• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், செப்டம்பர் 13, 2016

  பெங்களூரின் உண்மை நிலை என்ன?


  பெங்களூர் பற்றி எரிகிறது என்பதுதான் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும் சேதி. உண்மை அப்படிதான் இருக்கிறதா..? கலவரங்கள் நடந்திருக்கின்றன. தமிழர்களின் உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. என்பதெல்லாம் உண்மைதான் மறுப்பதற்கில்லை. இவையெல்லாம் கண்டிக்கத்தக்கவை. ஆனாலும், ஊடகங்கள் காட்டும் அளவுக்கு நிலைமை படுமோசமாக இல்லை என்கிறார்கள் பெங்களூர்வாசிகள். பெங்களூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் இதையேதான் சொல்கிறார்கள். 

  தமிழ் எழுத்தாளரும் மென்பொறியாளருமான வா.மணிகண்டன் அவர்களின் பதிவை படித்தாவது ஊடகங்கள் ஊதி பெரிதாகும் விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக அங்கு கலவரமே நடக்கவில்லை என்று சொல்ல வரவில்லை. நடக்கிறது. ஒரு கூட்டம் இந்த வெறியாட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஆனால், எனது நண்பர்கள் உறவினர்கள் என்று பெங்களுருவில் வசிப்பவர்கள் தங்கள் பகுதியில் எந்த கலவரமும் இல்லை. கன்னட மக்கள் எங்களிடம் மிக அன்பாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

  ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இந்த பிரச்னையை ஊதி மிக பெரிதாக்குகிறதே என்றுதான் அவர்கள் கவலைப்படுகிறார்கள். இதே உண்மையை எழுத்தாளர் வா.மணிகண்டனும் எழுதியிருக்கிறார்.  அவர் பெங்களூரில் பிரச்சனை ஊடகங்கள் காட்டும் அளவிற்கு இல்லை என்று சொல்வதைக்கூட ஊடகங்கள் ஒளிபரப்பு செய்யவில்லை. ஊடகங்கள் இரு மாநிலங்களையும் பதட்டத்தில் வைத்திருக்கவே விரும்புகின்றன, என்பதையே இந்த பதிவு சொல்கிறது. 


  இனி வா.மணிகண்டன் எழுத்துக்களில் அப்படியே..


  பெங்களூரு
   9/13/2016 01:08:00 PM

  நேற்று மதியத்திற்கும் மேலாக ராஜாஜி நகர், மைசூரு ரோடு உள்ளிட்ட இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இன்று காலை நிலவரப்படி மாகடி சாலை, விஜயநகர், சந்திரா லே-அவுட், யஸ்வந்த்புரா, பீனியா, ராஜாஜி நகர், நந்தினி லே-அவுட் உட்பட பதினாறு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. காலை பதினோரு மணி வரைக்கும் குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. நேற்றைய இரவிலும் நகரம் அமைதியாகவே இருந்திருக்கிறது.

  நேற்றிரவு அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது போது நேரலை தமிழ் செய்திக்காக ஒரு தொலைக்காட்சியிலிருந்து அழைத்தார்கள். எம்.ஜி.ரோட்டில் ஆரம்பித்து கோரமங்களா, ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட், மங்கமன்பாளையா, பொம்மனஹள்ளி வழியாக வீட்டிற்கு வந்தேன் என்றும் இந்தப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அசம்பாவிதம் எதுவும் தென்படவில்லை எனவும் வட பெங்களூரில் கலவரங்கள் நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருவதாகச் செய்திகள் வருகின்றன என்று சொல்லிக் கொண்டிருந்த போதே இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள். எழுத்தாளர் சொக்கனுக்கும் இதே அனுபவம்தான். அவர் பிடிஎம் லே-அவுட், சில்க் போர்ட் போன்ற பகுதிகளில் பிரச்சினை இல்லை என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது. தன்னைப் பேசவே அனுமதிக்கவில்லை என்றார். 

  ஊடகங்கள் காரஞ்சாரமான செய்திகளைத்தான் விரும்புகின்றன. 

