Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பியர் கிரில்ஸ் : சாகஸம் இவர் மூச்சு

மேஸான் காடாக இருந்தாலும் சரி; ஆர்டிக் பனியாக இருந்தாலும் சரி; சஹாரா பாலைவனமாக இருந்தாலும் சரி; ஒற்றை ஆளாக கடந்து வருபவர்தான் பியர் கிரில்ஸ்...!

இங்கெல்லாம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா இருக்கும்...?! கண்ணுக் கெட்டிய தூரம் வரை கட்டாந்தரை தான் கண்ணில் படும். கொதிக்கும் வெயில், உறைய வைக்கும் குளிர்.  இதில் நடந்து, கண்ணில் தட்டுப்படும் பாம்பு, பல்லி, புழுக்களை சாப்பிட்டு உயிரோடு தப்பி வருவது எப்படி என்பதை, ஒவ்வொரு எபிஸோடிலும் நமக்கு சொல்லித் தருவதுதான் இவர் வேலை!

பியர் கிரில்ஸ்
 டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். சாகஸத்திற்காகவே பிறந்த இவர் வாழ்நாளில் நிஜமாக செய்த சாதனைகள் நிறைய...!

வட அயர்லாந்தில் 1974-ல் பிறந்தவர் பியர். சாகஸப் பயணி, எழுத்தாளர், உற்சாகம் தரும் பேச்சாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தலைமை சாரணர் என்று பல முகங்கள் கொண்டவர். இவரது 8 வயதில் இவரின் தந்தை எவரெஸ்ட் சிகரத்தின் படம் ஒன்றை கையில் கொடுத்தார். 'அந்தப்படம்தான் தன்னை சாகஸம் நோக்கி அழைத்துச் சென்றது' என்கிறார் பியர். 1998 மே 16-ல் எவரெஸ்ட் சிகரத்தை உச்சியை அடைந்த போது பியர் கிரில்ஸ்தான் உலகிலேயே மிகச்சிறிய வயதில் எவரெஸ்ட் ஏறியவர். அப்போது அவரின் வயது 23. அதுவொரு புதிய கின்னஸ் சாதனை!

அந்த சாதனை நீண்ட நாள் நீடிக்கவில்லை. 2001-ம் ஆண்டு நேபாளத்தைச் சேர்ந்த டெம்பா ட்ய­ரி என்ற 16 வயது சிறுவன் எவரெஸ்ட் தொட்டதுதான் இப்போதைக்கு இளவயது சாதனை. ஆனாலும் பிரிட்டனைச் சேர்ந்தவர்களில் குறைந்த வயது சாதனை இவருடையதுதான்.

 25,000 அடி உயரத்தில் உணவு
எட்மண்ட் ஹிலாரி "ஏற முடியாத சிகரம்' என்று கூறிய 'அமா டாப்லாம்' சிகரத்தையும் இவர் ஏறிப் பார்த்து விட்டார். உலகிலேயே மிக உயரமான இடத்தில் வெட்டவெளியில் முறையான இரவு உணவை முடித்து சாதனைப் புரிந்தார். இதற்காக 25,000 அடி உயரத்தில் ஹாட் ஏர் பலூனில் பறந்தபடி சாப்பிட்டு கட்டியுள்ளார்.

 200 முறைக்கு மேல் பாராசூட்டில் இருந்து குதித்திருக்கிறார். இது போல் இன்னும் நிறைய...! பியர் கிரில்ஸின் முழுப் பெயர் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ் என்பது. கிரில்ஸ் குழந்தையாக இருக்கும் போது இவரின் அக்கா 'பியர்' (கரடி) என்று இவரை செல்லமாக அழைத்ததையே தனது பெயராக்கிக் கொண்டார்.


சிறுவயதிலேயே தனது தந்தையிடம் இருந்து மரம் ஏறுவதற்கும் படகில் செல்வதற்கும் கற்றுக் கொண்டார். டீன் ஏஜ் பருவத்தில் கராத்தே பயின்று பிளாக் பெல்ட் பெற்றார். அதன்பின் யோகாவிலும் சீனக் கலையான நிஞ்சுட்சூவிலும் முழுத் தேர்ச்சிப் பெற்றார். சிறுவயதிலேயே ஸ்கவுட்டில் சேர்ந்தார். இன்று இவர்தான் உலக ஸ்கவுட்டின் தலைவர். அதாவது தலைமை சாரணர். ஆங்கிலம், ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச் மொழிகள் இவருக்கு அத்துப்படி. 2000-ம் ஆண்டில் ஷாரா கிரில்ஸ் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவருக்கு ஜெஸ்ஸீ, மராமடுகே, ஹக்கிள் பெர்ரி என்ற மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.

பள்ளிப் படிப்பு முடித்தவுடன் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது கிரில்ஸின் கனவு. இதற்காகவே சிக்கிம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் பகுதிகளிலும் இமயமலையிலும் ஹைக்கிங் செய்து வந்தார். பின்னர் யுனைடெட் கிங்டம் சிறப்பு படையில் சர்வைவல் இன்ஸ்பெக்டராகவும், பேட்ரோல் மெடிக்காகவும் பணிபுரிந்துள்ளார்.

1996-ல் கென்யாவில் ஃப்ரீஃபால் பாராசூட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது விபத்து ஏற்பட்டது. பாராசூட்டின் மேற்பகுதி 1,600 அடி உயரத்தில் வரும் போது கிழிந்து விட்டது. இதனால் தரையில் வேகமாக வந்து மோதி விழுந்தார். அவர் மேல் பாராசூட் விழுந்தது. முதுகெலும்பில் மூன்று உடைந்து போய் விட்டது. இவரின் கன்டிஷ­னைப் பார்த்த டாக்டர்கள் இவர் எழுந்து நடப்பது சந்தேகமே!என்றனர். ஆனால் தன்னம்பிக்கை நிறைந்த கிரில்ஸ் 18 மாதங்களில் எழுந்து நடக்கத் தொடங்கினார். அதோடு நிற்கவில்லை.

தனது சிறுவயது லட்சியமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். முதுகெலும்பு உடைந்து இரண்டு வருடத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்தார்.

அதன்பின் பல காயங்கள், அறுவை சிகிச்சைகள் எதற்குமே கிரில்ஸ் கலங்கவில்லை. தனது சாகஸத்தை நிறுத்தவில்லை. ஆபத்துக்கள் இவரைக் கண்டு ஓடின. மனித நடமாட்டமே இல்லாத, உலகின் பார்வையில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் தன்னந்தனியாக ஒரு மனிதன் மாட்டிக் கொண்டால் அவன் எப்படி தப்பி வருவது? அவன் உயிர் வாழ என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை விலாவாரியாக காட்டுவதுதான் இவர் நிகழ்ச்சியின் நோக்கம்.

இவர் உயிரோடு இருக்கும் பூச்சிகள், புழுக்கள், தவளைகள், நத்தைகள், மீன்கள், பல்லிகள் எல்லாவற்றையும் அப்படியே  சாப்பிடக் கூடியவர். புரதம் நிறைந்த இந்த உணவை சாப்பிட்டால்தான் காட்டில் உயிர் வாழ முடியும் என்பார். அதனால் எல்லாவற்றையும் கேமரா முன் கடித்துச் சாப்பிடுவார். பார்க்கும் நமக்குத்தான் குமட்டும்!


ஒருமுறை சஹாரா பாலைவனத்தைக் கடக்கும் போது தண்ணீர் கிடைக்காமல் தனது  சிறுநீரை குடித்தார். இறந்து கிடக்கும் ஒட்டகத்தின் வயிற்றை அறுத்து அதற்குள் இருக்கும் தண்ணீரைக் குடித்தார். இக்கட்டான சூழலில் எப்படி உயிர் வாழ்வது என்பதை காண்பிப்பதற்காக இந்த மனிதர் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இவை எல்லாம் 'பார்ன் ஸர்வைவர்' என்ற டிவி தொடராக ஒளிபரப்பானது. அதுதான் தற்போது ஆசியாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு டிஸ்கவரி சேனலில் 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்று ஒளிபரப்பாகி வருகிறது.

இவரைப் பற்றிய சர்ச்சைகளுக்கும் அளவில்லை. ஒரு தனிமனிதனை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எப்படி காட்டில் தவிக்க விடலாம்? என்று ஒரு சர்ச்சை எழுந்தது. இதற்கு பின்னர்தான் நிகழ்ச்சியின் துவக்கத்தில் பியர் கிரில்ஸூக்கு தனி மனித பாதுகாப்பு விதிகளின் படி உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று துவங்கும் முன் போடத் தொடங்கினார்கள்.

மனைவி ஷாரா கிரில்ஸ் உடன்
பியர் கிரில்ஸ் ஒபெராவின் ஃப்ரே டாக் ஷோ முதற்கொண்டு உலகின் பிரபலமான அத்தனை டாக்ஷோக்களிலும் பேசியுள்ளார். விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவர் எழுதிய முதல் புத்தகம் "ஃபேசிங் அப்!' இது யுனைடெட் கிங்டமின் சிறந்த 10 புத்தகங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது பற்றி 'ஃபேசிங் தி ஃப்ரோஸன் ஓ­ன்' என்ற இரண்டாவது புத்தகத்தில் எழுதினார். இது சிறந்த ஸ்போர்ட்ஸ் புத்தகத்திற்கான விருதை பியர் கிரில்ஸூக்கு பெற்று தந்தது.

'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி இப்போது ஐந்தாவது சீஸன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் வரும் காட்சிகள் எல்லாம் சித்தரிக்கப்படுகின்றன என்பது அவற்றில் ஒன்று.


காட்டில் இருக்கும் குதிரையை கிரில்ஸ் ஓட்டுவதாக காண்பிக்கப்பட்டது. உண்மையில் அந்த குதிரை அப்போது பயந்து போய் இருந்தது. அது அருகில் எங்கோ இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டது என்றும், பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இடம் ஹாலிவுட் படங்களை எடுக்கும் ஹவாயில் உள்ள ஒரு தீபகற்பமே என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஸர்வைவல் ஆலோசகர் மார்க் வியனெர்ட் குற்றம் சாட்டியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக இங்கிலாந்தில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சேனல் 4 நிறுவனம் இவை "டாக்குமென்டரிகள் அல்ல. இப்படி ஒரு சூழலில் மனிதன் மாட்டிக் கொண்டால் எப்படி வாழ்வது? என்பதை கற்றுத்தரும் வழிகாட்டு நிகழ்ச்சிதான்' என்றது. சர்ச்சையோ சாகஸமோ பியர் கிரில்ஸைப் பொறுத்தவரை அவர் ஒரு சாகஸ நாயகனே...! காட்சிகள் சில செயற்கையாக உருவாக்கி எடுத்திருக்கலாம். ஆனால் அவர் உருவாக்கி கின்னஸில் இடம்பெற்ற சாதனைகள் பொய்யல்லவே...!!!



Post a Comment

புதியது பழையவை