ரூபாய் என்றாலும் 50 ரூபாய் என்றாலும் ஒரே 'ரிஸ்க்'தான்.

பெரும் தொகையுள்ள பணத்தை ரிஸ்க் எடுத்து மாற்றி விட்டால் லாபம் அதிகம். அதனால்தான் கள்ள நோட்டுகள் பெருந்தொகை உள்ளதாகவே உள்ளன.


கள்ள நோட்டுக்கு மட்டுமல்லாமல், கறுப்புப் பணத்துக்கும் பெரும் மதிப்புள்ள நோட்டுக்கள் துணை போகின்றன. இந்தியாவில் தேவைக்கு அதிகமாகவே  500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெரிதாக பொருளாதரத்தில் வளர்ந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் நம் நாட்டில் இன்றைக்கும் 70 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். அப்படியொரு ஏழை நாட்டில் தற்போது புழக்கத்தில் இருக்கும். மொத்த ரூபாய் நோட்டுக்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 76.5 % உள்ளன. இந்த நோட்டுகளில் 70% மேல் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் 350 கோடி 500 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. 100 கோடிக்கு மேல் 1000 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. இது ஒரிஜினல் நோட்டுக்களின் புள்ளி விவரம். கள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. அது தனி கணக்கு.

அதிக மதிப்புள்ள நோட்டுக்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. என்பது பெருமைப்படக்கூடிய விஷயமில்லை. அது பயன்படும் விதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நோட்டுகளை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் அதிகம் வசிக்கும் ஏழைகள் அல்ல. இந்த நோட்டுக்கள் ஊழலுக்கு மிகவும் வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை வளர்க்கவும் செய்கின்றன.

கறுப்புப் பண பரிமாற்றத்துக்கும், வெளிநாடுகளுக்கு பணத்தைக் கடத்துபவர்களும் இந்த நோட்டுக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இதை எடுத்துச் செல்வது எளிது. அதனால்தான் இந்த நோட்டுக்களை 'கறுப்பு பொருளாதாரத்தின் முதுகெலும்பு' என்று கூறுகிறார்கள்.

இது நல்ல பணம்
உதாரணமாக ஹவாலா பணம் ஒரு கோடி ரூபாயை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களாக அதை எடுத்துச் சென்றால், அதன் எடை 50 கிலோ வரை இருக்கும். அதையே 500 ரூபாய் நோட்டுக்களாக கொண்டு சென்றால் வெறும் 2 கிலோதான் இருக்கும். 1000 ரூபாய் நோட்டுக்கள் என்றால், ஒரு கிலோவுக்கு சற்று கூடுதலாக இருக்கும்.

பெரிய மதிப்பிலான நோட்டுக்களோடு ஒப்பிடும்போது சிறிய மதிப்பிலான நோட்டுக்களை எடுத்துச் செல்வதற்கும், கண்ணில் படாமல் தப்பிப்பதற்கும் ஏற்படும் பிரச்சனைகள் மிக மிக அதிகம்.

நியாயமான முறையில் நடைபெறும் பணப் பரிமாற்றத்திற்கு பெரும்பாலானவர்கள் காசோலை, கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகளையே பயன்படுத்துகிறார்கள். வரி ஏய்ப்பு செய்பவர்களும் சட்ட விரோத செயல்களை செய்பவர்களும், பினாமி பெயரில் சொத்து வாங்குபவர்களும் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு பணம் வழங்குவதற்குமே 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துகிறார்கள். இதே போன்ற செயல்களுக்கு குறைந்த மதிப்பிலான நோட்டுக்களை பயன்படுத்துவது முட்டாள்தனமான செயல் என்பது அதில் ஈடுபடுபவர்களுக்குத் தெரியும்.

அதனால்தான் பெரிய மதிப்புள்ள நோட்டுக்களை அரசு திரும்பப் பெறும்போது, கறுப்பு பொருளாதரத்திற்கு பெரிய அடி விழுகிறது. பெரும்பகுதி ஒழிக்கப்பட்டு விடுகிறது. வெளிநாடுகள் பலவற்றில் பெரிய மதிப்பிலான நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஒருகாலத்தில் 10,000 மதிப்புள்ள நோட்டுக்களை அச்சடித்து வெளியிட்டு வந்தன. ஆனால் இப்போது அந்த நோட்டுகளை எல்லாம் ஒழித்துவிட்டார்கள். இப்போது 100 மதிப்புள்ள நோட்டுக்கள்தான் அங்கு அதிக மதிப்புடைய நோட்டுக்கள்.

இதனால் அந்த நாடுகளில் நிலவிவந்த சட்டவிரோதமான பணப்புழக்கம் குறைந்தது. ஆனால் நமது நாட்டில் நிலைமையே வேறு. கடந்த 10 ஆண்டுகளில் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவது 17 மடங்கு அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவின் கிராமங்களில் இன்றைக்கும் 500 ரூபாய் நோட்டுக்களைப் பார்ப்பது குதிரைக்கொம்புதான். 1000 ரூபாய்க்கு வாய்ப்பே இல்லை. அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் 10, 20, 50 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் சில்லறைக் காசுகள்தான். ஆனால் 500 ரூபாய் தாராளமாகக் கிடைக்கும் வேளையில் சிறிய மதிப்பிலான ரூபாய்களுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கிறது.

இது கள்ளப் பணம் மதிப்பு ரூ.6 கோடி
இப்படி அதிக மதிப்பிலான நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பது கள்ள நோட்டுகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. கள்ள நோட்டுகளின் புழக்கம் இப்போது 4 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது நிதி அமைச்சகத்தின் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி பார்த்தால் 500 ரூபாய் நோட்டுக்களில் 60.74 சதவிகிதம் கள்ள நோட்டுகள். 1000 ரூபாய் நோட்டுகளில் 4 நோட்டில் ஒன்று கள்ள நோட்டாகும்.

கொஞ்சம் பணக்காரர்களும், நிறைய ஏழைகளும் கொண்ட ஒரு நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தேவையற்றவை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். உண்மைதான். சாமான்ய மக்களைவிட கருப்பு பண முதலைகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும், சட்டவிரோதிகளுக்கும், பணக்கடத்தலுக்கும்தான் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றவையாக இருக்கின்றன. இவற்றை ஒழிப்பதன் மூலம் கறுப்பு பொருளாதாரத்தையும், கள்ள நோட்டையும் ஒழித்து வளமான இந்தியாவை உருவாக்கலாம்.

====

செவ்வாய், மே 26, 2015

1,500 பேரை தற்கொலை செய்ய வைத்த சாமியார்!


தீவிரவாதிகள் எப்படி உருவாகிறார்கள்?

மனித வெடிகுண்டு எப்படி தன்னையும் மாய்த்து, ஏதும் அறியாத அப்பாவி மனிதக் கூட்டத்தையும் கொல்லச் செய்கிறது?

இவர்களுக்கெல்லாம் அறிவே இல்லையா...? என்று கேட்டால் இருக்கிறது...! நிறைய அறிவு இருக்கிறது. ஆனால் எப்படிப்பட்ட அறிவாளியையும் அடிமுட்டாளாக்கி விடும் சக்தி மூளைச் சலவைக்கு உண்டு.

சிறந்த முறையில் மூளைச் சலவை செய்தால், எதிராளி உங்களை மரண உலகத்துக்கே அழைத்துப் போகலாம். உங்களை மட்டுமல்ல, உங்களின் அழகான மனைவி அன்பான குழைந்தைகள் எல்லாமே கூண்டோடு தற்கொலை செய்து கொள்வார்கள்! மூளைச் சலவை அத்தனை வசீகரமானது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் ரெவரெண்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ்.

ரெவரெண்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ்
நம்மூர் சாமியார்களைப் போல் வெளிநாடுகளிலும் சாமியார்களின் பின் அலையும் பித்துப் பிடித்த கூட்டம் உண்டு. இந்த வகை சாமியார்களையும் அவர்களின் இயக்கங்களையும் வெளிநாடுகளில் 'cult' என்று அழைக்கிறார்கள். 'கல்ட்' என்றால் புதிய மதம் என்பதுதான் அர்த்தம். ஆனால் இப்போது அந்த வார்த்தை ஏதோ 'கெட்ட' வார்த்தை போல் மாறிவிட்டது.

வசீகரம் மிகுந்த ஒரு போலிச்சாமியார், தன்னையே கதியென்று வந்து சேர்ந்த பக்தர்களை எந்தளவுக்கு மூளை சலவை மூலம் அடிமையாக மாற்ற முடியும் என்பதற்கு ஜோன்ஸ் மிக நல்ல (கெட்ட) உதாரணம். 

அது 1978, நவம்பர் 18. அமெரிக்காவின் தென் பகுதியில் இருக்கும் கயானாவில் இருக்கிறது, 'ஜோன்ஸ்  டவுன்'. அங்கு 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்டம் பரவசத்தோடு காத்துக் கிடக்கிறது. உயரமான மேடை... பக்திப் பாடல்களை ஒலிபரப்பியபடி ஒலிபெருக்கிகள்...

மொத்தக் கூட்டமும் மேடையை நோக்கியபடியே இருந்தன. மேடையில் இருந்த ஜோன்ஸ் தனது கம்பீரமான மனதை இளக்கும் குரலில்...

''என் பிள்ளைகளே! இன்று நாள் எந்த நாள் என்று தெரியுமா? நமது சந்திப்பு, கடைசி சந்திப்பு. ஆம்! இந்த பூமியில் நாம் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் கடைசி சந்திப்பு! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?  

இன்றோடு நாம் எல்லோரும் இறக்கப் போகிறோம். தப்பிக்க வழியே இல்லை. நாம் உயிர்த்தியாகம் செய்யாவிட்டால் விளைவுகள் மிகக் கொடுமையாக இருக்கும். வெளியுலகில் இருந்து எல்லா தீயசக்திகளும், நம்மை அழித்து ஒழித்துவிடுவது என்று தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டன. நம்மை சீரழிக்க வருகின்றன. அவற்றிடம் இருந்து தப்பப் போகிறோமா? அல்லது சிக்கி சீரழியப் போகின்றோமா? இல்லை எல்லாவற்றிலும் மேன்மையான இறைவனை சரணடையப் போகிறோமா?"

கூட்டம் அமைதியாக இருந்தது. அனைவரின் கண்களிலும் நீர் கசிந்திருந்தது.

''என் குழந்தைகளே! நான் உங்கள் மீது கொண்ட அன்பு உண்மையானது. பரிசுத்தமானது. அதே போல் என் மீது நீங்கள் அன்பு வைத்திருப்பது உண்மையானால்... நான் சொல்வதை செயல்படுத்துங்கள். என்னோடு உயிர் விட தயாராகுங்கள். இது இறைவனின் இணையற்ற கட்டளை. அதனால் கவலை வேண்டாம்!

"நம் இறப்போடு நம் பயணம் இங்கேயே முடிந்து போய் விடுவதில்லை. நாம் எல்லோருமே மீண்டும் உயிர்த்தெழுவோம்! அதுவும் நாளைக்கே நடக்கும்! 

நாம் மீண்டும் பிறப்பெடுப்பது புதியதோர் உலகில்... அது சொர்க்கம் போல் இன்பமான உலகம். அங்கே பசியில்லை... பட்டினியில்லை... துன்பமில்லை... துயரமில்லை... எங்கும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் உலகம் அது. நமக்கென்றே சிருஷ்டிக்கப்பட்ட தனி உலகம். நம்மைத் தவிர வேறு யாரும் அந்த உலகை அடைய முடியாது. புது உலகின் இன்பங்களை மட்டுமே அனுபவிக்க போகும் பாக்கியவான்கள் நாம். பூமியில் நாம் கண்டது எல்லாமே சிற்றின்பங்கள்தான். அங்கே நாம் அடையப் போவது பேரின்பம். சொர்க்கலோகமான அந்த புதிய உலகில் மீண்டும் நாம் நாளை சந்திப்போம். என்னருமைக் குழந்தைகளே! நாளை நம்முடையது... நரகமான இந்த உலகை விட்டு, என்னுடன் சொர்க்கத்துக்கு வருவீர்களா...!'' கல்லும் கசிந்துருகும் பேச்சு ஜோன்ஸினுடையது.

கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் இருந்தது. சத்தமாக, கோரஸாக,

''வருவோம்... வருவோம்...!'' என்று இடிபோல் முழங்கியது. எல்லோரும் மனம் விட்டு அழுதார்கள்.

துன்பம் நிறைந்த. அழிவின் விளிம்பில் இருக்கும் பூலோகத்தில் இருந்து நம்மை மீட்டுச் செல்லும் மீட்பர் இவர்தான் என்று எல்லோரும் நம்பிக்கையோடு கட்டளைக்கு காத்துக் கிடந்தனர். 

கூட்டத்தின் முன் பெரிய ட்ரம்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அந்த ட்ரம்களில் சயனைடு கலக்கப்பட்ட மினரல் வாட்டர் நிரப்பப்பட்டிருந்தன. சயனைடு என்பது கொடுமையான விஷம். குடித்தால் உயிர் பிழைக்க வழியே இல்லை. 100 சதவீத மரணம் உறுதி.

அந்த சயனைடு தண்ணீருடன் எலுமிச்சை சாறு கலக்கப்பட்டது.

எல்லாம் தயாராக இருந்தது.

''இந்த பானம் சொர்க்க பானம். நம்மை வேறு ஒரு புனித உலகத்துக்கு அனுப்பி வைக்கும் அற்புத பானம். இதைக் குடித்த அடுத்த நிமிடமே பூமியின் விடுதலையான மரணம் சம்பவிக்கும். எனவே, புனிதம் நிறைந்த இந்த நீரை கட்டுப்பாடு குலையாமல் ஒவ்வொரு குடும்பமாக வரிசையில் வந்து பானத்தை பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்குதான் எப்போதும் முன்னுரிமை. அதனால் குழந்தைகளுக்கு முதலில் பானத்தைக் கொடுங்கள். அவர்கள் பூமியில் இருந்து விடுதலையானதும், அடுத்துப் பெண்கள். அவர்களுக்கு அடுத்தே ஆண்கள்...'' ஒலிபெருக்கியில் ஜிம்ஜோன்ஸின் கட்டளை அதிரடியாய் முழங்குகிறது.

குடும்பம் குடும்பமாக
கூட்டம் வரிசையில் நின்றது. பெற்றோர்கள் விஷக் குடிநீரை வாங்கி ஏதும் அறியாமல், கள்ளம் கபடமில்லாமல், பொக்கை வாயைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தைகள் முதல் வயதுக்கு வந்த பெரிய குழந்தைகள் வரை குடிக்க வைத்தார்கள். பால் குடி மறவாத குழந்தைகளுக்கு சிரிஞ்ச் மூலம் சயனைடு நீரை புகட்டினார்கள்.

ஓரளவு விவரம் தெரிந்த சிறுவர்கள் முரண்டு பிடித்தார்கள். தப்பியோட முயற்சித்தார்கள். அவர்களைப் பிடித்து வந்து வலுக்கட்டாயமாக விஷநீரைக் குடிக்க வைத்தார்கள். பத்து நிமிட நேரத்திற்குள் எல்லா குழந்தைகளும் மரணத்தை தழுவி இறந்தார்கள்.


அடுத்து பெண்கள் முறை தாய், சகோதரி, மனைவி, காதலி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லா பெண்களுக்கும் அவர்கள் குடும்பத்து ஆண்கள் விஷ நீரைக் கொடுத்தார்கள். அடுத்த சில நொடிகளிலே பெண்கள் தள்ளாட தொடங்கினார்கள். அவர்களை கைத்தாங்கலாக அழைத்துப் போய் வரிசையாக புல்வெளியில் படுக்க வைத்தார்கள். அதற்கு அருகே ஏற்கனவே இறந்த குழந்தைகளின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டன. 

பின்பு எஞ்சியிருந்த ஆண்கள் அனைவரும் சயனைடு நீரைப் பருகினர். சில ஆண்களுக்கு இந்த கொடூரத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று கடைசி நிமிடத்தில் ஞானோதயம் தோன்றியது. அப்படிப்பட்டவர்கள் விஷநீரைக் குடிக்க மறுத்தனர். அவர்களை ஜிம்ஜோன்ஸின் சிஷ்யர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டிக் குடிக்க வைத்தார்கள்.

பக்தர்கள் அனைவரின் உடலும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. இப்போது ஜோன்ஸின் சிஷ்யர்கள் விஷநீரை சர்பத் போல் ருசித்து அருந்தினார்கள்.

தன் கண்முன்னே ஆயிரக்கணக்கான பக்தர்கள் துடிதுடித்து உடல் அடங்குவதை மேடை மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஜோன்ஸ். எல்லோரது மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் வழிந்திருந்தது.


''முயற்சித்தேன்... முடிந்தவரை முயற்சி செய்து விட்டேன்'' என்று உரக்கக் கத்திய ஜோன்ஸ், தன் நெற்றி பொட்டில் கைத் துப்பாக்கியை வைத்து விசையை அழுத்தினார். மறுவினாடி மூளை சிதற, ஜோன்ஸ் உயிரும் பிரிந்தது. 

