ஞாயிறு, மே 29, 2016

வயதானால் வாயுத் தொல்லையா..?


னிதனால் அடக்க முடியாத சில சங்கதிகள் அவன் உடலில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் வாயுத் தொல்லை. இங்கு வாயுத் தொல்லை என்பது உடலில் இருந்து வெளியேறும் பின்புறக் காற்றைக் குறிக்கிறது. பொது இடங்களில், நான்கு பெரிய மனிதர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது இது வந்து சங்கடப்படுத்தும். 


சிலர் குனிய முடியாமல், நிமிர முடியாமல் கஷ்டப்படுவார்கள். கேட்டால் 'வாயுத் தொல்லை' என்பார்கள். இதற்கு 'வாயுப்பிடிப்பு' என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. உண்மையில் இப்படி வாயு உடலில் ஏதாவது ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ளுமா? என்று மருத்துவரிடம் கேட்டால், சிரித்துக்கொண்டே அப்படி ஒன்றும் இல்லை என்கிறார். இதுவொரு குருட்டுத்தனமான நம்பிக்கை. 

உண்மையில் உடலில் சுவாசப்பை மற்றும் உணவுப்பாதை என்ற இந்த இரண்டிலும்தான் காற்று இருக்கிறது. இதைத்தவிர உடலில் வேறெங்கும் எந்த பாகத்துக்கும் காற்று போகாது. போகவும் முடியாது. அப்படியே ஒருவேளை போவதாக வைத்துக்கொண்டாலும் உணவுப்பாதையை மீறி ஓட்டைப் போட்டுக்கொண்டு போவதெல்லாம் சாத்தியமில்லாதது. 

ஒருசில செயல்களால் இந்த வாயு உடலின் வேறு இடத்துக்குப் போக வாய்ப்பிருக்கிறது. அது மரணத்திலும் கூட முடியலாம். இது போன்ற நிலை எப்போது ஏற்படும் என்றால் துப்பாக்கி குண்டடிப்படுவதன் மூலம் மட்டுமே உண்டாகும். மற்றப்படி ஆரோக்கியமான உடலில் வாயுப்பிடிப்பு என்பதெல்லாம் அறியாமையே!

வாயு பற்றி நமக்கிருக்கும் அறிவு மிக மிகக் குறைவே! அதனால்தான் தலைவலி, கைகால் சுளுக்கு என்று எந்த தொந்தரவு ஏற்பட்டாலும் அதை வாயு மீது தூக்கிப் போட்டுவிடுகிறோம். நமது மூச்சு நேராக சுவாசப்பைக்கு போகிறது. அதுவொரு தனிப்பாதை. அதற்கும் வயிற்றுக்கும் நேரடி தொடர்பு இல்லை. 

அப்படியென்றால் உணவுப் பாதைக்குள் காற்று எப்படி வருகிறது? இதற்கு இரண்டு காரணங்களை மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒன்று நாம் சாப்பிடும்போதே உணவோடு சேர்த்து காற்றும் உணவுப் பாதைக்குள் சென்றுவிடும். இரண்டாவது காரணம், இரைப்பைக்குள் போய்விழும் உணவை அமிலங்கள் தாக்கும்போது அங்கு பல ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து ஹைட்ரஜென், சல்பைட், மீத்தேன், கரியமில வாயு போன்ற வாயுக்களை உண்டாக்குகின்றன. 

இப்படி உருவான வாயுக்கள் இரைப்பையைக் கடந்து சிறுகுடல், பெருங்குடல் வழியாக ஆசன வாய் வழியாக வெளியேறுகிறது. இது பொது இடங்களில் வெளியேறும் போதுதான் எல்லோருக்கும் சங்கடம். மற்றபடி இதை தனிமனித முயற்சியில், நினைத்தபோது வெளியேற்றவோ, வெளியேறும்போது வாயுவை தடுக்கவோ முடியாது. 


வயதானவர்களிடம் இது சத்தமாக வெளியேறுவதற்கு காரணமும் இருக்கிறது. சத்தத்திற்கு அடிப்படை காரணம் உடற்பயிற்சி இல்லாததுதான். வயதானவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்கிறார்கள். உடல் உழைப்பு இல்லை. இளைஞர்கள் வேலைக்கு செல்வது, பஸ்ஸைப் பிடிப்பது என்று எப்போதுமே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு காற்று வெளியேறும் தொந்தரவு மிக மிகக் குறைவு. அப்படியே வெளியேறினாலும் யாருக்கும் தெரியாமல் அமைதியாக வெளியேறிவிடும். 

பொதுவாக அடிக்கடி வாயு வெளியேறுகிறதா..? அதுவும் சத்தத்துடன் வெளிவருகிறதா..? தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய தொடங்குங்கள்! ஒரு மாதத்தில் வாயு தொல்லையே இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். பின்புறக் காற்றைப் பற்றி அதன்பின் கவலைப்பட வேண்டியதில்லை!

வெள்ளி, மே 27, 2016

கணிதமேதைகளின் சக்கரவர்த்தி

லுவலக வரவு செலவு கணக்குகளை 12 மணி நேரம் கடின பிரயத்தனங்களோடு பார்த்து முடித்தார் அந்த நடுத்தர வயது மனிதர். விடிய விடிய தூக்கம் இல்லாமல் உழைத்த அந்த மனிதர், குளித்து வர குளியலறை சென்றார். அப்போது வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்த அவரது குழந்தை 5 நிமிடத்தில் அந்த கணக்கை பார்த்து, அதிலிருந்த தவறுகளை திருத்தியது. 

குழந்தையின் இந்த புத்திசாலித்தனத்தை தந்தையால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. தனது அனுபவம் அவரது தவறை ஒத்துக்கொள்ள மறுத்தது. அவருக்கோ கடுங்கோபம். "ஒருநாள் முழுக்க ராத்திரி பகல் விழித்திருந்து நான் பார்த்த கணக்கை நீ 5 நிமிடத்தில் சரி செய்து விட்டாயா..?" என்று கேட்டார். 

கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்
"அதுக்கெல்லாம் குறுக்கு வழி இருக்கப்பா! வேணும்னா, நான் திருத்தியதை நீங்க மறுபடியும் சரிபாருங்க!" என்றது குழந்தை. மீண்டும் அந்த தந்தை மணிக்கணக்காக உட்கார்ந்து கணக்கை சரிப் பார்த்தார். குழந்தை சொன்னதுதான் சரியாக இருந்தது. 

இப்படி பெரிய நிறுவனத்தின் கணக்கையே 5 நிமிடத்தில் பார்த்து திருத்திய அந்தக் குழந்தையின் வயது 3 மட்டுமே. பிறவி மேதையான அந்த குழந்தைதான் பின்னாளில் பெரிய பெரிய கணித முறைகளை உருவாக்கி, உலகுக்கு அளித்த கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்.

எண் கணிதம், அறிவியல் ஆய்வுகள், ஜியோமெட்ரி, பூமியின் மேற்பரப்பு, கணக்கியல், வானவியல், காந்தவியல், ஒளியியல் என்று பல துறைகளில் ஆய்வு செய்து பிரமிப்பூட்டும் முடிவுகளை கண்டறிந்து உலகுக்கு சொன்ன ஒரு அசாதாரண மனிதர்தான் காஸ். 

நடக்கக்கூட அறியாத குழந்தையாய் இருக்கும் போதே இவரது கணித ஞானம் பெரிய மேதைகளையே திக்குமுக்காட செய்தது. கணித உலகில் பல சமன்பாடுகளை உருவாக்கி சிரமமின்றி கணிதத்தை எளிதாக்கியதால் இவரை கணிதமேதைகளின் சக்கரவர்த்தி என்று அழைக்கிறார்கள்.


கி.பி. 1777 ஏப்ரல் 30-ல் பிறந்த காஸ், இளமைப் பருவத்தை அடையும் முன்பே எண் கணிதத்துக்கான முழு அஸ்திவாரத்தை வடிவமைத்து முடித்திருந்தார். இந்த கண்டுபிடிப்பின் ஒரு பகுதிதான் வட்டச்சுற்று. இதற்கு கடிகார நேரக் கணக்கீட்டினையே உதாரணமாக சொல்லலாம். 

ஒருநாள் என்பது 24 மணி நேரம், 00 முதல் 23 வரை கொண்டது. 00 என்பது நடுஇரவு. இம்முறையில் 19 என்பது மாலை 7 மணியை குறிக்கும். ஆனால், இதனை கடந்து 8 மணி நேரம் கழித்து மணி என்னவாக இருக்கும்? என்று கேட்டால் 19 + 8 = 27 என்று சொல்ல முடியாது. ஏனென்றால் 00 முதல் 23 வரையான வட்டச்சுற்று உடைந்து முடிவது 23-ல். ஆக 19-க்கு பிறகு 8 மணி நேரம் கடந்தால் வருவது அதிகாலை 3 மணி என கணக்கிட வேண்டும். இப்படி வட்டச்சுற்றை கணித்தவர் காஸ்தான். வட்டத்திற்கு 360 டிகிரி என்ற கணக்கை வகுத்தவரும் இவர்தான்.

1801-ல் கணித முறையினை ஆழமாக விளக்கி ஒரு புத்தகம் எழுதினார் காஸ். பாளினாமியல் சமன்பாடுகளுக்கு பல முறையில் விடை அடையாளம் என்ற கட்டுரையை பற்பல உதாரணங்களுடன் சமன்பாடுகளை எழுதினார். அந்த புத்தகத்தை படித்து கணித உலகமே வாயப்பிளந்து நின்றது. ஒவ்வொரு முடிவும் ஆதாரமானவை. 


எப்படி இவருக்குள் தினம் தினம் இப்படி கணித வழிகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என வியந்து போய் நின்றது உலகம். 1809-ல் 'விண் பொருட்களின் இயக்கம்' என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். இதுதான் இன்று நாம் விண்ணில் செலுத்தும் செயற்கை கோள்களுக்கு அடிப்படை ஆதாரம். இதன் மூலம் தான் செல்போன் இயக்கத்துக்கும் வழிகள் பிறந்தன. 

மனித சக்தியால் ஆகாது என்று சொல்லும் அளவுக்கு ஆழமான கணித திறமைக் கொண்டிருந்த காஸ். தனிஒரு மனிதனாக ரகசியமாக செய்தார். தனக்கென ஒரு சிஷ்யனை உருவாக்கிக்கொள்ளமால் விட்டுவிட்டார். அப்படி ஒருவரை உருவாக்கி இருந்தால் கணிதத்துறை இன்னும் பிரமாண்டமான பல முடிவுகளை கண்டறிந்திருக்கும். என்ன செய்ய நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! ஞாயிறு, மே 22, 2016

'ரத்தப் பணம்' பற்றி தெரியுமா..?!


'பிளாக் மணி' என்ற கறுப்புப் பணம் கேள்வி பட்டிருக்கிறோம், 'ஒயிட் மணி' என்ற வெள்ளைப் பணம் பற்றியும் கேள்வி பட்டிருக்கிறோம். 'பிளட் மணி' என்ற ரத்தப் பணம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? ஆனால் ரத்தப் பணம் என்பது 'கொலைகாரர்கள்' மொழியில் இருக்கிறது.


இந்த ரத்தப் பணத்திற்கு இடத்திற்கு தகுந்தபடி பல பெயர்கள் இருக்கின்றன. 'திய்யா', 'கிஸாஸ்', 'எரிக்பைன்', 'காலனாஸ், விரா', 'க்லொசிஸ்னா', 'மிமைசின்', 'ஸீர்', 'வெர்கில்ட்' இவையெல்லாம் ரத்தப் பணத்திற்கான மாற்று பெயர்கள்தான். 

கொலை செய்பவர்கள் தவறாக வேறு யாரையாவது கொலை செய்துவிட்டாலோ அல்லது பாதிக்கப்பட்ட நபராக இருந்தாலோ அவர்களுக்கோ அவர்களின் குடும்பத்தினருக்கோ கொடுக்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்குதான் இத்தனை பெயர்கள். 


இயேசு நாதரை காட்டிக்கொடுத்து 30 வெள்ளிக்காசுகளை வாங்கினான் யூதாஸ். இயேசு சிலுவையில் அறையப்பட்டப் பின் அவன் தன் தவறை உணர்ந்து குற்ற உணர்வு தாளாமல் வாங்கிய காசுகளை திருப்பிக் கொடுத்தான். அப்போது ஆட்சியாளர்கள் இந்த பணத்தை மீண்டும் கஜானாவில் வைக்கமுடியாது. இது ரத்தத்துக்கு கிடைத்த விலை என்று சொன்னார்களாம். அப்போது தோன்றியதுதான் 'ப்ளட் மணி' என்ற வார்த்தை. அதாவது ரத்தத்துக்கு ஈடாக கொடுக்கும் பணம். 


ஜெர்மனியில் 'வியர்கில்ட்' என்ற வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. 'வியர்' என்றல் மனிதன். 'கில்ட்' என்றால் பணம். ஒவ்வொரு மனித உயிருக்கும் அவர்கள் ஒரு விலையை நிர்ணயித்து இருக்கிறார்கள். அதன்படி தொழிலாளி உயிருக்கு விலை குறைவு. அரசனின் உயிர் என்றால் விலை அதிகம். அடிமைகளாக வாங்கப்பட்ட மனிதர்களை கொல்ல யாரும் யாருக்கும் பணம் தர வேண்டியதில்லை. இஷ்டம் போல் அவர்களை கொல்லலாம். அவர்கள் உயிர் பண மதிப்பற்றவை. 

இது மட்டுமில்லாமல், சில நேரங்களில் 'உயிருக்கு உயிர்' என்ற நடைமுறையும் இருந்தது. அதன்படி குடும்பத்தின் ஆண் வாரிசை யாராவது கொன்று விட்டால் கொன்றவரின் குடும்பத்தில் இருந்து ஒரு ஆண் வாரிசை தத்தெடுத்து தங்கள் குடும்பத்துக்குள் சேர்த்துக் கொள்வார்கள்  தேவாலயத்திலோ அரண்மனையிலோ ஒருவர் கொலை செய்யப்பட்டால், இந்த நஷ்டஈட்டு முறை எதுவும் செல்லாது. அவர்களுக்கு நேரடியாக மரண தண்டனை தான். 

இப்போதைய அரசியல்வாதிகளுக்கு 'ரத்தப்பணம்' கொடுக்கும் தகுதி இருக்க வேண்டும் என்பது கூடுதல் தகுதியை வைத்திருக்கிறார்கள் போல. அதனால்தான் பெரும்பான்மையான அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் சிக்கியவர்களாகவே இருக்கிறார்களோ..! புதன், மே 18, 2016

சுயம்புவாக ஒரு சகலகலா வல்லவர்

மிழ் திரையுலகில் மறக்கமுடியாத ஒரு நபர் வீணை எஸ்.பாலசந்தர். ஐந்து வயதில் கஞ்சிரா என்ற இசைக் கருவியை தானாகவே இசைக்க கற்றுக்கொண்டார். 'சீதா கல்யாணம்' என்ற படத்தில் ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக  நடித்ததன் மூலம் முதல் ஆண் குழந்தை நடிகர் என்ற பெருமையும் பெற்றார். 

1934-ல் பாபுராவ் பெந்தர்க்கர் என்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வி.சாந்தாராம் ஆகியோர் ஒரு தபேலாவை பாலச்சந்தருக்கு பரிசாக வழங்கினார்கள். அதையும் தாமாகவே இசைக்க கற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்றார்.அப்போது அவருக்கு வயது 7. 

தனது அண்ணன் எஸ்.ராஜத்துடன் இணைந்து இந்தியாவின் பல பகுதிகளில் இசை கச்சேரி நடத்தி வந்தார் அவர். அப்படி ஒரு கச்சேரியை இன்றைய பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் அவர்கள் நடத்திய போது அந்த நிகழ்ச்சியை ரசித்த பெண் ஒருவர் பாலச்சந்தருக்கு 'சிதார்' என்ற இசைக்கருவியை பரிசாக கொடுத்தார். அதையும் தாமாகவே கற்றுக் கொண்டார். 

ஐந்தாண்டு கழித்து மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'ஆராய்ச்சி மணி' படத்தில் மனுநீதி சோழனின் மகனாக நடித்தார். அப்போது அவரது வயது 11.

'இது நிஜமா' படத்தில் பாலச்சந்தர் சரோஜினி 
1948-ல் 'இது நிஜமா' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் கதாநாயகனாக நடித்தார். இதுதான் சமூகப் படத்தில் முதன்முதலாக வந்த இரட்டை வேடக் கதை. அந்த படம்தான் பின்னாளில் கமலஹாசன் நடித்த 'கல்யாணராமன்' படத்தின் கதை. 'இது நிஜமா' படத்தின் இசையமைப்பாளரும் பாலசந்தர்தான். யாரிடமும் மாணவனாக சேர்ந்து முறைப்படி கற்றுக் கொள்ளாமலேயே கர்நாடக, மேற்கத்திய மற்றும் கவாலி பாணி இசையில் பாடல்களை மெட்டமைத்து பாடியும் இருந்தார் .

அதே 1948 -ம் வருடத்திலே மற்றொரு சாதனையையும் புரிந்தார் பாலசந்தர். அது யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியமலேயே சினிமா குறித்த அனைத்து தொழிநுட்பங்களையும் தானே அறிந்து கொண்டு 'என் கணவர்' என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். அப்போது அவரின் வயது 21.வீணை எஸ்.பாலச்சந்தர் போல் சுயம்புவாக எல்லாவற்றையும் அறிந்து கொண்டவர்கள் வெகு சிலரே. 

வீணைக் கச்சேரியில்..
இவர் பிரமாதமாக வீணை வாசிக்கக்கூடியவர். வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்று வீணைக் கச்சேரி செய்திருக்கிறார். அந்தக் கச்சேரிகளை பார்த்தவர்கள் இவர் சினிமாவின் இயக்குனர் என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். அந்தளவிற்கு அதில் ஒன்றிப் போகக் கூடியவர். இன்று நிறைய பேர் இயக்குனர், இசையமப்பாளர், எடிட்டர் என்று பலவற்றையும் ஒருவரே செய்கிறார்கள். இதற்கு முன்னோடி இவரே. இவர் ஒரு நடிகர், இயக்குனர், திரைக்கதையாளர், எடிட்டர், இசையமைப்பாளர், தபேலா, சிதார், ஷெனாய், வீணை வாசிக்கத் தெரிந்த ஒரே கலைஞர் இவர்தான். இதுபோக பாடகர், ஒளிப்படக் கலைஞர், பாடலாசிரியர், பாடகர், செஸ் விளையாட்டு வீரர் என்று ஏகப்பட்ட திறமைகள் கொண்டவர். 

'பொம்மை' படத்தில் பாலச்சந்தர் 
இன்றைக்கு ஒருநாளில் முடியும், அதாவது 24 மணி நேரத்தில் முடியும் கதைகளைக் கொண்ட படங்கள் வெளிவருகின்றன. அதற்கு முன்னோடி இவர்தான். 1964-ல் வெளிவந்த 'பொம்மை' படம் ஒரு நாளில் நடக்கும் நிகழ்சிகளைக் கொண்டது. ஒருவரைக் கொல்ல பொம்மைக்குள் வெடிகுண்டு வைக்கிறார்கள். அந்த பொம்மை கைமாறிப் போய்விடுகிறது. அதை தேடி அலைவதுதான் கதை. சஸ்பென்சாக செல்லும் இந்த படத்தில்தான் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற உன்னதக் கலைஞனை பாலசந்தர் அறிமுகப்படுத்தி இருப்பார். இந்தப் படத்தில் வரும் 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்ற பாடல்தான் ஜேசுதாசின் முதல் பாடல். 

இந்தப் படத்தின் இறுதியில் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களையும் வீணை எஸ். பாலசந்தர் அறிமுகப்படுத்துவார். அதில் ஒரு கல்லூரி மாணவனைப்போல் ஜேசுதாஸ் நிற்பார். இன்று வரை வேறுயாருமே செய்யாத வித்தியாசமான முயற்சி இது. 


தமிழில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம் 'அந்த நாள்'. பிளாஷ் பேக் உத்தியை அதிகம் பயன்படுத்தி கதையை நகர்த்திய முதல் படமும் இதுதான். தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த இந்தப் படத்தை இயக்கும்போது இவரின் வயது 27. வித்தியாசமான படம். இவரது படத்தில் வரும் திரைக்கதையும், காட்சிக் கோணமும் பிரமிக்க வைப்பவை. அதனால் தான் இயக்குனர் மகேந்திரன் தனது குருநாதராக வீணை எஸ். பாலச்சந்தரைக் குறிப்பிடுகிறார். 

'நடு இரவில்'
இவர் இயக்கிய 'நடுஇரவில்' படம் இன்றைக்கும் த்ரில்லர் படத்தின் உச்சமாக சொல்லப்படுகிறது. குறை காணமுடியாத திறமையான படங்களை தருவதில் வீணை எஸ். பாலச்சந்தருக்கு இணையாக ஒருவரை தமிழ் திரையுலகில் காணமுடியாது. 1990, ஏப்ரல் 13-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாய் நகரில் வீணைக் கச்சேரி நடத்த போயிருந்தபோது அங்கேயே காலமானார். சினிமாவில் பல புதுமைகளை செய்த இந்தக் கலைஞன் தனது சினிமா அனுபவத்தை இப்படி சொல்கிறார்.  

"நான் முற்பிறவியில் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால் வீணை கிடைத்தது. நிறைய பாவம் செய்திருக்க வேண்டும். அதனால் சினிமா வாய்த்தது" என்றார்.

இப்படிப்பட்ட உன்னதக் கலைஞனை இன்றைய தலைமுறை சுத்தமாக மறந்து விட்டது வேதனையான ஒன்று. திங்கள், மே 16, 2016

அனுபவித்து பயணிக்க ஆடம்பர ரயில்கள்!

விடுமுறை காலங்களில் சொகுசாகப் பயணம் செய்து சுற்றுலாவை அனுபவிக்க வேண்டும் என்பது பலரின் ஆசை. ஆனால், அதற்கான கட்டணம் பலரை அந்தப் பக்கம் திரும்ப விடாமல் செய்துவிடுகிறது. ஆனாலும் சொகுசு ரயில்களில் பயணம் செய்ய பணக்காரக் கூட்டம் ஒன்று காத்துக் கிடக்கிறது. 

கோல்டன் ஈகிள் டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ்
ஷ்யாவுக்கு மிகப் பெரிய வருமானத்தைத் தரக்கூடிய ரெயில் 'கோல்டன் ஈகிள் டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ்'தான். இந்த ரயிலை 19-ம் நூற்றாண்டில் மன்னர் இரண்டாவது ஜான் அலெக்ஸாண்டர் தொடக்கி வைத்தார். மாஸ்கோவிலிருந்து விளாடிவேஸ்டாக் வரை செல்லும் இந்த ரயிலில் எல்.சி.டி. டி.வி., பவர் ஷவர்ஸ், குளிரைக் கட்டுப்படுத்த அடித்தள ஹீட்டிங், ஏர்கண்டிஷன் என எல்லாமே மிக நவீன தொழில்நுட்பம்தான். இந்த ரயிலில் பயணம் செய்ய ஒருவருக்கு 15,795 அமெரிக்க டாலர் கட்டணமாக பெறப் படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,58,000.

கோல்டன் ஈகிள் டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸின் உட்புறம் 
கோல்டன் ஈகிள் டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ் உணவகம்
ந்தியாவில் காஸ்ட்லியான ரயில் 'மகாராஜா எக்ஸ்பிரஸ்'தான். இந்த ரயில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கும் இந்திய ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப் பட்டது. 

மகாராஜா எக்ஸ்பிஸுக்காக  அலங்கரிக்கப்பட்ட பிளாட்பாரம் 
ஒரு வாரம் இந்த ரயிலில் பயணம் செய்வதன் மூலம் இந்தியாவின் வட மேற்கு பகுதிகளை கண் குளிர பார்க்கலாம். டெல்லியில் புறப்பட்டு ஜெய்பூர் ஏரிகள், வனவிலங்கு சரணாலயங்கள், தார் பாலைவனம், ஆக்ரா வழியாக மீண்டும் டெல்லியை வந்தடையும். 

மஹாராஜாவின் படுக்கை 
மகாராஜாவின் 'பார்''
ரயிலின் உள்ளே இனிமையான இசை எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். பாரம்பரிய நடன நிகழ்சிகளும் நடைபெறும். இந்திய மற்றும் பன்னாட்டு உணவுகளும் இங்கு பரிமாறப்படும். இந்த ரயிலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.4,52,775 கட்டணமாக பெறப்படுகிறது. 

புளு ரயில்
ப்பிரிக்காவை சுற்றிப் பார்க்க 'புளு ரயில்' சிறந்த ஒன்று. இந்த ரயில் ஏழு நட்சத்திர ஓட்டல் வசதி கொண்டது. நூலகம், பெரிய டி.வி., விலையுர்ந்த மார்பிள்களால் வடிவமைக்கப்பட்ட கழிப்பறைகள் உள்ளன. கேப் டவுனில் இருந்து ஆயிரம் மைல் தொலைவில் உள்ள பிரிட்டோரியா மாகாணத்தை அடைய 27 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. 

புளு ரயில் உணவகம்
இந்த ரயிலில் பயணம் செய்தால் வைரச்சுரங்கமான கிம்பர்லியில் தங்கியிருக்கும் உணர்வு ஏற்படுமாம். சீஸன் நேரத்தில் 2,420 டாலர் கட்டணமும் சீஸன் இல்லாத காலங்களில் 1,202 டாலரும் கட்டணமாக பெறப் படுகிறது. திருமணமான புதுமணத் தம்பதியினர் ஹனிமூனுக்கு இந்த ரயில் ஏற்றது.

புளு ரயில் கழிப்பறைஞாயிறு, மே 15, 2016

அவர் அரசியலுக்கு வரமாட்டார்..! பயப்படாம ஓட்டுப் போடுங்க..!

டந்த இரண்டு தேர்தல்களிலும் இவர் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தார். தென் மாவட்டங்களில் வெற்றிபெற இவரது ஆசி வேண்டுமென்று அந்த பழம் பெருங்கட்சி காத்திருக்கும். இவருக்கு வேண்டியவர்களுக்கு தேர்தலில் இடம் கொடுத்து மனத்தைக் குளிர வைக்கும். இவருக்காக நிறைய வளைந்து கொடுக்கும். கிட்டத்தட்ட எழுதப்படாத பாகப்பிரிவினைபோல்தான் அது இருந்தது. 

'இந்தக் கோட்டத்தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன்.' என்று சகோதரர்கள் மானசீகமாக முடிவெடுத்துக் கொண்டார்கள். ஆனாலும், இவர் நினைத்தபோது முறுக்கிக் கொள்வார். தனக்கு சாதகமாக தலைமை வரவில்லை என்றால் போர்க்கொடி தூக்குவார். இவரை சமாளிப்பதே தலைமைக்கு பெரும் தலைவலியாக இருக்கும். தலைமைப் போலவே மக்களும் அவதியுற்றார்கள். அப்படி இருந்தாலும் இவர் விரும்பும் முடிவைத்தான் தலைமை எடுக்கும். தென் தமிழ்நாட்டின் குட்டி ராஜாவாக வலம் வந்தார். 

இன்று நிலைமையே வேறு. தற்போது ஓட்டுக் கேட்பவர்கள், 'இனி அவர் அரசியலுக்கு வரமாட்டார். எனவே பயப்படாம தைரியமா எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்..!' என்று அவரது கட்சியினரே வீடு வீடாகச் சென்று கேட்கிறார்கள். காலம் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்..!  சனி, மே 14, 2016

ஆணுக்கும் பெண்ணுக்குமான குரல் வித்தியாசம்

யிரினங்கள் அனைத்திலும் பேசும் வல்லமை பெற்ற ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தான். மற்ற உயிரினங்களுக்கு குரல் இருந்தாலும் அதில் ஒலியை மட்டுமே எழுப்ப முடியும். மனிதனால் மட்டுமே பேச முடியும். மனிதனின் இந்த பேசும் அமைப்புக்கு காரணமாக இருப்பது பேசும் பெட்டி என்பது. இது மனிதனை தவிர இன்னொரு உயிரினத்திற்கு இருக்கிறது என்றால் அது கிளிக்கு மட்டும்தான். இதன் பேசும் பெட்டி கிட்டத்தட்ட மனிதனின் பேசும் பெட்டியில் 50 சதவீதம் உள்ளது. அதானல்தான் கிளிகள் மனிதனைப் போல் தெளிவாக பேசமுடியா விட்டாலும் சில வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தால் அந்த வார்த்தைகளை மட்டும் பேசும். 

ஆண், பெண் குரல் வித்தியாசம் நான்கு வயதுக்கு மேல்தான் தோன்றத் தொடங்குகிறது. இது லேசான தொடர் மாற்றத்துடன் 12 வயது வரை தொடர்கிறது. அதன்பின் அதில் விஸ்வரூப மாற்றம் ஏற்படுகிறது. ஆணுக்கு கரகரப்பான குரலும் பெண்ணுக்கு இனிமையான குரலும் தோன்றுகிறது. இந்த குரல் இனிமை பெண்ணுக்கு 50 வயது வரை பெரிதாக மாறுவதில்லை. அதன்பின் அந்த குரலில் பெண்மையின் மென்மைபோய் கரகரப்பு சேர்ந்துவிடுகிறது. 


மனிதனை பேச வைப்பது குரல் நாண்கள் என்று சொல்லப்படுகிற தசை மடிப்புகள்தான். இந்த குரல் நாண்கள் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்து நிலையிலும், பேச முயலும்போது விரைப்பான நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று, நாம் பேசும் போது திரும்பி வந்து விறைப்பாக இருக்கும் குரல் நாண்களில் குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி அதிரச் செய்து சத்தத்தை உண்டாக்குகிறது. 

குரல் நாண் என்பது ஆணுக்கு 1.75 செ.மீ. முதல் 2.5 செ.மீ. வரை நீளம் இருக்கும். இதுவே பெண்ணுக்கு 1.25 செ.மீ. முதல் 1.75 செ.மீ. நீளம் இருக்கும். இந்த குரல் நாண்கள் சப்தத்தை உண்டாக்க ஒரு வினாடிக்கு ஆணுக்கு 120 முதல் 130 முறையும், பெண்ணுக்கு 200 முதல் 220 முறையும், குழந்தைகளுக்கு 300 முதல் 310 முறையும் அதிர்கிறது. இந்த அதிர்வுதான் பேச்சாக வெளிப்படுகிறது. 


அறுபது வயதுக்கு மேல் ஆண் பெண் இருபாலரின் குரல் நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளத் தொடங்கிவிடும். அதனால் அவர்கள் குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகிறது. இதனால்தான் வயதான சிலரால் தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் போய்விடுகிறது. 

எந்த வயதிலும் குரல் நாண் தளர்ச்சியடையாமல் மனிதனால் காக்க முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மதுவும், புகைப் பிடித்தலும் தொண்டை குரல் நாணை நேரடியாக பாதிக்கும் காரணிகள் என்கிறார்கள். மேலும், மாசு படிந்த காற்றை சுவாசிப்பதும் குரலைப் பாதிக்குமாம். தண்ணீர் நிறைய குடித்து எப்போதும் குரல் நாணை ஈரமாக வைத்திருப்பவர்களின் குரல் எந்த வயதிலும் இனிமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இவற்றை கடைப்பிடித்து நாமும் நமது குரலை இனிமையாக வைத்துக் கொள்வோம்.   வியாழன், மே 12, 2016

'மே' மாத சுற்றுலா இதழ்தேர்தல் பரபரப்பில் எங்கள் இதழ் பற்றிய பதிவெழுதவே மறந்து போனேன். இந்த மே மாத இதழை பதிவர்களுக்கான இதழ் என்றே சொல்லலாம். நம் பதிவர்கள் பலரும் தங்களின் பயண அனுபவங்களை சுவைப்பட எழுதியிருக்கிறார்கள். அதேபோல் பலரும் சந்தாதாரர்களாய் இணைந்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.நாமெல்லாம் வெயிலில் இங்கே வாடி வதந்கிப்போய் இருக்க,.. நம் காதில் புகை வரும் விதமாக 'ஆட்டிப்படைத்த லண்டன் குளிரை'ப் பற்றி ஞா.கலையரசி எழுதியிருக்கிறார். தனது வெளிநாட்டு பயண அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.ஜப்பானில் ஒரு எரிமலையை எப்படி சுற்றுலாத்தலமாக மாற்றியிருக்கிறார்கள் என்பதைப்பற்றி விரிவாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார், சுமதி சுரேஷ். 'அடங்கிய எரிமலை மீது ஒரு பயணம்' என்ற கட்டுரை மூலம்.அரசியலில் தேர்தல் சூடு பரவிக்கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் அன்றைய அடிமை இந்தியாவில் பல அரசியல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட இடம் இது. விடுதலைக்கு வித்திட்ட அந்த வரலாற்று சின்னத்தைப் பற்றிய தனது அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் முனைவர் பா.ஜம்புலிங்கம். 'அரசியலும் விடுதலையும்' கட்டுரையில் ஆனந்த பவனில் நாம் காணவேண்டிய சங்கதிகளை பட்டியலிட்டு சொல்கிறார். 


முன்னொரு காலத்தில் விண்கல் ஒன்று வந்து பூமியில் விழுந்து பள்ளமாகிப்போன ஒரு இடம் இன்று சுற்றுலாவின் சிறப்பிடம். அதைப்பற்றிய அபூர்வ தகவல்களோடு ஒரு கட்டுரை வடித்திருக்கிறார், ஜெ.எஸ்.ஞானசேகர். பரவசம் தரும் 'விண்கல் உண்டாக்கிய ஏரி'  ஒரு வியப்பான தகவலே.  

கண்ணாடிப் போன்ற தெளிந்த நீரில் படகில் பயணிப்பதே தனி ஆனந்தம்தான்.


கிராமத்துத் திருவிழாக்களில் இது புதுவகை. தெய்வங்கள் தேரில் வலம் வருவதைத்தான் பார்த்திருப்போம். இந்த ஊரில் கண்ணாடிப் பல்லக்கில் சாமி ஒவ்வொரு ஊராக வருவது புதுமை. ஆனால், இந்தப் புதுமை ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நடைபெறுகிறது என்பதுதான் ஆச்சரியம். சாளுக்கிய மன்னர்களின் முதல் தலைநகரமான ஐஹோலேயில் உள்ள 125 கோவில்களில் சிலவற்றை இங்கு நாம் தரிசிக்கலாம். பலவற்றில் பூஜைகள் நடைபெறாவிட்டாலும், இவைகள் ஒரு அபூர்வமான கலைப் பொக்கிஷம்தான்.  வட கிழக்கு மாநிலங்களில் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகைப்பற்றி ஒரு தொடர் பதிவு. உலகில் அதிகம் மழைப் பொழியும் சிரபுஞ்சி பற்றியும் அதன் அருகே இருக்கும் சுற்றுலா தலங்கள் பற்றியும் விரிவான ஒரு அலசல். ஏராளமான அருவிகள், பங்களாதேஷின் பசுமை பள்ளத்தாக்கு என்று இயற்கையோடு ஒரு பயணம் இந்தக் கட்டுரை.


சமணம், சைவம் என்ற இருபெரு ஆன்மிகமும் போட்டிப்போட்டு வடித்த குடைவரை கோயில்கள், புடைப்பு சிற்பங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று போட்டிப்போடும் இடம் இது.  நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையான இந்த கலைப் படைப்புகள் பலரும் அறியாதவை. அவற்றை உங்கள் பார்வைக்கு  வழங்குகிறோம். காதலியின் கரம்பிடித்தபடி வசீகரமான சுற்றுலா தலங்களுக்கு சென்று படங்களை எடுத்துக் கொள்ளும் இந்த ஜோடி மிகப் பிரபலம். அவர்களைப் பற்றிய ஒரு பதிவு!

மேலும் வழக்கமான பகுதிகளுடன் இரவுநேர அருங்காட்சியகம் பற்றிய ஒரு பதிவும் உங்களை மகிழ்விக்க வந்திருக்கிறது. 

தற்போது விற்பனையில்..!

இதழ் தேவைக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.

  +91 94435 71391.செவ்வாய், மே 10, 2016

குழந்தைகளிடம் பொம்மைகளைத் தராதீர்கள்..!இது ஒரு எச்சரிக்கை பதிவு!

குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக பல வண்ணங்களிலும் பல மாடல்களிலும் ஏராளமான பொம்மைகள் கிடைக்கின்றன. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நாமும் தொடர்ந்து இத்தகைய பொம்மைகளை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். 

குழந்தைகள் விளையாடும் இந்த பொம்மைகள் 'பி.வி.சி.' என்று சொல்லப்படுகிற 'பாலிவினைல் குளோரைடு' என்ற பொருளில் இருந்து தயாரிக்கிறார்கள். பாட்டில், நிப்பிள், ரப்பர் வாத்துக்கள், பல் முளைக்கும் போது கடிப்பதற்காக கொடுக்கப்படும் சிறு விளையாட்டுப் பொருட்கள் என எல்லா வகையறாக்களும் இந்த பொருளால் தயாரிக்கப்படுபவைதான். 


பி.வி.சி. என்பது சாதாரணமாக வளையும் தன்மை கொண்ட பொருள் கிடையாது. அதனால், இந்த பி.வி.சி.-யை வளைப்பதற்காக இதனுடன் 'பதாளேட் பிளாஸ்டிஸைசர்' என்கிற ஒரு பொருளை சேர்கிறார்கள். இது சேரும் போது பிவிசி வளையும் தன்மையை பெறுகிறது. இப்படியாக வளையும் தன்மைக் கொண்ட 'வினைல் பொருட்கள்' பல ஆண்டுகளாக உடையாமலும் வண்ணம் மாறாமலும் இருக்கும். 


வளைப்பதற்காக சேர்க்கப்படும் 'பதாளேட்' என்ற பொருள் விளையாட்டுப் பொருட்களின் எடையில் பாதியளவு கலந்திருக்கும். இது பிவிசியுடன் வேதி முறையில் இணைக்கப்படுகிறது. பதாளேட் பொருட்களை குழந்தைகள் வாயில் கடித்து விளையாடினால் அது கசிந்து வாய்க்குள் போகும். பிளாஸ்டிஸைசர் குழந்தைகளின் எச்சிலில் கரையக்கூடியது.


இப்படி கரைந்த பிளாஸ்டிஸைசர்கள் ரத்தம், நுரையீரல், கல்லீரல் போன்ற இடங்களில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இது எண்ணெய் மற்றும் கொழுப்பிலும் கரையக்கூடியது. பிளாஸ்டிஸைசர் தரும் தீமைகள் பற்றி ஏராளமான ஆய்வுகள் இருக்கின்றன. அவற்றின் முடிவுகள் படி இந்த வேதிப் பொருட்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் புண்களை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. மேலும் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்னையை ஏற்படுத்தும். விந்து உருவாவதிலும் கருமுட்டை உருவாக்கத்திலும்  இடையூறு செய்யும். கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இடங்களில் கேன்சரையும் 'மோனோநியூக்கிளியர் செல்லுக்கேமியா'வையும் உருவாக்குவதாக தெரிவிக்கிறது.


குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த தீமைகளை கண்டபின்னாவது அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து பிவிசி மூலம் தயாரிக்கப்படும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பெரும் கெடுதல் தருகிற 'வினைல்' மற்றும் 'பிளாஸ்டிஸைசர்' உபயோகப்படுத்துவதை தயாரிப்பு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்று வருகின்றன. கூடுமானவரை நாம் நமது குழந்தைகளுக்கு பிவிசி விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பதே நல்லது. நம் குழந்தைகளுக்கு நாம் தரும் ஆரோக்கியம் அது. ஞாயிறு, மே 08, 2016

படுத்தால் மரணம்தான்


மக்கு பிடித்தமான உயிரினம் யானைதான். யானைகள் பொதுவாக 90 முதல் 200 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மைக் கொண்டது. சில யானைகளின் தந்தங்கள் சுமார் 90 கிலோ எடைவரை இருக்கும். கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளம் வரை வளரும். 

யானைக்கு இவ்வளவு பெரிய உடல் இருந்தாலும் நன்றாக நீரில் நீந்தும். நாலரை மீட்டர் ஆழத்திலும் நீந்தி செல்லும். மனிதன் எவ்வளவு நேரம் தண்ணீரில் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரமே யானையாலும் இருக்க முடியும். 

யானை மூச்சு விடுவது தும்பிக்கையினால் தான் என்றாலும் வாசனை அறிவது வாயினால்தான். வாசனை அறியும் நரம்புகள் அங்குதான் இருக்கின்றன. துதிக்கையில் பெரிய மரத்தையும் சாய்த்துவிடும் வலுவான தசைகளை பெற்றிருக்கிறது. 


யானைகளிடம் விசித்திரமான பழக்கங்கள் உள்ளன. காட்டில் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். சண்டையின் போது களைப்பாக இருந்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளும். சிறிது நேரம் மேயும், தண்ணீர் குடிக்கும். பின் மீண்டும் சண்டையைத் தொடரும். இப்படியே பல நாட்கள் நீடிக்கும். 

ஆசிய யானைகள் படுத்து புரள்வது உண்டு. ஆப்பிரிக்க யானைகளோ எப்போதும் படுப்பதில்லை. நின்று கொண்டேதான் தூங்கும். யானை என்று படுக்கிறதோ அன்று அதன் மரணம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். யானைப் படுத்தால் அது மரணப்படுக்கைதான். 


யானை மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் ஓடும். எல்லா யானைகளுமே கிட்டப்பார்வை கொண்டது. தொலைவில் உள்ள காட்சிகளை அவற்றால் தெளிவாகப் பார்க்கமுடியாது. 

யானை பன்றி இனத்தை சேர்ந்தது. முதலில் தோன்றிய யானை பன்றி அளவே இருந்ததாம். ஆரம்பத்தில் நீண்ட மூக்காக இருந்து, பின்பு அதுவே துதிக்கையாக வளர்ந்ததாம். 


இலங்கையில் உள்ள யானைகளில் ஆண் யானை, பெண் யானை ஆகிய இரண்டுக்குமே தந்தங்கள் கிடையாது. யானைக்கு துதிக்கை பலமானது என்றாலும் அதில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அவ்வளவுதான். அது குணப்படுத்த முடியாத அளவுக்கு சென்று, கட்டுக்கடங்காமல் பெரிதாகி விடும். 

யானையின் உடலில் துதிக்கை எட்டாத இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஒரு குச்சியை பிடித்து சொரிந்து கொள்ளும். யானையால் மற்ற விலங்குகளைப் போல் நான்கு கால்களால் ஒரு இடத்தை தாண்டமுடியாது.  நன்றாக பழகிய யானைப்பாகன் சொல்லும் சில வார்த்தைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப யானைகள் நடந்து கொள்கின்றன என்பது உண்மையே!  சனி, மே 07, 2016

மனிதக் கழிவில் தங்கம்


போகிறப் போக்கைப் பார்த்தால் வருங்காலத்தில் மனிதக் கழிவுக்கு மிகப் பெரும் கிராக்கி எற்படும்போல..! ஏற்கனவே மனிதனின் சிறுநீர் பயிர்களுக்கு நல்ல உரம் என்று கண்டுபிடித்தார்கள். அதனால் வெளிநாடுகளில் பயிர்களுக்கு நல்ல உரமாக சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. மனித சிறுநீரில் ஜிப்சம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரஜன் ஆகிய தனிமங்கள் இருப்பதால் வெளிநாடுகளில் சிறுநீரை செடிகளுக்கு உரமாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். 


இப்போது அதன் தொடர்ச்சியாக மனிதக் கழிவில் தங்கம் உட்பட பல விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மண்ணியல் ஆய்வு அமைப்பை சேர்ந்த டாக்டர் கேத்லீன் ஸ்மித் என்பவர் கடந்த 8 வருடங்களாக இது குறித்து ஆய்வு செய்துவருகிறார். 

அவர் அமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரும் கழிவுகளில் எந்த அளவுக்கு தங்கம் இருக்கிறது என்பது குறித்த தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த ஆய்வின் முடிவு இப்போது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. 


பாறைகளில் காணப்படும் குறைந்த அளவு தங்கம் மனிதக் கழிவிலும் இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வெள்ளி, பலேடியம் மற்றும் வெனேடியம் போன்ற அபூர்வத் தாதுப் பொருட்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்களின் கவனம் மனிதக் கழிவு மீது திரும்பியுள்ளது,

இந்த ஆய்வுகள் எல்லாம் அமெரிக்காவில் நடைபெற்றதால் அமெரிக்கர்களை மையமாக வைத்தே எல்லா முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 10 லட்சம் அமெரிக்கர்களின் கழிவில் இருந்து ரூ.84.5 கோடி மதிப்பிலான தங்கம் போன்ற உலோகங்கள் பெறமுடியும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. 10 லட்ச மக்களுக்கே இப்படியென்றால், 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். 


இப்படி மனிதக் கழிவிலிருந்து கனிமங்களை பிரித்தெடுப்பதால் அவற்றின் மூலம் சுற்றுச்சூழலில் ஏற்படும் நச்சுத்தன்மை குறையும் என்ற நமையும் இதில் இருக்கிறது. அதனால், இப்போதே சுற்றுச்சூழல் வல்லுனர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். 

ஒவ்வொரு வருடமும் அமெரிக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து 70 லட்சம் டன்கள் திடக் கழிவுகள் வெளியாகின்றன. அவற்றில் பாதியளவு வயல் மற்றும் காடுகளில் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சியவை எரிக்கப்பட்டு நிலத்தை சமன் செய்ய உபயோகப்படுத்தப்படுன்றன. யார்கண்டது வருங்காலத்தில் பொது கழிவறைகள் 'அல்ட்ரா' மாடர்னாக இருக்கும். சிறுநீர் கழிக்க பணம் வாங்கிய நிலைமை மாறி பணம் கொடுக்கும் நிலை உருவாகலாம். வெளிநாடுகளில் தற்போது 20 லிட்டர் சிறுநீர் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...