• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், பிப்ரவரி 25, 2016

  இனி விவசாயம் இப்படியும் மாறலாம்..!

  ரு காலத்தில் நெருப்பில்லாமல் உணவு சமைக்கமுடியும் என்று சொல்லியிருந்தால், சொன்னவரை பைத்தியம் என்று முத்திரை குத்தியிருப்பார்கள். ஆனால், இன்று பெரும்பாலான கிச்சனில் இண்டக்சன் அடுப்பு வந்து உட்கார்ந்து கொண்டது. அங்கு நெருப்பும் இல்லை, புகையும் இல்லை. ஆனால், சமையல் நடக்கிறது. 
    
  அதேபோல்தான் இப்போது நிலமில்லாமல் விவசாயம் செய்யலாம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், வருங்கலத்தில் இந்த தொழிநுட்பம் சர்வ சாதாரணமாக நடக்கும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் படுஜோராக நடந்து கொண்டிருக்கின்றன.


  நமக்கு விவசாயம் என்றாலே நிலம் வேண்டும். ஆனால் நிலத் தட்டுப்பாடு மிக்க ஜப்பான்காரர்கள் நிலத்துக்கு எங்கே போவார்கள். உணவு கண்டிப்பாக எல்லா மக்களுக்கும் வேண்டும். அதற்கு விவசாயம் வேண்டும். விவசாயத்திற்கு நிலம் வேண்டும். ஆனாலும் அங்கு நிலம் இல்லை. நிலமே இல்லாத விவசாயத்தை நடத்தினால் என்னவென்று சிந்தித்தார்கள். அதன் விளைவுதான் இந்த தொழிநுட்பம்.

  இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது செயல்படாத நிறுவனம் ஒன்றை. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு கம்ப்யூட்டரில் 'ஃபிளாப்பி டிஸ்க்' என்ற ஒரு வஸ்து பயன்படுத்தப் பட்டது. இன்றைய மெமரி கார்டுகளுக்கெல்லாம் முன்னோடி அது.


  டாக்குமெண்ட் ஃபைல்கள் சேமித்து வைப்பதில் பெரும் பங்காற்றியது. ஒரு பிளாப்பி டிஸ்கில் 2.88 எம்.பி. டாக்குமெண்டுகளை சேமித்துவைக்க முடியும். இன்றைய மெமரி கார்டுகளோடு இதை ஒப்பிட்டால் யானையோடு சித்தெறும்பை ஒப்பிடுவது போலத்தான்.

  பின்னாளில் சிடி பயன்பாட்டுக்கு வந்தப்பின் இவற்றின் தேவை முற்றிலும் குறைந்து போனது. இவற்றை தயாரித்த நிறுவனங்கள் தொடர்ந்து மூடுவிழா கண்டன. அப்படி மூடிய ஃபிளாப்பி டிஸ்க் தயாரிப்பு கம்பெனியில்தான் இந்த நவீன விவசாயத்தை நடத்திக் கொண்டிருக்கிறது பிரபலமான தோஷிபா நிறுவனம்.    


  இந்த கம்பெனியின் உபயோகம் இல்லாத சேமிப்பு கிடங்குகளில்தான் இந்த விவசாயம் நடக்கிறது. முற்றிலும் அடைக்கப்பட்டு வெளிக்காற்று, வெப்பம், சூரியஒளி எதுவும் வராத இடத்தில் எல்லாமே செயற்கையாக உருவாக்கி விவசாயம் செய்யப்படுகிறது. 

  சூரிய ஒளிக்குப் பதிலாக ட்யூப்லைட் மற்றும் எல்இடி விளக்குகளை வைத்து சூரியஒளியில் கிடைக்கும் அத்தனை சமாச்சாரங்களையும் கொண்டு வந்து விடுகிறார்கள். மினரல் வாட்டர் போன்ற சுத்தமான நீர் செடிகளுக்கு பாச்சப்படுகிறது.  காற்றுக்கூட கண்ட்ரோல் செய்யப்பட்டு சுத்தமான காற்றே தரப்படுகிறது. வெப்பநிலையும் செடிகளுக்கு உகந்த அளவில் கொடுக்கப்படுகிறது. மண்ணும் செயற்கை மண் மற்றும் தேங்காய் நார் துகள்கள்தான்.


  இந்த முறையில் கீரை, தக்காளி, லெட்டுஸ் போன்ற காய்கறி செடிகளை வளர்கிறார்கள். இப்படி வளர்ப்பதால் பூச்சித் தாக்குதல் முற்றிலுமாக குறைக்கப்படுகிறது. ஒன்றன் மீது ஒன்றாக பல அடுக்குகள் வைத்து விவசாயம் செய்வதால் குறைந்த இடத்தில் அதிக பயிர் விளைவிக்கப்படுகிறது.

  மருத்துவத்திற்கு பயன்படும் 'லெட்டுஸ்' இலைகள் ஒரு நாளைக்கு 8,400 என்ற கணக்கில் ஆண்டுக்கு 30 மில்லியன் இலைகள் என்று கணக்கிட்டு பயிர்செய்து வருகிறார்கள். இதன்மூலம் வருடத்திற்கு 100 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்று தோஷிபா தெரிவிக்கிறது. மேலும் மூலிகைகள் வளர்ப்புக்கு இந்தமுறை ஏற்றது என்கிறது.


  இந்த விவசாய முறை மிகப் பெரிய வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். இந்த வெற்றி பெற்றதையடுத்து தற்போது ரஷ்யா போன்ற விவசாயத்திற்கு ஒத்துவராத கடுங்குளிர் நாடுகள் கூட இந்த தொழிநுட்பத்தில் விவசாயம் செய்ய முன்வந்திருக்கின்றன.

  தற்போது கீரை  தக்காளி போன்ற சிறிய வகை செடிகளை இந்த முறையில் வளர்க்கப்படுகின்றன. வருங்கலத்தில் மற்ற பயிர்களும் இந்த முறையில் வளர்க்கமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். எப்படியோ விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறிவரும் இந்தக் காலத்தில் இந்த நவீன விவசாயமுறை கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்! இதன் சாதக பாதகங்களை..! 
  27 கருத்துகள்:

  1. உண்மைதான் நண்பரே இனிவரும் காலங்களில் எதுவும் நடக்கும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் மூளையை பயன்படுத்தியது வெறும் 10 சதவீதம் மட்டுமே.... இன்னும் இருக்கின்றதே பாக்கி 90 சதவீதம்......
   தமிழ் மணம் 2

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சரியாகத்தான் சொன்னீர்கள். 200 வருடத்திற்கு முன்பே ஒரு மன்னன், மனிதன் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டான். இனி புதிதாக கண்டுபிடிக்க ஒன்றுமே இல்லை என்று அறிவித்தானாம். நினைத்துப் பாருங்கள் இன்றைய கண்டுபிடிப்புகளில் 10 சதவீதம் கூட அன்றைக்கு இல்லை. அதேபோல் இன்றைய நிலையை பார்க்கும்போது கண்டுபிடிப்புகள் முழுமையடைந்தது போல் தெரியும். ஆனால், அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  2. காலத்தின் கட்டாயம் ,இந்த முறை நம் நாட்டில் வரும் நாள் தொலைவில் இல்லை :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இயற்கை முறை விவசாயம்தான் மிக நல்லது. இந்தமுறை நமக்கு வேண்டாம். நண்பரே!

    நீக்கு
  3. புதிய தகவல். உற்சாகமூட்டும் தகவல். இந்த மாதிரிச் செய்திகளைப் படிக்கும்போது இந்த மாதிரிச் சிந்தனைகள் நம் நாட்டினருக்கு வரவில்லையே, இந்த மாதிரி கண்டுபிடிப்புகள் நம் நாட்டினர் செய்யவில்லையே என்று தோன்றுகிறது. நாம் அரசியலிலும், சுயநலத்திலும் பொழுது போக்குகிறோம் - தொலை நோக்குப் பார்வை ஏதுமில்லாமல்.

   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வேலைக்காகவே தயாரிக்கப்படுபவர்கள் இந்தியர்கள். அவர்களால் சுயமாக சிந்திக்க முடியாது. அதனாலே பெரிய கண்டுபிடிப்புகள் சமீபகாலங்களில் வருவதில்லை.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  4. அநேகமாக நமது நாட்டில் சில ஆண்டுகளிலேயே விவசாய நிலம் என்பதே இல்லாமல் போய்விடுவதற்கான சாத்தியக்கூறுகள்அதிகம்
   அனைத்துமே மனிதர் வாழிடங்களாய் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

   படங்களைப் பார்ப்பதற்கே ஆச்சரியமாகஇருக்கிறது நண்பரே

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மாறாமல் இருப்பதே நல்லது.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  5. எதற்கு இத்தனை சிரமம்? மாத்திரைகளாய் தந்துவிட்டால் தேவலை...
   எகிப்தில் நிலத்தில் தேங்காய் நார்களை புதைத்து நீர்தேக்கி விவசாயம் செய்வதாய் வாசித்தேன்..
   ஒன்றுமில்லாதவர்கள் செய்யட்டும் அதெல்லாம்...என்னவளம இல்லை இந்த திருநாட்டில்..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மாத்திரை தயாரிக்க தாவரங்கள் வேண்டுமல்லவா..?
    வருகைக்கு நன்றி !

    நீக்கு
  6. பதில்கள்
   1. உண்மையில் புதுமைதான்..!
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  7. விளைநிலம் விவசாயத்தை இழந்துவரும் நேரத்தில், இப்படி ஒரு புதுமை நல்லதுதான். ஆனால், இதில் செயற்கைத்தனமாக ஏதுமில்லை என்று எப்படித் தெரிந்து கொள்வது? நல்ல பதிவு உங்கள் வாசகப்பரப்பு வளர்வதன் ரகசியம் புரிந்தது. வளர்க, வாழ்க்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இதில் எல்லாமே செயற்கைதான் அய்யா! இன்குபேட்டரில் வைத்து பொத்திப் பொத்தி வளர்க்கும் ஒரு குழந்தைப் போல்தான் இந்த வளர்ப்பு முறையும். குழந்தை இயற்கையாக உருவானால் செலவு எதுவும் இல்லை. அதுவே செயற்கை முறையில் உருவாக்கினால் சில லட்சங்கள் செலவாவது போலத்தான், இந்த தொழில்நுட்பமும். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் விளைப்பொருட்களின் விலை மிக அதிகமாய் இருக்கும். கண்டிப்பாக ஏழைகள் வாங்க முடியாது.

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  8. இது கிட்டத்தட்ட இங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சிறிய இடத்தில், மொட்டை மாடியில் கூட அந்தந்த வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் விளைவிப்பது உண்டு. ஆனால் சூரிய ஒளி, தண்ணீருடன். ஜப்பானியர்களின் இந்த விவசாயம் சிலவருடங்கள் முன்பே பேசப்பட்டது.

   ஜப்பானியர்கள் இடம் கருதிதான் பொன்சாய் என்று எல்லாவற்றையும் சுருக்கினார்கள். இவை வெளியில் வளர்க்கப்பட்டாலும், குறைந்த மண்ணில், அதிக நீரூட்டம், சத்து ஊட்டப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். வீட்டினுள் பொன்சாய்யும் உண்டுதான். இப்போது இது போன்ற விவசாயம். ஒரு பக்கம் இது புதுமை என்று போற்றப்பட்டாலும் மறுபக்கம் உண்டு.

   இது ஜப்பானியர்களின் முறை. அவர்கள் வீடும் சிறியதுதான். எல்லாமே! இப்படித்தான் அமெரிக்காவுடன் போட்டி போட்டு ஆப்பிள் உற்பத்தியில் அமெரிக்கர்களை விட அதிக விளைச்சல் கொடுத்து முதலிடம் வகித்தார்கள்.

   அரசமரம் நம்மூரில் எவ்வளவு பெரிதாக இருக்கும்? பார்க்கவே அழகாய். அதே அரசமரம் சுருக்கப்பட்டு (மினியேச்சர் அழகுதான் ஆனால் இப்படியானது அல்ல) சிறியதால் ஒரு தொட்டியில் என்று பார்க்கும் போது மனம் என்னவோ வேதனைப்படுகின்றது. சாதாரணமாகப் பிறக்கும் குழந்தை மிகவும் குள்ளமாக வளர்ந்தால் நமக்கு எவ்வளவு வேதனை வருகின்றது இல்லையா? அது போலத்தான். மரங்களும் செடிகளும் கூட குழந்தைகள்தான்.

   இந்த விவசாயம் கூட, ஒரு செடியின் பச்சையம் வருவது எப்படி? சூரிய ஒளி, தண்ணீர், கார்பண்டை ஆக்சைடு இலைகள் இவற்றைக் கொண்டு உணவு தயாரிக்கின்றன. அவை உணவு தயாரிக்கும் போது வெளியிடும் ஆக்சிஜன் நமக்கு எவ்வளவு தேவையாக இருக்கின்றது அதுவும் இப்போது சுற்றுச் சூழல் மாசுபடும் வேளையில். இப்படித் தயாரிக்கும் உணவுதானே நம்க்கு காய்களாக வருகின்றன? இயற்கையாக. இப்போது ஜப்பானியர்களின் இந்த விவசாயத்தில் ஆக்சிஜன் வெளியாகுமா? ஏற்கனவே ஆக்சிஜன் குறைந்துவரும் வேளையில். ஆக்சிஜன் கிளினிக்குகள் உருவாகிவரும் வேளையில்.
   இயற்கையோடு ஒன்றி வாழ்தல் அல்லவா நல்லது. இயற்கைக்கு முரணாக அதை எதிர்த்து நாம் வாழ்ந்தால் அது அழிவைத்தானே தரும்? இட நெருக்கடியால் என்ற ஜஸ்டிஃபிகேஷன் கொடுக்கப்பட்டு நல்லது என்று இப்படிப்பட்ட புதுமைகள் விவசாயத்தில் வந்தாலும், உற்பத்தியில் அமோகமாக இருந்தாலும் இவை எவ்வளவு தூரம் நன்மை பயக்கும்? மனம் ஒப்ப மறுக்கின்றது சகோ...இன்னும் நிறைய பேசலாம் இதைப் பற்றி. நீளம் கருதி இவ்வளவே. நன்றி சகோ

   பதிவு அருமை சகோ.

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பச்சையம் வருவது எப்படி என்று தட்டச்சும் போது வந்துவிட்டது. பச்சையம் கொண்டு உணவு தயாரிக்கின்றன என்று வந்திருக்க வேண்டும்...மாறி வந்ததற்கு மன்னிக்கவும்...சகோ

    கீதா

    நீக்கு
   2. என்றைக்குமே இயற்கை இயற்கைதான். அதன் பக்கத்தில் கூட நாம் போக முடியாது. இயற்கையை மிஞ்சவும் முடியாது. சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல்தான் இதுவும். இயற்கை விவசாயத்தை இது மிஞ்சவே முடியாது.
    வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

    நீக்கு
   3. நீங்கள் சொல்லாமலே மாற்றி படித்துவிட்டேன். தகவலுக்கு நன்றி!

    நீக்கு
  9. The Japanese are experts in turning adversity to advantage. Their country is prone to frequent earth quakes, but they construct quake proof Multi storied buildings with wheels! They keep the fishes fresh and active by putting them in tanks in the boats along with small sharks!! And now the facilities developed for Floppy manufacture like dust proof enclosure etc. are used for fresh vegetable production.

   I am sorry for the comments in English, since Tamil fonts did'nt work suddenly.

   Jayakumar

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு

  10. நிலமில்லாத நாடுகளுக்கு வேண்டுமானால் இது ஒரு வரப்பிரசாதம். நில வளம் உள்ள நமக்கு இது தேவையில்லை என்பது என் கருத்து. நீங்கள் பின்னூட்டத்தில் சொன்னதுபோல் என்றைக்குமே இயற்கை இயற்கை தான். தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  11. நல்ல முயற்சி
   இருப்பினும் செயற்கை விவசாயம் இயற்கை விவசாயம் ஆகாதல்லவா?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  12. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  13. வியப்பூட்டும் தொழில்நுட்பம்! குட்டியூண்டு நாட்டை வாழ்விடமாக வைத்துக்கொண்டு இந்த ஜப்பானியர்கள் என்னவெல்லாம் சாதித்துக்காட்டுகிறார்கள்! புதிய செய்திகள் அடங்கிய அருமையான பதிவுக்கு நன்றி செந்தில்!

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்