வியாழன், மார்ச் 31, 2016

ஜொலிக்கும் ரயில் நிலையங்கள்

ம்மூர் ரயில் நிலையங்கள் எல்லாம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கை மறந்து சுத்தமாக காட்சியளிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், உலகில் சில ரயில் நிலையங்கள் இருக்கின்றன. 'இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன?' என்று  பாடத் தோன்றும். அந்தளவிற்கு அழகில் சொக்கவைக்கும் ரயில் நிலையங்கள் அவைகள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்..

பெர்லின் ஹோப்ட்பெஹஃப் - ஜெர்மனி 

பெர்லின் ஹோப்ட்பெஹஃப் ரயில் நிலையத்தின் வெளித்தோற்றம்
ஜெர்மனியில் இருக்கும் இந்த ரயில் நிலையம் ஐரோப்பியாவிலேயே மிகப் பெரிய பிரமாண்டமான ரயில் நிலையமாகும். நூற்றாண்டுகளைக் கடந்த இந்த பழமையான ரயில் நிலையத்தை இடித்துவிட்டு நவீன வடிவில், நவீன தொழில்நுட்பத்தில் ரயில் நிலையம் முழுவதும் மெட்டல் மற்றும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெர்லின் ஹோப்ட்பெஹஃப் ரயில் நிலையத்தின் உள்த்தோற்றம்
சூரிய ஒளி இதன் மீது பட்டதும் வைரமாக ஜொலிக்கிறது. உள்ளே சென்றால் இது ரயில் நிலையாமா? அல்லது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா? என்று வியக்கும் அளவுக்கு பளிச்சென்று இருக்கும். புதிய ரயில் நிலையம் 2006-ல் திறக்கப்பட்டது. அதற்குள் உலக சுற்றுலா வாசிகளின் மனதை வசீகரித்துவிட்டது.  

நார்த் பார்க் வே கேபிள் - ஆஸ்திரியா

'நார்த் பார்க் வே கேபிள்' ரயில் நிலையத்தின் வெளித் தோற்றம் 
ஆஸ்திரியாவில் உள்ள இன்ஸ்பெர்க் என்ற நகரில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. நவீன தொழிநுட்பத்தில் கடல் அலைகளின் வடிவத்தில் ஆடம்பரமாக கூரை உள்ளது. எல்லாவிதமான அதிர்வுகளையும் நில நடுக்கத்தையும் தாங்கும் விதமாக கட்டப்பட்டுள்ள காஸ்ட்லியான சுரங்க ரயில் நிலையம் இது.

'நார்த் பார்க் வே கேபிள்' ரயில் நிலையத்தின் உள்த் தோற்றம் 

ல கேர் டி ஸ்டரஸ்பொ - பிரான்ஸ்

'ல கேர் டி ஸ்டரஸ்பொ' ரயில் நிலையத்தின் வெளித் தோற்றம்
1883-ல் கட்டப்பட்ட இந்த பழமையான ரயில் நிலையம் 2007-ல் நவீனமயமாக புதுப்பிக்கப்பட்டது. 120 மீட்டர் உயரத்துக்கு மேல் முழுக்க முழுக்க கண்ணாடியால் போர்த்தப்பட்டதுபோல் கட்டினார்கள். வெயில் பட்டால் தங்கநிறத்தில் ஜொலிக்கும் ரயில் நிலையம் இது.

'ல கேர் டி ஸ்டரஸ்பொ' ரயில் நிலையத்தின் உள்த் தோற்றம்


கானாஸவா - ஜப்பான்

'கானாஸவா' ரயில் நிலையத்தின் வெளித் தோற்றம்
இது பழமையும் புதுமையும் இணைந்த கலவையால் உருவானது. இதில் ஜப்பானின் புராதனக் கட்டடக் கலையும் மேற்கத்திய பாணி வடிவமைப்பும் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டது. 14 மீட்டர் உயரமுள்ள பிரமாண்டமான நுழைவு வாயில் ஜப்பானின் பழமையால் உருவானது. இதன் மேற்கூரை 30 ஆயிரம் காண்ணாடி துண்டுகளால் ஆனது. இதுவும் சூரிய ஒளியில் ஜொலிக்கும் ரயில் நிலையம்தான்.

'கானாஸவா' ரயில் நிலையத்தின் நுழைவாயில்


ஆன்ட்வெர்ப் சென்ட்ரல் - பெல்ஜியம்

'ஆன்ட்வெர்ப் சென்ட்ரல்' ரயில் நிலையத்தின் வெளித் தோற்றம் 
இந்த ரயில் நிலையம் பார்ப்பதற்கு தேவாலயம் போலவே ஜொலிக்கும் அழகான ரயில் நிலையம். அரைவட்ட கோள வடிவில் மேற்கூரையும், பிரமாண்டமான தூண்களும் காண கண் கோடி வேண்டும். பக்கவாட்டில் உள்ள கட்டிடங்களின் சிறுசிறு மேற்கூரைகள் மையக்கூரையோடு இணைக்கப்பட்டுள்ளன. இதை ரயில் நிலையங்களின் தேவாலயம் என்று சொல்கிறார்கள்.

'ஆன்ட்வெர்ப் சென்ட்ரல்' ரயில் நிலையத்தின் உள்த் தோற்றம் 

நம்ம ஊர் ரயில் நிலையங்களும் இப்படி ஜொலிப்பது எப்போது?
புதன், மார்ச் 30, 2016

தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் 'சிப்ஸ்'


விதவிதமான வண்ணமயமான காற்றடைத்த சிப்ஸ் பாக்கெட்டுகள் பெட்டிக் கடைகளில் கூட சாரை சாரையாகத் தொங்குகின்றன. இந்த 'சிப்ஸ்' ருசிக்காக ஒருவன் இறந்து போவதாக விளம்பரம் டிவியில் வருகிறது. உண்மையில் இந்த சிப்ஸை சாப்பிட்டால்தான் ஆரோக்கியம் கெட்டு மரணம் கூட வந்தாலும் வரும்போல. ஒவ்வொருநாளும் சிப்ஸ் குறித்து வரும் ஆய்வுகள் திடுக்கிட வைக்கின்றன.

இரவில் 'சிப்ஸ்' கொறித்துக் கொண்டும், 'ஜோக்' அடித்துக் கொண்டும் டி.வி. நிகழ்சிகளை பார்ப்பது இரவின் ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்கும் என்று ஒரு ஆய்வு தற்போது தெரிவிக்கிறது.

கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் நேரடியாக  டி.வி.யில் ஒளிபரப்பாகின்றன. இப்போது கூட டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி இரவில்தான் நடக்கிறது. நல்லவேளை நள்ளிரவுக்கு முன்பே முடிந்துவிடுகிறது.    

இப்படிப்பட்ட போட்டிகளை விளையாட்டு ரசிகர்கள் இரவு நேரத்தில் கண்விழித்து டி.வி. பார்ப்பது வழக்கம். அத்துடன் 'சிப்ஸ்' போன்ற நொறுக்குத்தீனிகளை கொறிப்பதும், குளிர்பானங்கள் குடிப்பதும் நாகரிக வழக்கமாகி வருகிறது. இது இரவு நேர ஆழ்ந்த நித்திரையை கெடுக்கும் என்கிறது ஆய்வு. 


சிப்ஸைக் கொறிப்பதால் இரவில் அடிக்கடி  விழித்துக் கொள்வதும், தூக்கம் வராமல் புரள்வதும் நேரிடும். பொதுவாக நமது உறக்கத்தின் போதும்,  கனவு காணும் போதும், கருவிழிகள் அசையும். இரவு நேரத்தில் கொறிப்பதால், கருவிழி அசைவு குறைவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சராசரியாக ஒரு நாளுக்கு ஆண் என்றால் 1600 கலோரியும், பெண் என்றால் 1400 கலோரியும் உணவு தேவை. இந்த உணவில் 25 சதவீதத்துக்கு குறைவாக கொழுப்புச்சத்து இருக்க வேண்டும். ஆனால் 10 துண்டு 'சிப்ஸ்' சாப்பிட்டால் அதில் 4 கிராம் கொழுப்புச்சத்து கூடிவிடும். அதாவது நம் உடலில் உடனடியாக 36 கலோரி சேருகிறது. தினமும் ஏராளமாக 'சிப்ஸ்' சாப்பிடுவதால் சராசரியாக ஒரு பாக்கெட்டுக்கு 40 கிராம் கொழுப்பும், 360 கலோரியும் உடலில் சேர்கிறது. இதனால் மொத்த கலோரி 2 ஆயிரமாக அதிகரிக்கிறது. இதனால் இரவில் ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை. சிப்ஸை கணக்கில் சேர்க்காமல் நாள் முழுவதும் சாப்பிடும் உணவில் கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலும், அந்தக் கொழுப்பு இரவில் ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும்.

இந்தியாவைப் பொறுத்த வரை ஒருவரது உணவில் 45 சதவீதம் கொழுப்புச்சத்து உணவாகவே இருக்கிறது. இதனுடன் இரவு நேரத்தில் சிப்ஸ் அல்லது நொறுக்குத்தீனிகளை கொறிப்பதால் கொழுப்புச்சத்து மேலும் அதிகரித்து தூக்கத்தை கெடுக்கிறது.


ஒருவருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கம் தேவை. நல்ல தூக்கம் இல்லாததால் மறுநாள் பகல்பொழுதில் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கபடுகின்றன. சிந்தனைத்திறன் குறைதல், கவனம் சிதறுதல், நினைவு மறதி, விபத்துக்கள் போன்றவை நிகழ்கின்றன.

இரவு உணவு முடிந்த பின் குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்குப் பிறகே தூங்கச் செல்ல வேண்டும். இரவு நேரத்தில் காலம் தாழ்த்தி சாப்பிடுவதும், தூக்கம் விழிப்பதற்காக நொறுக்குத்தீனிகள் கொறிப்பதும் தூக்கத்தை கெடுக்கும். ஒருநாள் இரவின் நல்ல தூக்கம் 10 வேலை உணவு தரும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரும். அதனால் நல்ல இனிமையான ஆழ்ந்த உறக்கத்தை துரத்தும் சிப்ஸ்களை தவிர்ப்பது நல்லது.


குழந்தைகளுக்கு சிப்ஸை கண்ணில்கூட காட்டி விடாதீர்கள். டி.வி.யில் எத்தனை கவர்ச்சியாக விளம்பரம் வந்தாலும் அதைப் பார்த்து குழந்தைகள் கேட்டாலும் அந்த பாழும் கொழுப்பை வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள். இதுதான் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நாம் தரும் ஆரோக்கிய முதலீடு. செவ்வாய், மார்ச் 29, 2016

திருச்சி பதிவர்களுடன் ஒரு சந்திப்பு

மிழகத்தின் தூய்மை நகரமான திருச்சிக்கு கடந்த வாரம் ஒரு வேலையாக போயிருந்தேன். அப்போது பதிவரும் நண்பருமான தமிழ் இளங்கோ அவர்களை தொடர்பு கொண்டேன். 'திருச்சி வருகிறேன் நேரில் சந்திக்கலாமா?' என்று கேட்டேன். எனக்காக தனது வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, 'வாருங்கள் சந்திப்போம்!' என்றார். அதோடு நான் இதுவரை சந்திக்காத இரண்டு பெரும் பதிவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார்.

நண்பர் ஜோசப் விஜு எனக்களித்த புத்தகங்கள்
ஒருவர் தனது வலைப்பக்கத்தை வண்ணமயமான ஜொலிஜொலிப்போடு வழங்கும் மூத்த பதிவரும் பிரபல எழுத்தாளருமான வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள், மற்றொருவர் தமிழ் இலக்கிய செல்வங்களை வசீகரத்தோடு அளிக்கும் ஊமைக்கனவுகள் ஜோசப் விஜு அவர்கள். இவர்களோடு மணவை ஜேம்ஸ் அவர்களையும் சந்தித்தேன். இதில் தமிழ் இளங்கோ, மணவை ஜேம்ஸ் இருவரையும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பில் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். இதுவரை நேரில் சந்திக்காத இருவரை சந்திக்கும் அரிய வாய்ப்பை இளங்கோ அவர்கள் எனக்கு அளித்திருந்தார். அவருக்கு ஆயிரம் நன்றிகள். 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நேராக ஆர்.சி. மேல்நிலைப் பள்ளிக்கு சென்றோம். அங்குதான் ஜோசப் விஜு மற்றும் மணவை ஜேம்ஸ் ஆகிய இருவரும் பணியாற்றுகிறார்கள். மிடுக்கான தோற்றத்தில் ஒரு மிலிட்டரி ஆபிசர் போல் இருந்தார் ஆங்கில ஆசிரியரான ஜோசப் விஜு. பின்னர்தான் தெரிந்தது அவர் அந்தப் பள்ளியின் தேசிய மாணவர் படையின் ஏர்ஃபோர்ஸ் ஆபிசர் என்று.  

பின்னூட்டங்களில் தாராளமாக பாராட்டும் குணம் கொண்டவர். அவரை நேரில் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி. இந்த சந்திப்பு எப்போதும் நினைவில் இருக்கும் விதமாக மூன்று புத்தகங்களை பரிசளித்தார். மூன்றுமே முத்தான புத்தகங்கள். எனக்கு மிகவும் பயன்படக்கூடியவை. வழக்கம்போல் அவரது படத்தை வெளியிட மட்டும் தடை விதித்துவிட்டார்.

வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருப்பதால் முன்பு போல் தன்னால் அதிகமாக வலைப்பக்கம் வரமுடியவில்லை என்று கூறினார் மணவை ஜேம்ஸ் அவர்கள். இருவரும் மொறுமொறு பக்கோடாவும் அருமையான காபியும் எங்களுக்கு கொடுத்தார்கள். சுவைத்துக் கொண்டே பேசத் தொடங்கினோம்.

வலைப்பக்கத்திற்கு வெகுநாட்கள் வராத காரணத்தை  கேட்டோம். இனி வருவது சந்தேகமே என்று அதிர்ச்சியை தந்தார் ஜோசப் விஜு. ஏனென்று கேட்டோம் சில பிரச்சனைகள் இருக்கிறது என்று சொன்னார். இருந்தாலும் விட்டுவிடாதீர்கள். உங்கள் பதிவுகளை மீண்டும் வெளியிடுங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம் என்று கூறி விடைப் பெற்றோம்.

அய்யா வைகோ அவர்களுக்கு என்னுடைய 'நம்பமுடியாத உண்மைகள்', 'ஹாலிடே நியூஸ்' புத்தகங்களை வழங்கியபோது எடுத்தது. 
அதற்குள் வை.கோ அய்யாவிடம் இருந்து போன் வந்துவிட்டது. மாலை நேரம் அவரது வீட்டிற்கு சென்றதும் முகமலர்ச்சியோடு வரவேற்றார். வெகுநாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த பெரியவரைப் பார்த்துவிட்டேன். இனிப்பு, காரம், பழங்கள், குளிர்பானம் என்று கொடுத்து அசத்திவிட்டார். எனக்கு அவரது சிறுகதை தொகுப்பான 'எங்கெங்கும்.. எப்போதும்.. என்னோடு..' புத்தகத்தை பரிசளித்தார். பதிவுலகம், வேலை, குடும்பம் என்று பலவற்றையும் பேசினோம்.  

நண்பர் தமிழ் இளங்கோ 'ஆதிசங்கரர்' நூலினை வழங்கியபோது எடுத்தது 
எனக்கு எப்படி வைகோ அய்யா மீது பெரும் மதிப்பு இருக்கிறதோ, அதைப்போலவே அவருக்கும் என்னை பிடித்திருந்தது மிகப் பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனது பாக்கியங்களுள் அதுவும் ஒன்று.

அதன்பின் மாடிக்கு சென்றோம். தொட்டுவிடும் தூரத்தில் மலைக்கோட்டை இருந்தது. ஸ்ரீரங்கருக்கும் அங்கிருந்தே வணக்கம் சொல்லிவிட்டு, கீழே வந்தோம். சுடச்சுட காபி தயாராக இருந்தது. அருந்திவிட்டு விடைபெற்றோம்.

சாதாரணமாக ஒரு வேலைநிமித்தமாக திருச்சி சென்றதை மறக்கமுடியாத ஒரு நாளாக மாற்றியது இந்த சிறு பதிவர் சந்திப்புதான். இந்த நாளை இனிமையாக மாற்ற காரணமாக இருந்த தமிழ் இளங்கோ அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

மாடியில் மலைக்கோட்டை பின்னணியில் அய்யாவுடன் நான் ஞாயிறு, மார்ச் 27, 2016

வலி அறியா குடும்பம்

டலில் ஏற்படும் வலி ஒரு ஆரோக்கிய கண்ணாடி. நமது உடலில் தோன்றும் பாதிப்புகளை உடனுக்குடன் அறிவிக்கும் எச்சரிக்கை மணி. வலி மட்டும் இல்லையென்றால் இத்தனை மருத்துவம் தோன்றியிருக்காது, மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்காது. எல்லா மருவத்துக்கும் அடிப்படை வலிதான். ஒருவேளை அந்த வலி நமக்கு இல்லையென்றால்  என்னவாகும்? நினைக்கவே வியப்பாக இருக்கிறதல்லவா. அப்படி ஒரு வலியில்லா குடும்பமும் உலகில்  இருக்கிறது.


இந்தக் குடும்பம் இருப்பது இத்தாலியில் உள்ள டஸ்கனிஸ் என்ற கிராமத்தில். இங்கு சென்று மாஸிடிஸ் குடும்பத்தைப் பற்றி கேட்டால் எல்லோரும் ஒன்றாக வந்து வழிகாட்டுவார்கள். இவர்கள் அவ்வளவு பிரசித்தம். அந்த குடும்பத்தில் இருக்கும் எவருக்கும் வலி என்ற உணர்வே கிடையாது. இந்த குறையும் இப்போது ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.   

அந்தக் குடும்பத்துப் பெண்ணான மொரியாவுக்கு தன்னுடைய சின்ன வயதில் காலில் அடிபட்டிருக்குமோ என்ற சந்தேகம் பெரிய வயதில் வந்தது. மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பார்த்தார். இரண்டு முறை கால் எலும்பு முறிந்திருக்கிறது என்றார். வலி என்ற உணர்வு இல்லாததால் எலும்பு உடைந்திருப்பதே அவருக்கு தெரியவில்லை. 


மொரியாவின் மூத்த மகள் நடீஸியா. இவருக்கு எவ்வளவு கடுமையான குளிரையும் தாங்கும் சக்தி இருக்கிறது. சொல்லப்போனால் அவருக்கு குளிர் என்பதே எப்படி இருக்கும் என்று தெரியாது. எப்படிப்பட்ட கடுங்குளிரிலும் சில்லிடும் குளிர்ந்த நீரில் இறங்கி நீச்சல் அடிப்பார். இவரின் தங்கை எலினாவுக்கு சுடுதல் என்ற உணர்வே கிடையாது. அதனால் சூடு தெரியாது. கொதிக்கும் உணவைக் கொடுத்தாலும் அப்படியே சாப்பிடுவார். 

