Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

செம்மரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?


ரண்டு நாளுக்கு ஒருமுறை செம்மரக் கடத்தலில் தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களை ஆந்திர அரசு கைது செய்கிறது. உடனே இங்கு கண்டனக்குரல்கள் எழுகின்றன. இது ஒரு தொடர்கதையாகவே தொடர்கிறது. ஏன் இப்படி உயிரைக்கொடுத்து மரத்தை வெட்டுகிறார்கள், என்று பார்த்தால் இதன் பின் மிகப் பெரும் பணத்தாசை அரசியல் ஒளிந்திருக்கிறது. முன்பு மணல் கடத்தல், கனிமவளங்கள் கடத்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தவர்களுக்கு இப்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பேராசை வந்துவிட்டது. அதற்கு வசமாக வந்து மாட்டிக்கொண்டதுதான் செம்மரம். 


செம்மரங்கள் பொதுவாக வறண்ட காடுகளில் விளையும். இதற்கு தோதான இடமாக கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஆந்திர மாநிலம் திருப்பதி வனச்சரகம் இருக்கிறது. இந்த மரத்திற்கு குறைவான தண்ணீர் இருந்தால் போதும். மரத்தை வெட்டினாலும் மீண்டும் துளிர்த்துவிடும். மரம் தன்னைத்தானே வாழவைத்துக் கொள்வதற்கு இத்தனை வசதிகள் இருந்தும் இது அழிந்து வரும் அரிய தாவர இனங்களின் பட்டியலில் இருக்கிறது. அதற்கு காரணம் வழக்கம்போல் மனிதன்தான். அதனால்தான் இந்த மரத்தின் மீது அரசு அதீத கவனத்தை செலுத்துகிறது.  


செம்மரத்தின் பயன்பாடு ஏராளம். கப்பல் கட்டுதல், தேர் சிற்பங்கள் செய்தல், தபேலா போன்ற இசைக்கருவிகள் தயாரித்தல், சாயம் தயாரித்தல், மருந்தாகப் பயன்படுத்துதல், வழக்கமான மரச்சாமான்கள் தயாரித்தல் என செம்மரங்களினால் பலன் அதிகம். இதுபோக செம்மரம் அணுக்கதிர் வீச்சை வேறு தடுக்குமாம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் செம்மரத்திலான பொருட்களை வைத்திருப்பது கவுரவத்தின் அடையாளம். 

இதனால் உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இதன் தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒரு டன் ரூ.20 லட்சம் முதல் 40 லட்சம் வரை விலைபோகிறது. இதுவே வெளிநாடுகள் என்றால் ரூ.60 லட்சத்தில் தொடங்கி 1.20 கோடி வரை விலை கிடைக்கும். செம்மரங்களை கடத்த இந்த பணத்தாசை போதாதா? ஒருகாலத்தில் வயிற்றுப்பிழைப்புக்காக மரத்தை வெட்டியவர்கள் இன்று ஆடம்பர வாழ்க்கைக்காக வெட்டுகிறார்கள். பொறியியல் படித்த பட்டதாரி இளைஞர்கள் கூட விரைவில் பெரும் பணம் சம்பாதிக்க காரில் செம்மரக்கட்டைகளை கடத்துகிறார்கள்.


இதுமட்டுமல்ல, தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குட்பட்ட மலைகளிலும் வாழும் மக்கள் காடு சார்ந்த தொழில்களில் அனுபவம் வாய்ந்தவர்கள். தற்போது அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், ஆந்திராவில் செம்மரம் வெட்டித் தந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று இடைத்தரகர்களின் ஆசை வார்த்தை இவர்களை உயிரையும் விட துணியவைக்கிறது.

இப்படி செம்மரம் வெட்டித் தருபவர்களுக்கு ஒரு நாளைக்கு 7000 ரூபாய் வரை கூலி கொடுக்கப்படுகிறது. அதனால்தான் ஆபத்து எனத் தெரிந்தும், இந்த மக்கள் குறுகிய காலத்தில்  நிறைய வருமானம் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் செம்மரம் வெட்டுவதற்கு செல்கிறார்கள். ஒருவர் ஒரு நாளில் இவ்வளவு சம்பாதித்தார் என்று தெரிந்ததும், பக்கத்தில் இருப்பவர்களும் இதே வேலைக்கு செல்ல துடிக்கிறார்கள். இதனால் செம்மரம் வெட்டுவதற்கு நிறைய தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த துடிப்பை காசாக்க பெரும் பண முதலைகள் பணத்தோடு இவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். 


உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக தெரிந்தே பெரும் பணம் கிடைக்கிறது என்பதற்காகவே இந்த மரம் வெட்டும் தொழிலில் இங்குள்ள தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். இப்படி தொடர்ந்து ஈடுபடுவதே ஆந்திர அரசுக்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. செம்மரக் கடத்தல் ஆந்திர அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு என்பது ஒரு பக்கம், இதில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள் என்ற கோபம் மறுபக்கம் என்ற இந்த இரண்டும் சேர்ந்துதான் ஆந்திர அரசை வெறியாட்டம் போட வைத்திருக்கிறது. 

வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்டதுதான் செம்மரங்கள். 
மனிதர்கள் வெட்டப்பட்டால் மீண்டும் துளிர்ப்பதில்லையே..!





38 கருத்துகள்

  1. வேதனை நண்பரே
    வெட்ட வெட்டமரம் துளிர்க்கலாம்
    இறந்து போன குடும்பங்கள் தழைக்குமா?
    பணம் கிடைக்கிறதே என்னும் பேராசை
    பெரும் அழிவில் அல்லவா கொண்டுபோய் விட்டுவிடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசை மனிதனை அந்தப்பாடு படுத்துகிறது.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. இதற்கு முடிவுதான் என்ன ? அரசு தலையிட்டால் தீரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதனின் பேராசையின் முடிவுதான் இதற்கும் முடிவு.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. ஆசை ஏழைக்குத்தான் துன்பத்தை தருகிறது.. பணக்காரனுக்கு தருவதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டாயமாக பணம் இருப்பவர்கள் எல்லா விஷயங்களிலும் தப்பி விடுகிறார்கள். மாட்டிக்கொள்வது அப்பாவிகள் மட்டுமே!
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  4. மனிதர்கள் வெட்டப்பட்டால்.... மிகவும் வேதனையாக இருந்தது, படிக்கும்போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்ய பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது!
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  5. வேதனையான விஷயம்
    அறியாத தகவல்கள் சில
    தங்கள்பதிவின் மூலம் அறிந்து கொள்ளமுடிந்தது
    பகிர்வுக்கும் த்டரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. வேதனைதான்...
    எவனோ ஒருவனின் லாபத்துக்காக சொற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு செத்து மடிவது வேதனை...

    பதிலளிநீக்கு
  7. தன்னுடைய பண ஆசைக்கு மனிதனை பழியிட மனிதே நினைக்கிறான்...மரம் துளிர்க்கும் ஆனால் மனிதன்?...வாஸ்தவமானது.

    இம்மரம் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  8. தன்னுடைய பண ஆசைக்கு மனிதனை பழியிட மனிதே நினைக்கிறான்...மரம் துளிர்க்கும் ஆனால் மனிதன்?...வாஸ்தவமானது.

    இம்மரம் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  9. தெரியாத பல செய்திகள் தெரிந்து கொண்டேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  10. துளிர்க்க மாட்டோம் எனத் தெரிந்தும் ,பணத்தாசை மனிதனை விடவில்லையே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  11. if govt allow the common people to grow this tree, like teak wood, this problem may be addressed .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுது தேக்கு மரம் போல் இதனையும் மக்கள் வளர்க்க தொடங்கியிருக்கிறார்கள். 25 வருடங்கள் கழித்து செம்மரத்திற்காக மனிதர்கள் சாக மாட்டார்கள் என்று நம்பலாம்.
      கருத்துக்கு நன்றி!

      நீக்கு
  12. பணத்தாசை யாரை விட்டது. அதில் பலிகடா ஆவது ஏழைத் தமிழர்கள் என்பது வருத்தமான விஷயம்.

    பதிலளிநீக்கு
  13. மனிதனின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வராத வரை இது போன்ற வேதனையான நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். சந்தனக் கடத்தல் கர்நாடகத்துடன்...செம்மரக் கடத்தல் ஆந்திரத்துடன். கேரளத்தில் தேக்கு, ரப்பர், போன்ற வியாபார நோக்குள்ள மரங்களை அரசு அனுமதித்து அதனைத் தொழிலாகவே மக்கள் செய்து வருமானம் ஈட்ட அனுமதித்திருப்பது போலும் அதற்கு அரசே மக்களுக்கு வளர்க்கவும் உதவுவது போன்று செம்மரம், சந்தனமரம் எல்லாம் உரிமம் வழங்கப்பட்டு அரசே மக்களுக்கு வளர்க்க ஆதரவு அளித்தால் இது போன்று நடக்காது அல்லவா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்போது செம்மரம் வளர்க்க அரசு அனுமதியளித்துள்ளது. இனி இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

      நீக்கு
  14. பிடிபட்டால் மரணம் என்று தெரிந்திருந்தும் இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஏழைத் தமிழர்களே! அரசு தலையிட்டு இவர்களுக்கு மாற்றுத் தொழிலை அறிமுகப்படுத்தித் தொடர்ச்சியான வருமானத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மண்ணில் வீழ்ந்து கிடக்கும் மனித உடல்களைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த தலைமுறையில் மாறலாம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  15. நான் விரும்பிப் படிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான உங்கள் தளத்தில் இப்படி ஒரு பதிவு! வேதனை அடைகிறேன் நண்பரே!

    பதிவின் தொடக்கம் முதல் இறுதி வரை, தமிழர்கள் தங்கள் பேராசையினால்தான் செம்மரம் வெட்டப் போகிறார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். ஆம், பேராசைதான்! என்ன பேராசை தெரியுமா? சில நாட்களுக்காவது மூன்று வேளை சோறு சாப்பிட வேண்டும் என்கிற பேராசை. தன் குழந்தைகளையும் மற்ற குழந்தைகளைப் போல நான்கு எழுத்துப் படிக்க வைத்து விட வேண்டும் என்கிற பேராசை. வெகு நாட்களாகப் பழைய புடைவைகளையே மாற்றி மாற்றிக் கட்டிக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு ஒரு புதுப் புடவையாவது வாங்கித் தர வேண்டும் எனும் பேராசை. இவையெல்லாம் பேராசை எனில், ஆம் அவர்களுக்கும் பேராசைதான்!

    இப்படி மரம் வெட்டப் போகிறவர்களில் பலருக்குத் தங்களைச் செம்மரம் வெட்டத்தான் அழைத்துப் போகிறார்கள் என்பது தெரியாது என உங்களுக்குத் தெரியுமா?...

    கட்டட வேலைக்கு என அழைத்துப் போய், அங்கு சென்று சேர்ந்த பின் செம்மரம் வெட்டச் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?...

    இப்படிப் போகிறவர்களில் போதிய வெளியுலக அறிவு இல்லாத அப்பாவிப் பழங்குடி மக்களும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?...

    அவ்வளவு ஏன், செம்மரம் கடத்தினார்கள் என்று சொல்லி முதன் முறை இருபது தமிழர்களைக் கொடூரமாகச் சிதைத்துக் கொன்றார்களே அந்த ஆந்திர இழிபிறவிகள், அப்பொழுது அவர்கள் கடத்தியதாகக் காட்டப்பட்ட செம்மரக் கட்டைகளில் அரசு முத்திரை இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?...

    உண்மைகள் இப்படியிருக்க, தமிழர்கள் ஏதோ பேராசையினால் செம்மரம் வெட்டுகிறார்கள் என்று பதிவு நெடுக எழுதியிருக்கிறீர்களே, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! இது நியாயமா?

    எல்லாம் போகட்டும்! தமிழர்கள் செம்மரம் வெட்டுகிறார்கள், அதனால் ஆந்திரர்கள் சுடுகிறார்கள் என்றே திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறீர்களே! ஓர் இடத்தில் கூட இதன் பின்னணியில் இருப்பவர்கள் - நீங்களே பண முதலைகள் எனக் குறிப்பிடுபவர்கள் - ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று மறந்தும் நீங்கள் குறிப்பிடவில்லையே! அது ஏன் எனத் தெரிந்து கொள்ளலாமா?

    அந்த ஆந்திரப் பண முதலைகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் அவ்வப்பொழுது இப்படி வெறும் அம்புகளான தமிழ்க் கூலிகளைச் சுட்டுக் கொன்று கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவது போல ஆந்திரக் காவல்துறை கணக்குக் காட்டுகிறது என்பதைப் பற்றி நீங்கள் ஒரு வார்த்தை கூட எழுதவில்லையே! அதற்குக் காரணம் என்ன எனத் தெரிந்து கொள்ளலாமா?

    ஒருவேளை இவையெல்லாம் நீங்கள் அறியாமல் செய்த பிழைகள் எனில், நான் கூறக்கூடியது ஒன்றுதான் நண்பரே! அரைகுறை உண்மை என்பது மிகத் தவறான புரிதலை சமூகத்தில் ஏற்படுத்தக்கூடியது. ஒருபொழுதும் அப்படிப்பட்ட பிழைகளுக்கு உங்கள் எழுத்தில் இடம் கொடுக்காதீர்கள்!

    மிகுந்த வேதனையுடன் வணக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,
      நீங்கள் சொல்லும் பல காரணங்கள் பத்திரிகையில் வந்தவைதான். அதைவிட உண்மை சுடுவதாக இருந்ததால்தான் இந்த கட்டுரையையே எழுதினேன். நீங்கள் பத்திரிகைகளில் வந்த தகவல்களின் அடிப்படையில் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். நான் களத்தில் இருப்பவர்கள் தரும் தகவலில் எழுதியுள்ளேன். தமிழர்களிடம் ஏராளமான நல்ல குணங்கள் இருந்தாலும் சுலபமாக விலை போகக்கூடிய கெட்ட குணமும் இருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது.
      விசாரித்த வகையில் பணத்திற்காகவே போகிறார்கள் என்பதே உண்மை. கட்டட வேலைக்கு என்று கூறி அழைத்து செல்பவர்கள் மிக மிக குறைவு. இதற்கு காரணம் வறுமைதான் என்பதை நாம் ஒப்புக்கொண்டாலும். வறுமைக்காக திருடினேன் என்பதை சட்டம் ஒத்துக்கொள்ளாதே. என்ன இதற்காக உயிரை எடுக்கும் அளவுக்கு ஆந்திர அரசு கடுமையாக நடந்து கொண்டது தான் கொடுமையின் உச்சக்கட்டம்.
      பணமுதலைகள் என்பது தெலுங்கர்கள், தமிழர்கள் இருவரையும் சேர்த்து சொன்னதுதான். நீங்கள் சொல்வதுபோல் வெறும் தெலுங்கர்கள் மட்டுமே அங்கு பணமுதலைகளாக இல்லை. தமிழர்களும் இருக்கிறார்கள்.
      பொதுவாக இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதுவதை நான் தவிர்ப்பதற்கு இந்த போக்கே காரணம். உண்மையை எழுதினால் கூட வேறுவிதமாக விமர்சனம் செய்துவிடுவார்கள். இங்கு ஆண்களை பற்றி எவ்வளவு மோசமாக வேண்டுமானாலும் எழுதலாம், பெண்களைப்பற்றி எழுதக்கூடாது. இந்தியர்களை பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். தமிழர்களை பற்றி எழுதக்கூடாது. இப்படியெல்லாம் சில எழுதப்படாத விதிகள் இருக்கின்றன. அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் உண்மை சார்ந்தே எழுதுகிறேன். நமது இனம் என்பதால் பூசி மொழுகுவதும் இல்லை. மிகைப்படுத்துவதும் இல்லை. தலையில் தூக்கி வைத்து ஆடுவதும் இல்லை. தவறை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதும் இல்லை.
      கடைசியாக அரைகுறையாக தெரிந்துகொண்டு எழுதவேண்டாம் என்கிறீர்கள். இனி இப்படிப்பட்ட இனம், மதம் சம்பந்தமான பதிவுகளை எழுத வேண்டாம் என்றே எனக்கு தோன்றுகிறது. இங்கு உண்மை எழுதுவதைவிட ஆதரவாக எழுதுவதே அனைவராலும் விரும்பப்படுகிறது.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
    2. நண்பரே, மன்னிக்க வேண்டும்!

      உங்கள் எழுத்தில் எனக்குத் தெரிந்த தவற்றைச் சுட்டிக் காட்ட விரும்பித்தான் எழுதினேன். குறிப்பிட்ட வகைப் பதிவுகளையே தவிர்க்கத் தூண்டும் அளவுக்கு நான் உங்களைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னியுங்கள்!

      தமிழர்கள் பற்றி நீங்கள் எழுதக்கூடாது என்று நான் ஓரிடத்தில் கூடச் சொல்லவில்லை. உண்மை என்னவென்றால், உங்களுடைய 500000 ஹிட்ஸ் பற்றிய பதிவில் முத்து நிலவன் ஐயா கூறியிருந்தது போல, நல்ல எழுத்தாளுமை உடைய நீங்கள் எப்பொழுதும் தகவல் கட்டுரைகளையே எழுதாமல் இனம், மதம், சாதி, நாட்டு நடப்பு போன்ற சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் எழுதி உங்கள் ஆற்றலை சமூகத்தின் இன்னல்களைக் களையவும் பயன்படுத்த வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்!

      செம்மரம் கடத்தும் பண முதலைகளில் தமிழர்களும் உண்டு என்பது எனக்குத் தெரியாது. சத்தியமாகத் தெரியாது! தெரியாமல் இருந்தது என் தவறுதான்! ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தமிழர், தெலுங்கர் என இரு வகையினரும் அதில் உண்டு என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம். அப்படிக் குறிப்பிடாதததால், அந்தப் பண முதலைகளில் தெலுங்கர்கள் மட்டுமே இருப்பது போல மற்றவர்கள் எழுதியதால் எப்படிப்பட்ட தவறான புரிதல் எனக்கு ஏற்பட்டதோ அதே போலத் தமிழர்கள் மட்டும்தான் இதைச் செய்கிறார்கள் என்கிற தோற்றம் இதைப் படிக்கும் மற்றவர்களுக்குத் தென்படும்படியாக இந்தக் கட்டுரை அமைந்து விட்டது என்பதை இன்னொரு முறை நீங்களே இதைப் படித்துப் பார்த்தால் ஒப்புக் கொள்வீர்கள்.

      அதே போல, நான் இதழ்களில் வெளிவந்த தகவல்களை வைத்துப் பேசுவதாகவும் நீங்கள் களத்தில் இருப்பவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு இதை எழுதியதாகவும் கூறியிருந்தீர்கள். அது தவறு. நான் இதழ்களில் வெளிவந்த செய்திகளை வைத்து அதைச் சொல்லவில்லை. பெண்மணி ஒருவர் குறிப்பிட்ட அந்த சிற்றூர்களுக்குச் சென்று, அங்கிருந்த நிலைமையைக் கண்ணால் பார்த்து வந்து இணையத்தில் எழுதியிருந்தார். அந்த இணைப்பைக் கூட அந்தக் கருத்துரையிலேயே கொடுக்க முயன்றேன். ஆனால், எந்த வலைத்தளத்தில் படித்தேன் என நினைவில்லை. தேடித் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. ஆனால், அந்தப் பெண்மணி எழுதியிருந்தவற்றில் பலவும் நினைவில் பதிந்திருந்தன. அவற்றின் அடிப்படையில்தான் கருத்தை எழுதியிருந்தேன்.

      தமிழர் என்பதற்காக யாரையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆட வேண்டும் என நான் விரும்பவில்லை. நாஞ்சில் நாடன் அவர்களின் ‘தீதும் நன்றும்’ நூலை நீங்கள் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். முதல் சில அத்தியாயங்களில் தமிழர்களின் கெட்ட குணங்களைப் பற்றிக் கிழி கிழியெனக் கிழித்திருப்பார். என் வீட்டுக்கு வந்து பாருங்கள்! ஆனந்த விகடனிலிருந்து கத்தை கத்தையாகப் பல தொடர்களைக் கிழித்து எடுத்துப் பொன் போலச் சேகரித்து வைத்திருக்கிறேன். அதில் அந்த நூலும் ஒன்று!

      நான் உட்பட எல்லாரும் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் கலவரம் பற்றி எரிவதாக எழுதிக் கொண்டிருந்தபொழுது அங்கிருந்த உண்மை நிலவரத்தை எழுதியவர் நீங்கள். தமிழர் என்பதற்காகத் தமிழர்களைத் தூண்டி விடும் வேலையை நீங்கள் செய்யவில்லை. அப்படிப்பட்ட உங்கள் எழுத்தைப் பார்த்துப் பெருமைப்பட்டவன் நான். அப்படிப்பட்டவன், தமிழர் என்பதற்காகத் தமிழர்கள் தவறு செய்தாலும் நீங்கள் சொல்லக்கூடாது என்பேனா? நீங்கள் எழுதியது தவறு என்று நினைத்துத்தான் சுட்டிக்காட்டினேன். மன்னித்துக் கொள்ளுங்கள்! அதற்காக இனம், மதம் போன்றவை தொடர்பான கட்டுரைகளையே இனி எழுதுவதில்லை எனச் சொல்லாதீர்கள். வேண்டுமானால், இனி நான் உங்கள் தளத்துக்கு வராமல் இருந்து விடுகிறேன். ஆனால், நீங்கள் அப்படிப்பட்ட படைப்புகளையும் தொடர்ந்து எழுதுங்கள்!

      நீக்கு
    3. நண்பரே,

      என்ன இது? நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளுமை நீங்கள். எந்த விஷயத்தையும் ஆழமாக எழுதக்கூடியவர். நீங்கள் மன்னிப்பு கேட்கலாமா..?

      எதையும் நுட்பமாக பார்க்கும் தங்களுக்கே எனது கட்டுரை தமிழர்களுக்கு எதிராக எழுதியதுபோல் தோன்றும்போது, சாமானியர்களின் நிலையை என்ன சொல்வேன்?

      இன்னொன்று பல வேலைகளின் நடுவே வலைப்பதிவில் எழுதுகிறேன். இங்கும் விவாதம், எதிர்வாதம் என்று மறுமொழி கூற சலிப்பு ஏற்படுகிறது. அந்த சலிப்பின் வெளிப்பாடே இனி அப்படி எழுதுவதில்லை என்ற நிலைப்பாடு. அதை மாற்றிக்கொள்கிறேன். நேரம் கிடைக்கும்போது சமகால நிகழ்வுகளையும் கையில் எடுத்துக்கொள்கிறேன்.

      இதற்காக தாங்கள் கோபித்துக்கொண்டு என் வலைத்தளம் வராமல் இருந்துவிடாதீர்கள். தங்களின் பின்னூட்டத்தை மிகவும் மதிப்பவன் நான். நமக்குள் கருத்து வேறுபாடு வேண்டுமானால் இருக்கலாம். அதற்காக நட்பு விட்டுப் போய்விடக்கூடாது.

      தொடர்ந்து எனது பதிவுக்கு வாருங்கள். நானும் வருவேன்..! கருத்திடுங்கள். உரிமையோடு சண்டையிடுங்கள். அப்போதுதான் மகிழ்ச்சி கொள்வேன்.

      தொடருங்கள்...!
      நானும் தொடருவேன்..!

      வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
    4. மிக்க மகிழ்ச்சி நண்பரே! இதைத் தட்டெழுதும்பொழுது என் முகத்தில் பூத்திருக்கும் மலர்ந்து விரிந்த புன்னகையை நீங்கள் காண முடியாதுதான்! என்ன செய்ய? தொழில்நுட்பம் இன்னும் அவ்வளவு முன்னேறவில்லையே!

      எதற்குமே சட்டென உணர்ச்சிவசப்பட்டு விடுபவன் நான். மேலும், என் உணர்ச்சியை எழுத்தில் அப்படியே கொண்டு வராவிட்டால் அதன் தீவிரத்தைப் படிப்பவர்கள் உணர முடியாமல் போய்விடுமே என்பதற்காக உள்ளது உள்ளபடி அப்படியே எழுதி விடுவேன். பின்னர், கடுமையாக எழுதி விட்டோமே என வருந்துவேன். இருந்தாலும், உங்களைப் போன்ற நண்பர்கள் என் குணத்தைப் புரிந்து கொண்டு உங்கள் அன்பினால் இப்படித் திக்குமுக்காடச் செய்து விடுகிறீர்கள்!

      மிக மிக மிக மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுங்கள்! கண்டிப்பாக வருவேன். என் நெஞ்சம் கனிந்த நன்றி!

      நீக்கு
    5. நானும் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் நண்பரே!

      நீக்கு
    6. அருமையான , நேர்மையான, முதிர்ந்த அனுபவ செழுமையான விமர்சனங்களும் விளக்கங்களும்.

      கடைசியில் சுபமாக நட்புடன் முடித்தமை சுகமாக இருக்கின்றது.

      இருவருக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும், நன்றியும்.

      (பேச்சி பேச்சாத்தான் இருக்கணும் ......)

      கோ

      நீக்கு
    7. மிக்க நன்றி கோயில் பிள்ளை அவர்களே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை