Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சம்பளம் இனிக்குமா சங்கடம் நிலைக்குமா..!


500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென அறிவிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு வாரங்கள் கழிந்துவிட்ட நிலையில், நாட்டின் பணப்புழக்க நிலையில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாக உணர முடிகிறது.


ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில், கிட்டத்தட்ட 5.2 லட்சம் கோடி பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக பொதுமக்களால் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே அதாவது ரூ.1.36 லட்சம் கோடி மட்டுமே புதிய நோட்டுக்களாக மாற்றப்பட்டுள்ளது என்கிற செய்தி வரும் நாட்களுக்கான தொடரும் சங்கடங்களை உறுதிப்படுத்துவதாக அமையக்கூடும்.

ஆனால், அரசியல் ரீதியாக எந்த பிரதமரும் எடுக்கத்துணியாத ஒரு முடிவை அசாத்தியமான துணிச்சலுடன் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார் என்பதையும் அரசியல் ரீதியாக இல்லாது, நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவே இது என்பதையும் ஏற்கத்தத்தான் வேண்டும். ஆனால் 86 சதவிகித  பணப்புழக்கத்தை செல்லாது என அறிவிக்கும்போது, ஏற்படப்போகும் பின் விளைவுகள் குறித்த சரியான கணிப்பும், திட்டமிடுதலும் இருந்தாதா என்பது குறித்து ஐயம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி வரையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிக் கணக்களுக்குள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், மீதமிருக்கும் 4 லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு வருவாயாக கிடைக்கும் எனவும் அதன் அடிப்படையில், அதில் பெருவாரியான தொகை அரசுக்கு டிவிடண்டாக வழங்கப்படும் எனவும் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கதே.  உட்கட்டமைப்பு வசதிகள், கழிப்பறை வசதிகள், அனைவருக்கும் வீடு போன்ற பல்வேறு சமூக நல மேம்பாட்டுப் பணிகளுக்கு இத்தகைய வரவு செலவிடப்படுமானால், அது வளமான எதிர்காலத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், உண்மையான கருப்பு பணம் என்பது முற்றிலும் வெளிவராத சூழலில், சாதாரண பொதுமக்கள் அன்றாட செலவுகளுக்கும் அல்லல்படுவது வேதனை அளிப்பதே. புதிய ரூபாய் நோட்டுக்கள் வரத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருவது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.  குறைந்த கால சங்கடங்களை நாட்டின் நலன் கருதி ஏற்றுக்கொள்ளவே பெருவாரியான மக்கள் விரும்பிய நிலையில், மூன்றாவது வாரமாக தொடரும் பணப்புழக்கம் இல்லாமை யதார்த்தத்தில் நாட்டின் அனைத்து தரப்பினரையும் பாதிப்பதாகவே உள்ளதையும் மறுக்க இயலாது.

இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் டிசம்பர் மாத சம்பளத்தை எதிர்நோக்கி கோடிக்கணக்கான தொழிலாளர்களும், ஊழியர்களும் காத்திருக்கும் நிலையில், சந்தையில் பணப்புழக்கத்தில் கடுமையான தேக்கம் நிலவுவது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அனுமானிக்க இயலாத நிலையில், மத்திய அரசு அது குறித்து தீவிவரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

குறிப்பிட்ட அளவே ஒரு நாளில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும் என்கிற நிலையில், சம்பளத்தொகையை தங்கள் நிலைக்கு ஏற்ப செலவழிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்பதோடு, ரொக்கமாக சம்பளம் வழங்கி வரும் சிறு, குறு நிறுவனங்கள் சம்பளம் வழங்குவதிலேயே சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். எல்லாவற்றிற்கும் மேலாக 2016‡17 க்கான நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 7.1 சதவிகித பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில், தற்போது ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், உற்பத்தியும் நுகர்வும் ஒருசேர பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சியானது 3.5 சதத்திற்கும் கீழாக வரும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதாவது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் நிச்சயம் சரிவை சந்திக்கும். ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலமாக கிடைக்கப்போகும் பலன்கள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஏற்படப்போகும் சரிவை சரிகட்டுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

====

எங்களது குழுமத்தில் இருந்து வெளிவரும் 'தினவணிகம்' நாளிதழில் வெளியான தலையங்கம் இது. வணிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதற்காக அவ்வப்போது இவற்றை கூட்டாஞ்சோறில்  வெளியிடும்படி நிறுவனர் எம்.ஜெ.வாசுதேவன் கேட்டுக்கொண்டார். அதன்படி அவ்வப்போது வெளியிடலாம் என்றிருக்கிறேன். தங்கள் கருத்தையும் தெரிவியுங்கள். 




25 கருத்துகள்

  1. உண்மையான கருப்புப் பணம் இம்முயற்சியால் வெளி வருமா நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக ஒழியும் என்பதில் சந்தேகமில்லை. அது கிட்டத்தட்ட 4 லட்சம் கோடியாக இருக்கும். ஆனால், திரும்பவும் இப்போதுள்ள புதிய நோட்டுகளால் வெகு விரைவில் மீண்டும் கறுப்புப்பணம் வந்துவிடும் என்பது உண்மை. இது களையெடுப்பு மட்டும்தான். மீண்டும் களை வராமல் தடுப்பது அரசின் கையில் தான் இருக்கிறது.
      தங்கள் வருகைக்கு நன்றி !

      நீக்கு
  2. போகப்போகத் தெரியும் .... இந்தப் பூவின் வாஸம் புரியும். மடியில் அதிக கனமில்லாத சாதாரண மக்கள் யாரும் எதற்கும் கவலையே படவே வேண்டாம். :)

    இன்று முதன் முதலாக நான் ஒரு புதிய 2000 ரூபாய் நோட்டைக்கொடுத்து ரூ. 800 க்கு சாமான்கள் வாங்கினேன். மீதி 1200 க்கு 12 x 100 ரூபாய் நோட்டுகளாகக் கொடுத்து விட்டார் என் வீட்டின் அருகே உள்ள கடைக்காரர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. You should never pay by cash. As a patriotic citizen, pay by debit / credit card. That will prevent the tax evasion of the traders.

      நீக்கு
    2. எந்த ஒரு பொருளையும் இதுவரை கடனில் வாங்கி எனக்குப் பழக்கம் இல்லை.

      அதனால் இதுவரை நான் கிரெடிட்/டெபிட் கார்டுகளை வாங்கிக்கொள்ளவோ, கையாளவோ இல்லை. அதற்கான தேவையோ விருப்பமோ ஏற்படவில்லை.

      எனினும் தங்களின் இந்த அறிவுரைக்கு மிக்க நன்றி. நாட்டின் நன்மை கருதி அதையும் இனி நான் வாங்கி பயன்படுத்த முயற்சிக்கிறேன்.

      நீக்கு
    3. ஏழைபாழைகளுக்கான அன்றாட சில்லறைச் செலவுகளுக்குத் தேவைப்படும் ரூ. 1, ரூ.2, ரூ.5, ரூ. 10, ரூ.20 ஆகிய நாணயங்கள் அல்லது நோட்டுக்களைத்தவிர மற்ற அனைத்தையும் செல்லாததாக ஆக்கி, அனைத்துக் கொடுக்கல் வாங்கலும், அனைத்து வியாபாரங்களும், அனைத்துப் பரிவர்த்தனைகளும், கிராஸ் செய்த வங்கிக்காசோலைகள் மூலமும், கிரெடிட் / டெபிட் கார்டு மூலமும் மட்டுமே செய்ய முடியும் என்கிற நிலைமைக் கொண்டு வந்தால் மட்டுமே, வரி ஏய்ப்பு, லஞ்சம், கருப்புப்பணம் முதலியன முற்றிலுமாக ஒழிந்து, இந்தியா வெகு விரைவில் வல்லரசு ஆக முடியும் என்பது எனக்கு மட்டுமல்ல .... படிப்பறிவு உள்ள அனைவருக்குமே தெரியும்.

      இருப்பினும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் இதிலுள்ள மிகப்பெரிய பிரச்சனையே.

      நீக்கு
  3. நல்ல திட்டம்...
    ஆனாலும் சரியான திட்டமிடல் இல்லாமை சாதாரண மக்களை பாதித்துவிட்டது.
    கருப்புப் பண ஒழிப்பு என்பது ஓரளவு சாத்தியப்பட்டாலும் முற்றிலுமாக ஒழிய வாய்ப்பில்லை...
    நம்மூரில் டாஸ்மாக்கிலெல்லாம் பழைய நோட்டுக்களை வாங்காது அமைச்சர்களின் நோட்டுக்கலை மார்றுவதாய் தகவல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதாரண மனிதர்களுக்கு ஒருவகையில் கஷ்டம் என்றால், இதில் அதிகம் பாதிக்கப்படுவது அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளும்தான்.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  4. அருமையான ஆய்வுக் கண்ணோட்டம்

    பதிலளிநீக்கு
  5. ஏகப்பட்ட 'ஆனால்'கள்! காலம்தான் பதில் சொல்ல வேண்டும்! பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு பகிர்வு. அரசு எடுக்கும் சில முடிவுகளுக்கு சொல்ல முடியாத காரணங்கள் இருக்கலாம். நல்ல விளைவு இருக்கும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  7. அப்படியானால், இது நீங்கள் எழுதியது இல்லையா?

    பதிலளிநீக்கு
  8. ஊதியம் அளிப்பதில் சிக்கல் வரும் என்கிறீர்கள். இதையேதான் நேற்று என் தம்பியும் கூறிக் கொண்டிருந்தார். ஊதியம் அளிப்பது மட்டுமில்லை, அனைவர் கைகளிலுமே பணப்புழக்கம் குறைவதால் எல்லாத் துறைகளும் இதனால் அடி வாங்கும். கடன்கள் ஒழுங்காகத் திரும்பி வாரா, புதிதாகக் கடன் வாங்குவதும் தவிர்க்கப்படும், மக்கள் பணத்தைச் செலவிடவே தயங்குவார்கள். எல்லாத் தொழில்களிலும் மந்தநிலை ஏற்படும். மொத்தத்தில் நாட்டின் வருவாய் குறையும். இதனால் வரிகளை உயர்த்த வேண்டிய தேவை எழும். அதன் தொடர்ச்சியாகப் பணப் புழக்கம் மென்மேலும் குறையும். ஆக, இந்தத் திட்டத்தால் என்னென்ன நன்மைகள் எல்லாம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டனவோ அவை அனைத்துமே பொய்யாகும். இதுவே, என் (பொருளாதாரச்) சிற்றறிவுக்கு எட்டும் கருத்து.

    மோடியின் இந்த அறிவிப்பு சரியோ தவறோ, ஆனால் துணிச்சலான முயற்சி என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது என அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். துணிச்சல் வேறு, அசட்டுத் துணிச்சல் வேறு. இவ்வளவு பெரிய முடிவை மேற்கொள்ளும்பொழுது மக்களுக்கு என்னென்ன சிரமங்கள் ஏற்படும், அவற்றை எப்படித் தவிர்க்கச் செய்யலாம், சமூகத்தில் எப்பேர்ப்பட்ட விளைவுகள் ஏற்படும், அவை ஒவ்வொன்றையும் எதிர்கொள்வது எப்படி என எந்த விதமான தொலைநோக்கும் இல்லாமல் இப்படி எடுத்த எடுப்பில் 500, 1000 பணத்தாள்களைத் திரும்பப் பெறுவது என்பது உண்மையில் துணிச்சலான முடிவு கிடையாது. அசட்டுத் துணிச்சலும் பொறுப்பற்றதன்மையுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதான். சரியான திட்டமிடல் இல்லை.
      வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  9. திட்டத்தின் நோக்கம் சரியானது தான் என்றாலும் அதை நிறைவேற்ற சரியாக திட்டமிடவில்லை என்பதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அய்யா!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை