வியாழன், அக்டோபர் 27, 2016

ஆவிகள் வாழ அசத்தலான மாளிகைனிதர்கள் வாழ்வதற்கும் அவர்களின் வாரிசுகள் வாழ்வதற்கும்தான் பொதுவாக வீடுகளைக் கட்டுவார்கள். ஆனால், இங்குவொரு பெண் பேய்கள் வசதியாக வாழ்வதற்காக மிகப் பெரிய பிரமாண்டமான மாளிகையையே கட்டியிருக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் சாரா என்பது. கி.பி.1840-ல் அமெரிக்காவில் பிறந்தவர். 1862, செப்டெம்பர் 30-ல் வில்லியம் விர்ட் வின்செஸ்டர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சாரா பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். கணவரோ ராணுவத்திற்கு போர்க்கருவிகளை தயாரித்துக் கொடுக்கும் நிறுவனத்தை வைத்திருப்பவர். 

சாரட் வண்டியில் சாரா
இந்த தம்பதிகளுக்கு 1866 ஜூன் 15-ல் அனி பார்டீ என்ற பெண் குழந்தை பிறந்தது. ஒரே மாதத்தில் அந்த குழந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது. அதன்பின் அவர்களுக்கு குழந்தை உருவாகவேயில்லை. அடுத்தடுத்து வீட்டில் துன்பமே சூழ்ந்திருந்தது. இந்த நிலையில் 1881-ல் அவரது கணவரும் இறந்து போனார். கணவரின் போர்க்கருவிகள் தயாரிக்கும் கம்பெனியின் வருமானமாக ஒரு நாளைக்கு 1,000 அமெரிக்க டாலர்கள் வருமானமாக அந்தக் காலத்திலேயே வந்து கொண்டிருந்தது.. இன்றைய கணக்கீட்டின் படி அது 25,000 அமெரிக்க டாலர்களுக்கு சமமானது. என்னதான் பணம் கோடி கோடியாக கொட்டினாலும் வீட்டில் நிம்மதி என்பது இல்லை. எப்போதும் வீட்டில் சோகமும் துன்பமுமே குடிகொண்டிருந்தது. 

சாரா வின்செஸ்டர்
இதற்கு என்ன காரணம் என்பதை அறிய ஒரு பாதிரியாரை சந்தித்து நடந்தவைகளை ஒன்று விடாமல் கூறினார் சாரா. அதைக் கேட்ட பாதிரியார், "உனது கணவர் தயாரித்த 'விண்செஸ்டர் துப்பாக்கி' மூலம் நாடுகளுக்கிடையே நடந்த பல்வேறு யுத்தகங்களில் ஏகப்பட்ட போர்வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் ஆவிகள் எல்லாம் உன் வீட்டில் இருக்கின்றன. அவர்கள்தான் உன் குடும்பத்தை நிம்மதியில்லாமல் செய்கிறார்கள். அவர்களை மகிழ்வித்தால் இந்த துன்பம் உன்னை விட்டு விலகும். அதற்கு நீ தொடர்ந்து வீடு கட்டிக்கொண்டே இருக்க வேண்டும். ஆவிகள் வந்துபோவதற்கு வசதியாக நிறைய கதவுகள் ஜன்னல்கள் வைக்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் வீடு கட்டுவதை நிறுத்தவே கூடாது." என்றார். 

தற்போதைய சாரா வின்செஸ்டர் மாளிகை
உடனே மேற்கு கலிபோர்னியாவில் இருந்த ஒரு பண்ணை வீட்டை விலைக்கு வாங்கி சாரா கட்டத்தொடங்கினார். அந்தப் பண்ணை 161 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. அதில் 8 அறைகளைக் கொண்ட ஒரு சிறிய வீடு ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டை புதுப்பித்து அதனுடன் சேர்ந்து பல அறைகளைக் கட்டத்தொடங்கினார். 24 மணி நேரமும் வேலை நடந்தது வருடத்தின் 365 நாளும் மாளிகை வளர்ந்தது. 1922-ல் சாரா இறக்கும் வரை இந்த கட்டுமானம் தொடர்ந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட 38 வருடங்கள் தொடர்ந்து எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் கட்டப்பட்ட மாளிகை இதுவாகத்தான் இருக்கும். 1906-ம் ஆண்டில் பெரிய நிலநடுக்கம் ஒன்று இந்தப் பகுதியில் ஏற்பட்டது. அப்போது மட்டும் ஒருசில நாட்கள் கட்டுமானம் நின்றது. அதன்பின் மீண்டும் கட்டுமானம் தொடங்கியது.

1906-ம் ஆண்டு நிலநடுக்கத்திற்கு முன் இருந்த மாளிகை
இந்த மாளிகையில் 160 அறைகள் இருக்கின்றன. 8 மாடிகள் கொண்ட இந்த மாளிகையில் மூன்று லிப்ட்டுகள் உள்ளன. சில அறைகள் மிகப் பெரியதாகவும். சில அறைகள் மிகச் சிறியதாகவும் இருக்கின்றன. 2 ஆயிரம் கதவுகளும் 10 ஆயிரம் ஜன்னல்களும் ஆவிகள் எளிதாக வந்து போவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. ஆவிகளுக்கு மிகவும் பிடித்த எண்ணாக வெளிநாடுகளில் கருதப்படும் 13 என்ற எண்ணிக்கையில் நிறைய வடிவங்கள் உள்ளன. 13 கழிவறைகள், 13 குளியறைகள், 13 சாண்ட்லியர் விளக்குகள், ஒவ்வொரு ஜன்னல் கதவிலும் 13 வளைவுகள் கொண்ட டிசைன்கள் என்று எல்லாமே 13 மாயம்தான். மாடிப்படிகள் எங்கே போகிறதென்றே தெரியாது. சாளரங்கள் வெற்றுச் சுவரை நோக்கி இருந்தன. பல மைல்கள் நீளத்துக்கு ரகசியப் பாதாளப் பாதைகள், கூடங்கள். எல்லாம் எங்கு செல்கின்றன என்பதே தெரியவில்லை. சாரா கட்டடக்கலை வல்லுநர் கிடையாது. அவர் மனம் போனபோக்கில் இந்த மாளிகையை தொடர்ந்து கட்டியிருக்கிறார். 

மாளிகையின் உட்புறம்
இன்று சாரா வின்செஸ்டர் மாளிகை ஒரு சுற்றுலாத் தலமாக செயல்படுகிறது. இந்த மாளிகையைப் பார்ப்பதற்காக உலகின் பலப் பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். 
செவ்வாய், அக்டோபர் 25, 2016

ஒரு பர்கரின் விலை ஒரு லட்சம்..!ணக்காரர்களுக்கான ஓர் உலகம் உலகின் ஒரு பகுதியில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இங்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. பெருமையும் அந்தஸ்தும்தான் தனி அடையாளம். அப்படி அந்தஸ்தை தூக்கி நிறுத்தும் ஒரு அடையாளங்களில் உணவும் உண்டு. அத்தகைய உணவுகளில் ஒன்றுதான் 'கிளம்பர்கர்..!'

மேற்கு லண்டனில் செல்சியா என்ற இடத்திலுள்ள ஹொங்கி டோங்க் என்ற உணவகம் 2014-ல் உலக சாதனை படைப்பதற்காக இந்த விலையுயர்ந்த பர்கரை செய்தது. அதற்கு கிடைத்த வரவேற்பை வைத்து அதன்பின் ஆர்டரின் பெயரில் இந்த பர்கரை விற்பனை செய்து வருகிறது. இதன் விலை 1,100 பவுண்ட். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மதிப்பு கொண்டது. சரியாக சொல்வதென்றால் ரூ.97,900. சேவை வரி தனி. அதையும் சேர்த்தால் ரூ.1,01,176/- அம்மாடியோவ்..!


இவ்வளவு விலைகொடுத்து வாங்க இந்த பர்கரில் அப்படியென்ன சிறப்பு உள்ளது? என்று பார்த்தால் இந்த பர்கர் உலகில் மிகச் சிறந்த உணவு மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. உப்பு என்ற ஒன்றை எடுத்துக்கொண்டால் கூட உலகத்திலேயே மிகச்  சிறந்த உப்பான இமயமலை உப்பையே பயன்படுத்துகிறார்கள். கடலில் எடுக்கப்படும் உப்பைவிட உப்பு மலைகளில் இருந்து எடுக்கப்படும் உப்பு மிகவும் சுத்தமானதாகவும் முதன்மையானதாகவும் இருக்கும். அந்த பாறை உப்புக்களிலும் முதலிடத்தில் இருப்பது இமயமலையில் கிடைக்கும் பாறை உப்பே! அதைத்தான் இதில் உபயோகிக்கிறார்கள். 

அதைப்போலவே, நியூசிலாந்தில் உள்ள மானின் மாமிசம்தான் உலகிலே சிறந்ததாக கருதப்படுகிறது. அந்த இறைச்சியை 60 கிராம் இதில் சேர்கிறார்கள். கனடாவில் கிடைக்கக்கூடிய சிங்கஇறால்தான் இறால் வகையில் உலகிலேயே சிறந்தது அதை இதில் சேர்கிறார்கள். ரஷ்யாவின் பெலூகா காவியர் சேர்க்கப்படுகிறது. ஈரானின் குங்குமப்பூ. கோபே வாகியு மாட்டிறைச்சி தூள், பர்கரின் மையத்தில் கருப்பு ஆமையின் உடல் பகுதிகள் வாசத்திற்காக சேர்க்கப்படுகின்றன. 


பர்கரின் மேற்புறத்தில் அவித்து வறுக்கப்பட்ட வாத்து முட்டைகளை தங்க காகிதத்தில் சுற்றி மாப்பிள் சிரப்புடன் மங்கோ சேம்பைனுடன் மேலும் பல நாட்டு சிறப்பு உணவுகளுடன் சேர்த்து இதை பரிமாறுகிறார்கள். மொத்தம் 220 கிராம் எடையும், 2618 கலோரி சக்தியும் கொண்டது இந்த பர்கர். அப்படியே நீங்களும் லண்டன் பக்கம் சுற்றுலா சென்றால் இந்த பர்கரை சுவைத்து வாருங்கள். 


ஞாயிறு, அக்டோபர் 23, 2016

ஜாதிக்காக அடித்துக்கொள்வதுதான் நல்ல நகைச்சுவை..!


னிதன் முதலில் பேசிய மொழி தமிழ் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அதோடு அவனின் மரபணுவையும் ஆராய்ந்திருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பஞ்சம் அங்கிருந்த மனித இனத்தை கொஞ்சம் கொஞ்சமாக வேறு இடம் நோக்கி நகர்த்தியது. 


அடுத்த ஆயிராம் ஆண்டில் இப்போதைய ஆஸ்திரேலியாவை சென்றடைந்தான். வழியில் அவன் தங்கி பெருகிய இடங்கள் ஏராளம். அந்த இடங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையும் ஒன்று. அந்த ஆதிமனிதனின் மரபணுத் தொடர்ச்சி ஒன்று இன்றைய தமிழர்கள் சிலருக்கும் இருக்கிறது. 

முதலில் மரபணு என்கிற டி.என்.எ. குற்றவாளிகளை கண்டுபிடிக்கப் பயன்பட்டது. அதன்பின் குழந்தை யாருடையது? கொல்லப்பட்டது யார்? கற்பழிப்பு வழக்குகள் போன்றவற்றில் உதவி வந்தன. இன்று அது ஆயிரக்கணக்கான வருடங்கள் பின்னால் சென்று மனித சரித்திரத்தின் சங்கிலி தொடர்பை தெரிந்துகொள்ளும் அளவிற்கு மிகப் பெரிய தொழில்நுட்பமாக வளர்ந்திருக்கிறது. 

மனித இனத்தின் இடப்பெயர்ச்சிப் பற்றி உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி உலகம் முழுக்க உள்ள 1 லட்சம் ஆண்களிடம் இருந்து டி.என்.எ. மாதிரிகள் திரட்டியிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 9,000 மாதிரிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வு 'ஒய்' குரோமோசோம் அடிப்படையில் நடத்தப்பட்டதாகும். ஒய் குரோமோஸோம் என்பது ஆண்களுக்கானது. அதனால் இது ஆண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வு. 


அதன்படி ஜாதி என்பது ஒரு சமூக கலாசார அமைப்பு மட்டுமே. அதில் ஏகப்பட்ட கலப்புகள் இருக்கின்றன. ஆய்வுப்படி, எந்தவொரு ஜாதியும் மரபணு ரீதியில் தூய்மையானது அல்ல. எல்லாவற்றிலும் பல்வேறு காலக்கட்டங்களில் பலவித கலப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்று ஒரு ஜாதியில் பிறந்த ஒருவர் ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பு வேறொரு ஜாதியில் இருந்திருக்கிறார். அதிலும் இன்றைக்கு அவர்  சார்ந்த ஜாதிக்கு எதிரியாக நிற்கும் ஜாதியிலிருந்தே அவர் வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


அதனால் ஜாதி பெருமை பேசி ஜாதிக்காக மனிதர்கள் அடித்துக் கொள்வது, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் மிகப் பெரிய நகைச்சுவையான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஜாதி, கோத்திரம் என்பதெல்லாம் பெரிய புனிதமில்லை. எல்லாம் மனித சரித்திரத்தோடு ஒப்பிடும்போது மிக சமீபமாக வந்ததுதான் ஜாதிய அமைப்பு. அதாவது, ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே. அதற்கு முன்பு இந்த அமைப்பு இருந்ததில்லை. 

