வெள்ளி, பிப்ரவரி 17, 2017

வளர்ச்சி வந்த பாதையும் வளர்ந்து நிற்கும் தேசமும்


90-களின் ஆரம்பத்தில் உலகமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்தியா அதிவிரைவு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், உலகமயமாக்கலுக்கு எதிரான விமர்சனங்களும் இன்று வரையிலும் வைக்கப்படுவதையும் நாம் பார்க்க முடியும்.


இருந்தபோதும், தேவையற்ற வகையில் எல்லாவற்றிலும் அரசின் கட்டுப்பாடுகள் நீக்கமற நிறைந்திருந்த நிலை மாற்றப்பட்டு பல்வேறு துறைகளும் குறிப்பாக தொழில்துறையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது என்பதையும், அதன் அடிப்படையில் தனியார் துறையில் பெருத்த உத்வேகம் ஏற்பட்டது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், மென்பொருள் ஏற்றுமதி துறையில் காலமாற்றத்தின் காரணமாகவும், தொழில்நுட்பங்களை எளிதில் கற்றுத் தேர்ந்து விடும் இந்திய இளைஞர்களின் திறமை காரணமாகவும்கூட தேசத்தின் வளர்ச்சி என்பது வசப்படுத்தப்பட்டே வந்துள்ளது. சர்வதேச அளவில் தொடர்ந்து 8 ஆண்டுகளும் அல்லது அதற்கு மேலாகவும் 6 சதவிகிதம் அல்லது அதற்கும் மேலான பொருளாதார வளர்ச்சியை நாடு கண்டு வந்துள்ள சந்தர்ப்பம் என்பது 28 முறைகள் மட்டுமே அமைந்துள்ளன என்றும், இத்தகைய மிக அரிதான ஒரு வாய்ப்பைப் பெற்ற பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது என்று ரேட்டிங் அமைப்பான 'ஈடல் வீஸ் செக்யூரிட்டி' அமைப்பு மேற்கொண்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கதே.


இது உண்மையே. கடந்த பல வருடங்களாகவே இந்தியா 6 சதவிகிதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பெற்று வந்துள்ளது கண்கூடு. வர்த்தகம் செய்வதில் திறமையான செயல்பாடுகள் அதிகரிப்பு, நல்ல வரி வசூல், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உத்வேகத்துடன் கூடிய கிராமியப் பொருளாதாரம் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்தியா மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அதிகமான வளர்ச்சி, சந்தை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் துறையில் மாபெரும் புரட்சி, ஊரக வளர்ச்சி மேம்பாடு, நவீன மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் என கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக இந்தியாவில் மேலதிக வளர்ச்சி கைகூடியுள்ளது என்பதை யாரும் உணர முடியும்.


சமீபத்தில் அரசு மேற்கொண்ட ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையும்கூட உடனடியாக பெருத்த நன்மைகளை ஏற்படுத்திவிடவில்லை என்ற போதும், மின்னணு பரிவர்த்தனை துறையில் வரவேற்கத்தக்க மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்பதையும், அதிகப்படியான டெபாசிட்டுகள் வங்கிகளுக்குள் வந்து சேர்ந்து உள்ளதன் காரணமாக அவற்றின் லாப நஷ்டக் கணக்குகள் சற்றே மேம்பாடு அடைந்துள்ளது என்பதையும் மறுக்க இயலாது.

தென்மேற்கு பருவமழை சிறப்பாக இருந்த காரணத்தினால் கிராமப்புற பொருளாதாரம் உயிர்ப்புடன் இருக்கும் என்பதால், அதன் அடிப்படையில் நுகர்வுச்சந்தையில் தேவை அதிகம் ஏற்படும் என்பதனாலும், வலுவான வளர்ச்சி சாத்தியம் என்றே கூறப்படுகின்றது. அதேநேரம், நடப்பு நிதியாண்டை கருத்தில் கொண்டால் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக 7.6 சதவிகித வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது தற்போது 6.5 சதவிகித அளவுகளுக்குள்ளே இருக்கும் என்பது ஏறக்குறைய நிச்சயமாகிவிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அதாவது இது தற்காலிக சங்கடமோ அல்லது நடுத்தர கால அளவிலான சங்கடமோ தெரியாது என்றாலும், கிட்டத்தட்ட 8 சதவிகித வளர்ச்சி வாய்ப்பை தடுத்திருக்கிறது என்பதை  குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் மின்னணு பரிவத்தனையில் வளர்ச்சி, வங்கிகளிடம் கடன் வழங்கத் தக்க டெபாசிட்டுகள் அதிகரிப்பு, ஹவாலா பண பரிவர்த்தனையில் வீழ்ச்சி மற்றும் பொதுவாகவே ரொக்கமாக பணத்தை வைத்திருப்பதற்கு எதிரான மக்களின் மனோபாவ மாற்றங்கள் என இவற்றை எல்லாம் சாதகமான சூழல்களாக எடுத்துக் கொண்டோமானால், வரும் நிதியாண்டுகளில் மேலதிக வளர்ச்சிக்கு திரும்புவதும் சாத்தியமே என்பதையும் மறுப்பதற்கில்லை.

8 ஆண்டுகளாக 6 சதவிகித்திற்கும் அதிகமான வளர்ச்சி கண்ட மிக மிக அரிதான பொருளாதார நாடு என்பது பெருமைக்குரியதுதான் என்றாலும், தொடர்ந்தும் பல்லாண்டுகளுக்கு 8 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்தால் மட்டுமே வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்புக்கள் என்பதை உறுதி செய்யமுடியும் எனும்போது இந்தியாவின் வாய்ப்புக்கள், அறிவுத்திறன், சமூக சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால்  இரண்டு இலக்க வளர்ச்சி இந்தியாவின் தேவையாகி உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால், அந்த இலக்கை எட்டுவது மிகச் சவாலானது என்றாலும் கூட நிச்சயமாக எட்டமுடியாதது அல்ல என்பது மட்டும் உண்மை.  


கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 
5 கருத்துகள்:

 1. அருமை தோழர்
  இரண்டுகோடி வேலைவாய்ப்புகள் முடியுமா ?
  முடிந்தால் மகிழ்வே

  பதிலளிநீக்கு
 2. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  Tamil News | Latest News | Business News

  பதிலளிநீக்கு
 3. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி இதை போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் Break Free Online tamil news

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...