சனி, ஆகஸ்ட் 29, 2015

என் புத்தகத்திற்கான விளம்பரம்..!


ருகிற வெள்ளிக்கிழமை 'தினத்தந்தி'யின் தந்தி பதிப்பகம் இரண்டு புத்தகங்களை வெளியிடுகிறது. அதில் ஒன்று வெ.இறையன்பு எழுதிய 'உலகை உலுக்கிய வாசகங்கள்'. மற்றொன்று நான் எழுதிய 'நம்பமுடியாத உண்மைகள்'.

இந்த 'நம்பமுடியாத உண்மைகள்' புத்தகம் நான் எழுதிய தினம் ஒரு தகவலின் சிறு தொகுப்பு. அதற்கான விளம்பரம் நேற்றைய தினத்தந்தியில் வெளி வந்திருந்தது. அது உங்கள் பார்வைக்கு..! 


செவ்வாய், ஆகஸ்ட் 25, 2015

மெல்லச் சாகுமோ இனி ஆணினம்..?!
லகில் இருக்கும் ஒட்டுமொத்த ஆணினமும் ஆபத்தில், அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பதுதான் இப்போதைய 'ஹாட் டாப்பிக்'!

திடீரென்று ஆணினத்துக்கு என்ன ஆனது? அவர்கள் ஏன் அழியவேண்டும்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. முதலில் சமூகக் காரணம் கூறப்படுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த ஆணின் உயிரணு எண்ணிக்கையில் பாதியளவு கூட இன்று இருக்கும் ஆணிடம் இல்லை. மடமடவென்று விந்தணுவின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு வேலை, டென்ஷன், உணவு முறை, சுற்றுச்சூழல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இப்படியே போனால், வருங்காலத்தில் ஒரு ஆணால் இயற்கை முறையில் ஒரு பெண்ணை தாய்மையடையச் செய்ய முடியாத நிலை வந்துவிடும் என்கிறார்கள்.

இப்போதே ஆண் துணையின்றி பெண் மட்டுமே அவள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையெல்லாம் வந்துவிட்டது. பயனற்ற உயிரினம் அழியும் என்பது டார்வின் விதி. ஆணின் பிரதான வேலையான இனப்பெருக்கத்தைத் தரமுடியாமல் போகும்போது ஆணினமும் அழியத்தொடங்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மருத்துவ காரணங்கள் வேறுமாதிரியாக சொல்கின்றன. இயற்கையே ஆணை பலவீனமானவனாகத்தான் படைத்திருக்கிறது. உருவத்திலும் உடல் வலிமையிலும் வேண்டுமானால் ஆண் பெண்ணைவிட சிறந்தவனாகத் தோன்றலாம். ஆனால், உள்ளுக்குள் நோய் எதிர்ப்பு திறனில் பெண் இனம் மிக வலுவுள்ள இனமாக இருக்கிறது.

இயற்கையே அப்படிதான் உருவாக்குகிறது. 100 பெண் சிசுக்களை பெண்கள் வயிற்றில் உருவாக்கும் அதே நேரத்தில் 140 ஆண் சிசுக்கள் அந்த பெண் சிசுக்களுக்கு இணையாக இயற்கை தோற்றுவிக்கிறது. அதாவது கருவாக உருவாகும்போதே ஆண் இனம் பெண் இனத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக உருவாக்கப்படுகிறது.

அப்படியிருந்தும் பிறக்கும் போது கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையில்தான் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 100 பெண் குழந்தைகளுக்கு 106 ஆண் குழந்தைகள் என்ற விகிதத்தில்தான் பிறக்கின்றன.  

கரு உருவான கணக்குப்படிப் பார்த்தால் 100 பெண் குழந்தைகளுக்கு 140 ஆண் குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆனால், 34 ஆண் குழந்தைகளும் கருவிலே அழிந்துவிடுகின்றன. 

அதற்கு காரணம் ஆண் பலவீனன் என்பதுதான். இதில் என்னவொரு அதிசயம் என்றால் பெண் குழந்தைகள் இயற்கையான முறையில் கருவில் அழிவதேயில்லை.  கருவில் அழிவதெல்லாம் ஆண் குழந்தைகள் மாத்திரமே..!

சரி, பிறந்த பிறகாவது ஆண் குழந்தைகள் தாக்குப் பிடிக்கின்றனவா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதிலும் பெண் குழந்தைகள்தான் ஜெயிக்கின்றன. குழந்தைகள் பிறந்த 6 மாதங்கள் முடியும் முன்பே தொற்றுநோய், சுற்றுப்புற தூய்மை கேடால் 1,000 ஆண் குழந்தைகளில் 17 குழந்தைகளும், பெண் குழந்தைகளில் 11 குழந்தைகளும் இறக்கின்றன. இதிலும் ஆண் குழந்தைகளின் இறப்பு விகிதமே அதிகம். 

பெண் குழந்தைகள் நோய் எதிர்ப்புத்திறனுடன் இருப்பதற்கு 'ஹீமோபைலியா ஜிடெண்டரஸ்' என்ற ஒருவகை ஹார்மோன் தான் காரணம். இது கருவுற்ற தாயின் உடலில் இருந்து கருவில் இருக்கும் பெண் குழந்தைக்கு மட்டுமே போகிறது. இது ஒரு போதும் தாயிடமிருந்து ஆண் குழந்தைகளுக்கு செல்வதில்லை. இந்த அதிசயமான போக்கு எதனால் ஏற்படுகிறது என்று மரபியல், செல்லியல், நுண் செயலியல் அறிஞர்கள் மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருக்கிறார்கள், விடைதான் கிடைத்தபாடில்லை. 

இந்த ஹார்மோன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கக் கூடியது. அதனால்தான் பெண் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாக இருக்கிறார்கள். 

கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் அதிர்ச்சிகள், உடலுக்கு ஒத்துக் கொள்ளாத மருந்துகள், தீமை தரும் உணவுகளை உட்கொண்டதால் ஏற்படும் விளைவுகளே குழந்தைகளை பிறவி ஊனமாக மாற்றிவிடுகிறது. 

அதிலும் கூட ஊனமுற்ற 100 குழந்தைகளில் 70 ஆண் குழந்தைகளாகவும், 30 பெண் குழந்தைகளாகவும் இருக்கிறது. இப்படி நோய்களில் இருந்து பெண் குழந்தைகளை மாய்ந்து மாய்ந்து காப்பாற்றுவது 'ஹீமோபைலியா ஜிடெண்டரஸ்' என்ற ஹார்மோனும் 'இம்முனோ குளோபின்' என்ற எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ரத்த புரதமும்தான். இது பெண்களின் ரத்தத்தில் மட்டும்தான் அதிகமாக உள்ளது.

இதனால்தான், பெண் குழந்தைகள் கடுமையான பாக்டீரியாக்களின் தாக்குதல்களை சமாளித்து வாழ்ந்துவிடுகின்றன. சராசரி ஆயுளை எடுத்துக் கொண்டால் ஆணைவிட பெண் கூடுதலாக 8 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறாள். 

மாரடைப்பு, திக்குவாய், வலிப்பு, பைத்தியம் போன்ற எல்லாமே ஆண்களைத்தான் தாக்குகிறது. உடல் வலிமை வேறு, உடலின் எதிர்ப்பு சக்தி வேறு, வலிமையை ஆணுக்கும், எதிர்ப்பு சக்தியை பெண்ணுக்கும் இயற்கை அளித்துள்ளது. எதிர்ப்பு சக்தி குறைந்த ஆணினம் இனி மெல்ல மெல்ல சாகும் என்கிறது மருத்துவதுறை. இவையெல்லாவற்றையும் விட சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆய்வின் முடிவு ஒட்டுமொத்த ஆணினத்தையும் ஆட்டம் காணவைத்து விட்டது. 

குரோமோசோம்களின் மாயாஜாலத்தால்தான் ஆண் பெண் உருவாக்கபடுகின்றன. 'எக்ஸ்' குரோமோசோமும் 'ஒய்' குரோமோசோமும் தான் இந்த மாயாஜாலம். பெண் என்றால் இரண்டு 'எக்ஸ்' குரோமோசோம்களும், ஆண் என்றால் ஒரு 'எக்ஸ்', ஒரு 'ஒய்' குரோமோசோம்களுடன்தான் இருப்பார்கள். 

'எக்ஸ்' குரோமோசோம்
இதில் 'எக்ஸ்' குரோமோசோம் முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு கருக்கூறு. 'ஒய்' குரோமோசோம் அப்படியல்ல. அது பாதியளவு மட்டுமே வளர்ச்சியடைந்த கருக்கூறு. அதனால்தான் மருத்துவ உலகம் முழுமையாக வளர்ச்சியடையாத ஒரு பெண்ணே ஆண் என்று கூறுகிறது. சமீபத்திய ஆய்வு இதை மேலும் மெய்ப்பிக்கிறது.

கிரேவ்ஸ் என்ற ஆஸ்திரேலிய பெண் விஞ்ஞானி இந்த அதிர்ச்சியான ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார். அதன்படி ஆண் இனம் 'ஒய்' குரோமோசோம்களை கொண்டிருப்பதால் அது அழியத் தொடங்கியுள்ளது என்கிறார். 'ஒய்' குரோமோசோம் உள்ளுக்குள்ளேயே அழியும் தன்மைக் கொண்டது என்றும், அதன் அழிவால் புவியில் ஆண்களால் நிலைத்திருக்க முடியாது என்றும், கடைசியில் பூமியில் இருப்பது பெண் இனம் மட்டுமே என்றும் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். 

மேலும் அவர், பெண்மையின் குரோமோசோமான 'எக்ஸ்' குரோமோசோமில் ஆயிரம் ஜீன்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஆணின் குரோமோசோமான 'ஒய்' குரோமோசோமில் வெறும் 100 ஜீன்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆக மொத்தம் பெண்கள் இரண்டு 'எக்ஸ்' குரோமோசோமுடன் 2,000 ஜீன்கள் கொண்டவர்களாகவும், ஆண்கள் ஒரு 'எக்ஸ்' (1,000 ஜீன்கள்) ஒரு 'ஒய்' (100 ஜீன்கள்) குரோமோசோம்களைக் கொண்டு 1,100 ஜீன்கள் மட்டுமே கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். 

ஆரம்ப காலங்களில் ஆண்களின் 'ஒய்' குரோமோசோமிலும் 1,000 ஜீன்கள் இருந்தனவாம், லட்சக்கணக்கான ஆண்டுகளில் 'ஒய்' குரோமோசோமில் இருந்த ஜீன்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இந்த எண்ணிக்கைக்கு வந்ததாகவும் கூறுகிறார். 


மேலும், 'எக்ஸ்' குரோமோசோம்கள் பெண்ணுக்கு ஜோடியாக அமைந்துள்ளதால் ஜீன்களின் பாதிப்பை அவைகள் தாங்களே சரி செய்து கொள்கிறது. ஆணிடம் குரோமோசோம்கள் ஜோடியாக இல்லாததால் ஜீன்களின் பாதிப்பு ஏற்பட்டால் அது சரி செய்ய முடியாமல் அழிந்து போகிறது. இப்போது 'ஒய்' குரோமோசோமில் உள்ள ஜீன்களும் எதற்கும் பயன்படாத குப்பைகள் என்று பயமுறுத்துகிறார், கிரேவ்ஸ்.

"இந்த பரிணாம வளர்ச்சியில் ஈடுகொடுக்க முடியாமல் ஆணினம் அழிந்து போகும். இது ஒரு பரிதாபமான முடிவு. ஆண்கள் பரிதாபமானவர்கள்." என்று தனது ஆய்வை முடிக்கிறார். கிரேவ்ஸ்.

ஆனால், இதெல்லாம் நடைபெற இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள் இருக்கின்றன என்று கூறி விஞ்ஞானிகள் நம் வயிற்றில் பால் வார்க்கிறார்கள். ஆனாலும், மெல்லச்சாகும் ஆணினத்தை தடுக்கவே முடியாது என்று சத்தியமும் செய்கிறார்கள். 

வருங்காலம் ஆணுக்கு கொடூரமானதாகவே இருக்கும்!       


====


ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

கொள்ளிவாய்ப் பிசாசு அறையுமா..?நான் தினம் ஒரு தகவலில் எழுதியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வாயில் நுரையுடன் ரத்தம் கக்கி திடீரென்று மரணமடைபவர்களை பற்றி  கிராமப்புரத்தில் ஒரு கதை சொல்வார்கள், "கொள்ளிவாய்ப் பிசாசு அறைந்து விட்டது. அதனால்தான் வாயில் ரத்தம் கக்கி செத்துவிட்டான்" என்று. உண்மையில் கொள்ளிவாய்ப் பிசாசு அறையுமா...! வெறும் காற்றாக சித்தரிக்கப்படும் ஆவியான கொள்ளிவாய்ப் பிசாசுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா? என்று மருத்துவத் துறையினரிடம் கேட்டால், "அதெல்லாம் சும்மா...! முதலில் கொள்ளிவாய் பிசாசு என்ற ஒரு ஜந்து உலகில் இல்லை" என்கிறார்கள். வாயில் நுரை கக்கி சாவது எல்லாம் உடலில் ஏற்படும் கோளாறால்தான் என்று உண்மையைச்  சொல்கிறார்கள்.


ஹார்ட் பெய்லியர் என்ற இதயத்தின் செயல் திறன் குறைவதால் ஏற்படும் பாதிப்பே இந்த கொள்ளிவாய்ப் பிசாசு அறைந்த கதை. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சர்வேயில் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினர் ஹார்ட் பெய்லியர் என்ற நோய்க்கு ஆட்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் 10 சதவீதம் பேருக்கு இந்த நோய் இருக்கிறது.

சரி,ஹார்ட் பெய்லியர் என்றால் என்ன? ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். புதிதாக ஒரு கார் வாங்குகிறோம். ஆரம்பத்தில் அது காடு, மேடு, மலை என்று எளிதாகப் பயணிக்கும். அதுவே பல ஆண்டுகள் ஓடி பழைய கார் ஆனா பின்பு என்ஜினின் சக்தி குறைந்த பின்பு மலைப்பகுதியில் ஏற திணறும். இப்படித்தான் இதயமும் வயது ஆக ஆக உடலின் எல்லா பாகங்களுக்கும் தேவையான ரத்தத்தை அனுப்ப முடியாமல் திணறுகிறது. இந்த திணறலைத்தான் ஹார்ட் பெய்லியர் என்கிறார்கள்.

இதயம் என்பது ஒரு பம்பிங் மோட்டார் போல செயல்படுகிறது. நுரையீரலில் இருந்து வரும் ரத்தத்தை பம்ப் செய்யும் மோட்டார்தான் இதயம். இதயத்திலிருந்து ரத்தக்குழாய்கள் மூலம் உடல் முழுக்க ரத்தம் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இதயம் என்ற பம்பின் செயல்திறன் குறைந்து, அது வேலை செய்வது தடைப்பட்டால் என்னவாகும்? ரத்தம் நுரையீரலிலேயே தேங்கிக்கிடக்கும். தொடர்ந்து ரத்தம் நுரையீரலில் தேங்கும் போது அங்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. அந்த அழுத்தம் தாங்காமல் சிறு ரத்த குழாய்கள் வெடிக்க  நேருகிறது. இதெல்லாம் ஆரம்பநிலைதான், இதை சரி செய்து விடலாம். இவற்றில் எல்லாம் அசட்டையாக இருந்தால் இறுதிகட்ட நிலைதான் வாயில் ரத்தம் கக்கி இறப்பது.

ஹார்ட் பெய்லியர் உள்ளது என்பதை இரண்டு முக்கிய அறிகுறிகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். உடல் சோர்வடைவது, மூச்சு வாங்குவது. இந்த அறிகுறிகளை அசட்டை செய்தால் விளைவுகள் மோசமாகும். ஹார்ட் பெயிலியரின்போது உடல் பாகங்களுக்கு தேவையான அளவு ரத்தம் சப்ளை செய்யப்படாததால் உடல் சோர்வடைகிறது. சின்ன வேலை செய்தால் கூட மூச்சு வாங்குகிறது. இந்த அறிகுறிக்குப் பின்பும் கூட விபரீதம் புரியாமல் மெத்தனமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த அவர்களை 'அக்யூட் பல்மொனரி எடிமா' என்ற மோசமான கட்டத்திற்கு கொண்டு சென்றுவிடும். வாயில் நுரையுடன் சில சமயங்களில் ரத்தமும் சேர்ந்து வரலாம். இதைத்தான் கொள்ளிவாய்ப் பிசாசு அறைந்துவிட்டதாக கூறுகிறார்கள். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் தீவிர சிகிச்சை மூலம் காப்பாற்றி விடலாம். கொள்ளிவைப் பிசாசு அறைந்து விட்டது என்று சோகமாக இருந்தால் உயிர் பிரிந்துவிடும் அபாயமும் உண்டு. 

கொள்ளிவாய் பிசாசு எப்போதும் யாரையும் கொன்றதில்லை என்பதே உண்மை.

* * * * *

புதன், ஆகஸ்ட் 19, 2015

இனி படுத்துக்கொண்டே தியேட்டரில் படம் பார்க்கலாம் ..!

'அட போங்கப்பா, தியேட்டர்ல போய் யார் இரண்டரை மணி நேரம் உக்காந்து படம் பார்க்கறது. கொஞ்சம் ரிலாக்ஸா படுத்துட்டு பார்த்த எப்படியிருக்கும்.' நாம இப்படி யோசிக்கும் போது தியேட்டர்காரங்க யோசிக்க மாட்டாங்களா! யோசிச்சுட்டாங்க

வீட்டுக்குள் தொலைக்காட்சி வந்தபின் நம் மக்கள் மனதில் தோன்றிய எண்ணம் இது. மேலும் நமது உடலும் சொகுசுக்கு பழகிவிட்டதன் வெளிப்பாடு.  இந்த மக்களின் பழக்கத்தை காசாக்க தியேட்டர்களும் முடிவு செய்துவிட்டன. உலகம் முழுவதும் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. கீழே படத்தில் உள்ளது லண்டனில் உள்ள எலக்ட்ரிக் தியேட்டர். எப்படியொரு வசதி பாருங்கள்.

எலக்ட்ரிக் தியேட்டர் லண்டன்
இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துக்கொண்டது. ஹைதராபாத்தில் உள்ள 'பிரசாத் ஐமாக்ஸ்' ஏற்கனவே ஐந்து தியேட்டர்களை வைத்திருக்கிறது. இப்போது ஆறாவதாக ஸ்க்ரீன் 6 ஐமாக்ஸ் என்ற தியேட்டரின் முன் பாதி படுத்துக் கொண்டே படம் பார்க்கும் விதமாக அமைக்கப் படவுள்ளது. இப்படி படுத்துக்கொண்டு படம் பார்க்க கொஞ்சம் கட்டணம் அதிகம். அதாவது ரூ.1,500. 

இந்த பிரசாத் ஐமாக்ஸ் தியேட்டர் ஒன்றில் நான் படம் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அதன் பெயர் 'பிரசாத்ஸ் லார்ஜ் ஸ்க்ரீன்'. இதுதான் உலகிலேயே மிகப் பெரிய திரை கொண்ட வரிசையில் இரண்டாவது தியேட்டர். இந்த ஸ்க்ரீனின் உயரம் 72 அடி அகலம் 95 அடி. பிரமாண்டமான திரையில் படம் பார்க்கவேண்டும் என்பதற்காகவே படத்திற்கு போனேன். அது ஒரு ஆங்கிலப் படம். டிக்கெட் விலையோ ரூ.450. 

பிரசாத்ஸ் லார்ஜ் ஸ்க்ரீன்
சில படங்கள் மட்டும்தான் திரை முழுவதும் தெரியும். மற்ற படங்கள் நாம் சாதரணமாக பார்க்கும் அளவிலே திரைக்கு நடுவே சற்று சிறியதாக தெரியும். ஆனால், நான் பார்த்த படம் திரை முழுவதும் தெரிந்தது. அதுவும் 12,000 வாட்ஸ் பவர் கொண்ட சக்தி வாய்ந்த ஒலியமைப்பு என்று படம் பார்ப்பதே மிகப் பிரமாண்டமான அனுபவமாக இருந்தது. 

சிட்னி ஐமாக்ஸ் தியேட்டர்
சரி, அப்படியென்றால் பெரிய திரை கொண்ட உலகின் முதல் தியேட்டர் எங்கிருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். அது இருப்பது ஆஸ்திரேலியா சிட்னியில். 97 அடி உயரமும் 123 அடி அகலமும் கொண்ட அந்த திரையில் படம் பார்ப்பதே தனி அனுபவம்தான். அதில் படம் பார்ப்பது இன்னும் பிரமாண்டமாக இருக்கும்.  

படுத்துக்கொண்டே படம் பார்க்கக்கூடிய மேலும் சில தியேட்டர்கள்.  

வெல்வெட் கிளாஸ் சினிமா, இந்தோனேஷியா 
ரூப்டாப் சினிமா, லாஸ் ஏஞ்சலீஸ்
பில்லோ சினிமா, லண்டன்
பர்சியன் மியூசிக் ஹால், ஒலிம்பியா
உலகில் உள்ள வேறு சில வித்தியசமான தியேட்டர்களுக்கும் நாம் போய் வருவோம். 

ஜெர்மனியில் உள்ள இந்த தியேட்டர் சினிமாவுக்கும் நாடகத்திற்கும் பெயர் பெற்றது. பெரிய ஸ்டேடியத்தில் அமர்ந்து பெரும் கூட்டத்துடன் படம் பார்க்கும் அனுபவம் இதில் கிடைக்கும். மொத்தம் 2,600 இருக்கைகள்.  உள் அலங்காரத்தில் சிறப்பான இடத்தில் இருக்கும் தியேட்டர்களில் இதுவும் ஒன்று.
ஹாட்டப் சினிமா, மான்செஸ்டர் 

நம்மூரில் ரூப்டாப் ரெஸ்டாரன்ட் பற்றிதான் தெரியும். ஆனால் இங்கு ரூப்டாப் சினிமாவே உள்ளது, மொட்டை மாடியில் வட்ட வடிவத்தில் தொட்டிகள் நிறைய இருக்கும். அதில் கதகதப்பான வெந்நீர் நிரப்பப்பட்டிருக்கும். அதற்குள் அமர்ந்தபடி, மது அருந்திக்கொண்டே, பிடித்த துணையோடு படம் பார்க்காலாம். நீச்சல் உடை மட்டுமே அனுமதி. அதுவும் வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவரவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும். 

ஹாட்டப் சினிமா, மான்செஸ்டர் 
மனிதனின் சொகுசும் ரசனையும் எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது. ஆனால், இதில் எங்கு சென்றாலும் நம் பர்ஸ் பெரும் வீக்கமாக இருக்க வேண்டும். 

* * * * *

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

1945 ஆகஸ்ட் 6 காலை 8:15 - உலகின் முதல் அணுகுண்டு!


1945 ஆகஸ்ட் 6 காலை 8:15

இப்படியொரு கொடூரமான நாளை சந்திப்போம் என்று எந்தவொரு ஜப்பானியரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.ஆனாலும் அந்த கொடூரம் நடந்தது. 1945 ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 8.15 மணிக்கு உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட நரக அனுபவத்தை அந்த நகரம் பெற்றது. அந்த நகரத்தின் பெயர் ஹிரோஷிமா. அணுகுண்டை வீசிய நாடு அமேரிக்கா. அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய்.

'லிட்டில் பாய்' அணுகுண்டு போர் விமானத்தில் பொருத்துதல்
என்ன நடந்தது? என்று சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர்விட்டிருந்தார்கள். கணக்கில்லாதவர்கள் சட்டென்று ஊனமானார்கள். இன்னமும் கூட குழந்தைகள் அங்கு ஊனமாக பிறப்பதை மாற்றமுடியவில்லை. மிகப் பெரிய இந்த கொடூர நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களின் அனுபவங்களை ஒன்றாக திரட்டியுள்ளார் பேராசிரியர் அரடா ஒசர்டா என்பவர். அந்த தொகுப்பிலிருந்து சில பகுதிகள்...

கிய்கேர் சகசி 
(1945-ல் 6 வயதுக் குழந்தை)

"காதைப் பிளக்கும் அந்த ஓசை என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஒரு வயதான மனிதர் தாங்க முடியாத வேதனையோடு ஓலைமிட்டவரே ஓடிவந்தார். அணுகுண்டால் ஹிரோஷிமா நகரமே முற்றிலுமாக அளிக்கப்பட்டதாக கூறினார். அதைக் கேட்டதும் எனது பாட்டியால் வீட்டில் இருக்க முடியவில்லை. தலையில் அடித்தவாறு அழுதுகொண்டே ஹிரோஷிமாவை நோக்கி வேகமாக ஓடினாள்.


போன பாட்டி திரும்பி வரவில்லை. ஒரு வாரம் கழித்து வந்தாள்.

"அம்மா எங்கே?" என்றேன்.

"அவளை என் முதுகில் தூக்கி வந்திருக்கிறேன்." என்றாள் என் பாட்டி.

என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உற்சாகமாக கூச்சலிட்டேன்.

"அம்..மா..!"

கத்திக்கொண்டே என் பாட்டியின் பின்னால் சென்று பார்த்தேன்.

அம்மா இல்லை..!

ஒரு டிராவல் பேக் மட்டும் பாட்டியின் முதுகில் தொங்கிக்கொண்டிருந்தது.

"அம்மா எங்கே பாட்டி..?!"

நான் ஏமாற்றமடைந்தேன்.

எனது அக்காவும் பக்கத்து வீட்டுக்காரர்களும் வாய்விட்டு கதறி அழுதார்கள்.

"ஏன் அழுகிறார்கள்..?"

என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பாட்டி கண்ணீரோடு அந்தப் பையை கீழே வைத்தாள். அதில் இருந்து சில எலும்புகளை வெளியே எடுத்து எல்லோரிடமும் காட்டினாள். அதில் எனது அம்மாவின் தங்கப்பல்லும் அவருடைய கை எலும்புகளும் இருந்தன. எல்லோரும் குலுங்கி குலுங்கி கதறி அழுதார்கள்.

அப்போதும் என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை!"

கிமிகோ தகாய்
(1945-ல் 5 வயது சிறுமி)

அந்த நாளை நினைத்தால் இன்னமும் என் மனம் பதறுகிறது. அன்று நான் என் தோழி தாத்சுகோவுடன் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது விமானம் ஒன்று பறந்து வரும் சத்தம் கேட்டது.

"ஏய்.. ஏரோப்ளேன்..!" கத்திக்கொண்டே பார்க்க வெளியே ஓடினேன்.


அந்த நொடியில் இடி இடித்து மின்னலடித்தது போல் ஒரு ஒளிவெள்ளம் தெரிந்தது. பயந்துபோன நான் பக்கத்து வீட்டுக்குள் ஓடிப்போய் என் தோழியின் அம்மா பின்னால் பதுங்கிக்கொண்டேன். அவரும் பயத்தில் நடுங்கிகொண்டிருந்தார். என்னை உதறி விட்டு தனது கணவனை கட்டிக்கொண்டார்.

நீளமான ஒரு துணியை எடுத்து தன் இடுப்பில் கட்டிக்கொண்டு தன் கணவருடன் வீட்டை விட்டு ஓடினார்.

எனக்கும் என் தோழிக்கும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. வேகமாக வானில் இருள் பரவியது. வீட்டின் கூரை உடைந்து விழத் தொடங்கியது. கண்களில் மிரட்சியுடன் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டோம்.

தாத்சுகோவின் பாட்டி அச்சத்துடன் கூவி அழைத்தார். அதனால் அவளும் என்னை விட்டு ஓடி விட்டாள். நான் தனித்து விடப்பட்டேன். எனக்கு அழுகை வந்தது அழத்தொடங்கினேன்.


அப்போது முகம் முழுவதும் புழுதி அப்பிய மற்றொரு பக்கத்து வீட்டுப்பெண், "அழாதே கிமிகோ! உங்க அம்மா இங்கேதான் இருக்கிறாள்." என்று கூறிக்கொண்டே நிற்காமல் ஓடினாள். நான் மீண்டும் தனித்து விடப்பட்டேன்.

சிறிது தூரத்தில் "கிமிகோ! கிமிகோ!" என்று என் அக்கா என்னை கூப்பிடும் குரல் கேட்டது. என் அம்மாவும் வந்துவிட்டாள். நாங்கள் நேரத்தை வீணாக்காமல் பாதுகாப்பான இடத்தை தேடி ஓடினோம்.

பின் நடந்தோம். நிற்காமல் போய்க்கொண்டே இருந்தோம். வழியெங்கும் வயிறு உப்பிய வீரர்களின் உடல்கள் ஆற்றில் மிதப்பதைக் கண்டோம். அவர்கள் அணுத்தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் விழுந்து உயிர் விட்டவர்கள். சாலையோரங்களில் ஏராளமான பிணங்கள் நிறைந்து கிடந்தன.

மற்றொரு இடத்தில் ஒரு பெண் மரத்தடியில் கால் சிக்கி, நகர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். யாரும் அவரைப் பற்றி கவலைப்படாமல் ஓடிக்கொண்டே இருந்தார்கள். எனது தந்தை கோபமாக கத்தினார்.

"இங்கே ஜப்பானியர் யாருமே இல்லையா? ஒரு பெண் போராடிக்கொண்டு இருக்கும்போது ஓடுகிறீர்களே!" என்றார். சிலர் உதவிக்கு வந்தனர். அந்தப் பெண்ணை மற்றவர்களுடன் சேர்ந்து என் தந்தை விடுவித்தார்.

மற்றோரிடத்தில் உடல் முழுக்க தீக்காயங்களுடன் ஒரு மனிதர் சாவின் விளிம்பில் நடந்து கொண்டிருப்பதை பார்த்தோம்.

என் அம்மா தன்னால் இனிமேல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது  என்று அங்கேயே உட்கார்ந்து விட்டார். தன்னை விட்டுவிட்டு மற்றவர்கள் சென்றுவிடுமாறு கூறினார். அப்படி விட்டு செல்ல அங்கு யாருக்கும் மனமில்லை.

அருகில் பிணங்கள் மிதந்துக் கொண்டிருந்த கலங்கிய ஆற்று நீரை எடுத்து அம்மாவுக்கு கொடுத்தோம். சிறிது நேர ஓய்வுக்குப்பின் மீண்டும் எங்களுடன் சேர்ந்து நடந்தார்.

நாங்கள் எங்கள் நகரத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். கிராமங்களில் நடந்து சென்றபோது விவசாயிகள் எங்களை திகைப்புடன் பார்த்தார்கள். என்ன நடந்தது? என்று கேட்டார்கள். பண்ணை வீடுகள் வழியே நடந்தபோது, அவர்கள் சோற்று உருண்டைகளை எங்களுக்கு தந்தார்கள்.

நாங்கள் எங்கள் உறவினர் வீட்டில் ஒரு மாதத்துக்கு மேல் தங்கினோம். நாங்கள் அந்த வீட்டுக்கு வந்தபோது எனது அம்மா முதுகில் காயம்பட்டு வலிப்பதாக சொன்னார். நான் பார்த்தபோது அம்மா முதுகில் ஒரு அங்குல அகலத்துக்கு ஒன்றரை அங்குல நீளம் உடைய ஒரு கண்ணாடித் துண்டு காயப்படுத்தியிருந்தது. எனது தம்பியை தனது முதுகில் தூக்கி நடந்ததால் அது ஆழமாகக் காயப்படுத்தியிருந்தது.


மறுநாள் எனது தந்தை எனது சகோதரியை தேடிச் சென்றார். ஹிரோஷிமா தபால் நிலையத்துக்கு அருகில்தான் குண்டு வீசப்பட்டது. அலறக்கூட நேரம் தராமல் அவள் கொல்லப்பட்டிருந்தாள். அந்த தபால் நிலையத்தில் பணிபுரிந்த ஒருவர் மட்டுமே பிழைத்திருந்தார். அவர் கொல்லப்பட்டவர்களின் சாம்பலை சேகரித்து அவரவர் வீடுகளில் கொடுத்துச் சென்றார். எனது அக்காவின் சாம்பலும் அதில் இருந்தது."

இப்படியாக உண்மைகள், உணர்வுகளை உறைய வைக்கிறது. இன்றைக்கு இருக்கும்  அணு ஆயுதங்களோடு ஒப்பிடும்போது ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் வீசப்பட்ட லிட்டில் பாயும் பேட் மேனும் மிக மிக சிறியவை. இதிலாவது தப்பிப்பிழைத்தவர்கள் அனுபவத்தை சொன்னார்கள். ஆனால் இப்போது உள்ள சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் வீசப்பட்டால் அனுபவத்தை சொல்ல ஒரு ஆள் கூட மிஞ்சமாட்டார்கள் என்பதுதான் நம் முகத்தில் அறையும் உண்மை!!!

* * * * *


சனி, ஆகஸ்ட் 15, 2015

பத்மாசனி எனும் மறக்கப்பட்ட பெண் போராளி!


த்மாசனி இந்த பெயரை யாரும் கேள்விபட்டிருக்க மாட்டார்கள். இந்தப் பதிவை முழுமையாக படித்து முடித்தவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்தப் பெயரை மறக்கமாட்டார்கள். தேசத்தின் விடுதலைக்காக மாபெரும் அர்ப்பணிப்பை அளித்தவர். இவரைப் பற்றி படித்ததும் இவரின் புகைப்படம் தேடி அலைந்ததை தனி பதிவாக போடலாம். இறுதியாக சமீபத்தில் மறைந்த தியாகி மாயாண்டி பாரதி அய்யாவிடம்தான் பத்மாசனி படத்தை வாங்கினேன். 2003 சுதந்திரதின சிறப்புமலரில் நான் எழுதிய இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

சும்மா வந்துவிடவில்லை சுதந்திரம். 200 ஆண்டுகளுக்கு மேலாக அந்நியர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த இந்த தேசத்தின் சுதந்திரம் பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் தியாகத்தால் உருவானது. 

சுதந்திர போராட்டத்தில் தன் குழந்தைகளையே பலியிட்ட ஒரு வீரத்தாயின் வரலாறு இன்று பலருக்கும் தெரியாது. அந்த தாயின் பெயர் பத்மாசனி. விடுதலைக்காக சிறை சென்ற முதல் பெண். பாரதியாரின் பாடல்களை பட்டிதொட்டி எல்லாம் பரப்பிய முதல் பெண்ணும் இவர்தான்.  

பத்மாசனி
மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் சோழவந்தானில் 1897-ல் பிறந்தவர் இவர். மதுரையைச் சேர்ந்த சீனிவாசவரதன் என்பவரை திருமணம் செய்து கொண்டவர். மதுரையின் மருமகள். 

சீனிவாசவரதனும் மகாகவி பாரதியாரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒருமுறை பாரதியார் 'உன் சொத்தை விற்றேனும் பத்திரிக்கை நடத்த பணம் அனுப்பு' என்று கடிதம் எழுதியிருந்தார். மறுநாளே தனது சொத்தை விற்று பாரதியாருக்கு பணம் அனுப்பிவைத்தவர் வரதன். அத்தனை நெருக்கம். 

இன்றைக்கு வேண்டுமானால் பாரதியார் பாடல்களை நாம் எல்லா இடங்களிலும் கேட்கலாம். ஆனால் அன்றைக்கு அப்படியில்லை. பாடல்கள் வெறும் காகிதத்தில் மட்டுமே இருந்தன. அதை தெரு தெருவாக பாடி, பஜனைகளில் பாடி மக்கள் மத்தியில் எழுச்சி ஊட்டியவர்கள் சீனிவாசவரதனும் பத்மாசனியும்தான். 

1922-ல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காக வரதன் கைது செய்யப்பட்டார். சேதி கேட்டு ஓடிவந்த பத்மாசனி தனது கணவருக்கு திலகமிட்டு மாலை அணிவித்து சிறைக்கு அனுப்பி வைத்தார். 

அதுவரை கணவருக்கு உறுதுணையாக இருந்த பத்மாசனி முழுமூச்சாக நாட்டின் விடுதலைக்காக தனந்தனி ஆளாக போராட்டத்தில் குதித்தார். தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்மணி என்ற பெருமை இவரை வந்து சேர்ந்தது. 

கணவர் சிறைக்கு சென்றபின் தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். தன்னுடைய தங்க நகைகள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டார். தலைக்கு என்னை தேய்த்துக்கொள்ள மாட்டார். ஏகப்பட்ட வசதியிருந்தும் ஒருவேளை மட்டுமே உணவருந்தினார். அதுகூட மோர் சாதமும் பட்டமிளகாய் துவையலும்தான். தான் செல்வந்தராக இருந்தும் அந்த வருவாயில் சாப்பிடாமல் ராட்டையில் நூல்நூற்று அதில் வரும் வருமானத்தின் மூலமே சாப்பிட்டார். 

தினமும் மாலை நேரத்தில் பாரதியார் பாடல்களை பாடியபடியே வீடுவீடாகச் சென்று கதர் விற்று வருவார். சுதந்திரத்திற்கு எதிராக இருப்பவர்களையும், ஆங்கிலேய அரசிடம் வேலைப் பார்ப்பவர்களையும் கூட கதர் வாங்க வைத்துவிடுவார். அவர் பேச்சில் அத்தனை வல்லமை இருந்தது. பெண்கள் என்றாலும் ஒருமுழம் ரவிக்கைத்துணி வாங்க வேண்டும் என்பார். 

பெண்களும் விடுதலைப் போரில் ஈடுபட வேண்டும் என்றார். "சாவித்திரி பிறந்த நாடு. சந்திரமதி, சீதை வாழ்ந்த நாடு, தன்னை மானபங்கம் படுத்திய துரியோதனன் ரத்தத்தை எடுத்து சடை முடிந்து வீரசபதம் நிறைவேற்றிய பாஞ்சாலி வாழ்ந்த நாடு என்று பழம் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. இப்பெண்மணிகள் வாழ்ந்த நாட்டில் பிறந்த நாம் இனி கிழவிகள், தவசிகள் போல் பேசுவதில் மகிமையில்லை. இந்தியா முழுவதும் விடுதலை அக்னி ஜுவாலையில் எரிகிறது. இந்தியப் பெண்களே! இந்த அக்னியில் நீங்களும் இணைந்திடுங்கள்." இவரின் பேச்சு பல பெண்களை சுதந்திர போராட்டத்திற்கு இழுத்து வந்தது. 

1930-ல் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த பத்மாசனி மதுரை ஜான்சி ராணி பூங்கா முன் பேசிய பொதுக்கூட்டத்தில், "போலீஸார் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேசிய இயக்கத்தில் பங்கு பெற வேண்டும்." என்றார். இப்படி பேசியதை கேட்ட பின் ஆங்கிலேய அரசு சும்மா இருக்குமா பத்மாசனியை கைது செய்து 6 மாத சிறையில் தள்ளியது. 

சிறை உணவு அவருக்கு பிடிக்கவில்லை. மூன்று மாத கர்ப்பம் என்பதால் குமட்டலும் வாந்தியும் இருந்தது. சிறையில் தானே சமைத்துக்கொள்ள அனுமதிகேட்டு ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்தார். கர்ப்பவதிக்கான ஊட்டச்சத்து உணவு இல்லாததாலும் உடல்நிலை மோசமாக இருந்ததாலும் கர்ப்பம் கலைந்தது. 

சிறையில் இருந்து வெளிவந்ததும் மீண்டும் போராட்டத்தில் குதித்தார். அன்றைய காலகட்டத்தில் பொதுக்கூட்டம் என்றால் இரண்டு விஷயங்கள்தான் பெரிதாகப் பேசப்படும். ஒன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை, மற்றொன்று வெள்ளையர்கள் லாலாலஜபதிராயை தடியால் அடித்துக் கொன்றது. இந்த இரண்டு சம்பவங்களுமே இந்தியர்கள் நெஞ்சில் நெருப்பாக கனன்று கொண்டிருந்தன. 

இதைப் பற்றி பத்மாசனி பேசும் போது அனல் தெறிக்கும். இவரின் பேச்சு என்றாலே அக்கம் பக்க ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் ஒன்று கூடிவிடுவார்கள். அவரது குரல் வெண்கலம் போல் கணீரென்று இருக்கும். பேச்சில் உணர்ச்சியும் வேகமும் குவிந்துக் கிடக்கும். மரக்கட்டைக் கூட வீறுகொண்டு எழும். தொண்டர்கள் பாதி கூட்டத்திலே ஆவேசமாக எழுந்து, இப்போதே வெள்ளையர்களை கூண்டோடு அழித்துவிடுகிறோம் என்று புறப்படுவார்கள். அத்தகைய வீரம் அவரது பேச்சில் இருக்கும். 

நாட்டின் விடுதலையை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்தனை செய்யாத பத்மாசனிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து இறந்திருந்தன. தேச சேவைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட அவருக்கு தன் செல்வங்களை கவனிக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் இரண்டு குழந்தைகளுமே ஒரு வயதை அடையும் முன்னே இறந்து போயிருந்தனர்.  

அப்போது நான்காவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார். சுப்பிரமணியசிவம் காவிரி நடையாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்த போது கரு 8 மாதமாக வளர்ந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் குழந்தைப்பிறக்கலாம் என்ற நிலை. தலைவர்கள் எல்லாம் தடுத்தார்கள். நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றார்கள். 

விடுதலையைத் தவிர எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல என்று கலந்து கொண்டார். வழிநெடுக சுதந்திரப் பிரச்சாரம், பாரதியார் பாடல்கள், சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தந்த தியாகிகளின் வரலாறு என்று நடைப் பயணம் முழுவதும் சுதந்திர வேட்கை ஜோதி சுடர்விட்டு எரிந்தது. எட்டு மாத கர்ப்பத்துடன் 48 மைல் தூரம் நடந்தே வந்தார்.   

ஒகனேக்கல் வரை ஒன்றாக சென்ற காவிரி யாத்திரை அதன்பின் இரண்டாக பிரிந்தது. ஒன்று திருப்பத்தூர், வாணியம்பாடிக்கும், மற்றொன்று தர்மபுரிக்கும் சென்றன. பத்மாசனி தருமபுரி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, ஓசூர் வரை சென்று பிரச்சாரம் செய்தார். 

அந்த நேரத்தில் அவருக்கு பிரசவம் ஆனது. அழகான பெண் குழந்தை பிறந்தது. கடுமையான குளிர், பாதையோரம் தங்குவதற்கு நல்ல இடம் வேறு இல்லை. பிறந்த மூன்றாவது நாளில் அந்த குழந்தையும் இறந்தது. அம்மையாரின் உடலும் மோசமாக பாதிக்கப் பட்டது. ஓய்வுக்காக உடல் கெஞ்சத் தொடங்கியது. சில நாட்கள் மட்டும் ஓய்வெடுத்தார். 

உடலில் கொஞ்சம் தெம்பு வந்ததும் மீண்டும் நடக்கத் தொடங்கினார். பத்மாசனியின் பேச்சு மகாத்மா காந்தியடிகளையும் கவர்ந்திருந்தது. பெல்காமில் காந்தி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக பத்மாசனியை காந்தி அழைத்திருந்தார். 

விடுதலைக்காகவே தனது மூன்று குழந்தைகளையும் பலிகொடுத்த இந்த தாய் இந்தியாவின் விடுதலையை பார்க்காமலே இந்த மண்ணை விட்டு மறைந்தார். தன் உடல்நிலையைப் பற்றி கவலைப் படாமல் நாட்டைப்பற்றியே சிந்தித்த இவர் கடைசியில் கடுமையான ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டார். 14.1.1936 அன்று மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விண்ணுலகம் சென்றார்.

இப்படி நாம் அறியாத பல தியாகிகளின் மதிப்புமிக்க தியாகத்தால்தான் இந்த சுதந்திரத்தை பெற்றிருக்கிறோம் என்ற எண்ணமே மனதை அழுத்துகிறது.

ஜெய்ஹிந்த்!  திங்கள், ஆகஸ்ட் 03, 2015

ஓர் அகதியின் செஞ்சோற்றுக் கடன் - 1


ஸ்பைருலினா வளர்ப்பு தொட்டி
கதி என்ற சொல் மிகவும் வலி நிறைந்தது. நாடற்றவன் என்பதுதான் அதன் பொருள். தனக்கென எந்த நாடும் சொந்தமில்லாதவனே அகதி. இதையெல்லாம் விஞ்சி நிற்கும் கொடுமையான மற்றொரு சொல் ஒன்றும் இருக்கிறது.  அதுதான் 'ஏதிலியர்'.

அகதி என்பவனுக்குக் கூட நாட்டைத் தவிர வேறு ஏதாவது ஒன்று சொந்தமானதாக இருக்கும். ஆனால், ஏதிலியர்களுக்கு நாடு மட்டுமல்ல வேறு எதுவுமே சொந்தமாக இருக்காது. அகதி என்பதற்கு இணையான தமிழ் சொல் ஏதிலியர்தான். அப்படியொரு ஏதிலியராக இலங்கையில் இருந்து இந்தியா வந்தவர்தான் க.இரத்தினராஜ சிங்கம்.

க.இரத்தினராஜ சிங்கம்
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பு முடிந்ததும், 'உதயன்' நாளிதழில் செய்தியாளராகவும், புகைப்படக் கலைஞராகவும் பணிபுரிந்தார். சாமானியர்களே சிங்களர் மத்தியில் வசிப்பது கஷ்டம். இவரோ பத்திரிகையாளர். கேட்கவா வேண்டும். 

கொடுமைகளின் பல உச்சத்தை தொட்டவர். சிங்கள ராணுவத்தின் அச்சுறுத்தலும், போர்ச்சூழலும் அவரை தாய்நாட்டை விட்டே விரட்டியடிக்க இந்தியாவிற்கு ஏதிலியராக வந்து சேர்ந்தார். 

இங்கு வந்து சேர்ந்து 23 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று அவர் தன் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. தனக்கு வாழ வாய்ப்பளித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் செஞ்சோற்றுக் கடன் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

பண்ணையின் பெயர் பலகை
சென்னையிலிருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள நாவலூர் என்ற பகுதியில் ஐ.டி. நிறுவனங்களுக்கு நடுவில் தனது பண்ணையை வைத்திருக்கிறார் ரத்தினராஜ சிங்கம். அவரது பண்ணையில் அவரை சந்தித்தேன். தீர்க்க முடியாத செஞ்சோற்றுக் கடனைப் பற்றி அவர் கூறியபோது எனது கண்களும் கலங்கத்தான் செய்தன. இனி அவரது வார்த்தைகளில்..

"வீடிழந்து நாடிழந்து ஏதிலியராக இந்தியா வந்த எங்களை இருகரம் கூப்பி வரவேற்று வாழ்வளித்தது தமிழகம்தான். அப்போது 112 அகதிகள் முகாம் தமிழகத்தில் இருந்தன. அந்த முகாம்களில் வாழும் மக்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த ஊட்டச்சத்துக்காக வெளிநாடுகளில் இருந்து நிதி வந்து கொண்டிருந்தது. அந்த நிதி 2000-ம் ஆண்டு தடைபட்டது. இதனால் ஊட்டச்சத்து கொடுக்கும் வேலையும் முகாம்களில் நின்று போனது. 

அதன்பின் கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் மிகவும் துயருற்றார்கள். அவர்களின் கரு தானாக கலைந்தது, நோயுற்ற குழந்தைகள் பிறந்தன. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. 

நின்று போன ஊட்டச்சத்து உணவுக்கு மாற்றாக எதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இருந்தோம். அபோதுதான் டாக்டர் சிவலிங்கம் எங்களுக்கு 'ஸ்பைருலினா' என்ற சுருள்பாசிப் பற்றி தகவல் கொடுத்தார். அதே நேரத்தில் மதுரையில் ஒரு நிறுவனம் இது பற்றிய பயிற்சி கொடுத்து வருவது தெரிந்தது. 

அதில் நாங்கள் 8 பேர் கலந்து கொண்டோம். எங்களுக்கு ஸ்பைருலினா வளர்ப்பு பற்றி பயிற்சி கொடுத்தார்கள். பயிற்சி முடிந்ததும் எல்லோருக்கும் வளர்ப்பதற்காக 'தாய்' சுருள் பாசியைக் கொடுத்தார்கள். அதை ஆர்வமாக சென்னை எடுத்துவந்து வளர்க்க முயன்றபோது எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு சுருள் பாசி கூட பெருகவில்லை. அதன் பின்னர்தான் நாங்கள் பஸ்ஸில் கொண்டு வந்த முறை சரியில்லை என்று தெரிந்து கொண்டோம். அதன்பின் மீண்டும் மதுரையிலிருந்து ஸ்பைருலினாவை கொண்டு வந்து வெற்றிகரமாக வளர்த்தோம்.

நாங்கள் வளர்த்த ஸ்பைருலினாவை அகதிகள் முகாமில் இருந்தவர்களுக்கு ஊட்டச்சத்தாக கொடுத்தோம். எம் மக்கள் இதை சாப்பிட தொடங்கியப் பின் கரு கலையவில்லை. குழந்தைகள் நோய்வாய்ப் படவில்லை. குழந்தைகள் இறந்து பிறக்கவில்லை. மக்களின் வாழ்வு நன்றாக இருந்தது. 

பெண்களின் கூந்தல் உதிரவில்லை, மாறாக அடர்த்தியாக வளர்ந்தது. சோர்வு விலகியது. விளையாட்டில் ஆர்வம் வந்தது. ஞாபக சக்தி கூடியது. அல்சர் போன்ற பல நோய்கள் எங்கள் மக்கள் மத்தியில் காணமல் போனது. ஸ்பைருலினா சிறந்த ஊட்டச்சத்து மிக்க இணையுணவு எனபதை நாங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டோம். 

கிட்டத்தட்ட 4 வருடங்களாக எங்களின் அகதி மக்களுக்கு மட்டுமே இந்த ஊட்டச்சத்து உணவை கொடுத்து வந்தோம். அதை வளர்ப்பதற்கான பயிற்சியும் கொடுத்து வந்தோம். இதன் பலன்களை கண்கூடாக பார்த்த இந்திய மக்கள் எங்களுக்கும் இந்த பயிற்சியை கொடுங்கள் என்று கேட்டார்கள்.

பறவைப் பார்வையில் வளர்ப்பு தொட்டிகள் 
எங்களை மகிழ்வாக வாழவைத்த இந்த மக்களுக்கு ஏதாவது கைமாறு செய்யவேண்டும் என்ற எண்ணம் எங்களின் அடி மனதில் ஆழமாக இருந்தது. அதனால்தான் 2004-ல் சுனாமி தாக்கியபோது நாங்கள் கடலுக்குள் ஓடிப்போய் எம் இந்திய மக்களை காப்பாற்றினோம். நிர்கதியாக நின்ற அவர்களுக்கு கொடுப்பதற்கு எங்கள் கையில் எதுவும் இல்லை. ஆனாலும், அவர்களுக்கு ஆறுதலாக நின்றோம். 

அவர்கள் சுனாமியால் வீடு, மக்கள், சொந்தபந்தம், உடமைகளை இழந்து நின்றிருந்தார்கள். எங்களுக்கு தெரியும் ஏதும் இல்லாதவர்களின் வலி என்னவென்று, அந்த வலியை குறைப்பதற்காகவே அன்று ஓடோடி வந்தோம். அதுவும் கூட ஒரு செஞ்சோற்றுக் கடன்தான். ஆனால், அது போதாது. எங்களின் செஞ்சோற்றுக்கடன் இன்னும் பாக்கி இருக்கிறது. 

கிட்டத்தட்ட எங்களைப் போன்ற நிலையில்தான் அவர்களும் இருந்தார்கள். இருவரிடமும் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. அதற்காக எங்களை வாழவைத்த மக்களை அப்படியே விட்டுவிட முடியுமா?

நீரிலிருந்து ஸ்பைருலினாவை பிரித்தெடுக்கும் காட்சி 
அப்போதுதான் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஸ்பைருலினா வளர்ப்பைப் பற்றி இந்திய மக்களுக்கு கற்றுத்தர தொடங்கினோம். 10 வருடங்களாக தொடர்ந்து அதை செய்து வருகிறோம். இதுவரை 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அதில் 70 பேர் உற்பத்தியாளர்களாக மாறியிருக்கிறார்கள். 700 பேர்  வேலைப் பார்த்து வருகிறார்கள்.

ஸ்பைருலினா கடவுளால் வழங்கப்பட்ட அமுதசுரபி. புரதம் அதிகம் உள்ள உணவுத் தாவரம். சுலபமாக ஜீரணமாகும் தன்மை கொண்டது. மனித உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியம் தரும் உணவாக மட்டுமல்லாது, அழகு சாதனப் பொருட்களாகவும் ஸ்பைருலினா பயன்படுகின்றது. குளிர்பானம், பிஸ்கட், சேமியா, அப்பளம், கடலை மிட்டாய், கேக், சாக்லேட் போன்ற உணவுப் பொருட்களை அதிலிருந்து  தயாரிக்கின்றோம்.

சோப், ஹேர் ஆயில், பேஷியல், ஷாம்பூ போன்ற அழகு சாதனங்களாகவும் இதை தயாரிக்கின்றோம். இதுபோக, இரண்டாம் தர ஸ்பைருலினாவை கால்நடைகளுக்கு உப உணவாகக் கொடுக்கிறோம். இதனால் பாலின் தரம் கூடுகிறது. கோழிகள் இடும் முட்டைகள் கூடுதல் ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கிறது.

ஸ்பைருலினா 3.5 கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றியது. நீலப்பச்சை பாசியினம் சுற்றுச்சூழல் கூறுகளில் உண்டான மாறுதல்களையும் தாங்கி வளரும் திறன் படைத்த நுண்ணுயிர்ப் பாசி.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்ட 'காமாலினொலினிக்' என்ற அமிலம் தாய்ப்பாலில்தான் அதிகம் உள்ளது. அதற்கடுத்தபடியாக அதிகமாக இருப்பது ஸ்பைருலினாவில் மட்டுமே.

ஸ்பைருலினாவை பெரிய அளவிலும் வளர்க்கலாம். சிறிய அளவில் வீட்டுத் தேவைக்கு மட்டும் மீன் தொட்டிகளில் கூட வளர்க்கலாம். ஆனால், சற்று பெரிய அளவில் செய்வதற்கு நல்ல இடம் வேண்டும்.

                                                                                                                    - நாளையும் தொடரும்

சனி, ஆகஸ்ட் 01, 2015

தாய்ப்பால் ஏன் அவசியம்?


னது குழந்தை எல்லாவற்றிலும் முதன்மையாக, முதலவனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தாய்க்கும் உள்ளுர ஊரும் கனவு. அதற்காக எத்தகைய துயரத்தையும் தாங்கிக் கொள்வாள். 

அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கல்வியோடு தனியாக ஒரு படிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, நன்றாக வளர வேண்டும் என்பதற்காக சத்தான மாத்திரைகள், டானிக்குகள் என்று சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் இதிலே கொட்டுகிறார்கள். 

வளரும் குழந்தைகளுக்கு இத்தனை மெனக்கெடும் தாய்மார்கள் அது குழந்தையாய் இருக்கும் போது  கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் போதும். இப்போது இவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் அனைத்தையும் விட வலுவான ஆரோக்கியமான குழந்தையை வளர்த்திருக்கலாம். அவர்கள் மெனக்கெட மறந்தது தாய்ப்பாலைதான்.


எல்லா உயிரினங்களிலும் மேன்மையானதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மனிதன்தான் தாய்ப்பால் விஷயத்தில் விலங்குகளைவிட மோசமாக நடந்த கொள்கிறான். எந்த விலங்கும் தனது குட்டிக்கு போதுமான அளவு பால் கொடுக்க மறுப்பதில்லை. மனித இனத்தின் பெண் மட்டும்தான் தன் குழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கிறாள். 

பிறந்த குழந்தைக்கு குறைந்த பட்சம் 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வேறு எந்த உணவும் கொடுக்க தேவையில்லை. போதுமான அளவு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க வேண்டியதில்லை. பெரும்பாலான பெண்கள் பால் சுரப்பதில்லை என்கிறார்கள். அதற்கு அவர்கள் மனமே காரணம். 

'என் குழந்தை ஆரோக்கியமாக வளர சத்தான தாய்ப்பால் வேண்டும். அதை என் குழந்தைக்கு குறைவில்லாமல் கொடுக்க வேண்டும்' என்று மனதார நினைத்தாலே போதும். பால் சுரக்கத் தொடங்கும். குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 

சிசேரியன், உடல்நிலை சரியில்லை என்று பிறந்த சில நாட்கள் பால் கொடுக்கவில்லை என்றால் தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். அதனால் சிசேரியன் என்றாலும் மயக்கம் தெளிந்தப்பின் பால் கொடுக்காலாம். குழந்தை உறிஞ்ச, உறிஞ்ச பால் அதிக அளவில் சுரக்கத் தொடங்கிவிடும்.


குழந்தையின் பசியை அறிந்து இரண்டு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பாலுட்ட வேண்டும். பால் குடித்த ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் பால் சுரந்துவிடும். தாய்ப்பால் இயற்கை தரும் முதல் தடுப்பூசி. அது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும். கலப்படமற்றது, சுத்தமானது.  எளிதில் ஜீரணமாகக்கூடியது.

குழந்தையின் மலம், சிறுநீர் வெளியேற்றத்திலும் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். முதலில் வரும் சீம்பால்தான் குழந்தைக்கு வரும் எல்லா நோய்களிலிருந்தும் குழந்தையைக் காப்பாற்றக்கூடிய அருமருந்து. தாய்ப்பால் கொடுப்பதால் உடலாலும், மனதாலும் குழந்தை முழு வளர்ச்சியடையும். பார்வை கோளாறு ஏற்படாது. 


அதில் வைட்டமின் டி இருப்பதால் எலும்பை பாதிக்கும் 'ரிக்கட்ஸ்' எனும் நோய் வராது. தன்னம்பிக்கை கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைத்திறன் கூடும். இவற்றோடு தாயின் அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாமே குழந்தைக்கு போய்சேரும். 

தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நன்மைகள் ஏராளம். மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படாது. பிரசவத்திற்குப்பின் அதிகமாக வெளியேறும் ரத்தப் போக்கு தாய்ப்பால் கொடுப்பதால் நின்று விடும். தாய்ப்பால் கொடுக்கும் வரை கணவருடன் கூடினாலும் கருத்தரிக்காது. இது இயற்கை தரும் குடும்பக் கட்டுப்பாடு. இத்தனையும் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள். 

எனவே, தாய்ப்பாலை கொடுங்கள். பால் கொடுத்தால் மார்பகத்தின் கவர்ச்சி குறைந்து போகும் என்ற ஆதாரமற்ற வதந்தியை நம்புவதைவிட தாய்ப்பால் கொடுத்து வலிமையான பாரதத்தை உருவாக்குவோம். அது பெண்கள் கையில்தான் இருக்கிறது.


படங்கள் : கூகுள் இமேஜ்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...