புதன், நவம்பர் 30, 2016

எழுத்துக்கள் உருவான விதம்


பேச்சு வழக்கை மொழி என்று கூறினர். அந்த மொழியை தொடர்ந்து எழுத்து உருவானது. இந்த எழுத்தை முதலில் கண்டுபிடித்தது மெசபடோமியாவில்தான் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. கி.மு.4000-ம்  ஆண்டுகளிலேயே களிமண்ணை பேப்பர் போல் பயன்படுத்தி அதில் சட்டங்கள், உடன்பாடுகள், அட்டவணைகள் போன்றவை எழுதப்பட்டன. போகப் போக பேசுகிற மொழியை பிரித்து தனிப்படுத்தி ஒவ்வொரு எழுத்துக்கும் தனிக் குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

காகிதம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் ஈரக் களிமண்ணைப் பரப்பி அதில் எழுத்தாணியால் எழுதி, அது உலர்ந்தவுடன் ஈரக் களிமண்ணை அதன் மீது வைத்து பேக்கிங் செய்து விடுவார்கள். அது கீழே விழுந்து உடைந்து விடாமல் மிக ஜாக்கிரதையாக கொண்டு சென்று சேர்க்கவேண்டும். அதைப் பெற்றுக்கொண்டவர் லேசாக தட்டி உதிர்த்தால் போதும் உள்ளே உள்ள தகவலைப் படிப்பார்கள். 

பாபிலோனிய களிமண் குறிப்புகள்
ஆயிரக்கணக்கான குறியீடுகள் வேகமாக களிமண்ணில் எழுத கல்வியறிவு அதிகமாக தேவைப் பட்டதால், பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கு சட்டம், அரசியல், மருத்துவம் போன்ற விஷயங்கள்  தனித்தனி பயிற்சியும் அளிக்கப்பட்டது. எழுத்து என்பது இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முழுவடிவம் பெற 800 ஆண்டுகள் ஆனது. 

மொழி மனிதனின் கைவசப்பட்டவுடன் அடுத்தக் கட்டமாக இலக்கியம் பிறந்தது. கி.மு.2000-ல் பாபிலோனியர்கள் எழுதிய சிறுகதைகள், புராணங்கள், சுற்றுலா தகவல்கள், மன்னர்கள் மேற்கொண்ட வேட்டைகள் போன்றவற்றை தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. 


பழமொழிகளைக் கூட பாபிலோனியர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த காலத்தில் அழகு நிலையங்கள் பெண்கள் கூடும் இடங்களாக இருந்திருக்க வேண்டும். ஒரு களிமண் குறிப்பில் 'அழகு நிலையம் என்று  ஒன்றிருந்தால் அங்கு கிசுகிசுவும் கூடவே இருக்கும்' என்கிற பழமொழி கிடைத்திருக்கிறது. இன்றளவும் வர்த்தகத்தில் பின்பற்றப்படும் 'வியாபாரத்தில் நண்பர்கள் கிடையாது' என்ற பழமொழியும் கூட களிமண் குறிப்பில் இருந்து பெற்றதுதான். 

பாபிலோனியர்களெல்லாம் அப்பவே அப்படி..!
செவ்வாய், நவம்பர் 29, 2016

உடனடி மாற்றமா? உண்மையான மாற்றமா?


500, 1000 ருபாய் நோட்டுகள் செல்லாதென அறிவிக்கப்பட்டு 19 நாட்களுக்கு மேலாகியும், பணப்புழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படாத நிலை தொடர்வதை உணரமுடிகிறது. 


பிரதமர் மோடியும் கூட நிலைமை சீரடைய 50 நாட்கள் ஆகலாம் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதே. அதேநேரம், செல்லாது என்கிற அறிவிப்பு இனி மாற்றப்படுவதற்கான வாய்ப்புக்களே இல்லை என்றாகிவிட்ட பின்னர், பெருவாரியான மக்களும் கூட யதார்த்த சூழலுக்கு பழகிக்கொண்டு விட்டதாகவே தெரிகிறது.  

இந்தப் பிரச்சினையின் காரணமாக பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் உடனடி மாற்றங்கள் குறித்தும், உண்மையான மாற்றங்கள் குறித்தும் பொருளாதார நிபுணர்களால் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி பாதியாக சரிவடையும் என்கிற அளவுக்கும் கூட கணிப்புகள் வெளியாகி அச்சுறுத்துவதும் உண்மையே.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் அதாவது 2016 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவிகிதமாக இருந்தது என மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்க செய்தியே என்றாலும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பின்னர், இரண்டாம் பாதியில் எந்த அளவுக்கு வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்பதை யாராலும் அறுதியிட்டுக்கூற முடியாது என்பது உண்மை. 

அரசு சொல்வதைப் போல், 50 நாட்களில் பணப்புழக்கத்தில் சகஜ நிலை ஏற்படுமானால், பொருளாதார வளர்ச்சி சிறிய அளவிலான பாதிப்புகளோடு தப்பிவிடும் வாய்ப்புண்டு என்பதையும், மறுக்க இயலாது. அதேநேரம், எதிர்பார்க்கப்படுவது போல் வெளிவராத கருப்பு பணம் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் கோடியாக இருந்து, அது அனைத்தும் அரசுக்கு வருவாயாக மாறும் பட்சத்தில் பொதுச்செலவினங்கள் மற்றும் முதலீடுகள் அதிகரிக்கப்படுமாதலால், அதன் அடிப்படையில் வளர்ச்சியில் சாதகமான பலன்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஆனால், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பின் மூலமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை மத்திய அரசு அடித்துள்ளதாகவே கருதப்படுகிறது.


அதாவது சரிவர கணக்கு காட்ட இயலாத மிகப்பெருவாரியான கருப்பு பணம் சந்தைக்கு வராமலே அழிக்கப்பட்டுவிடும் என்பதால், அரசுக்கு லாபம் என்பது ஒரு பலன் என்றால், தற்போது மாறியுள்ள சூழலில், ரூபாயாக சேமித்து வைப்பது அதிக ரிஸ்க் தரும் வழியாக கருதப்பட்டு வருவதால், பெருவாரியான வர்த்தக நடவடிக்கைகள் நேர்மறைக்கு திரும்பத் தொடங்கியிருப்பதும் ஒரு முக்கியமான  பலனாக பார்க்கப்படும் என்பதே உண்மை.

இனிவரும் காலங்களில் ரொக்க பரிவர்த்தனை குறையும் என்பதோடு, வங்கிகள் மூலமான அல்லது ஆன்-லைன் மூலமான பரிவர்த்தனையின் சதவிகிதம் அதிகரிக்கும் என்பதும் நிச்சயமாகிவிட்டது. இதைத்தான் மத்திய அரசும் எதிர்பார்த்திருந்தது.  அதாவது, கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வந்ததைவிடவும், வர்த்தகம், தொழில்துறையினர் மத்தியில் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியதே இந்த அறிவிப்பின் மிகப்பெரிய சாதனையாக வருங்காலத்தில் குறிக்கப்படக்கூடும்.

ஒன்று மட்டும் நிச்சயம். பெருவாரியான பொதுமக்களால் வரவேற்கப்படும் இந்த திட்டம் புதிய ரூபாய் நோட்டுக்கள் வரத்தில் பிரச்சினைகள் இன்றி செயல்படுத்தப்பட்டிருக்குமேயானால், மிகப்பெரும் வெற்றியை அரசுக்கு அளித்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.


கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 
திங்கள், நவம்பர் 28, 2016

ஹாலிவுட்டுக்கும் சென்ஸார் உண்டு


மது இந்தியத் திரைத்துறையில் தவிர்க்கமுடியாத ஒரு தலைவலி என்று தணிக்கைத் துறையினரை திரைப்பட துறையினர் சொல்வது வழக்கம். இந்த தலைவலி ஏதோ இந்தியாவுக்கு மட்டும் ஏற்பட்டதல்ல. தாராளமான ஆபாசக் காட்சிகளுக்கு பெயர்பெற்ற ஹாலிவுட்டிலும் இந்த சென்ஸார் போர்ட் தொந்தரவு இருக்கிறது. 

'தி கிஸ்' (1896)
நூறாண்டு சரித்திரம் கொண்ட ஹாலிவுட் சரித்திரத்தில் ஆரம்ப காலங்களில் சென்சாரே கிடையாது. ஆனால், 1896-ம் ஆண்டு 'தி கிஸ்' என்ற படம் வெளிவந்தது. அதில் ஒரு ஆணும் பெண்ணும் உதடு பிரியாமல் உதடோடு உதடாக முத்தமிட்டதை பார்த்து பலர் பதறிப்போயினர். அப்போதே சினிமாவுக்கு கடிவாளம் போடவேண்டுமென்ற வாதங்கள் எழுந்தன. அதன்பின் 1919-ல் 'டோன்ட் சேன்ஜ் யுவர் ஹஸ்பெண்ட்' என்ற படத்தில் சிவப்பு விளக்கு பெண்ணிடம் சென்று வியாதியை பெற்று வருவதாக கதை. இதில் ஏகப்பட்ட ஆபாச காட்சிகள் இருப்பதாக மக்கள் நொந்துப்போயினர். 1920-ல் 'அவுட் சைட் தி லா' என்ற படம் ஏராளமான வன்முறைக் காட்சிகளை கொண்டதாக வெளிவந்தது. அதைப்பார்த்தும் கிறிஸ்துவ பாதிரியார்கள் கொதித்துப் போனார்கள். அதோடு நின்று விடாமல் நீதிமன்ற கதவையும் தட்டினார்கள். 

'டோன்ட் சேன்ஜ் யுவர் ஹஸ்பெண்ட்' (1919)
அதன் எதிரொலியாக 1921-ல் 'மோஷன் பிக்ஸர் கமிஷன்' என்ற அமைப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உருவாக்கியது. ஆனால் இது  பெயரளவில் மட்டுமே இருந்தது. விரசமான காட்சிகள் நிறைந்த பல படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. மீண்டும் சென்ஸார் கெடுபிடிகளை அதிகமாக்க வேண்டும் என்ற வேண்டுகோள் நாடு முழுவதும் எதிரொலிக்க தொடங்கியது. 

'அவுட் சைட் தி லா' (1920)
அமெரிக்க அரசு 'புரொடக்ஷன் கோட்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, சினிமாவில் எதைக் காட்டலாம், எதைக் காட்டக்கூடாது என்ற விதிமுறைகளை உருவாக்கியது. அப்படியும் விதிமுறைகள் தொடர்ந்து மீறப்பட்டன. இந்தநிலையில் 1967-ல் 8 பெரிய ஸ்டுடியோக்கள் ஒன்று சேர்ந்து 'மோஷன் பிக்ஸர் அசோசியேஷன் ஆப் அமெரிக்கா' என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தின. அரசின் பழைய 'புரொடக்சன் கோட்'-யை தூக்கி எறிந்துவிட்டு 'ரேட்டிங் சிஸ்டம்' என்ற புதிய விதிமுறைகளை இவர்கள் கொண்டு  வந்தார்கள்.


அதில் 'ஜி', 'பி.ஜி.', 'ஆர்' என்ற மூன்று வகையான சர்டிபிகேட்டுகளை கொண்டு  வந்தார்கள். 'ஜி' என்றால் 'ஜெனரல்'. அதாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். 'பி.ஜி.' என்றால் 'பேரன்ட்ஸ் கைடன்ஸ்' என்று பொருள். அதன்படி சிறுவர்களுடன் பெற்றோர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு மாதிரியான காட்சிகள் வந்தால் பிள்ளைகளின் கண்களை மூடிவிட்டு பெற்றோர்கள் மட்டும் பார்க்கலாம். 'ஆர்' என்றால் 'ரெஸ்ரிக்டட்' என்று அர்த்தம். அதாவது சிறுவர் சிறுமியர்கள் பார்க்கக் கூடாத படம் என்று அர்த்தம். 


இதில் 1984-ல் மேலும் சில விதிமுறைகளை சேர்த்தார்கள். அதன்படி 'ஆர்' என்றால் 17 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்கக்கூடாது என்றும், இந்த 'ஆர்'-ருடன் 'பி.ஜி.-13' என்ற ஒன்றை சேர்த்தால் 13 வயது நிரம்பியவர்கள் பெற்றோருடன் சேர்ந்து படம் பார்க்கலாம் என்றும் கொண்டுவந்தார்கள். இது பெற்றோர்களை எச்சரிக்கை செய்வதற்காக தரப்பட்டது. இதுபோக 'என்.சி.-17' என்ற ஒன்றும் தரப்பட்டது. இந்த சான்றிதழ் பெற்ற படத்தை 17 வயதுக்கும் குறைவானவர்கள் பார்க்கக் கூடாது என்பது பொருள். 

இப்படி ஏகப்பட்ட பிரிவுகளில் சான்றிதழ்களை கொடுத்தாலும் சென்சார் போர்டுக்கே படங்களை அனுப்பாமல் வெளியிடவும் செய்யலாம். அப்படிப்பட்ட படங்களை 'என்.ஆர்.' என்று சொல்வார்கள். அதாவது 'நான்-ரேட்டட்'. 


ஹாலிவுட்காரர்கள் 'ஜி' சர்டிபிகேட்டை அவ்வளவாக விரும்புவதில்லை. இதற்காகவே நல்ல படங்களில் கூட ஒன்றிரண்டு காட்சிகளை மோசமாக எடுத்துவிட்டு 'பி.ஜி.-13' என்று வாங்குவதையே விரும்புகிறார்கள். இல்லையென்றால், நிர்வாணப்படம் என்று 'ஆர்' சான்றிதழ் கொடுங்கள் என்கிறார்கள். இத்தகைய படங்களுக்குத்தான் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிறதாம். சரி, இந்த சான்றிதழ்களின் படிதான் படம் பார்க்க அமெரிக்க தியேட்டர்கள் அனுமதிக்கின்றனவா..? என்றால் எதையும் யாரும் கண்டுகொள்வதில்லை என்பதுதான் பதில். எந்தப் படத்தையும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதுதான் நிதர்சனம்.  ஞாயிறு, நவம்பர் 27, 2016

வழங்கலாம் இன்னுமொரு வரலாற்று வாய்ப்பு


ரு கல்லூரி நிர்வாகம், தனது ஊழியர்கள் மூலமாக கிட்டத்தட்ட ரூ.8 கோடி கருப்பு பணத்தை மாற்ற முயற்சித்தது, தேசமெங்கும் ஜன்தன் யோஜனா சேமிப்புக் கணக்குகளில் ரூ.64,000 கோடி அளவுக்கு திடீரென டெபாசிட்டுகள் குவிந்திருப்பது என்கிற செய்திகளோடு, ரூ. 5 லட்சம் அல்லது ரூ.10 லட்சம் தருகிறோம், அதனை புதிய ரூபாயாக  மாற்றிக் கொடுங்கள் என தனிப்பட்ட நபர்களிடமும்  லட்சக்கணக்கான ரூபாய்க்கு தங்க நகைகள் வாங்கிக் கொள்வதாகவும், அதற்கு பழைய ரூ.500, 1000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வணிக நிறுவனங்களை பலரும் கேட்டுக் கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருவதும், ரூ.500, 1000 செல்லாதென அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் கருப்பு பணத்தின் மீதான அடி பலமாக விழுந்துள்ளது என்பதையும், அதன் அடிப்படையில் கடுமையான வலியை பலரும் உணர்வதையும் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

இது பிரதமர் மோடியின் இந்த திட்டத்திற்கான வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியும் என்றாலும், இதைவிடவும் அதிகமான வலியுடன் நாடெங்கும் சாதாரண பொதுமக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம் வாசல்களில் தங்களது சொந்தப்பணத்தை மாற்றுவதற்காக பல மணி நேரம் நிற்கும் நிலை தொடர்வதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.


தமிழகத்தில் இன்னும் 500 ரூபாய் புதிய நோட்டுகள் பரவலாக வழங்கப்படாத நிலையில், பணப்புழக்கத்தில் பெரும் தேக்கம் தொடர் கதையாகியுள்ளது.  அதேநேரம், 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 500, 1000 ருபாய் நோட்டுகள் செல்லாதென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகாறும் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளே வங்கிகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் டிச.31 ஆம் தேதி வரையில் வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும் என்கிற நிலை இருப்பினும், இனி வரப்போகும் தொகை என்பது பெரும்பாலும் கருப்பு பணமாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்கிறபோது, அவை வங்கிகளுக்குள் வராமலே போய்விடக்கூடும். ஆனால், மத்திய அரசு கூடுமான வரையில்  மேலதிக பணம் வங்கிகளுக்குள் வருவதையே விரும்புவதாகத் தெரிகிறது. 

ரூபாய் இரண்டரை லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் வருமான வரி மற்றும் 200 சதவிகித பெனால்டி விதிக்கப்படும் என்கிற வரித்துறையின் அறிவிப்பின் காரணமாக, பதுங்கியிருக்கும்  கருப்பு பணத்தில் மிகப்பெரும் பகுதி இன்னும் வெளிவராத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதே யதார்த்தம்.

இந்நிலையில், கடந்த செப்.30 ஆம் தேதியுடன் முடிவடைந்த கருப்பு பணத்தை தாமாக முன்வந்து அறிவிக்கும் திட்டத்தை மறுபடியும் செயல்படுத்துவது தற்போதைய சூழலில் மிகு பலன்களைக் கொடுப்பதாக அமையக்கூடும்.


கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் அத்திட்டத்திட்டத்தின்கீழ் வெளிக்கொணரப்பட்டு ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வரி வருவாய் கிடைத்துள்ள நிலையில், தற்போது மறுபடியும் அத்திட்டத்தை அறிமுகப்படுத்தி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அதன் கீழ் டெபாசிட்  செய்து வைப்பதன் மூலம் பெருமளவு பணம் வெள்ளையாக மாறும் வாய்ப்பு ஏற்படக்கூடும். மத்திய அரசும் கூட அவ்வாறாக சிந்திப்பதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை வரியாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை நான்கு வருடங்களுக்கு வங்கியிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய வரைவு திட்டம் ஒன்றை அரசு வகுத்து வருவதாக கூறப்படுவது உண்மையயனில் அது வரவேற்கத்தக்கதே. சாதாரண பொதுமக்கள் மிகப்பெரும் அளவில் கடுமையான சங்கடங்களை இதுகாறும் சந்தித்து வந்துள்ள நிலையில், கருப்பு பணம் அனைத்தும் முழுமையாக வங்கிகளுக்குள் வருவதை உறுதிப்படுத்துவது மட்டுமே அதற்கான ஆறுதல் அளிக்கும் விசயமாக அமையக்கூடும்.

இதன் மூலம் அரசுக்கு வருமான வரி வகையில் வருவாய் கிடைக்கும் என்பதோடு, வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நாளடைவில் சாதாரண பொதுமக்கள் தங்களது பணத்தை எடுத்துக்கொண்டாலும் கூட, மீட்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி வங்கிகளிடத்திலேயே இருக்கும் என்பதால் வரும் நாட்களில் வங்கிக் கடன் விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்க முடியும்.

அதன் அடிப்படையில், சந்தையில் நுகர்வுத் தன்மை அதிகரிக்கும் என்பதோடு, தொழில்துறைக்கான குறைந்த வட்டி கொண்ட கடன் வசதி அதிகரிக்கும் என்பதால், புதிய வேலை வாய்ப்புகள் பெருகுவதற்கும் வாய்ப்பிருக்கும்.

இதன் மூலம் ரூபாய் நோட்டு செல்லாததென அறிவிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலை அடுத்த நிதியாண்டின் துவக்கத்திலாவது நல்ல நிலைக்கு மாற வழி வகை ஏற்படும் என்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கும் என்றே நம்புவதற்கு இடமுண்டு.

வழங்கலாம் இன்னுமொரு வரலாற்று வாய்ப்பு என்கிற கோசத்தில் சத்து இருப்பதாகவே தெரிகிறது.


கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் சனி, நவம்பர் 26, 2016

சம்பளம் இனிக்குமா சங்கடம் நிலைக்குமா..!


500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென அறிவிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு வாரங்கள் கழிந்துவிட்ட நிலையில், நாட்டின் பணப்புழக்க நிலையில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாக உணர முடிகிறது.


ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில், கிட்டத்தட்ட 5.2 லட்சம் கோடி பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக பொதுமக்களால் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே அதாவது ரூ.1.36 லட்சம் கோடி மட்டுமே புதிய நோட்டுக்களாக மாற்றப்பட்டுள்ளது என்கிற செய்தி வரும் நாட்களுக்கான தொடரும் சங்கடங்களை உறுதிப்படுத்துவதாக அமையக்கூடும்.

ஆனால், அரசியல் ரீதியாக எந்த பிரதமரும் எடுக்கத்துணியாத ஒரு முடிவை அசாத்தியமான துணிச்சலுடன் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார் என்பதையும் அரசியல் ரீதியாக இல்லாது, நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவே இது என்பதையும் ஏற்கத்தத்தான் வேண்டும். ஆனால் 86 சதவிகித  பணப்புழக்கத்தை செல்லாது என அறிவிக்கும்போது, ஏற்படப்போகும் பின் விளைவுகள் குறித்த சரியான கணிப்பும், திட்டமிடுதலும் இருந்தாதா என்பது குறித்து ஐயம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி வரையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிக் கணக்களுக்குள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், மீதமிருக்கும் 4 லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு வருவாயாக கிடைக்கும் எனவும் அதன் அடிப்படையில், அதில் பெருவாரியான தொகை அரசுக்கு டிவிடண்டாக வழங்கப்படும் எனவும் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கதே.  உட்கட்டமைப்பு வசதிகள், கழிப்பறை வசதிகள், அனைவருக்கும் வீடு போன்ற பல்வேறு சமூக நல மேம்பாட்டுப் பணிகளுக்கு இத்தகைய வரவு செலவிடப்படுமானால், அது வளமான எதிர்காலத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், உண்மையான கருப்பு பணம் என்பது முற்றிலும் வெளிவராத சூழலில், சாதாரண பொதுமக்கள் அன்றாட செலவுகளுக்கும் அல்லல்படுவது வேதனை அளிப்பதே. புதிய ரூபாய் நோட்டுக்கள் வரத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருவது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.  குறைந்த கால சங்கடங்களை நாட்டின் நலன் கருதி ஏற்றுக்கொள்ளவே பெருவாரியான மக்கள் விரும்பிய நிலையில், மூன்றாவது வாரமாக தொடரும் பணப்புழக்கம் இல்லாமை யதார்த்தத்தில் நாட்டின் அனைத்து தரப்பினரையும் பாதிப்பதாகவே உள்ளதையும் மறுக்க இயலாது.

இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் டிசம்பர் மாத சம்பளத்தை எதிர்நோக்கி கோடிக்கணக்கான தொழிலாளர்களும், ஊழியர்களும் காத்திருக்கும் நிலையில், சந்தையில் பணப்புழக்கத்தில் கடுமையான தேக்கம் நிலவுவது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அனுமானிக்க இயலாத நிலையில், மத்திய அரசு அது குறித்து தீவிவரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

குறிப்பிட்ட அளவே ஒரு நாளில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும் என்கிற நிலையில், சம்பளத்தொகையை தங்கள் நிலைக்கு ஏற்ப செலவழிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்பதோடு, ரொக்கமாக சம்பளம் வழங்கி வரும் சிறு, குறு நிறுவனங்கள் சம்பளம் வழங்குவதிலேயே சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். எல்லாவற்றிற்கும் மேலாக 2016‡17 க்கான நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 7.1 சதவிகித பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில், தற்போது ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், உற்பத்தியும் நுகர்வும் ஒருசேர பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சியானது 3.5 சதத்திற்கும் கீழாக வரும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதாவது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் நிச்சயம் சரிவை சந்திக்கும். ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலமாக கிடைக்கப்போகும் பலன்கள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஏற்படப்போகும் சரிவை சரிகட்டுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

====

எங்களது குழுமத்தில் இருந்து வெளிவரும் 'தினவணிகம்' நாளிதழில் வெளியான தலையங்கம் இது. வணிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதற்காக அவ்வப்போது இவற்றை கூட்டாஞ்சோறில்  வெளியிடும்படி நிறுவனர் எம்.ஜெ.வாசுதேவன் கேட்டுக்கொண்டார். அதன்படி அவ்வப்போது வெளியிடலாம் என்றிருக்கிறேன். தங்கள் கருத்தையும் தெரிவியுங்கள். 
வெள்ளி, நவம்பர் 25, 2016

சனி வளையம் ஒரு புரியாத புதிர்


சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் சனி கிரகம் ஆறாவதாக இருக்கிறது. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு முறை சூரியனை சுற்றி வர 29 ஆண்டுககளை எடுத்துக் கொள்கிறது. தன்னனைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி நேரம் ஆகிறது.


சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனி கோளினுள் சரியாக 763 பூமிகளை உள்ளடக்கிவிடலாம். அவ்வளவு பெரியது. இருந்தாலும் சனியின் எடை பூமியை விட 95 மடங்கு தான் அதிகம். இதிலிருந்து சனி ஒரு பெரிய வாயுக் கோளம் என்பதையும், கடினமாய் இருக்கும் உட்பகுதி மிகச் சிறியது என்பதயும் ஓரளவு அறிந்து கொள்ளலாம். சனியின் சராசரி அடர்த்தி 0.71 எனக் குறைவாக இருக்கிறது.

சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. சுமார் 1.17 மடங்குதான் அதிகம். பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் சனியில் 82 கிலோ இருப்பான். சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் சனியின் சராசரி வெப்பநிலை மிக மிகக்குறைவாகவே இருக்கிறது. சனியின் காற்று மண்டலத்தில் அமோனியா உறைந்து போவதால் கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாய்க் காணப்படுகின்றது.


பிறகோள்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் கோளின் நடுப்பகுதியை சுற்றி உள்ளது என்பதும் சனியின் சிறப்பாகும். சனியைப்பற்றிய பல புதிர்களில் அதன் வளையம் தான் மிக முக்கியமானது. வியாழனுக்கும், யுரேனசுக்கும் இது போன்ற வளையம் உள்ளது. ஆனாலும் சனிக்கு இருப்பதைப்போல குறிப்பிடும் படியாய் இல்லை.

சனி வளையங்கள் பற்றிய உண்மைகளை 1981 'வாயேஜர்' விண்கலம் மூலம் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. கோடிக்கணக்கான பனிக்கட்டிகள், சிறியதும் பெரியதுமாய் சனியை துணைகோள்கள் போலச் சுற்றி வருகின்றன. அவை கூட்டம் கூட்டமாக பிரிந்து பரந்த இடைவெளியுடன் கூடிய பல வளையங்கள் தோன்றுகின்றன என்பதும், அப்படி ஆயிரக்கணக்கான வளையங்கள் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.


சனியின் துணைக்கோள் ஓன்று வெடித்துச் சிதறியதால் இந்த வளையங்கள் ஏற்படிருக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. சனிக்கு அருகில் உள்ள வளையங்கள் வட்ட வடிவமாகவும், தள்ளி உள்ளவை முட்டை வடிவமாகவும் காணப்படுகின்றன. சனி வளையத்தின் கட்டமைப்பை சீர்குலைக்காமல் கோடிக்கணக்கான  துகள்கள் எப்படி சீராக ஒரு குறிப்பிட்ட வளையத்தினுள் இயங்கி வருகின்றன என்பது இன்னும் கூட புரியாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. வருங்கால விஞ்ஞான வளர்ச்சி இதற்கும் விடை கொடுக்கும்.
புதன், நவம்பர் 23, 2016

காதலைச் சொல்ல தயக்கமா..! - 2


முந்தைய பதிவை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கவும்..அந்தச் சம்பவம் இதுதான்.

விஜய்யும், அனாமிகாவும் காதலர்கள். உயிருக்குயிராய் காதலித்த இவர்களுக்குள் பிரிவு. வழக்கம்போல் காதலிதான் பின்வாங்கினாள். இத்தனைக்கும் அனாமிகா வசதியற்ற சாதாரண குடும்பத்துப் பெண். விஜய்யோ பத்து தலைமுறைக்கு படுத்துச் சாப்பிட்டாலும் கரையாத சொத்துக்கு சொந்தக்காரன்.


அனாமிகா மீதான காதலை தன் குடும்பம் ஏற்றுக் கொள்ளாதபோது தனது சொத்தையும் சொந்தங்களையும் தூக்கிப் போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான். கூலி வேலைக் கூட செய்தான்.

விஜய்யைப் போல அனாமிகாவால் அவளது குடும்பத்தை விலக்க முடியவில்லை. அதனால் விஜய்யை விலக்கி வைத்தாள். இந்த பிரிவை விஜய்யால் தாங்க முடியவில்லை. நாட்கள்தான் நகர்ந்ததே தவிர அனாமிகாவிடம் இருந்து எந்தவொரு பாசிட்டீவான ரிப்ளையும் வரவில்லை.

விரக்த்தியின் எல்லைக்கு சென்ற விஜய் காதலி அனாமிகாவை படம் பார்ப்பதற்காக வெகுநாட்கள் கழித்து தியேட்டருக்கு கூப்பிட்டான். இதுதான் கடைசிமுறை இனி உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தான். விஜய்யின் உத்தரவாதத்தால் தியேட்டருக்கு வந்தாள் அனாமிகா.


அது ஜெயம் ரவியும் த்ரிஷாவும் நடித்த 'சம்திங் சம்திங்' படம். கிட்டத்தட்ட விஜய்யின் கதைதான் அந்தப் படமும். ஒரு பணக்காரப் பையன் ஏழைப் பெண்ணின் காதலுக்காக குடும்பத்தை விட்டு வெளியே வந்து கஷ்டப்படுவதுதான் கதை.

திரையில் படம் ஓட.. ஓட.. காதலிக்கு தாங்கள் காதலித்த தருணங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர.. படம் முடியும்போது கட்டுக்கடங்காத கண்ணீருடன் மீண்டும் தன் காதலைச் சொன்னாள், அனாமிகா!


இதற்காக காத்திருந்தது போல் அவள் சொன்ன மறுநொடியில் தியேட்டர் முழுவதும் விளக்குகள் எரிந்தன. அலங்கரிக்கப்பட்ட சீரியல் செட் லைட்டுகள் சூழலை மாற்றின. திரையில் த்ரிஷா முகத்திற்குப் பதில் அனாமிகா முகம் தெரிந்தது. கண்ணீருடன் அவள் 'ஐ லவ் யூ' சொன்னாள். தியேட்டர் ஸ்பீக்கரில் அது ஒலித்தது. அவளுக்குத் தெரியாமலேயே தியேட்டருக்குள் ஒரு கேமரா அவர்களை படம் பிடித்து 'லைவாக' திரையில் காண்பித்தது.

"என்ன இது..?" என்று பிரமித்துப் போய் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ஆளுக்கொரு 'பொக்கே'யை அனாமிகா கையில் கொடுத்து வாழ்த்துச் சொன்னார்கள். அனாமிகாவுக்கு காண்பது கனவா..! அல்லது நனவா..! என்று பிடிபடவில்லை.

நடப்பது எல்லாம் நனவுதான். புரபோஸல் பிளானரின் திட்டப்படி விஜய்க்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டதுதான் அந்தப் படம். ஒரு தியேட்டரை வாடகைக்கு எடுத்து, அதற்கு நண்பர்களையும் துணை நடிகர்களையும் வரவழைத்து, நண்பர்கள் கையில் பூங்கொத்து கொடுத்து தியேட்டரில் படம் பார்க்க வைத்தது, கேமரா மூலம் தியேட்டர் திரையில் லைவாக காதலை சொல்ல வைப்பது எல்லாமே புரபோஸல் பிளானரின் ஏற்பாட்டின்படியே நடந்தது. இதில் எதுவுமே அனாமிகாவுக்கு தெரியாது.

இதற்கு மொத்தமாக 10 லட்சம் ரூபாய் செலவானது. அதில் 2 லட்சம் புரபோஸல் பிளானருக்கான கட்டணம். இப்போது விஜய்யும் அனாமிகாவும் இணைபிரியா தம்பதிகள்.


இப்படி விமானத்தில் காதலைச் சொல்வது, கப்பலில் சொல்வது, கடலுக்கடியில் சொல்வது என்று வசதிக்கு ஏற்றபடி ஏராளமான ஐடியாக்களை அள்ளித் தெளிக்கிறார்கள் புரபோஸல் பிளானர்கள். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நண்பர்கள் தங்கள் நண்பனுக்கு சாதகமான விஷயங்களை மட்டுமே யோசிப்பார்கள். புரபோஸல் பிளானர்கள் இருவருக்கும் சாதகமானவற்றையே செய்வார்கள்.


சிறிய தவறு நேர்ந்தாலும் ஒட்டுமொத்த காதலையும் வாழ்வையும் சிதைத்து விடும் அபாயமும் இதில் உண்டு. அதனால் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய வேலை இது.

உங்கள் காதலை காதலியிடம் சொல்லத் தயக்கம் இருந்தால்.. தயங்காமல் புரபோஸல் பிளானரிடம் சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்காக காதலைச் சொல்லக் காத்திருக்கிறார்கள். அதற்கான ஏராளமான திட்டங்களை உங்கள் பட்ஜெட் படி தருவார்கள். உங்கள் பர்ஸும் கனமாக இருக்கவேண்டும்.
செவ்வாய், நவம்பர் 22, 2016

காதலைச் சொல்ல தயக்கமா..! - 1


முன்பை விட ஆணும், பெண்ணும் நெருங்கிப் பழகும் சூழல் தற்போது அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று எல்லா இடங்களிலும் பெண்கள் நம் அருகில் நிறைந்து இருக்கிறார்கள். எப்போதையும் விட இப்போது அவர்களிடம் சகஜமாக பழக முடிகிறது. பாலியல் சம்பந்தமாகக் கூட பாகுபாடில்லாமல் பேச முடிகிறது.

ஆனாலும், காதல் என்று வந்து விட்டால் இன்னமும் கூட தயக்கம் நம் தொண்டைக்குழியை அடைத்து நிற்கிறது. முந்தைய காலத்தில் நண்பர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தார்கள். காதல் என்றால் கதறியடித்து ஓடிவந்து உதவுவார்கள். இன்றைய நண்பர்கள் ஃபேஸ்புக்கிலும், வாட்சாப்பிலும் கடல் கடந்து தூரமாக இருக்கிறார்கள். அவர்களால் கமெண்டுகளும், லைக்குகளும் மட்டுமே போடமுடியும். நேரடியாக உதவ முடியாது.


அதனால் தான் முன்பு நண்பர்கள் செய்த வேலையை இன்று 'புரபோஸல் பிளானார்கள்' செய்கிறார்கள். நீங்கள் காதலில் விழுந்த கதையை அவர்களிடம் சொன்னால் போதும். காதலை தயக்கம் இல்லாமல் சொல்ல, அவர்கள் உங்களுக்காக யோசித்து, சரியான தருணத்தில், கச்சிதமாக காய் நகர்த்தி, சொல்ல வைப்பார்கள். இதற்காக சில ஆயிரங்களை சேவைக் கட்டணமாக பெற்றுக் கொள்வார்கள். 

'புரபோஸல் பிளானர்' என்பது மேல்நாட்டு கலாசாரம்தான். கண்ணை மூடிக்கொண்டு அவர்களின் கலாசாரத்தை பின்பற்றும் நம்மவர்கள் இப்போது இதையும் பின்பற்றுகிறார்கள். காதலைச் சொல்ல சரியான தருணத்தை உருவாக்கித் தருவது, பிரிந்த காதலர்களைச் சேர்த்து வைப்பது, காதலன் தன் காதலிக்கு வித்தியாசமான முறையில் திருமணத்தை 'புரபோஸ்' செய்ய வைப்பது போன்றவைதான் புரபோஸல் பிளானர்களின் வேலை.


இவர்கள் செய்வதெல்லாம் இன்ப அதிர்ச்சி கொடுக்கும். சர்பிரைஸ் ஏற்படுத்தும் அம்சங்களும், புத்தம் புதிய ஐடியாக்களும்தான். அதுமட்டுமல்லாமல் இந்த சர்பிரைஸ் நிகழ்வு எதுவும் காதலிக்கு தெரிந்து விடாமல் பாதுகாக்க செய்கிறார்கள். இவர்கள் ஒரு இயந்திரம் போல் தொடர்ந்து ஐடியாக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த திறமையெல்லாம் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஒரு புரபோஸல் பிளானாராக மாறலாம். 

ஒரு புரபோஸல் பிளானர் எப்படி செயல்படுகிறார் என்பதற்கு இந்த உண்மைச் சம்பவம் ஒரு உதாரணம். 

                                                                                                                           - அது அடுத்த பதிவில் 
திங்கள், நவம்பர் 21, 2016

108-யை அரசே நடத்தலாமே..? - 2


இதை வாசிப்பதற்கு முன் முந்தைய பதிவை வாசித்தால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். கடந்த பதிவில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் படும்பாட்டை பற்றி பார்த்தோம். அதேவேளையில் இலவசமாக சேவை வழங்கி வரும் இந்த ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ. நிறுவனம் எப்படி லாபம் ஈட்டுகிறது என்பதை இப்போது பார்ப்போம். 

தமிழக அரசு இந்த நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் லாப, நஷ்டம் இல்லாமல் சேவை நோக்கத்தோடு அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செய்து கொள்ளும் உடன்படிக்கை. அரசு லாபமில்லாமல் சேவை மனப்பான்மையோடு நடப்பதில் பிரச்சனையில்லை. ஆனால், தனியார் நிறுவனம் எப்படி சேவை மனப்பான்மையோடு நடக்கும்? 


அதுவும் இலவசமாக சேவை செய்யும் ஒரு தொழிலில் எப்படி லாபம் பார்க்க முடியும்? என்று நமக்கு தோன்றலாம். இந்த 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக ஆண்டுதோறும் பராமரிப்பு தொகையாக ரூ.4,200 கோடியை அரசு ஜி.வி.கே.யின் நிறுவனத்துக்கு கொடுக்கிறது. அதோடு அரசின் பங்களிப்பு முடிவதில்லை. 

108-ல் ஏற்றப்படும் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபருக்கும் தலா ரூ.1,500-ம், பிரசவம் என்றால் ரூ.2,000-மும் அரசு ஜி.வி.கே.யின் நிறுவனத்துக்கு வழங்குகிறது. இதற்காகவே பிரசவ கேஸ்களை அதிகம் ஏற்றுங்கள் என்று இந்த ஊழியர்களுக்கு நிறுவனம் உத்தரவு போட்டிருக்கிறது. ஒரே சமயத்தில் ஒரு மாரடைப்பு, ஒரு பிரசவம் என்று அழைப்பு வந்தால் 108 பிரசவத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஏனென்றால் அதில் ரூ.500 கூடுதல் வருமானம் உண்டு. 

இப்படி ஒரு வருடத்திற்கு லாபமாக சுளையாக பராமரிப்பு தொகை என்ற பெயரில் ரூ.4,200 கோடியை வாங்கிக் கொள்ளும் 108 நிறுவனம். இதுபோக மேற்கொண்டும் வருமானம் ஈட்டுகிறது. 


ஒரு சின்ன வரவு செலவு:

ஒரு மாதத்திற்கு ஒரு 108 வாகனத்திற்கு ஆகும் செலவு 

எரிபொருள்                             ரூ. 20,000
பராமரிப்பு                                ரூ.   5,000
2 பைலட்டுகள் சம்பளம்        ரூ. 14,000
2 மருத்துவ பணியாளர்         ரூ. 16,000
விடுமுறைக்கான மாற்று 
பணியாளர் சம்பளம்               ரூ.  7,000
மருந்து செலவு                         ரூ.  2,000
இதர செலவுகள்                        ரூ.  4,000
                                                     ------------------
மொத்தம்                                   ரூ. 68,000
                                                     ------------------

800 வாகனங்களுக்கு   800  X  68,000        = ரூ.   5,44,00,000

ஒரு வருடத்திற்கு          12  X  5,44,00,000  = ரூ.65,28,00,000இது செலவு கணக்கு. இனி வரவு பற்றி பார்ப்போம். 


சராசரியாக ஒரு வாகனத்திற்கு 8 பாதிக்கப்பட்டவர்கள் என்ற கணக்கில் மொத்தமுள்ள 800 வாகனத்திற்கு மொத்தம் ஒருநாளைக்கு 6,400 கேஸ்கள்.  

பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு அரசு வழங்கும் குறைந்தபட்ச தொகை ரூ.1,500.

ஒரு நாளைக்கு     6,400  X  1,500              =   ரூ.         96,00,000

ஒரு மாதத்திற்கு       30  X  96,00,000        =   ரூ.   28,80,00,000

ஒரு வருடத்திற்கு    12  X  28,80,00,000    =    ரூ.345,60,00,000

ஆக, ஒரு வருடத்திற்கு மொத்த வரவு செலவு மற்றும் லாபம்.

வரவு                      ரூ.345,60,00,000
செலவு                   ரூ. 65,28,00,000
                                 -------------------------
லாபம்                    ரூ.280,32,00,000
                                 -------------------------

இப்படியாக ஒரு வருடத்திற்கு பராமரிப்பு தொகையாக ரூ.4,200 கோடியும் அதுபோக வருடத்திற்கு லாபமாக ரூ.280 கோடியும் கிடைக்கிறது. இது தமிழகத்துக்கு மட்டுமான லாபம். இன்னும் 16 மாநிலங்களையும் சேர்த்தால் லாபம் விண்ணைத்தொடும். 

மொத்தமாக ரூ.4,480 கோடியை ஒவ்வொரு வருடமும் அரசு வெறும் லாபமாக மட்டும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தருவதற்கு பதில், ஊழியர்களுக்கு நல்ல சம்பளமும், நல்ல வாகன பராமரிப்பும் அளித்து அரசே ஏற்று நடத்தலாமே. ஏன் செய்யவில்லை? 

ஏனென்றால் தனியார் நடத்தினால்தான் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் வருமானம் அதிகம் கிடைக்கும். அரசே நடத்தினால் மிகக் குறைவாகவே கிடைக்கும். அதுபோக இன்னும் சில காரணங்களும் உண்டு. இன்றைய நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் பல தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றன. 

பின்குறிப்பு:
இந்த கணக்கு பணியாளர்கள், அதிகாரிகள் சொல்லிய விவரங்களை வைத்து உருவாக்கப்பட்டது. உண்மையான வரவு செலவில் லேசான மாற்றங்கள் இருக்கலாம். 
ஞாயிறு, நவம்பர் 20, 2016

108-யை அரசே நடத்தலாமே..? - 1


விபத்து, மாரடைப்பு, பிரசவம் போன்ற உயிருக்கு போராடும் மனிதர்களை பார்க்கும்போதெல்லாம் நம்மை அறியாமல் நம் கை 108-க்கு போன் செய்யும். அந்தளவிற்கு மக்களின் மனதில் ஒன்றிப்போய்விட்ட ஒரு சேவை 108 ஆம்புலன்ஸ். மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு நடைபெறும் அமைப்பின் பின்னால் மிகப்பெரிய வர்த்தக நோக்கம் இருக்கிறது. இதை வைத்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக பார்க்கிறார்கள். 


முதலில் 108 என்பது அரசு நிறுவனம் அல்ல. 108 வாகனத்தில் தமிழக அரசின் சின்னம் இருப்பதால் பலரும் அதை அரசு நடத்தும் சேவை என்றே நினைக்கிறார்கள். அதில் வேலை பார்ப்பது அரசு வேலை என்று நம்பித்தான் பலரும் அதில் வேலைக்கு சேருகிறார்கள். 108 தனியார் நிறுவனம்தான். முதலில் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் இதை செய்யத் தொடங்கியது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான். தொடங்கிய கொஞ்ச நாளிலே சத்யம் போண்டியாகி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட, சத்யம் உரிமையாளரின் மைத்துனரான ஜி.வி.கிருஷ்ணராம ரெட்டிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றப்பட்டது. 


2005-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ஹைதராபாத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2008 செப்டெம்பர் 15, அண்ணாதுரை பிறந்த நாளில் அன்றைய முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். இப்போது ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், உத்தரகாண்ட், கோவா, தமிழ் நாடு, கர்நாடகா, அசாம், மேகாலயா, மத்தியப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், சத்திஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசத்திலும் செயல்பட்டு வருகிறது. இந்த 15 மாநிலங்களோடு இப்போது புதிதாக ஜம்மு காஷ்மீரும் மேற்கு வங்காளமும் இணைகிறது. 


'அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம்' என்கிற நிறுவனத்தை அவசர உதவிக்காக அழைக்கும் தொலைபேசி எண்தான் 108. இந்த அவசர உதவி மையமானது, தமிழகம் முழுவதும் 801 வாகனங்களை ஊருக்கு ஊர் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்தியா முழுவதும் 7,204 வாகனங்களை இப்படி நிறுத்தி வைத்திருக்கிறது. 

இந்த வாகனத்தில் வேறு எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸில் இல்லாத வசதிகள் இருக்கின்றன. அதி நவீன மருத்துவக்கருவிகள், உயிர்காக்கும் மருந்துகள் அதோடு சிறப்புப் பயிற்சி பெற்ற அவ்வசரகால மருத்துவ நிபுணர்களோடு ஒரு நவீன மருத்துவமனைக்கு இணையாக 108 வாகனங்கள் இயங்கி வருகின்றன. 


ஒரு 108 வாகனத்தில் ஒரு ஓட்டுநர், இவரை பைலட் என்கிறார்கள். ஒரு அவசரகால மருத்துவப் பணியாளர் என இரண்டு பேர் இருப்பார்கள். இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு ஒரு ஷிப்ட் வேலை பார்ப்பார்கள். ஒரு ஷிப்ட் என்பது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை. மொத்தம் 12 மணி நேர வேலை. 


ஷிப்ட் முடியும்போது ஏதேனும் அவசர அழைப்பு வந்தால் அதையும் முடித்து விட்டுத்தான் இவர்கள் வீட்டுக்கு செல்லவேண்டும். சில நேரம் இதுவே இரவு 12 மணி வரை நீடித்துவிடும். இப்படி கூடுதல் வேலைக்கு கூடுதல் சம்பளமோ அல்லது ஊக்கத்தொகையோ இவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. முந்தைய ஷிப்டில் கூடுதல் நேரம் வேலைப் பார்த்ததற்காக அடுத்த ஷிப்டில் தாமதமாக வரமுடியாது. சரியாக காலை 8 மணிக்கு வந்துவிட வேண்டும். 


வேலைக்கு வந்ததும் அவசரகால மருத்துவ பணியாளராக இருப்பவர் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பதிவேடுகளைச் சரிபார்த்து பெற்றுக் கொள்கிறார். அதுபோலவே ஓட்டுநரும் வழக்கமான சோதனைகளைச் செய்து வாகனத்தைப் பெற்றுக்கொள்வார். எவ்வளவு நெருக்கடியான போக்குவரத்தாக இருந்தாலும் சரி, மோசமான சாலையாக இருந்தாலும் சரி, நெருக்கடிகளை சமாளிப்பது பாதுகாப்பாக வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டும். அதனாலே சாமர்த்தியமாகவும் துரிதமாகவும் ஒட்டக்கூடிய இளைஞர்கள்தான் ஓட்டுநராக நியமிக்கப்படுகிறார்கள். 

108 வாகனம் ஒவ்வொரு ஊரிலும் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, ஊரின் மையமான பகுதி, பொதுவான இடம் ஆகிய ஏதாவது ஓரிடத்தில் நிறுத்தி வைப்பார்கள். இந்த ஊழியர்கள் எப்போதும் வாகனத்தினுள்ளே இருக்கவேண்டும் என்பது நிர்வாகத்தின் விதி. இவர்களுக்கு வாகனத்திற்கு வெளியே ஓய்விடமோ, கழிப்பறை ஏற்பாடெல்லாம் கிடையாது. இதில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் அவசரகால மருத்துவ பணியாளராக இருக்கும் பெண்கள்தான். 


சாப்பிடுவது, தேநீர் அருந்துவது எல்லாமே ஆம்புலன்ஸ்க்குள்ளேதான். அவசர அழைப்பு வந்தால் உடனே கிளம்பிவிடவேண்டும் என்பதால் இவர்களுக்கு சாப்பாடு எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அடுத்த 30 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு சென்று விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவரைப் பரிசோதனை செய்கிறார்கள். அவரைச் சுற்றி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூடியிருக்கும் உறவினர்களை சமாளிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவரை வண்டியில் ஏற்றுகிறார்கள். 


ஓடிக்கொண்டிருக்கும் வண்டியிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் அல்லது உடன் வரும் உறவினர்கள் விருப்பப்படி அவர்கள் விருப்பமான மருத்துவமனைக்கு சென்று சேருக்கிறார்கள். அதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள். அதற்காக சிறியதும் பெரியதுமாக 12 பதிவேடுகள் இருக்கின்றன. 

பாதிக்கப்பட்டவர்களால் வாகனத்தில் ஏற்படுகின்ற ரத்தக்கறை, வாந்தி, மலம், சிறுநீர் மற்றும் பிரசவம் என்றால் பிரசவக் கழிவுகள் அனைத்தையும் இந்த இருவருமே சேர்ந்துதான் சுத்தப்படுத்துகிறார்கள். ஒரு வாகனத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்திலிருந்து பத்து வரையிலான நபர்களை கையாளுகிறார்கள். ஒருமுறை கையில் அணிந்து கழற்றினால் கிழிந்துவிடும் மட்டமான கையுறையை அணிந்து கொண்டுதான் இவ்வளவு வேலையும் செய்கிறார்கள்.


இதன் தொடர்ச்சியை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்..
                                                                                                                           
சனி, நவம்பர் 19, 2016

ஆண் குழந்தைக்கும் கள்ளிப்பால்


லகில் அவ்வப்போது விசித்திரமான குற்றங்கள் நடப்பது உண்டு. அதேபோல் சில தண்டனைகளும் வித்தியாசமாக அமைவது உண்டு. அப்படிப்பட்ட தண்டனைகளில் சில...

கி.மு. 3370-ம் ஆண்டில் எகிப்தில் ஒருவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டு வந்தால் குற்றவாளியின் உடலை எத்தனை குற்றம் உள்ளதோ அத்தனை துண்டுகளாக வெட்டிக் கொள்வார்கள். அட்டன் என்ற பெண் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் முன்பே இறந்து விட்டார். அவரது உடலையும் புதைத்து விட்டார்கள். அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததும், அழுகிய நிலையில் இருந்த பிணத்தை தோண்டி எடுத்து துண்டு துண்டாக வெட்டி தண்டனையை நிறைவேற்றினார்கள்.

அய்மன் நஜாபி, சார்வேயிட் என்ற இருவரும் இளம் காதலர்கள். அய்மன், துபாயில் வேலை செய்து வந்தார். அவரை பார்ப்பதற்காக தனது நாட்டில் இருந்து சார்வேயிட் துபாய் வந்தார். ஓட்டலில் இருவரும் சந்தித்தபோது காதல் பரவசத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அங்கே இருந்த ஒருவர் பொது இடத்தில் முத்தம் கொடுத்தது குற்றம் என போலீசை அழைத்தார். பிறகென்ன, அந்த நாட்டு சட்டப்படி இருவருக்கும் ஒரு வருட சிறை தண்டனையும், 1000 திர்காம் அபராதமும் விதிக்கப்பட்டது.


தனது சுதந்திர நாளில் கதறி அழுத ஒரு நாடு சிங்கப்பூர். குடிநீர், வேலைவாய்ப்பு உள்பட தன் அணைத்து தேவைகளுக்கும் அதுவரை அண்டை நாடான மலேசியாவையே நம்பி இருந்தது, சிங்கப்பூர். திடீரென கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தண்டனையாகவே நினைத்தார்கள் சிங்கப்பூர்வாசிகள். இப்போது உலகின் மிக முக்கிய சந்தையாக சிங்கப்பூர் வளர, அந்த சுதந்திரமே காரணமானது.

கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளை கொல்லும் பழக்கம் தமிழகத்தின் ஒருசில இடங்களில் இருப்பது தெரியும். ஆனால், ஆண் குழந்தைகளை கொல்லும் 'பாப்புவா நியூ கினியா' என்ற பழங்குடி இனம் பற்றி தெரியுமா? ஆஸ்திரேலியாவின் இந்த பழங்குடி இன ஆண்கள் எப்போதும், எதற்கும் பக்கத்து கிராமங்களுடன் மல்லுக்கு நிற்பார்கள்.

கினியா இனப்பெண்கள்
தொட்டதற்கெல்லாம் குற்றம், எதற்கெடுத்தாலும் சண்டை என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சனைகளை பார்த்து பார்த்து புளித்துப்போன கினியா இனப்பெண்கள், எப்போதும் பிரச்சனைகளைக் கொண்டு வரும் ஆண்களை வெறுக்க தொடங்கினார்கள். ஆண் வர்க்கத்துக்கு தண்டனை தர முடிவு செய்தார்கள். தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகளை விஷம் கொடுத்து கொல்லத் தொடங்கினார்கள். ஆண்களாக இருப்பதால்தானே வீணாக சண்டை போட்டுக்கொண்டு எங்கள் உயிரை எடுக்கிறீர்கள். நீங்களே வேண்டாம்..! என்பதே அவர்களின் முடிவு. இந்த ஆண்சிசுக்கொலை பல ஆண்டுகள் நீடித்தது என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 
வெள்ளி, நவம்பர் 18, 2016

நகரும் இரும்புக் கோட்டை


போர்களில் இப்போது ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், யுத்தக்களம் வரை சென்று எதிரிகளை பந்தாடுவதில் பீரங்கிகளை சுமந்து செல்லும் டாங்குகளுக்கு பெரும் பங்கிருக்கிறது. துப்பாக்கி மற்றும் பீரங்கிகள் பொருத்தப்பட்ட கவச வாகனங்களையே டாங்குகள் என்கிறோம். இவைகள் போர்க்களத்தில் எதிரிகளுக்கு எப்போதும் சிம்மசொப்பனமாக விளங்குகிறது. 

லிட்டில் வில்லி
உறுதியான கணம் மிகுந்த உருக்கு இரும்புத் தகடுகளால் இது உருவாக்கப்படுகிறது. விஷேசமான சங்கிலிகள் பொருத்தப்பட்ட பல சக்கரங்களை கொண்ட வாகனம் இது. சமதளமற்ற தரையின் மீது மிக வேகமாக செல்ல இந்த சக்கரங்கள் துணை செய்கின்றன. இதனை இயக்கவும் இதன் மூலம் மற்ற போர் செயல்களை செய்யவும் பல போர்வீரர்கள் இந்த டாங்குகளுக்கு தேவைப்படுகிறார்கள்.

பிக் வில்லி
பழங்காலங்களில் குதிரைகளால் இழுக்கப்படும் ரதங்களில் இருந்தவாறு எதிரிகளுடன் சண்டை செய்தனர். சுமார் கி.பி.800-ம் ஆண்டுகளில்தான் அசீரிய மக்கள் போர்க்களத்தில் இயங்கும் வாகனத்தை வடிவமைத்தார்கள். அதன்பின் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராணுவ கேப்டன் எப்.ஜே.பூலர் என்பவர்தான் 1913-ல் நகரும் இரும்புக்கோட்டை ஒன்றை உருவாக்கும் யோசனையை தெரிவித்தார். அப்போது உலகம் முழுவதும் அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அதனால் இவர் யோசனைக்கு யாரும் செவி கொடுக்கவில்லை. 

எப்போதுமே பெரிய டாங்க்
ஆனால், சில மாதங்களிலேயே 1914 ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் உலகப் போர் தொடங்கிவிட்டது. உடனே நகரும் இரும்புக்கோட்டைக்கான ஆராய்ச்சி வெகு வேகமாக தொடங்கியது. இந்த ஆராய்ச்சி படு ரகசியமாக நடந்தது. இந்த ஆராய்ச்சி வெளியில் தெரிந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை உணர்ந்த இங்கிலாந்து ராணுவம் பொய்யான ஒரு செய்தியை பரப்பியது. ஒழுகாத தண்ணீர்த் தொட்டி ஒன்றை உருவாக்குவதிலேயே ராணுவ என்ஜினீயர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று பரப்பியது. 1916-ல் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட நகரும் இரும்புக்கோட்டை வெளிவந்த போது அதனைப் பார்த்த மக்கள் அதை புதுவகையான தண்ணீர்த் தொட்டி என்றே நினைத்தனர். தொட்டி என்ற பெயரில் 'டாங்க்' என்றே அழைத்தனர். அந்த பெயரே அதற்கு நிலைத்துவிட்டது. 

தற்போதைய பெரிய டாங்க்
இந்த முதல் டாங்குக்கு 'லிட்டில் வில்லி' என்று பெயரிட்டது இங்கிலாந்து. இது போருக்கு அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. அதனால், அதில் பல மாற்றங்கள் செய்து 'பிக் வில்லி' என்ற பெயரில் 10 ராணுவ வீரர்கள் உள்ளே இருந்து பணியாற்றும் விதமாக மற்றொரு டாங்க் உருவாக்கப்பட்டது. இந்த டாங்குகள் 1916 செப்டம்பர் 15-ம் தேதி பிரான்ஸ் நாட்டிலுள்ள 'சோம்' என்ற இடத்தில் நடைபெற்ற போரில் பயன்படுத்தப்பட்டன. 

மொத்தம் 49 டாங்குகள் இந்தப் போரில் பயன்படுத்தப்பட்டன. அதில் 17 டாங்குகளின் இன்ஜின்கள் சரியாக வேலை செய்யவில்லை. 18 டாங்குகள் போர்முனைக்கு செல்லமாட்டோம் என்று அடம்பிடித்து கிளம்பாமல் நின்றுவிட்டன. 5 டாங்குகள் யுத்தகளத்தில் போரில் ஈடுபட்டிருந்த போதே நடுவில் செயலற்று நின்று போயின. வெறும் 9 டாங்குகள் மட்டுமே கடைசிவரை நன்றாக போரிட்டன.  

லேசான டாங்க் 
தற்போது டாங்குகள் பல மாற்றங்கள் பெற்றுவிட்டன. ஆனாலும் மூன்று ரகங்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. லேசான டாங்குகள் என்பது எப்படிப்பட்ட இடத்துக்கும் சுலபமாக எடுத்துச் செல்ல வசதியானவை. விமானங்கள் மற்றும் கப்பல் மூலம் ஏற்றி செல்ல எளிதானது. மலைப்பிரதேசங்களில் பயன்படுத்தப்படுகிறது. வேகமாக செயல்படக்கூடியவை. 

நடுத்தர டாங்க் 
அடுத்தது நடுத்தர டாங்குகள். இவைகள் சமவெளிகளில் சாதாரண யுத்த நடவடிக்கைகளுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுபவை. கனமான டாங்குகள் எப்படிப்பட்ட தாக்குதல்களையும் தங்கக்கூடியது. போர்முனைகளில் அதிரடி தாக்குதலுக்கு இதனைப் பயன்படுத்துகிறார்கள். மிக மிக மெதுவாக நகரும் தன்மை கொண்டது.

வைஜெயந்த்
சென்னை ஆவடியில் உள்ள டாங்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை 1966-ல் இருந்த செயல்பட்டு வருகிறது. இது 'வைஜெயந்த்' என்ற பெயரில் டாங்குகளை தயாரித்து இந்திய ராணுவத்திற்கு வழங்கி வருகிறது. 
வியாழன், நவம்பர் 17, 2016

இந்தியாவின் முதல் பெண் போட்டோகிராபர்ந்தியாவின் முதல் பெண் போட்டோகிராபர் ஹோமாய் வியாரவல்லா என்பவர். சுதந்திர இந்தியாவில் செங்கோட்டையில் நடந்த முதல் குடியேற்றத்தை படம் பிடித்தவர் இவர்தான். அதுமட்டுமல்லாமல் இந்திரா காந்தி தன் தந்தை நேருவுடன் இருந்த தருணங்கள். நேரு மற்றும் லால்பகதூர் சாஸ்திரி இறுதி நிமிடங்கள், இரண்டாம் உலகப் போருக்கான தயாரிப்புகள், ஜாக்குலின் இந்திய  வருகை, 1956-ல் தலாய் லாமாவின் முதல் இந்திய வருகை, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒப்புதல் அளித்த காங்கிரஸ் கூட்டம். மவுண்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாக பதவியேற்ற தருணம், பிரதமர் பதவியேற்ற பின் நேரு நிகழ்த்திய உரை, வெளிநாட்டுத் தலைவர்களின் இந்திய வருகைகள் என்று இவர் இந்தியாவின் பல வரலாற்றுச் சம்பவங்களை தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். 

பிரதமராக நேரு
பெண்களை பள்ளிக்கூடத்துக்கு கூட அனுப்பாத அந்த காலத்திலேயே ஹோமாய் மும்பையின் புகழ்பெற்ற ஜே.ஜே. காலேஜ் ஆப் ஆர்ட்ஸில் பட்டயப்படிப்பு முடித்தார். பின்னர் 'டைம்ஸ் ஆப் இந்தியா'வில் பணியாற்றி வந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் நொடியில் இருந்து தலைவர்களை கூடவே இருந்து படம் எடுத்த ஹோமாய், மகாத்மா காந்தியின் இறுதி நொடிகளை படம் பிடிக்கவில்லை. அதுவே அவரது வாழ்நாள் வருத்தம். 

பொதுமக்கள் அஞ்சலிக்காக காந்தியின் உடல்
காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று காலை அவரது ஆசிரமாக் கூட்டத்தை பதிவு செய்வதற்காகக் கிளம்பிவிட்டார். அவரது கணவர் அவரை தடுத்துவிட்டார். அதனால் அதனை பதிவு செய்யவில்லை. அதை ஈடுசெய்யும்  வண்ணம் காந்தியின் அஸ்தி கரைப்பதற்காக  கொண்டு சென்றபோது அவர் எடுத்த படங்கள் சாகாவரம் பெற்றவை. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காந்தியின் அஸ்தியைக் காணக் குவிந்த பல்லாயிரக்கக்கான மக்கள் கூட்டத்தையும் அவர்களது உணர்வையும் படங்களாகப் பதிவு செய்தார். அவரின் படங்கள் இன்றும் பேசுகின்றன.

காந்தியின் உடல் எரியூட்டு நிகழ்வில் மனைவியுடன் மவுண்ட்பேட்டன்
1913-ம் ஆண்டு டிசம்பர் 9 அன்று பிறந்து, 2012 ஜனவரி 15-ல் தனது 98-வது வயதில், சுதந்திர இந்தியாவின் பல மறக்க முடியாத முக்கிய நிகழ்வுகளை தனது கேமராவில் அடக்கிய அந்த பெரும் ஆத்மா அடங்கியது.

ஹோமாய் வியாரவல்லா
புதன், நவம்பர் 16, 2016

ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே மனிதன்


டேவிட் ரெய்மேர், இதுதான் அந்த மனிதரின் பெயர். 38 வருட வாழ்க்கையில் இரண்டு முறை ஆணாகவும் ஒருமுறை பெண்ணாகவும் வாழ்ந்து மீளமுடியாத துயரில் வெம்பி வதங்கி உயிர் நீத்தார். 1965-ல் கனடாவில் ரெய்மேர் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார் டேவிட் ரெய்மேர். 

பிரெண்டா-டேவிட் ரெய்மேர்
ஆறு மாத குழந்தையாக இருந்த போது சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிப்பட்டான். டாக்டர்கள் 'சர்க்மஸிசன்' என்ற அறுவை சிகிசசைக்காக மருத்துவமனையை பரிந்துரை செய்தார்கள். ஆணுறுப்பின் முன்தோல் நுனியை கத்தரிக்கும் சிகிச்சைக்குத்தான் அப்படியொரு பெயர். புரியும்படி சொல்வதென்றால் 'சுன்னத்'. அனுபவம் இல்லாத ஒரு டாக்டர் செய்த தவறால் ஆணுறுப்பை முழுமையாக அகற்ற வேண்டிய நிலை வந்தது. 

செய்வதறியாது பெற்றோர்கள் தவித்தார்கள். குற்ற உணர்ச்சி வேறு அவர்களை பாடாய் படுத்தியது. குறிப்பிட்ட கால அவகாசத்தில் கொண்டுவந்தால் ஆண் குழந்தையை பெண்ணாக மாற்றலாம் என்று யாரோ சொல்ல, தங்கள் மகனை பெண்ணாக மாற்ற அந்த பெற்றோர்கள் டேவிட்டையும் அழைத்து போனார்கள். பல கட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரெண்டா என்ற சிறுமியாக மாறினான் அந்த சிறுவன். 

சிறுமியாக மாறியப் பின்
பள்ளிக்குப் போகும்போது மீண்டும் பிரச்சனை முளைத்தது. என்னதான் பெண்ணாக மாற்றினாலும் அவனிடம் இருந்த ஆண் தன்மை மாறவேயில்லை. ஆண் குழந்தைக்கான அத்தனை தன்மையும் பிரெண்டாவிடம் காணப்பட்டன. அவன் நின்று கொண்டே பெண்கள் கழிவறையில் சிறுநீர் கழித்தது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. பெண் குழந்தைகளிடம் இருந்து பிரெண்டாவை பிரித்து வைக்க வேண்டும் என்று மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் சொல்ல பிரெண்டா தனிமை படுத்தப் பட்டாள். 

இவை அனைத்தும் அந்த பிஞ்சு மனசுக்குள் பெண் உருவத்தின் மீது வெறுப்பை விதைத்தன. 12 வருடங்கள் கழித்து, பிரெண்டா பருவ வயதை எட்டியபோது பிரெண்டாவுக்குள் பெண் தன்மை சுத்தமாக இல்லை. ஆண்மை உணர்வுதான் தலைதூக்கியது. பள்ளி நாடகம் ஒன்றில் மற்றொரு மாணவனுக்கு முத்தம் கொடுப்பதுபோல் நடிக்க வேண்டும். அறுவறுப்பின் உச்சத்துக்கு சென்ற பிரெண்டா மேடையை விட்டு விறுவிறுவென கீழேயிறங்கி ஓடிவிட்டான். 

பெண் உருவத்தில் இருந்தாலும் கைகளில் ரோமங்களும் கழுத்து மற்றும் தோள்பகுதி அகலமாகவும் காணப்பட்டது. இத்தனை நாட்கள் அவளுக்கு மட்டுமே தெரிந்த பிரச்சனை இப்போது வெளியுலகத்துக்கு தெரிய வர தன்னை தனிமை படுத்திக்கொண்டாள் பிரெண்டா. தானே தனது தலைமுடியை ஆண் போல் கிராப்பாக வெட்டிக்கொண்டு தனது அண்ணனின் சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு, தன்னை மீண்டும் ஆணாக மாற்றாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பெற்றோரை மிரட்டினான். 

பிரெண்டாவாக
தனக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த டாக்டரை தேடி கண்டுபிடித்து துப்பாக்கியால் சுட முயன்றான். டாக்டர் அவன் காலில் விழுந்து கதறி அழ உயிரோடு விட்டு வந்தான். "தவறு செய்தவரை தண்டிப்பதைவிட மன்னிப்பதே பெரிய குணம். அவருக்கு பெரிய ரணமும் கூட" என்றான். 

திருமணத்தின் போது
அதன்பிறகு நான்கு அறுவைசிகிச்சை செய்து ஆணாக மாறினான். மூன்று குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை மணந்து கொண்டான். எதிலும் சந்தோசம் கிடைக்கவில்லை. மனைவியை விட்டு பிரிந்தான். ஆதரவற்று சுற்றித் திரிந்தான். ஒரு கட்டத்துக்கு மேல் இனி வாழ முடியாது என்று தற்கொலை செய்து கொண்டான்.

"எனக்கு விஷயம் தெரிவதற்குள் என்னை இருமுறை இழந்து விட்டேன். என்னிடம் கேட்டு நீங்கள் முடிவெடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. 38 வருடங்களாக நான் உணர்ந்த அந்த வலியை நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் உணரவேண்டும்." என்று தனது பெற்றோருக்கு கடிதம் எழுதியிருந்தான். தன் வாழ்வையும் முடித்துக்கொண்டான். 

கடைசி காலத்தில்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...