  தமிழனுக்கும் கன்னடத்தவனுக்கும் பிரச்சினையென்று வரும் போது பெங்களூர்வாசிகளைவிடவும் அதிகம் பாதிக்கப்படப் போவது சாம்ராஜ்நகரிலும், குண்டுலுபேட்டிலும், நரசிங்கபுரத்திலும் என தமிழக கர்நாடக எல்லை முழுக்கவும் ஐந்து ஏக்கரும் பத்து ஏக்கருமாக குத்தகைக்கு இடம் பிடித்து வேளாண்மை செய்து கொண்டிருக்கும் தமிழர்கள்தான். பெங்களூரு மட்டுமே கர்நாடகா இல்லை. பெங்களூரில் வீட்டைப் பூட்டிக் கொண்டு இருந்து கொள்ளலாம். ஒரு மாதம் வேலைக்கு விடுப்பு எடுத்தாலும் கூட எதுவும் ஆகிவிடாது. ஆனால் மேற்சொன்ன பகுதிகளில் இதெல்லாம் சாத்தியமில்லை. விவசாய பூமிகளை அழிப்பதும், டிராக்டர்களை அடித்து நொறுக்குவதும், தமிழ் விவசாயிகளின் கால்நடைகளை நாசம் செய்வதும் நிகழ்ந்தால் அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் கரைந்து போய்விடும். தமிழகத்தில் அதிகபட்சமாக ஐந்து சதவீத கன்னடர்கள் வாழக் கூடும். ஆனால் கர்நாடகத்தில் வாழக் கூடிய தமிழர்களின் எண்ணிக்கை சதவீதத்தில் மிக அதிகம். அவர்களையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு ஊடகங்கள் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

  நேற்றிலிருந்து கருந்தேள் ராஜேஷ், சொக்கன், சிவராம் உள்ளிட்ட பெங்களூர் நண்பர்களின் ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்த்த போது அவர்கள் சொல்வதையெல்லாம் வெளியில் இருப்பவர்கள் யாரும் நம்புவதாகவே தெரியவில்லை. எனக்கும் இதே அனுபவம்தான். இதே ஊரில் வாழ்கிறவர்கள் சொல்வதைவிடவும் ஊடகங்கள் சொல்வதைத்தான் மனம் நம்புகிறது. இவர்கள் பெங்களூருவின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கிறவர்கள். சொக்கன் இத்தகையவர்களிடம் விவாதிக்க முடியாது என்று தான் எழுதியவற்றையெல்லாம் அழித்துவிட்டார். கருந்தேள் ராஜேஷ் இன்றைக்கும் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

  ‘கே.பி.என் பேருந்துகளை எரித்தது உண்மையில்லையா?’ ‘தமிழ் வண்டிகளை கன்னட வெறியர்கள் தாக்கியது உண்மையில்லையா?’ ‘தமிழ் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கப்பட்டது உண்மையில்லையா?’ என்று கேட்டால் இதையெல்லாம் யாரும் மறுக்கவில்லை. நடந்திருக்கின்றன. மறுத்து யாரைக் காப்பாற்றப் போகிறோம்? எச்சரிக்கையாக இருக்க வேண்டியதில்லை என்றும் யாரும் சொல்லவுமில்லை. ஆனால் ஊடகங்களில் இங்கேயிருக்கும் நிலைமையைவிடவும் அதீதமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

  நன்றாகத் தெரிந்தவர்கள் கூட ‘பொறுப்பில்லாமல் எழுதாதீர்கள்’ என்றும் ‘சப்பைக் கட்டு கட்டாதீர்கள்’ என்றும் சொல்லும் போதுதான் வேதனையாக இருக்கிறது. பிரச்சினைகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனாலும் பதற்றப்படாமல் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வதுதான் பொறுப்பானதாக இருக்க முடியுமே தவிர, ‘இங்கே எங்களை எல்லாம் கொல்லுகிறார்கள்; அங்கே நீங்கள் கன்னடத்தவர்களை அடித்து நொறுக்குங்கள்’ என்று வெளியூர்க்காரர்களை உசுப்பேற்றுவது பொறுப்பாக இருக்காது. 

  பெங்களூருவில் பதற்றம் இருக்கிறது. வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த பெங்களூருவிலும் இப்படி நடக்கவில்லை என்பதுதான் உண்மை. அலுவலங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறையளிக்கப்பட்டிருக்கின்றன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அசாதாரண அமைதி நிலவுகிறது.

  தமிழக வாகன ஓட்டிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் லாரி ஓட்டுநர்கள். ஆனால் வீடுகளில் வசிப்பவர்கள் மீதும் பணியாளர்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் இல்லை. டயர்களை எரித்து நடத்தப்பட்ட போராட்டங்களைக் கூட வாட்ஸப்பில் வாகனத்தை எரித்ததாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட். அங்கே டயர்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வாட்ஸப்பில் தமிழக வண்டி எரிக்கப்பட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.

  நேற்றிரவு பத்தரை மணிக்கு பெங்களூரில் வாழும் தமிழ் செய்தியாளர் ஒருவரிடம் பேசிய போது ‘மத்தியானம் வரைக்கும் ராமேஸ்வரத்தில் கன்னடத்துக்காரர் தாக்கப்படுவதைத்தான் திரும்பத் திரும்ப ஒளிபரப்பினாங்க...கவனிச்சீங்களா?’ என்றார். அலுவலகத்தில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை. வெறியேற்றியிருக்கிறார்கள். மதியத்திற்கு மேலாக பிரச்சினைகள் ஆரம்பித்திருக்கின்றன. இன்று காலையிலிருந்து கவனித்ததில் நேற்று பெங்களூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டை திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ‘பூர்விகா மொபல் நிறுவனத்தை உடைத்தார்கள்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஹிண்ட் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்து அணைத்துவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டேன்.

  அதே ஊடக நண்பரிடம் ‘நாளைக்கு நிலைமை சகஜமாகிடுமா?’ என்று கேட்ட போது ‘சந்தேகம்தான்’ என்றார். நல்லவேளையாக நேற்றைய தினத்தைவிடவும் இன்றைய தினம் பரவாயில்லை. அலுவலகத்தில் மிகக் குறைவானவர்களே வந்திருக்கிறார்கள். நகரப் பேருந்துகள் ஒன்றிரண்டு மட்டும் ஓடிக் கொண்டிருக்கின்றன. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சில மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், ஒன்றிரண்டு உணவு விடுதிகள் செயல்படுகின்றன. ஆட்டோக்கள், மகிழ்வுந்துகள், இருசக்கர வாகனங்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. திரும்பவும் சொல்கிறேன். இது ஓசூர் பிரதான சாலை, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதியம் பனிரெண்டு மணியளவிலான நிலவரம். ‘தெருவுக்குள் சுற்றிப்பார்த்துவிட்டு வந்து நகரமே நல்லா இருக்குன்னு எழுதுறியா?’ என்று நக்கலாகக் கேட்டவர்களுக்காக மேற்சொன்ன இடங்களைத் தெளிவாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட பதினேழு கிலோமீட்டர் தூரம் இதுதான் நிலவரம். வட பெங்களூரில் நிலவரம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

  கன்னட வெறியர்களின் வெறியாட்டம். இவர்கள்தான் பிரச்சனையின் மூலம்.
  இந்தக் கலவரத்தில் அரசியல் கட்சிகள் பின்னணியில் இருக்கின்றன; சில இயக்கங்கள் வலு சேர்க்கின்றன, அவர்கள்தான் இதையெல்லாம் ஒருங்கிணைக்கிறார்கள் என்றெல்லாம் நிறையத் தியரிகள் வந்து கொண்டேயிருக்கின்றன. எதை நம்புவது எதை விடுவது என்று தெரியவில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒன்று- யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நானெல்லாம் வக்காலத்து வாங்கி எழுதி எதுவும் நடக்கப் போவதில்லை. முடிந்தளவுக்காவது பதற்றத்தைக் குறைக்கலாம் என்றுதான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். அதேசமயம் பதற்றத்தைக் குறைக்க விரும்புகிறேன் என்பதற்காக எதையும் இட்டுக்கட்டியும் சொல்லவில்லை. இடங்கள் நேரம் குறித்துத் தெளிவாக எழுதியிருந்தேன். எழுதியிருக்கிறேன். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி தமிழனை அடி வாங்கி வைக்க விரும்புகிறவனாகவும் நான் இல்லை. என்னை நம்பலாம்.

  ஒன்றை மட்டும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும். Be safe. அதே சமயம் Be very very responsible and dont believe everything and everyone.  40 கருத்துகள்:

  1. குஜராத்தில் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கு கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு தான் காரணம் என் கூறப்பட்டதைப் போல் ஆபத்தானதாகவும், அறுவறுக்கத் தக்கதாகவும் கன்னட ஊடகங்களின் இந்தப் பிரச்சாரம் அமைந்திருக்கிறது

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கன்னட ஊடகங்கள் மட்டுமல்ல. நம்மவர்களும் அப்படித்தான்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  2. கன்னடக்கார்கள்,தமிழர்களின்மீது காழ்புணர்வு அதிகம்,காரணம் தமிழர்களின். புத்திசாலித்தனம்,திறமை ,மீது எரிச்சல் உண்டு,நேருக்கு நேர் சண்டை அவர்களுக்கு தோல்விதான் கிடைக்கும்,,,இப்படி வாய்பை பயன் படுத்த தவற விடமாட்டார்கள்.( அவர்களுக்கு தாக்கும் வாய்ப்பு கிடைக்கும் பொது) இது கர்நாடக வாழ் தமிழனுக்கு தெரிந்த உண்மை,,,,
   இவர் கூறும் முடிமறைப்பது,ஒத்திவை,பெரிதுபடுத்தாதே,வேலை க்குஆவாது,அடுத்த கட்டத்துக்கு,போக வேன்டும்,, பாதுகாப்பு இப்பொழுது இருப்பதற்கு காரணமே. தமிழகத்தின். அழுத்தம், சக்தி,இது தான் காரணம்......இல்லையேல் சாவடிப்பான்,கன்னடிக மக்கள்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இல்லை. அங்கிருக்கும் கன்னட மக்களுக்கு இதில் உடன்பாடில்லை. இது ஒரு சிறிய தீவிர கன்னட வெறியர்கள் செய்யும் அட்டூழியம். நமது தமிழ்நாட்டிலேயே சில வெறிபிடித்த தமிழ் அமைப்புகள் சில செயல்களை செய்யும்போது இங்கிருக்கும் தமிழர்களுக்கு அதில் சிறிதும் உடன்பாடு இல்லாமல்தானே செய்கிறார்கள். அதேபோல்தான் அங்கும்.

    நீக்கு
  3. கன்னடக்கார்கள்,தமிழர்களின்மீது காழ்புணர்வு அதிகம்,காரணம் தமிழர்களின். புத்திசாலித்தனம்,திறமை ,மீது எரிச்சல் உண்டு,நேருக்கு நேர் சண்டை அவர்களுக்கு தோல்விதான் கிடைக்கும்,,,இப்படி வாய்பை பயன் படுத்த தவற விடமாட்டார்கள்.( அவர்களுக்கு தாக்கும் வாய்ப்பு கிடைக்கும் பொது) இது கர்நாடக வாழ் தமிழனுக்கு தெரிந்த உண்மை,,,,
   இவர் கூறும் முடிமறைப்பது,ஒத்திவை,பெரிதுபடுத்தாதே,வேலை க்குஆவாது,அடுத்த கட்டத்துக்கு,போக வேன்டும்,, பாதுகாப்பு இப்பொழுது இருப்பதற்கு காரணமே. தமிழகத்தின். அழுத்தம், சக்தி,இது தான் காரணம்......இல்லையேல் சாவடிப்பான்,கன்னடிக மக்கள்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மதுரையிலிருந்து வருகிறேன் என்று சொன்னாலே மற்ற ஊர்களில் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். அங்கு (மதுரையில்) 24 மணி நேரமும் யாரோ ஒருவனை வெட்ட ஒரு கூட்டம் அருவளோடு துரத்திக்கொண்டே இருக்கும் என்று நினைக்கிறார்கள். அதையே கேளிவியாக கேட்கவும் செய்வார்கள். ஆனால் இங்கிருப்பவர்களுக்குத்தான் தெரியும் சினிமாவில் காட்டுவதுபோல் மதுரை ஒன்றும் மோசமில்லை என்பது. இதே நிலைதான் பெங்களூருவிலும் இப்போது. அளவுக்கதிகமாக அது பெரிதுபடுத்தி ஊடகங்கள் காட்டிக்கொண்டிருக்கின்றன.

    நீக்கு
  4. உண்மையான நிலையை வெளியிட வேண்டும் ஊடகங்கள்....இது இரு மாநிலப்பிரச்சனை...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஊடகங்கள் இன்று பரபரப்புக்காகவே எல்லாவற்றையும் செய்கின்றன.
    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  5. இது தவறானது... மக்கள் வெளியே செல்லாதாலால் தப்பித்துள்ளார்கள்.. அணைவரிடமும் பெயரை கேட்டு அடித்து சம்பவங்களும் மெஜஸ்டிக்கில் நடந்துள்ளது.

   மனித நேயம் வளர்க்களாம் ஆனால் உண்மையை மறைக்க கூடாது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தவறுதான். நடந்தது எதையும் சரியென்று இங்கு வாதிக்கவில்லை. ஊடகங்கள் அதை பூதாகரமாக்குகின்றன என்றுதான் சொல்கிறேன். நானும் அதே துறையில் இருப்பதால்..

    நீக்கு
  6. கர்நாடாகாவில் வசிக்கும் மற்ற மாநில மக்களையும், வட இந்திய மாநில மக்களையும் பாதுக்காக்கும் தார்மிக பொருப்பு மத்திய அரசுக்கு உண்டு்.

   மத்திய அரசு உடனடியாக கர்நாடாகாவை தன் பொருப்பில் ஏற்று இந்திய ராணுவத்தை பாதுகாப்புக்கு நி்றுத்த வேண்டும்.

   பதிலளிநீக்கு
  7. என்னுடைய பதிவுகளை பார்த்து விட்டு பதிலிடவும்... கன்னட மக்கள் நல்லவர்கள் அதை மறுக்க மாட்டேன் ஆனால் யார் யார் செய்கின்றார்கள் என்பது முக்கியம்.


   http://vriddhachalamonline.blogspot.in/2016/09/blog-post_13.html

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. படித்தேன் நண்பரே. அதிலும் ஊடகங்களைத்தானே துணைக்கு இழுத்திருக்கிறீர்கள். ஊடகங்கள் தராத வேறு செய்தி எதுவும் அதில் இல்லையே.

    நீக்கு
  8. ஒவ்வொரு நிகழ்வுக்குப்பின்னும் ஒரு தந்திரம் ஒளிந்திருக்கிறது. அதனால் ஒருவன் லாபமடைகிறான். அவமன் யார்?. சண்டையில் முதலில் அடிப்பவன் தான் புத்திசாலி. நாம் பலமான எதிர்வினையை ஆரம்பத்திலிருந்தே காட்டியிருந்தால் அவன் இந்நேரம் யோசித்திருப்பான். நாம் அடிவாங்கிக் கொண்டு வியாக்கீனம் பேசிக்கொண்டிருக்கிறோம். முதலில் திராவிடத்தைவிட்டு வெளியே வாருங்கள். தமிழ்நாட்டைவிட்டு வேறு எங்கு திராவிடம் பேசினாலும் நம்மை செமத்தியாக உதைப்பான். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் நாம் பல்லிளித்து அடிமையாக இருப்போம்.
   விஜயன்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அடிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கும்பலாக சேர்ந்து சாமானிய மக்களை அடிப்பது ஒன்றும் இன்றைய அறிவு உலகில் பெரிய வீரமில்லை. இன்னொன்று உச்ச நீதிமன்றம் காவிரி ஆணையம் போன்ற எல்லாமே நமக்கு சாதகமாகத்தான் இருக்கின்றன. நமக்கு பாதகமாக எப்போதுமே அவைகள் இருந்ததில்லை. ஏதோ சில வேலையற்ற ரவுடிகள் ஒன்று சேர்ந்து அப்பாவி தமிழர்களை தாக்குவதால் நாமும் தாக்க வேண்டும் என்பது நல்ல தீர்வாகாது. மேலும், தமிழகத்தில் கன்னடர்கள் குறைவு. அங்கோ தமிழர்கள் கிட்டத்தட்ட 30 %. அதனால் இங்கு கன்னடர்களை அடித்தால் அதன் தாக்கம் அங்கு பெருமளவில் இருக்கும். நாமே நமது தமிழர்களின் இன்னலுக்கு வழிவகுத்தவர்கள் ஆகிவிடுவோம்.

    நீக்கு
  9. கலவரம் செய்யும் கருப்பாடுகளைத் தோலுரித்துக் காட்ட வேண்டுமே தவிர ,பதற்றம் அதிகரிக்கச் செய்வது ஊடக தர்மம் அல்ல !

   பதிலளிநீக்கு
  10. ஊடகங்கள் நடுநிலமை காத்து செய்திவெளியிட வேண்டும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை !

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. காவிரி பிரச்சனையைப் பொறுத்தவரை விவசாயிகள் எங்குமே மோதிக்கொள்ளவில்லை. அதை வைத்து அரசியலாகும் சில அமைப்புகளைத்தான் விவசாயத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத லாரிகளையும் பஸ்களையும் கொளுத்திக்கொன்றிருக்கிறார்கள்.

    நீக்கு
  11. ஊடகங்கள் பாஸிட்டிவ் செய்திகளை என்றைக்குப் பிரதானமாக வெளியிட்டிருக்கின்றன? அவர்களுக்குத் தேவை பரபரப்பு.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அதுவும் வெளிவருகின்றன. ஆனால் அது மக்களிடமும் பெரும் வரவேற்பை பெறுவதில்லை. இப்படி செய்திகள்தான் எல்லோரும் படிக்கிறார்கள். அதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

    நீக்கு
  12. ஊடகங்களுக்குத் தேவை பரபரப்புச் செய்திகள்
   வேதனை

   பதிலளிநீக்கு
  13. இவர் கூறுவது முற்றிலும் சரி...ஊடகங்களும் சில..பல அரசியல் கட்சிகளுமே அனைத்தையும் பெரிது படுத்தி காண்பித்து ...பதற்றத்தை உண்டாக்குகின்றன...

   பதிலளிநீக்கு
  14. உணர்ச்சி வசப்படும் அரசியலால் உருப்படாமல் போன கூட்டம் நமது.
   உண்மையை உணர்ச்சி வசப்படாமல் சொன்னதற்கு நன்றி நண்பரே!
   இதை எனது வலைப்பக்கப் பதிவிலும் பகிர்கிறேன். பகிர்ந்தபின் இணைப்பைத் தருவேன். நன்றி. த.ம.5

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி அய்யா. தாராளமாக பதிவிடுங்கள்.!

    நீக்கு
   2. பதிவிட்டு விட்டேன், நன்றியுடன். வணக்கம்.

    நீக்கு
  15. உண்மை தான். தமிழக ஊடகங்கள் தங்கள் விற்பனைக்காக ஈரைப் பேனாக்கி பேனை பூதமாக்கி ஏற்கெனவே பல விஷயங்களில் நடந்து கொண்டவை தான்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இன்று அச்சு ஊடகங்களைவிட காட்சி ஊடகங்களே இந்த விஷயத்தில் முன்னணியில் இருக்கின்றன.

    நீக்கு
  16. நலமா நண்பரே ?...

   உண்மைதான் ! ஊடகங்களின் சமூக பொறுப்பு மற்றும் நடுநிலை ஆகியவையும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியைவையே என்பது என் நெடுநாளைய கருத்து... தலைப்பை பார்த்தவுடன் வாங்கி படிக்க வேண்டும் என்ற வர்த்தக கண்ணோட்டம் மட்டுமே மேலோங்கும் போது பற்றி எரிபவைகளை மட்டுமே காட்டுவார்கள் !

   இத்துடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றவைகளில் பதிவேற்றப்படுவது இன்னும் மோசம் ! நடப்பதை பார்ப்பவர் அவரது மனநிலை மற்றும் புரிதலுக்கு ஏற்ப, எரிவது ஒரு டயர் ஆனாலும் அதனை நெருக்கத்தில் படம் பிடித்து போட்டுவிடுகிறார் !

   நேற்று ஒரு வாட்ஸ் அப் குழுவில் நாகரீகமாக போய்க்கொண்டிருந்த உரையாடல், பெங்களூரு கலவர வீடியோ ஒரு நண்பரால் பதிவேற்றப்பட்டதுடன் அநாகரீகமாய் மாறி, பால்யம் முதல் பாராபட்சம் இல்லாமல் பழகிய நண்பர்கள்கூட தமிழன், கன்னடன் என நொடி நேரத்தில் பிரிந்து ஆபாசமாய் திட்டிக்கொண்டதை கண்டு நொந்தேன் !

   எல்லாமே அரசியல் என்பதையும், இருபக்கமும் மனிதநேயம் கொண்டவர்களின் எண்ணிக்கை கலவரக்காரர்களைவிடவும் அதிகம் என்பதையும் உணர்ந்தால் நலம் !

   பி.கு ! : கலவரங்களை காட்டும் அதே நேரத்தில் இரு பக்க அரசியல்வாதிகளும் தங்களின் அண்டை மாநில சொத்துகளை பாதுகாக்க ஒற்றுமையாய் எடுக்கும் முயற்சிகளையும் காட்டினால் மக்களுக்கு உண்மை நிலவரம் புரியும் !

   நன்றி
   சாமானியன்

   எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
   http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சரியாக கணித்திருக்கிறீர்கள் நண்பரே. அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுகிறேன். நன்றி

    நீக்கு
  17. நண்பரே! உங்களைப் பற்றி ஓரளவு அறிந்தவன் என்னும் முறையில் நீங்கள் அனைத்தும் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் நம்புகிறேன். ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி விடுங்கள்!

   நேற்று, கர்நாடகத்திலிருந்து தமிழர்கள் பேருந்தில் கிளம்பித் தமிழ்நாட்டுக்கு வந்ததாகத் தொலைக்காட்சியில் செய்தி வந்தது. நீங்கள் கூறுவது போல அந்தளவுக்கு அங்கே நிலைமை தீவிரமாக இல்லை எனில் அப்படி அவர்கள் வீடு, வேலை எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கிளம்பி வர வேண்டிய தேவை என்ன?

   நான் வீம்புக்காகக் கேட்கவில்லை. உண்மையிலேயே இது குறித்து உங்கள் கருத்தையும் தகவலையும் தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நண்பரே, உங்களின் கேள்வி மிக நியாயமானதே இதற்கு நிறைய விளக்கங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் அதை தனியொரு பதிவாக எழுதலாம் என்றிருக்கிறேன். ஊடகங்கள் என்ன செய்கின்றன என்பதை தெளிவாக சொன்னால்தான் அனைவருக்கும் புரியும். அடுத்த பதிவு வரை பொறுத்துக் கொள்ளுங்கள்.

    நீக்கு
  18. ஊடகங்கள் ஊடகத் தர்மத்தை இழந்து எவ்வளவோ வருடங்கள் ஆகிவிட்டது. போதாதற்கு இப்போது சமூக வலைத்தளங்களும் சேர்ந்து கொண்டுவிட்டன. இது போன்று ஊதி ஊதிப் பெரிதாக்கி பொறுப்பில்லாமல் அறிவிலித்தனமாக நடந்து கொள்வதற்கு. பரபரப்பிற்காக எழுதுவது என்றே ஆகிவிட்டது. எங்கள் இருவரது உறவினர்களும் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் கூறியதும் மணிகண்டன் அவர்கள் சொல்லியிருப்பது போலத்தான். அவர்கள் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை. இது சாதாரண மக்கள் கிளப்பிவிடுவது இல்லை. ஒரு சில அரசியல் ஆதாயங்களுக்காக க் கிளப்பிவிடப்படுவது.

   இங்கு மதுரைத் தமிழன் அவர்களின் கட்டுரையும் இதே போன்றுதான் மிக அழகாக சொல்லியிருக்கிறார். மனசு குமார் அவர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தித்தான் கட்டுரை எழுதுகிறார் என்றும் தெரிந்து கொண்டோம். வலைப்பதிவ நம் நண்பர்கள் அருமையாக நடு நிலைமையோடு எழுதுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுத்தின் தர்மத்தை அழகுற நிலைநாட்டுவது மனதிற்கு மகிழ்வாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. முத்துநிலவன் ஐயா/அண்ணா அவர்களின் கட்டுரையும் வெகுச் சிறப்பு! மீண்டும் நமது அன்பார்ந்த வலைப்பதிவர்கள் எவ்வளவு அழகாகச் சிந்திக்கின்றார்கள். ஆனால் சமூகவலைத்தளங்களும் ஊடகங்களும் இப்படி ஊதி ஊதிப் பெரிதாக்கி இரு மாநில வன்முறையாளர்களையும் உணர்வு ரீதியாக உசுப்பேத்துகின்றனவே என்று மனம் வேதனையுறுகிறது

    நீக்கு
  19. நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களே, ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் உங்களுடைய இந்த பதிவினை மேற்கோளாக தனது பதிவினில் (வளரும் கவிதை) சொல்லி இருக்கிறார். அதில் நான் எழுதிய கருத்துரை இங்கே.

   ///
   ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். பெங்களூரு கலவரம் குறித்து நன்றாகவே சொன்னீர்கள். இனி பெங்களூருவில் மற்றவர்கள் தொழில் முதலீடு, வாழ்க்கை என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.

   வலைப்பதிவர் வா.மணிகண்டன் பெங்களூரு கலவரம் பற்றி முழுமையாக பதிவிடாமைக்கு, அவர் சூழ்நிலை, அங்கேயே ‘செட்டில்’ ஆகி விட்டதும் காரணம் எனலாம். இத்தனை லாரிகள், பஸ்கள் எரிக்கப்பட்டும், தமிழர்கள் அகதிகளாக வெளியேறியும் அங்கே ஒன்றுமே நடக்கவில்லை என்றால் எப்படி? தமிழன் தமிழில் பேசவே பயப்படும் சூழ்நிலைதான் இப்போது அங்கு நிலவுகிறது. நாளை (16.09.16) தமிழ்நாட்டில் நடக்கும் கடையடைப்பு எதிரொலியாகவும் பெங்களூரில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புகள் உண்டு.

   டீவி சேனல்கள் ஒரு மணிக்கு ஒருதரம் செய்திகள் வாசிப்பதால், அவைகள் பெங்களூரு கலவரத்தை திரும்பத் திரும்ப ஒளிபரப்புவது போன்று தோன்றுகிறது. உண்மையில் அவைகள் செய்தியைச் சொன்ன பிறகுதான் பெங்களூரு உண்மை நிலவரமே தெரிய வந்தது. கலவரத்திற்கு முக்கிய காரணம் கன்னட தீவிர அமைப்பு குழுக்களின் நெட் ஒர்க் செய்தி பரிமாற்றம்தான்.

   அங்கே நடப்பது ‘கவுடா’ அரசியல். அவர்களைத் தவிர வேறு யார் முதல்வராக இருந்தாலும், இந்த தீவிர கன்னட அமைப்பினர், காவிரியை சாக்கிட்டு கலவரம் செய்வது வரலாறு. மத்திய மந்திரி சதானந்த கவுடாவின் தமிழர்களுக்கு எதிரான பேச்சை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கவும்
   ///

   பதிலளிநீக்கு
  20. நல்லதொரு பகிர்வு. இன்றைக்கு பல பிரச்சனைகளை வளர்ப்பதே ஊடகங்கள் தானே....

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்