திங்கள், பிப்ரவரி 29, 2016

மலிவான இந்திய சினிமா


சினிமாவையும் நம் இந்தியாவையும் பிரித்துப்பார்ப்பது கஷ்டமான காரியம். அந்த அளவிற்கு இந்தியர்களின் உணர்வோடு கலந்து நிற்கிறது இந்த கனவுத் தொழிற்சாலை. ஆனால், இங்கு தியேட்டர்களில் வசூலிக்கும் கட்டணம் பகல் கொள்ளை என்றொரு புகார் உண்டு. இந்த புகார் உண்மையில்லை என்று சொல்கிறது ஒரு ஆய்வு. 

அந்த ஆய்வின்படி, உலகிலேயே மிகக் குறைவான சினிமா கட்டணம் உள்ள நாடு இந்தியாதான். நமது இந்தியாவிற்கு அடுத்து குறைந்த சினிமா கட்டணம் உள்ள நாடு உலகின் மாபெரும் வல்லரசு நாடான அமெரிக்கா. 


இதெல்லாம் சரி, குறைந்த கட்டணம் என்று எதை வைத்து நிர்ணயிக்கிறார்கள். என்று கேட்டால். அதற்கு ஒரு அளவீடு வைத்திருக்கிறார்கள். அதன்படி சினிமா டிக்கெட் விலை மற்றும் அந்த நாட்டின் மனித உழைப்புக்கு கொடுக்கப்படும் சம்பளம் இவற்றை அடிப்படையாக கொண்டு அந்த குறியீடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.


அதன்படி இந்தியாவில் ஒருவர் தியேட்டரில் சென்று சினிமா பார்ப்பதற்கு வெறும் 16 நிமிடங்கள் உழைத்தால் போதும். மற்ற எந்த நாட்டிலும் இவ்வளவு குறைந்த உழைப்பில் ஒரு சினிமாவை பார்த்துவிட முடியாது. அந்த வகையில் இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். 

இந்திய தியேட்டர்களின் சராசரி டிக்கெட் விலை இப்போதும் கூட 0.20 டாலர் என்ற கணக்கில்தான் இருக்கிறது. அதாவது சராசரியாக ஒரு டிக்கெட் ரூ.13.60. இந்தியாவில் ஒரு மணி நேர உழைப்பிற்கு சராசரியாக 0.70 டாலர் சம்பளமாக கிடைக்கிறது. அதாவது ரூ.47.60 வரை சம்பளம். இந்த கணக்கைக் கொண்டு தான் ஒரு படம் பார்க்க 16 நிமிடங்கள் உழைத்தால் போதும் என்கிறது அந்த ஆய்வு.


இதே விகிதப்படிப் பார்த்தால் இந்தியாவிற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா வருகிறது. அங்கு ஒரு அமெரிக்கர் படம் பார்க்க 24 நிமிடங்கள் உழைக்க வேண்டும். இதுவே சீனா என்றால் 26 நிமிடங்களும், லக்சம்பர்க்கில் 28 நிமிடங்களும், அயர்லாந்தில் 30 நிமிடங்களும் உழைக்க வேண்டும். இவைகள் எல்லாம் குறைந்த சினிமா கட்டணம் கொண்ட நாடுகள். 


அதிக சினிமா கட்டணம் கொண்ட நாடுகள் என்று பார்க்கும்போது பல்கேரியா முதலில் வருகிறது. அங்கு ஒருவர் ஒரு சினிமா பார்க்க வேண்டும் என்றால் 123 நிமிடங்கள் உழைத்தாக வேண்டும். இதற்கடுத்தப்படியாக எஸ்தோனியா 118 நிமிடங்களும், தாய்லாந்து 109 நிமிடங்களும், லித்துவேனியா 106 நிமிடங்களும்,, ரஷ்யா 104 நிமிடங்களும் உழைக்க வேண்டும். 

மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது இந்தியர்கள் சினிமா பார்க்கும் விஷயத்தில் கொடுத்து வைத்தவர்களே. இந்த ஆய்வில் ஷாப்பிங் மால்களில் ரூ.150, ரூ.300 என்று கட்டணக் கொள்ளை நடக்கும் தியேட்டர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவற்றையும் சேர்த்திருந்தால் ஒருவேளை முடிவுகள் மாறியிருக்குமோ என்னவோ..!

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

எவ்வளவு சரக்கு அடித்தாலும் அசராதவர்கள்..!


ம்மூர் குடிமகன்கள் எப்போதும் படு 'தில்'லானவர்கள். அவர்களுக்குள் போட்டியென்று வந்துவிட்டால் அவ்வளவுதான். அந்த பாரே அல்லோகலப்படும். எவ்வளவு குடித்தாலும் நான் ஸ்டெடியாக நிற்பேன் என்ற டயலாக் எல்லா குடிகாரர்களிடமும் இருக்கும். மது குடிப்பவர்களிடம் நடைபெறும் மிகப் பெரும் போட்டியே இதுதான். அதாவது எவ்வளவு மது அருந்தினாலும் நான் ஸ்டெடியாக இருப்பேன் என்பது. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த ஸ்டெடி மனிதர்கள் எவ்வளவு அபாயத்தில் இருக்கிறார்கள் என்று கூறுகிறது. 

