Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

டிரைவர்கள் நாட்டின் தொழில் முன்னேற்ற சொத்துகள் - 1


சாலை விபத்துகள் இல்லாத நாளே இல்லை என்ற இடத்தை நோக்கி தமிழகம் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் நான்கு வழிச்சாலைகள் வந்த பிறகு இதன் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ளது. அதனால் நான்கு வழிச்சாலைகளை மக்கள் மரணச்சாலை என்று அழைக்கத்தொடங்கி விட்டார்கள். 


உண்மையில் நான்கு வழிச்சாலைகள் மரண சாலைகள் தானா..?

இல்லை என்பதுதான் நிஜம். இது வந்த பிறகுதான் வாகனங்களின் வேகம் இருமடங்காக கூடியிருக்கிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்ல 4.30 மணி நேரம் மிச்சமாகியிருக்கிறது. பயண நேரம் குறைந்ததால் மக்களாகிய பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சி, அதைவிட தரமான சாலைகள் கிடைத்ததில் டிரைவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்தான். 

இந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் நெடுநாட்களுக்கு நீடிக்கவில்லை. நான்கு வழிச்சாலையில் நாளுக்கு நாள் நடக்கும் அதிகமான விபத்துகளால் எல்லோரும் நான்கு வழிச்சாலைகளை மரண பயத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். வேகமான பயணத்துக்காக அமைக்கப்பட்ட சாலைகளில் நிறைய ஸ்பீட் பிரேக்கர்களை அமைக்க வேண்டும். வாகனங்களின் அசுர வேகத்தை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அரசுக்கு ஓயாத கோரிக்கை வைக்கத் தொடங்கினர்.


அப்படியென்றால் சாலை அமைக்கப்பட்ட விதம் சரியில்லையா..? அல்லது நமது டிரைவர்கள் சரியில்லையா..? என்ற கேள்வியோடு நான்கு வழிச்சாலைக்கு வடிவம் கொடுத்த 'இந்தியன் ரோடு காங்கிரஸ்' என்ற அரசு அமைப்பில் ஆலோசகராக இருக்கும் பொறியாளர் எஸ்.ராஜசேகரை சந்தித்தேன். நிறைய பேசினார். அதிலிருந்து சில இங்கே..

"சாலைகள் அமைப்பதற்கு ஏராளமான தொழில்நுட்ப வரையறைகள் உண்டு. அதிலிருந்து இம்மியளவும் பிசகாமல் நான்கு வழிச்சாலைகளை அமைத்திருக்கிறோம். இது சர்வதேச தரத்திற்கு கொஞ்சமும் குறையாதது. இதில் நீங்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தாலும் வாகனத்தில் எந்த அதிர்வு இருக்காது. அந்தளவிற்கு மிகத் துல்லியமான தொழில்நுட்பத்தில் நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக தரமான சாலை என்பது கார் போன்ற உயரம் குறைவான வாகனங்களை ஓட்டும் டிரைவர்களின் பார்வைக்கு எதிரே இருக்கும் சாலை 2 கி.மீ. தூரம் வரை தெளிவாக தெரிய வேண்டும். அதுதான் நல்ல தொழிநுட்பத்துக்கான அடையாளம். நமது நான்கு வழிச்சாலையில் சில இடங்களில் 4 கி.மீ. தூரம் வரை சாதாரணப் பார்வைக்கே தெளிவாகத் தெரியும். 


வளைவுகள் குறைவாகவும், சிறிய கிராமங்கள் குறுக்கிடும்போது சாலையை உயரமாக்கி கிராமவாசிகள் சாலையைக் கடக்க கீழே ஒரு பாதையையும் அமைத்துள்ளோம். இந்த சாலைகளைப் பிரிக்கும் மீடியன்கள் கூட அரை அடி உயரத்தில்தான் இருக்கும். இப்படி உயரம் குறைவாக அமைப்பதற்கு காரணம், ஏதாவது விபத்து ஏற்பட்டால் வாகனங்களை மாற்றி இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குறைவான உயரம் இருந்தால்தான் லேசாக இடித்து விட்டு வாகனங்களை திருப்பி விடமுடியும். 

ஸ்பீட் பிரேக்கர் 

விபத்தைக் குறைக்க நான்கு வழிச்சாலைகளில் ஸ்பீட் பிரேக்கர் அமைக்க வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். ஓரிடத்தில் ஸ்பீட் பிரேக்கர் அமைக்க பல விதிமுறைகள் இருக்கின்றன. மற்ற சாலைகளைப் போல் நான்கு வழிச்சாலைகளில் ஸ்பீட் பிரேக்கர் அமைக்க முடியாது. அப்படி அமைத்தால் அதுவே விபத்துகளுக்கும் காரணமாகிவிடும். அதுமட்டுமல்லாமல் வருங்காலத்தில் 24 சக்கரம், 32 சக்கரம், 48 சக்கரம் கொண்ட பிரமாண்டமான வாகனங்கள் எல்லாம் வரவிருக்கின்றன. அப்படிப்பட்ட வாகனங்களை கொண்டே இத்தகைய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மிக தாழ்வாக இருக்கும். சாலைக்கும் வாகனத்துக்கும் இடையே உள்ள உயரம் ஒரு அடிக்கும் குறைவாக இருக்கும். 

இப்படிப்பட்ட வாகனங்கள் ஸ்பீட் பிரேக்கர் இருந்தால் தட்டி நின்றுவிடும். மேலும், கேஸ், ஆசிட் போன்றவற்றை ஏற்றிவரும் வாகனங்கள் ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கினால் கசிவு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் நான்கு வழிச்சாலையில் ஸ்பீட் பிரேக்கர்கள் அமைக்கப்படுவதில்லை. இந்த சாலையின் பிரதான நோக்கமே எல்லாவித வாகனங்களையும் இயக்க வேண்டும் என்பதுதான். 

டிரைவர்கள்தான் காரணம் 

நான்கு வழிச்சாலைகளில் அதிகமாக நடக்கும் விபத்துக்கு காரணம் சாலைகள் அல்ல. வாகனங்களை இயக்கும் டிரைவர்கள்தான். நம்மைவிட பல மடங்கு அதிகமான வாகனங்களைக் கொண்டிருக்கும் மேலைநாடுகளில் இவ்வளவு விபத்துகள் நடைபெறுவதில்லை. உலக நாடுகள் அனைத்திலும் சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் நிகழும் பட்டியலில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. 

அதற்கு காரணம் நமது டிரைவர்களுக்கு சரியான சாலை விதிமுறைகளே தெரிவதில்லை என்பதுதான். முதலில் சாலையில் இருக்கும் வெள்ளை கோடு எதற்கு என்றே டிரைவர்களுக்கு தெரிவதில்லை. நீளமாக சாலைகளில் முடிவில்லாமல் நீண்ட தூரம் செல்லும் இந்த வெள்ளைக் கோட்டை வாகனங்கள் கடக்கக்கூடாது. அதாவது வடிவேல் பாணியில் சொன்னால், இந்தக் கோட்டுக்கு அந்தப் பக்கம் நமது வாகனமும் செல்லக்கூடாது. கோட்டுக்கு அந்தப் பக்கம் செல்லும் வாகனம் கோட்டை தாண்டி இந்தப் பக்கமும் வரக்கூடாது. அவரவர் பாதையில் அந்தந்த வாகனங்கள் நேராக போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். 

வெள்ளைக் கோடு
நான்கு வழிச்சாலைகளின் இடதுப் பக்கம் 5 அடி இடைவெளி விட்டு ஒரு வெள்ளைக் கோடு போடப்பட்டிருக்கும். இந்த சிறிய சாலை யாருக்கென்றால் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், மாட்டுவண்டிகள், பாதசாரிகள் ஆகியோர்களுக்கானது. இவர்கள் அனைவரும் இந்த 5 அடி சாலையில்தான் பயணம் செய்ய வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் வெள்ளைக் கோட்டை தாண்டக்கூடாது. ஒருவேளை அப்படி கடந்து ஏதாவது பெரிய வாகனங்கள் மோதி உயிரிழப்பு ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனத்தில் விபத்து காப்பீடு, கூடுதல் விபத்து காப்பீடு சலுகை பணம் கிடைக்காது. 

சாலை விதிமுறையை கடைப்பிடிக்காமல் இவரே மரணத்தை தேடிக்கொண்டார் என்ற முடிவுக்கு காப்பீடு நிறுவனங்கள் வந்துவிடும். காப்பீடு இருந்தும் இறந்தவர் குடும்பத்துக்கு பலன் கிடைக்காது. அதனால் இருசக்கர வாகனங்கள் இந்த வெள்ளைக் கோட்டைக் கடந்து வலது பக்கம் போகக்கூடாது. இந்த ஒரு சாலைவிதியை மட்டும் எல்லா இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்பற்றி இருந்தால் 80% இருசக்கர வாகன விபத்து உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்.

அதேபோல் வலது பக்கம் சென்று கொண்டிருக்கும் நான்கு சக்கர வாகனங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் வாகனத்திற்கு இடது பக்கம் செல்லும் வெள்ளைக் கோட்டைக் கடந்து இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதைக்கு போகக்கூடாது.  ஆனால் நடைமுறையில் நான்கு சக்கர வாகனங்களைவிட இருசக்கர வாகனங்கள்தான் விதியை மீறி நான்கு சக்கர வாகனங்களுக்கான பாதையில் பயணிக்கின்றன. 


சாலை விதிகள் இன்னும் இருக்கின்றன. அதனை அடுத்த பதிவில் பார்ப்போம். 

                                                                                                                            - தொடரும் 



 

19 கருத்துகள்

  1. வாகன ஒட்டி லைசென்ஸ் வாங்குவதை முறைப் படுத்தினாலே பல விபத்துகள் குறையும். மற்றொன்று, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் மிக அதிகமாக இருக்க வேண்டும். அதே போல, கவனக் குறைவின் காரணம் நடக்கும் விபத்துக்கு / விதி மீறல்களுக்கு அபராதம் மிக அதிகமாக இருக்கவேண்டும். இவற்றை செய்தாலே விபத்துக்கள் குறைந்து விடும்.
    என் நண்பர் ஒருவரின் குடும்பத்தினர், அவர் உட்பட, விபத்தில் மரணமடைந்ததற்கு காரணம், வாகனம் சென்ற வழியில் நேர் எதிரில் வாகனம் வந்தது தான், இது போன்ற நான்கு வழிப் பாதையில். மற்றுமொரு பெரிய காரணம் சாலையின் ஓரத்தில் நிறுத்தப் படும் வாகனங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறும் அனைத்துமே சரியானதுதான். அதேவேளையில் போக்குவரத்து விதிகள் பற்றி பள்ளியிலேயே குழந்தைகளுக்கு ஒரு பாடமாக சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் விதிமீறல்கள் இன்னும் குறையும்.
      வருகைக்கு நன்றி !

      நீக்கு
  2. விதி மீறல்களுக்கு அபராதம் அதிகமாக இருக்க வேண்டும் - இதை நானும் வழிமொழிகிறேன். இங்கே அனைவருமே விதிகளை மீறுவதில் தான் அதிகம் விருப்பம் கொண்டிருக்கின்றனர். 80 கிமீ வேகத்தில் போக வேண்டுமெனில் 120-ல் போக விரும்புகிறார்கள்......

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு எல்லாமே மீறல்கள்தான்.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  3. விபத்துக்கு ,குடித்து விட்டு ஓட்டுவதும் முக்கிய காரணம் !

    பதிலளிநீக்கு
  4. இந்த நான்கு லேன், மூன்று லேன்கள் பற்றி போக்குவரத்து போலீசார் ஒரு விளக்கப் படம் தயாரித்து வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்தை தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பலாம்.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொபைலிலிருந்து வாக்களிக்க முடியாததால் அப்போது பின்னூட்டம் மட்டும் இட்டேன். இப்போது தம வாக்களித்து விட்டேன்.

      நீக்கு
    2. நல்ல யோசனை. செய்யவேண்டும்.

      நீக்கு
    3. வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!

      நீக்கு
  5. டாஸ்மாக்கை மூடினாலே பாதி விபத்து குறைந்து விடும் நண்பரே
    த.ம. 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல்வரிடம் நீங்கள்தான் சொல்லவேண்டும்.. கில்லர்ஜி!

      நீக்கு
  6. நல்ல ஒரு பதிவு. டிரைவர்களே தான் தவறுக்கு முக்கிய காரணம். சட்டதிட்டங்களை மதிக்காமல், இந்தனை கிலோ மீற்றர் வேகத்தில் இவ்வளவு நேரத்தில் வாகனம் ஓட்டி முடித்தேன் என்று சொல்வதை ஏதோ ஒரு சாதனையாக நம்பும்,தாங்களே பெருமையாக சொல்லி கொள்ளும் அற்பதனமான மனநிலை இந்திய டிரைவர்கள் பலரிடம் உண்டு.
    இவர்களால் எவ்வளவோ அப்பாவிகள், நல்லவர்கள் பாதிப்படைகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. டாஸ்மாக் கொடுக்கும் நிகழ்வுகளே அதிகம்...
    அதை இழுத்து மூடினாலே போதும்... டிரைவர்களின் தவறுகள் குறையும்.

    பதிலளிநீக்கு
  8. இந்த தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை