Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஒரு நிஜக்காதல்..!

திருமணத்தின் போது இந்திராணி -கோவிந்தராஜ்
காதலர் தினம் என்றதும் அதற்கு காதலர் தினச் சிறப்பிதழ் போடுவது பத்திரிகைகளில் வழக்கமாக இருக்கும் ஒரு நடைமுறை. அப்படி ஒரு காதலர் தினத்திற்காக காதலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்த போது என் நினைவுக்கு வந்தவர் கோவிந்தராஜ்.  40 வருட காதலையும் காதல் மனைவி இறந்தப் பின் அவரது உருவத்தோடும் வாழும் இவரை எழுதாவிட்டால் காதலர் தினம் நிறைவடையாது.

உடனே ஊட்டி பஸ்ஸில் ஏறி மேட்டுப்பாளையம் போய் இறங்கினேன். அவர் வீட்டுக்குள் நுழைந்த போதுதான் காதல் எத்தனை புனிதமானது என்று என்னால் உணர முடிந்தது. 

தனது காதலை உணர்வுபூர்வமாக கூறினார், கோவிந்தராஜ். இனி அவரது வார்த்தையிலே...

"இந்த வீடு இந்திராணி ஆசைப்பட்டு கட்டியது.


இதன் ஒவ்வொரு செங்கலும் அவள் பெயரை உரக்கச் சொல்லும். இந்த வீட்டுக்கான என்ஜினியரும் அவள்தான். அவள் ஒரு கலாரசணை மிக்கவள். தன் குடும்பத்துக்கான வீடு இப்படிதான் இருக்க வேண்டும் என்று கனவு கண்டவள்.    

முன்புறம் ஒரு போர்ட்டிகோ, பெரிய ஹால், மூன்று பெட்ரூம், கிச்சன், பூஜை அறை, மார்பிள் தரை என்று வசதிப்படைத்தவர்களின் வீட்டைப் போலவே பார்த்து பார்த்து கட்டினாள்.  

யார் கண் பட்டதோ..! அங்குலம் அங்குலமாக அனுபவித்து கட்டிய இந்த வீட்டில் ஒருநாள்கூட வாழும் பாக்கியம் அவளுக்கு இல்லாமல் போனது..!"

கோவிந்தராஜ்
கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு தனது காதலை சொல்கிறார்..

"மேட்டுப்பாளையம் காட்டூர் பேரிங் கம்பெனி ரோட்டில்தான் எங்கள் இருவரின் வீடும் இருந்தது.  எங்களது அப்பாக்கள் இருவரும் நல்ல நண்பர்கள். 

அதனால் சின்ன வயதிலிருந்தே இந்திராணி எனக்கு பழக்கம். அவள் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் நான் போய் வருவேன்.  பால்ய சிநேகம் என்பார்களே அப்படியொரு பந்தம். எனக்கும் அவளுக்கும்..! நான் 10-ம் வகுப்போடு எனது படிப்பை முடித்துக் கொண்டேன். 

அதே தெருவில் ஒரு டெய்லர் கடை வைத்தேன். இந்திராணி அப்போது சின்னப் பெண்.  எனக்கும் அவளுக்கும் 10 வயது வித்தியாசம். அவளது பாவாடை சட்டையெல்லாம் கூட நான் தைத்துக் கொடுத்திருக்கிறேன்.  

அப்போதெல்லாம் இந்திராணி சாதாரணப் பெண்ணாகத்தான் எனக்குத் தெரிந்தாள். என்னுடைய 24-வது வயதில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் கிளார்க் வேலை கிடைத்தது.  அரசு வேலை கிடைத்தப் பின்பும் கூட எனது டெய்லர் தொழிலை நான் விடவில்லை.  வேலை முடிந்து வந்ததும், கடையைத் திறந்து உட்கார்ந்து விடுவேன்.  

இப்படியே  இரண்டு வருடம் போனது.  வேலைப் பளுவால் இந்திராணி வீட்டுக்குக் போவது கிட்டத்தட்ட நின்று போனது. இந்திராணி கொஞ்சம் கொஞ்சமாக என் நினைவிலிருந்து விலகி சென்று கொண்டிருந்தாள்.

ஒரு நாள் கடையில் இருந்தபோது, அந்த இனிமை நிகழ்ந்தது.

"இந்த சட்டையை கொஞ்சம் தைச்சுக் கொடுங்க...'' என்று ஒரு பெண்ணின் இனிய குரல் கேட்டது.  நிமிர்ந்து பார்த்தேன். 

இந்திராணி...!!! 

என்னால் நம்ப முடியவில்லை..! 16 வயது பருவ மங்கையாக அவள்..!

பிரமித்துப் போனேன். அழகு... அழகு.... அப்படியொரு அழகு..! இந்த இரண்டு வருடத்தில் பருவம் அவள் உடலை பக்குவமாக செதுக்கி வைத்திருந்தது.  

மனதுக்குள் மத்தளம்  அடித்தது.  'எனக்கென பிறந்தவள்' என்று மனம் பரபரத்து பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டது.

எனது கடைக்கு எதிரே இருந்த தண்ணீர் குழாய் தேவதையின் கூடாரமாக மாறியது.  

அங்குதான் இந்திராணி காலையும் மாலையும் தண்ணீர் பிடிக்கக் குடத்துடன் வருவாள், பள்ளிக்கூடம் போகும்போது அவளைப் பின் தொடர்வது எனது வாடிக்கையானது.

ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடிதம் கொடுத்தேன். அதுவொரு காதல் கடிதம்!  பதில் இல்லை.  பின் நேரடியாகவே எனது விருப்பத்தை சொன்னேன். 'முடியாது' என்று கூறிவிட்டாள். அதற்கு காரணமும் இருந்தது.

நாங்கள் இருவரும் வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பம் வசதியான குடும்பம். அவளுடைய குடும்பமோ ஏழ்மையானது.  

வர்க்கப் பேதங்கள் எங்களை விலக்கி வைத்தன.  ஆனாலும், என் மனது 'இவள் உனக்கானவள்' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் என் காதலை இந்திராணி ஏற்றுக் கொண்டாள்.  நான்கு வருடங்களாக இருவரும் உயிருக்குயிராய் காதலித்தோம்.  இந்த வி­ஷயம் அரசல் புரசலாக எங்களின் வீடுகளுக்கும் எட்டியது. இருவர் வீட்டிலும் ஏகப்பட்ட எதிர்ப்பு.

அவர்கள் வீட்டில், இந்திராணியின் அத்தை மகனுக்கு அவளைக் கட்டி வைக்க தீவிரமான ஏற்பாடுகள் நடந்தன.

"எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உங்களோடுதான். இல்லேன்னா செத்துடுவேன் '' என்று என் முன் வந்து நின்ற பெண்ணை, ஒருநாள் மட்டும் பொறுத்துக்கொள்ள சொன்னேன். அவளும் ஒருநாள் மட்டும்தான்..! மறுநாள் என் பிணம்தான் என் வீட்டில் இருக்கும் என்றாள்.

அன்றைக்கே லீவு போட்டு தாலி, பட்டு வேட்டி, பட்டுச் சேலை எல்லாம் வாங்கினேன். இரவோடு இரவாக இந்திராணிக்கு ஜாக்கெட் தைத்து முடித்தேன். நடுநிசியில் இந்திராணி தனியாக வந்தாள். இரவோடு இரவாக பஸ் ஏறினோம். 

விடியற்காலையில் இருவரும் பழனிக்கு வந்து விட்டோம்.  முருகன் கோயிலில் திருமணம் செய்வதாக இருந்தோம்.  ஆனால் கோயிலில் அனுமதிக்கவில்லை.  அதனால் மலைக்கு கீழே உள்ள விநாயகர் கோயிலில் தாலி கட்டினேன். அங்கு வந்திருந்தவர்கள் எங்களை ஆசீர்வதித்தார்கள்.

திருமணம் முடிந்த கையோடு பெங்களூருக்கு சென்றுவிட்டோம்.  உறவினர் ஒருவரின் வீட்டில்  ஒரு வாரம் தங்கியிருந்தோம். அந்த காலத்தில் போன் வசதி அதிகமாக கிடையாது. அதிலும் சாமானியர்கள் போன் பேசுவது நினைத்து பார்க்க முடியாத அதிசயம். அதனால் நண்பர்களுக்கு கடிதம் எழுதினேன்.

அவர்களே எங்களுக்கான வீட்டை வாடகைக்கு எடுத்தனர். தேவையான சாமான்களை வாங்கி வைத்தார்கள்.  திரும்பவும் மேட்டுப்பாளையம் வந்தோம். இரு வீட்டிலும் எங்களை வேப்பங்காயாய் நினைத்தார்கள். எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

எட்டு வருடமாக எங்கள் குடும்பத்தினர் யாரும் எங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை.  தாரத்துக்கு தாரமா, தாய்க்குத் தாயாக இருந்து என் மேலே பாசத்தை கொட்டினாள் இந்திராணி.

கூடவே அதிர்ஷ்டமும் வந்தது. எனக்கு பதவி உயர்வு  கிடைத்தது.  சம்பளம் அதிகமானது. வாழ்க்கை மிக சந்தோ­ஷமாக போய்க் கொண்டிருந்தது.  

செந்தில்குமார் என்ற மகனும், பூர்ணிமா என்ற மகளும் பிறந்தார்கள். பிள்ளைகள் எங்களை பெருமைப்படுத்தும் விதமாக நன்றாகப் படித்தார்கள். செந்தில் பி.இ. முடித்து பெங்களூரில் வேலைக்குப் போனான். பூர்ணிமா எம்.பி.ஏ., எம்.பில். படித்துவிட்டு கோபியில் திருமணம் செய்து கொடுத்தோம்.

எல்லாம் இருந்தும் ஒரு சொந்த வீடு இல்லையே  என்ற குறை இந்திராணியை வாட்டிக் கொண்டே இருந்தது. என் மகனுக்கு  வெளிநாட்டில் வேலை கிடைத்து போனபோது வீடு கட்டுவதற்கான காலமும் கணிந்தது.

காரமடை ரோட்டில் இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தோம். எங்கள் வீட்டுக்கான என்ஜினியர் இந்திராணிதான். அவளின் விருப்பப்படிதான் வீட்டின் அமைப்பு இருந்தது.  

வீட்டை ஒவ்வொரு அங்குலமாக அலங்கரித்து ரசித்தாள். பூஜை அறை இப்படி இருக்கணும், சமையலறை இப்படி இருக்கணும், பெட்ரூம் இப்படி இருக்க வேண்டும் என்று ரசித்து ரசித்து கட்டினாள்.

படமாக இந்திராணி
வீட்டு வேலையும் முழுமையாக முடிந்தது. பால் காய்ச்ச  நாளும் குறித்தோம். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்  திடீரென்று இந்திராணிக்கு தாங்க முடியாத நெஞ்சு வலி ஏற்பட்டது, ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடினோம். வழியிலேயே அவள் உயிர் பிரிந்தது.  

அவ்வளவுதான் என் மொத்த வாழ்க்கையும் ஒரு நொடியில் முடிந்து போனது.வாழ்க்கையே ஸ்தம்பித்துவிட்டது.

எனக்கு வாழவே பிடிக்கவில்லை..!

உயிரோடும் உணர்வோடும் கலந்திருந்த என் இந்திராணி போன பிறகு வாழ்வே சூனியமாக இருந்தது.  இந்த வீடு அவள் உயிரை வாங்கிவிட்டதாக எனக்குப் பட்டது. இந்த வீட்டு பக்கமே நான் வரவில்லை. அதன் பிறகும் நாங்கள் இருந்த வாடகை வீட்டிலேதான் தங்கியிருந்தேன்.

என் பிள்ளைகள் புது வீட்டுக்குப் போகப் பிரியப்பட்டார்கள். எனக்குத்தான் அவள் இல்லாத வீட்டில் இருக்க மனமில்லாமல் இருந்தது.  திடீரென்று ஒருநாள் தோன்றியது. இந்திராணியை புதுவீட்டுக்கு கூட்டிப் போனால் என்ன என்று...

எனக்கு கம்பி வேலை, சிமெண்ட் வேலை எல்லாம் தெரியும். அவள் முகத்தை மனதில் நினைத்துக்  கொண்டு சிலை செய்யத் தொடங்கினேன். ஒவ்வொரு நிலையிலும் சிலையை போட்டோ எடுத்து முகம் சரியாக இருக்கிறதா என்று அவளின் ஒரிஜினல் போட்டோவோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். ஆறுமாதமாக தன்னந்தனி ஆளாக இந்த சிலையை முடித்து பார்த்தபோது எனது இந்திராணியே நேரில் உட்கார்ந்திருப்பது போல் இருந்தது.

சிலையாக இந்திராணி
கிரகப்பிரவேசத்திற்கு அந்த சிலையுடன்தான் வருவேன் என்று அடம்பிடித்தேன். முதலில் எதிர்த்தவர்கள் பின் 'ஓகே' சொல்லிவிட்டார்கள். அப்போதிருந்து என்னுடன்தான் சிலை வடிவில் இந்திராணி இந்த வீட்டில் இருக்கிறாள்.

மகன் வெளிநாட்டில், மகள் புகுந்த வீட்டில் இருக்கும் நிலையில் நானும் அவளும் மட்டும்தான் இந்த வீட்டில் இருக்கிறோம். தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு என்று எந்த ஒரு திருவிழா வந்தாலும் இந்திராணிக்கும் புதுப்புடவை உடுத்தி வழிபடுவேன்.

மரணம் எங்களைப் பிரித்திருந்தாலும்.... காதல் பிரித்ததில்லை...! இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அத்தனையிலும் இந்திராணிதான் என் மனைவியாக வரவேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை...!"


அவரின் பிரார்த்தனை நிறைவேறவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு அவரிடம் இருந்த விடைப் பெற்றேன்.


இதுவொரு மீள் பதிவு


35 கருத்துகள்

  1. உண்மையான காதல்...... படிக்கத் தந்தமைக்கு நன்றி செல்வகுமார்.

    பதிலளிநீக்கு
  2. நாமெல்லாம தனியார் மயத்துக்கு எதிராகவும்
    அரசுத்துறைக்கு ஆதரவாகவும்
    போராடிக் கொண்டிருப்பவர்கள்
    இது போன்ற நிகழ்வுகள் நம் சிந்தனையில்
    தடுமாற்றத்தினை ஏற்படுத்தி போவது நிஜம்

    (நம் பக்கமும் வந்து செல்லலாமே
    அதில் புதுகைப் பதிவர்களின் பின்னூட்டங்களை
    அதிகம் எதிர்பார்த்தேன்... )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக வருகிறேன் அய்யா!
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. அவர் காதல் பிரமிக்க வைக்கிறது. மிக அருமை. அவருக்கு மன நிம்மதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் சிறப்பான கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  4. உருக்கிவிட்டது உங்கள் பதிவு....குறுஞ்செய்திகளில் தொடங்கி...குறுகிய காலத்தில் முடிந்துவிடும் காதலின் காலத்தில் காத்கலெனில் என்னவென்று உணர்த்திய பதிவு....
    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனித்துவமான இந்தக் காதல் இன்றைய காதலர்களுக்கு ஒரு பாடம்தான்!

      நீக்கு
  5. ஆச்சரியமான விஷயம்தான். படத்தில் இருப்பது போலவே உயிரோட்டமான சிலை. ஆனாலும் பின்னாளில் தனக்கு மனச்சிதைவு ஏற்படாத வண்ணம் அவர் தனது வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் மிகத் தெளிவாகவும் மன ஆரோக்கியத்தோடும் இருக்கிறார். இது மிதமிஞ்சிய காதலின் வெளிப்பாடுதான்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  6. அன்புள்ள அய்யா,

    நினைவாலே சிலை செய்து அல்ல... உண்மையாகவே... உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடிவா..ஆ.. திருக்கோவிலே ஓடி வா
    நீர் இன்றி யார் இல்லை நீ இன்றி நான் இல்லை
    வேரின்றே மலரே ஏதம்மா…ஆ… வேரின்றே மலரே ஏதம்மா…

    திருமிகு. கோவிந்தராஜின் உண்மைக் காதல் வாழ்க!

    நன்றி.

    த.ம. 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அய்யா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  7. மீள் பதிவு என்றாலும் இன்று தேவையான பதிவு :)

    பதிலளிநீக்கு
  8. மனம் நெகிழ்ந்து போய்விட்டது நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  9. ஏற்கனவே படித்திருந்தாலும்,, படிக்க படிக்க மனம் நெகிழச்செய்யும் பதிவு,,

    அருமை அருமை சகோ,

    பதிலளிநீக்கு
  10. என்ன ஒரு காதல்....அன்பின் முழுமை. அருமை சகோ நன்றி

    பதிலளிநீக்கு
  11. கண்கள் கசிந்து விட்டது நண்பரே..
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
  12. ஐயோ சகோ செந்தில்..மனம் மிகவும் நெகிழ்ந்துவிட்டது. உன்னதமான காதல் அன்பு. பிரமிக்க வைக்கின்றது. அந்தச் சிலை கூட மிக அருமையாக ஒரிஜினலாக உள்ளது...அவரது காதல் வாழ்க! அருமை!

    பதிலளிநீக்கு
  13. யப்பா என்ன ஒரு செய்திப்பா இது ...
    எப்படித் தேடித் பிடிக்கிறீங்க
    நல்ல பணி தொடரட்டும் ..

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  15. படித்து முடித்தவுடன் ஒரு சொட்டுக் கண்ணீர் அந்தக் காதலர்களின் காலடியில் விழுந்தது. அமர காதல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..இந்திராணி-கோவிந்தராஜ் காதல் உண்மையில் அமரத்துவம் பெற்றதுதான். கட்டியவீட்டில் குடியேறுமுன் பிரிந்த காதல் மனைவியை மறக்காமல் அவரது சிலையோடு குடிபோன காதலர் கோவிந்தராஜ் உண்மையில் மறக்கமுடியாத காதலர்தான்... இருவரும் நெஞ்சத்தால் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்..காதலர் தினத்தின் அற்புதப் பதிவுக்கு இதயம் கனத்த நன்றியுடன் த.ம.12. உங்கள் எழுத்தின் வன்மைக்குள் இத்தனை மென்மையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  16. காதலர் தினத்தில் நிஜ காதல்கதை..நல் பொருத்தம்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை