வியாழன், ஜூன் 30, 2016

விற்பனைப் பொருளான குடிநீர்


டந்த தலைமுறை வரை குடிக்கும் நீர் ஒரு விற்பனைப் பொருளாக மாறும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. மக்களுக்கு மிக முக்கியமான அத்தியாவசியமான பொருளாக குடிநீர் இருந்தது. இப்போது அது கோடிகள் புரளும் மிகப் பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவிட்டது. 


குடிநீருக்கான வர்த்தகம் உலகம் முழுவதும் ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இதனை வசப்படுத்துவதற்காக முதலாளித்துவ நாடுகள் ஒன்றோடு ஒன்று போட்டிப்போடுகிறது. அதற்கான முதல் முயற்சிதான் நீங்கள் குடிக்கும் குடிநீர் பாதுகாப்பற்றது என்ற கருத்தாக்கம். சாதாரணமாக நமது வீடுகளில் வரும் குழாய் தண்ணீரை குடித்தால் ஆரோக்கியம் போய்விடும். நோய்க்கிருமிகள் தாக்கும். என்ற எண்ணத்தை இந்த நிறுவனங்கள் இன்று திட்டம் போட்டுப்பரப்புகின்றன. 

அதன் தாக்கம் ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த குழாய் நீரை குடித்து வளர்ந்தவர்கள் வீட்டில் எல்லாம் இன்று மினரல் வாட்டர். ஒரு நாளைக்கு 50 ரூபாய் என்ற கணக்கில் மாதத்திற்கு குடிநீருக்காக மட்டும் 1,500 ரூபாய் செலவழிக்கிறார்கள். குடிநீர் மாபெரும் வர்த்தகப் பொருளாய் மாறிவிட்டது. 

இந்தியாவில் ஆண்டுக்கு 552 கோடி ரூபாய்க்கு குடிநீர் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த வர்த்தகத்தையும் கைப்பற்ற தான் பல பன்னாட்டு நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. நீர் விற்பனை என்பது இரண்டு வகைகளில் நடைபெறுகிறது. ஒன்று பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நீர், மற்றொன்று மினரல் வாட்டர் என்கிற பெரிய கேன்களில் விற்கப்படும் குடிநீர். இரண்டுமே உடலுக்கு நல்லது செய்பவை அல்ல. 


பாட்டில் நீரில் இனிப்பு பொருட்களோ, ரசாயனப் பொருட்களோ இருக்கக்கூடாது. சர்க்கரை சேர்க்கக் கூடாது. குறைந்த அளவு கலோரியே இருக்க வேண்டும். அதேவேளையில் பழங்கள், வாசனை பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட எசன்ஸ்களையும், சத்துப் பொருட்களையும் வாசனைப் பொருட்களையும் மிகச் சிறிய அளவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றின் அளவு மொத்த எடையில் ஒரு சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது. 

அப்படி ஒரு சதவீதத்திற்கு மேல் இது கூடிவிட்டால் அது பாட்டில் நீர் என்ற இனத்தில் இருந்து மாறி குளிர்பானம் என்ற பிரிவில் சேர்ந்துவிடும். சட்டப்படி எல்லா குடிநீரும் சோடியம் கலப்பு இன்றி தயாரித்திருக்க வேண்டும். இந்த குடிநீரும் அதிகபட்சம் 6 மாதம் வரைதான் பாதுகாப்பானது. 

மினரல் வாட்டர் என்பது குடிநீரில் இயற்கையில் கலந்துள்ள தாது உப்புகளைக் குறிக்கிறது. தொடர்ந்து நீரை 180 டிகிரி செண்டிகிரேட்டில் கொதிக்க வைத்த பிறகு மீதமுள்ள தாது உப்புகளின் அளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரே இடத்தில் இருந்து கிடைக்கும் நீரிலேயே கால மாற்றத்திற்கு ஏற்ப கனிமங்களின் அளவில் சிறிய வேறுபாடுகள் இருக்கும். 


ஆனால், என்னதான் மினரல் வாட்டராக இருந்தாலும் அதில் எந்தவொரு தாது உப்பும் இருப்பதில்லை என்பதே உண்மை. தொடர்ந்து இப்படி சுத்தகரிக்கப்பட்ட நீரையே பருகுவதால் நீரின் மூலம் இயற்கையாக கிடைக்கக்கூடிய சத்துக்கள் கிடைக்காமல் எலும்புகள் பலவீனம் அடைகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

காசு கொடுத்து மினரல் வாட்டரை வாங்குவதை விட வடிகட்டிய நீரை காய்ச்சிக் குடிப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவம் சொன்னாலும், தங்களின் வியாபரத்திற்காக பல நிறுவனங்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குழாய் நீரை கழிவு நீர் போல் சித்தரித்து மக்களை மூளைச் சலவை செய்து, அதன் மூலம் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்கின்றன என்பதே அசைக்கமுடியாத உண்மை. வியாழன், ஜூன் 23, 2016

செவ்வாயில் குடியேறி மரணிப்போம்..!னிதன் தொடக்கத்தில் ஊர்விட்டு ஊர் குடியேறினான். சிறிது காலம் கழித்து மாநிலம் விட்டு மாநிலம் குடியேறினான். அதற்குப்பின் நாடு விட்டு நாடு. இப்போது அவன் நாட்டமெல்லாம் பூமியை விட்டு வேறு எங்காவது போவோமா என்பதுதான்.


அப்படி பூமியை விட்டு வேறு கிரகத்துக்கு கூட்டிப் போவதற்காகவே 'மார்ஸ் ஒன்' என்ற நிறுவனம் தயாராக இருக்கிறது.  நெதர்லாந்தில் இருக்கும் இந்த நிறுவனத்தில் ஒரு சிறுதொகையை கட்டிவிட்டு காத்திருந்தால் போதும். 2024-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துப் போவார்கள். அப்படி அங்கு போவோர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது. அவர்கள் நிரந்தரமாக செவ்வாயில் குடியேற வேண்டியதுதான்.


இப்படி செவ்வாயில் நிரந்தரமாக குடியேறுவதற்காக 2,02,586 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களில் 660 பேரை மட்டும் தேர்வு செய்து அடுத்தச் சுற்றுக்கு அனுப்பியது அந்த நிறுவனம். அவர்களையும் வடிகட்டி 100 பேரை தேர்வு செய்துள்ளது. அந்த 100 பேரில் நால்வரை மட்டும் முதல் கட்ட பயணத்துக்கு தேர்ந்தெடுத்துள்ளது. இந்த நால்வரும் 7 வருட பயிற்சிக்குப் பின் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.


செவ்வாய்க்குப் போனால்  கடைசி வரை அங்கேயே இருக்க  வேண்டியது தான். இந்த பயணத்துக்கு மொத்தம் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிட்டுள்ளார்கள். இவர்கள் அங்கு செல்வதற்கு முன்பே தங்குவதற்கு வசதியாக குடில்கள் ஆளில்லா விண்கலங்கள் மூலம் எடுத்துச் சென்று அமைப்பார்கள். செவ்வாயில் நமது பூமியைப் போல் ஆறு, குளம், மரம், செடி, கொடி எதுவும் இருக்காது. இவர்கள் தங்கியிருக்கும் குடில்களுக்கு அருகே காய்கறி பயிரிடுவதற்கான இடமும் இருக்கும். அதில் விளைவித்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். அங்கு தங்குபவர்களை பற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப குடில்களுக்குள் டிவி கேமராக்கள் இருக்கும்.


முதல் குழுவில் இருக்கும் நான்கு பேர்களில் இரண்டு பேர் ஆண்கள். இருவர் பெண்கள். இவர்களின் வயது 18 முதல் 40 வரை. இவர்கள் எந்த நிலைமையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு வாழ முடியும். 

இந்த நால்வரும் 7 மாதம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைவார்கள். இப்படி இவர்கள் பயணம் செய்யும் நிகழ்ச்சிகளையும் அவர்களின் பேட்டிகளையும் ஒளிபரப்புவதற்கான உரிமை ஏலம் மூலம் விடப்பட்டு பெரும் பணம் திரட்டப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


செவ்வாயில் மனிதனுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் இல்லை. கடுங்குளிர் வேறு, புழுதிப் புயல் ஏற்பட்டால் பல மாதங்களுக்கு அடங்காமல் நீடிக்கும். அதிலிருந்து தப்ப முடியாது. அங்கு நிலவும் கதிர்வீச்சால் காய்கறிகளை பயிர் செய்வதும் சிரமமே. தண்ணீரும் போதிய அளவு அங்கு கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் அவர்கள் பூமியில் இருந்து செல்லும் விண்கலன்களையே நம்பி இருக்க வேண்டும். செவ்வாயில் அதிக நாட்கள் வாழ முடியாது. சில நாட்களில் மரணம் நிச்சயம். மரணம் அடைந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்யப் படவில்லை என்றால் அதன் மூலமும் கிருமிகள் பரவி பெரும் ஆபத்தை தோற்றுவிக்கலாம். நிலைமை இப்படி இருக்க மரணத்துக்கான ஒரு வழிப் பாதைபோல் செவ்வாயில் மனிதர்களை இறக்கிவிட்டு வருவது நியாமில்லை என்ற கருத்தும் எழாமல் இல்லை.


சந்திரனுக்கு மனிதன் சென்று திரும்புவது போல செவ்வாய்க்கும் சென்று திரும்பலாமே என்றால் அது முடியாது என்கிறது விஞ்ஞானம். நிலவின் தூரம் பூமியில் இருந்து 4 லட்சம் கி.மீ. மூன்று நாள் பயணத்தில் சென்று சேரலாம். செவ்வாயின் தூரமோ 20 கோடி கி.மீ. 7 மாதங்கள் பயணிக்க வேண்டும். நிலவு சிறிய கோள் என்பதால் அங்கு ஈர்ப்பு விசையும் குறைவு. அதனால் சிறிய விண்கலங்களில் மனிதன் சென்று வந்து விடலாம்.


செவ்வாயின் கதையே வேறு. அது பெரிய கிரகம். அதிகமான ஈர்ப்பு சக்திக் கொண்டது. அதற்கு பெரிய விண்கலங்கள் வேண்டும். அவ்வளவு பெரிய விண்கலங்களை தாய் ராக்கெட்டால் சுமந்து செல்லமுடியாது. அப்படியே சென்றாலும், செவ்வாயில் இறங்கிய அந்த விண்கலங்களை மீண்டும் பூமி நோக்கி செலுத்த நாஸா, நமது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் போல் மிகப் பெரிய ஏவுதளம் வேண்டும். அதெல்லாம் இப்போதைய தொழில் நுட்பத்தில் நடக்கவே முடியாத உண்மைகள். வருங்காலத்தில் வேண்டுமானால் நடக்கலாம்.  அதற்கு இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன. அதனால் செவ்வாய் பயணத்துக்கு தடை வரலாம் என்றும் ஆய்வாளர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதை மீறிப் போனாலும் அது ஒரு வழி மரணப் பாதைதான்..!
புதன், ஜூன் 22, 2016

நாம் தலை நிமிர்ந்து நிற்க கழுத்து அவசியம்

ருவரின் வடிவத்தை நிர்ணயிப்பதில் கழுத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு.கழுத்து நீண்ட பெண்கள் பொதுவாக உயரமாக இருப்பார்கள். ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு பெறுவதற்கு அவரது கழுத்து அமைப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்ததாக அழகிப்போட்டி நீதிபதிகள் கூறினார்கள்.


முதுகெலும்பின் தொடக்க இடம் கழுத்துப் பகுதியில்தான் உள்ளது. முதுகெலும்பின் முதல் வலையத்தை 'அட்லாஸ்' என்று அழைக்கிறார்கள். உலகத்தை 'அட்லாஸ்' தாங்கி நிற்பதுபோல் இந்த வளையம் தலையை தாங்கி நிற்கிறது என்பதால் அப்படியொரு பெயர். ஆம், இல்லை என்று நாம் தலையாட்டும் போது மண்டை ஓடும் இந்த அட்லாஸும் சேர்ந்துதான் அந்த அசைவை கொடுக்கின்றன. 

குழந்தை வளர்ச்சியில் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் ஆகும்போதுதான் தலை நிற்கும். அப்போதுதான் குழந்தையின் அப்பாவால் குழந்தையை பயமின்றி தூக்க முடியும். நான்கு மாதம் முடிந்தபின்னும் குழந்தையின் தலை நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்தால் குழந்தையின் கழுத்து மண்டலத்தில் ஏதோ கோளாறு என்று தெரிந்து கொள்ளலாம். எனவே, உடனே குழந்தைகள் நல டாக்டரிடம் காண்பிப்பது நல்லது. 


குழந்தைப் பருவத்தில் தலையை தூக்கிப்பார்க்கும்போது முதுகெலும்பின் மேல் கழுத்துப் பகுதியில் ஒருவித வளைவு ஏற்படத் தொடங்கும். பின்னர் குழந்தை உட்காரும்போது முதுகெலும்பின் கீழ்பகுதியில் மற்றொரு எதிர்திசை வளைவு ஏற்படும். 

கருவாக இருக்கும்போது குழந்தையின் முதுகெலும்பு ஆங்கில எழுத்தான 'சி' (c) வடிவில் இருக்கும். அதன்பிறகு முதுகெலும்பு தொடர் நேராகி அதற்கு பிறகு மேற்படி வளைவுகளினால் அதிக வளைவு இல்லாத 'எஸ்' (s) எழுத்து வடிவத்தை அடைகிறது. எலும்பு மட்டுமல்லாமல் அதைச்சுற்றியுள்ள தசைகளும் இந்த வடிவத்துக்கு காரணாமாக அமைகின்றன.


மண்டையோட்டையும் அதனுள் இருக்கும் மூளையையும் தாங்கிப்பிடிப்பது கழுத்திலுள்ள எலும்புகள்தான். அதாவது முதுகெலும்பின் ஆரம்பப்பகுதி இப்படி மூளையப்பகுதியை தாங்கிப்பிடிப்பதோடு, தண்டுவடத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவதும் முதுகெலும்பு தொடர்தான். மண்டையோட்டை விட முதுகெலும்பின் வேலை மிக நுட்பமானது, சவாலானது. 

மண்டை ஓடு அசைவதில்லை. குழந்தைப் பிறக்கும்போது மட்டுமே கொஞ்சம் அசைந்து கொடுத்து பிரசவத்தை எளிதாக்குகிறது. இதைத்தவிர மண்டை ஓட்டின் ஒரு பகுதி அசைகிறதென்றால் அது கீழ்த்தாடை மட்டுமே. எனவே தன்னை பாதுகாத்துக் கொண்டு, மூளையையும் பாதுகாப்பது மண்டை ஓட்டுக்கு சவாலான காரியம் இல்லை. ஆனால், தண்டுவடம் தொடர்ந்து அசையும் பகுதி. அதைச் சுற்றிச் செல்லும் முதுகெலும்பு உறுதியானதாகவும் இருக்க வேண்டும். 

அதேசமயம் நாம் பல்வேறு வேலைகளை செய்ய வசதியாக நன்கு நெகிழ்ந்து கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். நமது கழுத்து இத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நாம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு முதுகெலும்பும், தண்டுவடமும் உறுதியான கழுத்தும் வேண்டும்.


திங்கள், ஜூன் 20, 2016

நகர்ந்து கொண்டே இருக்கும் தீவு

மெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் நிறுவனம் கடலில் ஒரு ஆய்வை செய்து வருகிறது. அந்த ஆய்வில் அண்டார்டிக் துருவப் பகுதியிலுள்ள ராஸ் கடல் பகுதிக்கு ஒரு தீவு நகர்ந்து கொண்டே வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் அகலமும், 158 கிலோமீட்டர் நீளமும், 228 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பனித்தீவு மிதந்தபடி நகர்ந்து கொண்டு இருக்கிறது. 


சாதரணமாக பனிப்பாறைகள் கடலில் மிதக்கும்போது, அவற்றின் உச்சி மட்டுமே நீர்பரப்புக்கு மேல் தெரியும். ஆனால், இந்த பனித் தீவு அப்படியில்லாமல் அதன் பெரும் பரப்பளவு தண்ணீருக்கு வெளியே தெரிகிறது. இதுவரை இவ்வாறு காணப்பட்ட பனிப்பாறைகளில் இதுவே மிகப் பெரியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

இதுவொரு நன்னீரால் உருவான பனித்தீவு. இதில் உள்ள தண்ணீரை கொண்டு 30 லட்சம் மக்களுக்கு 670 வருடங்கள் எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். அந்தளவிற்கு இதில் தண்ணீர் நிறைந்துள்ளது. இந்தத் தீவு இப்படி மிதந்து செல்வதால் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை என்றாலும் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். 

இதன் குளிர்ச்சியால் கடலின் வெதுவெதுப்பு தன்மை பாதிக்கப்படும் என்கிறார்கள். பனித்தீவு உருகி நல்ல தண்ணீர் கடல்நீரில் கலக்கும்போது கடல் நீரின் தன்மையில் மாற்றம் ஏற்படும். இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்படையும். கடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அது பொதுவான சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். 


மிதக்கும் பனிப்பாறைகளில் மிகப் பெரியது அண்டார்டிகா கண்டத்தின் கரையோரமாக கடலில் 154 கிலோ மீட்டர் நீளமும் 35 கிலோ மீட்டர் அகலமும் 350 மீட்டர் உயரமும் கொண்டது. மனிதனால் சரியாக அளக்கப்பட்ட கடல் பனிப்பாறைகளில் இதுவே மிகப் பெரியதாக இருந்தது. இந்தப் பனிப்பாறை ஹாங்காங் நாட்டின் அளவுக்கு நீளமும் அகலமும் கொண்டது. இந்தப் பனிப் பாறையைவிட இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் பனிப்பாறை அதாவது பனித்தீவு இன்னும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி, ஜூன் 17, 2016

புத்தகங்களை பாதுகாப்பது எப்படி?

புத்தகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றன. நல்ல புத்தகம், நல்ல நண்பன். ஒருவர் படிக்கும் புத்தகங்களின் அடிப்படையில் அவருடைய பழக்க வழக்கங்கள் இருக்கும். 
புத்தகங்கள் அரிய பொக்கிஷங்கள், புத்தகங்கள் வாங்குவதைவிட அவற்றை பாதுகாப்பது கடினமான காரியம். பொதுவாக புத்தகங்களை அதற்கென்று தனியாக ஒரு அலமாரி ஒதுக்கி பாதுகாப்பது நல்லது. அலமாரிகளில் அடுக்கினால் மட்டுமே புத்தகங்களின் முனைகள் விளிம்புகள் மடங்காமல் இருக்கும். விளிம்புகள் மடங்கினால் அந்த இடங்கள் நாளடைவில் கிழிய வாய்ப்புள்ளது. அலமாரியில் அடுக்கும் போது தூசு, பூச்சிகள் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அதனைத் தவிர்க்க அலமாரியில் நாப்த்தலின் உருண்டைகளை போட்டு வைக்கலாம். 

புத்தகங்களை அதிக வெளிச்சம் உள்ள இடங்களில் அடுக்கி வைப்பது நல்லது. ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டும். படிக்கும் போது கைகளில் அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கையில் எண்ணெய் பசை, அழுக்கு போன்றவை இருந்தால் அவை புத்தகத்தில் படிந்து காலப்போக்கில் எழுத்துகள் அழிய வாய்ப்புண்டு. புத்தகங்களின் விளிம்புகளை அடையாளத்துக்காக மடிக்காமல், அதற்கு பதில் கயிறு, அல்லது சிறு அட்டைகளை வைத்து அடையாளம் ஏற்படுத்தலாம். 


புத்தகங்களில் இருந்து பூஞ்சை வாசம் வந்தால் ஒரு சிறிய காலிப் பெட்டியில் சமையல் சோடாவுடன் சிறிய பேப்பர் துண்டுகளையும் கலந்து ஒரு வார காலத்துக்கு புத்தகங்கள் வைத்துள்ள அலமாரியில் வைத்தால் அவற்றில் இருந்து வரும் கெட்ட வாடை நீங்கும். 

அடிக்கடி உபயோகப்படுத்தும் புத்தகங்கள், அதிகம் பயன்படுத்தாத புத்தகங்கள் என்று வரிசைப்படுத்தி அடுக்குவது சிறந்தது.அடிக்கடி பயன்படுத்தாத புத்தகங்களை தனித்தனியாக பாலிதீன் பேப்பர்களில் உறையிட்டு வைக்க வேண்டும். 


பழைய புத்தகங்கள் தொட்டவுடன் கிழிய வாய்ப்புள்ளது. இத்தகைய புத்தகங்களைப் படிக்கும் போது கை விரல்களால் பக்கங்களை திருப்புவதைக் காட்டிலும் மெல்லிய பேப்பர்கள் கொண்டு பக்கங்களை திருப்புவது நல்லது. இவற்றை டிஜிட்டல் முறையில் நகல் எடுத்து, படம் பிடித்து சேமித்து வைக்கலாம். 

புத்தக அலமாரியில் வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை போட்டுவைத்தால் பூச்சிகள் அண்டாது. அலமாரிகளை அடிக்கடி சுத்தம் செய்வது மிக அவசியம். புத்தகங்களை காப்பது என்பது செல்வங்களை சேமிப்பது போன்றதாகும். புத்தகங்களில் பொதிந்துள்ள கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமையாகும். வெள்ளி, ஜூன் 10, 2016

மூளையை குறைவாக பயன்படுத்தும் பெண்கள்

னித மூளை எப்போதும் விசித்திரமானது. அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. பல விசித்திரங்களுக்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை. நாம் தூங்கும் போது மூளையும் நம்முடனே சேர்ந்து தூங்குவதகத்தான் பலரும் நினைக்கிறோம். ஆனால், மூளை தூங்குவதில்லை. மாறாக, இரவில் அதிகமான சுறுசுறுப்புடன் அது இயங்குகிறது. கனவு வந்தால் மூளை விழிப்புடன் இருப்பதாக நம்பப்படுவது தவறான தகவலே. கனவு வந்தாலும் வராவிட்டாலும் மூளை தொடர்ந்து உற்சாகமாக இயங்குகிறது. மூளை எப்போதும் தூங்கவே தூங்காது என்பதுதான் உண்மை. அப்படி அது தூங்கினால் நாம் நிரந்தரமாக தூங்கி இருப்போம்.  


நமது மூளைக்கு வருங்காலத்தை அறியும் திறன் இருக்கிறது. பின்னாளில் நடைபெறும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திறன் நம் மூளைக்கு உண்டாம். அவற்றை கனவுகளாக நமக்கு உணரவைக்கவும் அவை தவறுவதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த கனவு வழியாக எதிர்காலத்தை அறியும் திறன் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். அதனால்தான் சிலர் காணும் கனவுகள் மட்டும் அப்படியே பலிக்கிறது. சிலரின் கனவுக்கும் நடப்பதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. இது எப்படி நடக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கே முழுமையாக புரியவில்லை. மனித மூளையால் வருங்காலத்தை கணிக்க முடியும் என்று விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் என இரண்டுமே ஒப்புக் கொண்டுள்ளது. அது இப்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 


 நடுப்பகுதி மூளையில் உள்ள 'டோபமைன்' என்ற அமைப்பு நடக்காத சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு அறிகுறிகளை தந்துகொண்டே இருக்கும் என்றும் இதுதான் நாம் சில செயல்களை செய்யும்போது தடுக்கிறது என்றும், ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் அதையும் மீறி அந்தக் காரியத்தை செய்யும் போது தோல்வி அடைகிறோம் என்றும், மூளை தரும் அந்த அச்சம்தான் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு என்று கூறுகிறார்கள். இதைதான் தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் சொல்கிறார்கள். 


பெண்கள் மூளையை குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். ஆணோடு ஒப்பிடும்போது பெண்கள் தங்கள் மூளையை 10 சதவீதம் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு  முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால்தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை வரும்போது பெண்கள் சற்று குழம்புகிறார்கள். 

உடலில் எந்த இடத்தில் ஒரு சிறு காயம் பட்டால் கூட உடனே தெரிவிக்கும் மூளை தனக்கு வலி ஏற்பட்டால் மட்டும் அதை தெரிவிப்பதில்லை. ஏனென்றால் மூளையிடம் வலி உணர்விகள் கிடையாது. அவற்றுக்கான இடமும் மூளையில் இல்லை.  


மூளையின் அளவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அறிவுத்திறனில் இது முக்கிய பங்களிக்கிறது. மூளையின் அளவு பெரிதாக இருப்பவர்கள் ஒரு பிரச்னைக்கு மிக நல்ல தீர்வு காண்பார்கள் என்றும், வெளிப்புற நிகழ்வுகளை புரிந்து கொள்வார்கள் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். 

மூளைதான் மனித உடலிலே அதிக அளவு சக்தியை எடுத்துக்கொள்ளும் அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


புதன், ஜூன் 08, 2016

ஜி.எஸ்.எம். & சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம்

ன்று நாம் பயன்படுத்தும் மொபைல்கள் இரண்டு வகையான தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. ஒன்று ஜி.எஸ்.எம். தொழில்நுட்பம், மற்றொன்று சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம். இதில் ஜி.எஸ்.எம். என்றால் 'குளோபல் சிஸ்டம் பார் மொபைல்'  என்றும், சி.டி.எம்.ஏ. என்றால் 'கோட் டிவிஷன்  மல்டிபிள் அக்சஸ்' என்றும் அர்த்தம். 

உலகம் முழுவதும் பரவலாக இருப்பது ஜி.எஸ்.எம். என்ற தொழில் நுட்பம்தான். இது ஐரோப்பிய நாடுகளின் கண்டுபிடிப்பு. சி.டி.எம்.ஏ. என்பது அமரிக்க தொழில் நுட்பம். இதை முதன்முதலில் ராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தினார்கள். 1980-க்கு பின் பொது உபயோகத்திற்கு கொண்டு வந்தார்கள். 


சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தை விட பல வகைகளில் சிறந்தது. இந்த தொழில் நுட்பத்தில் குரல் தரம் கூடும். இரைச்சல் கொஞ்சமும் இருக்காது. வாடிக்கையாளர் பயணம் செய்து கொண்டே மொபைலில் பேசினாலும் சிக்னல் ஒரு டவரில் இருந்து ஒரு டவருக்கு மாறினாலும் அழைப்பு துண்டிக்கப்படாது. வலிமையான சிக்னல் என்பதால் தொடர் பயணத்திலும் தெளிவாக இருக்கும்.

ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தை விட இந்த தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் அதிக தூரம் வரை சென்றடையும். ஒரு பெரிய நகரம் முழுவதற்கும் 40 டவர்கள் இருந்தால் போதும். அதுவே ஜி.எஸ்.எம். என்றால் 200 டவர்களை அமைக்க வேண்டும். இதனால் சி.டி.எம்.ஏ. செலவு குறைவு. 

கட்டடங்களில் சாதாரண சிக்னல்கள் ஊடுருவி செல்வது கடினம். சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில் சிக்னல்கள் சுவர்களை ஊடுருவி செல்லும். பலவீனமடையாது. இதற்கு குறைந்த மின் சக்தியே போதும், அதனால், பேட்டரி அதிக நாட்களுக்கு வரும். சிறிய பேட்டரி போதும். அதனால், மொபைல் சிறியதாகவும் எடை குறைவாகவும் வடிவமைக்க முடியும். 


சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் 'சிம் கார்ட்' கிடையாது. மொபைலின் உட்புறமே எண் பொறிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் எண்களை மாற்ற முடியாது. இந்த குறைபாடு காரணமாகவே ஒரு நல்ல தொழில்நுட்பம் இங்கு அதாவது இந்தியாவில் பிரபலமாக முடியாமல் போய்விட்டது. 

சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் இயங்கி வந்த ரிலையன்ஸ், டாட்டா இண்டிகாம் போன்ற நிறுவனங்கள் கூட இப்போது ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டன என்பதே இதற்கு சாட்சி.செவ்வாய், ஜூன் 07, 2016

இவர் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை

ஃபோரெஸ்ட் மார்ட்டன் பேர்ட் என்பதுதான் அவரின் பெயர். 1921 ஜூன் 9-ல் பிறந்தார். அவரொரு விமானி. தனது தந்தையின் விருப்பத்தினால் 14-வது வயதிலேயே விமானம் ஓட்ட கற்றுக்கொண்டார். விமானம் ஓட்டுவதில் அதீத திறமையும் ஈடுபாடும் அவருக்கிருந்தது. அதனால் இவரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் விமான ஓட்டிகளுக்கும் விமானங்களுக்குமான தொழில் நுட்ப வல்லுனராக நியமித்தனர். இந்த வேலை மூலம் பேர்டுக்கு பல்வேறு விமானங்களை ஒட்டிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

விமானியாக பேர்ட் 
நவீன ரக விமானங்கள் சில மிக உயரத்தில் பறக்கும் விதமாக வடிவமைக்கப் பட்டிருந்தன. உயரம் செல்லச் செல்ல ஆக்சிஜன் அளவு குறையும் என்பது இயற்கை நியதி. அதனடிப்படையில் இத்தகைய விமானங்களை இயக்கும் விமானிகள் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும் போது மூச்சு விடுதலில் சிரமமும், மூச்சுத் திணறலும் ஏற்படுவதாக கூறினார்கள். அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அவர் சிந்தனையில் உருவானதுதான் செயற்கை சுவாசக் கருவி.

செயற்கை சுவாசக் கருவியுடன் பேர்ட் 
அந்தக் கருவியை கண்டுபிடிப்பதற்கு முன் மனிதனின் சுவாச அமைப்பைப் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தார். விமானியாக இருந்து கொண்டு இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள முடியாது என்பதால் தான் வகித்த மிக உயர்ந்த பதவியை துறந்து, மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவராக சேர்ந்தார். 

அதன்மூலம் மனித உடல் இயங்கும் முறையையும் அது சுவாசிக்கும் முறையையும் அப்படி சுவாசிக்க தேவையான வேதியல் பொருட்களையும் கற்றுக்கொண்டார். அதன் விளைவாக செயற்கை சுவாசக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது.

ஒபாமாவுடன் பேர்ட் 
அதற்கு 'பேர்ட்' என்ற தனது பெயரையே வைத்தார். ஆனாலும் இந்தக் கருவியை சோதனை முறையாக பயன்படுத்திப் பார்க்க எந்த விமானியும் முன்வரவில்லை. அதனால் மூச்சு திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்ட செயற்கை சுவாசம் கொடுத்தால் மட்டுமே உயிர்பிழைக்க முடியும் என்ற நிலையிலுள்ள தீவிரமான நோயாளிகளுக்கு பயன்படுத்திப் பார்த்தார்கள். பரிசோதனை முயற்சியே பிரமாண்ட வெற்றி. முதல் சோதனையிலே ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மூச்சுத் திணறலால் உயிரை விட இருந்த பல நோயாளிகள் மீண்டும் வாழ்க்கை பெற்றார்கள்.

பேர்ட் ஆக்சிஜன் பிரீத்திங் எக்யுப்மென்ட்
விமானிகளின் மூச்சுத்திணறலை சரிசெய்ய உருவாக்கப்பட்ட செயற்கை சுவாசக் கருவி உயிர் காக்கும் கருவியாக மாறியது. 1967-ல் 'பேர்ட் ஆக்சிஜன் பிரீத்திங் எக்யுப்மென்ட்' என்ற பெயரில் சொந்த நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, தனது கருவியை சந்தைப் படுத்தினார். 1972 இல் பிறந்த உடனே மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துபோகும் குழந்தைகளின் உயிரைக்காக்கும் அளவிற்கு அவரது இயந்திரம் மேம்படுத்தப்பட்டது.

1980-களில் தொடர்ச்சியாக மேற்கொண்ட பல ஆய்வுகளின் விளைவாக மேம்படுத்தப்பட்ட 'நவீன வென்டிலேட்டர்' சாதனம் உருவாக்கப்பட்டது. இது செயற்கை சுவாசத்திற்கு மட்டுமல்லாமல், அசுத்த ரத்தத்தை சுத்திகரிக்கும் கருவியாகவும் பயன்பட்டது. மருத்துவ உலகில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்ட கருவிகளில் பேர்டின் வெண்டிலெட்டரும் ஒன்று.

மூன்றாவது மனைவி பமீலா ரிட்டிலுடன் பேர்ட்
மனிதர்களின் சுவாசப் பிரச்சனைக்கு தீர்வு கண்டதால் இவருக்கு 'செயற்கை சுவாசத்தின் தந்தை' என்று பட்டம் மருத்துவ துறையால் வழங்கப்பட்டது. மூன்று மனைவிகள் மற்றும் ஒரு மகளுடன் பிரமாதமாக வாழ்ந்த பேர்ட், தனது 94-வது வயதில் 2015 ஆகஸ்ட் 2-ல் மரணமடைந்தார். புதன், ஜூன் 01, 2016

'ஃபிளாஷ் பேக்' எனும் சினிமா புரட்சி !

ன்றைய சினிமாவில் எதற்கெடுத்தாலும் ஒரு 'ஃபிளாஷ் பேக்'கை காட்டிவிடுகிறார்கள். ஆனால் இந்த 'ஃபிளாஷ் பேக்' உத்தி கண்டுபிடிக்கப் படாத காலங்களில் சினிமா என்பது ஒரு போரடிக்கும் சமாச்சாரமாகவே இருந்தது. ஒரு கதையை சொல்லவேண்டுமென்றால் அதன் தொடக்கத்தில் இருந்து வரிசை கிரமமாகத்தான் சொல்லவேண்டும். 'எடிட்டிங்' என்ற தொழில்நுட்பமும் அப்போது இல்லை. அதனால் காட்சிகளையும் கதையின் படியே எடுக்க வேண்டியிருந்தது. 

ஃபிளாஷ் பேக் உத்தியில் புதிய வடிவத்தை தந்த 'ஜிகர்தண்டா'
ஒரு ஹீரோ கஷ்டப்பட்டு பெரிய பணக்காரனாக மாறுகிறான் என்றால், அவன் சிறுவனாக இருந்தது. பல வேலைகளை செய்தது, வளர்ந்து பணம் சேர்த்தது, பணக்காரன் ஆனது என்று படிப்படியாக தான் காட்ட முடியும். ஆனால், இப்போது அப்படியில்லை, எடுத்தவுடன் ஹீரோவை பெரிய பணக்காரனாக காட்டிவிட்டு, அதன்பின் சின்ன 'ஃபிளாஷ்பேக்'கில் அவன் கஷ்டப்பட்டதையும் காட்டிவிடலாம். 

'ஃபிளாஷ் பேக்' என்பதை சினிமாவின் புரட்சி என்கிறார்கள். இதை சினிமாவில் முதன் முதலாக பயன்படுத்தியவர் அகிரா குரோசோவா என்ற இயக்குனர். அவர் இயக்கிய 'ரோஷோமான்' படத்தில் இந்த நுட்பத்தை பயன்படுத்தினார். 

முதன் முதலில் ஃபிளாஷ் பேக்கை பயன்படுத்திய 'ரோஷோமான்'
படத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். அதனைத் தொடர்ந்து ஒரு கொலையும் நடக்கிறது. அந்த கொலையை அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் விசாரிக்கும் போது நான்கு பேரும் அவரவர்கள் கோணத்தில் அந்த சம்பவத்தை விவரிப்பார்கள். 

நான்கு கோணங்களில் கதை நகரும். கிளைமாக்ஸ் வரை கொலையாளி யார் என்பது சஸ்பென்ஸ்..! இதுதான் அந்த படத்தின் கதை. இந்தக் கதையை அடிப்படையாக வைத்துதான் தமிழில் சிவாஜி கணேசன் நடிக்க 'அந்த நாள்' என்ற படம் வந்தது. 

முதன் முதலில் ஃபிளாஷ் பேக்கை பயன்படுத்திய தமிழ் படம் 
திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்படும் அகிரா குரோசோவா இயக்கிய மிகச் சிறந்த படம் இது. இதன் மூலம் அவர் கொண்டுவந்த புதிய சிந்தனையான 'ஃபிளாஷ்பேக்' என்ற யுத்தி லூமியர் சகோதரர்கள் கண்டுபிடித்த அசையும் காட்சிகளுக்கு அடுத்து, இது ஒரு பெரிய புரட்சியாக சினிமாவில் கருதப்பட்டது. 

அதிகமான ஃபிளாஷ் பேக்கை கொண்ட 'பாகுபலி'
திரைக்கதையில் சில விஷயங்களை மறைத்துவைக்க ரசிகர்களுக்கு படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த பெரும்பாலான இயக்குனர்களுக்கு இன்று வரை 'ஃபிளாஷ்பேக்'தான் பயன்படுகிறது.
இந்த பாடலே ஒரு பிளாஷ் பேக்தான் அதற்குள் மற்றொரு பிளாஷ் பேக்கை அற்புதமாக சொன்ன பாடல் LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...