மாஸிடிஸ் குடும்பத்தைப் பற்றி கேள்விப்பட்ட டாக்டர் ஜான் உட் என்பவர் இவர்களின் வீட்டுக்கு வந்தார். இவர் உலகம் முழுவதும் சுற்றி வலிகள் சம்பந்தமான பல ஆய்வுகளை செய்து வருகிறார். இவர் ஒரு 'ஜெனடிக்' விஞ்ஞானி என்பதால் மரபணு பற்றிய பல தகவல்களை கூறுகிறார். ஒரு மனிதனுக்கு வலி ஏற்படவில்லை என்றால் அதற்கு மரபணுதான் காரணம். அவர்களின் மரபணுவில் வலியை ஏற்படுத்தும் கூறுகள் இல்லை என்று அர்த்தம். அதனாலே அவர்கள் வலியை உணர்வதில்லை. 

நம் உடலில் இருக்கும் நூற்றுக்கணக்கான மரபணு கூறுகள் வலியை ஏற்படுத்தும் பணியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நமது உடலில் இருக்கும் நியூரான்கள்தான் நமக்கு அடி பட்டால் அந்த தகவலை முதுகு தண்டு மூலம் மூளை தண்டிற்கும் அங்கிருந்து மூளையின் ஒரு பகுதியாக விளங்கும் 'கார்டெக்ஸ்' என்ற பகுதிக்கும் தெரியப்படுத்தும். இத்தனை செயல்கள் நடந்தால்தான் நமக்கு வலிக்கத் தொடங்குகிறது. மாஸிடிஸ் குடும்பத்துக்கு இந்த ப்ராசஸ் நடைபெறுவதில்லை. அதனால் அவர்களுக்கு வலிப்பதும் இல்லை என்று டாக்டர் ஜான் உட் கூறுகிறார். 

ஆனாலும் வலி அவசியமானதுதான்.
வெள்ளி, மார்ச் 25, 2016

மக்களை நம்பி மீண்டும் வருகிறோம்..!

ரு பத்திரிக்கை நடத்துவது எத்தனை கஷ்டமானது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றாக தெரியும். பத்திரிகைக்கான தகவல்களை திரட்டுவதிலிருந்து, அச்சிட்டு வெளிவந்து அது கடைகளுக்கு சென்ற சேர்ந்து, அதன்பின் வாசகர்களை அடைவது வரை பல நிலைகளை கடந்து வரவேண்டும். இதில் ஏதாவது ஒன்று குறைப்பட்டாலும் முழு முயற்சியும் வீணாகிவிடும். அதிலும் ஏஜெண்டுகள் கைகொடுக்கவில்லை என்றால் மொத்த முதலுக்குமே மோசம் ஏற்படும். அப்படியொரு நிலைதான் எங்களுக்கும் ஏற்பட்டது.

இதழின் அட்டை
பொதுவாக சிறு பத்திரிகைகளுக்கு ஏற்படும் நிலைதான் அது. அந்த பத்திரிக்கைகளை பெரிய ஏஜண்டுகள் எப்போதும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அப்படியே கண்டு கொண்டு சிறு பத்திரிகைகளுக்கு அவர்கள் ஆதரவு கொடுத்தாலும், அவர்கள் ஏற்கனவே ஏஜெண்டு எடுத்திருக்கும் பெரும் பத்திரிகைகள் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும். அந்த சிறு பத்திரிக்கை ஒருவேளை பெரிதாக வளர்ந்துவிடும் என்ற நிலை அல்லது சந்தேகம் பெரிய பத்திரிகைக்கு ஏற்பட்டால், அந்த சிறு பத்திரிகையை கடைகளில் மக்கள் பார்வைக்கு தெரியும்படி 'டிஸ்ப்ளே' செய்யக்கூடாது என்று முதலில் கட்டளை இடும்.


அப்போதே சிறு பத்திரிகைக்கான வீழ்ச்சி தொடங்கிவிடும். கடையில் ஏதோவொரு மூலையில் பத்திரிக்கை வைக்கப்படும். விரும்பி கேட்கும் வாசகர்களுக்கு மட்டுமே கடைக்காரர் எடுத்து தருவார். ஏஜெண்டு என்ன சொல்கிறாரோ அதைதான் கடைக்காரர் கேட்பார். 5 அல்லது 10 புத்தகம் விற்கும் சிறு பத்திரிகைக்காக 100 - 150 பிரதிகள் விற்கும் பெரும் பத்திரிகையை யாரும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு நகரில் இருக்கும் பெரும் ஏஜெண்டு ஒருவர் இப்படி செய்தால் அந்த நகரில் இருக்கும் அத்தனை கடைகளிலும் அந்த சிறு பத்திரிக்கை ஒளிந்து கொண்டேதான் இருக்கும்.

எனது கட்டுரை 
சரி, பெரிய ஏஜெண்டுகள்தான் இப்படி என்றால், சிறு ஏஜண்டுகள் எப்படி?
சிறு ஏஜெண்டுகளில் மிகப் பொறுப்பாக இருப்பவர்கள் மிகக் குறைவே. அதற்கு காரணமும் இருக்கிறது. பெரிய பத்திரிகைகளுக்கு ஏஜெண்டு எடுக்க லட்சக்கணக்கில் 'டெபாசிட்' கட்டவேண்டும். சிறு பத்திரிக்கை ஏஜெண்டுகள் அப்படி எதுவும் கட்டவேண்டியதில்லை. விற்றால் கமிஷன், இல்லையென்றால் ரிட்டர்ன் என்ற இரண்டு வாய்ப்பு இருப்பதால் அவர்கள் கடைகளுக்கே புத்தகங்களை கொண்டு போய் சேர்ப்பதில்லை.

பதிவர் கடற்பயணங்கள் சுரேஷ்குமார் கட்டுரை
ஆக, கைக் காசைப்போட்டு உயர்ந்த தரத்தில் புத்தகத்தை உருவாக்கி தமிழகம் முழுவதும் எல்லா இடங்களுக்கும் அனுப்பியும், அதை வாங்க வாசகர்கள் தயாராக இருந்தும், மக்களுக்கு புத்தகமோ, உரிமையாளருக்கு பணமோ சென்று சேரவேயில்லை. இந்தநிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் 'பிரேக்கிங் பாய்ண்டு'க்கு அந்த சிறு பத்திரிக்கை வந்தது. மூன்றாண்டுகளாக வந்து கொண்டிருந்த பத்திரிக்கை நிறுத்தப்பட்டது. இவ்வளவு நேரம் இங்கு சிறு பத்திரிக்கை என்று நான் குறிப்பிட்டது நான் பணியாற்றும் 'ஹாலிடே நியூஸ்' என்ற சுற்றுலா மாத இதழை பற்றிதான். சில மாதங்களுக்கு முன்பு அது நிறுத்தப்பட்டது.

எனது தொடர்
அப்படி நிறுத்தப்பட்ட பிறகுதான் வாசகர்கள் மத்தியில் அந்த சிறு பத்திரிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. தினமும் ஏராளமான அழைப்புகள். இதழ் நிறுத்தப்பட்டது என்ற உண்மையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. தங்களுக்கு ஏற்பட்ட சொந்த இழப்பு போல் வருந்தினார்கள்.

கோவையில் இருந்து பேசிய ஒரு பெண் வாசகர் அழுதேவிட்டார். ஒரு வாசகர் ஈரோட்டில் உங்கள் பத்திரிக்கை கிடைக்கவில்லை என்பதற்காக கோயம்புத்தூர் சென்று வாங்கி வருகிறேன் சார் என்றார். நிறைய வாசகர்கள் விலையை உயர்த்திக் கொள்ளுங்கள். 100 ரூபாய் என்றாலும் இந்த பத்திரிகையை வாங்குவோம். தயவு செய்து மீண்டும் தொடங்குங்கள் என்றார்கள். இதழுக்காக நன்கொடை தருகிறோம் என்ற வாசகர்களும் உண்டு. எப்படி ஒரு சிறு பத்திரிகைக்கு இப்படி உணர்வுப்பூர்வமான வாசகர்கள் கிடைத்தார்கள் என்பது எங்களுக்கு இன்னமும் மீள முடியாத ஆச்சரியமாகவே இருக்கிறது.


ஏன் ஒரு பத்திரிகை வாங்குவதற்காக 100 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும்? எங்களுக்கு புரியவில்லை. அந்தப் பெண்ணின் அழுகுரல் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நிறைய உணர்ச்சிப் போராட்டங்கள். எங்களை நெகிழ வைத்துவிட்டது. வாசகர்களின் இந்த மறைமுகமான உணர்வுப் போராட்டம் மட்டுமே மீண்டும் இதழ் வெளிவர முக்கிய காரணம்.

வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் 'ஹாலிடே நியூஸ்' வருகிறது.இந்த முறை வாசகர்களாகிய உங்களை மட்டுமே நம்பி வருகிறது என்று அவர்களுக்கு தெரிவித்ததும், அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தினமும் வாழ்த்து மழையில் நனைந்து  கொண்டிருக்கிறோம்.

பதிவர் வெங்கட் நாகராஜ் கட்டுரை
ஏஜெண்டுகள் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக  புத்தகத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். சந்தா மூலம் அதிகமான வாசகர்களை சென்றடைய இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இதுபோக ஒரு ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடைகளில் மட்டுமே எங்களின் நேரடி கண்காணிப்பில் விற்பது என்று முடிவு செய்துள்ளோம். அதன்படி ஒவ்வொரு ஊரிலும் பிரீமியம் புக் ஸ்டால் என்கிற அனைத்துவகையான வார, மாத இதழ்கள் விற்கும் கடைகள் நான்கைந்து மட்டுமே இருக்கும். அவற்றில் மட்டுமே 'ஹாலிடே நியூஸ்' புத்தகம் கிடைக்கும். விரும்பும் வாசகர்கள் அங்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்.

தமிழகம் பற்றிய எனது தொடர்
வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து 'ஹாலிடே நியூஸ்' தொடர்ந்து வெளிவருகிறது. ஏப்ரல் மாத இதழில் இடம் பெற்றுள்ள சில பக்கங்களைத்தான் இந்தப் பதிவில் கொடுத்துள்ளேன். வடக்கு கர்நாடகாவில் இருக்கும் 'பட்டதக்கல்' என்ற இடத்தில் சாளுக்கிய மன்னர்கள் உருவாக்கிய அற்புதமான கலைப்படைப்புகள்தான் இம் மாத இதழின் முகப்புக் கட்டுரையாக வந்திருக்கிறது. யாத்ரிகன் என்ற புனைப் பெயரில் நான் எழுதியது.

இதுபோக வடகிழக்கு மாநிலங்கள் பற்றி 'நார்த் ஈஸ்ட்' எனும் கட்டுரைத் தொடரும். 'பயணம்' என்ற கட்டுரைத் தொடரும் நான் எழுதியிருக்கிறேன். நமது பதிவர்களின் பங்கும் இதில் இருக்கிறது. கடல் பயணங்கள் சுரேஷ் குமார் ஆஸ்திரேலியாவின் பெங்குயின்கள் பற்றி எழுதியிருக்கிறார். நமது பயணப் பதிவர் வெங்கட் நாகராஜ் எழுதிய 'முதுகு சுமையோடு ஒரு பயணம்' கட்டுரையும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் நமது பதிவர்கள் வை.கோபாலகிருஷ்ணன், டாக்டர் பி.ஜம்புலிங்கம், சுபாஷினி டெர்மல் ஆகியோரும் பங்களிக்க இருக்கிறார்கள்.

வாசகர் அனுபவம்
மேலும் வாசகர்களும் தாங்கள் சென்றுவந்த சுற்றுலா தளங்களை படங்களுடன் எழுதி அனுப்பலாம். அதற்கு senthil.msp@gmail.com என்ற என்னுடைய இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம். எனக்கு எழுத வராது ஆனால் நாங்கள் குடும்பத்தோடு சுற்றுலா சென்ற படங்கள் இருக்கின்றன என்பவர்களுக்காகவே ஒரு பக்கம் இருக்கிறது. அதில் வாசகர்களின் சுற்றுலா படங்கள் இடம்பெறும். அதற்கான படங்களை myholidayphoto@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். பிரசுரிக்க காத்திருக்கிறோம். இதழ் வேண்டும் என்கிறவர்கள் 94435-71391 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வாசகர்களின் சுற்றுலா படங்கள்
உலகத் தரத்தில் ஒரு தமிழ் இதழை தரவேண்டும் என்ற எங்களின் எண்ணத்தில் உருவானதுதான் இந்த 'ஹாலிடே நியூஸ்'. இதைப் படிக்கும்போது ஆங்கிலத்தில் வரும் 'டிராவலர்' புத்தகங்களை படிக்கும் உணர்வு ஏற்படும். உங்களின் இல்லம், அலுவலக வரவேற்பறை, மருத்துவமனை, சலூன், நூலகம் என்ற மக்கள் கூடும் இடங்களில் பெருமையாக அந்த இடத்தை அலங்கரிக்கும் ஓர் இதழ். உங்கள் ஆதரவோடு சிகரம் தொடுவோம்..!

வாசித்துப் பாருங்கள் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள்..!


வியாழன், மார்ச் 24, 2016

தன்னம்பிக்கையின் மறுபெயர் கிரிஸ்டோபர் ரீவ்


சூப்பர் மேனை தெரியாதவர்கள் யாரும் இந்த உலகில் இருக்க முடியாது. சினிமா உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பிரமிப்பில் கட்டிப் போட்டு வைத்த சாகச நாயகன். ஹாலிவுட் சூப்பர் மேன் பாத்திரத்தில் நடித்த கிரிஸ்டோபர் ரீவ்ஸ், 80 மற்றும் 90 களின் கனவு நாயகன். 'உலகின் பலசாலி' என்று கொண்டாடப்பட்ட சூப்பர் மேன் வாழ்விலும் நிறைய சோகங்கள் இருக்கின்றன. 

ஒரு விபத்து இவரை ஒட்டு மொத்தமாக முடக்கிப் போட்டது. திரையில் விண்ணில் பறந்து பல சாகசங்கள் செய்த இந்த துணிவு மனிதர், அந்த விபத்துக்குப் பின் தனது சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கிப் போனார். அந்த சோதனையை ஏற்றுக்கொள்ள முடியாத கிறிஸ்டோபர், தற்கொலை முயற்சிவரை போனார். பின்னர் மனம் மாறி வாழ்க்கையில் துணிவோடு போராடவும் முடிவு செய்தார்.

கிரிஸ்டோபர் ரீவ்
நியூயார்க் நகரில் 1952, செப்டம்பர் 25-ல் பிறந்த இவர் தனது நான்கு வயதை எட்டியபோது பெற்றோர்கள் விவாகரத்து செய்துகொண்டனர். கிறிஸ்டோபர் தனது சகோதரனுடன் தாயாருடன் சேர்ந்து வாழத்தொடங்கினார். சகோதரர்கள் இருவருக்கும் நடிப்பது என்றால் மிக விருப்பம். 

கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் இவருக்கு உலகப் புகழ் பெற்ற 'ஜூலியட் மேடை கலைப் பள்ளி'யில் நடிப்பு பயிற்சி பெறும் வாய்ப்பு கிட்டியது. அதில் பயின்ற போதே அவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. முதன் முதலாக 1976-ல் புகழ்பெற்ற நடிகையான கேத்ரின் ஹெப்பர்னுடன் இணைந்து நடித்தார். 'எ மேட்டர் ஆப் கிராவிட்டி' என்ற இசை நாடகத்தில் நடித்தார். 1978-ல் அவருக்கு சினிமாவில் சூப்பர் மேனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக அப்போது 200 புதிய முகங்களை பல்வேறு கேமரா சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். இறுதியில் தேர்வானவர், கிறிஸ்டோபர் மட்டும்தான்.    

தொலைகாட்சி தொடரில் கிறிஸ்டோபர்
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். அதன்பின் 16 திரைப்படங்கள், 12 டெலிஃபிலிம்கள், 150 மேடை நாடகங்கள் என்று நடித்து அசத்தினார்.  சாகச காட்சிகளில் கூட 'டூப்' போடாமல் நடிப்பது இவரின் பலம். நடிப்பைத் தவிர சாகசத்திலும் இவர் கில்லாடி. சாகசத்திற்காகவே விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டார். ஒரு சிறிய விமானத்தை எடுத்துக் கொண்டு தனியாளாக இயக்கி அட்லாண்டிக் பெருங்கடலை கடந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவருக்கு படகும் ஓட்டத் தெரியும். முத்து குளித்தல், பனி சறுக்கு, குதிரை ஏற்றம் என்று பலவற்றிலும் சமத்தர்.

1995 மே மாதம் 27-ம் தேதி, அவர் வாழ்வையே திருப்பிப் போட்ட நாள். அன்று தனது குதிரை மீது அமர்ந்து சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று அவரது குதிரை மிரண்டுபோய் அவரை பின்பக்கமாக தூக்கி எரிந்தது. குதிரையின் கடிவாளத்தில் கிறிஸ்டோபரின் கை மாட்டிக்கொள்ள தலைக்குப்புற கீழே விழுந்தார். தலைதான் தரையில் மோதியது. தலையில் பலத்த அடி. அவரின் முதுகெலும்புகள் இரண்டு நொறுங்கின. கழுத்து எலும்புகளும் ஒடிந்தன. அந்த நொடியே அவரது கழுத்துக்கு கீழ் உள்ள  உடல் முழுவதும் செயலிழந்தது. மூச்சுக் கூட விடமுடியாமல் தவித்தார். உடனடி மருத்துவம்தான் அவர் உயிரை காப்பாற்றியது. 

விபத்துக்குப் பின்
மிக சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் அவரது தலையை மீண்டும் முதுகெலும்போடு மருத்துவர்கள் இணைத்தனர். தனது வாழ்நாளில் ஒவ்வொரு நொடியையும் சுறுசுறுப்புடன் கழித்த அந்த தைரிய மனிதரால், தனது சுண்டு விரலைக் கூட அசைக்கமுடியாத நிலைக்கு போனார் எவ்வளவு பெரிய வேதனை. இந்த வேதனையில்தான் அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தார். பின் தனது மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் வாழவேண்டும் என்று தீர்மானித்தார். 

முதுகெலும்பு காயங்களுக்கான ஆராய்ச்சிக்கு அதிகம் செலவிடும்படி அவர் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார். 1996-ல் அவரது பெயரிலே ஒரு அறக்கட்டளையை தொடங்கினார். 1998-ல் இவர் எழுதிய 'ஸ்டில் மீ' என்ற சுயசரிதை புத்தகம் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் இடம்பெற்றது. 

மேடையில் நம்பிக்கை உரை 
உதவியாளர்கள் உதவியோடு உலகில் எங்கிருந்து அழைப்பு வந்தாலும் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொண்டு மேடையில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார். இவர் தனது வேதனை எல்லாவற்றையும் மறைத்து பேசும்போது மக்கள் கண்களில் கண்ணீர் கசியும்.

இவருக்கு சிகிச்சை அளித்த வாஷிங்டென் பல்கலைக்கழக மருத்துவர் டாக்டர். ஜான் மெக்டொனால்ட் தன் வாழ்நாளில் தான் சந்தித்தவர்களில் கிரிஸ்டோபர் ரீவ்ஸைப் போன்ற மனோத்திடத்தை வேறு எவரிடத்திலும் கண்டதில்லை என்றும், இதற்கு முன்பு வரை இது போன்ற காயம் ஏற்பட்டவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றுதான் கருதப்பட்டது, ஆனால் ரீவ்ஸ்க்கு பிறகு தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

விபத்து நிகழ்ந்ததிலிருந்து கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் 'சூப்பர்மேன்' என்ற பெயருக்கேற்ப அசாதாரணமான மனோதிடத்தை உலகுக்கு படம் பிடித்துக்காட்டிய  கிரிஸ்டோபர் ரீவ்ஸ், தமது 52 ஆவது வயதில் 2004, அக்டோபர் 10-ல் காலமானார். அவரது உடல் நம்மை விட்டு மறைந்திருக்கலாம் ஆனால் அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் தன்னம்பிக்கை என்ற ஒளி என்றும் இந்த உலகில் மறையாதிருக்கும்.

சுயசரிதைசெவ்வாய், மார்ச் 22, 2016

எனது நேர்காணல்

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் கவிஞருமான திரு.முத்துநிலவன் அவர்கள் வலைப்பதிவுலகில் தனக்கென்று தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர். சமூகத்தில் தீயாக பற்றி எரியும் பிரச்சனைகளை தன் வலைப்பக்கத்தில் காட்டமாக விமர்சித்து எழுதுக்கூடியவர். பதிவுலகில் அவ்வப்போது புதுமையாக ஏதாவது பரிட்சித்துப் பார்க்கும் இளைஞர்.அவர் தற்போது மேற்கொண்டிருக்கும் ஒரு புது முயற்சிதான் இணைய எழுத்தாளர்களை நேர்காணல் செய்து அறிமுகப்படுத்துவது. அந்த புது முயற்சின் தொடக்கமாக எனது நேர்காணலை அவரது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தேர்ந்தெடுத்த கேள்விகள் மூலம் அனைத்து விவரங்களையும் வெளிக்கொணர்ந்து விடுகிறார். அதுவொரு இனிய அனுபவம்.!

நேர்காணல் மூலம் என்னைப் பற்றி பல விவரங்களை பதிவுலகுக்கு அறியச் செய்த அய்யா முத்துநிலவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!


எனது நேர்காணலை வாசிக்க இங்கே சொடுக்கவும்..நேர்காணல் குறித்த தங்கள் கருத்தை தவறாமல் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். 

அன்புடன்,
எஸ்.பி.செந்தில்குமார் திங்கள், மார்ச் 21, 2016

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் வைபவி..?!


வாட்சாப்பில் வந்த இந்த செய்தி என்னை மிகவும் கலங்க வைத்துவிட்டது. அதை அப்படியே இங்கே பகிர்கிறேன்!

பல்லாவரத்திலிருந்து குன்றத்தூர் போகும் சாலையில் இருக்கிறது திருமுடிவாக்கம்.. உயர உயர அபார்ட்மென்டுகள். ஆயிரக் கணக்கான வீடுகள்! ஏரியா மொத்தமும் சொல்லிச் சொல்லி மாய்கிறது அந்தச் சம்பவம் பற்றி!

பிரைமரி ஸ்கூலில் மூன்றே மூன்று வருஷம் தனக்கு டீச்சராக இருந்த ராஜம்மா என்பவரை, 10 வருஷங்களாக நினைத்திருந்த தோடு, உடல்நிலை சரியில்லாத நிலையிலும் குஜராத்திலிருந்து வந்து அவரைப் பார்த்து, அவர் தோளிலேயே மரித்திருக்கிறது ஓர் அழகிய ரோஜா!

வைபவி விஜயலஷ்மி - இதுதான் அந்த மாணவியின் பெயர். கண்ணீருக்கும் கேவல்களுக்கும் இடையே, கோரமான அந்த நிஜத்தைப் பகிர்ந்துகொள்கிறார், ஆசிரியை ராஜம்மாள்.

‘‘இந்த இடம்தாங்க அந்தக் குழந்தை வந்து உட்கார்ந்திருந்தது... இதோ, இந்தத் தோள்லதான் சாய்ஞ்சு படுத்திருந்துச்சு. அதோட விரல்களைப் பிடிச்சபடி நான் கன்னத்தைத் தட்டிகொடுத்துட்டு இருந்தேன்.. அப்படியே என் தோள்ல சாய்ஞ்சபடியே உயிர் போயிடுச்சுங்க.. இப்போ வரை என்னால நம்ப முடியலை! எதுக்காக என் மேல அந்தக் குழந்தைக்கு அப்படியொரு பாசம்... என்ன கொடுத்தேன் நான்? ஒரு டீச்சரா மூணு வருஷம் நான் அதுகிட்ட அன்பு காட்டினதைத் தவிர வேற எதையும் பெரிசா செய்துடலை... ஆனா, அந்தக் குழந்தை எனக்குக் கொடுத்துட்டுப் போயிருக்கிற மரியாதை, கௌரவம்.. எப்பேர்ப் பட்டது? உலகத்தில் யாருக்காவது இப்படி நடந்திருக்குமா? நடந்ததுனு சொன்னால்கூட நம்ப மாட்டோமே!’’  மனசை ஆற்ற முடியாமல், 
குழந்தையைப் போல அரற்றுகிறார் ராஜம்மாள்.

‘‘2007-ம் வருஷம்.. நான் தாம்பரம் கேந்திரிய வித்யாலயா 2 (ஏர்ஃபோர்ஸ் ஸ்டேஷன்) ஸ்கூல்ல பிரைமரி செக்ஷன்ல வேலை பார்த்துட்டிருந்தேன். அங்கே முதல் வகுப்புக்கு எடுக்கிற அதே ஆசிரியைதான் மூணாவது வகுப்பு வரை. அதனால குழந்தைங்க நல்லா பழகி ஒட்டிக்குவாங்க. வைபவியும் அப்படித்தான்..

நார்மல் குழந்தைகளைவிட கொஞ்சம் பருமனா இருந்ததால், மத்த பசங்க அவளைக் கிண்டல் பண்ணுவாங்க. நான் அவகிட்ட பரிவா நடந்துக்குவேன். அதனால என்கிட்ட அந்தக் குழந்தைக்குக் கூடுதல் பிரியம். தன் லன்ச் பாக்ஸை பிரிச்சு, நான் ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டு ‘நல்லாருக்கு’னு சொன்ன பிறகுதான் அது சாப்பிடும். என் புடவை நல்லாயிருந்தா முதல்ல ஓடி வந்து சொல்லும்! ‘உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு யார்’னு கேட்டாகூட, ‘ராஜ்மா மேம்’னு என் பேரைச் சொல்லும்.

வைபவியோட அப்பா ராம கிருஷ்ணராஜா, ஏர்ஃபோர்ஸ்ல விங் கமாண்டர்; அம்மா ப்ரியா ஹவுஸ் வொய்ஃப்! கல்யாணமாகி 10 வருஷங்கள் குழந்தையில்லாம, டில்லிக்குப் பக்கத்திலிருக்கிற வைஷ்ணவிதேவி கோயில்ல பிரார்த்தனை செய்து, முதல்ல பையன் வைஷ்ணவ் பிறந்திருக் கான். அடுத்ததுதான் வைபவி! அதனால வீட்டுல அந்த ரெண்டு குழந்தைகளும் அவங்களுக்கு  ரொம்ப செல்லம்!

வைபவி தேர்டு ஸ்டாண்டர்டு முடிக்கிறப்போ, அவங்கப்பாவுக்கு அலகாபாத்துக்கு டிரான்ஸ்ஃபர் ஆச்சு. ‘போகவே மாட்டேன்’னு அடம் பிடிச்சு நின்னுது வைபவி. ‘ராஜ்மா மேமும் என்கூட வரணும்’னு ஒரே அழுகை! நான் வர முடியாதுங்கிற யதார்த்தத்தைப் புரிஞ்சுக்கத் தெரியாத வயசு! ‘எங்க அப்பா விங் கமாண்டர் தானே மேம்? பிரின்ஸிபால்கிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கி உங்களையும் அங்கே கூட்டிட்டுப் போயிடுவேன்’னு அது சொன்னப்ப, அந்தப் பிஞ்சு இதயத்தின் பாசத்தில் வாயடைச்சுப் போயிட்டேன். அப்புறம் ஒரு வழியா, ‘ஃப்ளைட்ல இப்போ டிக்கெட் இல்லையாம்.. நாளைக்கு ஃப்ளைட்ல மேடம் வருவாங்க!’னு சொல்லி அவளை சமாதானப் படுத்தி, அனுப்பி வச்சோம்!

அங்கே போயும் ரொம்ப நாட்களுக்கு ‘என்ன இன்னும், மேம் வரலையே?’னு கேட்டுட்டே இருந்திருக்கா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் சொல்லி சமாளிச்சிருக்காங்க. ஒரு கட்டத் துல அவளே புரிஞ்சுக்கிட்டா. அதுக்கப்புறம் போன்ல பேச ஆரம்பிச்சா!

வருஷா வருஷம் ஏப்ரல்ல அவ பிறந்த நாளுக்கு நான் வாழ்த்துச் சொல்வேன். என் பிறந்த நாளன்னிக்கு காலையில் வர்ற முதல் கால் அவளோடதாத்தான் இருக்கும். என்கிட்ட பேசும்போது எல்லாம் மறக்காம அவ கேட்கும் கேள்வி.. ‘ஏன் மேம் எந்த டீச்சருமே உங்களை மாதிரி இருக்க மாட்டேங் கிறாங்க?’ என்பதுதான். அவளோட அன்பை நினைச்சு எனக்குக் கண்ணீரே துளிர்க்கும். ‘எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங் கம்மா’ என்பதுபோல பதில் சொல்வேன். ‘யூ ஆர் ஸோ லவிங்! ஸோ ஸ்வீட்! ஐ லவ் யூ ராஜ்மா மேம்! யூ ஆர் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்!’ - இதெல்லாம் வைபவி அடிக்கடி சொல்ற வார்த்தைகள். 
எதுன்னாலும் நான் சொன்னா கேட்டுக்குவா. வீட்ல அவ ஏதாவது மருந்து சாப்பிடலைன்னா கூட அவங்க பாட்டி, எனக்கு போன் பண்ணுவாங்க. நான் சொன்னதும் சமர்த்தா சாப்பிட்டுடும் குழந்தை! அந்த அளவுக்கு ஏதோ ஒரு அட்மிரேஷன், அட்டாச்மென்ட்!

இன்னொரு விஷயம் கேட்டு நான் ஆடிப் போய்ட்டேன்... ‘டின்னருக்கு என்ன வேணும்’னு பாட்டி கேட்டா, ‘சப்பாத்தி வித் மை டீச்சர்’னு சொல்வாளாம். அவளுக்கு ராஜ்மா (பீன்ஸ்) ரொம்பப் பிடிக்கும். வீட்ல, அவளோட ரூம்ல நான் தேசிய நல்லாசிரியர் விருது வாங்கின போட்டோவை வச்சிருக்கிறதா அவங்க அம்மா சொல்வாங்க.

ஆச்சு.. கால ஓட்டத்தில் இப்படியே பத்து வருஷங்கள் ஓடிடுச்சு. வைபவி பத்தாவது படிச்சிட்டிருந்தா. போன வருஷம் அக்டோபர்னு நினைக்கிறேன்.. நான் போன்ல பேசினப்போ, அவ குரலே சரியில்லை. ஏதோ மேல் மூச்சு வாங்குற மாதிரி பேசினா. ‘குழந்தைக்கு ஏதோ உடம்புக்கு’னு தெரிஞ்சுது. வைபவியின் அப்பா கிட்ட பேசும்போது அவர் குரலும் சுரத்தில்லாம இருந்தது. என்னன்னு புரிஞ்சுக்க முடியல.

நவம்பர் மாசம் வெள்ளம் வந்தப்போ, நான் எப்படி இருக்கேன்னு கேக்கறதுக்காக பேசினாங்க. ரெண்டு தடவை வைபவி பேசினபோதும், ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசியிருக்கானு பின்னாலதான் தெரிஞ்சுது! அவளுக்கு கிட்னியில் பிரச்னை, டயாலிசிஸ் பண்ணிட்டிருக்காங்க என்பது வரை தகவல் சொன்னாங்க.

மனசு வலிச்சுது! ‘கடவுளே... ஏன் இந்தச் சின்னக் குழந்தையை இப்படி கஷ்டப்படுத்துற?’னு என் இஷ்ட தெய்வம் பெருமாள் கிட்ட வேண்டிக்கிட்டேன். அதுக்கு அடுத்த முறை பேசும்போது, ‘எனக்குக் குழந்தையைப் பார்க் கணும் போலிருக்கு!’னு சொல்லி, ஏர் டிக்கெட் எல்லாம் கூட ட்ரை பண்ணினேன். ஆனால், அவங்கப்பா ‘பொங்கலுக்கு சென்னை வந்தாலும் வருவோம் மேடம். வைபவியும் உங்களைப் பார்க்கணும்னு தினமும் சொல்லிட்டே இருக்கு!’ என்றார். அதனால நான் கிளம்பல.

ஆனா, பொங்கலுக்கு வரல. அதுக்கப்புறம், இந்த பிப்ரவரி மாசம் 6-ம் தேதி.. திடீர்னு வைபவிகிட்டே இருந்து போன்! என்னோட அட்ரஸைக் கேட்டா. எதுக்குனு கேட்டப்போ, அப்பா ஏதோ கொரியர் அனுப்பணும்னு சொன்னாங்கன்னு சொன்னாள். ஆனா, என்கிட்ட சொல்லாம சர்ப்ரைஸா என் முன்னால வந்து நிற்கணும்கிறது அவளோட திட்டமா இருந்திருக்கு. 

7-ம் தேதி பார்த்தா, கார்ல வந்து இறங்குறாங்க. வைபவியும், அவ பேரன்ட்ஸும். அப்படியே அவளைக் கட்டிப் பிடிச்சி, உச்சி முகர்ந்தேன். டயாலிசிஸ் பண்ணின அடையாளமா கழுத்துல தழும்பு. துப்பட்டாவால அதை மறைச்சிருந்தா. முகம் லேசாக உப்பியதுபோல இருந்துச்சு. என்னைப் பார்த்த சந்தோஷத்தில் நோயைக்கூட மறந்துட்டு, முகத்தில் அவ்வளவு ஒரு மலர்ச்சி யோட பேசிட்டிருந்தா.. அவளோட டென்த் எக்ஸாம்ஸ் பத்தி சொன்னா. ‘நான் நல்லா எழுதி உங்க ஸ்டூடன்ட்னு ப்ரூவ் ப்ண்ணுவேன்’னு சொன்னா.

எல்லோருக்கும் டீ போட்டேன். வைபவிக்கும் கொடுத்தேன். அரை டம்ளர் குடிச்சது குழந்தை. கொஞ்ச நேரம் படுத்தது. அப்புறம், படுத்திருக்க முடியலனு எழுந்து உட்கார்ந்தது. என்னோட கட்டில்ல, காலைக் கீழே தொங்கப் போட்டுக்கிட்டு அவள் நடுவிலே யும் நானும் அவளோட அம்மாவும் ரெண்டு பக்கத்துலயும் உக்கார்ந் திருந்தோம். அவளுக்கு முன்னாடி அழக்கூடாதுனு அவ பெற்றோர் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாமல், பல்லைக் கடிச்சிக்கிட்டு சிரிச்சபடி இருந்தாங்க. அது மனசை ரொம்ப சங்கடப்படுத்திச்சு.

‘எனக்கு ஞாபகம் இருக்கு மேம்.. தாம்பரம்ல ஸ்கூல் டே ஃபங்க்ஷன்ல பிங்க் டிரெஸ் போட்டு என்னை ஆட வச்சீங்க!’னு சொல்லி சிரிச்சா. ‘ஐ மிஸ் யூ மேம்’னு கட்டிக்கிட்டா.

பேசிட்டு இருக்கும்போதே ‘டயர்டா இருக்கு மேம்’னு சொல்லிக்கிட்டே என் தோள்ல சாஞ்சுக்கிட்டா! லேசா மூச்சுத் திணறல் இருந்ததுபோல.. மூச்சு விட்டா! தண்ணி கேட்டா.. கொடுத்ததும் வாங்கி ஒரு மடக்கு குடிச்சா! என் வலது கையால் அவளோட தோள்களை அணைச்சதுபோல பிடிச்சிருந் தேன். இன்னொரு கையால் கன்னத்தில் தட்டிக் கொடுத்துட்டு இருந்தேன். பேச்சே இல்லை! அவங்க அம்மா, ‘பேபி, பேபி’னு கூப்பிட்டுப் பார்த்தாங்க.

நானும் பதற்றமாகி ‘வைபவி... பாப்பா’னு கன்னத்தைத் தட்டிப் பார்த்தேன். எனக்கு உச்சந்தலை யிலிருந்து உள்ளங்கால் வரை என்னவோ ஓடின மாதிரி உணர்வு! அப்படியே படுக்க வச்சோம்! மூக்கில் லேசா ஒரு திரவம் வடிஞ்சிருந்தது. நாக்கின் நுனி லேசா வெளியில் தள்ளியபடி இருக்க, உடலில் எந்த அசைவும் இல்லை. எனக்குள்ள ‘சிலீர்’னு என்னமோ பண்ணுச்சு! ‘விபரீதம்’னு மூளையில் உறைச்சது.

அடிச்சுப் பிடிச்சு கீழிறங்கி ஓடி, ஒரு டாக்டரைக் கூட்டிட்டு வந்தேன். டாக்டர் வந்து செயற்கை முறை சுவாசத்துக்கு முயற்சி செய்து பார்த்தாங்க. கடைசியில், நாடியைப் பிடிச்சிப் பார்த்துட்டு, உதட்டைப் பிதுக்கினாங்க!

‘ஐயோ.. கடவுளே!’னு நான் கதறின அந்த நிமிஷத்திலிருந்து அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் ஏதோ கனவு போலத்தான் இருக்கு!

ஆம்புலன்ஸ் வந்தது. வேறொரு பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ப் பார்த்தாங்க. ‘வைபவி உயிரோடு இல்லை’ங்கற கொடுமையான நிஜத்தை அவங்களும் உறுதிப்படுத்தினாங்க. அங்கேயிருந்து வைபவியை, கொரட்டூர்ல இருக்குற அவங்க பெரியப்பா வீட்டுக்குக் கொண்டு போனோம். ஒரு ஜடம் மாதிரி நான் அந்தக் குழந்தையின் முகத்தையே பார்த்தபடி இருக்க, வந்தவங்க எல்லாம், ‘யார் அந்த மேடம்?’னும் ‘இவங்கதான் அந்த டீச்சரா?’னும் என்னைப் பார்த்துட்டுப் போனாங்க. ‘இவங்களைப் பார்க்கத்தான் அங்கேயிருந்து வந்துச்சாம்.. இந்த மேடம்னா உசுராம்!’னு எல்லாரும் சொல்லச் சொல்ல எனக்கு கட்டுப் படுத்த முடியாமல் அழுகை!

அடுத்த நாள் ஃப்ளைட்ல வந்திறங்கிய பாட்டியும் வைபவி யின் அண்ணாவும் கதறிய கதறல்.. ‘ராஜ்மா மேடத்தைப் பார்த்துட்டு வந்துடறேன் பாட்டினு சொன்னியே கண்ணு! எங்கேடா போன? இதோ பாரு உன்னோட ராஜ்மா... எழுந்து வாடா!’னு அந்த அம்மா ஓலமிட்டது இன்னும் என் காதுகளை விட்டுப் போகலை!’’ அந்த நிகழ்வை அப்படியே கண்களில் காட்டிக் கலங்குகிறார் ராஜம்மாள்.

‘‘என்ன பந்தம் இது? எந்த ஜென்மத்து பந்தம்? விட்ட குறை தொட்ட குறையாக பூர்வ ஜென்மத்தில் விட்டுப் போனதை நிறைவு செய்ய வந்த தேவதை... இனி என்னோடு எப்போதும் இருந்து என்னை வழி நடத்தப் போகும் என் குட்டி தேவதை! அந்தக் குழந்தையை இழந்து தவிக்கிற பெற்றோருக்கும், அண்ணனுக்கும், பாட்டிக்கும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் தைரியத்தைக் கடவுள் தரணும்!’’ என்கிறவருக்கு வைபவி தினமும் கனவில் வருகிறாளாம்.

‘வைபவி... என் செல்லமே! உனக்கு அன்பைத் தவிர வேற எதையுமே நான் கொடுக்கலையே! ஆனா.. நீ எனக்குக் கொடுத்திருக் கிறது மிகப் பெரிய கௌரவம். நான் வாங்கின நல்லாசிரியர் விருதெல்லாம், நீ கொடுத்திருக்கும் இந்த விருதுக்கு முன்னால் எம்மாத்திரம்? இந்தக் கடனை நான் எப்படிக் கழிப்பேன்? மீண்டும் பிறந்து வா கண்ணே! உனக்கு வகுப்பெடுக்கக் காத்திருக் கேன் இந்த ராஜ்மா!’ எனத் தான் எழுதி வைத்திருக்கும் வரிகளை நமக்குக் காட்டுகிறார் ராஜம்மாள்.

நம் விழிகளின் நீர்த்திரையால் கலைந்து தெரிகின்றன எழுத்துகள்!
- பிரேமா நாராயணன்

இந்த நேசம் வந்தது எப்படி?

இத்தனை பாசத்தையும் நேசத்தையும் ராஜம்மாள் ஈட்டியது எப்படி? அவர் குழந்தைகளிடம் காட்டுவது அப்படி என்ன ஸ்பெஷல் டிரீட்மென்ட்?

‘‘குழந்தைகளின் அன்பு மட்டுமே என்னுடைய பெரிய சொத்து! பொதுவாக ஆசிரியர் & மாணவி உறவு, அந்தப் பள்ளியை விட்டுப் போகும் வரைதான் இருக்கும். பெற்றோரும் அப்படித்தான். ‘நம்ம குழந்தையை நல்லா பார்த்துக்கணுமே’ என்று ஒரு பள்ளியில் படிக்கும் வரைதான் ஆசிரியர்களிடம் நன்றாகப் பழகுவார்கள். ஆனால், என் விஷயத்தில் யாரும் அப்படியல்ல. நான் போடும் ஒரு கமென்ட்டையோ, ஸ்டாரையோகூட குழந்தைகள் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். காரணம், ‘யூ ஆர் டீர்ச்சர்’ஸ் பிரைடு’ என்பது போன்ற இணக்கமான கமென்ட்டுகளை எழுதுவேன். அதனால் எந்தக் குழந்தையுமே என்னை விட்டு விலகினதில்லை. எந்தக் குழந்தையையும், ‘நீ அன்ஃபிட்’, ‘முட்டாள்’, ‘லாயக்கில்லாதவன்’ என்றெல்லாம் நான் ஒதுக்கியதில்லை.

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு..
‘‘Every child is a master piece!
Every child is the Master’s piece!’ இது என்னுடைய ஃபேவரைட் கோட்!

நன்கு படித்து, நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர்களையே பாராட்ட வேண்டும் என்பதில்லை. நன்கு படிக்காத மற்ற குழந்தைகளையும் பாராட்ட வேண்டும். அவர்களுக்குள் என்ன திறமை இருக்கும் என்பது நமக்கு இப்போது தெரியாது. நம் பாராட்டுகளே அதைக் கண்டுபிடிக்க உதவும்!’’ என்கிறார் இந்த நல்லாசிரியர்!வியாழன், மார்ச் 17, 2016

தமிழர்களின் வாழ்வை சொன்ன மலையாளப் படம்

வுனப் படங்களுக்கு மொழியில்லை என்று சொல்வார்கள். ஆனால், 1933-ல் வெளிவந்த 'மார்த்தாண்ட வர்மா' படத்தில் இடையிடையே ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கார்ட் காட்டப்படுவதால் இதை மலையாளப்படம் என்றே கொள்ளவேண்டும். ஆனாலும் இது தமிழ் படம்தான் என்று சொல்பவர்களும் உண்டு.


இந்த படம் முழுவதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானம்தான் கதையின் களம். தமிழர்களின் வாழ்வியல் கலாசாரம் பண்பாடு என்று எல்லாவற்றையும் பேசும் படம் இது. 

கி.பி.1729 முதல் 1758 வரை ஆட்சி செய்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தை நவீனமாக மாற்றியவர் மார்த்தாண்ட வர்மா. மன்னர் ராம வர்மாவின் இறுதி காலம் முதல் மார்த்தாண்ட வர்மாவின் பதவியேற்பு வரை வேணாட்டின் வரலாற்றை விரிவாக சொல்லும் திரைப்படம் இது. சி.வி.ராமன் பிள்ளை என்பவர் எழுதிய மார்த்தாண்ட வர்மா நாவலை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.   


மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் 1933-ம் வருடத்திலேயே மிகப் பெரிய கூட்டத்தை, பெரிய படையை படத்தில் காட்டியிருப்பதுதான். அந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரையில் காட்டுவது சாத்தியம் இல்லாத ஒன்று. இதில் இன்னொரு ஆச்சரியம் படம் முழுவதும் வெளிப்புறங்களிலே படமாக்கப் பட்டிருப்பதுதான். 1970 வரை ஸ்டுடியோக்களில் 'செட்' போட்டு எடுக்கும் காலக்கட்டத்தில் எப்படி முழுப் படத்தையும் வெளியிலே எடுத்தார்கள் என்பது திகைக்கவைக்கும் உண்மை. 


மலைகள், நீரோடைகள், குகைகள் என்று பல இடங்களில் படம் பதிவாக்கப்பட்டுள்ளது. அதிலும் குகைகளுக்குள் டார்ச் லைட் வெளிச்சத்தில் படமாக்கியுள்ளார்கள். சினிமாவில் இன்று இடம்பெறும் அத்தனை சாத்தியங்களையும் அன்றே இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய தொழில் நுட்பங்களும் அன்றே இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளன. 

'லோ ஆங்கிள் ஷாட்' சர்வசாதரணமாக படமாக்கப்பட்டுள்ளது. சினிமாவின் அத்தனை சாத்தியக் கூறுகளையும் தொட்டுவிட வேண்டும் என்ற வேட்கையில் படம் எடுத்துள்ளார்கள். ஒலி இல்லை என்பதால் எல்லாவற்றையும் காட்சியாகவே சொல்ல முனைந்திருக்கிறார்கள். பொதுவாக மவுனப் படங்களில் இருக்கும் மிகப் பெரிய குறை என்னவென்றால் நடிகர்களின் நடிப்பு இயல்பாக இருக்காது. செயற்கையாக தெரியும். அந்த குறையும் இந்த படத்தில் இல்லை. இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே இயல்பபாக நடித்திருக்கிறார்கள். 


கதாநாயகன் நாயகியின் உதட்டில் முத்தம் கொடுப்பது இன்றைக்கும் கூட பரபரப்பான காட்சிதான். ஆனால், இந்த பரபரப்பான காட்சியை 1933-ல் எடுக்கப்பட்ட இந்த படத்திலே மிக இயல்பாக செய்துவிட்டார்கள். தென்னிந்திய மவுனப் பட உலகில் மார்த்தாண்ட வர்மாவுக்கு தனியிடம் எப்போதும் உண்டு. 

படத்தை முழுமையாக பார்க்க இங்கே சொடுக்கவும்..
புதன், மார்ச் 16, 2016

ஒரேயொரு மாணவிக்காக ஓடும் ரயில்

ரு தேசத்தின் அரசாங்கம் மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும்? அவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்பதில் வளர்ந்த நாடுகள் எப்போதுமே முன்னோடியாக திகழ்கின்றன. அது தனது மக்கள் பக்கமே செயல்படுகிறது. அதிலும் ஜப்பான் மற்ற வளர்ந்த  நாடுகளுக்கே  முன்னோடியாக திகழ்கிறது. 

ஒரு மாணவியை மட்டும் ஏற்றிச் செல்லும் ரயில்
அப்படியொன்றுதான் ஒரேயொரு பள்ளி மாணவிக்காக ஒரு ரயில் இயங்குவது. நமது ஊரில் பள்ளி நிர்வாகம் கூட ஒரு மாணவிக்காக ஒரு சிறிய மினி பஸ்ஸை கூட இயக்க மாட்டார்கள். ஆனால், ஜப்பான் ஒரு மாணவிக்காக மட்டுமே தினமும் 80 கி.மீ. தொலைவுக்கு ரயிலை இயக்கி வருகிறது. ஹராடா கானா என்ற அந்த பள்ளி மாணவி இறுதி வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜப்பானின் வடக்கு தீவில் உள்ள ஹொக்காய்தோ என்ற கிராமத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு ரயில் மூலம் சென்று வருகிறார். 

குளிர் காலத்தில் காமி-ஷிரதகி ரயில் நிலையம்
இந்த தீவுக்கு இப்போது படகு போக்குவரத்து அதிகம் இருப்பதால் ரயிலை யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால் இந்த ரயில் தடத்தை 2012-ல் மூடிவிட ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அப்போதுதான் இந்த கிராமத்தில் உள்ள 'காமி-ஷிரதகி' ரயில் நிலையத்தில் இருந்து 'ஷின்-அசஹிகவா' ரயில் நிலையம் வரை ஒரேயொரு மாணவி மட்டும் தினமும் பயணம் செய்வது தெரிய வந்தது. உடனே தனது மூடுவிழாவை தள்ளிப் போட்டது நிர்வாகம். 

மாணவி ஹராடா கானா
அதோடு மட்டும் நின்று விடாமல் அந்த மாணவியின் பள்ளி நேரத்துக்கு ஏற்றபடி ரயிலின் நேரத்தை மாற்றி அமைத்தது. முதலில் 50 கி.மீ. வரை சென்று வந்த மாணவி மேற்படிப்புக்காக வேறு பள்ளியில் சேர்ந்தார். உடனே ரயில் நிர்வாகமும் அந்த பள்ளி இருக்கும் ஊர் வரை ரயிலை நீடித்து இயக்கியது. அதாவது 30 கி.மீ. கூடுதலாக, இப்போது இந்த ரயில் ஒரு மாணவிக்காக 80 கி.மீ. தொலைவு சென்று வருகிறது. 

ஜப்பான் ரயில் தடங்கள் நமது ரயில் தடங்கள் போல் இல்லை. வருடத்தில் 6 மாதங்கள் பனித் துகள்கள் கொட்டி ரயில் தண்டவாளத்தை இரண்டடி உயரத்திற்கு மூடிவிடும். தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பனித் துகள்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் ரயில் செல்ல முடியும். இந்த ஒரு மாணவி பயணிப்பதற்காக தினமும் 300-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இந்த 80 கி.மீ. பாதையில் உழைக்கிறார்கள். 

தினமும் 300 தொழிலாளர்களின் உழைப்பு
இந்த மாணவியின் படிப்பு இந்த மார்ச் மாதம் 26-ம் தேதியோடு முடிவடைகிறது. அன்று தான் இந்த ரயிலின் கடைசி ஓட்டம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரேயொரு மாணவிக்காக இத்தனை பெரிய உழைப்பைத் தரும் ஜப்பானை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

 கோடைக் காலத்தில் காமி-ஷிரதகி ரயில் நிலையம்
இந்த செய்தி வெளிவந்ததும் ஜப்பான் மக்கள் பலரும் முகநூலில் 'எங்களுக்காக உழைக்கும் இந்த நாட்டுக்காக நான் ஏன் என் உயிரைத் தரக்கூடாது?' என்றுதான் கமெண்ட் போட்டார்கள்.

ஆனால், நம் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும்போது எப்படி மக்களை அடிமைகளாக நடத்தினார்களோ அதே மனநிலைதான் சுதந்திரத்திற்கு பின் வந்த நமது அரசாங்கங்களும் நமது மக்களை அடிமைகளாகவே நடத்தி வருகின்றன. இப்போதும் அந்த மனநிலை கொஞ்சமும் மாறவில்லை. தனது சொந்த மக்கள் என்ற எண்ணம் எந்த அரசுக்கும் எந்த அரசியல் வாதிக்கும் இல்லை. 

இந்த அடிமைகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மீண்டும் விலைக்கு வாங்க தேர்தல் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தயாராகிவிட்டார்கள். அடிமை மனோபாவம் மாறாத மக்கள் எஜமான் கொடுக்கும் அந்த பிச்சை காசுக்காக தன்னையும் தன் நாட்டையும் விற்று அடிமை வாழ்வு வாழ தயாராகி வருகிறார்கள். 

வாழ்க பணநாயகம்..!


ஞாயிறு, மார்ச் 13, 2016

ஆயுளை குறைக்கும் ஆஸ்பெஸ்டாஸ்..!

லிவான விலையில் உறுதியான ஒரு கூரையை வாங்க முடியுமா? அது ஆஸ்பெஸ்டாஸாக இருந்தால் முடியும். ஆஸ்பெஸ்டாஸ் எளிதில் தீப்பிடிக்காது என்பதற்காகவே வாகனங்களிலும், கப்பல்களிலும் கூட இதை ஏராளமாக பயன்படுத்தப்படுகிறார்கள். 


'சர்பன்டைன்', 'ஆம்பிபோல்' என்ற இரண்டு விதமான ஆஸ்பெஸ்டாஸ்கள் உள்ளன. 'சர்பன்டைன்' வகையில் 'கிரைசோலைட்'  என்ற வெண்மை நிற ஆஸ்பெஸ்டாஸ்தான் உலக அளவில் 95 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. உறுதி மட்டுமல்லாமல் வெப்பத்தை தாங்கும் திறனும் இதில் இருப்பதால் கட்டுமான பணிகள், மின்சாதனங்கள் உள்பட 3 ஆயிரம் வேலைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆஸ்பெஸ்டாஸ் எப்படி மனித ஆயுளை குறைக்கிறது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். 'ஆஸ்பெஸ்டாஸ்' இழைகள் கண்ணுக்கு தெரியாத மிக நுண்துகள்களாக மாறக்கூடியவை. இந்த துகள்கள் கண்ணுக்கு தெரியாது. மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் மட்டுமே தெரியும். இவை எப்போதும் காற்றில் கலந்தே இருக்கும்.


ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி செய்யும் இடத்தில் மட்டுமல்ல, எடுத்துச்செல்லும்போது கழிவாக மாற்றி குப்பையில் தூக்கி எறியும்வரை சுற்றுச்சூழலை தொடர்ந்து மாசுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இந்த இழைகள் ஒருமுறை காற்றில் கலந்து விட்டால் போதும். எங்குமே தங்குவதில்லை. இதனால் சுவாசித்தலின் போது மிக சுலபமாக மனித நுரையீரலுக்குள் புகுந்து தங்கிக்கொள்கிறது.

சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களை விட இதன் பாதிப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது இவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களே. இங்கிலாந்தில் உற்பத்தி இடத்தில் உருவாகும் துகள்களை நீக்குவதற்காகவே அனுமதி பெற்ற ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த துகள்களை நீக்க விண்வெளி வீரர்களை போன்ற பாதுகாப்பு கவச உடை அணிந்து, சிறப்பு சுவாச வசதி பெற்று நீக்குகிறார்கள். இப்படியெல்லாம் கடுமையான விதிகள் இருந்தும் கூட வாகன பிரேக் சரி செய்யும் வேலையில் இருப்பவர்கள் வருடத்திற்கு 500 முதல் 600 பேர் உயிர் இழக்கிறார்கள்.


சரி இதன் பாதிப்பு எப்படி தெரியும்? மூச்சிழைப்பு, நெஞ்சிருக்கம், வறட்டு இருமல், விரல்கள் ஊனமடைதல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள். நுரையீரல் சுவர்கள் புண்ணாகித் தடித்துப் போகும். இதற்கு மருந்தே கிடையாது. இது மார்புச்சளி, இதயம் செயலிழத்தல், நுரையீரல் புற்றுநோயையும் ஏற்படுத்தும். இது இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் 18 முதல் 24 மாதங்களுக்குள் உயிரிழப்பார்கள். சுவாசத்தில் ஊடுருவும் இந்த துகள்கள் உடலில் நுழைந்து ரத்த ஓட்டத்தில் கலந்து சிறுநீரகம் பாதிப்படைய செய்து விடும்.

2000-ம் ஆண்டு வரை உலகின் மிகப்பெரிய உற்பத்தியையும், ஏற்றுமதியையும் செய்து வந்த கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அப்போதே இதற்கு தடைபோட்டு விட்டன. இவற்றை தொடர்ந்து சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரியா, ஐக்கிய அரபு நாடுகள், போலந்து, பிரிட்டன், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து போன்ற 50-க்கும் மேற்ப்பட்ட நாடுகள் தடைவிதித்து விட்டன.


இவற்றை தடுக்க ஆஸ்பெஸ்டாஸ் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. வேறுவழியில்லை. பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்ற சூழல் வரும்போது, அதன் மீது நன்றாக பெயின்ட் அடித்துவிடுங்கள். எப்போதும் ஈரத்தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றால் பெரிய அளவில் நன்மை இல்லையென்றாலும் ஓரளவு பாதிப்பை குறைக்க முடியும். புதிய ஆஸ்பெஸ்டாஸை விட பழைய ஆஸ்பெஸ்டாஸில்தான் பாதிப்பு பல மடங்கு அதிகம். 

வீடுகளுக்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...