திங்கள், நவம்பர் 30, 2015

பிரமாண்டமான கப்பல்களை உருவாக்கும் ஜப்பான்


ப்பல் என்பதே பிரமிப்பான விஷயம்தான். அதன் பிரமாண்டத்தைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை. அதிலும் இதுபோன்ற கப்பல்களை பிரமாண்ட வடிவத்தில் மிகப் பெரியதாக விஸ்வரூபமாக வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்கள் ஜப்பான்காரர்கள் தான்.

டோக்கியோ மாரு
1965-ல் இவர்களால் கடலில் மிதக்க விடப்பட்ட 'டோக்கியோ மாரு' என்ற எண்ணெய் கப்பல்தான் அன்றைய உலகில் மிகப் பெரியதாகும். அதைவிட பெரிய கப்பலை 1979 வரை வேறு யாரும் தயாரிக்கவில்லை. அந்த கப்பலில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன் எண்ணெய்யை நிரப்ப முடியும். 

இது அன்றைய உலகில் பெரிய பயணிகள் கப்பலான 'குயின் எலிசபெத்'தை விட இரண்டு மடங்கு பெரியது. ஈபிள் டவரை இதன் மேல் தளத்தில் படுக்கை வசத்தில் கிடத்தி விடலாம்.

குயின் எலிசபெத்
இந்த கப்பல் 140 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. இது ஒரு சாதனை. கப்பலின் விலை அன்றைய நிலவரப்படி 7 கோடி ரூபாயாகும். இன்றைக்கும் உலகில் கட்டப்படும் மொத்த கப்பல்களில் 43 சதவிகிதம் ஜப்பான் தான் கட்டுகிறது. கப்பல் கட்டும் தொழிலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்வீடனை விட ஐந்து மடங்கு அதிகமான கப்பலை ஜப்பான் உருவாக்குகிறது. கப்பல் கட்டும் விஷயத்தில் மற்ற நாடு எதுவும் நெருங்கக் கூட முடியாத நிலையில் ஜப்பான் இருக்கிறது. 

ஜப்பான் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து கப்பல்களை கட்டி முடித்து விடுகிறது. இவ்வளவு விரைவாக கப்பலைக் கட்டும் திறமை உலகில் வேறு எந்த நாட்டிடமும் இல்லை. இத்தனைக்கும் ஜப்பான் 1950 வரை கப்பல் கட்டும் தொழிலில் மிக சாதாரண நிலையிலே இருந்தது. அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக  நவீன தொழில் நுட்பத்தை புகுத்தி கப்பல் கட்டத் தொடங்கியது. 

இதில் விஷேசம் என்னவென்றால், கப்பலுக்கு தேவையான எந்த மூலப்பொருளும் ஜப்பானில் கிடைப்பதில்லை. சிறியப் பொருளில் இருந்து மிகப் பெரிய பொருள் வரை எல்லாவற்றையும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே ஆகவேண்டிய நிலை. இறக்குமதி செய்துதான் கப்பலை கட்டுகிறது. இதில் என்னவொரு ஆச்சரியம் என்றால் மூலப் பொருள்களை கையில் வைத்திருக்கிற நாடுகளைக் காட்டிலும் குறைவான விலையில் கப்பல்களை ஜப்பான் கட்டி தருவதுதான்.

எம்.எஸ்.சி. ஆஸ்கார்
75 ஆயிரம் டன் எடையுள்ள இரண்டு கப்பல்களை கட்டுவதைக் காட்டிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் டன் கொண்ட ஒரே கப்பலை கட்டுவதில் பாதி செலவை குறைக்க முடியும் என்கிறார்கள் ஜப்பானியர்கள். பிரமாண்டமான கப்பல்கள் உருவாக இதுவும் ஒரு காரணம்.

அவர்கள் கப்பலை குறைந்த வட்டியில் கடனுக்கும் கொடுக்கிறார்கள். மொத்த தொகையில் 20 சதவிதத்தை மட்டும் முன் பணமாக கட்டினால் போதும். மீதித் தொகையை 5.5 சதவித வட்டியில் 8 வருடங்களில் செலுத்தும் விதமாக கடன் கொடுக்கிறார்கள். 

மிகப் பெரிய கப்பலை கட்டினாலும் இவற்றை ஆழம் குறைந்த கடல்களில் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. உலகின் பல இடங்களில் கடலின் ஆழம் பெரிய கப்பல்களுக்கு சாதகமாக இல்லை.  சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் ஆகியவை இந்த கப்பல்களுக்கு ஏற்றதாக இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாத ஜப்பான் தொடர்ந்து பெரிய கப்பல்களை கட்டி கொண்டே இருக்கிறது.

எம்.எஸ்.சி. ஆஸ்கார்
தற்போது உலகின் மிகப் பெரிய கப்பல் 'எம்.எஸ்.சி. ஆஸ்கார்' தான். இதன் நீளம் 1,297 அடி. இதுவொரு கண்டெய்னர் சரக்கு கப்பல். ஒரே நேரத்தில் 36,000 கார்களை இதில் ஏற்றிச் செல்ல முடியும். 


ஓயாசிஸ் ஆஃப் தி சீஸ்
இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது பயணிகள் கப்பலான 'ஓயாசிஸ் ஆஃப் தி சீஸ்' என்பது. இதுவொரு சொகுசு கப்பல். 16 தளங்கள் கொண்டது. இதில் 6,300 பயணிகள் பயணிக்கலாம். இந்தக் கப்பலில் 2,100 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். பிரமாண்டத்தின் மறுவடிவம் இந்தக் கப்பல்.


ஓயாசிஸ் ஆஃப் தி சீஸ்ஞாயிறு, நவம்பர் 29, 2015

உலகிலேயே அதிக ஆஸ்தி கொண்ட கடவுள்லகில் இருக்கும் அனைத்து கடவுள்களையும் விட மிக அதிகமான சொத்தும் தங்க நகைகளையும் வைத்திருப்பவர் நம்ம திருப்பதி வெங்கடாஜலபதிதான். இவரின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது. தேசம் முழுவதும் பல இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் மதிப்பு இது. 


இதுபோக தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் திருப்பதி வந்து போகிறார்கள். அவர்கள் தரும் காணிக்கை மட்டும் தினமும் 2.35 கோடி சேருகிறது. இதில் சாதனை அளவும் உண்டு 2012 ஏப்ரல் 1-ம் தேதி ஒரு நாளில் மட்டும் 5.73 கோடி குவிந்தது.  மேலும் வாரத்துக்கு 12 கிலோ தங்கம் உண்டியலில் காணிக்கையாக விழுகிறது. உலக கோடீஸ்வரர்கள் உண்டியலுக்குள் வைரங்களை கொட்டிவிட்டு போகிறார்கள். 

இப்படி கொட்டிய வைரங்களும் தங்கமும் சேர்ந்து 1,000 டன்களுக்கு மேல் வந்துவிட்டது. அதை வங்கியில் டெபாசிட் செய்தால் அவர்கள் வேறு அதற்கு வட்டியாக ஆண்டுக்கு 225 கோடி ரூபாய் தருகிறார்கள். 

அமைச்சர் ஒருவர் வைரக்கற்கள் பதித்த தங்க கிரீடத்தை காணிக்கையாக கொடுத்தார். அதன் மதிப்பு ரூ.45 கோடி. பகிரங்கமாகவும் ரகசியமாகவும் வரும் காணிக்கை ஒவ்வொன்றும் மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. 


திருப்பதியில் முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தான் உண்டியலை மாற்றுவார்கள். இப்போது தினமும் 10 தடவைக்கு மேல் மாற்றுகிறார்கள். ஆனாலும் நிரம்பி வழியும் காணிக்கையை கட்டுபடுத்த முடியவில்லை. 

உலகம் முழுவதும் உள்ள பல கம்பெனிகளுக்கு வெங்கடாஜலபதி முதல் போடாத பார்ட்னர். முதல் போடாவிட்டாலும் லாபத்தின் பங்கு பைசா குறையாமல் வெங்கிக்கு வந்துவிடும். 

மேலும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியிலும் எக்கச்சக்க வருமானம் பார்த்து விடுகிறார். வருடத்துக்கு 40 கோடி ரூபாயை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நமக்கு மொட்டை என்றாலும் வெங்கிக்கு லாபம்தான். 


பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலின் நாயகனான ஏழுமலையான் அணிந்திருக்கும் கிரீடம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவரயரால் கொடுக்கப்பட்டது. முகலாய மன்னர் ஷாஜகான் 100 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட தங்கச்சங்கிலி ஒன்றை காணிக்கையாக கொடுத்திருக்கிறார். திருப்பதி கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் பேருக்கு அதிகம். 

உலக கோடீஸ்வரனை தரிசித்து வந்தால் நாமும் கோடீஸ்வரனாகலாம் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள். சனி, நவம்பர் 28, 2015

சோரியாசிஸ் விடை தெரியா நோய்..!


சோரியாசிஸ் என்ற வார்த்தையை அடிக்கடி விளம்பரத்தில் கேள்விபட்டிருக்கலாம். இந்த சோரியாசிஸ் வர என்னகாரணம் என்பதை  இன்று வரை ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒன்றும் பிடிபடவில்லை. சோரியாசிஸை தமிழில் 'காளான் சான்படை' என்று அழைக்கிறார்கள்.

சோரியாசிஸ்
சோரியாசிஸில் நிறைய வகைகள் உண்டு. இருந்தாலும் பொதுவாக சொல்வது இது வந்தால் தோல் சிவந்து தடித்துப் போவதுடன், தாக்கிய இடத்தில் வெள்ளித் தகடுகள் போல செதில் செதிலாக உதிர்ந்து வரும். இதை பெயர்த்து எடுத்தால் ஒரு சின்னத்துளியாக ரத்தம் எட்டிப் பார்க்கும். உடலில் எங்கு வேண்டுமானாலும் இது வரலாம். பிறப்புறுப்புகளில் வந்துவிட்டால் உடலுறவு கொள்வது சிரமம். மீறி ஈடுபட்டால் துணைக்கு மிகுந்த வேதனையை தரும். 

இதற்கு வைத்தியம் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருந்துவிட்டு தானாக மறைந்து குணமாகி விடும். குணமான பின் சோரியாசிஸ் வந்து போன சுவடு கூட தெரியாது.

நோய் வந்து போன சுவடே இல்லை
 ஆனாலும் குணமாகிவிட்டது என்று சந்தோஷப் பட்டுக்கொள்ள முடியாது. இது குணமாவதே மறுபடியும் வருவதற்குத்தான். வெயில் காலத்தில் இது ஒருவரை தாக்கினால் அடுத்த வெயில் காலத்துக்கு மீண்டும் வந்துவிடும். குளிர்காலம் என்றால் மீண்டும் அடுத்த குளிரில் தவறாமல் ஆஜராகிவிடும். இதை கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் எவ்வளவோ முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதுவரை பலன் கிடைக்கவில்லை.

 எப்படி வருகிறது என்பதற்கு விடை கிடைத்தால்தானே குணப்படுத்தும் வழியும் கிடைக்கும். வருவதற்கு காரணம் பூச்சிகளா? வைரஸ்ஸா? பாக்டீரியாவா? சாப்பிடும் உணவா? பரம்பரை நோயா? எதுவும் பிடிபடவில்லை, ஆராய்ச்சியாளர்களுக்கு.

சோரியாசிஸால் அரிப்பு, எரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை. இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உள் உறுப்புகளும் பாதிக்கப்படுவதில்லை. உலகத்தில் இந்த நோய் இல்லாத இடம் என்று எதுவும் கிடையாது. உலகம் முழுவதும் இருக்கிறது. இருந்தாலும் ஏனோ நீக்ரோக்கள், செவ்விந்தியர்கள், ஜப்பானியர்களை அதிகமாக தாக்குவதில்லை. உலக மக்களில் 2 சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு உள்ளது. உலகில் எந்த நாடும் இந்த நோய்க்கு தப்பவில்லை. ஸ்வீடனில் இது அதிக அளவில் இருக்கிறது

சோரியாடிக் ஆர்த்ரிடீஸ்
சோரியாசிஸில் 'சோரியாடிக் ஆர்த்ரிடீஸ்' என்று ஒருவகை உண்டு. இது வந்தால் உள்ளங்கை, உள்ளங்கால் விரல்கள் கோணிக்கொள்ளும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சோரியாசிஸ் சரியானாதும் விரல்களின் கோணலும் சரியாகிவிடும்.

இந்த நோய் தொற்று நோயல்ல. உடலுறவு மூலமும் பரவக் கூடியதும் அல்ல. ஆனால், மரபு ரீதியாக வாரிசுகளுக்கு தொடர வாய்ப்பிருக்கிறது. சில சமயம் இது மூன்றாவது நான்காவது தலைமுறையையும் விட்டுவைப்பதில்லை. சிவந்த நிறம் கொண்டவர்களுக்கு இந்த நோய் வந்திருந்தால், அவர்கள் கருத்த நிறம் கொண்டவர்களை மணந்து கொண்டால் வாரிசுகளுக்கு இந்த நோய் வராது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 

பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை
சோரியாசிஸ் உடலுக்கு எந்தவித வேதனையையும் கொடுப்பதில்லை. உடலின் வெளித்தோற்றம் பாதிக்கப்பட்டு மற்றவர்களின் அருவருக்கதக்க வகையான பார்வைகள் இவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. யோகா, தியானம் போன்றவற்றால் நோயை கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள். 

சோரியாசிஸ் நோய் ரோடு போட பயன்படுத்தப்படும் தாரை மூலப் பொருளாகக்கொண்டு தயாரிக்கப்படும் மருந்து மூலமே ஓரளவுக்கு குணமாகிறது. விடை தெரியா ஒரு சில நோய்களில் இதுவும் ஒன்று!வெள்ளி, நவம்பர் 27, 2015

அடக்கக் கூடாத சிறுநீர்


சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுவது இயல்பான ஒன்று. ஆனால், பலரும் சூழ்நிலை காரணமாக பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள், குறிப்பாக பெண்கள். பயணம் மேற்கொள்ளும் போது மோசமான கழிவறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள். இது ஆபத்தானது. 


பொதுவாக மனிதனுடைய சிறுநீர்ப்பையின் கொள்ளளவு 350 முதல் 500 மி.லி. வரைதான் இருக்கும். இந்த பை நிறையத் தொடங்கினால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.  எப்போதுமே இத்தகைய எண்ணம் வந்ததும் சிறுநீர் கழித்து விடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக சிறுநீரை அடக்கி வைக்ககூடாது. 

ஒரு நாளில் காலை தொடங்கி இரவு வரை 5 முதல் 7 முறை சிறுநீர் கழிக்க வேண்டும். மூன்று மணி நேரத்துக்கு மேல் சிறுநீரை தேங்க விடக்கூடாது. சிறுநீர் பையின் கொள்ளளவை மீறி சிறுநீர் தேங்குவதால் நிறைய விளைவுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. 

சிறுநீர்ப்பை அதிகமாக விரிவடைவதால் சிறுநீர்ப்பையில் உள்ள அழுத்தும் கொடுக்க வேண்டிய திசுக்கள் காலப்போக்கில் பாதிப்படைந்து பலவீனமும் அடைந்து விடும். இந்த திசுக்கள் தான் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்ததுமே அதை வெளியேற்ற தூண்டுகிறது. இத்தகைய திசுக்கள் பாதிப்படைவதால் சிறுநீர்ப்பை செயலிழந்து போகும். அதனால், சிறுநீர் முழுவதுமாக வெளியேற்ற படாமல் உள்ளே தேங்கிவிடும் நிலை ஏற்படும்.

இப்படி உள்ளே சிறுநீர் தேங்குவதால் அடிக்கடி சிறுநீர்ப்பாதையில்  அடைப்பு ஏற்படும். சிறுநீர்ப்பையில் கல் உருவாக வைப்பு உள்ளது. நாட்கள் செல்ல செல்ல சிறுநீரகங்கள் வீக்கமடைந்து செயல் இழந்து போகும் வாய்ப்பும் உண்டு. 

அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் சிலருக்கு வயிறு வீங்கிவிடும் சிறுநீர் கழித்து முடிந்ததும் அது சகஜ நிலைக்கு வந்து விடும். சிறுநீரை கட்டுப்படுத்தாமல் அவ்வப்போது வெளியேற்றுவதுதான் ஆரோக்கியமான உடல் நலத்துக்கு நல்லது. 

சிறுநீர் வரும் என்ற பயத்தினால் வெளியில் செல்லும் பெண்கள் பலர் குறைவாக நீர் அருந்துகிறார்கள். இது அடக்குவதைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீரகங்களில் கற்களை உருவாக்கிவிடும். அதனால் அதிகமாக தண்ணீர் அருந்துங்கள்! அடக்கி வைக்காமல் சிறுநீரை வெளியேற்றுங்கள்! அதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. 


செவ்வாய், நவம்பர் 24, 2015

48 வருடங்களாக 48 லட்சம் கி.மீ. தொடர்ந்து கார் ஓட்டுபவர்


துரையிலிருந்து சென்னை வரை காரை ஓட்டி திரும்பிவந்தாலே நமக்கெல்லாம் நாக்கு தள்ளிவிடுகிறது. இங்கே ஒரு மனுஷன் விடாம 48 வருஷமா தொடர்ந்து கார் ஓட்டுகிறார். 

தனது 'வால்வோ'வுடன் இர்வ் கோர்டன்
பயணம் செய்வது பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயம்தான். அதிலும் தனக்கு சொந்தமான காரில் தானே ஓட்டிச் செல்வது அற்புதமான அனுபவம். இப்படி தனது 'வால்வோ' காரில் உலகையே சுற்றி வந்திருக்கிறார் ஒருவர். அவர் பெயர் இர்வ் கோர்டன். நியூயார்க் நகரைச் சேர்ந்த '75 வயது இளைஞர்'. 

வால்வோ கார்களின் அறிவிக்கப்படாத விளம்பர தூதுவர் இவர். தனது 1966 மாடல் காரில் தான் எல்லா பயணத்தையும் நடத்தி வருகிறார். இதுவரை இவர் பயணம் செய்து கடந்த தூரம் கொஞ்சம்தான். அதாவது 48 லட்சம் கி.மீ.கள். 


கடந்த 48 வருடங்களாக விடாமல் இந்த காரை ஓட்டும் கோர்டன், வாரம் ஒரு முறை 10 நிமிடங்கள் மட்டும் நேரம் ஒதுக்கி காரை கூர்ந்து பார்த்து அதிலுள்ள பிரச்சனைகளை தெரிந்து கொள்கிறார். "இன்னும் பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் ஓடுவதற்கும் என் வால்வோ ரெடி. ஆனால், எனக்கு தான் வயதாகிவிட்டது." என்று கூலாக சொல்கிறார். 

தனது 45 லட்சம் கிலோ மீட்டர் சாதனைக்காக கோர்டன் தேர்ந்தெடுத்தது, அலாஸ்கா. அவர் உலகில் போகாத இடமாக அலாஸ்கா மட்டுமே இருந்தது. அதனால், அவர் தனது முதல் பயணத்தை அங்கிருந்தே தொடங்கினார். 


இதுவரை 18 நாடுகளில் தனது காரை ஒட்டியுள்ள கோர்டன், தனக்கு மிகவும் பிடித்த நாடாக ஸ்வீடனை சொல்கிறார். 20 லட்சம் மைல்களை கடந்த போதே கொர்டனின் பெயர் கின்னஸ்சில் பதிவாகிவிட்டது. அப்போதே வால்வோ நிறுவனமும் தன் பங்குக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் காரை கோர்டனுக்கு பரிசளித்து பெருமைபடுத்தியது. 

இப்போது வரை கோர்டன் தனது காரில் கடந்துள்ள தூரம் உலகத்தை 120 முறை சுற்றி வருவதற்கு சமமான தூரம். இதைப் பற்றி கோர்டனிடம்  கேட்டால், "எவ்வளவு தூரம் கடந்திருக்கிறேன் என்பது முக்கியமல்ல. 
ஒவ்வொரு பயணமும் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன என்பதுதான் முக்கியம். என் வால்வோ எனக்கு வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுத்திருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரமும் கற்க வேண்டிய பாடமும் நிறைய இருக்கிறது" என்கிறார். 


பயணம் எப்போதும் அப்படிதான், நமக்கு புது புதுப் பாடங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
ஞாயிறு, நவம்பர் 22, 2015

'நள்ளிரவு ஆனாலும் குளித்து தூங்கு..!'


மது நாட்டில் குளிப்பது என்பது பெரும்பாலும் காலை நேரத்தில் நிகழும் ஒரு நிகழ்வு. கடினமான உழைப்பு கொண்ட சிலர் மட்டும் கசகசப்பான வியர்வையில் இருந்து விடுபட இரவிலும் குளிப்பதுண்டு. ஆனால் சீனாவில் நிலைமையே வேறு.


அங்கு ராத்திரி 10 மணிக்கு மேல் எதிர்படும் எல்லோரிடமும் கேட்கும் கேள்வி ஒன்றுதான். "குளிச்சாச்சா..?" என்பது தான் அது. அக்கறையான இந்த விசாரிப்பு புதிதாக அங்கு சென்றவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை தரும். இரவுக்கு குளியல் என்பது சீனாவில் பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக கலந்து விட்ட ஒரு கலாச்சாரம்.

ஒருவேளை யாராவது குளிக்கவில்லை என்று பதில் தந்தால் அவ்வளவுதான். அவர்களை ஒரு அற்ப பதர் போல் படுகேவலமாக பார்ப்பார்கள். இரவில் குளிக்கா விட்டால் சீனர்கள் பார்வையில் அவர்கள் ஒரு அசுத்த ஜீவி. சீனர்கள் இரவில் குளித்து விட்டு சுத்த பத்தமாக தூங்கப்போவார்கள். குளிக்காமல் ஒரு நாளும் அவர்கள் தூங்கியதில்லை. குளித்து முடித்து இரவு உடையான நைட்டியை அணிந்து விட்டால் எந்த வேலையாக இருந்தாலும் சரி பெண்கள் வீட்டை  விட்டு வெளியே வர மாட்டார்கள். நம்மூர் பெண்கள் போல் நைட்டியோடு ஊரை வலம் வரும் பழக்கமெல்லாம் அங்கில்லை. 


ஆண்களும் கூட அப்படிதான், இரவு உடைக்கு மாறிய பின் வெளியே எங்கும் சுற்றப்போக மாட்டார்கள். தூய்மையோடு தூங்க வேண்டும் என்பது சீனர்களின் ரத்தத்தோடு கலந்து விட்டப்பழக்கம். 

சரி, இரவில் தான் குளிக்கிறார்கள் என்றால் காலையில் என்ன பண்ணுவார்கள்? சும்மா சும்மா குளித்துக்கொண்டே இருக்கமுடியுமா..? அதனால் காலையில் பல் தேய்த்து, முகம் கழுவிவிட்டு ஆபீசுக்கு அடித்துப்பிடித்து ஓடுவார்கள். காலையில் குளிப்பதெல்லாம் அவர்கள் சரித்திரத்தில் இல்லாத ஒன்று. 


காலையில் அரக்கப்பரக்க குளிக்க வேண்டும். நிம்மதியாக  தேய்த்துக் குளிக்க முடியாது. ராத்திரி என்றால் நம் இஷ்டத்துக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிக்கலாம். அதோடு பகல் முழுவதும் பார்க்கும் வேலை, டென்ஷன், அழுக்கு, வியர்வை, களைப்பு எல்லாம் ஓடிப்போய்  விடும் என்று நீண்ட லெக்சர் கொடுக்கிறார்கள் சீனர்கள்.

இவர்களின் இரவுக் குளியலை பார்த்து மற்ற நாட்டினர் ஆச்சரியப்பட்டு கேட்பது, "நீங்கள் ஏன் இரவில் குளிக்கிறீர்கள்?" என்று அதற்கு அவர்கள் தரும் பதில், "நீங்கள் ஏன் காலையில் குளிக்கிறீர்கள்?" என்பதுதான்.

சீனர்களின் ஆத்திச்சூடியில் 'கூழானாலும் குளித்துக்குடி' என்பது 'நள்ளிரவு ஆனாலும் குளித்து தூங்கு' என்றிருக்கிறது போலும்.!கடலை சுத்தப்படுத்தும் 'பைட்டோபிளாங்க்டான்'


நிலத்தில் எப்படி மரங்கள் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறதோ அதே போல் கடலுக்குள் இருக்கும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்கிக் கொண்டு ஆக்சிஜனை வெளியிட்டு கடலை மாசுபடாமல் இருக்க வைக்கிறது. 'பைட்டோபிளாங்க்டான்' என்ற நுண் பாசிகள் கொண்ட மிதக்கும் தாவரம்.

'பைட்டோபிளாங்க்டான்'
கடலில் மிக அதிக அளவில் காணப்படும் மிதக்கும் தாவரம் இதுதான். இந்த பைட்டோ பிளாங்க்டானுக்கும் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளுக்கும் ஏகப்பட்ட நேரடித் தொடர்புகள் இருப்பதாக வானிலை ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இந்த பைட்டோபிளாங்க்டானை கணக்கெடுப்பது என்பது சாதாரண காரியமில்லை. அப்படி கணக்கெடுப்பது கடற்கரை மணலை எண்ணுவது போன்றது. அதனாலேயே இந்த பைட்டோபிளாங்க்டானை கணக்கெடுக்க யாரும் முன் வரவில்லை. ஆனால் நாசாவோ, வானத்தில் கோடிக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களையே ஆராய்ந்து சொல்லி விடுகிறோம். கடலில் கண்ணுக்கு எதிரில் இருக்கும் இந்த தாவரத்தை கணக்கிடுவதா முடியாத காரியம் என்று பைட்டோபிளாங்க்டானை கணக்கில் எடுக்க களத்தில் இல்லையில்லை கடலில் குதித்து விட்டது. நாசாவிற்கு உதவியாக நேஷனல் சயின்ஸ் பவுன்டேஷனும் கணக்கெடுப்பதற்காக கடலுக்குள் குதித்துள்ளது.

இதுவரை வானில் ஏவப்பட்ட செயற்கை கோள்கள் எதிலும் பைட்டோபிளாங்க்டானை அளவிடும் தொழில்நுட்பம் இல்லை நொடிக்கு நொடி பிரம்மாண்டமாக பெருகி வளரும் பைட்டோபிளாங்க்டானை கனக்கெடுப்பது கஷ்டம்தான். ஆனால் பெருகிய அதே வேகத்தில் பிற உயிரினங்களால் இந்த நுண் பாசி உணவாக உண்ணப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றன.

பிரமாண்ட வளர்ச்சி
அப்படியிருந்தும் குத்து மதிப்பாக கடலுக்குள் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 கோடி டன் கணக்கில் இந்த பைட்டோபிளாங்க்டான் இருக்கும் என்று கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். கடலில் அபரிமிதமாக அதிகரிக்கும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் தன்மையை இந்த பைட்டோபிளாங்க்டான் பெற்றிருப்பதால் சுற்றுச்சூழல் காரணியில் முக்கியமானதாக திகழ்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. 'குளோபல் பயோஜியோ கெமிக்கல் சைக்கிள்' என்று சொல்லப்படுகிற பிரபஞ்சத்தின் உயிரியல், புவியியல், வேதியியல் சுழற்சிகள் என்கிற கருத்து தற்போது ஐரோப்பிய விஞ்ஞானிகளிடம் அதிகமாக ஆராயப்பட்டு வருகிறது. எப்படியோ பைட்டோபிளாங்க்டானை அதிகமாக வளர்த்தால் நன்மை, நமது சுற்றுச்சூழலுக்குத்தான். இதை தாமதமாக புரிந்து கொண்டாலும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய நாசாவையும் நேஷனல் சயின்ஸ் பவுன்டேஷனையும் பாராட்டியே ஆக வேண்டும். வெள்ளி, நவம்பர் 20, 2015

கரந்தையாரின் பார்வையில் 'நம்பமுடியாத உண்மைகள்'புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில்தான் நண்பர் கரந்தை ஜெயக்குமாரை முதன் முதலாக சந்தித்தேன். அதற்கு முன்பு அவரை தொலைபேசியில் இரண்டொரு முறை அழைத்து பேசியிருக்கிறேன். 

வலையுலகில் யாருடனும் சட்டென்று நெருக்கம் கொள்ளும் வசீகர எழுத்து அவருடையது. அந்த நடையில் இருந்து சற்றும் வழுவாமல் அற்புதமான ஒரு விமர்சனப் பார்வையை எனது 'நம்பமுடியாத உண்மைகள்' புத்தகத்திற்கு வழங்கியிருக்கிறார். 


இன்று காலை வலைப்பதிவுக்கு வந்தவுடனே அந்த பதிவு கண்ணில் பட்டது. வேறுஎங்கும் போகாமல் ஒரே மூச்சாக படித்து முடித்தேன். என்னவொரு நடை..! ஆச்சரியத்தோடு மீண்டும் ஒருமுறை படித்தேன். 

அருமையான அறிமுகத்திற்கும் அற்புதமான விமர்சனத்திற்கும் நன்றி நண்பரே!

கரந்தையாரின் 
விமர்சனத்தை படிக்க 
இங்கே சொடுக்குங்கள். 
புதன், நவம்பர் 18, 2015

மதுரையைப் பற்றி யாரும் சொல்லாத கதை


(இந்தக் கட்டுரை 2011-ல் எழுத்தாளர் சு.வெங்கடேசன் 'காவல் கோட்டம்' படைப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றபோது அவரை பேட்டிக் கண்டு எழுதியது. இனி கட்டுரை..)


அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் போல்தான் இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் சாகித்ய அகாடமி விருது என்ற கருத்து படைப்பாளிகள் மத்தியில் எப்போதும் இருக்கிறது. அது ஓரளவு உண்மையும்கூட.. இளம் வயதில் இந்த விருது பெற பாக்கியம் செய்திருக்க வேண்டும். அந்த பாக்கியம் ஜெயகாந்தனுக்கு இருந்தது. அதற்கடுத்து சு.வெங்கடேசனுக்கு வாய்த்திருக்கிறது. 1973-ல் ஜெயகாந்தன் சாகித்ய அகாடமி விருது பெறும்போது அவருக்கு வயது 38. 2011-ல் வெங்கடேசனுக்கு வயது 41.

சு.வெங்கடேசன்
எப்போதும் ஒரு சரித்திர நாவல் என்பது குறிப்பிட்ட எல்லைக்குள்ளே நின்றுவிடும். பெரும்பாலான படைப்புகள் ஒரு தனி மனிதனின் வீரத்தையோ, அல்லது அரச குடும்பத்தை மையமாக வைத்தோ படைக்கப்பட்டதாக இருக்கும். ஆனால், உயிர்ப்போடு இருக்கும் ஒரு நகரை நாவலாக படைத்திருப்பது ஆச்சரியப்படுத்தும் புதுமை. வரவேற்பும் எதிர்மறை விமர்சனங்களும் பெரும் சூறாவளியாய் சுழன்றுக் கொண்டிருக்க.. குளிர் வாட்டியெடுக்கும் மழைக்கால மாலைப் பொழுதில் சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசனை சந்தித்தேன். இந்த சரித்திர படைப்புக்காக தான் பட்டபாடுகளை பகிர்ந்து கொண்டார். இனி அவரது வார்த்தைகளில்..

"இந்த நாவலை நான் எழுத தொடங்கியபோது என் மகள் கைக்குழந்தை. எழுதி முடித்து வெளியே வந்தபோது அவள் என் தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கிறாள். பத்து வருடங்கள் போனது தெரியவில்லை. ஒரு நாவலுக்காக 10 வருடங்கள் உழைத்திருப்பது அதிகமாக தெரிந்தாலும், அந்த உழைப்பு மனநிறைவை தந்திருக்கிறது. அதற்கு பரிசாக சாகித்ய அகாடமி விருது கிடைந்த்தது என் வாழ்நாள் சாதனை. 

மதுரை 2,500 வருடங்கள் பழமையான நகரம். உலகில் வேறு எங்கும் இவ்வளவு பழமையான நகரம் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு நகரங்கள்கூட அழிக்கப்பட்டு, மீண்டும் சிறிது தொலைவு தள்ளி வேறு இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும், அல்லது புதிதாக உருவாகியிருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரே இடத்தில் அழிவின்றி இருக்கும் நகரம் இந்த உலகில் மதுரை மட்டுமே! 

நகரம் மட்டுமல்ல, அதன் இடங்கள்கூட மாறவில்லை. தத்தனேரியில் எரியும் நெருப்பு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு யாரோ ஒரு தமிழன் சிதையை பற்றவைத்த நெருப்பு. உலகில் வேறெங்கும் இத்தனை பழமையான சுடுகாட்டை அதே இடத்தில் இருப்பதை பார்க்கமுடியாது. 

வரலாற்றின் மூத்த குடிகளின் மண் இது. தமிழ் நாகரிகம் தழைத்தது இங்குதான். தமிழ் பண்பாட்டை மதுரை வரலாறு வழியாகப் பார்த்தால்தான் அதன் மேன்மை தெரியும். அதனால்தான் மதுரையை மையப்படுத்தி எழுதவேண்டும் என்று நினைத்தேன். 

அதற்காக 1997-ல் முதல் ஆய்வுக்கட்ட பணிகளை மேற்கொண்டேன். அதை நாவலாக எழுதுவதா? ஆய்வுக்கட்டுரைபோல் எழுதுவதா? இல்லை வரலாற்று தொகுப்பாக கொண்டுவருவதா? என்ற குழப்பம் இருந்தது. மூன்று வருடமாக எந்த முடிவுக்கும் வராமல் வெறும் ஆய்வுத் தரவுகளை மட்டும் தேடித் தேடி சேகரித்தேன். அப்போதுதான் நாவலுக்கான கருத்து அதில் இருப்பது தெரிந்தது. நாவலாக எழுதுவது என்ற முடிவை எடுத்தேன். 

மதுரை, சென்னை, லண்டன் ஆவணக் காப்பகங்களில் இருந்தும், பக்தி இலக்கியம், ஓலைச்சுவடிகள், தாமிர பட்டயங்கள், இஸ்லாமியர்களின் குறிப்புகள், கிறிஸ்துவ பாதிரியார்களின் டயரி குறிப்புகள் என்று அனைத்தில் இருந்தும் தகவல்களை சேகரித்தேன். வரலாறு என்பதே எழுதப்படாத தகவல்களில்தான் அதிகம் இருக்கிறது. அதனால் அதையும் தேடி அலைந்தேன். 

கிராமங்களில் சொல்லப்படும் கதைகள், வெறும் கதைகள் மட்டுமல்ல, அது வரலாற்றின் தொடர்ச்சி தொடர்ந்து வாய்வழியாக வந்த சரித்திரம். இதற்காக மதுரை மாவட்டத்தில் இருந்த எல்லா பழைய கிராமங்களிலும் தங்கியிருந்து கதை கேட்டேன். அவற்றை இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறேன். 'காவல் கோட்டம்' எழுதப்படாத வரலாறு நிறைந்த ஒன்று. யாரும் சொல்லாத கதைகள்.

நான் சந்திக்க நினைத்த, சந்தித்த பல மனிதர்கள் வயோதிகத்தின் காரணமாக சில வாரங்களுக்கு முன்பும், பின்பும் இறந்தபடியே இருந்தனர். இரண்டாவது முறை அவரிடம் பேட்டியெடுக்க போகும்போது வெள்ளை அடிக்கப்பட்ட வீட்டுச் சுவரோ, பிரிக்கப்படாமல் இருக்கும் வாசல் கொட்டகையோ தூரத்தில் இருந்தே அந்த துக்க செய்தியை சொல்லும்.

போகும் இடமெல்லாம் மரணம் சகப் பயணியாக கூடவே வந்து கொண்டிருந்தது. 'ஒரு வாரம் முன்னால் வந்திருக்கக் கூடாதா..? இதெல்லாம் தெரிந்த மனுஷன் இப்பதானே செத்தாரு..!' என்ற குரல் கேட்காத கிராமமே இல்லை. ஏதாவது ஒரு தகவல் கிடைக்காதா என்று பொழுதெல்லாம் அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பிய நாட்கள் நிறைய.

அதுகூட பரவாயில்லை. இப்போது கிராமத்தில் கதையை தேடினால் கிடைக்காது. கிராமத்து சாவடிகளை டி.வி. தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 10 வருடங்களுக்கு மேலாகிறது.

தாயக்கட்டங்களைப் போல் சாவடி பட்டியக்கல்லின் மேல் விரிந்துக் கிடந்த கதைகள், இப்போது தூண்களின் இடுக்குகளில் ஒளிய தொடங்கியிருக்கிறது. இப்படி எழுதப்படாத பல கதைகளை இந்த நாவலில் சொல்லியிருக்கிறேன்.

மதுரை; இந்த நகரம் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. துயரை தாங்கியிருக்கிறது. மிகப் பெரிய மனிதர்களை இடம் தெரியாமல் பந்தாடியிருக்கிறது. ஆனாலும் உயிர்ப்போடு இருக்கிறது.


இதுவரை ஒரு நகரை மையப்படுத்தி எந்த நாவலும் இல்லை. இதன் கதை மதுரை நகரைச் சுற்றி காட்டப்படும் கோட்டையில் இருந்து தொடங்குகிறது. கி.பி.1310-ல் அந்தக் கோட்டை கட்டப்படுகிறது. அப்போது மீனாட்சியம்மன் கோயில் ஒற்றைக் கோபுரத்துடன் உயர்ந்து நிற்கிறது. அப்போது நாவல் தொடங்குகிறது.

நாவல் வளர வளர மீனாட்சியம்மன் கோயிலும் வளர்கிறது. மதுரையின் காவல் கோட்டமாக இருக்கும் இந்தக் கோட்டை தனக்குள் நடக்கும் நிகழ்வுகளையும், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. 1920-ல் மீனாட்சியம்மன் கோயில் நான்கு ராஜகோபுரங்களுடன் உயர்ந்து நிற்கிறது. கோட்டை இடிக்கப்படுகிறது.


கோட்டையின் அழிவை மட்டும் 40 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். மிகத்துயரமான நிகழ்வு அது. பொதுவாக கோட்டைகள் எல்லாமே வெளியில் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும்தான் தாக்குதல்களை சந்தித்திருக்கும், ஆனால் மதுரைக் கோட்டை மட்டும் உள்ளுக்குள் இருந்து தன் சொந்த மக்களால் இடிக்கப்படுகிறது.

முதலில் ஒருவர் இருவராக வரத் தொடங்கியவர்கள், கடைசியில் அன்று மதுரை நகரில் வாழ்ந்த 42 ஆயிரம் மக்களும் சேர்ந்து எதிரிகளிடம் இருந்து தங்களை இவ்வளவு காலம் காத்து நின்ற கோட்டையை இடித்து தரைமட்டமாக்குகிரார்கள். அந்த சோகத்தோடு நாவல் நிறைவு பெறுகிறது.

கோட்டையின் எச்சம்
முல்லைப் பெரியாறு அணையைப் பற்றி விரிவாக பேசும் ஆய்வு நாவல் இதுதான். தென்னிந்தியாவை கொடூரமாகத் தாக்கிய தாது வருடப் பஞ்சம் மதுரையை மிக உக்கிரமாக தாக்கியது. அந்த பஞ்சத்தில்தான் மொத்த மக்கள்தொகையில் பாதி காணாமல் போனது. இதன்பின்தான் ஆங்கிலேய அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுகிறது.

இந்த நாவலில் 250 சிறுகதைகள் உள்ளன. அதில் 10 பக்கம் கொண்ட ஒரு சிறுகதைதான் 'அரவான்' திரைப்படம்.

அரவான்
சாகித்ய அகாடமி விருது படைப்பிலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. அது சரியான நேரத்தில் சரியான படைப்புக்கு கிடைத்திருக்கிறது. இந்த விருது மேலும் என்னை எழுத தூண்டுகிறது." என்று தனது நீண்ட உரையை முடித்தார் வெங்கடேசன்.

காவல் கோட்டத்தை நாவல் என்று சொல்வதைவிட வரலாற்று ஆவணம் என்று சொல்லலாம். ஒன்றிரண்டு சம்பவங்களைத்தவிர அத்தனையும் உண்மையான பெயரில் நடந்த செய்திகளை மட்டுமே சொல்கிறது. மதுரையை பற்றிய 600 ஆண்டுக்கால வரலாற்றை முழுமையாக சொல்லும் ஆவணம் இது.

செவ்வாய், நவம்பர் 17, 2015

அவுரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை என்று மாற்றியதும் நான் ஏன் ஆனந்தக் கூத்தாடினேன் ?

(எனது நண்பர் நசீர் அஹமத் கூட்டாஞ்சோறு வலைதளத்தில் பகிரும்படி இந்த பதிவை எனக்கு அனுப்பிவைத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த தாரிக் ஃபதா என்பவர் இதை எழுதியிருக்கிறார். நமது மக்களில் பெரும்பான்மையினர் கொண்டிருக்கும் ஒரு கருத்தை மாற்றுவதாக இந்த பதிவு இருப்பதால் இங்கு பகிர்கிறேன்.)  

தாரிக் ஃபதா

2015, மார்ச் மாதம் டெல்லியின் ஒரு பேச்சின்போது, இந்திய முஸ்லீம்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன் – இந்திய முஸ்லீம்கள் இஸ்லாமிய காலிபேட்டை நிராகரித்து, இஸ்லாமியராக வாழ வேண்டும்
அந்தப் பயணத்தை ஆரம்பிக்கவேண்டுமென்றால், அவர்கள் இந்திய அரசாங்கத்திடமும் டெல்லி அரசாங்கத்திடமும், கொலைகார மொகலாய பேரரசரான அவுரங்கசீப்பின் பெயரால் டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையை, அந்த அவுரங்கசீப்பால் தலை கொய்யப்பட்ட கவிஞரும், ஆன்மீகவாதியுமான அவரது சகோதரர் தாரோ ஷிகோ பெயருக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுகொண்டேன்.

பாகிஸ்தானில் பிறந்த இந்திய முஸ்லீமான நான், இந்தியாவுக்கு 2013ஆம் ஆண்டு வந்தபோது, டெல்லியின் மகத்தான சாலைகளில் ஒன்றான சாலைக்கு அவுரங்கசீப் பெயர் வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தனது அண்ணனைக் கொன்று ஆட்சியை கைப்பற்றிய இவர், தனது தந்தையை சாகும்வரைக்கும் சிறையில் அடைத்தார். ஏராளமான இஸ்லாமியத் தலைவர்களை தூக்கிலிட்டு கொன்றார். அவர் கொன்ற இஸ்லாமிய தலைவர்களில் குஜராத்திய முஸ்லீம்களில் ஒரு பகுதியினரான தாவூதி போஹ்ராக்களின் ஆன்மீக தலைவரும் அடக்கம். பேரரசராக இருந்தபோது, இசை, நடனம், மது ஆகியவற்றை முகலாய பேரரசுக்குள் தடை செய்தார். சிந்து மாகாணம் பஞ்சாப் மாகாணங்களில் இந்து பிராம்மணர்களின் உரைகளைக் கேட்க ஏராளமான முஸ்லீம்கள் கூடுவார்கள். அப்படி முஸ்லீம்களும், இந்துக்களும் ஒரு சேர கூடும் இடங்களான பள்ளிக்கூடங்கள், கோவில்கள் ஆகியவற்றை இடித்துத் தள்ளினார். முஸ்லீமல்லாதவர்கள் முஸ்லீம்களது உடைகளை அணிவதற்குத் தடைவிதித்து அவ்வாறு உடை உடுத்தினால் தண்டனையும் அளித்தார்.

அவுரங்கசீப்பின் குரூரத்துக்கும், பிறமத வெறுப்புக்கும் உதாரணம் வேண்டுமே என்றால், முஸ்லீம் சூஃபியான சர்மத் கஷானி அவர்களையும், சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான தேக் பகதூரையும் கொன்றது போதும். தனது பேரரசில் இருந்த இந்துக்களை காபிர்கள் என்று கருதினார். அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தினார். ஷியா இஸ்லாமை பின்பற்றிய அரசர்கள் மீது ஜிஹாத் தொடுத்தார். அவரது அப்பாவின் தாத்தாவான பேரரசர் அக்பர் உருவாக்கிய தாராளவாத பன்மைவாத சகிப்புத்தன்மை கொண்ட இஸ்லாமின் சுவடே இல்லாமல் போகும் அளவுக்கு துடைத்தெறிந்தார்.

அவுரங்கசீப்புக்கு இணையாக இன்று ஒன்றை சுட்டமுடியுமென்றால் அது ஒஸாமா பின்லாடனோ அல்லது தாலிபானின் முல்லா உமரோ அல்ல. காலிப் எல் பாக்தாதி என்ற இஸ்லாமிய காலிபேட்டின் தலைவரைத்தான் அவுரங்கசீப்புகு இணையாக சொல்லமுடியும்.

இருப்பினும், பெரும்பான்மையான இந்திய முஸ்லீம்களுக்கு அவுரங்கசீப்பின் குற்றங்கள் தெரியாமல் இருக்கலாம், அல்லது இஸ்லாமின் பெயரால் இந்துக்களையும் சீக்கியர்களையும் அவர்களை சமூகத்தின் கீழ்த்தரமான அடுக்கில் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இஸ்லாமின் பெயரால் இந்தியாவை ஆண்ட ஒரே இஸ்லாமிய அரசர் என்ற சந்தோஷ உணர்வு காரணமாக இருக்கலாம்.

ஆகவே, இந்திய முஸ்லீம்கள் உண்மையிலேயே இஸ்லாமிய காலிபேட் (ஐ.எஸ்.ஐ.எஸ்) அமைப்பை எதிர்க்கவேண்டுமென்றால், இந்த கொலைகாரரின் பெயரை நீக்கி அங்கே இந்து முஸ்லீம் சகோதரத்துவத்துக்கு பிரதிநிதியாக இருந்த அவரது சகோதரரின் பெயருக்கு மாற்றவேண்டும் என்று என்னுடைய பேச்சைக் கேட்கவந்தவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.

அதன் பின்னர் இந்தியாவின் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஜனாதிபதி, நாட்டின் தெற்கு மூலையிலிருந்து வந்த முஸ்லீம், இஸ்லாமில் சிறப்பு மிக்க வாழ்ந்தவர், இஸ்லாமிய காலிபேட்டில் வாழாதவர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் மறைவைப் பற்றிய செய்தி வந்தது.

ஜூன் 29ஆம் தேதியன்று, ட்விட்டரில், அவுரங்கசீப் சாலையை ஏபிஜே அப்துல் கலாம் சாலையாக மாற்ற இந்தியர்கள் தங்கள் அரசாங்கத்தை கேட்டுகொள்ள வேண்டுமென்று எழுதினேன்.

அந்த கருத்து சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது. பின்னர் டெல்லியின் மக்கள்சபை பிரதிநிதி மஹேஷ் கிரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு மாற்றவேண்டுமென்று கேட்டுகொண்டார்.

நேற்று, இந்தியாவிலிருந்து என் நண்பர்கள் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, டெல்லி அரசாங்கம் அவுரங்கசீப் சாலையை ஏபிஜே அப்துல்கலாம் சாலையாக மாற்றப்போகிறது என்ற செய்தியை சொன்னார்கள். டொரோண்டோவில் அப்போது காலை 3 மணி. ஆகவே ஒரு நிமிடம் நான் கனவு காண்கிறேனோ என்று யோசித்தேன். நான் எழுந்து என் மனைவியை எழுப்பி இந்த செய்தியை பகிர்ந்துகொண்டேன்.
அவள் தோளை குலுக்கி “கிழவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்றாள்.

என்னால் முடிந்த அளவுக்கு பாங்க்ரா நடனத்தையும் லுங்கி டான்ஸையும் சேர்த்து ஆடினேன். நாங்கள் கொண்டுவந்த மாற்றத்தை என்னாலேயே நம்ப முடியவில்லை. (யாரேனும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இப்படி பெயர் மாற்றம் நடக்கும்போது என்னை டெல்லிக்கு அழைத்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன்)

மனிதரது பெயரோ, இடத்தின் பெயரோ மாறுவது என்பது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது. சிலவேளைகளில் புதிய எஜமானருக்கு அடிமைத்தனத்தை முரசறைவிக்கும். மற்றும் சில நேரங்களில் முன்னாள் சர்வாதிகாரியின் அடிமைத்தனத்தை தூக்கி எறியும் அடையாளம் இவ்வகையான பெயர் மாற்றம்.

ஆகவே மால்கம் எக்ஸ் தனது கடைசி பெயரை விட்டுவிட்டு அதன் இடத்தில் எக்ஸ் என்று எடுத்துகொள்வது முன்னால் அடிமை எஜமானர் கொடுத்த பெயரை துறப்பதற்கு அடையாளம். அதே மாதிரி, ஸ்டாலின் உருவாக்கிய அதிபயங்கரங்களை நிராகரிக்க, ஸ்டாலின்கிராட் நகரை ருஷியர்கள் மீண்டும் வோல்காகிராட் என்று மாற்றினார்கள்.

நான் பிறந்த நாடான பாகிஸ்தானில் பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த பல பெயர்கள் மாற்றப்பட்டன. ஆகவே கராச்சியின் “விக்டோரியா சாலை” எல்பின்ஸ்டோன் சாலை” ஆகிய பெயர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட நாட்டின் அடையாளத்தை மேற்கொள்ள மாற்றப்பட்டன. ஆனால், மாறிய எல்லா பெயர்களும் பழைய தவறுகளை மாற்றமட்டுமே உருவாக்கப்பட்டவை அல்ல.

கராச்சியின் 1949இல் நான் “லாலா லஜ்பத் ராய் சாலை” என்ற அமைதியான தெருவில் பிறந்தேன். இது அன்றைய இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கியமான தலைவரும், பஞ்சாபி எழுத்தாளரும் அரசியல்வாதியுமான லாலா லஜ்பத் ராயின் பெயரை கொண்டிருந்தது.

லாகூரில் போலீஸால் தலையில் அடிக்கப்பட்டு 1928இல் இறந்த லாலாஜி அவர்களை பற்றிய எந்த ஒரு விளக்கமும் இந்தியாவுக்கு தேவையில்லை. ஆனால் எந்த இடத்தில் தன்னுயிரை இழந்தாரோ அந்த ஊரில், அவரது சமூக சேவை பற்றியோ அல்லது அவரது தியாகத்தை பற்றியோ தெரியுமா என்பதை விடுங்கள். அவர் யாரென்றே தெரியாது. இஸ்லாமிய பாகிஸ்தான் குடியரசு தன்னை “தூயவர்களின் தேசம்” என்று சொல்லிக் கொள்கிறது. அவர் ஹிந்து என்ற ஒரே காரணத்திற்காக அவர் பெயரை நீக்கியுள்ளது.

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ”குருமந்திர்” என்ற இடம் ஏன் பிறகு பெயர் மாற்றப்பட்டு “சபீல் வாலி மசூதி” என்று ஆனது என்று என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிஸ்டுகள் இந்த பெயர் மாற்றத்தை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். லாலா லஜ்பத் ராயின் பெயர் பாகிஸ்தானில் மாறியது தவறு என்றால், அதே மாதிரியான தவறு தானே அவுரங்க சீப்பின் பெயரை மாற்றுவதும் என்று விமர்சிக்கலாம். அது தவறு.

இந்தியாவின் சுதந்திரத்துக்கான போராட்டத்தின் அடையாளம் லாலா லஜ்பத் ராய். பன்மைத்தன்மையையும், மதசார்பின்மையையும் போற்றிபாதுகாக்கும் இந்தியாவுக்கு நடந்த அடக்குமுறை, அதன் மீது திணிக்கப்பட்ட அரபிய கலாச்சாரத்தின் அடையாளம் அவுரங்கசீப்.

ஜெய் ஹிந்த்!திங்கள், நவம்பர் 16, 2015

உலகின் மிகப்பெரிய தேவாலயம்

லகின் மிகப்பெரிய தேவாலயம் ரோமிலுள்ள வாடிகன் நாட்டில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயமே. இதன் விதானம் 138 மீட்டர் உயரம் கொண்டது. விதானம் என்பது தலைகீழாக கவிழ்க்கப்பட்ட ஒரு கிண்ணம் போன்ற தோற்றமுடைய கூரை. 

என்ஜினீயர்கள், மின்சார வேலைப்பார்பவர்கள், விதானத்தில் மேலே ஏறுபவர்கள் என்று இந்த விதானத்திற்கு மட்டும் நிரந்தரமாக 70 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் விதானத்தின் மேல் ஏறி தேவைப்படும்போது ஜன்னல்களை திறக்க வேண்டும், மூட வேண்டும், பழுது பார்க்க வேண்டும், விளக்குகளை பொருத்த வேண்டும். திருவிழா நாட்களில் 5 ஆயிரம் விளக்குகளும், 1,000 தீபங்களும் கொண்டு இந்த விதானம் அலங்கரிக்கப்படுகிறது. ஆலயத்தின் முன்புறம் ஒரு லட்சம் பேர் கூடுவதற்கேற்ப மிகப்பெரிய முற்றம் ஒன்று இருக்கிறது. மக்களை ஆசீர்வதிப்பதற்காக போப் ஆண்டவர் பால்கனியில் காட்சி அளிக்கும் போது முற்றம் நிரம்பி வழியும். இந்த பால்கனியில் இருந்து பார்த்தால் நாட்டின் அனைத்துப் பகுதியும் தெளிவாக பார்க்க முடியும்.

இந்த ஆலயம் செயின்ட் பீட்டர் இறந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கட்டி முடிக்க 150 ஆண்டுகளுக்கு மேலானது. 1453-ம் ஆண்டு தொடங்கி 1609-ல் முடிவடைந்தது.

நான்காம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் மரத்தால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் கழித்து அழியத் தொடங்கியது. அந்த சமயத்தில் மறுபடியும் பிரம்மாண்டமான ஒரு தேவாலயமாக கட்டத் தொடங்கினார்கள். ஆலயத்தின் உள்ளே 43 ஆயிரம் பேர் மண்டியிட்டு இறைவனை பிரார்த்திக்க முடியும். திருவிழா நேரங்களில் ஆலயத்தில் இருக்கும் மிகப்பெரிய 800 தூண்களும் அலங்கரிக்கப்படும். 

இந்த தேவாலயத்தில் போப்பாண்டவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த சமாதிகளுக்கு 24 மணி நேரமும் பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் வழிபடுவதற்கென்றெ 27 இடங்கள் இருக்கின்றன. பைபிள் பல மொழிகளில் இங்கு வாசிக்கப்படுகிறது. ஆலயப் பொக்கிஷத்தில் ஆபரணங்களும், தங்கச் சிலுவைகளும் உலகத்திலுள்ள எல்லா வகையான நாணயங்களும் பதக்கங்களும் இருக்கின்றன. இவற்றை மட்டும் பார்பதற்கே பலநாட்கள் செலவிட வேண்டும். கலைக்கூடங்கள், நூலகங்கள், புராதனச் சேகரிப்பு பொக்கிஷங்கள் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அத்தாட்சி அடையாள அட்டைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த அட்டைகள் இருந்தால் மட்டுமே பொக்கிஷ அறைகளுக்குள் நுழைய முடியும்.


பல கிலோமீட்டர் தொலைவுக்கு நின்று பார்த்தாலும் இந்த ஆலயம் நன்றாக தெரியும். ஆலயத்தின் மேல் பக்கத்தில் பொன் தகடுகள் பதிக்கப்பட்டு பளபளக்கின்றன. உச்சியில் பளிங்கு எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மைக்கேல் ஏஞ்சலோ என்ற உன்னத கலைஞனின் ஓவியப் படைப்புகள் விதானத்தை அலங்கரிக்கிறது. விதானத்தின் வடிவமைப்பும் ஏஞ்சலோவின் கற்பனைபடியே வடிவமைக்கப்பட்டது.

ஆதாமின் உயிர்ப்பு
ஆலயத்தை காவல் காப்பதற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து 100 காவலாளிகள் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் சீருடை அணிந்து இறகு சொருகப்பட்ட தொப்பியுடனும், ஈட்டியுடனும் நிற்கிறார்கள். 

காவலாளிகள்
மதகுருமார்கள் கருஞ்சிவப்பு ஆடையை அணிந்து இருப்பார்கள். போப்பாண்டவர் தங்க வேலைப்பாடுகளால் ஆன மூன்று முடிகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட குல்லாவை அணிந்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். அவரை உயர்ந்த பீடத்திற்கு தூக்கிச்செல்வார்கள். அவர் தனது கையை உயர்த்தி மக்களை ஆசீர்வாதம் செய்யும் பொது 'வைவாஇல் பா(ப)பா!' என்ற கோஷம் மைக்கேல் ஏஞ்சலோ விதானத்தை நிரப்பும். அந்த கோஷத்திற்கு 'போப்பாண்டவர் நீடூழி வாழ்க!' என்று பொருள்.

மதகுருமார்கள்
இது மிகப்பெரிய தேவாலயம் ஆகும். மிக உயரமான கிருஸ்துவ ஆலயம் எதுவென்றால் அது ஜெர்மனியில் உல்ம் என்ற நகரில் இருக்கிறது. 1377-ல் கட்டப்பட்ட இந்த ஆலயம் 188.7 மீட்டர் உயரம் கொண்டது. ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர்கள் பிரார்த்தனை நடத்த முடியும்.

