Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

அழித்த உயிரினம் பயணிப் புறா


அது என்ன அழித்த உயிரினம் என்கிறீர்களா..? உலகில் தோன்றிய உயிரினங்களில் சில இயற்கையாகவே அழிந்திருக்கின்றன. பல மனிதனின் பேராசையால் அழிக்கப்பட்டன. அப்படி மனிதனால் கூண்டோடு அழிக்கப்பட்ட ஒரு உயிரினம்தான் பயணிப் புறா..!
* * * * *

யற்கையின் உன்னத படைப்பில் பயணிப் புறாவுக்கு தனி இடம் உண்டு. அதன் அழகும், பல்வேறு வண்ணங்களும், மென்மையும் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டவை. வட அமெரிக்க பழங்குடியினர் இந்தப் பறவைகளை போற்றுதலுக்குரியதாய் கொண்டாடினர். ஆனால், ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் காலை வைத்த ஒருசில ஆண்டுகளில் இந்த பறவையினமே கூண்டோடு அழிந்து போனது.

வட அமெரிக்காவின் மலைப்பகுதியில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவைகள் தான் பயணிப் புறாக்கள் என்கிற காட்டுப் புறாக்கள். அப்போது வட அமெரிக்காவில் 500 கோடி பயணிப் புறாக்கள் இருந்துள்ளன.

இந்தப் புறாக்கள் கூட்டமாக வானில் பறக்கத் தொடங்கினால் அதைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். அத்தனை அழகானது அந்த ஊர்வலம். வானில் நிகழும் இந்த கண்கவர் ஊர்வலம் ஒரு இடத்தை கடக்க பல மணி நேரம் ஆகும்.

பொதுவாக பறவைகள் இறக்கைகளை மட்டுமே விரித்துப் பறக்கும். பயணிப் புறாக்கள் இறக்கைகளை மட்டுமல்லாமல் அதன் கூடவே வாலையும் சேர்த்து இறக்கை போல் விரித்துக் கொள்ளும். தேவதைக் கதைகளில் வரும் தேவதைகள் வானில் கூட்டமாகப் பறப்பதுபோல் இதன் அழகு இருக்கும். 


இந்த பறவைகள் தனியாக பறப்பதில்லை. எப்போது பறந்தாலும் தன் இனத்தில் உள்ள அத்தனைப் பறவைகளையும் அழைத்துக் கொண்டு கூட்டமாகத்தான் பறக்கும். கோடிக்கணக்கில் இருக்கும் இந்தப் பறவைகள் ஓரிடத்தை கடப்பதற்கு சில மணி நேரம் ஆகும். இத்தனைக்கும் இது மணிக்கு 100 கி.மீ. என்ற அதி வேகத்தில் பறக்கும் பறவை.

1873-ம் ஆண்டு ஏப்ரல் 8-ல் மெக்சிகன் நகரின் வான்வெளியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய புறா ஊர்வலம் முடிவதற்கு மாலை 4.30 மணி ஆனது. அண்ணாந்துப் பார்த்தால் கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை பயணிப் புறாக்கள் சாரை சாரையாக வந்துக் கொண்டே இருந்தன என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்தக் காட்சிகள் அந்த நாட்களில் மிக சாதாரணமானவை. பயணிப் புறாக்களின் ஊர்வலம் தொடங்கிவிட்டால் அந்த பகுதியே கடும் மேக மூட்டத்திற்கு  உள்ளானதுபோல் இருட்டிவிடும்.


இப்படி பார்ப்பவர்கள் கண்ணை உறுத்தும் அளவுக்கு பறந்து பறந்து பரவசப்படுத்தியதுதான் அதற்கு எமனாக அமைந்துவிட்டது. வட அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடியேறிய போது அவர்கள் இந்த புறாக்களை மிக தொந்தரவாக நினைத்தார்கள். புறாக்களை வேட்டையாடத் தொடங்கினார்கள். 

இவற்றை வேட்டையாடுவது எளிதான ஒன்றாக இருந்தது. வெறுமனே வலை விரித்தால் போதும் கொத்துக் கொத்தாக புறாக்கள் சிக்கும். துப்பாக்கியால் சுட்டால், சத்தம் கேட்ட மாத்திரத்திலே அதன் இதயத் துடிப்பு ஏகத்துக்கு எகிறி கூட்டம் கூட்டமாக இறந்து விழும். கூட்டாமாக பறக்கும் போது ஒரு கட்டையை வீசினால் போதும் கொத்தாக புறாக்கள் விழும். அதனால் இந்தப் பறவைகளை இஷ்டத்துக்கு மனம் போன போக்கில் கொன்று குவித்தார்கள் ஐரோப்பியர்கள்.

1884-ல் 30 லட்சம் பயணிப் புறாக்க்கள் கொன்று குவிப்பு 
அதோடு நில்லாமல், இந்த பறவைகளை ரெயில் மூலம் நியூயார்க் போன்ற இடங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். கப்பல் மூலமும் புறா வர்த்தகம் லாபகரமாக நடைப் பெற்றது. புறாக் கறி விலை குறைவாக கிடைத்ததால் இதற்கு அமெரிக்கர்கள் மத்தியில் ஏகப்பட்ட கிராக்கி. குறைவான விலையில் மிருதுவான சுவையான இறைச்சி என்பதால், இதனை முழுநேர வேலையாக செய்து புறாக்களை வேகவேகமாக பரலோகம் அனுப்ப ஆரம்பித்தார்கள். 

1855-ம் ஆண்டு மட்டும் 3 லட்சம் புறாக்கள் பார்சலாக அனுப்பப்பட்டன. 1869-ல் மெக்சிகன் நகரில் இருந்து வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளுக்கு 75 லட்சம் புறாக்களை சுவைக்க அனுப்பிவைத்தார்கள்.


இந்த புறாக்களில் பெண் புறா ஆண்டுக்கு ஒரே ஒரு முட்டை மட்டும்தான் இடும். எனவே அழிக்கப்படும் வேகத்திற்கு அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை. இதனால் 20-ம் நூற்றண்டின் தொடக்கத்தில் தனது பயணத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு பயணிப் புறா தள்ளப்பட்டது. 

உலகில் கடைசி பயணப் புறாவான 'மார்த்தா', சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் 1914 செப்டம்பர் 1-ம் தேதி மதியம் ஒரு மணிக்கு தனது மூச்சை நிறுத்தியது.

கடைசி பயணிப் புறா மார்த்தா
தான் மட்டுமே மேலான உயிரினம் என்ற மனிதனின் எண்ணத்தால் ஏகப்பட்ட உயிரினங்கள் உலகில் அழிந்தன. என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும் மனிதனால் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை..!




35 கருத்துகள்

  1. அடப் பாவிங்களா ...பயணிகள் புறாவை இப்படி பிரியாணி புறாவாக்கி தின்னுட்டீங்களே:)

    பதிலளிநீக்கு
  2. பயணிப்புறா பற்றிய செய்தியை அறிந்தேன், வியந்தேன். வருத்தப்பட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. ஒரு உயிரினத்தையே அழித்திருக்கிறார்களே.... பாவம் பயணப் புறா....

    பதிலளிநீக்கு
  4. மிக அழகான படங்களுடன் அந்தப்பறவை பற்றிய வரலாறுகளை மிகச்சிறப்பாகக் கொடுத்துள்ளீர்கள். அந்த இனம் இப்படி மனிதர்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தமளிக்கும் செய்தியாய் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. புறாக்களின் அழகிய படங்கள்...

    ஆனால், மனிதனால் அழிந்தன அத்தனையும் ,,,

    பாவம்!

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள அய்யா,

    பயணிப் புறாவை அழித்த கொடுமை கண்டு உள்ளம் பதைத்தேன். தேவதை போல பயணிப் புறாவின் படம் அழகு!