இப்படி மல்லுக்கட்டி மதுவை குடிக்கும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல்  உழைத்துக் கொண்டிருக்கும். உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல். 


மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது. உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. 

இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும். 


இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப் படுகிறது. கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்லவதற்கு. ஆமாம், ரத்தம் உறையாமல் முழுவதும் வெளியேறினால் அடுத்த நொடி மரணம் தான்.  

இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம். இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது. அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான். இது மட்டும் கெட்டுவிட்டால் அந்த விஷம் நேரடியாக இதயத்தை தாக்கி மரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து சேர்க்கும். 

புகைப்பிடிக்கும் ஆணுக்கு இதயமும், மது அருந்தும் பெண்ணுக்கு கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டும் படம். மூன்றாவதாக பழங்களை சாப்பிடும் பெண்ணுக்கு அனைத்து உறுப்புகளும் நன்றாக இருக்கிறது என்பதை சொல்லும் படம்.
மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும். கல்லீரல் கெட்டு விட்டது என்றால்  அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது. 


கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் கல்லீரல் படுத்துக் கொண்டால் அவ்வளவுதான் அதன்பின் அது எழுந்திருக்கவே எழுந்திருக்காது. அதனால் மதுவை மறந்து கல்லீரலை காத்து உடல் ஆரோக்கியம் பெறுவோம் என்கிறது அந்த ஆய்வு. 

மது வேண்டவே வேண்டாம் !


வியாழன், பிப்ரவரி 25, 2016

இனி விவசாயம் இப்படியும் மாறலாம்..!

ரு காலத்தில் நெருப்பில்லாமல் உணவு சமைக்கமுடியும் என்று சொல்லியிருந்தால், சொன்னவரை பைத்தியம் என்று முத்திரை குத்தியிருப்பார்கள். ஆனால், இன்று பெரும்பாலான கிச்சனில் இண்டக்சன் அடுப்பு வந்து உட்கார்ந்து கொண்டது. அங்கு நெருப்பும் இல்லை, புகையும் இல்லை. ஆனால், சமையல் நடக்கிறது. 
  
அதேபோல்தான் இப்போது நிலமில்லாமல் விவசாயம் செய்யலாம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், வருங்கலத்தில் இந்த தொழிநுட்பம் சர்வ சாதாரணமாக நடக்கும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் படுஜோராக நடந்து கொண்டிருக்கின்றன.


நமக்கு விவசாயம் என்றாலே நிலம் வேண்டும். ஆனால் நிலத் தட்டுப்பாடு மிக்க ஜப்பான்காரர்கள் நிலத்துக்கு எங்கே போவார்கள். உணவு கண்டிப்பாக எல்லா மக்களுக்கும் வேண்டும். அதற்கு விவசாயம் வேண்டும். விவசாயத்திற்கு நிலம் வேண்டும். ஆனாலும் அங்கு நிலம் இல்லை. நிலமே இல்லாத விவசாயத்தை நடத்தினால் என்னவென்று சிந்தித்தார்கள். அதன் விளைவுதான் இந்த தொழிநுட்பம்.

இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது செயல்படாத நிறுவனம் ஒன்றை. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு கம்ப்யூட்டரில் 'ஃபிளாப்பி டிஸ்க்' என்ற ஒரு வஸ்து பயன்படுத்தப் பட்டது. இன்றைய மெமரி கார்டுகளுக்கெல்லாம் முன்னோடி அது.


டாக்குமெண்ட் ஃபைல்கள் சேமித்து வைப்பதில் பெரும் பங்காற்றியது. ஒரு பிளாப்பி டிஸ்கில் 2.88 எம்.பி. டாக்குமெண்டுகளை சேமித்துவைக்க முடியும். இன்றைய மெமரி கார்டுகளோடு இதை ஒப்பிட்டால் யானையோடு சித்தெறும்பை ஒப்பிடுவது போலத்தான்.

பின்னாளில் சிடி பயன்பாட்டுக்கு வந்தப்பின் இவற்றின் தேவை முற்றிலும் குறைந்து போனது. இவற்றை தயாரித்த நிறுவனங்கள் தொடர்ந்து மூடுவிழா கண்டன. அப்படி மூடிய ஃபிளாப்பி டிஸ்க் தயாரிப்பு கம்பெனியில்தான் இந்த நவீன விவசாயத்தை நடத்திக் கொண்டிருக்கிறது பிரபலமான தோஷிபா நிறுவனம்.    


இந்த கம்பெனியின் உபயோகம் இல்லாத சேமிப்பு கிடங்குகளில்தான் இந்த விவசாயம் நடக்கிறது. முற்றிலும் அடைக்கப்பட்டு வெளிக்காற்று, வெப்பம், சூரியஒளி எதுவும் வராத இடத்தில் எல்லாமே செயற்கையாக உருவாக்கி விவசாயம் செய்யப்படுகிறது. 

சூரிய ஒளிக்குப் பதிலாக ட்யூப்லைட் மற்றும் எல்இடி விளக்குகளை வைத்து சூரியஒளியில் கிடைக்கும் அத்தனை சமாச்சாரங்களையும் கொண்டு வந்து விடுகிறார்கள். மினரல் வாட்டர் போன்ற சுத்தமான நீர் செடிகளுக்கு பாச்சப்படுகிறது.  காற்றுக்கூட கண்ட்ரோல் செய்யப்பட்டு சுத்தமான காற்றே தரப்படுகிறது. வெப்பநிலையும் செடிகளுக்கு உகந்த அளவில் கொடுக்கப்படுகிறது. மண்ணும் செயற்கை மண் மற்றும் தேங்காய் நார் துகள்கள்தான்.


இந்த முறையில் கீரை, தக்காளி, லெட்டுஸ் போன்ற காய்கறி செடிகளை வளர்கிறார்கள். இப்படி வளர்ப்பதால் பூச்சித் தாக்குதல் முற்றிலுமாக குறைக்கப்படுகிறது. ஒன்றன் மீது ஒன்றாக பல அடுக்குகள் வைத்து விவசாயம் செய்வதால் குறைந்த இடத்தில் அதிக பயிர் விளைவிக்கப்படுகிறது.

மருத்துவத்திற்கு பயன்படும் 'லெட்டுஸ்' இலைகள் ஒரு நாளைக்கு 8,400 என்ற கணக்கில் ஆண்டுக்கு 30 மில்லியன் இலைகள் என்று கணக்கிட்டு பயிர்செய்து வருகிறார்கள். இதன்மூலம் வருடத்திற்கு 100 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்று தோஷிபா தெரிவிக்கிறது. மேலும் மூலிகைகள் வளர்ப்புக்கு இந்தமுறை ஏற்றது என்கிறது.


இந்த விவசாய முறை மிகப் பெரிய வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். இந்த வெற்றி பெற்றதையடுத்து தற்போது ரஷ்யா போன்ற விவசாயத்திற்கு ஒத்துவராத கடுங்குளிர் நாடுகள் கூட இந்த தொழிநுட்பத்தில் விவசாயம் செய்ய முன்வந்திருக்கின்றன.

தற்போது கீரை  தக்காளி போன்ற சிறிய வகை செடிகளை இந்த முறையில் வளர்க்கப்படுகின்றன. வருங்கலத்தில் மற்ற பயிர்களும் இந்த முறையில் வளர்க்கமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். எப்படியோ விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறிவரும் இந்தக் காலத்தில் இந்த நவீன விவசாயமுறை கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்! இதன் சாதக பாதகங்களை..! 
செவ்வாய், பிப்ரவரி 23, 2016

கருமுட்டை தானம் செய்யலாமா?

ரு காலத்தில் எது தவறு என்று போதிக்கப்பட்டதோ அதுவே இன்று விஞ்ஞானத்தின் துணையோடு நவீனம் என்ற பெயரில் நடக்கிறது. சாதியை தூக்கிப்பிடிக்கும் பலரும் கூட குழந்தைக்காக இந்த நவீன சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். வேறு இனத்தில் திருமணம் செய்வதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட இன்று முன்பின் தெரியாதா யாரோ ஒருவருடைய உயிரணுவையோ அல்லது கருமுட்டையையோ தங்களின் வாரிசாக சுமக்கிறார்கள்.


ரத்த தானம், கண் தானம் வரிசையில் இன்று கருமுட்டை தானமும், விந்து தானமும் சேர்ந்து கொண்டது. ஒரு ஆண் தன் மனைவியை தாய்மை அடைய வைக்க முடியவில்லை என்ற சூழல் வரும் போது விந்து தானம் மூலம் மற்றொரு ஆணின் உயிரணு அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதற்காக மரபு ரீதியாக குறைபாடு இல்லாத, தொற்று நோய்கள், பரம்பரை நோய்கள் இல்லாத உயிரணுக்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ள ஆணிடம் இருந்து விந்து சேகரித்து பாதுகாக்கப்படுகிறது.


போர்க்களத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்களும், பூச்சிக்கொல்லி நிறுவனங்களில் பணி புரிபவர்களும், கதிர்வீச்சு அபாயத்தில் வேலை செய்யும் ஆண்களும் தங்கள் விந்தை திருமணத்திற்கு முன்பே விந்து வங்கியில் சேமித்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தப் பழக்கம் மேலைநாடுகளில் சாதாரணமாக மாறி வருகிறது.

இளமையும் வீரியமும் இருக்கும்போதே உயிரணுவை சேகரித்து வைத்துக்கொண்டு பின்னாளில் வாழ்வில் செட்டிலான பிறகு அதை பயன்படுத்தி, ஆரோக்கியமான வாரிசை உருவாக்குவது தான் இன்றைய நவீன ஆண்களின் ஃபேஷன். இதுபோக தங்களின் விந்தை தானமாக வழங்கும் ஆண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. விந்து தானம் சுலபமானது. ஒரு ஆண் எத்தனை முறை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஒருமுறை தானத்திற்கு ரூ.500-ல் இருந்து 2,000 வரை பணம் தருகிறார்கள்.


இதுவே பெண்ணின் கருமுட்டை என்றால் அதற்கு விலை அதிகம். ஒரு முட்டைக்கு ரூ.40,000 முதல் 60,000 வரை கிடைக்கிறது. ஆனால், பெண்ணின் கருமுட்டை தானம் அத்தனை சுலபமில்லை. அதற்கு நிறைய விதிமுறைகள் உள்ளன. கருமுட்டை தானமாக வழங்கும் பெண் 21 வயதிலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகளை ஒன்றிரண்டு பெற்ற பெண்ணாக இருக்க வேண்டும். எந்தவிதமான நோயும் இருக்கக்கூடாது. கருமுட்டை உற்பத்திக்கான ஹார்மோன் ஊசிப் போடப்படும். அவற்றை தாங்கும் உடல் நலம் வேண்டும். கருமுட்டை எடுப்பதற்காக நடத்தப்படும் அறுவை சிகிச்சை, மயக்க மருந்து போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் திறனும் இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் அந்தப் பெண் தனது கருமுட்டையை தனமாக தரலாம். 

இந்தியாவில் 1986-ம் ஆண்டுக்கு பிறகுதான்  கருமுட்டை தானம் என்பது பிரபலம் ஆகத்தொடங்கியது. கருமுட்டை தானம் செய்வது தொடர்பாக சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்றாலும் கூட ஒரு பெண் 6 தடவைக்கு மேல் கருமுட்டை தானம் செய்வது அவரது உடலுக்கு நல்லது அல்ல என்றும், ஒரு முறை தானம் செய்வதற்கும், அடுத்த முறை தானத்துக்கும் குறைந்த பட்சம் 6 மாதங்களாவது இடைவெளி இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அடிக்கடி கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு கருப்பை புற்று நோய் வர வாய்ப்பும் உள்ளது.

கருமுட்டைகள் பெண் உடலில் இருந்து எடுக்கப்படும் போது அது 37 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் இருக்கும். அதை '0' டிகிரிக்கும் கீழே கொண்டுவந்து 'மைனஸ்194' சென்டிகிரேடுக்கு மாற்றி திரவ நைட்ரஜனில் உறைய வைக்கிறார்கள். இதை 'கிரையோலாஜிக்' என்ற நவீன கருவியில் வைத்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பாதுகாத்து, பயன்படுத்தலாம்.


வருங்காலத்தில் மலட்டுத்தன்மை அதிகரிக்கும் அபாயம் அதிகம் இருப்பதால், வீரியம் மிக்க ஆணுக்கும், பெண்ணுக்கும் பெரும் மதிப்பு கூடும் என்று இப்போதே மருத்துவத்துறை கணித்து வைத்திருக்கிறது.ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

'கடவுளின் சொந்த பூமி' - கேரளா மட்டுமல்ல!

விக்லோ மலை
நண்பர் கில்லர்ஜியின் பதிவை படிக்கும் போது மனதில் தோன்றியதுதான் இது. 'கடவுளின் சொந்த பூமி' என்ற வார்த்தைகளை கேரளா மட்டும் பயன்படுத்தவில்லை. இன்னும் சில நாடுகளும் பயன்படுத்துகின்றன.

இந்த வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் எட்வர்ட் டு போய்ஸ் என்ற கவிஞர். இவர்தான் அயர்லாந்தில் இருக்கும் விக்லோ மலைகளின் அழகையும் அதன் வசீகரிக்கும் சூழலையும் வைத்து கடவுளின் சொந்த இடம் இப்படிதான் இருக்கும் என்று அந்த வார்த்தையிலிருந்து கவிதையை தொடங்கினார். கவிதை புகழ் பெற அந்த இடமே கடவுளின் சொந்த பூமியானது. அன்றிலிருந்து அதாவது கி.பி.1807-ல் இருந்து அது கடவுளின் பூமியாக இன்றுவரை இருக்கிறது. உலகின் முதல் கடவுளின் சொந்த பூமி இதுதான். 

டென்னெசி
அதன் பின்னர் ஐரோப்பா கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய வெள்ளையர்கள் சும்மா இருப்பார்களா..! அமெரிக்காவில் இருக்கும் இயற்கை அழகு நிறைந்த இடத்திற்கெல்லாம் 'கடவுளின் சொந்த பூமி' என்று பெயர் வைத்துவிட்டார்கள். 

மிசிசிப்பி
உலகின் இரண்டாவது கடவுளின் சொந்த பூமி என்ற பெருமையை அமெரிக்காவில் உள்ள டென்னெசி என்ற இடமும், மிசிசிப்பி சமவெளியும் கி.பி.1860-ல் பெற்றன. 

நியூசிலாந்த்
அமெரிக்கா சென்று பெயரிட்ட வெள்ளையர்கள் அடுத்து குடியேறியது நியூசிலாந்த்தில். அங்கும் கடவுளின் சொந்த பூமியை தேடத் தொடங்கினார்கள். மொத்த நாடுமே அழகாய் இருந்ததால் கி.பி.1890-ல் அந்த நாட்டையே கடவுளின் நாடாக மாற்றி விட்டார்கள். 

ஆஸ்திரேலியா
அடுத்த கடவுளின் நாடாக மாறியது ஆஸ்திரேலியா. அது நடந்தது கி.பி.1900-ல். அதற்கடுத்து, 1970-ல் ஜிம்பாவே நாடு கடவுளின் சொந்த பூமியாக மாறியது. 

ஜிம்பாவே
கி.பி.1989-ல் கேரளாவில் வால்டர் மென்டேஸ் என்ற விளம்பர பட இயக்குனர் கேரளாவைப் பற்றிய விளம்பரத்தில் கடவுளின் சொந்த பூமி என்ற கேப்ஷனை பயன்படுத்தினார். இந்த வார்த்தையை அப்படியே கேரளா சுற்றுலாத் துறை உள்வாங்கி கொண்டது. அதையே முன்னிறுத்தியது. இன்று சுற்றுலாவில் பின்னி எடுக்கிறது.

கேரளா
சரி, இந்தியாவில் இன்னொரு இடமும் கடவுளின் சொந்த பூமியாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அது, அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கு நடுவே அமைந்துள்ள மஜுலி என்ற தீவுதான். இயற்கை அழகு அள்ளும் இந்த இடத்தில்தான் கிருஷ்ணர் சிறுவனாக இருக்கும்போது தனது தோழர்களுடன் விளையாடியதாக கூறுகிறார்கள். அதனால் அது கடவுளின் சொந்த பூமியாக மாறியது. 

மஜுலி - அசாம்
இப்படியாக கடவுளின் சொந்த பூமிகள் நிறைய இருக்கின்றன. இதில் கடைசியாக இடம் பெற்றது தான் கேரளா. ஏதோ கேரளா மட்டும்தான் கடவுளுக்கு சொந்தம் என்று கேரளத்தவர்கள் நினைத்துவிடக் கூடாது. வேறு சில இடங்களும் கடவுளுக்கு சொந்தமாக இருக்கின்றன. 


ராஜஸ்தான் சுற்றுலாத்துறை இந்த இடத்தை 'கடவுளின் சொந்த பூமி' என்கிறது. 
கானொளியில் காணுங்கள்!


சனி, பிப்ரவரி 20, 2016

எனது முதல் ராயல்டி

'ராயல்டி' என்பதெல்லாம் பெரும் வார்த்தை. நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அது கிடைக்காது என்றே நினைத்திருந்தேன். ஆனால், எனக்கும் கொஞ்சம் கொடுப்பினை இருக்கிறது போலும். இன்று எனக்கும் முதல் ராயல்டி கிடைத்திருக்கிறது. 

இரண்டாம் பதிப்பு புத்தகம்
இந்த வருடத்தின் முதல் நாள் அதாவது புத்தாண்டு தினத்தில் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து 108 பேருக்கு விருது வழங்கப்பட்டது. விவசாயத்தில் சாதனைப் படைத்தவர்களுக்கு அந்த விருதுகள் வழங்கப்பட்டன. அதில் எனக்கும் 'சிறந்த விவசாய பத்திரிகையாளர்' என்ற விருது ஹைதராபாத்தில் வழங்கப்பட்டது. இதைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன். 


இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், எனது முதல் புத்தகமான 'நம்ப முடியாத உண்மைகள்' முதல் பதிப்பு புத்தகம் முழுவதும் விற்பனை ஆகிவிட்டது என்றும், இரண்டாம் பதிப்பு பொங்கலன்று வெளிவருகிறது என்ற தகவலும், இந்த வருடத்தை மேலும் இனிமையாக தொடங்கி வைத்தது.  


இப்போது முதல் ராய்ல்டிக்கான காசோலை வந்திருக்கிறது. நண்பர்களோடு இதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 'பகிர்ந்த துன்பம் பாதியாகிறது. பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது' என்பது உண்மைதானே!வெள்ளி, பிப்ரவரி 19, 2016

சைக்கிளுக்காக ஒரு பாலம்

பிரமாண்டமான சைக்கிள் பாலம்
ம் நாட்டில் சைக்கிள் ஓட்டுபவர்களை மனிதனாகக் கூட மதிப்பதில்லை. அது ஏழைகளின் வாகனம். அதை ஓட்டுபவன் ஏழை என்ற எண்ணமே இதற்கு காரணம். 

ஆனால், மேலைநாடுகளில் சைக்கிள்களைக் கொண்டாடுகிறார்கள். சுற்றுச்சூழலை கெடுக்காத ஒரு வாகனம் என்பதால் அதற்கு ஏகப்பட்ட மவுசு. மேலும் அதை ஓட்டுபவர்களுக்கு நல்ல ஆரோக்கியம். செலவு வைக்காத வாகனம் என்று பல நன்மைகள் அதில் இருப்பதால் வெளிநாடுகளில் சைக்கிள்களுக்கு நல்ல மரியாதை.


பல நாடுகள் சைக்கிள்களுக்கு என்று தனியாக சாலைகளை அமைத்துள்ளன. அந்த நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு சைக்கிள்கள் செல்வதற்கென்றே மிகப் பெரியப் பாலத்தை கட்டி முடித்து மக்கள் பயன் பாட்டுக்கு திறந்துவிட்டிருக்கிறது பெல்ஜியம் நாடு.

ப்ருகேஸ் பாரம்பரிய நகரம்
பெல்ஜியம் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று ப்ருகேஸ். இது ஒரு பழமையான நகரமாகும். யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதி பட்டியலில் இந்த நகரமும் உண்டு. இங்கு வாழும் மக்கள் ஒரு சைக்கிள் பிரியர்கள். இந்த நகரின் மொத்த பரப்பளவு 138.4 சதுர கி.மீ. ஆகும். இங்கு 1,17,000 மக்கள் வாழ்கிறார்கள். இங்கு 4-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயங்கள், கட்டிடங்கள் என்று பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இவற்றைப் பார்ப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.


அவர்களில் பலரும் சைக்கிளில் நகரை சுற்றி பார்க்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு வசதியாக பல பாதைகளை அமைத்துள்ளனர். அதில் சமீபத்தில் இவர்கள் அமைத்துள்ள சைக்கிள் பாலம் அதற்குள் உலக அளவில் புகழ்பெற்று விட்டது. கீழே ஒரு நெடுச்சாலை, அதன்மீது ஒரு சுற்றுச்சாலை என்று சிக்கலான இந்த சாலைகளை மணிக்கு 300 கார்களும், 300 பைக்குகளும் கடந்து போகும் இந்த சாலையை ஒரு சைக்கிள் ஒட்டி கடப்பது கடினம்.


இந்த கார்களுக்கு இணையாகவே இங்கு சைக்கிள்களும் அதிகமாக இருக்கின்றன. இவர்கள் சுலபமாக கடந்து போவதற்காக சைக்கிள்கள் மற்றும் நடந்து செலபவர்களுக்காக பிரமாண்டமான ஒரு பாலத்தை அமைத்திருக்கிறது பெல்ஜிய அரசு.


நம் நாட்டில் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் இருவருக்குமே மதிப்பில்லை. ஆனால், இங்கும் சைக்கிள்களைக் கொண்டாடும் காலம் விரைவில் வரும். சுற்றுச்சூழல் அதைக் கொண்டு வரும்.
புதன், பிப்ரவரி 17, 2016

கடல் நடுவே ஒரு செயற்கை விமான நிலையம்


தையுமே துணிந்து செய்வதில் ஜப்பானியர்களை அடித்துக்கொள்ள முடியாது. மிகச்சிறிய நாடான அங்கு எப்போதுமே மக்கள் நெருக்கம் நிறைந்தே இருக்கும். நாட்டிலுள்ள எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு கட்டடத்தைக் கட்டி விடுவார்கள். விளைவு புதிதாக ஏதாவது திட்டங்களை செயல்படுத்துவது என்றால் காலி இடம் எங்கும் இல்லை. 

ஜப்பான் நாட்டிலுள்ள ஒசாகா என்ற இடத்தில் விமான நிலையம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அங்கு நிலம் இல்லை. அதனால், கடலுக்கு நடுவில் விமான நிலையம் அமைக்க முடிவெடுத்தார்கள்.

கான்சாய் விமான நிலையம்
உலகில் கடலில் உருவாக்கிய முதல் செயற்கை விமான நிலையம் இதுதான். நிலவில் இருந்து பூமியைப் பார்த்தால் மனிதனால் உருவாக்கப்பட்ட சீனப்பெருஞ்சுவர் தெளிவாக ஒரு கோடு போல் தெரியும். அதற்கடுத்து தெரிவது கான்சாய் ஏர்போர்டுதான்.

இந்த விமான நிலையத்திற்கான திட்டம் 1960-ல் தொடங்கியது. ஆனால், திட்டம் செயல்பட தொடங்கியது மிக தாமதமாக தான். 1987-ல் விமான நிலைய கட்டுமானம் தொடங்கப்பட்டது. முதலில் கடலுக்கு நடுவே 4 கி.மீ. நீளமும் ஒரு கி.மீ. அகலமும் கொண்ட மிகப் பெரிய சுற்றுச்சுவரை எழுப்பினார்கள். அந்த சுவற்றுக்கு நடுவே இதற்கென்று தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான 48,000 கான்கிரீட் செங்கற்களைப் பயன்படுத்தினார்கள். இடையிடையே பாறைகளையும் போட்டு நிரப்பினார்கள்.


இதற்காக மூன்று மலைகளை தரைமட்டாமாக்கி 2.10 கோடி கியூபிக் மீட்டர் பாறைகளை 80 கப்பல்களில் டிரிப் அடித்து கொண்டு வந்து சேர்த்தார்கள். புயலும் பூகம்பமும் ஒன்று கூடி கும்மாளம் போடும் இந்தக் கடலில் இப்படியொரு பிரமாண்டமான விமானநிலையம் கட்டுவது சாதாரண விஷயமில்லை. ஆனாலும் கட்டி முடித்தார்கள்.


ஜப்பானியர்கள் 10,000 பேரின் கடின உழைப்பில், 3 வருட காலக்கட்டத்தில், 1,300 ஏக்கர் நிலப்பரப்பை கடலில் செயற்கையாக உருவாக்கி வியக்க வைத்தார்கள். அதன் மீது 4 கி.மீ. நீளத்துக்கு ரன்வே அமைத்தார்கள்.


அதோடு நின்றுவிட வில்லை. உலகில் மிக நீளமான டெர்மினல் கட்டடத்தையும் உருவாக்கினார்கள். 4 மாடி கொண்ட இந்தக் கட்டடம் 1.7 கி.மீ. நீளம் கொண்டது. இதில்தான் டிக்கெட் கொடுக்கும் இடம், இமிகிரேஷன் சென்டர் எல்லாம் உள்ளது.


கடற்கரையில் இருந்து 3.7 கி.மீ. தூரத்தில் கடலில் இருக்கும் இந்த செயற்கைத் தீவிற்கு கரையில் இருந்து ரயில் பாதையும் அதற்கு மேலே நான்குவழிச் சாலையும் கொண்ட பாலமாக அமைத்திருக்கிறார்கள்.

1994, செப்டம்பர் 4-ல் கான்சாய் விமான நிலையம் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டது. திறந்த நான்கு மாதத்தில் 6.7 ரிக்டர் அளவில் பதிவான மிகப் பெரிய பூகம்பம் வந்து இந்த விமான நிலையத்தை அசைத்துப் பார்த்தது. அதில் கொஞ்சம் சேதமானது. 5,000 மக்களைக் கொன்றது. 1998-ல் ஒரு புயல் 200 கி.மீ. வேகத்தில் வந்து இந்த விமான நிலையத்தை உரசிப் போனது. அப்போதும் அதை தாங்கிக் கொண்டு கம்பீரமாக நின்றது இந்த விமான நிலையம்.

கான்சாய் ரயில் நிலையம்
இப்படி பல பெருமைகள் இருந்தாலும் ஜப்பானியர்கள் இதை 'அழகான நஷ்டம்' என்றே அழைக்கிறார்கள். இதைக் கட்டி முடிக்க 72,000 கோடி ரூபாய் செலவானது. வருடத்திற்கு 30 கோடி ரூபாய் வெறும் வட்டியாக மட்டும் போகிறது. இதனை ஈடு கட்டுவதற்காக விமானங்களின் இறங்குவதற்கான கட்டணங்களை மிக அதிகமாக வைத்திருக்கிறது.

ஒரு போயிங் 737 விமானம் இங்கு வந்து இறங்கி ஏற 3,37,500 ரூபாயை கட்டணமாக கொடுக்க வேண்டும். அதிகமாக கட்டணம் வசூலிக்கும் விமான நிலையங்களின் வரிசையில் கான்சாய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.


இதில் பெரிய சோகம் என்னவென்றால் கான்சாய் விமான நிலையம் வருடத்திற்கு 2 செ.மீ. முதல் 4 செ.மீ. வரை கடலில் தொடர்ந்து மூழ்கிக்கொண்டே இருக்கிறது. விமான நிலையம் தொடங்கி இதுவரை 30 செ.மீ. மேல் கடலில் மூழ்கியுள்ளது.


எத்தனை இன்னல்கள் வந்தாலும் இயற்கைக்கு கொஞ்சமும் சலிக்காமல் ஈடுகொடுப்பவர்கள் ஜப்பானியர்கள் எனபதை இதில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். கான்சாய் ரன்வேக்கு அருகே இன்னொரு இரண்டாவது ரன்வேயையும் இதைப் போலவே அமைத்து விட்டார்கள்.

துணிவோடு இயற்கையோடு போட்டி போடுபவர்களில் ஜப்பானியர்களுக்கு இணையாக வேறு யாரையும் சொல்லமுடியாது என்பது நிதர்சனமான உண்மை!
செவ்வாய், பிப்ரவரி 16, 2016

அழித்த உயிரினம் பயணிப் புறா


அது என்ன அழித்த உயிரினம் என்கிறீர்களா..? உலகில் தோன்றிய உயிரினங்களில் சில இயற்கையாகவே அழிந்திருக்கின்றன. பல மனிதனின் பேராசையால் அழிக்கப்பட்டன. அப்படி மனிதனால் கூண்டோடு அழிக்கப்பட்ட ஒரு உயிரினம்தான் பயணிப் புறா..!
* * * * *

யற்கையின் உன்னத படைப்பில் பயணிப் புறாவுக்கு தனி இடம் உண்டு. அதன் அழகும், பல்வேறு வண்ணங்களும், மென்மையும் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டவை. வட அமெரிக்க பழங்குடியினர் இந்தப் பறவைகளை போற்றுதலுக்குரியதாய் கொண்டாடினர். ஆனால், ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் காலை வைத்த ஒருசில ஆண்டுகளில் இந்த பறவையினமே கூண்டோடு அழிந்து போனது.

வட அமெரிக்காவின் மலைப்பகுதியில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவைகள் தான் பயணிப் புறாக்கள் என்கிற காட்டுப் புறாக்கள். அப்போது வட அமெரிக்காவில் 500 கோடி பயணிப் புறாக்கள் இருந்துள்ளன.

இந்தப் புறாக்கள் கூட்டமாக வானில் பறக்கத் தொடங்கினால் அதைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். அத்தனை அழகானது அந்த ஊர்வலம். வானில் நிகழும் இந்த கண்கவர் ஊர்வலம் ஒரு இடத்தை கடக்க பல மணி நேரம் ஆகும்.

பொதுவாக பறவைகள் இறக்கைகளை மட்டுமே விரித்துப் பறக்கும். பயணிப் புறாக்கள் இறக்கைகளை மட்டுமல்லாமல் அதன் கூடவே வாலையும் சேர்த்து இறக்கை போல் விரித்துக் கொள்ளும். தேவதைக் கதைகளில் வரும் தேவதைகள் வானில் கூட்டமாகப் பறப்பதுபோல் இதன் அழகு இருக்கும். 


இந்த பறவைகள் தனியாக பறப்பதில்லை. எப்போது பறந்தாலும் தன் இனத்தில் உள்ள அத்தனைப் பறவைகளையும் அழைத்துக் கொண்டு கூட்டமாகத்தான் பறக்கும். கோடிக்கணக்கில் இருக்கும் இந்தப் பறவைகள் ஓரிடத்தை கடப்பதற்கு சில மணி நேரம் ஆகும். இத்தனைக்கும் இது மணிக்கு 100 கி.மீ. என்ற அதி வேகத்தில் பறக்கும் பறவை.

1873-ம் ஆண்டு ஏப்ரல் 8-ல் மெக்சிகன் நகரின் வான்வெளியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய புறா ஊர்வலம் முடிவதற்கு மாலை 4.30 மணி ஆனது. அண்ணாந்துப் பார்த்தால் கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை பயணிப் புறாக்கள் சாரை சாரையாக வந்துக் கொண்டே இருந்தன என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்தக் காட்சிகள் அந்த நாட்களில் மிக சாதாரணமானவை. பயணிப் புறாக்களின் ஊர்வலம் தொடங்கிவிட்டால் அந்த பகுதியே கடும் மேக மூட்டத்திற்கு  உள்ளானதுபோல் இருட்டிவிடும்.


இப்படி பார்ப்பவர்கள் கண்ணை உறுத்தும் அளவுக்கு பறந்து பறந்து பரவசப்படுத்தியதுதான் அதற்கு எமனாக அமைந்துவிட்டது. வட அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடியேறிய போது அவர்கள் இந்த புறாக்களை மிக தொந்தரவாக நினைத்தார்கள். புறாக்களை வேட்டையாடத் தொடங்கினார்கள். 

இவற்றை வேட்டையாடுவது எளிதான ஒன்றாக இருந்தது. வெறுமனே வலை விரித்தால் போதும் கொத்துக் கொத்தாக புறாக்கள் சிக்கும். துப்பாக்கியால் சுட்டால், சத்தம் கேட்ட மாத்திரத்திலே அதன் இதயத் துடிப்பு ஏகத்துக்கு எகிறி கூட்டம் கூட்டமாக இறந்து விழும். கூட்டாமாக பறக்கும் போது ஒரு கட்டையை வீசினால் போதும் கொத்தாக புறாக்கள் விழும். அதனால் இந்தப் பறவைகளை இஷ்டத்துக்கு மனம் போன போக்கில் கொன்று குவித்தார்கள் ஐரோப்பியர்கள்.

1884-ல் 30 லட்சம் பயணிப் புறாக்க்கள் கொன்று குவிப்பு 
அதோடு நில்லாமல், இந்த பறவைகளை ரெயில் மூலம் நியூயார்க் போன்ற இடங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். கப்பல் மூலமும் புறா வர்த்தகம் லாபகரமாக நடைப் பெற்றது. புறாக் கறி விலை குறைவாக கிடைத்ததால் இதற்கு அமெரிக்கர்கள் மத்தியில் ஏகப்பட்ட கிராக்கி. குறைவான விலையில் மிருதுவான சுவையான இறைச்சி என்பதால், இதனை முழுநேர வேலையாக செய்து புறாக்களை வேகவேகமாக பரலோகம் அனுப்ப ஆரம்பித்தார்கள். 

1855-ம் ஆண்டு மட்டும் 3 லட்சம் புறாக்கள் பார்சலாக அனுப்பப்பட்டன. 1869-ல் மெக்சிகன் நகரில் இருந்து வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளுக்கு 75 லட்சம் புறாக்களை சுவைக்க அனுப்பிவைத்தார்கள்.


இந்த புறாக்களில் பெண் புறா ஆண்டுக்கு ஒரே ஒரு முட்டை மட்டும்தான் இடும். எனவே அழிக்கப்படும் வேகத்திற்கு அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை. இதனால் 20-ம் நூற்றண்டின் தொடக்கத்தில் தனது பயணத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு பயணிப் புறா தள்ளப்பட்டது. 

உலகில் கடைசி பயணப் புறாவான 'மார்த்தா', சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் 1914 செப்டம்பர் 1-ம் தேதி மதியம் ஒரு மணிக்கு தனது மூச்சை நிறுத்தியது.

கடைசி பயணிப் புறா மார்த்தா
தான் மட்டுமே மேலான உயிரினம் என்ற மனிதனின் எண்ணத்தால் ஏகப்பட்ட உயிரினங்கள் உலகில் அழிந்தன. என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும் மனிதனால் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை..!
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...