70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வந்த ஆதிமனிதன் விட்டுச் சென்ற மரபணுக்களின் மிச்சம் இன்னும் தொடர்கிறது. இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே மிகவும் பழமையான ஆதிகுடிகளில் முதன்மையானவன் தமிழன் என்பதும் அவன் பேசிய தமிழ் மொழியே ஆதி மனிதன் பேசிய முதல் மொழி என்பது அறிவியல் ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், பழம்பெருமை பேசுவதில் யாருக்கும் சளைக்காத நாம் இதை ஏனோ கொண்டாடத் தவறிவிட்டோம். 
பெண்களுக்கு பிடிக்காத காதலர்கள்..!


காதலர்கள் எப்படி என்று காதலிகளிடம்தானே கேட்க முடியும்? அப்படிதான் உலகம் முழுக்க உள்ள 15,000 காதலிகளிடம் கேட்டது ஒரு ஆய்வு நிறுவனம். அவர்கள் சொன்ன கருத்தை வைத்து எந்த நாட்டுக் காதலர்கள் மிகச் சிறந்தவர்கள் என்று ஒரு பட்டியலிட்டிருக்கிறது.

ஸ்பெயின் காதலர்கள்

அதன்படி மிகச் சிறந்த காதலர்களைக் கொண்ட நாடுகளை பட்டியலிட்டார்கள். அதில் முதலிடம் பிடித்திருப்பது ஸ்பெயின். 
1. ஸ்பெயின் 
2. பிரேசில் 
3. இத்தாலி 
4. ஃபிரான்ஸ்
5. அயர்லாந்து 
6. தென் ஆப்பிரிக்கா 
7. ஆஸ்திரேலியா 
8. நியூசிலாந்து 
9. டென்மார்க் 
10.கனடா  
என்று சிறந்த காதலர்கள் இருக்கும் நாடுகளை கூறுகிறார்கள். 

'பெஸ்ட்' என்று ஒன்றிருந்தால் 'வொர்ஸ்ட்' என்று ஒன்று இருக்குமல்லவா..! அப்படி உலகில் மிக மோசமான காதலர்களைக் கொண்ட நாடுகளையும் அந்த சர்வே பட்டியலிட்டிருக்கிறது. அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறது. 


மோசமான காதலர்கள் பட்டியலில் இருக்கும் முதல் நாடு; 
ஜெர்மனி
ஜெர்மனியில் எப்போதும் குளிர் வாட்டியெடுக்கும். அதனால் அங்கு குளிப்பது என்பது அரிதாக நடக்கும் விஷயம். அதனால் ஏற்படும் துர்நாற்றம் எங்களை காதலர்களிடம் இருந்து விலகி நிற்க வைக்கிறது என்று வேதனைப்படுகிறார்கள் ஜெர்மனி காதலிகள்.

இரண்டாவது இடத்தில் 
இங்கிலாந்து 
இங்கிலாந்து காதலர்களின் எதிரி சோம்பல்தான். படுக்கையில் ஒன்று கூடி பிரிவது ஏழு ஜென்மம் எடுத்த மாதிரி என்று ஏக்கத்தோடு சொல்கிறார்கள் இங்கிலாந்து காதலிகள். 

மூன்றாவது இடத்தில் 
ஸ்வீடன் 
ஸ்வீடன் நாட்டு காதலர்கள் இங்கிலாந்து காதலர்களுக்கு நேரெதிர். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எல்லாமே அதிரடி வேகம்தான். என்ன நடந்தது என்று புரிந்து கொள்வதற்குள் அடுத்து ஒன்று நடந்து கொண்டிருக்கும் என்று வேதனைப் படுகிறார்கள். வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஸ்வீடன் காதலிகள்.

நான்காவது இடத்தில் 
ஹாலந்து 
ஹாலந்து காதலர்கள் தங்கள் காதலிகள் மீது அளவற்ற ஆதிக்கம் செலுத்துகிறார்களாம். இந்த சர்வாதிகார மனப்பான்மை ஹாலந்து காதலிகளுக்கு சுத்தமாக பிடிப்பதில்லையாம். 


ஐந்தாவது இடத்தில் 
அமெரிக்கா 
அமெரிக்க காதலர்கள் பலான படங்களை இணையத்தில் பார்த்துவிட்டு, அதே பாணியை காதலியிடமும் செயல்படுத்தி பார்க்க முனைவார்களாம். இந்த கொடுமையை தாங்க முடியாத காதலிகள் தங்கள் காதலர்களை கொடூரமானவர்கள் என்கிறார்கள். 

ஆறாவது இடத்தில் 
கிரீஸ் 
கிரீஸ் காதலர்களுக்கு குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல்தான் இவர்களிடம் மாட்டிக்கொண்டு காதலிகள் படும்பாடு. 

ஏழாவது இடத்தில் 
வேல்ஸ் 
வேல்ஸ் நாட்டுக் காதலர்கள் சுயநலவாதிகள். தன்னுடைய சுகபோகத்தை பற்றியே அதிகமாக நினைப்பதால் இவர்களை காதலிகளுக்கு பிடிப்பதில்லை. 

எட்டாவது இடத்தில் 
ஸ்காட்லாந்து 
ஸ்காட்லாந்து காதலர்கள் அதிகமாக கத்தி பேசும் ரகம். அதனாலே இவர்களை நாகரிகம் இல்லாதவர்களாக உலகம் பார்க்கிறது. எதற்கெடுத்தாலும் கத்தி கூச்சல் போடும் காதலர்களை பெண்களுக்கு பிடிப்பதே இல்லையாம்.!

ஒன்பதாவது இடத்தில் 
துருக்கி 
துருக்கி வெப்பமான நாடு. அதனால் வியர்வையும் அதிகம். இந்த அதிகப்படியான வியர்வையே காதலிகளை இவர்களிடம் இருந்து விலக்கி வைத்து விடுகிறது. 

பத்தாவது இடத்தில் 
ரஷ்யா 
ரஷ்ய காதலர்களை மோசமானவர்களாக காதலிகள் சொல்வதற்கு காரணம், இவர்கள் உடல் முழுவதும் இருக்கும் அடர்த்தியான ரோமங்கள் தான். இப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை. அதனால் ரஷ்ய காதலர்களை காதலிகளுக்கு பிடிப்பதில்லை. 

சரி, அப்படியென்றால் இந்திய காதலர்களை என்ன சொல்வது? என்ற கேள்விக்கு, இந்திய காதலர்களை நல்லவர்கள் என்று கொண்டாடவும் முடியாது. மோசமானவர்கள் என்று தள்ளிவைக்கவும் முடியாது. அவர்கள் இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள். அதனால்தான் மோசமான 10 நாடுகளிலும் இந்தியா இல்லை. சிறந்த 10 நாடுகளிலும் இல்லை. 


கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபமும், காதலை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் காதலையும் வெளிப்படுத்தும் முழுமையான காதலர்களாக இந்திய ஆண்கள் இருக்கிறார்கள் என்று இந்திய காதலிகள் சான்றிதழ் கொடுக்கிறார்கள். 

நல்ல விஷயம்தானே..!
வெள்ளி, அக்டோபர் 21, 2016

கண்கள் பற்றிய மூடநம்பிக்கைண்களைப் பற்றிய ஏராளமான மூடநம்பிக்கைகள் நம் மக்கள் மத்தியில் இருக்கின்றன. அதன் மீது கண் மூடித்தனமாக நம்பிக்கை வேறு வைத்திருக்கிறார்கள். தூக்கமின்மை, உடல்சூடு போன்றவற்றால் கண்கள் சிவந்து காணப்பட்டால் கூட உடனே குழந்தைக்கு தாய்ப்பால் தரும் பெண்ணைத் தேடி போய் தாய்ப்பாலை வாங்கி சிவந்த கண்களில் ஊற்றுவார்கள். அப்படி செய்தால் கண்ணின் சிவப்பு மறைந்துவிடும் என்பது ஒரு நம்பிக்கை. உண்மையில் கண்ணின் சிவப்புக்கும் தாய்ப்பாலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. 


அதேபோல சந்தனத்தை அரைத்து இட்டுக்கொள்வது, நாமக்கட்டியை உரசிப் பூசுவது, மரப்பாச்சி பொம்மையை தேய்த்து அதன் மசியை கண்ணில் தேய்ப்பது என்று எல்லாமே தவறானவை என்கிறது மருத்துவத்துறை.

குழந்தைகளுக்கும் வயது வந்த பெண்களுக்கும் கண்களில் மை இட்டுக்கொண்டால் கண்கள் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கையில் கண்ணுக்கு அதிகமாக மையிடுகிறார்கள். இது தவறானது. மையில் இருக்கும் கார்பன் கண்ணுக்கு மிக கெடுதல் தரும் தன்மை கொண்டது. 


தொடர்ந்து ஒரு பெண் கண்ணுக்கு மை போட்டுவந்தால் அது விஷம். இதனை 'லெட் பாய்சன்' என்கிறார்கள். அதாவது 'கார்பன் விஷம்'.  இது அதிகரிக்க அதிகரிக்க வளர்ச்சியின்மை ஏற்படும். வலிப்பு வரும். மனநிலை பாதிப்பு ஏற்படும் என்று பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகிறது மருத்துவத்துறை.

அதேபோல பெண்ணுக்கு வலது கண் தானாக துடித்தாலும், ஆணுக்கு இடது கண் தானாக துடித்தாலும் அதனை அதிர்ஷ்டம் என்கிறார்கள் மக்கள். உண்மையில் கண்கள் தானாக துடிப்பதற்கு வைட்டமினும் கால்சியமும் பற்றாக்குறையில் இருக்கிறது என்பதே காரணம். மற்றபடி இது அதிர்ஷ்டமும் இல்லை. துரதிஷ்டமும் இல்லை. 

மேலும் கண் பார்வையற்றவர்களுக்கு அவர்களின் கண்ணை முழுமையாக எடுத்துவிட்டு வேறு ஒருவரின் கண்ணை அப்படியே பொறுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது. இதுதான் கண் மாற்று அறுவை சிகிச்சை என்றும் பலர் தவறாக நினைக்கிறார்கள். 


உன்மையில் கண்ணை முழுமையாக மாற்றுவதில்லை. கண்ணில் இருக்கும் 'கார்னியா'வை மட்டுமே மாற்றுகிறார்கள். நல்ல கண்ணில் இருக்கும் கார்னியாவை எடுத்து பாதிக்கப்பட்ட கண்ணுக்கு மாற்றுகிறார்கள். இது கிட்டத்தட்ட கீறல் விழுந்த கைக்கடிகாரத்தின் கண்ணாடியை எடுத்துவிட்டு புதிய கண்ணாடியை மாற்றுவது போன்றாகும்.   

இப்படியாக பல நம்பிக்கைகள் கண்களைப் பற்றி இருக்கின்றன.
வியாழன், அக்டோபர் 20, 2016

எனது 33-வது ரத்த தானம்..!ருவர் ஒருமுறை கொடுக்கும் ரத்த தானத்தில் மூன்று நோயாளிகளை குணப்படுத்தலாம் என்று மருத்துவம் கூறுகிறது. அதனாலே ரத்த தானம் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு சின்ன வயதிலிருந்தே இருந்தது. எனது முதல் ரத்த தானம் கல்லூரி நாட்களில் தொடங்கியது. அப்போதெல்லாம் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான் படித்த மதுரைக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடத்துவார்கள். அதில் விளையாட்டாக கலந்து கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ரத்தம் கொடுத்ததுதான் முதல் அனுபவம். அப்படியே கல்லூரி படிப்பை முடிப்பதற்குள் 5 முறை தானம் கொடுத்துவிட்டேன்.

அதன்பின் ரத்த தானத்தை சுத்தமாக மறந்து போனேன். ஒருமுறை தலசீமியா கட்டுரைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அங்கு தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 124 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். தலசீமியா எனபது உயிரைப் பறிக்கும் ஒரு வியாதி. ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்கள் தொடர்ந்து அழிந்து கொண்டே இருக்கும். இதனால் இரண்டு வயதை கடப்பதற்குள்ளே ரத்தசோகையால் குழந்தைகள் மரணத்தை சந்திக்க வேண்டிய நிலை வரும்.


இதிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டுமானால் இரண்டு முறைகள்தான் உள்ளன. ஒன்று எலும்பு மஜ்ஜையை மாற்றம் செய்வது. இதற்கு அரசு மருத்துவமனைகளிலேயே 10 லட்சத்திற்கும் மேல் செலவாகும். தனியார் மருத்துவமனைகள் என்றால் நம் மொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்..!

இரண்டாவதாக இன்னொரு சிகிச்சை முறையம் உண்டு. அது குறைந்து வரும் சிவப்பணுக்களை ஈடுசெய்ய புதிய ரத்தம் ஏற்றுவது. மாதத்திற்கு ஒருமுறை ரத்தம் ஏற்றினால்தான் உயிர் வாழமுடியும். அதற்காக மூன்று ரத்த கொடையாளர்கள் ஒரு குழந்தைக்கு இருப்பார்கள். ஏனென்றால் ஒருவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் ரத்த தானம் செய்யமுடியும். சுழற்சி முறையில் தன்னார்வலர்கள் தொடர்ந்து கொடுப்பார்கள்.

இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ரத்தம் ஏற்றும்போது சிவப்பணுக்கள் மட்டும் கூடுவதில்லை கூடவே இரும்பு சத்தும் கூடிவிடுகிறது. வெள்ளை அணுக்களும் கூடிவிடுகிறது. இவற்றை குறைப்பதற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவும் காஸ்டலியான சிகிச்சைதான்.


அப்படியொரு தன்னார்வலராக ஒரு குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்று எனது பெயரையும் கொடுத்து வந்தேன். ஆனால் அவர்கள் என்னை அழைக்கவேயில்லை. பின் ரத்த தானம் வழங்குபவர்களுக்கு என்றே ஒரு கிளப் இருக்கிறது. அதில் நம் பெயரை பதிவு செய்தால் நம்மை கூப்பிடுவார்கள் என்று நினைத்து அங்கும் பதிவு செய்து வைத்தேன். சொல்லிவைத்தாற்போல் அங்கிருந்தும் யாரும் அழைக்கவேயில்லை. ஒருவேளை என் ரத்தம் யாருக்கும் தேவையில்லையோ என்னவோ..!

என்னை மேலும் வெறுப்பேற்றும் விதமாக நான் எங்கு சென்று ரத்த பரிசோதனை செய்தாலும் அவர்கள் உங்களுக்கு ஹீமோகுளோபின் 14 இருக்கிறது. ரத்த தானத்திற்கு ஏற்ற ரத்தம். நீங்கள் ரத்த தானம் செய்யலாமே..? என்பார்கள். நான் தயாராகத்தான் இருக்கிறேன் யாரும் அழைப்பதுதான் இல்லை என்பேன். உடனே எங்களுக்கு தேவை என்றால் கூப்பிடுகிறோம் என்று எனது தொலைபேசி எண்ணை வாங்கிக்கொள்வார்கள். நானும் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். அழைப்பு மட்டும் வரவே வராது.


இப்படியே ஒருசில ஆண்டுகள் போனது. ஒருநாள் எனது அம்மா சிறிய சாலை விபத்தில் சிக்கிக்கொண்டார். கையில் எலும்பு முறிவு. அதற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றார்கள். எனக்கும் எனது தாய்க்கும் ஒரே ரத்த வகை 'B' Positive. முகம் தெரிந்த ஒருவருக்கு அதாவது எனது தாய்க்கு ஆறாவது முறையாக ரத்தம் கொடுத்தேன்.


அன்றிலிருந்து ஆண்டுக்கு மூன்று முறையோ அல்லது நான்கு முறையோ தொடர்ந்து ரத்த தானம் செய்துகொண்டிருக்கிறேன். பெரும்பாலும் அறுவை சிகிச்சைக்கு தான் ரத்தம் அளித்திருக்கிறேன். அதிலும் பெண்களே அதிகம். அவர்களுக்கு ரத்தசோகை இருப்பதால் அடிக்கடி ரத்தம் தேவைப்படுகிறது. இப்படியே 28 முறை நேரடியாகவும், 5 முறை கல்லூரியில் முகாம் மூலமாக, மொத்தம் 33 முறை ரத்த தானம் செய்திருக்கிறேன்.

ஆரம்பத்தில் தானம் என்பதால் நோயாளிகளின் குடும்பத்தார் ஒரு காபி அல்லது ஜூஸ் சாப்பிட சொன்னால் கூட சாப்பிட மாட்டேன். சில சமயங்களில் ரத்தம் கொடுத்து முடித்தபின் நாவறட்சி ஏற்படும். தாகம் எடுக்கும். அந்த நிலையில் கூட அவர்களிடம் எதுவும் வாங்கி குடிக்காமல் வெகுதூரம் வந்தபின் நானாகவே கடையில் வாங்கிக்கொள்வேன்.

எனது சமீபத்திய ரத்த தானத்தின் ரிப்போர்ட்
நண்பர் ஒருவர்தான் அப்படி நடந்து கொள்ளாதீர்கள். அவர்கள் தங்களின் அன்பின் வெளிப்பாடாக கொடுக்கும் ஒரு பழரசத்தை நாம் சாப்பிடுவதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. அவர்களுக்கும் மனரீதியாக ஒரு திருப்தி கிடைக்கும். அதனால் நாம் ஒன்றும் தானம் என்ற நிலையில் இருந்து நழுவிவிடுவதில்லை என்று கூறினார். அப்போதிருந்துதான் அதிகமாக வற்புறுத்துவர்களிடம் ஜூஸ் போன்று அவர்கள் வாங்கி கொடுப்பதை அருந்த தொடங்கினேன்.


ரத்த தானத்தில் நன்மைகள் ஏராளம். முதலில் நமது ரத்தம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து ரத்த தானம் செய்வதால் புதிய ரத்தம் உருவாவதால் இதயத்துக்கு நல்லது. புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும். கொலஸ்ட்ராலை குறைக்கும், உடல் எடை குறையவும் உதவும் இப்படி பல நன்மைகள் இருக்கின்றன.

நான் ஆர்வப்பட்ட நாளிலிருந்து ரத்தம் கொடுத்திருந்தால் இந்நேரம் 100 முறையை கடந்திருபேன். பல வருடங்கள் வாய்ப்பில்லாததால் இப்போதுதான் 33-யை தொட்டிருக்கிறேன்.  இன்னும் அடைய வேண்டிய இலக்கு வெகு தூரத்தில் இருக்கிறது. எப்படியும் சதமடித்து விடவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நிறைவேறுகிறதா என்று பார்ப்போம்.


புதன், அக்டோபர் 19, 2016

தப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 2


முந்தைய பதிவை படித்துவிட்டு, இந்த பதிவை தொடரவும்.. படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்..

முழுமையாக குட்டிகளுக்கு 6 மாதம் முடித்த பின்தான் வெடிகுண்டு பிரிவு, கிரைம் பிரிவு, கஞ்சா பிரிவு என்று பிரிக்கிறார்கள். பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கு அததற்கான பயிற்சிகளை தனித்தனியாக கொடுக்கிறார்கள்.

ராணுவத்தில் நாய்ப்படை
இப்படி பிரிப்பதற்கு முன்பே மோப்ப சக்தியை அதிகப்படுத்தும் திறனை இந்த குட்டிகளுக்கு ஏற்படுத்தி விடுகிறார்கள். வெகு தூரத்தில் இறைச்சியை ஒரு தட்டில் வைத்துவிட்டு குழம்பு சாறை நெடுக தரையில் ஊற்றிக்கொண்டே வருவார்கள். இதுதான் முதல் பயிற்சி. இந்த குழம்பு சாற்றின் மறுமுனையில் குட்டி நாயை விடுவார்கள். அது அந்த குழம்பு வாசத்தில் நேராக சென்று வெகு தூரத்தில் இருக்கும் தனது உணவை சாப்பிடும்.


மோப்பம் பிடித்து சென்றால் தனக்கு உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தை இந்தக் குட்டிகளுக்கு ஏற்படுத்துகிறார்கள். பயிற்சியின் இரண்டாம் கட்டமாக தொடர்ச்சியாக குழம்பை ஊற்றாமல் இடைவெளி விட்டு விட்டு ஊற்றுகிறார்கள். இதிலும் கொஞ்ச நாட்களில் தேர்ச்சி பெற்றுவிடுகின்றன நாய்கள். இப்படியே இடைவெளியை அதிகரித்துக் கொண்டே போவார்கள். இறுதியாக குழம்பு சாறு எதுவும் ஊற்றாமல் உணவை மட்டும் வெகு தொலைவில் வைத்து விடுவார்கள். உணவு எடுத்துச் செல்லப்பட்ட பாதையில் உணவின் வாசனை இருக்கும். அந்த வாசனையை கொண்டே உணவிற்கும் சரியான இடத்தை கண்டுபிடித்துவிடும்.

வெடிகுண்டு பயிற்சி
இது அடிப்படை பயிற்சிகளில் ஒன்று. ஆறு மாதத்திற்குள் குட்டிகள் இதில் நல்ல தேர்ச்சி அடைந்துவிடும். இதன்பின்னர்தான் குட்டிகளை பிரிப்பார்கள். கஞ்சாவுக்கு என்று தேர்ந்து எடுக்கப்பட்ட குட்டிகளுக்கு கஞ்சாவின் வாசனையை முழுமையாக அறிமுகப்படுத்துகிறார்கள். இப்போது சிக்கனுக்கு பதில் அங்கு கஞ்சா இருக்கும். இந்த கஞ்சாவை சரியாக கண்டுபிடித்து எடுத்தவுடன் அந்த குட்டிக்கு விருப்பமான உணவு கொடுக்கப்படும். முகரும் சக்தி அதிகம் பெற்ற குட்டி கண்டுபிடித்தால் நமக்கு பிடித்தமான உணவு கிடைக்கும் என்ற உணர்வில் கண்டுபிடித்தலை அதிகப்படுத்துகிறது.  கஞ்சா எங்கு எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கும் அளவுக்கு அதன் நுகரும் தன்மை அதிகமாகிறது.


இதேபோல் வெடிகுண்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குட்டிகளுக்கு வெடியுடன் சம்பந்தப்பட்ட பொருட்கள், கெமிக்கல்கள், கந்தகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரேட், கருமருந்து போன்றவற்றின் வாசனையை அறிமுகப்படுத்துகிறார்கள். 

இதைப்போலவே கிரைம் என்ற குற்றப்பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குட்டிகளுக்கு மனிதர்களின் வாசனையை அறிமுகப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான பிரத்யேக மனம் உண்டு. அதைக் கொண்டுதான் குற்றவாளிகளை மோப்பநாய்கள் கண்டுபிடிக்க முடிகிறது.

இப்படியாக ஒரு வயது முடியும்போது குட்டிகள் நன்கு பயிற்சி எடுத்த குற்றங்களை துப்பறியும் திறமைக்கு வந்துவிடுகின்றன. ஒரு வயதில் துப்பறியும் வேலையில் சேரும் நாய்கள் 8 முதல் 10 வயது வரை துப்பறிய பயன்படுகின்றன. அதன்பின் அவற்றின் பார்வை திறன், கேட்கும் திறன், மோப்பத் திறன் குறையத் தொடங்கும். அதனால் அவற்றிற்கு ஓய்வு கொடுத்து விடுகிறார்கள்.


தினமும் காலை 2 மணி நேரம் இவற்றுக்கு பயிற்சி உண்டு. பயிற்சியில் நாய்களை ஓடவிடுவது, தடைகளை தாண்டுவது போன்றவை கொடுக்கப்படுகிறது. அப்போது கஞ்சா, வெடிமருந்து எங்காவது ஒளித்துவைத்து அதை கண்டுபிடிக்க சொல்கிறார்கள். சரியாக கண்டுபிடித்த நாய்க்கு அது விரும்பும் உணவுப் பொருளை கொடுக்கிறார்கள். தட்டிக்கொடுக்கிறார்கள். பாராட்டுகிறார்கள், கொஞ்சுகிறார்கள். இவற்றில் மதிமயங்கிய நாய் மீண்டும் மீண்டும் இந்தப் பாராட்டுக்காக நன்றாக கடமையை செய்கிறது. எவ்வளவு ஆழத்தில் பொருளை புதைத்து இருந்தாலும் கண்டுபிடித்து விடுகிறது.

கஞ்சா, வெடிமருந்துகள் ஒரே இடத்தில் இருக்கும் பொருட்கள். அதனால் அவற்றை சுலபமாக நாய்கள் கண்டுபிடித்து விடுகின்றன. ஆனால், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் குற்றவாளி அங்கே இருப்பதில்லை. குற்றம் செய்துவிட்டு எங்காவது தப்பி ஓடிவிடுவான். அவனை கண்டுபிடிப்பது கிரைம் பிரிவு மோப்ப நாய்களுக்கு சவாலான ஒன்று.


குற்றவாளி அங்கில்லாவிட்டாலும் அவனது பிரத்யேக வாசனை மட்டும் அங்கே இருந்து கொண்டே இருக்கும். அவன் சென்ற இடமெல்லாம் அந்த வாசனையும் இருக்கும். குற்றவாளியின் வாசனை, அவன் விட்டுச்சென்ற பொருட்கள், கையால் தொட்ட இடம் போன்றவற்றில் இருக்கும். அந்த வாசனையை நன்றாக நுகர்ந்த பின் வேறு எந்த வாசனையாலும் மோப்ப நாயின் வாசனைத் திறன் தடைபடாது. அந்த வாசனையை தொடர்ந்து கொண்டே நாய் செல்லும்.

சம்பவ இடத்தில் குற்றவாளியின் வாசனை நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. தட்பவெப்ப நிலையைப் பொறுத்து மாறும். வெயில் நிறைந்த கோடைகாலமாக இருந்தால் இரண்டு நாட்கள் வரை இருக்கும். மழைக்காலம், குளிர் காலம் என்றால் வாசனை நான்கு நாட்கள் வரை இருக்கும். சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் மோப்ப சக்தியால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாது. கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசம் என்றால் குற்றவாளியின் வாசனை ஒரு வாரத்துக்கு இருக்கும். அதனால்தான் குற்றம் பற்றிய தகவல் தெரிந்தவுடன் முதலில் அந்த இடத்துக்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்படுகின்றன.


பொதுவாக மோப்பநாய்கள் குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டால் போதும் அவனை கடித்து பிடிக்கத்தான் முயற்சிக்கும். அப்படி கடித்து, காயம் ஏற்பட்டுவிட்டால் அதுவே காவல்துறைக்கு எதிரான தனி வழக்காக மாறிவிடும். அதனால் குற்றவாளியை நாய் கடிக்க செல்லும்போது காவலர்கள் "ஸ்டே..!" என்று உரக்க கட்டளையிடுவார்கள். அடுத்த நொடியே நாய் குற்றவாளியை கடிக்காமல் கவ்வியபடி அப்படியே நின்றுவிடும். இந்த கீழ்ப்படிதல் நிரம்ப இருப்பதால்தான் குற்றவாளி காயம் எதுவும் இல்லாமல் பிடிபடுகிறார்கள்.


பல குற்றங்களில் மோப்பநாய்களின் செயல்பாடுகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெரும் உதவியாக இருந்திருக்கின்றன. மோப்பநாய்களுக்கு மாநில அளவிலும், தேசிய அளவிலும் வருடந்தோறும் போட்டிகள் நடைபெறுகின்றன. மதுரை மாநகர காவலிலுள்ள அழகர் என்ற துப்பறியும் நாய் இந்தப் போட்டிகளில் தேசிய மற்றும் மாநில அளவில் முதலாவது இடத்தில் வந்து சாதனை படைத்துள்ளது. கண்ணகியும் தொடர்ந்து ஐந்து முறையாக மாநில அளவில் பரிசை பெற்றுள்ளது.


இந்த நாய்களுக்கு காலையிலும் இரவிலும் அரை லிட்டர் பாலும், டானிக்கும் கொடுக்கப்படுகிறது. மதிய வேளையில் அரை கிலோ இறைச்சியும் சாதமும் சேர்ந்து கொடுக்கிறார்கள். இதுதான் இவற்றின் உணவு. சின்ன உடல் நலக்குறை என்றாலும் இதற்கென்று சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

துப்பறிவதில் மட்டுமல்ல, வளர்ப்பவர்களின் மன உணர்வை புரிந்து கொள்வதிலும் இந்த நாய்கள் கில்லாடிகள். வீட்டில் இருந்து ஏதோ மனவருத்தத்திலோ கோபத்திலோ வந்திருந்தால் இவைகள் அமைதியாக இருக்கும். அதுவே சந்தோஷமான மனநிலையில் இருந்தால் நாய்களும் மகிழ்ச்சியாக விளையாடும்.


"வேலையின் காரணமாகத்தான் இந்த நாய்களை நாங்கள் வளர்க்கிறோம். ஆனால், ஒருநிலையில் எங்களைவிட்டு அவைகளோ அல்லது அவைகளை விட்டு நாங்களோ பிரிந்திருக்க முடிவதில்லை. ஓரிரு நாட்கள் விடுமுறையில் சென்றால் கூட எப்போது நாயை பார்ப்போம் என்ற ஏக்கம் ஏற்படும். எங்களை காணாது அவைகளும் உற்சாகம் இழந்து காணப்படும். இந்த நாய்கள் எங்கள் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகவே மாறிவிட்டது." என்கிறார்கள் இவற்றை கவனித்து வளர்க்கும் காவலர்கள். 

இந்த நாய்கள் மூப்பின் காரணமாக மோப்பத்திறன் குறைந்து வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும். அவைகள் தொடர்ந்து இங்கு பராமரிக்கப்படுகின்றன. அதன் மரணம் வரை அவற்றுக்கான எல்லா தேவைகளும் இங்கு நிவர்த்தி செய்யப்படுகின்றன. இது கிட்டத்தட்ட ஓய்வூதியம் போல அதன் வாழ்நாள் முழுவதும் நல்ல உணவும் நல்ல மருத்துவமும் கிடைத்துக்கொண்டே இருக்கும். இதுதான் அந்த மோப்பநாய்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் கூட..!


செவ்வாய், அக்டோபர் 18, 2016

தப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 1


துரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு..! காவல்துறை பரபரப்பானது. விடுமுறை காலம் என்பதால் ரயில் நிலையத்தில் கூட்டம் முண்டியடித்தது. அத்தனை கூட்டத்திலும் நிதானம் இழக்காமல் ஒவ்வொரு நடைமேடையாக அலைந்து ஆராய்ந்ததில் அந்த வெடிகுண்டை எடுத்துவிட்டார் கண்ணகி. ஒருவேளை அந்த வெடிகுண்டு மட்டும் வெடித்திருந்தால்..!! 


இன்னொரு சம்பவம்; மதுரையின் மையப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில்.. ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகே அவரது மனைவியும் மகளும் அழுது புரண்டு கொண்டிருந்தனர். காவல்துறைக்கு புகார் பறந்தது. மர்ம மனிதன் ஒருவன் வீடு புகுந்து தன் கணவரை கொன்று விட்டதாக அந்தப் பெண் கூறினாள். 

சம்பவ இடத்துக்கு அழகர் வந்தார். கொலையாளி இந்நேரம் எந்த ஊரில் இருக்கிறானோ..! என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க.. சுற்றும் முற்றும் பார்த்த அழகர் நேராக கூட்டத்தில் அழுதுகொண்டிருந்த தாயையும் மகளையும் பிடித்தார். விசாரித்ததில் அந்தப் பெண்தான் மகளுடன் சேர்ந்து கணவரை கொன்றது தெரியவந்தது. 

இப்படி பல்வேறு சம்பவங்களில் குற்றவாளியை கண்டுபிடித்து தந்த கண்ணகியும், அழகரும் வேறு யாருமல்ல. மதுரை மாநகர் காவல்துறையின் துப்பறியும் படையின் மோப்ப நாய்கள். பல சிக்கலான குற்றங்களை சுலபமாக கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். கொலை, கொள்ளை, வெடிகுண்டு, போதைப்பொருள் என்று எந்தவொரு தகவல் போலீஸை எட்டினாலும் அடுத்த நொடியில் தயார்படுத்தப்படுபவர்கள் இவர்கள்தான்..! சேரன், செழியன், பாண்டியன், கண்ணகி, அழகர், திருமலை, மங்கை இந்த ஏழு பேர் கொண்ட குழுவிடம் இருந்து தப்பு செய்த எவனும் தப்பமுடியாது!

இத்தனை சாதனைக்கு சொந்தமானவர்களை சந்திக்காமல் இருக்கமுடியுமா? மதுரை மாநகர் துப்பறியும் நாய்ப்படை பிரிவின் தலைவராக அப்போதிருந்த ஆய்வாளர் முத்துலெட்சுமியை தொடர்பு கொண்டேன். "காலை 6 மணிக்கு முன்பே ரிசர்வ் லைன் கிரவுண்டுக்கு வந்துடுங்க. அங்கேதான் 'டாக் ஸ்குவாட்' இருக்கு. உங்களுக்கு தேவையான விவரம் அங்கே கிடைக்கும்." என்று கூறினார். 


விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் அங்கு சென்று சேர்ந்தேன். இந்த பிரிவில் மொத்தம் 7 மோப்பநாய்கள் இருக்கின்றன. இவற்றை பராமரிக்க பயிற்சி கொடுக்க என்று ஒரு நாய்க்கு இரண்டு காவலர்கள் வீதம் மொத்தம் 14 பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசியதில் ஏராளமான விவரங்கள் எனக்கு கிடைத்தன. 

மதுரை துப்பறியும் நாய்ப்படை பிரிவில் இருக்கும் எல்லா நாய்களும் டாபர்மேன் வகையை சேர்ந்தவை. பொதுவாக இந்த மாதிரி வேலைக்கு நான்கு வகையான நாய்கள்தான் பொருத்தமாக இருக்குமாம். டாபர்மேன், லேபராடார் ரெட்ரீவர், ஜெர்மன் செஃபெர்ட், ராட் வீவர் என்பவைதான் அவைகள். இவற்றுக்குத்தான் பயிற்சி கொடுத்து பழக்கப்படுத்துகிறார்கள்.

மூன்று மாதக்குட்டியில் இருந்து இதற்கான பயிற்சியை தொடங்குகிறார்கள். குட்டியை தேர்ந்தெடுக்கும் முன் அதன் தாய்-தந்தை பற்றிய விவரம், அவைகளின் தன்மை, புரிந்து கொள்ளும் சக்தி, உடல்நலம், மோப்ப சக்தி, பார்வை மற்றும் கேட்கும் திறன், முறையாக எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டு உள்ளனவா? என்று தெரிந்து கொண்டு தகுதி உள்ள குட்டிகளாக இருந்தால் மட்டுமே தங்கள் படையில் சேர்த்துக் கொள்கிறார்கள்.


குட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டபின் ஒரு குட்டிக்கு 2 காவலர்களை பொறுப்பாளிகளாக நியமிக்கிறார்கள். இவர்கள்தான் இதற்கான பயிற்சிகளை கச்சிதமாக கொடுக்கிறார்கள். நாய்களுக்கு பயிற்சி கொடுப்பது சாதாரண காவலர்கள் அல்ல.  இதற்காகவே பிரத்யேகமாக பயிற்சி முடித்தவர்கள். இவர்கள் மோப்ப நாய்களுக்கு எப்படி பயிற்சி கொடுப்பது என்ற பாடத்தை சென்னை எழும்பூரில் உள்ள பயிற்சி மையத்தில் கற்று வந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த முறையில் குட்டிகளை பயிற்றுவிக்கிறார்கள்.


முதலில் குட்டிக்கு நல்ல தமிழில் ஒரு பெயரை சூட்டுகிறார்கள். மூன்று மாத குட்டிகளில் இருந்து 6 மாத குட்டி வரை அடிப்படை பயிற்சியை மட்டுமே கொடுக்கிறார்கள். அந்தக் குட்டியை பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது, விளையாட பயிற்சி கொடுப்பது போன்றவற்றை கற்றுத்தந்து, அந்தக் குட்டியுடன் நன்றாக பழக, கட்டளைக்கு கீழ்ப்படிய வைக்கிறார்கள்.

முழுமையாக குட்டிகளுக்கு 6 மாதம் முடித்த பின்தான் அவைகளை வெடிகுண்டு பிரிவு, கிரைம் பிரிவு, கஞ்சா பிரிவு என்று பிரிக்கிறார்கள். பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கு அதாதற்கான பயிற்சிகளை தனித்தனியாக கொடுக்கிறார்கள். 

                                                                                   

                                                                                                    - அந்த பயிற்சி நாளைய பதிவில்..திங்கள், அக்டோபர் 17, 2016

கேம்பிரிட்ஜில் படித்த இந்தியர்கள்


புகழ்பெற்ற பலரையும் உலகிற்கு வழங்கிய மாபெரும் குருகுலம் கேம்பிரிட்ஜ். மனித இனத்தின் பரிணாம தத்துவத்தை சொன்ன டார்வின் முதல் நியூட்டன் வரை பல விஞ்ஞானிகள் படித்த இடம்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
வில்லியம் வோர்ட்ஸ் வொர்த் போன்ற கவிஞர்களை உலகுக்கு அளித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தனது 800-வது ஆண்டு விழாவை 2009-ம் ஆண்டு முழுவதும் கொண்டாடியது. நமது நாட்டிலும் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பிரபலங்கள் பலரும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் மாணவர்களே.

புகழ் பெற்ற இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் கேம்பிரிட்ஜ் மாணவர். ராமானுஜத்தின் திறமையை அறிந்து அங்கு அழைத்தவர் ஜி.ஹெச்.ஹார்டி என்பவர், 1913 முதல் 1918 வரை டிரினிட்டி கல்லூரியில் படித்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராமானுஜன்
'ஃபெலோ ஆஃப் ராயல் சொசைட்டி' என்ற விருது பெற்ற இரண்டாம் இந்தியர் ராமானுஜன்தான். ஹரிவம்சராய் பச்சன் என்பவரும் கேம்பிரிட்ஜ் மாணவர்தான். இந்திய திரையுலகின் சகாப்தம் என்று சொல்லப்படும், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் தந்தை இவர். கவிஞரான இவர் ஆங்கில இலக்கியத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. பட்டம் பெற்ற முதல் இந்தியர்.
ஹரிவம்சராய் பச்சன்

ஜவஹர்லால் நேரு
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான டிரினிட்டி கல்லூரியிலும் இந்தியர்கள் படித்திருக்கிறார்கள். இந்தியாவின் முதல் பிரதமாரான ஜவஹர்லால் நேரு 1907 முதல் 1910 வரை இங்கு படித்தார். ராஜீவ்காந்தி 1970-களில் டிரினிட்டி கல்லூரியில் தான் படித்தார். இந்த கல்லூரியில் படிக்கும்போதுதான் உணவுவிடுதி ஒன்றில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை சந்தித்து, காதல் வயப்பட்டு பின்னர் திருமணமும் செய்து கொண்டது எல்லாமே உலகம் அறிந்த தனிக்கதை.

சோனியா - ராஜிவ் காந்தி
இந்திய கிரிக்கெட்டின் தந்தையாக கருதப்படும் ரஞ்சித் சிங்ஜி 1888 முதல் 1891 வரை கேம்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரியில் படித்தவர். டாட்டா குழுமத்தின் நிறுவனரான சர் தொரோப்ஜி டாட்டா, இந்திய தொழில் நுட்ப துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியவர், 1877 முதல் 1879 வரை இங்கு படித்தவர். இந்தியாவுக்கு நோபல் பரிசு பெற்று தந்த பொருளாதார நிபுணர் அமர்தய சென் 1957 முதல் 1963 வரை டிரினிட்டி கல்லூரியில் பயின்றார்.

சர் தொரோப்ஜி டாட்டா
மற்றொரு பொருளாதார மேதையும் இந்தியாவின் முன்னாள்  பிரதமருமான மன்மோகன்  சிங் கேம்பிரிட்ஜில் படித்தவர்தான்.

மகள்களுடன் மன்மோகன் சிங் - 1967

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...