மைக்கேல் ஏஞ்சலோ ஓவியம்

புதன், நவம்பர் 11, 2015

பரவசம் தரும் பாம்புக் கணவாய்பாம்புக் கணவாய் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே. இது எங்கிருக்கிறது? என்று கேட்பவர்கள் தென்னாப்பிரிக்கா போகவேண்டும். உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய கணவாய் இதுதான். பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதால் இந்த கணவாய்க்கு இப்படியொரு பெயர் வந்ததாக சொல்கிறார்கள். இதற்கு 'பிளைட் ஆற்றுக் கணவாய்' என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. 

பிளைட் ஆற்றுக் கணவாய்
பிளைட் என்ற டச்சு சொல்லுக்கு மகிழ்ச்சி என்று பொருள். இந்த இடத்தை பார்க்கும்போது மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கி வழிவதால், இதற்கு 'ஹேப்பி ரிவர் கேன்யன்' என்று மற்றொரு பெயரும் உண்டு. 

ஹேப்பி ரிவர் கேன்யன்
இம்புமலங்கா பள்ளத்தாக்கில் இருக்கும் இந்த கணவாய் 25 கி.மீ. நீளம் கொண்டது. 2,461 அடி ஆழம் கொண்டது. சிவப்பு மணற்கற்களால் ஆன இந்த கணவாய் அழகின் இருப்பிடம்.   


உலகில் இருக்கும் வேறு எந்த கணவாயையும் இதனுடன் ஒப்பிட முடியாது. பசுமை போர்த்திய இந்த அழகு கணவாயில் அழுகின்ற முகத்தின் தோற்றம் கொண்ட பாறை ஒன்று இருக்கிறது. 

காடிஷி டுபா அருவி
இந்த பள்ளத்தாக்கில் 660 அடி உயரம் கொண்ட 'காடிஷி டுபா' அருவி உள்ளது. இதுதான் உலகின் இரண்டாவது உயரமான அருவி. இங்கிருக்கும் வனப்பகுதியில் சுற்றி வருவதற்காக 'காடிஷி ட்ரெய்ல்' என்ற பயணத் திட்டமும் உண்டு. 

காடிஷி ட்ரெய்ல்
இந்த கணவாயின் உயரமான இடம் 'மரியெப்ஸ்காப்'. கடல் மட்டத்திலிருந்து 6,378 அடி உயரத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியில் பலவளையான மீன்கள், பறவைகள், அதிகமான குரங்கு வகைகள் உட்பட ஏராளமான பாலூட்டிகள் இருக்கின்றன. 

மரியெப்ஸ்காப்
இங்கு மலையேற்றம், பலூனிங், பாராகிளைடிங் போன்ற சாகஸ விளையாட்டுகளும் உண்டு.  இந்தக் கணவாயில் ஏகப்பட்ட அருவிகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் தவறாமல் பார்த்துச் செல்லும் இடங்களில் ஒன்றாக இது இருக்கிறது. இந்தக் கணவாயை சுற்றியுள்ள 'ட்ரகன்கென்ஸ்பெர்க்' செங்குத்து சரிவும் கண்ணைப் பறிக்கும் அழகு கொண்டது. சிறப்பான போக்குவரத்தும் மற்ற வசதிகளும் இந்த பகுதியை மறக்க முடியாத அழகு சொர்க்கமாக மாற்றுகிறது.

பாராகிளைடிங்
எப்படி போவது?

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகருக்கு சென்னையிலிருந்து நேரடி விமான சேவைகள் உள்ளன. 13 மணி நேர பயணம். 7,101 கி.மீ. தொலைவு. ரூ.49,797 கட்டணம்.

படங்கள் : இணையம்திங்கள், நவம்பர் 09, 2015

தீபாவளிக்கும் ஒரு சுற்றுலா உண்டு
திருவிழாக்கள் என்றுமே சுற்றுலாவாசிகளை ஈர்ப்பவைதான். அதிலும் தீபாவளி போன்ற ஒரு பெரும் விழா சுற்றுலாவாசிகளை வசீகரிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். தீபவாளியும் வசீகரிக்கிறது. இதன் வசீகரிப்பால் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் இந்தியா வருகிறார்கள். 

திருவிழா நடைபெறும் இடத்திற்கு சென்று அவர்களின் பழக்க வழக்கங்களை கண்டுகளிப்பது மரபு வழியாக வந்த பழக்கம். அந்த பழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். அது இன்று சுற்றுலாவாக அவதாரம் எடுத்திருக்கிறது.


இந்தியப் பெண்களின் பாரம்பரியப் பழக்கம் தான். இப்படி வெளிநாட்டு பயணிகளை இந்தியா கொண்டு வந்து சேர்க்கிறது. அந்தக் கலையின் பெயர் 'மதுபாணி'. இது ஒரு சுவர்ச் சித்திரம். நம்மூரில் பெண்கள் திருவிழாக்களின் போது வீட்டு வாசலில் பெரிது பெரிதாக கோலம் போட்டு அசத்துவார்களே, அப்படி வட இந்தியப் பெண்கள் சுவர்களில் ஓவியம் வரைந்து அசத்தும் கலைதான் மதுபாணி சித்திரங்கள். 


நமது பெண்கள் கோலம் என்ற அரிய கலையை கிட்டத்தட்ட மறந்து போய்விட்டார்கள். ஆனால், பீஹார் பெண்கள் பாரம்பரியத்தை மறக்கவில்லை. அதை அவர்கள் வெளிநாடு வரை கொண்டு போய்விட்டார்கள். நாம் நமது பாரம்பரியத்தை தொலைத்து நிற்கிறோம். 


சுவரில் சித்திரம் வரையும் கலையானது ஆதி மனிதர்களிடமிருந்து ஆரம்பித்து இன்றளவும் வாழ்ந்து வரும் கலை. தொடக்கத்தில் தகவல் தெரிவிப்பதற்காக தோன்றியதே இந்தக் கலை. இன்று பீஹார் பெண்கள் அதை அழியாமல் வளர்த்து வருகிறார்கள். பீஹாரிலுள்ள மிதியா கிராமத்துப் பெண்கள் தங்களது முன்னோர்களின் பழக்கமான சித்திரம் தீட்டுவதை இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் ராமாயணம், மகாபாரதத்தில் வரும் காட்சிகளையே சித்திரமாக வரைகிறார்கள். 


பொதுவாக தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு தங்கள் வீட்டுச் சுவர்களை இத்தகைய ஓவியங்களால் பெண்கள் அலங்கரிக்கிறார்கள். இதை இறைவழிபாடாக கருதுகிறார்கள். இந்த ஓவியங்களில் இருக்கும் கலை நுணுக்கங்கள் வியப்பளிக்கிறது. அதிலும் ஜித்வர்பூர் மற்றும் ரண்டி கிராமங்களில் வரையப்படும் மதுபாணி ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.


இந்த ஓவியங்கள் இயற்கை வண்ணங்களை பயன்படுத்தியே வரையப்படுகின்றன. செயற்கை வண்ணங்களை உபயோகிப்பதில்லை. சுவரில் நன்றாக ஒட்டவேண்டும் என்பதற்காக மரப்பிசினும், வண்ணங்கள் எல்லாம் வெள்ளாட்டுப் பாலில் கலந்தும் வரையப்படுகின்றன. அதனால்தான் இந்த ஓவியங்கள் பழமை மாறாமல் மிளிர்கின்றன. 


மதுபாணி மற்றும் மிதிலா வகை சித்திரங்கள் எப்போது வரையத் தொடங்கினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஆரம்பத்தில் சுவரில் மட்டும் வரையப்பட்ட இந்த சித்திரங்கள் பலரும் காணவேண்டும் என்பதற்காக திரைச்சீலைகளில் வரையப்பட்டது. ஆனாலும் வெளிநாட்டினர் இவற்றைப் பார்பதற்காக இங்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 


தீபாவளியன்று அனைத்து விட்டு சுவர்களிலும் இந்த ஓவியங்கள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு அழகில் மிளிர்வது கண்கொள்ளக்  காட்சி. நீங்களும் ஒருமுறை இந்த கிராமங்களுக்கு போய்ப்பாருங்களேன்.


அனைவருக்கும் 
இனிய
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்!LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...