    நன்றி.

    த.ம. 5

    பதிலளிநீக்கு
  7. மனிதர்களையே அழித்தவர்கள். கேட்க நாதிழயற்ற .பயணிப்புறாவை..சும்மாவா விட்டு வைப்பார்கள் கொடுங்கோலர்கள்.......த.ம 6

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    தகவலை படித்த போது வேதனையாக இருந்தாலும் நல்ல தகவல் அறியக்கிடைத்தது. வாழ்த்துக்கள் த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. மணியான பதிவு...இந்த பதிவு எனக்குள் நம் நாட்டில் சிங்கங்களை வேட்டையாடி அழித்த சோக வரலாற்றை நினைவுபடுத்துகிறது..கொடுமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலேயர்கள்தான் தேவையில்லாமல் விலங்குகளை கொல்லும் பழக்கத்தை கொண்டுவந்தார்கள். துப்பாக்கி குண்டால் சுட்டுக் கொன்று அவர்கள் அழித்த உயிரினங்கள் பல.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  10. வணக்கம் நண்பரே எவ்வளவு வேதனையான விடயம் மனிதன் இப்பொழுது மனித இனத்தையும் அழிக்கத் தொடங்கி விட்டானே....
    அழகான புறாவாக இருக்கின்றதே...
    த.ம.வ.போ.

    பதிலளிநீக்கு
  11. மனித வரலாற்றில் இந்த பேசென்ஜெர் பீஜன்ஸ் அழிப்பு போல மிகப் பெரிய அளவில் எந்த ஒரு அழிவும் நடந்ததில்லை என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்களே தற்போது வேதனையுடன் சொல்கிறார்கள். வெறும் பதினெட்டே மாதங்களில் கோடிக்கணக்கான புறாக்கள் சட்டெனெ ஒற்றை இலக்கத்திற்கு வந்த அவலம் நம் மனித இனத்தின் மீது படிந்துவிட்ட தீரா பழி. துப்பாக்கிகள் என்றுமே நியாயம் போதிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துப்பாக்கிகள் என்றுமே நியாயம் போதித்ததில்லை.
      நிதர்சனமான உண்மை நண்பரே!

      நீக்கு
  12. மனதை நெருடச் செய்த, மனிதன் எப்போதும் சுயநலமானவன்தான் என்பதனை உணர்த்தும் பதிவு.

    பதிலளிநீக்கு
  13. பாசஞ்சர் பீஜியன்ஸ் மிக மிக அழகான பறவைகள். மனிதன் சுயநலவாதி என்பது நிரூபணமாகி வருகின்றதுதான். துப்பாக்கிக்கு இரையானவர்கள் பல நல்ல தலைவர்கள், பாவம் மனிதர்கள் மட்டுமல்ல அப்பாவி ஜீவன்களும்தான். அன்றைய காலம் தொட்டே வேட்டையாடும் வழக்கம் இந்த மனித மிருகங்களுக்குள்ளும் இருந்துவந்ததுதானே. மனிதன் மிருகத்தைக் கேவலமாக எண்ணுகின்றான் ஆனால் அவனும் மிருகம்தான். கேவலம்தான். மிகப் பெரிய வேட்டை இந்த பாசஞ்சர் பீஜியன்தான். நம்மூரில் புலிகள் அழிந்துவருகின்றதே. குருவிகள் இனமும் தொலைந்து வருகின்றதே. மனிதன் எப்போதுமே சுயநலவாதிதான்.

    அருமையான பதிவு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதனை விட மிக மோசமான கொடூரமான விலங்கு உலகில் இல்லை என்பதே உண்மை.
      தங்கள் வருகைக்கு நன்றி!

      நீக்கு
  14. பயணிப்புறா என்ன அழகு! தேவதை என்பது மிகச்சரியான ஒப்பீடு! லட்ச லட்சமாகக் கொன்று குவித்து இன்று ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்களே பாவிகள்! படிக்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது செந்தில்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை