புதன், ஆகஸ்ட் 31, 2016

உலர்ந்த உதடுகளின் வெடிப்புமுகத்திற்கான அழகை கூட்டுவதில் உதடுகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. இந்த உதடுகளை பெரியதாகவும் சிறியதாகவும் காட்ட பல்வேறு அழகு சாதனப்பொருட்கள் வந்துவிட்டன. நமது உதட்டுப்பகுதிகளில் வியர்வை நாளங்கள் மிக மிகக் குறைவு. மேலும் எண்ணெய்ப் பசையை உருவாக்கும் சில நாளங்களே உள்ளன. அதனால் அவை எளிதில் உலர்ந்து விடுகின்றன. சிலருக்கு உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு, வலியும் கடுமையானதாக இருக்கும். 

உதடுகளில் வெடிப்பு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. காற்று அதிகம் படுவதாலோ, உதடு அதிகம் உலர்ந்து போகும் நிலையில் வெடிப்பு உண்டாகிறது. அப்படி ஏற்படும் போது அது மிகவும் உலர்ந்தும், சிவப்பு நிறமாகவும், மிகவும் கடினமாகவும் இருக்கும். சில நேரங்களில் ரத்தக் கசிவும் இருக்கும். வாய் ஓரங்களில் வெடிப்பு ஏற்படுவதற்கு 'ரிப்போபுளோவின்' என்ற குறைபாடே காரணம்.


உதடுகள் வெடிப்பு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உலரும் தன்மை அதிகம் கொண்ட பகுதியில் இருப்பது, வைட்டமின் 'பி' குறைபாடு, புகைபிடித்தல் போன்றவையும் காரணம். புகைப்பிடிப்பதால் உதடுகளில் சுரக்கும் எண்ணெய்ப் பசை உண்டாகாது. அதனாலும் உதடுகளில் வெடிப்பு ஏற்படும். 

உதட்டு வெடிப்பை சரி செய்வதற்கு 'லிப் பாம்' அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். அதிகமாக தண்ணீர் குடிக்கலாம். ரிப்போபுளோவின் குறைபாட்டை தவிர்க்க வைட்டமின் 'பி-2' உணவுகள், மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளலாம். பகல் நேரங்களில் வெளியே செல்லும்போது 'சன் ஸ்கிரீன்' பயன்படுத்தலாம்.


உதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க உதட்டுச்சாயம் பூசுவதற்கு முன் பெட்ரோலியம் ஜெல்லியை பூசவேண்டும். குளிர்ந்த உப்புநீரை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் இடவேண்டும். இரவு படுப்பதற்கு முன் இதனை செய்யலாம். பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து உதட்டில் மசாஜ் செய்யலாம். ஒரு நாளைக்கு 10 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடித்தால் உதட்டு வெடிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். லிப்ஸ்டிக் பூசுவது அலர்ஜியைத் தந்தால் வேறு தரமான லிப்ஸ்டிக்கை உபயோகப்படுத்தலாம். அதுவும் ஒத்துக்கொள்ள வில்லை என்றால் லிப்ஸ்டிக்கை தவிர்ப்பதே உதட்டைக் காக்கும்.  
சனி, ஆகஸ்ட் 27, 2016

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்த ஒரே படம்

ஹாலிவுட் ஆகட்டும், பாலிவுட் ஆகட்டும், அங்கெல்லாம் புகழின் உச்சத்தில் இருக்கும் இரண்டு பெரும் நடிகர்கள் ஒரே சினிமாவில் சேர்ந்து நடிப்பது சாதாரண விஷயம். தமிழ் சினிமாவிற்கு மட்டும் இந்த கொடுப்பினை இல்லை போலும். இங்கிருக்கும் பெரிய நடிகர்கள் எப்போதும் துருவங்களாக விலகியே நிற்கிறார்கள். அவர்கள் இணைந்து நடிப்பதில்லை. 


அப்படி தமிழ் சினிமா உலகில் இருபெரும் ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படம் 'கூண்டுக்கிளி'. இது 1954-ம் ஆண்டு வெளிவந்தது. மில் தொழிலாளர்களான இரண்டு இளைஞர்களை பற்றிய கதை இது. இருவரும் இணைபிரியாத நண்பர்கள். ஒரு இளைஞனின் காதலி சந்தர்ப்ப வசத்தால் நண்பனின் மனைவியாகிறாள். நண்பனின் மனைவி ஆன பின்னரும் தனது காதலியை அவன் மறக்கவில்லை. அவளை தொடர்ந்து காதலிப்பது மட்டுமின்றி அடையவும் துடிக்கிறான். அதெல்லாம் தெரியாத நண்பன் அவனை தன் வீட்டிலேயே தங்க அனுமதிக்கிறான். அதனால் ஏற்படும் பிரச்சனைதான் படத்தின் கதை. 

படத்தில் அன்றைய தொழிலாளர்களின் நிலைமைப் பற்றி அதிகம் பேசப்பட்டது. புரட்சியான கருத்துக்கள் படம் நெடுக இருந்தது. ஒருகாட்சியில் குழந்தை அழும் பக்கத்து வீட்டுப் பெண் 'செல்வி, குழந்தை அழுகிறது. கொஞ்சம் பால் கொடேன்..!' என்று வரும். அதற்கு 'மாடுகூட தீனி போட்டால்தான் பால் கொடுக்குது..!' என்று பட்டினியால் வாடும் தனது நிலையை எடுத்துச் சொல்லியிருப்பாள் அந்த பெண்.

பொதுவாக தொழிலாளர்கள் பிரச்சனை, புரட்சிக் கருத்துக்கள் போன்றவற்றை அதிகமாக கொண்ட படங்கள் தோல்வி பட்டியலில்தான் இடம் பெறுகின்றன. அதற்கு 'கூண்டுக்கிளி'யும் விதிவிலக்கல்ல. அதுவும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அதன் விநியோகஸ்தர் சோர்ந்துவிடவில்லை. காத்திருந்தார். 


பின்னாளில் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இணைந்தார். சிவாஜி கணேசன் காங்கிரசில் இணைந்தார். இருவரும் சினிமாவிலும் அவரவர்கள் இணைந்த கட்சியிலும் பிரபலமாகிக்கொண்டே போனார்கள். 'கூண்டுக்கிளி'யை வாங்கி டப்பாவில் வைத்திருந்த விநியோகஸ்தருக்கு அது சிறந்த காலக்கட்டமாகப் பட்டது. மக்கள் திலகமும், நடிகர் திலகமும் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் என்று விளம்பரம் செய்தார், படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த முறை படம் வசூலை அள்ளியது. விண்ணைத் தொட்டது. காரணம் அப்போது இருவரும் இரு துருவங்களாக வெகு தொலைவில் விலகியிருந்தார்கள்.

விநியோகஸ்தரின் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. பிரச்சனைகள் எழுந்தன. இரு தரப்பு ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சேலம் அருகே இருந்த வாழப்பாடி என்ற ஊரில் இருந்த ராஜா தியேட்டரில் இரண்டு ரசிகர்களுக்கும் இடையே முதல் முறையாக மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டர்களில் எல்லாம் மோதல் வெடிக்க தொடங்கியது. 


தியேட்டர் சிலைடிலும், பேப்பர்களிலும் ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று பெருமளவு விளம்பரம் செய்யப்பட்டன. ஆனால், எந்தப் பலனும் இன்றி மோதல் மிகவும் முற்றியது. மீண்டும் படம் பெட்டிக்குள் முடங்கியது. அதன்பின் திரையிடப்படவில்லை. கூண்டுக்கிளி நிரந்தரமாக கூண்டில் அடைக்கப்பட்டுவிட்டது.

நீங்கள் விரும்பினால் கூண்டுக்குள் அடைந்த கூண்டுக்கிளியை இங்கே பார்க்கலாம்.

கூண்டுக்கிளி திரைப்படம்வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016

அபார்ட்மெண்ட் மாடியில் மலை பங்களா


லமாடிகள் கொண்ட அபார்ட்மெண்ட் மீது ஒரு மாபெரும் மலை பங்களா இருந்தால் எப்படி இருக்கும்..? இப்படியொரு எண்ணம் சீனப் பேராசிரியர் ஒருவருக்கு ஏற்பட்டது. உடனே அப்படிப்பட்ட மலை பங்களாவை கட்டி ஒட்டுமொத்த அபார்ட்மென்டையும் திக்குமுக்காட வைத்துவிட்டார். 


26 மாடிகள் கொண்ட அபார்ட்மெண்டின் மீது 8,600 சதுரடி பரப்பளவில் பாறைகள் மரங்களை வைத்து, தோட்டங்கள், புல்தரையில், நிலச் சரிவுகள் போன்ற அனைத்துமுள்ள கடலோர கனவு மாளிகையைக் கட்டியிருக்கிறாரார், அக்குபஞ்சர் பேராசிரியர் ஜாங் பைகிங். இவர் தற்போது சீன அக்குபஞ்சர் வர்த்தக சங்கத்தின் தலைவராக இருக்கிறாராம். அதோடு ஹைதியன் மாவட்ட அரசியல் ஆலோசகராவும் இருக்கிறார். 

நம்மூர் அரசியல்வாதிகள் போலவே இவருக்கும் சட்டதிட்டங்களை மதிக்காமல் தன் மனம் போனபோக்கில் அபார்ட்மெண்டில் மொட்டை மாடியில் ஒரு கனவு பங்களாவை உருவாக்கிவிட்டார். இது எதுவுமே அப்பார்ட்மெண்ட் நிறுவனத்துக்கோ அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கோ தெரியாமல் நடந்தது என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் எதோ அழகுக்காக அபார்ட்மெண்ட் நிறுவனம் இதை செய்வதாகத்தான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். 


மேலே அளவுக்கதிகமாக பாரம் ஏற்ற ஏற்ற மொத்த கட்டடமும் விரிசல்விடத் தொடங்கியது. குழாய் இணைப்புகளில் பிரச்சனை வர அபார்ட்மெண்ட் வாசிகள் விழித்துக்கொண்டார்கள். தங்கள் அதிருப்தியை பதிவு செய்தார்கள். மொட்டை மாடியில் மலையை உருவாக்கியது மட்டுமல்லாமல் அதில் அதிரடி இசையில் லேட் நைட் பார்ட்டி வேறு நடந்ததாம். பொதுவாக இரவு நேரத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். 

மலை பங்களாவில் கட்டிய நீச்சல் குளத்தால் அடிக்கடி கீழேயிருக்கும் வீடுகளில் மழைபோல் தண்ணீர் கசிந்து கொட்டியிருக்கிறது. இத்தனை சிரமங்கள் இருந்தாலும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் 6 வருடங்களாக தனது கனவு பங்களாவை காட்டியிருக்கிறார் இவர். 


சீன ஊடகங்களில் இந்த பங்களாவைப்பற்றி செய்தி வந்த பிறகேதான் அரசு அதிகாரிகளுக்கே இதைப்பற்றி தெரியவந்தது. சீன அமலாக்கத் துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியும் ஜாங் சிக்கவேயில்லை. ஆனால், ஊடகங்கள் விடாப்பிடியாக விரட்டிப்பிடிக்க, பிரபலமானவர் வருகைக்காக அந்த பங்களாவை உருவாக்கியதாக சொன்னார். ஆனாலும் அவர்மீது சொல்லப்பட்ட எந்த புகாரைப் பற்றியும் அவர் கவலைப்படவேயில்லை. இப்போது அந்த மலை பங்களாவை அகற்றியிருக்கிறார்கள். சீனா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த பங்களா. மிக தாமதமாக ஜாங் 'இதுவொரு பெரிய தவறுதான்' என்று ஒத்துக்கொண்டிருக்கிறார். 
வியாழன், ஆகஸ்ட் 25, 2016

காம உணர்வை அதிகப்படுத்தும் மாதவிலக்கு


பெண்கள் குழந்தைகள் பெற்றுத்தரும் இயந்திரம் அல்ல என்று பெண்ணியவாதிகள் உரக்க குரல் கொடுத்தாலும், இயற்கை என்னவோ பெண்ணை ஒரு குழந்தை பெறும் இயந்திரமாகத்தான் படைத்திருக்கிறது போலும். முன்பெல்லாம் பெண்களுக்கு மாதவிலக்கு ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய பெண்களுக்கு மாதவிலக்கு  பிரச்சனையாக இருக்கிறது. 


இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை பெண்கள் பெரும்பாலும் கர்ப்பமான நிலையிலேயே இருந்தார்கள். அதனால் அன்றைய பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் 10 முதல் 20 தடவைகள் மட்டுமே மாதவிலக்கு பிரச்னையை சந்தித்து வந்தார்கள். ஆனால், இன்றைய பெண்கள் ஒரு வருடத்திற்கு 13 முறை மாதவிலக்கை அனுபவிக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு 2 முதல் 4 குழந்தைகள் இருந்தால் அவள் தன் வாழ்நாளில் 350 முதல் 400 முறையும், குழந்தை இல்லாத பெண்கள் என்றால் 500 முறையும் மாதவிலக்கை சந்திக்கிறார்கள்.

கருத்தடை மாத்திரைகள் வந்த பின் தான் பெண்களுக்கு மாதவிலக்குக்குப் பின் உணர்வு ரீதியான ஏற்ற இறக்கம் உண்டு என்பதை கண்டறிந்தனர். மாதவிலக்கு முடிந்த முதல் நாளில் இருந்து 21 நாட்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நல்ல எண்ணங்களை, மகிழ்வான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. பாசிட்டிவான மனநிலையை உண்டாக்குகின்றன. 


பெண்ணின் காம உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. மாத சுழற்சியின் நடுவில் கருமுட்டை வெளிப்படும் நாளில் அவளது காமம் உச்சக்கட்டத்தை அடைகிறது. அப்போதுதான் அவளது உடலில் டெஸ்ட்ரோஜன் என்ற ஆணுக்கான ஹார்மோன் அதிகமாக சுரக்கத்தொடங்குகிறது. இந்த ஹார்மோன் அதன் இயல்பான காம உணர்வை மேலும் தூண்டிவிடுகிறது. 

இயற்கை மிக அற்புதமானது. பெண் விலங்குகளும் மாதவிலக்கு காலகட்டகங்களில் இது போன்ற உணர்வை சந்திக்கின்றன. அவைகளும் கருமுட்டை வெளிப்படும் காலங்களில் மட்டுமே அவைகள் ஆண் விலங்குகளை வலுக்கட்டாயமாக உறவுக்கு இழுக்கும். மனித இனத்தில் பெண்ணுக்கும் இதே உணர்வு உண்டு. 


ஒரு பெண் மிக உன்னிப்பாக தனது உணர்வுகளை கவனித்தாலே போதும். அவள் உடலில் கருமுட்டை வெளியாகும் நேரத்தை சரியாக கணிக்க முடியும். அந்த நாளில் பெண் இயல்புக்கு மீறி உற்சாகமாக இருப்பாள். இனிமையாக பழகுவாள். ஆண்கள் மீது மதிப்பும் மரியாதையும் இனம் புரியாத ஒரு ஈர்ப்பும் ஏற்படும். ஆண்கள் மிகவும் நல்லவர்கள் என்ற நேர்மறையான சிந்தனை மலரும். தன்னை மிக அழகாக மாற்றிக் கொள்வாள். ஒரு ஆணிடம் தன்னை ஒப்படைக்க துடிப்பாள். இது எல்லாமே வெளிப்பட்டிருக்கும் கருமுட்டையை கருவாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள்தான் என்று உளவியல் கூறுகிறது. 

இயற்கை இப்படியெல்லாம் பல மாற்றங்களை உருவாக்கினாலும் உலகம் ஒரு பெண் தாய்மையடைய ஏகப்பட்ட சம்பிரதாயங்களை வைத்திருக்கிறது. அதை மீறும் பெண்ணை சமூகம் நடத்தை மூலம் விமர்சிக்கிறது. பக்குவமற்ற கன்னிப்பெண்கள் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். கருமுட்டை வெளிப்படும் காலத்தை கட்டுப்பாட்டோடு கடக்க வேண்டும். 

மேலைநாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி காதலர்கள் எல்லைமீறி உறவில் ஈடுபட்டு கர்ப்பம் அடைவது இந்த கருமுட்டை வெளிப்படும் நாளில்தான் என்று  கூறுகிறது. எது எப்படி நடந்தாலும் பாதிப்பு பெண்ணுக்கு மட்டுமே என்பதால் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.   


செவ்வாய், ஆகஸ்ட் 23, 2016

நிலவிலும் இந்தியாவின் அஹிம்சை..!

ந்தியா எப்போதுமே வன்முறையை நாடாத அமைதி நாடு. உலகில் பல நாடுகள் புரட்சிகளை, போராட்டங்களை நடத்தி பெற்ற சுதந்திரத்தை இந்தியா அஹிம்சையில் செய்து சாதித்தது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தையும் அதே அஹிம்சை முறையில் தான் கையில் எடுத்துள்ளார்கள் அன்னா ஹசாரே போன்றவர்கள்.


அதேபோல்தான் நிலவில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள பல நாடுகளும் முயன்று வந்தன. இதற்காக அமெரிக்க விண்வெளி மையமான நாசா நிலவின் தரை பகுதியில் ஓர் ஏவுகணை தாக்குதல் தொடுத்து ஆய்வு செய்ய முடிவெடுத்தது. ஏவுகணை தாங்கிய விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி வைத்தது. 

'ஏவுகணையை கொண்டு தாக்கும் போது ஆறு மைல் உயரத்துக்கு தூசு, வாயு போன்ற பொருட்கள் வெடித்து கிளம்பும். அதன் தொடர்ச்சியாக நீர் இருந்தால் வெளியேவரும்' என்பது நாசாவின் திட்டம்.


நிலவில் இப்படி ஏவுகணை மோதி ஆய்வுகள் நடத்திக்கொண்டு இருக்கும் போதே மறுபக்கம் இந்தியா அனுப்பிய சந்திராயன், நிலவில் நீர் இருப்பதற்கான ஆதரங்களை முதன் முதலாக கண்டுபிடித்து அனுப்பி வைத்தது. சந்திராயன் அனுப்பிய தகவல்களை தீவிரமாக ஆராய்ந்த நாசா 2009 செப்டம்பரில் நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது.

ஒருபக்கம் வன்முறையாக அமெரிக்கா ஏவுகணையை  கொண்டு நிலவை தகர்த்துக் கொண்டிருக்கும் போது எந்தவித தாக்குதலும் நிலவில் நடத்தாமல் அஹிம்சை முறையில் நீர் இருப்பதை கண்டுபிடித்திருப்பது இந்தியாவின் சிறப்பான சாதனை.


சுதந்திரம் முதல் நிலவில் நீர் இருப்பது வரை சாத்வீகமான முறையில் அஹிம்சை வழியில் தெரிந்து கொண்டு உலகுக்கு அறிவித்தது. அதையே விஞ்ஞானமும் செய்கிறது.ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2016

உடன்கட்டை ஏறிய ராஜபுத்திர பெண்கள்


ரு நாட்டின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் சில வம்சத்தினர் சிறப்பான ஆட்சியை கொடுத்திருப்பார்கள். சில வம்சத்தினர் வலிமையான நாட்டை உருவாக்கியிருப்பார்கள். இதில் ராஜபுத்திரர்கள் இரண்டாவது வகை. இந்திய வரலாற்றில் மிகவும் வலிமை மிக்க காலகட்டமாக இருந்தது ராஜபுத்திரர்கள் காலம்தான்.

ராஜபுத்திரர்கள் என்றால் அரச மைந்தர்கள்,ஆட்சி புரிய தக்கவர்கள் என்ற அர்த்தங்கள் உண்டு. அன்றைய வர்ணங்களாக நிலவிய பிராமணர், சத்திரியர், வைசியர்,சூத்தரர் என்ற நான்கு வர்ணங்களில் தங்களை சத்திரியர்கள் என்று ராஜபுத்திரர்கள் கருதினர். சத்திரியர்களுக்கு நாட்டை ஆள்வதும், போரை வழிநடத்துவதும்தான் முக்கிய வேலை. அதனால்தான் ராஜபுத்திரர்கள் போரில் மிகச்சிறந்தவர்களாக விளங்கினார்கள்.


ஹர்ஷரின் காலத்துக்கு பின்னால் ராஜபுத்திரர்கள் வட இந்தியாவை ஒரு வலிமை மிக்க சக்தியாக வளர்த்தனர். இந்த சக்தி 12-ம் நூற்றாண்டில் துருக்கியர்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும்வரை பெருமையுடன் வாழ்ந்தது.

கன்னோஜி மன்னன் பிரதிஹாரர் மற்றும் கஹடபாலர், புந்தேல்கண்ட் மன்னன் சந்தேலா, மால்வா மன்னன் பரமாரர், தில்லி அஜ்மீர் மன்னன் சவுஹான்கள், வங்காளத்தில் பாலர் மற்றும் சேனர் என்ற இவர்கள் அனைவருமே ராஜபுத்திர வம்சத்தினர்தான். இவர்களுக்கு இடையே அதிகாரப்போட்டி இருந்தது. இந்த ஒற்றுமையின்மை காரணமாக முஸ்லிம்கள் படையெடுப்பின்போது அவர்களால் எதிர்த்து நின்று போராட முடியவில்லை.

ராஜபுத்திரர்களுக்கென்று சில கருத்துகள் உண்டு. அவர்கள் விவசாயத்தை இழிவான தொழிலாக நினைத்தார்கள். போர்புரிவது மட்டுமே உயர்ந்த தொழில் என்றும், தங்களுக்காக இதை இறைவன் கொடுத்ததாகவும் நம்பினார்கள்.

ராஜபுத்திர பெண்கள் தங்களது கணவனை சுயம்வரம் மூலமாக தேர்ந்தெடுத்தார்கள்.கணவனை கண்கண்ட தெய்வமாக நினைத்தார்கள். கணவன் இறந்தால் மனைவி, 'சதி' எனும் உடன்கட்டை ஏற வேண்டும். போரில் தோல்வியடைந்தால் ராஜபுத்திர பெண்கள் எதிரிகளின் கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக பெரிய அளவில் நெருப்பு வேள்வியை ஏற்படுத்தி அதில் அக்னிபிரவேசம் செய்து உயிரை விட்டுவிடுவார்கள். இதற்கு 'ஜவுகர்' என்றும் பெயர். இதனை பெருமையான ஒரு அம்சமாக ராஜபுத்திர பெண்கள் நினைத்தனர். 


உடன்கட்டை ஏறுதல் என்பது ராஜபுத்திரர்கள் போன்ற சில இனங்களிலேயே இருந்தன. ஆங்கிலேயர்  சொல்வதுபோல் இந்தியப் பெண்கள் அனைவரும் உடன்கட்டை ஏறினார்கள் என்பது தவறு. தமிழர்களிடம் அந்த பழக்கம் இல்லை.  எதிரிகளிடம் சிக்கி சீரழிவதை விட போரில் இறந்த கணவனுடன் சேர்ந்து மாய்ந்து போவது சிறந்ததாக அன்றைய பெண்களுக்கு பட்டிருக்கிறது. அதனால் அதை செய்திருக்கிறார்கள். 

ராஜபுத்திரர்கள் காலத்தில்தான் மத்திய பிரதேசத்தில் கஜூராஹோ கோவிலும், ராஜஸ்தானில் உள்ள மலையடிவார கோவில்களும், ஒரிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயமும், கோனார்க்கில் உள்ள சூரியனார் கோவிலும் உருவாயின. மால்வா, ராஜஸ்தான், மத்திய இந்தியா போன்ற இடங்களில் இன்னமும் ராஜபுத்திரர்கள் கட்டிய பிரமாண்டமான கோட்டைகளின் சிதிலங்களை பார்த்து நாம் பரவசப்படலாம்.சனி, ஆகஸ்ட் 20, 2016

பெட்ரோல் பயன்பாட்டில் இந்தியா நான்காமிடம்


பெட்ரோல் இன்னும் எத்தனை நாளைக்கு வரும்? என்பதுதான் நடுங்கியபடி உலகம் தன்னைத்தானே கேட்டுவரும் தினப்படி கேள்வி. வானளாவ உயர்ந்துவரும் விலை. அதிகரித்து வரும் பயன்பாடு. இவையெல்லாம் மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைக் கேட்க வைக்கிறது. 


உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளத்தையும், அதன் சராசரி உற்பத்தியையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இன்னும் 40 வருடங்களுக்கு எண்ணெய் கிடைக்கும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. 

உலகம் எங்கும் சுமார் 1.24 லட்சம் கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பு உள்ளது. இதில் சவுதி அரேபியா 21.3 சதவீதமும், ஈரான் 11.2 சதவீதமும் இருப்பு வைத்துள்ளன. பெட்ரோல் உற்பத்தியில் சவுதி அரேபியாவே முன்னணியில் இருக்கிறது. ஒரு காலத்தில் ரஷ்யாவே உலகில் அதிக எண்ணெய் வளம் மிக்க நாடாக இருந்தது. அவர்கள் எடுக்கும் எண்ணெய்யில் பாதிக்கு மேல் அந்த நாட்டிலேயே செலவாகிவிடுகிறது. அதனால் சவுதி அரேபியாவே இப்போது ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது. 


பயன்பாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் உற்பத்தியாகும் மொத்தப் பெட்ரோலில் 25 சதவீதம் அமெரிக்காவே பயன்படுத்துகிறது. அதற்கடுத்து சீனா 9.3 சதவீதமும், ஜப்பான் 5.8 சதவீதமும், இந்தியா 3.3 சதவீதமும், ரஷ்யா 3.2 சதவீதமும், ஜெர்மனி 2.8 சதவீதமும், தென் கொரியா 2.5 சதவீதமும், பிரேசில் 2.4 சதவீதம் என்ற கணக்கில் பெட்ரோலைப் பயன்படுத்துகின்றன. 

எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு சவுதி அரேபியா. இங்கு தினமும் 12.8 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கடுத்து ரஷ்யா 12.6 சதவீதமும், அமெரிக்கா 8 சதவீதமும், ஈரான் 5.4 சதவீதமும், சீன 4.8 சதவீதமும், மெக்சிகோ 4.4 சதவீதமும், கனடா 4.1 சதவீதமும், ஐக்கிய அரபு குடியரசு 3.5 சதவீதமும், வெனிசுலா 3.4 சதவீதமும், குவைத் 3.3 சதவீதம் என்ற அளவில் தினசரி உற்பத்தியாகிறது.  


அதேபோல் ஒவ்வொரு நாட்டிலும் இன்னும் எத்தனை வருடங்களுக்கு எண்ணெய் எடுக்க முடியும் அதாவது எத்தனை ஆண்டுகள் எண்ணெய் வளம் இருக்கும் என்பதையும் ஆய்வு செய்து கணக்கிட்டுள்ளார்கள். அதன்படி, சவுதி அரேபியாவில் 69 ஆண்டுகளும், ஈரானில் 86 ஆண்டுகளும், ஈராக்கில் 100 ஆண்டுகளும், குவைத்தில் 115 ஆண்டுகளும், ஐக்கிய அரபு குடியரசில் 91 ஆண்டுகளும், வெனிசுலாவில் 91.3 ஆண்டுகளும், ரஷ்யாவில் 21.8 ஆண்டுகளும், லிபியாவில் 61.5 ஆண்டுகளும், கஜகஸ்தானில் 73.3 ஆண்டுகளும், நைஜீரியாவில் 41.1 ஆண்டுகளும் எண்ணெய் வளம் இருக்கும் என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் எண்ணெய்க் கிணறுகள் வறண்டு வரும் அதே வேளையில் புதிய எண்ணெய்க் கிணறுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன என்பது சற்று ஆறுதல்.வியாழன், ஆகஸ்ட் 18, 2016

உலகின் குப்பைத் தொட்டி இந்தியா


லகின் குப்பைத் தொட்டியாக இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி வருகிறது. 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த உலக வர்த்தக மையம் அழிவுக்கு பின் அந்தக் கட்டக்குப்பைகள் நச்சுக் கழிவுகள் எல்லாம் பிரொஸ்னா, ஷென் குவான் ஹை, பின்டோஸ் என்ற பெயருடைய மூன்று கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு அதுவும் சென்னைக்கு வந்தன.


இந்தக் குப்பையில் அஸ்பெஸ்டாஸ், காட்மியம், பாதரசம், டையாக்ஸின், பாலி குளோரினேடட் பைபினல்ஸ் ஆகிய பொருட்கள் இருந்துள்ளன. இவைகள் எல்லாம் கடும் நச்சுத்தன்மை கொண்டவை. இரும்பை இறக்குமதி செய்வது சட்டத்திற்கு உட்பட்டது என்ற நிலையில் கட்டடக் கழிவு இரும்புடன் சேர்த்து மற்ற கழிவுகளும் இந்தியாவிற்குள் வந்துவிட்டன. இப்படி இன்னும் பல குப்பைகளை இந்தியா வாங்கிக்கொண்டே இருக்கிறது. 

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் மின்னணுக் கழிவுகளை அகற்றுவதுதான். தங்கள் நாடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இந்தக் கழிவுகளை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கின்றன. அதுவும், ஏழை ஆசிய நாடுகளின் குழந்தைகள் கணினி கற்றுக்கொள்வதற்கு கொடையாக தருகிறோம் என்ற பெயரில் அனுப்பி வைக்கின்றன.

மின்னணுக் கழிவை அப்படியே குப்பையில் போட்டுவிட முடியாது. அதிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கியப் பின்தான் குப்பையில் போட முடியும். இந்த நச்சை நீக்குவதற்கு நிறைய செலவாகும். அதற்குப் பதில் இந்தியா போன்ற நாடுகளுக்கு அந்தப் பொருட்களை அனுப்பிவைக்க வெறும் பத்து சதவீத செலவு மட்டுமே ஆகும். மீதி 90 சதவீதம் அவர்களுக்கு லாபம். அதனால், எல்லா குப்பைகளையும் நமக்கு தள்ளி விட்டுவிடுகிறார்கள். 

இந்திய தொழிலதிபர்களும் இந்த மின்னணுக் கழிவை ஒரு டன் 20 ஆயிரம் என்ற விலைக் கொடுத்து வாங்குகிறார்கள். இந்த ஒரு டன் குப்பையில் 10 கிராம் தங்கம், 30 முதல் 40 கிலோ செம்பு, அலுமினியம், கொஞ்சம் வெள்ளி, சில நேரங்களில் பிளாட்டினம் ஆகியவையும் கிடைக்கிறது. இதனால் ஒரு டன் குப்பையில் 40 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடிகிறது. இதனால் பெருமளவில் வெளிநாட்டுக் குப்பைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்து விடுகிறார்கள். இந்தக் குப்பைகள் சுற்றுச்சூழலை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், உடனடி பாதிப்பாக இந்தக் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் வேலை செய்பவர்களுக்கு நச்சுப் பொருட்களால் புற்றுநோய், காச நோய் போன்றவை அவர்களை தாக்குகின்றன. வருடத்திற்கு 50 ஆயிரம் டன் மின்னணுக் கழிவுகள் இந்தியாவிற்கு மற்ற நாடுகள் குப்பையாக அனுப்பி வைக்கின்றன. இந்தியா அந்தக் குப்பைகளை பெரும் விலைக் கொடுத்து வாங்குகின்றன என்பதே உண்மை.! 


புதன், ஆகஸ்ட் 17, 2016

உலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்


லக அளவில் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருந்தது அது. ஆனால், இப்போது அதைவிட மிகப் பிரமாண்டமான  பேருந்து நிலையம் இந்திய தலைநகர் டெல்லியில் உருவாக்கப் பட்டுள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக பலவித பிரமாண்டமான ஸ்டேடியங்கள் உருவாக்கப் பட்டன. அப்போது உருவான ஒரு பிரமாண்டம்தான் இந்த பேருந்து நிலையம். 

கிழக்கு டெல்லியில் இந்திரப்பிரஸ்தா பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும். காமன்வெல்த் கிராமத்தில்தான் இந்த பேருந்து நிலையம் உள்ளது. இதில் உள்ள மூன்று பிரதான வாசல்கள் தனித்தனியாக கிழக்கு டெல்லி, வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய பகுதிகளை இணைக்கிறது.

இந்த பேருந்து நிலையத்தின் பரப்பளவு 61 ஏக்கர். இதில் சாதாரணமான பேருந்துகளைவிட கூடுதலான அகலமும் நீளமும் கொண்ட தாழ்தள பேருந்துகளை ஆயிரத்துக்கும் மேல் தாரளமாக நிறுத்தலாம். அதனால் இந்த பேருந்து நிலையத்திற்கு 'மில்லினியம் பஸ் டெப்போ' என்று பெயர் வைத்தார்கள். ஏதாவது பழுது என்றால் அதை சரிசெய்வதற்கு வசதியாக பேருந்து நிலையத்திற்குள்ளே 5 பணி மனைகள் இயங்கி வருகின்றன. 

இது போக ஒரு சரக்கு மையம் வேறு இருக்கிறது. பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ்களில் அபாயகரமான பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்காணிப்பதற்காகவே அதிநவீன கண்காணிப்பு மையம் ஒன்றும் இயங்கி வருகிறது 

டெல்லி வாகனங்கள் டீசலுக்கு விடை கொடுத்து பல ஆண்டுகள் ஆகின்றன. அங்கு இயக்கப்படும் வாகனங்களில் சி.என்.ஜி. என்ற கேஸ் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. இந்த கேஸிலும் மிகக் குறைந்த பட்சமாக கார்பன் வெளியிடக்கூடிய 'சி.என்.ஜி. ஹை-பிரிட்' பேருந்துகள் வந்துவிட்டன. குறைவான மாசுக்குறியீடும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த பேருந்து ஒன்றின் விலை ரூ.1.5 கோடியாகும். இத்தகைய சிறப்பான பேருந்துகளை உலகிலேயே முதன்முதலாக இயக்கிய பெருமையும் டெல்லி போக்குவரத்துக் கழகத்துக்கே உரியது.


காமன்வெல்த் போட்டிகளுக்காக இந்த பேருந்துகளை மாநகரில் வலம் வர வைத்திருக்கிறது, டெல்லி மாநகர போக்குவரத்துக் கழகம். நமது ஊரில் ஓடும் தாழ்தள சொகுசு பேருந்துகள் மத்திய அரசின் திட்டம் மூலம் வழங்கப்பட்டவை. இவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளி விடும் அதிநவீன சொகுசு மற்றும் சுற்றுச்சூழலை கெடுக்காத பேருந்துகள் காமன்வெல்த் போட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப் பட்டன.

இந்த பேருந்துகளும் அவை நிறுத்தி வைக்கப்படும் பிரமாண்டமான பேருந்து நிலையமும் காமன்வெல்த்தால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. இவற்றையெல்லாம் மூடிமறைத்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது காமன்வெல்த் முறைகேடு என்பது சற்று வருத்தத்திற்கு உரியதுதான்.

யமுனை நதிக்கரையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதால் சுற்றுச்சூழல் மாசுப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 


திங்கள், ஆகஸ்ட் 15, 2016

சுதந்திரத்திற்காக நாங்கள் எடுத்த குறும் படம்..!டந்த இரண்டு தலைமுறை தமிழர்களை ஆட்டிப்படைத்தது சினிமா மோகம்தான் என்றால் அது மிகையில்லை. பலருக்கு சினிமா பார்க்க பிடிக்கும். சிலருக்கு சினிமாவில் நடிக்க பிடிக்கும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கு சினிமா இயக்க பிடிக்கும். இந்த மூன்றில் எங்கள் நண்பர்கள் குழு மூன்றாவது ரகம். அதிலும் எனது நண்பர் ரவிபாரதிக்கு படத்தை இயக்குவதில் பேரார்வம். 

அவர்தான் இந்த குறும் படத்துக்கான முதல் விதையை விதைத்தவர். அந்த காலக்கட்டத்தில்தான் வீடியோ கேமராக்கள் பெருத்த உருவில் இருந்து கொஞ்சம் சிறியதாக வடிவம் எடுத்திருந்தன. தூக்கிச் செல்லும் பாரமும் குறைந்திருந்தது. தொழிநுட்பத்திலும் துல்லியமான படம் தருவதிலும் சிறப்பான கேமராக்கள் புது அவதாரம் எடுத்து வந்திருந்தன.  

குறைந்த பட்ஜெட்டில் ஒரு நாள் படப்பிடிப்பில் முடியும் வண்ணம் ஒரு கதையை தயார் செய்தோம். முதல் படம் என்பதால் அது தேசப்பற்று கொண்ட கதையாக இருக்க வேண்டும். மூன்று மதத்தவர்களும் ஒரே ஃபிரேமில் வரவேண்டும், என்பது போன்ற கத்துக்குட்டிகள் சிந்தனையில் தோன்றும் கருத்தாக்கம் எங்களுக்கும் தோன்றியது. அப்படியே செய்தோம். 

தில்லையாடி வள்ளியம்மை கதை கிடைத்தது. அதையே இன்றைய சிறுமி செய்தால் எப்படியிருக்கும் என்பதுதான் கதையின் 'ஒன் லைன்'. கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் தயார் செய்தவுடன், கேமரா எடுத்துக்கொண்டு  மதுரை மேலவாசலுக்கு போனோம். 


அதென்னவோ எங்களுக்கு எந்த கதையென்றாலும் ஏழைகள்தான் நினைவுக்கு வருகிறார்கள். அதிலும் சேரிவாசிகள் என்றால் தனிப்பாசம். எங்கள் கதைகள் எப்போதும் அவர்களை சுற்றித்தான் இருக்கும். இந்தக் கதையும் அப்படிதான். மேலவாசல் பகுதியில் நடப்பதாக அமைத்தோம். 

கிருதுமால் என்ற புண்ணிய நதி சாக்கடையாக மாறி கடந்து போகும் இடம் அது. அதன் கரையோரத்தில் இருக்கும் ஏராளமான குடிசைகளும், அதில் வாழும் மக்கள்தான் எங்களின் கதை மாந்தர்கள். அதை இந்தப் படத்தில் விலாவாரியாக காட்டியிருப்போம். 

கதைக்களம் சேரிப்பகுதி என்பதால் அங்கு சென்று எங்களுக்கான ஹீரோயினை தேடினோம். மண்வாசனையோடு ஒரு ஹீரோயின் கிடைத்தார். அவரையும் மற்ற குழந்தைகளையும் வைத்து ஒரு விடுமுறை நாளில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். அதிகாலையிலிருந்து இரவு வரை அது நீண்டது. குழந்தைகள் நல்ல ஒத்துழைப்பு கொடுதார்கள். 

'போஸ்ட் புரொடக்ஷன்' என்பது மிகப் பெரிய கடல் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டோம். பட்ஜெட் எகிறியது இங்குதான். எடிட்டிங், டப்பிங், ரீரிக்கார்டிங் என்று தொடர்ச்சியாக வேலைகள். பின்னணி இசைக்கு பட்ஜெட் கையைக் கடித்ததால் இளையராஜாவையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் வைத்து சமாளித்தோம். 

ஒருவழியாக அத்தனை வேலைகளும் முடிந்தது. கடைசியில் மாஸ்டர் காப்பி என்று ஒரு விசிடி குறுந்தட்டை எங்களிடம் கொடுத்தார் வீடியோ எடிட்டர். அதை பிளே செய்து பார்த்தோம். மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் படத்தின் தரம் சற்று குறைந்தது போல் தெரிந்தது. இதைப்பற்றி கேட்டபோது, "விசிடியில் குவாலிட்டி லாஸ் ஆகும்" என்றார். "இப்போ டிவிடி-ன்னு ஒரு புது டெக்னாலஜி வந்திருக்கிறது. அதில் பதிவு செய்தால் படம் தெளிவாக இருக்கும். தரம் குறையாது" என்று மேலும் கூறினார்.

எங்களுக்கு டிவிடி மேல் மோகம் பிறந்தது. அது எங்கு கிடைக்கும் என்று கேட்டோம். சென்னையில்தான் கிடைக்கும் மதுரையில் ஒரேயொரு கடையில் மட்டும்தான் இருக்கிறது என்றார். அந்தக் கடைக்கு போனோம். ஒரு டிவிடி-யின் விலை ரூ.200. அதை வாங்கிவந்து ரைட் செய்தோம். ரைட் செய்து கொடுப்பதற்கு ரூ.600 கட்டணம். கட்டுப்படியாகாது விலை உச்சத்தில் டிவிடி இருந்தது. சத்தியமாக டிவிடி இவ்வளவு சீப்பாக வரும் என்று அன்றைக்கு நாங்கள் யாரும் நினைத்ததில்லை.  

இதெல்லாம் நடந்தது கி.பி 2003-ம்  ஆண்டில். எப்படியாவது இந்தப்படத்தை சேட்டிலைட் சேனலில் சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு நானும் இயக்குநர் ரவிபாரதியும் சென்னைக்கு ரயிலேறினோம், விஜய், ஜெயா, ராஜ் டிவி என்று ஏறி இறங்கினோம். ஒருவரும் எங்களை கண்டுகொள்ளவேயில்லை. கடைசியில் மதுரையில் மூன்று லோக்கல் சேனல்களில் ஒளிபரப்பு செய்தோம். ஆகஸ்ட் 15 அன்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இந்தப் படத்தை ஒளிபரப்பினார்கள்.

சின்ன திரையில் மட்டுமல்லாது பெரிய திரையிலும் இந்தப் படத்தை வெளியிட்டோம் என்பதுதான் ஆச்சர்யம். அப்போது மதுரையில் சில தியேட்டர்கள் டிவிடி பிளேயர் மூலம் இடைவேளையில் விளம்பரங்களை திரையிட்டு வந்தார்கள். அப்படி திரையிட்ட தியேட்டர்களில் மதுரை அமிர்தம் தியேட்டரும் ஒன்று. அந்த தியேட்டர் மேனேஜரிடம் இந்தப் படத்தை போட்டுக் காட்டியதும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றைக்கு நான்கு காட்சிகளிலும் இடைவேளையின் போது இந்தப் படம் காண்பிக்கப்பட்டது. 

நாங்கள் எடுத்த ஒரு குறும் படம் சினிமா தியேட்டரில் அவ்வளவு பெரிய திரையில் பிரமாண்ட ஒலியில் பார்த்தபோது எங்கள்  மனம் துள்ளிக்குதித்தது. எதோ பெரிய சினிமாவே எடுத்தது போல் தோன்றியது. இதன் இயக்குநர் ரவிபாரதி பின்னாளில் ஒரு திரைப்படத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார் என்பது தனிக்கதை. அதைப்பற்றி மற்றொரு பதிவில்.

13 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த சுதந்திரதினம் அன்று உங்கள் பார்வைக்கு 'விதை'. படத்தை தருகிறோம். படத்தைப் பாருங்கள் நிறை குறைகளை பின்னுட்டத்தில் எழுதுங்கள். உங்கள் மனதில் தோன்றுவதை அப்படியே பதிவிடுங்கள். 


'விதை' குறும் படம் அனைவருக்கும் 

சுதந்திரதின 

நல்வாழ்த்துகள்!

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016

எனது 300-வது பதிவு


நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. பணி நேரம் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருந்த போதும், கிடைக்கும் நேரத்தில் பதிவுகளை எழுதி, உங்களை தொடர்ந்து சந்தித்து வந்திருக்கிறேன். 299 பதிவு கடந்து போனதே தெரியவில்லை. இது 300-வது பதிவு. 

இது பெரிய சாதனை இல்லைதான் என்றாலும், கிடைக்கும் குறைவான நேரம் இதை சாதனை போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. நேரம் இல்லாத காரணத்தினாலே பல அனுபவங்கள், பயணக் கட்டுரைகள், வித்தியாசமான மனிதர்களின் பேட்டிகள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போயிருக்கிறது.   

நான் ஏற்கனவே தட்டச்சு செய்து வைத்திருக்கும் சில தகவல்களை மட்டுமே அவ்வப்போது பதிவிடுகிறேன். இந்த பதிவுகள் எனக்கு அத்தனை திருப்தி தரவில்லை என்றாலும் அய்யா ஜிஎம்பி சொன்னதுபோல் மூன்று நாட்களுக்கு மேல் நாம் வலைப்பக்கம் வரவில்லை என்றால் வலையுலகம் நம்மை மறந்துவிடும் என்ற இணைய இலக்கணத்திற்கேற்ப எனது இருப்பைக் காட்ட அவ்வப்போது பதிவிடுகிறேன். 


பெரும்பாலும் பயணமே எனது நேரத்தை தின்றுவிடுவதால் நண்பர்களின் பதிவுகள் பலவற்றை மொபைலில் மட்டுமே வாசிக்கிறேன். அதிலுள்ள குறை என்னவென்றால் கருத்திட முடிவதில்லை. நேரம் கிடைக்கும்போது கணினியில் வாசித்து கருத்திட்டாலும் தமிழ்மணம் தகராறு செய்வதால் பல பதிவுகளில் வாக்களிக்க முடிவதில்லை. இதனால் நண்பர்களுக்கும் எனக்குமான நட்பில் கொஞ்சம் இடைவெளி அதிகரித்தது போல் உணர்கிறேன். 

என்னால் கருத்திட முடியாவிட்டாலும், வாக்களிக்க முடியாவிட்டாலும் இனிய நண்பர்கள் சிலர் அவற்றையெல்லாம் எதிர்பார்க்காமல் தொடர்ந்து எனது பதிவுகளுக்கு வருகை தந்து கருத்துரைகளை தந்து, வாக்கும் அளித்து சிறப்பு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும், கருத்து தெரிவிக்காவிட்டாலும் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! 

தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டி நிற்கும்..


அன்பன் 

எஸ்.பி.செந்தில் குமார்.சனி, ஆகஸ்ட் 13, 2016

காட்டுத் தீயால் சீர்கெடும் சுற்றுச்சூழல்


லகமெங்கும் உள்ள மொத்த காடுகளின் வில்லன் யார் தெரியுமா? காட்டுத்தீதான். மின்னல், எரிமலை, பாறைச்சரிவால் ஏற்படும் உராய்வுகள், சிறு தீப்பொறிகள் இவைகள் காட்டுத்தீ உருவாக முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆனால், இப்போது மக்கிய குப்பைகளின் வாயுக்களும் அணைக்கப்படாத சிகரெட் துண்டுகளும் காட்டுத்தீக்கு வழிவகுக்கின்றன. 

கிட்டத்தட்ட 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காட்டுத்தீ, காடுகளை அழித்து வந்திருக்கிறது. எதிரிகளின் ஊடுருவலை தடுக்க அந்த காலத்தில் இராணுவத்தினர் காட்டுக்குத்தீ வைப்பதை பழக்கமாக கொண்டு இருந்தனர். மரங்கள் இருக்கும் இடங்களில் இயற்கையாகவே அதிக அளவில் சுத்தமான ஆக்சிஜன் இருக்கும். அதுவே தீ கொழுந்துவிட்டு எரியவும் காரணமாகிவிடுகிறது. 


காடு தீப்பற்றிக்கொண்டு எரியும் போதே அந்தப் பகுதியில் வீசும் காற்றின் வெப்பம் 800 டிகிரி செல்சியஸ் வரை கூடும். வெப்பமான இடங்களில் இருக்கும் மரங்களின் நீர் ஆவியகிவிடுவதால், மரங்கள் எல்லாம் ஈரப்பதம் இல்லாமல், காய்ந்து விறகுக்கட்டை போல் மாறிவிடும். 

காட்டுத்தீயின் வேகம் மணிக்கு 10 கி.மீ. என்ற அளவில் இருக்கும். அதுவே புல்வெளி என்றால் 22 கி.மீ. வேகத்தில் பரவும். புயல், பெரும் காற்று வீசும் சமயங்களில் கேட்கவே வேண்டாம். 


காட்டுத்தீயை கட்டுப் படுத்த அது பரவும் திசைக்கு எதிர்திசையில் தீ வைப்பதுதான் தீர்வு. அப்படி தீ வைக்கும் போது அந்த இடத்தில் இருக்கும் மரம், மட்டைகள் கருகி தீய்ந்து விடும். காற்றின் போக்குக்கு வேகமாக பரவி சீறிவரும் காட்டுத்தீ அந்த இடத்திற்கு பற்றி பரவ மரங்கள் மிச்சம் எதுவும் இருக்காது. இதனால் காட்டுத்தீயின் வேகம் கலைந்து அது அணைந்து விடும். 

ஆனால், காற்றின் திசைக்கேற்ப காட்டுத்தீ திசை மாறிக் கொண்டே இருக்கும் என்பதால் அது எந்த திசைகளில் எல்லாம் பரவும் என்பதையும் எளிதில் கணிக்க முடியாது. சில நாடுகளில் 'சில்வர் அயோடைட்' பொடிகளை ஹெலிக்காப்டர் மூலம் தூவி செயற்கை மழையை உருவாக்கி காட்டுத்தீயை கட்டுப் படுத்துவார்கள். 


காட்டுத்தீ சில நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தீ பிடித்து எரிவதால் ஏற்படும் கரியமில வாயுக்கள் சுற்றுச் சூழலுக்கும் பெரிய அளவில் தீங்கை ஏற்படுத்துகின்றன. காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால் வெப்ப புயல் உருவாகும். இது உலகின் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்து விடும். 

பெருகிவரும் புவி வெப்பம் வரும் காலங்களில் அதிக அளவு காட்டுத்தீயை உருவாக்கும் என்று கணித்திருக்கிறார்கள், 2030-ம் ஆண்டு இறுதிக்குள் அமேசான் காடுகளில் 55 சதவிதம்  காட்டுத்தீயால் அழிந்து போய்விடும் என்று எச்சரிக்கிறார்கள். காட்டுத்தீயை தடுக்கவும், புவி வெப்பத்தை தடுக்கவும் அதிகமான மரங்கள் வளர்பதுதான் தீர்வு. எனவே மரங்களை நடுவோம்! பூமியை காப்போம்!வெள்ளி, ஆகஸ்ட் 12, 2016

இந்திய குழந்தைகளின் மரண விகிதம்


ந்தியாவுக்கு இளமையான நாடு என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொறுத்தவரை இந்தியா சாதகமான நிலையில் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கை பார்க்கும் போது சீனாவை விட இந்தியா இளமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த இளமை இந்தியாவின் குழந்தைகள் நிலை மெச்சிக்கொள்ளும் அளவில் இல்லை.


ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்து போவதாக சர்வதேச அமைப்பான 'சேவ் த சில்ரன்' கூறுகிறது. இந்த மோசமான நிலை இந்தியாவில் மட்டுமே உள்ளது. வங்காள தேசம் மற்றும் நம்மை விட மோசமான வறுமையில் இருக்கும் சில ஆப்பிரிக்க நாடுகளை விட குழந்தைகள் மரணம் அடையும் விகிதம் இந்தியாவில் மிக அதிகம்.

ஒவ்வோர் ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் இந்தியாவில் மரணம் அடைகிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 45.6 குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கிறார்கள். 5 வயதுக்குட்பட்ட 3.8 குழந்தைகள் ஒவ்வொரு நிமிடமும் இறக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் சரியான உணவு இல்லாததுதான்.


உண்மையான பாதிப்பை அறிந்துகொள்ள வளர்ந்த நாடுகளுடன் நமது குழந்தைகள் மரண விகிதத்தை ஒப்பிட வேண்டும். ஜப்பானில் குழந்தைகள் மரண விகிதம் 3.2 ஆக உள்ளது. சிங்கப்பூரில் 3 ஆக உள்ளது. இந்தியாவில் நகர்ப்புறங்களில் இது 36 ஆகவும், கிராமப்புறங்களில் 58 ஆகவும் உள்ளது. இது மிக அதிக அளவு. 

ஐ.நா.வின் கணக்கீடுகள் படி தற்போதைய உலக குழந்தைகள் இறப்பு விகிதம் 49.4. பெருமளவில் போலியோ தடுப்பு மருந்துகள் தரப்பட்டாலும் போலியோவால் பாதிக்கப்படுபவர்களில் 33 சதவீதத்தினர் இந்தியாவில்தான் உள்ளனர். இது மோசமான சுகாதாரம் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது.


2008 தகவலின்படி இந்தியாவில் 800 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் போலியோ சுத்தமாக ஒழிக்கப்பட்டு விட்டது. குழந்தைகளுக்கான நிதி குறைந்த அளவில் ஒதுக்கபடுவதாலும், பொறுப்புணர்வு குறைந்த அரசுமே இதற்கு காரணம் என்கிறது 'சேவ் த சில்ரன்' அமைப்பு. 

இந்தியாவில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படி இருந்தும் கூட மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.


இதனால் குழந்தைகளை மரணத்தின் பிடியில் இருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் இளமையான மக்கள் தொகை இந்தியாவுக்கு சாதமாக இருந்தும் கூட அதை பயன்படுத்த முடியாத நிலையில் இந்தியா உள்ளது.


புதன், ஆகஸ்ட் 10, 2016

ஆணுக்கு தொந்தி.. பெண்ணுக்கு தொடை..!


ழைக்கும் ஆரோக்கியமான மனிதனையும், உழைக்காமல் உடலை வளர்ப்பவர்களையும் பார்த்த மாத்திரத்திலேயே கண்டுபிடித்து விடலாம். உழைப்பாளிகளிடம் உபரியான கொழுப்பு இருப்பதில்லை. ஆனால், உடலை வளர்ப்பவர்களுக்கு உபரியான கொழுப்பு அதிகமாக இருக்கும். 

நாம் சாப்பிடும் உணவின் கலோரியும், உழைப்பினால் எரிக்கப்படும் கலோரியின் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை. அப்படியில்லாமல் உழைப்பால் கலோரி எரிக்கப்படாத பொழுது உடலில் அது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இப்படி கொழுப்பை உடலில் சேமித்து வைப்பதற்கும் காரணமிருக்கிறது. ஆதிகாலத்தில் இன்றைக்கு உணவு சேமித்து வைப்பதுபோல் சேமிக்கப்படவில்லை. அப்போது பஞ்சமும் பட்டினியும் அடிக்கடி ஏற்பட்டன. 

அப்படி பட்டினி கிடக்கும் காலங்களில் உயிர் வாழ உடல் இந்த கொழுப்பை எடுத்துக்கொள்ளும். அதற்காக சேமிக்கப்படுவதே இத்தகைய கொழுப்பு. இன்றைக்கு பட்டினி இல்லை. பஞ்சமும் இல்லை அதனால் சேமிக்கப்படும் கொழுப்பு செலவாக  வழியேயில்லை. உடலுழைப்பும் இல்லாததால் தொடர்ந்து கொழுப்பு சேகரிக்கப்படுகிறது.


மனித உடலில் கொழுப்பு சேமித்து வைப்பதற்கு என்றே சில இடங்கள் இருக்கின்றன. உடலின் முக்கிய உறுப்புகளுக்கும் அதிகமாக இயங்கும் உறுப்புகளையும் விட்டுவிட்டு மற்ற இடங்களில் கொழுப்பு சேமிக்கப்படுகிறது.

மூளை, இதயம், இனப்பெருக்க உறுப்புகள் மனிதனின் முக்கிய உறுப்புகள் பட்டியலில் வருகிறது. அதனால் இவற்றின் அருகில் கொழுப்பு சேமிக்கப்படுவதில்லை. வயிற்றுப்பகுதி சும்மாதானே இருக்கிறது. அதனால் அங்கு உபரியான கொழுப்பு சேமிக்கப்படுகிறது. தோலுக்கு அடியில் கொஞ்சம் கொஞ்சமாக சேரும் கொழுப்பு தான் பானை வயிறாக தோற்றம் தருகிறது. தொந்தி, தொப்பை என்று அழைக்கப்படும் பெருத்த வயிறு ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களுக்கு கிடையாது.

பெண்களுக்கு மூளை, இதயம், இனப்பெருக்க உறுப்புகள் தவிர இன்னொரு முக்கியமான உறுப்பு கூடுதலாக உள்ளது. அது கர்ப்பப்பை. ஒரு உயிரை உருவாக்கும் உறுப்பு. அதன் செயல்திறன் குறைந்து விடக்கூடாது என்பதற்காக இயற்கை பெண்களின் வயிற்றில் கொழுப்பை சேர்த்து வைப்பதில்லை. கர்ப்பத்தின்போது வயிறு பெருத்தும், அதன்பின் வயிறு சுருங்கியும் இருவேறு வேலைகள் நடைபெறுகின்றன. கர்ப்பம் என்ற ஒரு காரணத்திற்காகவே பெருத்த வயிறு இல்லாத பெண்கள் நடமாடுகிறார்கள்.


வயிற்றில் உபரிக் கொழுப்பு சேமிக்கப்படாவிட்டால் வேறு எங்காவது சேமிக்கவேண்டும். அப்படி இயற்கை பெண்களுக்கு தேர்ந்தெடுத்த இடம் தொடை. இதனால்தான் ஒல்லியாக இருக்கும் பெண்களின் தொடைகூட உருண்டு திரண்டு பெரிதாக இருக்கிறது. இப்படி தொடையிலும் ஓரளவே கொழுப்பு சேமிக்கப்படுகிறது. அதனையும் மீறி கொழுப்பு சேமிக்கப்படவேண்டும் என்ற நிலை வரும்போது உடல் பெண்ணின் பின்புறத்தை தேர்ந்தெடுக்கிறது. பெண்ணின் பின்புறம் பெரிதாக தெரிவதற்கு உபரி கொழுப்பே காரணம்.


பெண்களுக்கு இந்த இரண்டு இடங்களிலும் கொழுப்பு சேமித்து முடித்தபின் மூன்றாவதாக ஒரு இடத்தை இயற்கை தேர்ந்தெடுக்கிறது. அது கைகளின் மேற்புறத்தில் இருக்கும் பின்பகுதி. பல பெண்களுக்கு கையும் பெரிதாக தெரிய கொழுப்பே காரணம். இது குழந்தைகளுக்கு பால் கொடுக்கும்போது சக்தி தர பயன்படுகிறது.


சரி, ஆணுக்கும் தொடையில் கொழுப்பை சேமித்து வைக்கலாமே ஏன் வயிற்றில் என்று கேட்கலாம். அதற்கு மரபணுதான் காரணம். ஆதிகால ஆண் வேட்டையாடினான். அப்போது வேகமாக விலங்குகளை துரத்தி செல்ல அல்லது துரத்தும் விலங்குகளிடமிருந்து தப்பித்து ஓட கால்கள் மிக அவசியமாக இருந்தது. தொடையில் கொழுப்பை சேர்த்தால் ஓடமுடியாது. அதனால் ஆண்களுக்கு வயிற்றில் கொழுப்பு சேமிக்கப்பட்டது.


ஆதிகால பெண்கள் குகையில் குழந்தைகளை வளர்ப்பதில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஓடவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தனர். அதோடு அவர்கள் தொடர்ந்து கர்ப்பம் அடைவதும் குழந்தைகளை பெற்றெடுப்பதுமாக இருந்தனர். அதனால் வயிற்றில் கொழுப்பை சேமிக்காமல் தொடையில் சேமித்து வைக்கப்பட்டது. அதோடு குழந்தை பிறப்புக்கு அதாவது பிரசவத்துக்கு வசதியாக பின்புறத்திலும் உபரி கொழுப்பு சேமிக்கப்பட்டது.

கடந்த தலைமுறை வரை பெருத்த வயிற்றோடு பெண்களை பார்ப்பது மிக மிக அரிது. அப்படியே இருந்தாலும் அது குழந்தை பேற்றை முடித்த வயதான பெண்களாக இருப்பார்கள். ஆனால், இப்போது பல பெண்கள் அதிலும் இளம் பெண்களே தொப்பையுடன் காணப்படுகிறார்கள். அதற்கும் காரணமிருக்கிறது. அந்தப் பெண்களிடம் கேட்டுப்பார்த்தால் அவர்கள் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை நீக்கியவர்களாக இருப்பார்கள். அதேபோல் மெனோபாஸ் என்ற மாதவிலக்கு நிரந்தரமாக நின்று போன பெண்களுக்கும் ஆண்களைப்போல் பானை வயிறு தோன்றுகிறது.

அதாவது, இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் இயற்கை பெண்ணின் வயிற்றுக்கான முக்கியத்துவத்தை குறைத்துவிடுகிறது. அதிகப்படியான உபரி கொழுப்பை அங்கேயும் சேமிக்க தொடங்கிவிடுகிறது. ஏனென்றால் பெண்களுக்கு ஆண்களைவிட கொழுப்பின் அளவு கூடுதல். அதை சேமித்துவைக்க நிறைய இடம் தேவைப்படுகிறது.

இப்படி உபரியான கொழுப்புதான் ஆண்களுக்கு தொந்தியாகவும் பெண்களுக்கு தொடையிலும் பின்புறத்திலும் சேமித்து வைக்கப்படுகிறது. இதுவே ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.
திங்கள், ஆகஸ்ட் 08, 2016

குடும்பங்களுக்கான ஒரு புதிய சேனல்


பொதுவாக வாழ்க்கையோடு ஒன்றிய நிகழ்ச்சிகளை தரும் சேனல்களை நான் விரும்பி பார்ப்பதுண்டு. நேஷனல் ஜியோகரபி சேனல், டிஸ்கவரி சேனல், ஹிஸ்டரி சேனல், டிராவல் எக்ஸ்பி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த பட்டியலில் இப்போது ஒரு புது சேனலும் இணைந்துவிட்டது. இது கடந்த ஜூலை 6-ந் தேதி முதல் ஒளிபரப்பாகிவருகிறது. அந்த சேனலின் பெயர் 'ஃஎப்ஒய்ஐ டிவி18'.


ஏ + இ நெட்வொர்க்ஸ் மற்றும் டிவி18 என்ற இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த சேனலை தொடங்கியுள்ளன. டிவி18 ஏற்கனவே சிஎன்பிசி, ஹிஸ்டரி போன்ற சேனல்களை இந்தியாவில் ஒளிபரப்பி வருகிறது. ஏ + இ நெட்வொர்க்ஸ் நிறுவனம் யுனிவர்சல் சேனல், ஹால்மார்க் சேனல், சயின்ஸ் ஃபிக்ஷன் சேனல் ஆகிய சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த இரண்டு ஜாம்பவான்களும் இணைந்து  ஆசிய குடும்பங்களுக்கான பொழுதுபோக்கு சேனலாக 'ஃஎப்ஒய்ஐ டிவி18'-யை புதிதாக தொடங்கியுள்ளனர்.   

ஃஎப்ஒய்ஐ டிவி18 -யின் ப்ரொமோ வீடியோ 

ஆங்கில சேனல்களில் பொதுவாக வெளிநாட்டு முகங்களையே பார்க்கமுடியும். அதிகமாக வெளிநாடுகள் பற்றிய நிகழ்ச்சிகளே இருக்கும். ஆனால், இந்த சேனலில் பெரும்பாலும் இந்திய முகங்கள்தான். நிகழ்ச்சிகளும் இந்திய குடும்பங்களைப் பற்றியதுதான். இந்திய குடும்பங்களை சர்வதேச தரத்தில் பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நிகழ்ச்சிகளும் வித்தியாசமாக இருக்கின்றன. 


'ரியல் 2 ஸ்டேட்ஸ் கப்புள்ஸ்'

பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத் ஒரு பஞ்சாபியாக இருந்தாலும் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். அவர்களுக்கிடையே ஏற்பட்ட காதலை அடிப்படையாக வைத்து '2 ஸ்டேட்ஸ்' என்ற நாவலை எழுதியவர். அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.  நிகழ்ச்சியின் பெயரே 'ரியல் 2 ஸ்டேட்ஸ் கப்புள்ஸ்' என்பதுதான். 

ரியல் 2 ஸ்டேட்ஸ் கப்புள்ஸ்

இரண்டு வெவ்வேறு காலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட இருவர் அந்த குடும்பங்களில் தங்களை எப்படி இணைத்துக் கொள்கிறார்கள் என்ற உண்மை கதைகளை பாரம்பரிய பெருமை குலையாமல் அற்புதமான படப்பிடிப்பில் உணர்வுப்பூர்வமாக சுவையாக சொல்கிறார்கள்.


'ரைவல்ஸ் இன் லா'
அதேபோல் நமது இந்திய குடும்பங்களில் அதிகம் காணப்படும் மாமியார் மருமகள் போட்டியை அப்படியே ஆரோக்கியமான சமையல் போட்டியாக இங்கு மாற்றியுள்ளார்கள். உணவை மையமாக வைத்து 'ரைவல்ஸ் இன் லா' என்ற நிகழ்ச்சியை தயாரித்திருக்கிறார்கள்.

ரைவல்ஸ் இன் லா

இதில் மாமியார் தனது மகனுக்கும் மருமகள் தனது கணவனுக்கும் பிடித்தமான உணவை சமைக்க வேண்டும். இரண்டும் ஒரேவிதமாக அலங்கரிக்கப்பட்டு தரப்படும். அதனை சுவைத்து சிறந்ததை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் அதனை செய்தவர் யார் என்பது தெரியும். இந்த நிகழ்ச்சியையும் மிக அருமையாக செய்திருக்கிறார்கள். இதில் ஒரு நிகழ்ச்சி மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே சமையல் போட்டி நடைபெறும். அது என்னை மிகவும் கவர்ந்திருந்தது. 

'மேன் வெர்சஸ் சைல்டு'

இன்னொரு சுவையான சமையல் நிகழ்ச்சியும் உள்ளது. அதன் பெயர் 'மேன் வெர்சஸ் சைல்டு' என்பது. ஐந்து குழந்தை சமையல் கலைஞர்கள் புகழ்பெற்ற பெரிய சமையல் கலைஞரோடு சமையலில் போட்டிபோடும் நிகழ்ச்சி.

 'மேன் வெர்சஸ் சைல்டு'

இந்த நிகழ்ச்சியில் வரும் ஐந்து குழந்தைகளும் தூள் கிளப்புகின்றன. சமையலில் பெரிய கலைஞர்களையே திணறடிக்கின்றன. ஆனால், இந்த நிகழ்ச்சி இந்தியாவிற்காக தயாரிக்கப்பட்டதல்ல. மற்ற ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான் போன்றவற்றுக்காக தயாரிக்கப்பட்டது. இதுவும் ஒரு அருமையான நிகழ்ச்சி. நமது சமையலுக்கும் இவர்களின் சமையலுக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. மற்ற நாடுகளின் சமையலை விரும்புபவர்கள் இதனை செய்து பார்க்கலாம். 


'மேரீட் அட் ஃபர்ஸ்ட் சைட்' 

'பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே' என்று பாடிக்கொண்டே காதலில் விழுந்து பின்னர் திருமணமும் செய்துகொண்ட தம்பதிகளின் இனிய அனுபவ பகிர்வு இந்த நிகழ்ச்சி. அப்படி செய்து கொண்ட திருமணங்கள் வெற்றியடைந்ததா என்பதை வழிகாட்டலுடன் சொல்லும் நிகழ்ச்சி. இதுவும் வெளிநாட்டு நிகழ்ச்சிதான். 

'மேரீட் அட் ஃபர்ஸ்ட் சைட்' 

'டைனி ஹவுஸ் நேஷன்' 

வீடு கட்டுவதற்கான இடம் கிடைப்பது இன்றைக்கு குதிரை கொம்பு. விலையும் கூடுதல். அப்படிப்பட்ட சூழலில் சிறிய இடத்தில் சகல வசதிகளும் கொண்ட வீடுகள் கட்டுவது எப்படி என்பதை இவர்கள் சொல்கிறார்கள். 150 சதுரடி கொண்ட சிறிய இடத்தில்கூட நாம் விரும்பும் அனைத்து வசதிகளுடன் வீடு அமைத்து தருகிறார்கள். சிறிய வீடு கட்டுபவர்களுக்கு உபயோகமான நிகழ்ச்சி. 

'டைனி ஹவுஸ் நேஷன்' 

மேலும் ஏராளமான நிகழ்ச்சிகள் இருக்கின்றன. புது சேனல் என்பதால் விளம்பரம் இல்லை. அதேவேளையில் நிகழ்ச்சிகளும் மீண்டும் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்படுவதால் ஒருவித அலுப்புத்தட்டுகிறது. அது நிகழ்ச்சி பற்றாக்குறையையே காட்டுகிறது. நிகழ்ச்சிகள் முழுவதும் தயாரானபின் அந்த குறையும் மறைந்து விடும். 

இப்போதைக்கு நான்கு இந்திய மொழிகளில் இந்த சேனல் ஒளிபரப்பாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் இதை பார்க்கலாம். 


சேனல் எண்:

டிஷ் டிவி : 472

ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி : 561

ஏர்டெல் டிஜிட்டல் டிவி : 345

டாடா ஸ்கை :723

ஹாத்வே : 452

டயலாக் டிவி(ஸ்ரீலங்கா) : 82 ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

விரதம் தரும் வலிமை


விரதம் இருப்பதால் பல நன்மைகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.  விரதம் என்பது உணவை கைவிடுதல் என்று சொல்லப்படுகிறது. உலகில் பெரும்பாலான மதத்தினர் மதத்தின் காரணமாக விரதம் இருக்கிறார்கள். இதில் பெரிய அளவில் தொடர்ச்சியாக விரதம் இருப்பவர்கள் இஸ்லாமியர்கள்தான். இந்துக்களும் ஏராளமான விரதங்கள் இருக்கிறார்கள். உலகில் மொத்தம் 27 வகையான விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. விரதங்கள் தரும் வலிமை வியப்பளிப்பதாக இருக்கிறது. மகாத்மா காந்தியின் மனவலிமைக்கு அவரது உண்ணாவிரதங்கள்தான் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  


உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது ஒருவகை இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிக்கமுடியும். தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி விரதம் இருத்தல், பசுவின் பாலை மட்டும் அருந்தி விரதம் இருத்தல். எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி விரதம் இருத்தல், காலை நேரம் மட்டும் உணவருந்தி விரதம் இருத்தல். பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி விரதம் இருத்தல். மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு விரதம் இருத்தல். ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். 


ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி விரதம் இருத்தல்.

ஒரு நாள் முழுவதும் அத்த இளந்தளிர்களையும், நீரையும் மட்டும் அருந்தி விரதம் இருத்தல். இரு வேளை உணவுடன் விரதம் இருத்தல். முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் விரதம் இருத்தல். மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு விரதம் இருத்தல். வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் விரதம் இருத்தல் என்று ஏகப்பட்ட விரதங்கள் இருக்கின்றன. 


இந்த விரத விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா? உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த விரதங்களையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்த விரத முறையாக ஆய்வுகள் சொல்கின்றன. 

விரதம் இருப்பதால் உடற்கழிவுகள் வெளியேறுகின்றன. அதோடு நின்றுவிடாமல் மனச்சிதைவு நோய்க்கு விரதம் நல்ல மருந்து என்று ரஷ்ய ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இருட்டைக் கண்டும், கூட்டத்தைக் கண்டும் பயபடுபவர்கள் கூட விரதம் இருந்தால் தைரியம் பெற்றுவிடுகிறார்கள்.  


வரலாற்றில் கூட அடிமைகளைப் பட்டினிப்போட்டு வதைத்தபோது அவர்கள் வீறுகொண்டு எழுந்து சுதந்திரம் பெற்றது பட்டினியின் வலிமையால்தான் என்கிறது அந்த ஆய்வு. 

மேலும் விரதம் எதிர்ப்பாற்றலைக் கூட்டுகிறது. நரம்பு மண்டலத்திலும் மூளையிலும் உள்ள நச்சுகளை வெளியேற்றி மாற்றத்தைக் கொண்டு வருகிறது, புத்திக் கூர்மையாகிறது. திசுக்கள் தீவிரமாக தம்மை புதுப்பித்துக் கொள்கின்றன. விரதத்தை 40 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது கூடுதலாக ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன என்று மேலும் அந்த ஆய்வு சொல்கிறது. இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தின் மீது மிதமிஞ்சிய பற்றுதலோடு இருப்பதற்கு அவர்கள் வருடந்தோறும் ஒரு மாதம் முழுவதும் தவறாமல் இருக்கும் ரம்ஜான் நோன்பு என்ற விரதம்தான் காரணம் என்கிறது.


இன்றைய தலைமுறைக்கு பசி என்ற உணர்வே ஏற்படுவதில்லை. தொடர்ந்து நொறுக்குத்தீனி சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் அவர்களுக்கு  பசி என்ற உணர்வே தோன்றுவதில்லை. இவர்கள் வாரத்தில் ஒருநாள் வயிற்றைப் பட்டினிப்போட்டு விரதம் இருந்தால் உடல்நலம், மனநலம் மற்றும் மனத்துணிவு கிடைக்கும். அதனால் விரதம் இருப்போம். வெள்ளி, ஆகஸ்ட் 05, 2016

ஒலியின் வேகத்தை மிஞ்சிய விமானத்தின் கடைசி பயணம்


விமானம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் சுருங்கிவிட்டது. மனித வாழ்க்கையும் வேகமெடுத்தது. இந்த வேகம் போதாது என்று நாளுக்குநாள் மனிதனின் வேகம் கூட்டிக்கொண்டே போகிறது. சாலை வாகனங்களின் வேகமும் கூடுகிறது. ரயிலின் வேகமும் கூடிகிறது. 

அந்த வகையில் விமானமும் தனது வேகத்தை  கூட்டிக் கொண்டே போகிறது. ஒலியை விட வேகமாக பறக்கக்கூடிய விமானம் ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்பது மனிதனின் கனவாக இருந்தது. அந்தக் கனவையும் நிறைவேற்றினான். ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய விமானத்தை கண்டுபிடித்தான். இந்த விமானத்தின் கூர்மையான கழுத்தைப் பார்க்கும்போது ஒரு கொக்கின் கழுத்தைப் பார்ப்பது போல் இருக்கும். அதன் பின்னே இரட்டை முக்கோண இறக்கை சிறப்பான வடிவமைப்புடன் இருக்கும். 


இந்த விமானங்கள் சாதாரண ஓடுதளங்களில் இறங்கி ஏற முடியாது. அதனால் அவைகள் இறங்குவதற்கும் ஏறுவதற்கும் சிறப்பான ஓடுதளங்களை அமைத்தார்கள். 1969-ல் முதன்முறையாக இந்த விமானம் பறக்கத் தொடங்கியது. 1976 முதல் பொது மக்கள் உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டது. அது ஒலியைவிட வேகமாக பறந்தது. மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் உலகத்தில் இதுவரை (போர்விமானங்கள் இல்லாமல்) பொது மக்கள் உபயோகத்தில் இருக்கும் எந்தவொரு வாகனமும்  விமானமும் செல்லாத வேகத்தில் பறந்தது. அந்த விமானத்தின் பெயர் கான்கார்டு. 

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து தனது முதல் பயணத்தை தொடங்கிய கான்கார்ட் விமானம் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து நியூயார்க் சென்று சேர்ந்தது. இதற்கு எடுத்துக் கொண்ட நேரம் மிகக் குறைவு.  சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 3 மணி 30 நிமிடத்தில் கடந்தது. கான்கார்ட் விமானத்தை முதன் முதலாக ஒட்டிய விமான பைலட் பிரையன் ட்ராப்ஷா, தரை இறங்கியவுடன் கூறிய முதல் வார்த்தை "இது சாதாரண விமானம் இல்லை. மந்திரவாதி கையில் உள்ள மாய விமானம்" என்றார். மற்ற விமானங்களை விட இது இருமடங்கு வேகமாக பறந்தது. பயண நேரம் பாதியாக குறைந்தது. மற்ற விமானங்கள் மணிக்கு அதிகபட்சமாக 700 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருக்க, கான்கார்ட் விமானங்கள் 2,170 கி.மீ. வேகத்தில் பறந்து அசரடித்தன. 

அதேபோல் சாதாரண விமானங்களைவிட கான்கார்ட் விமானத்தின் பயணக் கட்டணம் பல மடங்கு கூடுதல். மற்ற விமானங்களில் ரூ.40,000 கட்டணம் என்றால், கான்கார்டில் அதே தொலைவு பறக்க  பயணக்கட்டணம் ரூ.5 லட்சம். இருந்தாலும் கூட பரவாயில்லை என்று உலக பணக்காரர்கள் ஒருமுறையாவது இதில் பயணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்று துடித்தார்கள். இந்த விமானப் பயணம் தங்கள் அந்தஸ்த்தின் அடையாளமாக பார்த்தார்கள். இதில் பறப்பதற்கு போட்டிப்போட்டார்கள். மொத்தம் 20 கான்கார்ட் விமானங்கள் மட்டுமே இருந்தன. இவைகள் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க் மற்றும் வாஷிங்க்டன் டிசி-யிலிருந்து லண்டன் மற்றும் பாரிஸுக்கு தினமும் பறந்து கொண்டிருந்தன. 


இந்த விமானத்துக்கு கிடைத்த மிதமிஞ்சிய வரவேற்பைப் பார்த்து பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாடுகள் மலைத்துப் போயின. இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைந்து எப்படியாவது ஒரு 400 விமானங்களையாவது உலகம் முழுவதும் பறக்கவிட வேண்டும் என்று கனவு கண்டு களத்தில் இறங்க முடிவெடுத்தன. 

ஏராளமாக எரிபொருளை இந்த விமானம் குடிப்பதும், அதிகமான பயணிகள் ஏறிச் செல்ல முடியாததும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததும் இதன் குறைகளாக வெளிவரத் தொடங்கின. அதனால் இந்த விமான சேவையை நிறுத்த வேண்டும் என்று சிலர் வாதிடத் தொடங்கினர்.  

இந்த நிலையில் கான்கார்ட் விமானம் பாரீஸில் ஒரு விபத்தில் சிக்கியது. இதுதான் சாக்கு என்று அதுவரை மந்தமாக இருந்த எதிர்ப்பு மிகவும் தீவிரமடைந்தது. கான்கார்டின் 27 ஆண்டு பயண சரித்திரத்திற்கு சமாதி கட்டியது. 2003, அக்டோபர் 24-ல் கான்கார்ட் தனது வான் பயணத்தை நிறுத்திக் கொண்டது. இப்போது அதை மீண்டும் பறக்க விடுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...