உலகில் 1,500 பேர் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்டது இங்குதான் நாட்டில் பொருளாதார பிரச்சினைகளும், மக்கள் மத்தியில் ஒருவித மன உளைச்சலும், விரக்தியும் காணப்படும்போது, இது போன்ற புதிய இயக்கங்கள் உருவாகும். மக்கள் திசை மாறிப் போவார்கள் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

இந்தியாவும் இப்படிப்பட்ட சூழ்நிலையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் நாட்டைப் பற்றி கவலைப்படாமல், அளவுக்கு மீறி சொத்து சேர்க்கும் போது இத்தகைய 'கல்ட்'கள் தோன்றும் அபாயம் இருக்கிறது.

அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகளின் மூளைச் சலவையில் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது.
=====

குறிப்பு:
ஜிம் ஜோன்ஸ் பேசும் வசனங்கள் 'மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்!' நூலிலிருந்து பயன்படுத்தப் பட்டது.


ஞாயிறு, மே 24, 2015

நாட்டுக்காக உடல் கொடுத்த பெண்கள்னித இனத்தின் புனிதம் என்று சொல்லப்படும் பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை இன்னல்கள். இன்றைக்கு வேண்டுமானால் அவர்கள் சம உரிமை பெற்றிருக்கலாம். ஆனால், சரித்திர காலங்களில் பெண்கள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப் பட்டிருக்கிறார்கள். அதற்கு ஓர் உதாரணம்தான் 'கம்போர்ட் பெண்கள்'.

போர்க்களத்தில் கம்போர்ட் பெண்
பொதுவாக வருடங்கள் பல உருண்டோடும் போது எப்படிப்பட்ட பெரிய பிரச்சனையும் மறைந்து போய்விடும் என்பது நடைமுறை உண்மை. ஆனால், 50 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது என்றால் நம்புவது சிரமம்தான்.

2002-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நடைபெறும் நாடுகளாக ஜப்பானும் தென் கொரியாவும் இருந்தன. இந்த இரண்டு நாடுகளும் இணைந்து போட்டிகளை நடத்தின.

ஜப்பானும் தென் கொரியாவும், இந்தியா - பாகிஸ்தான் போல,  உள்ளுக்குள் பகையை வளர்த்துக் கொண்டு வெளியில் நட்பை பாராட்டிக் கொள்ளும் நாடுகள்.

போட்டிக்கான முன் ஏற்பாடுகள் இரண்டு நாடுகளிலும் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது தென் கொரியா தொலைக்காட்சி ஒன்று ஒரு விபரீதமான பேட்டியை ஒளிபரப்பியது. அந்த பேட்டி கிட்டத்தட்ட 50 வருடங்களாக அமுங்கிக்கிடந்த பிரச்சனையை, தடாலென்று விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்தது.

கிம் சாங் ஹீ என்ற 75 வயது பெண் கொடுத்த பேட்டி தான் கொரியர்களை கொதிக்க வைத்தது. இரண்டாம் உலகப்  போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது நடந்த சம்பவம் அது.

அப்போது கிம் 20 வயதுகூட எட்டாத கன்னிப் பெண். சீனாவை ஜப்பான் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த காலம். தொடர்ந்து போர்க்களத்தில் இருந்து வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் போர் விமானங்களையும் பார்த்து பார்த்து அலுத்துப்போய் களைப்படைந்த ராணுவ வீரர்களுக்கு.. உடலும் மனசும் வேறொரு இன்பத்துக்காக ஏங்கியது. அதை ஏக்கம் என்று சொல்வதைவிட வெறி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அது பெண்ணுக்கான ஏக்கம்.

மாதக் கணக்கில் பெண் வாடையே இல்லாமல் போர்க்களத்தில் போரிடும் ராணுவ வீரனுக்கு ஒரு பெண்ணை இனிமையாக அணுகத் தெரியாது. மென்மையாக அவளை இன்ப உலகத்துக்கு அழைத்து செல்ல தெரியாது. அவனுக்கு இருப்பதெல்லாம் காமவெறி ஒன்றுதான். அதனால் அவனுடன் கூடுதல் பெண்ணுக்கு வலி நிறைந்த கொடூரமாகத்தான் இருக்கும்.

ராணுவமுகாமுக்கு செல்லும் கம்போர்ட் பெண்கள்
தொடர்ந்து போர்க்களத்திலேயே இருந்த இப்படிப்பட்ட போர் வீரர்களின் உடல் பசியைத் தீர்த்து வைக்க பெண்கள் தேவைப்பட்டார்கள். ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கு ஏற்ப விலைமாதர்களும் இல்லை. அதனால் ராணுவத்துக்கு வேறு வழி தெரியவில்லை. இளம் பெண்களை வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு வந்தார்கள்.

ஜப்பான் நாட்டு ராணுவ வீரர்களுக்கு கொரியா, தைவான், சீனா, பிலிப்பைன்ஸ்  நாட்டுப் பெண்கள் விருந்தாக்கப்பட்டார்கள். இப்படி கடத்தப்பட்ட பெண்களும் ராணுவ வீரர்களைவிட குறைவாகவே இருந்தார்கள்.

ராணுவமுகாமில் கம்போர்ட் பெண்கள்
அழகான, இளமை நிறைந்த, பயந்து நடுங்கும் குடும்ப பெண்களைப் பார்த்ததும் வெறி இன்னும் உச்சத்தை அடைந்தது. பல பெண்கள் ஓய்வு இல்லாமல் வேறு வேறு ராணுவ வீரர்களுடன் உறவு கொண்டனர்.

உயிரிழந்த பெண்களின் உடல்கள்
மென்மையும், பலவீனமும் நிறைந்த பல பெண்கள் வெறித்தனமான இந்த பலாத்காரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் உயிரிழந்தனர். அப்படியும் கூட விடாமல் பிணத்தைக் கற்பழித்த கொடூரமும் நடந்திருக்கிறது. இப்படி ராணுவ வீரர்களுக்காக உடலைக் கொடுத்த பெண்களுக்கு 'கம்போர்ட் உமன்' என்று பெயர் கொடுத்தார்கள். தமிழில் சொல்வதென்றால் 'ஆறுதலளிக்கும் பெண்கள்'.

ராணுவத்தினரால் கர்ப்பிணியான பெண்
ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் அளித்த இந்த பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 லட்சத்து 10 ஆயிரம் என்கிறது சீன அரசு. அந்த கம்போர்ட் பெண்களில் ஒருவர்தான் கிம் சாங் ஹீ. அந்தப் பெண் தொலைக்காட்சி பேட்டியில், "எங்களின் வாழ்வை சூறையாடியதற்காக ஜப்பானிய அரசு எங்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும். அதுமட்டுமல்ல, ஜப்பான் பிரதமர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

நிர்வாண சித்ரவதை
ஆனால், ஜப்பான் அரசு கம்போர்ட் பெண்களை ஒரு புழுவைப் போல்தான் பார்த்தது. நம்மூரில் இருப்பது போல வில்லங்கமான அரசியல்வாதிகள் ஜப்பானிலும் உண்டு. அதில் ஒரு அதிகப்பிரசங்கி அரசியல்வாதி ஒருவர் எல்லோரையும்விட ஒருபடி மேலே போய், "நான் அந்தப் பெண்ணை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் கொடுத்த சுகத்திற்கு பதிலாக உங்களுக்கு பணம் தரப்பட்டதல்லவா..! அதோடு அது உங்களுக்கும் சுகமான அனுபவம்தானே..!" என்று பொறுப்புணர்வு இல்லாமல் டி.வி.யில் பேட்டி கொடுத்துவிட.. பற்றிக்கொண்டது. 

கம்போர்ட் பெண்கள் கொதித்துப் போய் நடுரோட்டிற்கே வந்து போராடத் தொடங்கினார்கள். கதறி அழுதார்கள். "அன்பு, பாசம், காதல் கனிந்த கனிவான பேச்சு, இவைகள்தான் ஒரு பெண்ணுக்கு ஆணுடன் கூடும்போது இன்பத்தை தருமே தவிர, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் பலாத்காரத்தில் இன்பம் இருக்காது. வேதனையே மிதமிஞ்சி இருக்கும். இதை அறியாமல் பேசும் அந்த அரசியல்வாதி ஆணாதிக்கத்தின் ஒட்டுமொத்த உருவம்" என்று கம்போர்ட் பெண்கள் காச்சி எடுத்தார்கள். 

போராட்டத்தில் கம்போர்ட் பெண்கள்
தங்களை விலைமாதர்களைப் போல் குறிப்பிட்டதை கம்போர்ட் பெண்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. "போர்க்களத்தில் எங்கள் உடலை சின்னாபின்னப் படுத்தினீர்கள். இப்போது 50 வருடங்கள் கழித்து எங்கள் ஆன்மாவை சிதைக்கிறீர்கள்" என்று வெடித்தார்கள். 

ஜப்பானிய மக்களே தங்கள் அரசு அந்தப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களுக்கான நஷ்டஈடு கொடுப்பதுதான் முறை என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். 

மிகப் பெரும் தயக்கத்திற்குப் பிறகு ஜப்பானிய பிரதமர் அந்தப் பெண்களிடம் பொது மன்னிப்பு கேட்டார். "பெண்கள் சரித்திரத்திலேயே இரண்டாம் உலகப் போர் காலக்கட்டம் தான் மிக மோசமானது. அப்போது அவர்கள் அடைந்த அவமானம்  வேறு எப்போதும் ஏற்பட்டதில்லை" என்றும் கூறி மனம் வருந்தினார். பின்னர் அவர்களுக்கான நஷ்டஈடு வழங்கப் பட்டது.

எந்தப் பிரச்சனையுமே முழுவதுமாக மறைந்து போய்விடுவதில்லை. அது எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை உலகுக்கு உணர வைத்தது இந்த கம்போர்ட் பெண்களின் போராட்டம்.
சனி, மே 23, 2015

பராசக்தி: 'இருட்டடிப்பு செய்யப்பட்ட கருணாநிதி'


மு.கருணாநிதி
சென்ற தலைமுறை சினிமா ரசிகர்களை கேட்டுப் பாருங்கள், நடிப்பு என்றால் சிவாஜி என்பார்கள். வசனம் என்றால் கருணாநிதி என்பார்கள். ஆனால், அந்த கருணாநிதியின் பெயரையும் இருட்டடிப்பு செய்த காலம் ஒன்றுண்டு. 

1940-களின் மத்தியில் ஏ.வி.மெய்யப்பசெட்டியாரின் சினிமா தயாரிப்புகள் பெரும் வெற்றி பெற்று வந்தன. அந்த காலத்தில் அவரின் படங்களை விநியோகம் செய்து வந்த பி.ஏ.பெருமாள் மெய்யப்பருடன் சேர்ந்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

அதே நேரத்தில் தேவி நாடக சபா நடத்தி வந்த 'பாரசக்தி' நாடகம் புகழின் உச்சத்தில் இருந்தது. வசூலில் சினிமாவை எல்லாம் பின்னுக்கு தள்ளி, அள்ளிக் குவித்தது. இந்த நாடகத்தை எந்த ஊரில் நடத்தினாலும், அந்த ஊரின் சினிமா வசூல் படுத்தது. 

இப்படி மக்கள் அலைமோதும் அளவிற்கு அந்த நாடகத்தில் என்ன இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளவதற்காக மெய்யப்ப செட்டியாரும் பெருமாளும் கடலூருக்கு சென்று 'பராசக்தி' நாடகத்தைப் பார்த்தனர். நாடகம் பிடித்துவிட்டது. 

ஏ.வி.மெய்யப்பன் செட்டியார்
உடனே, நாடகத்தை எழுதிய பாலசுந்தரத்தைப் பார்த்து விலைபேசி, நாடகத்தை வாங்கி, பெருமாளுக்கு கொடுத்தார் செட்டியார். படத்தை அண்ணாதுரை கதை எழுதிய 'நல்லதம்பி' திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணன்-பஞ்சுவை கொண்டே 'பாரசக்தி' படத்தையும் இயக்கச் சொன்னார்.

