வியாழன், ஜூலை 14, 2016

நடையின் காதலன்..!

ன்னுடைய பயணம் தொடருக்காக தமிழகம் முழுவதும் பயணித்துவிடுவது என்ற முடிவோடு கன்னியாகுமரி நோக்கிப் பயணித்தேன். கேரள எல்லையிலிருந்து எனது பயணத்தைத் தொடங்குவதாக திட்டம். அதற்கு தோதான இடமாக மார்த்தாண்டம் இருந்தது. கேரள எல்லையை ஒட்டியுள்ள இடங்களுக்கு பஸ்ஸில் சென்று வர மார்த்தாண்டம்தான் வசதியான சந்திப்பு. இங்கிருந்து பக்கத்து ஊர்களுக்கு சுலபமாகப் போய் வரலாம். 

இருள் முழுதுமாக அகலாத அதிகாலைப் பொழுதில் மார்த்தாண்டத்தை அடைந்தேன். குளிர் உடலில் ஊசியாக குத்தியது. டீக்கடைகள் மாத்திரம் வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. குளிருக்கு இதமாக சூடாக டீயைக் குடித்துவிட்டு, தங்கும் இடம் தேடினேன். ரூபாய் 400-ல் தொடங்கி 1,500 ரூபாய் வரை வகை வகையான தங்கும் இடங்கள் இருந்தன. அதில் ஒன்றை தெரிவு செய்து தங்கினேன். 

காலை 8 மணிக்கெல்லாம் புறப்பட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தால் 'சோ..!'வென பலத்த மழை. மழைக்கு காரணம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் 24 மணி நேரம் நீடிக்கும் என்றும் பயமுறுத்தியது. 

பயணம் நாம் நினைத்தபடி அமைந்துவிடுவதில்லை. இடையில் எது வேண்டுமானாலும் குறுக்கிடலாம்.. எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும், வெளியூரில் வந்து, வெளியே போக முடியாமல் அறைக்குள் தனிமையில் அடைந்து கிடக்கும் வெறுமை, மிகக் கொடுமையானது. 

மதியத்துக்குப் பின் மழை தேவதை கொஞ்சம் கருணைக் காட்டினாள். மழை பலமானத்திலிருந்து தூறலுக்கு மாறியிருந்தது. இதுதான் சந்தர்ப்பம், இதை நழுவவிட்டால் அறைக்குள்ளே முடங்கிவிட வேண்டியதுதான் என்று நினைத்து.. தூறலுக்கு ஊடே நடந்து, நனைந்து களியக்காவிளை செல்லும் பஸ்ஸில் ஏறினேன். பஸ்ஸுக்குள் வேறுவிதத்தில் மழைப் பொழிந்து கொண்டிருந்தது. அதன் வானமாக பஸ்ஸின் கூரை இருந்தது. அழுக்கோடு ஒழுகும் அந்த நீரில் நனையாமல் பயணிகள் அழகாக ஒதுங்கிக் கொண்டதில் அவர்களின் அனுபவம் தெரிந்தது. 

பெருத்த சத்தத்துடனும், கருநிற புகையைக் கக்கிக் கொண்டும் கிளம்பியது அந்த ஹைதர் காலத்து பஸ். ஒவ்வொரு நிறுத்தத்திலும் மழையில் நனைந்த மக்கள் பஸ்ஸுக்குள் ஏறிக் கொண்டிருந்தார்கள். காளியக்காவிளைக்கு இன்னும் கொஞ்ச தூரம்தான் இருந்தது. அதற்குள் பஸ் நின்றுவிட்டது. 

வெளியில் எட்டிப்பார்த்தால்.. அடாது மழையிலும் விடாது சாலை மறியல் நடந்து கொண்டிருந்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்காக அந்த மறியல். தமிழர்கள் எதையும் சுலபமாக ஜீரணித்துக் கொள்கிறார்கள். விலை உயர்வையும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால், கேரளத்தவர்கள் அப்படியில்லை, வாழ்வைப் பாதிக்கும் எந்தவொரு விஷயத்துக்கும் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். அன்றும் அதுதான் நடந்தது. 

அந்த இடம் கேரளா இல்லைதான். ஆனாலும் குமரி மாவட்டத்தில் கேரளாவின் சாயல் நிறையவே உண்டு. அதில் போராட்டங்களும் அடங்கும். கேரளாவின் போராட்டம் களியக்காவிளை வரை பரவியிருந்தது. 'இதற்கு மேல் பஸ் போகாது..!' என்றார் கண்டக்டர். 

வெளியில் தூறல் விட்டபாடில்லை. பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்தேன். போராட்டக்காரர்களைக் கடந்து ஒரு ஆட்டோ பிடித்தேன். குளப்புறத்தில் உள்ள முண்டப்பழவிளை போக வேண்டும் என்றேன். ஆட்டோ கிளம்பியது. 


அங்கு ஒருவர் இருக்கிறார். 'நடத்த' ராஜேந்திரன் என்பது அவர் பெயர். குழக்கல்விளையில் இருக்கும் அவரது வீட்டுக்கும் கேரள எல்லைக்கும் 500 அடித்தான் வித்தியாசம். 

ஆதிமனிதனின் முதல் பயணம் நடைதான். அவனது பயணம் உணவைத்தேடியே இருந்தது. இன்றைக்கு நடப்பதற்கு வேலையில்லை. எல்லோரிடமும் அவரவர் தகுதிக்கேற்ப ஏதாவது ஒரு வாகனம் இருக்கிறது. அதனால் நடப்பது இன்று ஓர் அரிதான நிகழ்வு! பலரும் 'ஒபிஸிட்டி'க்கு பயந்துதான் காலையில் வியர்க்க விறுவிறுக்க நடக்கிறார்கள். 

இவர்கள் மத்தியில் ராஜேந்திரன் வித்தியாசமானவர். 22 வயதில் இனி எந்த வாகனத்திலும் ஏறுவதில்லை என்று விளையாட்டாக முடிவெடுத்தார். 34 வருடங்கள் ஓடிவிட்டன. இன்று அவரின் வயது 56. இதுவரை அவர் எந்த வாகனத்திலும் ஏறவில்லை. நடந்து கொண்டேதான் இருக்கிறார். 

அவரொரு கூலித் தொழிலாளி; எழுதப் படிக்கத் தெரியாதவர்; மெலிந்த உயரமான மனிதர்; கறுத்த தேகம்; குழிவிழுந்த கண்கள்; ஒடுங்கிப்போன கன்னங்கள்; குத்திட்டுப் பார்க்கும் பார்வை, இவையெல்லாம் அவரை வேறு மனிதராக மற்றவர்களுக்கு காட்டியது. 

பஸ்ஸுக்காக காத்திருக்கும்போது கூட மற்றவர்கள் இவரை விட்டு எட்டியே நின்றனர். பஸ் செல்லும் இடத்தைக் கேட்டால் கூட யாரும் சொல்வதில்லை. விசித்திரமான ஜந்துவாகத்தான் இவரை பார்த்தார்கள். ஒதுக்கினார்கள். இந்த ஒதுக்கி வைத்தல்தான் இவரை இன்று வரை நடக்க வைத்திருக்கிறது. 

அவமானத்தோடு பஸ்ஸுக்காக காத்திருக்கும் நேரத்தில் நடந்து விடலாம் என்று நடக்கத் தொடங்கியவர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறார். இவர் நடையின் வேகம் அசாத்தியமானது. ஒரு மணி நேரத்தில் 15 கிலோ மீட்டர் நடந்து விடுகிறார். ஒரு நாளைக்கு 80 கிலோமீட்டர் தூரத்தை சர்வ சாதாரணமாக நடந்து கடக்கிறார்.

காளியக்காவிளையில் இருந்து 755 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு 8 நாட்களில் நடந்து சேர்ந்திருக்கிறார். அடுத்து 60 நாட்களில் நடந்தே டெல்லிக்குப் போகவேண்டும் என்ற திட்டத்தையும் கைவசம் வைத்திருக்கிறார். 


"நடப்பது என்னை உற்சாகப்படுத்துகிறது. ஒரு நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடுகிறேன். சில நேரங்களில் இருவேளை. அதுவும் சைவம்தான். நெடுந்தூரம் நடக்கும் போது மட்டும் 20-க்கும் மேற்பட்ட டீ. நான்கு சர்பத் சாப்பிடுவேன். எனது வருமானத்தில் பெரும்பகுதி செருப்புக்குத்தான் செலவாகிறது. சாதாரண செருப்பு என்றால் மாதத்துக்கு 6 ஜோடியும், விலையுயர்ந்த கேன்வாஸ் என்றால் மூன்று ஜோடியும் தேவைப்படுகிறது.  

ஆரம்பத்தில் என்னை பைத்தியம் என்றார்கள். போதையில் நடக்கிறான் என்பார்கள். எனது தோற்றம் என்னை மற்றவர்களிடம் இருந்து விலக வைத்தது. கடையில் 'சாய்' கேட்டால் கூட விரட்டிவிடுவார்கள். காசு இருக்கிறதா..? என்று பாக்கெட்டில் கைவிட்டு பார்ப்பார்கள். டி.வி., பேப்பர்களில் என்னைப் பற்றி வந்த பிறகு நிலைமையே வேறு. 

இப்போது எல்லோருக்கும் என்னைத் தெரிகிறது. நல்ல மரியாதை தருகிறார்கள். பணம் உள்ளதா என்று சோதித்து சாப்பாடு போட்டக் கடைக்காரர்கள், இன்று சாப்பிட்ட சாப்பாட்டுக்கு பணம் பெற மறுக்கிறார்கள். அன்போடு உபசரிக்கிறார்கள். ஆரம்பத்தில் அவமானத்தை தந்த நடை இன்று மரியாதையை தேடி தந்திருக்கிறது. இந்தப் புகழ் நடந்ததால் மட்டுமே கிடைத்தது. நடப்பது என் மரணம் வரை தொடரும்." என்றார் இந்த நடையின் காதலன். 

பெருமையைப் பெற்றுத் தந்த அதே நடை அவருக்கு இன்னொரு சோகத்தையும் தந்துள்ளது. ராஜேந்திரனின் மனைவி அவருடன் இல்லை. பிரிந்து போய்விட்டார். 11 வயது மகன் கூட அவருடன் இல்லை. 'எப்போதும் நடையைக் கட்டி அழும் மனுஷனோடு வாழ முடியாது' என்று வேறிடம்  தேடிக்கொண்டார்.

இப்போது தனிமரமாகத்தான் வாழ்ந்து வருகிறார். இதெல்லாம் நடையின் மீது அவர் கொண்ட காதலால் இழந்தது. 'வாழ்வில் எதை இழந்தாலும் நடையை மட்டும் நான் இழக்கவில்லை. நடந்து கொண்டிருக்கும்போதே என்னுயிர் போக வேண்டும். இதுதான் என் அடிமனத்தின் ஆசை.' என்று  நெகிழ்கிறார் ராஜேந்திரன். 

அவரின் நடை இன்னும் பல இலக்குகளை எட்டவேண்டும் என்று வாழ்த்தி அவரிடம் இருந்து விடைபெற்றேன். 
20 கருத்துகள்:

 1. நடை பயணத்தின் பயனை உணர்ந்தவன் நான். காலை அலுவலகத்திற்குச் செல்வதற்காக பேருந்து நிலையம் செல்வது, திரும்பிய பின் வருவது என்ற நிலையில் நடையே. வீட்டிலிருந்து பேருந்து நிலையம் செல்ல 15 நிமிடம். நடைபயணம் மனதிற்கு இறுக்கமில்லாத உணர்வைத் தருகிறது. வெளியூர் சென்றால் பெரும்பாலும் நடைபயணத்தையே மேற்கொள்கிறேன். அது பலருடன் பழக உதவுகிறது.

  பதிலளிநீக்கு
 2. செந்தில்குமார்,

  திரு. ராஜேந்திரனுக்கு இனி "நடப்பதெல்லாம்" நல்லதாகவே "நடக்கட்டும்".

  உங்கள் பயணமும் இனிதாக தொடரட்டும்.

  வாழ்த்துக்கள்.

  கோ

  பதிலளிநீக்கு
 3. இப்படியும் ஒரு அதிசய மனிதரா என்று நினைத்தேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி சகோ!

   நீக்கு
 4. இப்படியும் ஒரு அதிசய மனிதரா என்று நினைத்தேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி சகோ!

   நீக்கு
 5. அந்த மனிதருக்கு வாழ்த்துக்கள்...
  அருமையானதொரு பகிர்வு சார்...

  பதிலளிநீக்கு
 6. நடைப்பயணம் - நடந்தே தில்லி வரை வரப் போகிறாரா? எத்தனை மன உரம் வேண்டும் இதற்கு.....

  அவருக்கு எனது வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், நடந்தே வருகிறார். முடிந்தால் டெல்லியில் அவரை சந்தியுங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 7. நடைப்பயணம் என்பது மிக மிக நல்ல அனுபவம் தரும் ஒன்றுதான் உடலில் சக்தியும் மனதில் உறுதியும் இருந்தால் நடைப்பயணம் மிக மிக நல்லதே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! தலைநகர் வரைக்குமா....செம தில்லுதான் அந்த மனிதருக்கு...வாழ்த்துகள் அவருக்கு.

   நீக்கு
  2. உடலில் உறுதியிருந்தால் நடக்கலாம்தான். ஆனால், 34 வருடங்களாக எந்த வாகனத்திலும் ஏறாமல் எல்லா இடத்துக்கும் நடந்தே போவதற்கு தனி 'தில்' வேண்டும்.

   நீக்கு
  3. ஆமாம் தலைநகருக்குத்தான். ஸ்பான்சருக்காக காத்திருக்கிறார். கீதா அவர்கள் நிதியுதவி செய்யலாம்..

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...