அண்ணாதுரையைப் போலவே ஒன்றிரண்டு படங்களுக்கு வசனம் எழுதி வந்த மு.கருணாநிதியை படத்துக்கு வசனம் எழுத வைப்பது என்று முடிவு செய்தனர். 

படத்தின் ஹீரோவாக கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்க செட்டியார் விரும்பினார். ஆனால், பெருமாளோ வேறு விதமாக சிந்தித்தார். அவர் செட்டியாரிடம் "நாம் ஏன் ஒரு புது நடிகரை போடக்கூடாது?" என்றவர் கூடவே "வேலூர் சக்தி நாடக சபாவில் நடந்து வரும் 'விதி' நாடகத்தைப் பார்த்தேன். அதில் கணேசன் என்ற ஒரு பையன் பிரமாதமாக நடிக்கிறான். அவனையே 'பராசக்தி'யில் ஹீரோவாக போட்டால் என்ன..!" என்றார். 

அப்போது 'விதி' நாடகம் திண்டுக்கல்லில் நடந்துக் கொண்டிருந்தது. செட்டியார் அங்கு சென்று நாடகத்தை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். என்னவோ அவருக்கு புது நடிகரை நடிக்க வைப்பதில் உடன்பாடு இல்லாமலே இருந்தது. 

"சினிமா என்பது வேறு. நாடகத்தில் நடிப்பதென்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடித்ததில்லை. அப்படிப்பட்ட ஒருவரை நடிக்க வைத்து படம் தோல்வியடைந்தால் என்ன செய்வது? இது நீங்கள் என்னுடன் கூட்டுச் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம் வேறு. புதுப் பையனெல்லாம் வேண்டாம். ஏற்கனவே நடித்து வருபவர்களை வைத்தே படம் எடுப்போம். எதற்கு ரிஸ்க்?" என்றார்.

பெருமாள் விடுவதாக இல்லை. "ரிஸ்க் எடுப்போம்! கணேசனையே நடிக்க வைப்போம். அவன் பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான். அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்..!" என்று பிடிவாதமாக இருந்தார்.

செட்டியார் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டார். 

'பராசக்தி' படபிடிப்பு தொடங்கியது. சுமார் 3,000 அடி படம் எடுத்தப் பின், அதுவரை எடுக்கப் பட்ட படத்தை செட்டியாருக்கு போட்டுக் காட்டப்பட்டது. 

படத்தைப் பார்த்த செட்டியாரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. "இந்தப் பையன் தமிழ்நாட்டுக்கே பெரும் புகழ் சேர்ப்பான். இவனே தொடர்ந்து நடிக்கட்டும்." என்றார். 

'பராசக்தி'யில் சிவாஜி கணேசன் 
'பராசக்தி' 1952, அக்டோபர் 17-ல் ரிலீசானது. தமிழ் சினிமாவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படமாக அது மாறியது. சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிப்பு சகாப்தம் உருவானது. 

படத்திற்கு கருணாநிதி எழுதிய வசனம் பட்டிதொட்டிகளில் எல்லாம் படு ஹிட். வசனம் என்றாலே அது கருணாநிதிதான் என்ற புது டிரெண்ட் தோன்றியது. 

இப்படி பெயர் பெற்ற கருணாநிதிக்கும் சினிமா துறைக்கே உள்ள இருட்டடிப்பு அனுபவம் ஏற்பட்டுள்ளது. அது 'அபிமன்யு' படத்தின் மூலம் கிடைத்தது. 1948-ல் அந்தப் படம் ரிலீசானது. படத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதி முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று பார்த்தார். 

'அபிமன்யு' படத்தில் எம்.ஜி.ஆர்
தனது பெயர் வரும் என்று ஆவலோடு காத்திருந்தபோது திரைகதை, வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று வந்தது. தனது பெயருக்குப் பதில் அன்றைக்கு பிரபலமாக இருந்த ஒருவரின் பெயர் வந்திருப்பதைக் கண்டு, படத்தின் தயாரிப்பாளரான ஜுபிடர் சோமுவிடம் போய் கேட்டார். அதற்கு அவர், "உன் பெயரும் பிரபலமாகட்டும், அதுவரை பொறு!" என்றார். 

வசனத்திற்காகவே பின்னாளில் மிகப் பெரும் புகழ் பெற்ற கலைஞர் கருணாநிதிக்கே ஆரம்ப காலங்களில் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒரு சேதி! 
வெள்ளி, மே 22, 2015

பழங்குடிகளுடன் ஒரு நாள்சன்டூரி சாய் ரிஸார்ட்

ரிஸார்ட் அமைந்திருக்கும்  கெளடகுடா பழங்குடிகள் கிராமம்
டிஸா பழங்குடியினரின் ஆடம்பரமான ரிஸார்ட் தான் சன்டூரி சாய். சன்டூரி என்பது மருத்துவ குணம் மிக்க மாமரத்தின் பெயர். திறந்த புல்வெளிகளுடன் இணைந்தவாறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த புல்வெளிகளில் பழங்குடிப் பெண்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.

தங்கும் அறைகள்

ரிசார்ட்டின் லிவ்விங் ரூம் 
 சுற்றுலா பயணிகளுக்கு மண்பாண்டம் செய்யும் தொழில் வேலைகளையும், நுணுக்கமான பயிற்சியாக இங்கு கற்றுத்தரப்படுகிறது.

விவசாயத்தில் பழங்குடி இன பெண்கள்
இங்குள்ள மார்க்கெட்டுகளில் இவர்களின் பாரம்பரிய உடைகளும், அணிகலன்களும் விற்கப்படுகின்றன. சுவை மிகுந்த ஒரியா உணவு வகைகளான 'தால்மா' மற்றும் 'மச்சா கன்டா' உண்பதற்கு ஏற்றது.  இங்குள்ள 'போராஜா'  அல்லது 'கோன்டா' இன பெண்களிடம் நாம் நட்புறவு கொண்டால் அவர்கள் அணிந்திருக்கும் வெள்ளி நகைகளில் ஏதேனும் ஒன்றை நமக்கு கொடுக்கும் அளவிற்கு பாசம் மிகுந்தவர்கள். இந்த மார்க்கெட்டில் நாம் கண்டிப்பாக வாங்கி வேண்டிய பொருள் என்றால் அது "போர்வை' தான். அந்த அளவிற்கு வேலைப்பாடுகள் நிறைந்திருக்கும்.

கோன்டா' இன பெண்
புவனேஸ்வரில் இருந்து 500 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது கெளடகுடா கிராமம்.

போண்டா பழங்குடிப் பெண்
சன்டூரி சாயில் இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.5,000 கட்டணமாகப் பெறப்படுகிறது.

புதன், மே 20, 2015

அருணா ஷான்பாக் - கருணையைக் கொல்ல முடியுமா..?அருணா ஷான்பாக்
'கருணை..!'

அப்படிதான் அருணா ஷான்பாக்கை அந்த மருத்துவமனையில் அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு கருணையாலும் பாசத்தாலும் கட்டிப்போட்டவர் அருணா.

38 வருடங்களாக 'கோமா'வில் வீழ்ந்துகிடக்கும் ஒருவரை, எந்தவொரு முகச்சுளிப்பும் இல்லாமல் கவனித்துக் கொள்ள பெரிய மனது வேண்டும். அது அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இருக்கிறது.

அருணா - கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டத்தில் இருக்கும் ஹல்டிபூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். வறுமை வாட்டி எடுக்கும் குடும்பம் அவருடையது. அந்த வறுமையிலும் நர்சிங் வரை மகளை படிக்க வைத்து விட்டார் அவரது தந்தை. படிப்பு முடிந்த இரண்டாவது வருடத்திலேயே தந்தை இறந்துவிட்டார்.

குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமும் நின்று போனது. ஒருவேளை சாப்பாட்டுக்கு நாதியற்று திண்டாடியது. அப்போதுதான் அருணா, "நான் மும்பையில் நர்ஸ் வேலைப் பார்த்து உங்கள் அனைவரையும் காப்பாற்றுகிறேன்." என்று கூறி ரயிலேறினார்.

மும்பையில் புகழ் பெற்று விளங்கிய 'கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனை'யில் வேலை கிடைத்தது. 'அப்பாடா..! வீட்டின் வறுமையை போக்க வழி கிடைத்துவிட்டது' என்று நிம்மதியாக உட்காருவதற்குள்.. குடும்பத்தை காப்பாற்ற மும்பை வந்த அருணாவால்  தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனது.

கோமாவில் அருணா
1973, நவம்பர் 27.

அருணா வாழ்வை தடம் தெரியாமல் உருக்குலைத்த கருப்பு நாள்.

அப்போது அருணாவுக்கு 23 வயது. அழகும் இளமையும் போட்டிப் போட்டு வார்த்தெடுத்த தங்கச்சிலையாக புன்னகையோடு வேலை செய்துவந்தார்.

அழகு எப்போதும் ஆபத்தானது தானே! அந்த ஆபத்துதான் அருணாவின் வாழ்விலும் வந்து சேர்ந்தது. அருணாவின் வசீகர அழகு அங்கு வேலைப் பார்க்கும் மோகன்லால் வால்மியின் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது.

அவனின் துப்புரவு தொழிலைக்கூட மறந்தான்.  அருணாவை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் அடங்காத வெறியாக எரிந்து கொண்டே இருந்தது.

அன்று அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. இரவு நேர பணியில் அருணா ஈடுப்பட்டிருந்தார். காமபித்தத்துடன் வால்மியும் அங்கிருந்தான். வழக்கத்தைவிட கவர்ச்சியாக அவன் கண்களுக்கு அருணா தெரிந்தார்.

மோகம் தலைக்கேறிய அவன் நேராக அருணாவிடம் சென்று தனது ஆசையை கூறினான். எந்த பெண்தான் இதற்கு சம்மதிப்பார். அருணாவும் வசைமொழிகளால் அவனை விரட்டியடித்தார். ஆனாலும் அவன் விடுவதாக இல்லை.

தனது கையில் தயாராக வைத்திருந்த நாய்களைக் கட்டும் சங்கிலி கொண்டு அருணாவை தாக்கினான். தாக்குதலை தாங்கமுடியாத அருணா மயங்கி விழுந்தார். கற்பழிக்க முயற்சிக்கும் போதுதான் அருணா மாதவிலக்கு அடைந்திருப்பதை கண்டான். ஆனாலும் அந்த மிருகத்திற்கு விட மனமில்லை.

மயக்கம் தெளிந்துவிட்டால், எங்கே தப்பித்து விடுவாளோ..! என்ற பயத்தில் கோபமும், காமமும் தலைக்கேற நாய்ச்சங்கிலியால் கழுத்தை சுற்றி கட்டிலோடு கட்டிவிட்டான்.

தனது வெறியை முழுமையாக தீர்த்துக்கொண்ட பின்னும் அந்தச் சங்கிலியை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டான். கட்டிலோடு கழுத்து இறுக்கமாக கட்டப்பட்ட நிலையிலேயே இரவு முழுவதும் அருணா இருந்திருக்கிறார்.

மறுநாள், காலையில் தான் பணியாளர்கள் அருணாவை பார்த்தார்கள். மணிக்கணக்கில் கழுத்து இறுக்கப்பட்டு இருந்ததால் மூளைக்கு ஆக்சிஜன் செல்வது தடைப்பட்டது. அதனால், மூளையின் மேல்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அப்போது ஏற்பட்ட மயக்கம் இன்னமும் தெளியவில்லை.


குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலைக்கு வந்த அருணாவை பார்க்க அவரின் குடும்பத்தினர் ஒருவரும் வரவில்லை. குடும்பம் கைவிட்ட நிலையில், அவரை கவனித்துக் கொள்ளும் முழுப் பொறுப்பையும் அந்த மருத்துவமனை ஊழியர்களே ஏற்றுக் கொண்டார்கள்.

அருணாவை இந்த கதிக்கு ஆளாக்கிய காமுகனுக்கு மிகக் குறைந்த தண்டனையே கிடைத்தது. இந்த நிலையில் தான் எழுத்தாளரும் சமூகப் போராளியுமான பிங்கி விராணி என்பவர் அருணாவைப் பார்த்தார். அவரின் பரிதாபகரமான நிலையைப் பார்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

பிங்கி விராணி
அந்த மனுவில், "அருணா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பையும் கூறியப்பின், அருணாவுக்கு மூளை, தண்டுவடப் பாதிப்பு மற்றும் பிடரி எலும்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம் சேர்ந்து அவரை செயலிழக்கச் செய்து கோமாவில் தள்ளி விட்டது. அவர் 37 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ளார்.

தொடர்ந்து பல ஆண்டுகள் கோமாவில் இருப்பதால் அருணாவின் உடல் இளைத்து துரும்பாகிவிட்டது. எலும்புகள் விரைவில் உடைந்து போகக்கூடிய தன்மையை அடைந்து விட்டது. படுக்கையிலே தொடர்ந்து இருப்பதால் உடலெல்லாம் புண் வந்து விட்டது.

எனவே, குணப்படுத்த முடியாத வகையில் நோய்வாய்ப் பட்டிருக்கும் அருணாவை 'கருணைக் கொலை'  செய்ய அனுமதியளிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

'கருணைக் கொலை'

மகாத்மா காந்திக் கூட இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். நோயால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு கன்றுக் குட்டியை காண சகிக்காது அதனை கொன்று விடும்படி சொல்லியிருக்கிறார்.


கருணைக் கொலை சில வெளிநாடுகளில் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. இந்தியாவில் இதற்கான சட்டம் இல்லை.இருந்தாலும் அருணாவை கொலைசெய்ய அனுமதிக்க முடியாது. அவர் வாழ வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், மருத்துவமனை ஊழியர்களை பாராட்டவும் தவறவில்லை.

"குடும்பத்தினர் கைவிட்ட நிலையில் 37 ஆண்டுகளாக தொடர்ந்து மிகுந்த அன்போடு அருணாவை பராமரித்துவரும் கே.இ.எம். மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும், இப்போது உள்ள ஊழியர்களுக்கும் சரி, அருணாவுக்கு பணிவிடை செய்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் சரி, இந்த நாடே நன்றிக் கடன் பட்டிருக்கிறது." என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

கருணைக் கொலைக்கு அனுமதி இல்லை என்று தீர்ப்பு வந்ததும் கே.இ.எம். மருத்துவமனையே கொண்டாட்டத்தில் மூழ்கியது.

"அருணா அக்கா, ரொம்ப அழகான, சுறுசுறுப்பான, கனிவான, கருணை நிரஞ்சவங்க. அவங்களை நெனைச்சா இன்னும் என் நெஞ்சடைக்குது. கண்ணீர் நிக்கல. நோயாளிகளோட நெருங்கிய உறவினர் போல பாசமா இருப்பாங்க. அவங்களோட கருணைக்கு இணைய எதையும் சொல்ல முடியாது. எத்தனையோ பேரை கருணையோடு கவனிச்சிருக்காங்க. அவங்களை கொலை செஞ்சா கருணையையே கொன்ன மாதிரிதான்.

அது எப்படி முடியும்? இப்ப மட்டுமில்ல இனி எப்பவுமே அவங்களை அக்கறையா பாதுகாக்கறது எங்களோட கடமை..!" என்று நேக்குருகிப்போகிறார், அருணாவுக்கு கீழ் வேலை பார்த்த ஜூனியர் அர்ச்சனா பூஷன்.

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பரபரப்பான தீர்ப்பு பற்றி எதுவும் தெரியாமல் அந்த மருத்துவமனையின் 4-வது வார்டின் ஒரு ஓரத்தில் உள்ள அறைக்குள் 37 வருடங்களாக முடங்கிக் கிடக்கிறார் அருணா.

அவருக்கு மிகவும் பிடித்த சிக்கன் சூப்பை அருகே கொண்டு சென்றால் கண்கள் சட்டென்று பிரகாசமடைகின்றன. அந்த சின்ன பிரகாசம்தான் எந்த நொடியிலும் நினைவு திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பை மெலிதாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இப்போது அருணாவுக்கு 60 வயது. அவர் நன்றாக இருக்கும்போது லயித்துப் போய் பாடும் இந்திப் பாடல்கள் இப்போதும் அவரது அறையில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தப் பாடல்களில் எதாவது ஒன்று அவரின் ஞாபக நரம்பை மீட்டுக்கொண்டு வந்துவிடாதா..? என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்பிக்கைதானே வாழ்க்கை..! அது உயிர்ப்போடு இருக்கும் வரை எந்த மனிதனையும் உடலால் கொல்ல முடியாது..!


குறிப்பு:


2011-ம் ஆண்டு கருணைக் கொலை பற்றி தீர்ப்பு வந்த போது நான் எழுதிய கட்டுரை இது. நினைவு திரும்பிவிடும் என்ற அந்த மருத்துவமனையின் ஊழியர்களின் நம்பிக்கையை பொய்யாக்கிவிட்டு உடலாலும் மரணமடைந்தார் அருணா ஷான்பாக். இனி எந்தவொரு பெண்ணுக்கும் இந்த நிலை வரவே கூடாது..! அவரின் ஆன்ம சாந்தியடைய பிரார்த்திப்போம்..! 


இறுதி ஊர்வலத்தில் அருணா ஷான்பாக்LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...