• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், நவம்பர் 14, 2016

  கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2


  இந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்..


  காட்டு யானைகளுக்கு கரும்பு, வெல்லம் கொடுத்து பழக்கம்படுத்தும் அதே காலக்கட்டத்தில் யானைக்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட வலுவான கூண்டை தயார்ப்படுத்துவார்கள். அதற்குள் யானையை அடைத்து வைத்து வழிக்கு கொண்டுவர பயிற்சி கொடுப்பார்கள். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிடும். அதற்குள் யானை கொஞ்சம் கொஞ்சமாக பாகனோடு சிநேகம் கொள்ளத் தொடங்கும்.  ஒரு யானை பாகனின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது என்பதற்கான அடையாளம், அந்த யானையின் மீது பாகன் ஏறி அமர்வதுதான். முரட்டுப் பிடிவாதம் கொண்ட கும்கி யானைகள் சாமான்யத்தில் பாகன்களை மேலே அமரவிடாது. அதையும் மீறி அமர முயன்றால் துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கி எரித்துவிடும். அல்லது தரையில் போட்டு மிதித்துவிடும். அதன்பின் பாகன் உயிரோடு இருப்பது முடியாத ஒன்றாகிவிடும். அதற்காகவே துதிக்கையை மேலே தூக்க முடியாதபடி கூண்டை அமைத்திருப்பார்கள்.

  தினமும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து யானையை வழிக்கு கொண்டு வருவார்கள். அதன்பின் மேலே அமர்வார்கள். யானை ஒருவரை தன் மீது அமர அனுமதித்துவிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கத் தொடங்கிவிடும். சரியான பயிற்சியால் அத்தனை பெரிய பலம் பொருந்திய யானை ஓரு சாதாரண மனிதனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தொடங்கும்.

  யானைகளைப் பழக்கப்படுத்தி வழிக்குக் கொண்டு வருவதில் தமிழர்களுக்கு இணையாக உலகில் யாருமில்லை. அதிலும் குரும்பர்கள் எனப்படும் பழங்குடியினர், யானைகளின் மொழி தெரிந்தவர்கள். அவற்றின் மனநிலையைப் புரிந்தவர்கள். அதனால் முரட்டுத்தனமான இந்த கும்கி யானைகளை குறும்பர்கள் மட்டுமே அடங்குவார்கள். 

  ஒரு யானைக்கு இரண்டு பாகன்கள் இருப்பார்கள். ஒருவர் குரு பாகன். மற்றவர் சிஷ்யப் பாகன். பாகன்களின் குரு சிஷ்ய உறவு பெரும்பாலும் தந்தை - மகன் அல்லது அண்ணன் - தம்பி உறவாகவே வரும். குரு பாகன் இல்லாத போது யானையை கவனித்துக் கொள்வது சிஷ்யப் பாகன்தான். 

  ஒரு யானை 50-60 ஆண்டுகள் வரை உயிரோடு வாழும். ஒரு பாகனின் வாழ்க்கை அந்த யானையோடு முடிந்து போகும். யானைக்கும் பாகனுக்குமான உறவு விவரிக்க முடியாத ஒரு பாசப்பிணைப்பு. பாகனுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாமல் யானை காப்பாற்றும்.


  ஒருமுறை யானையைக் குளிப்பாட்டக் கூட்டி சென்ற பாகன் நன்றாக குடித்துவிட்டு போதையில் காட்டுக்குள்ளே விழுந்துவிட்டான். நீண்ட நேரம் அந்த இடத்தை விட்டு நகராமல் அவனையே சுற்றி சுற்றி வந்தது யானை. மாலை நேரம் முடிந்து, இருள் கவ்வத் தொடங்கியது. பாகன் எழுந்திருப்பதாக இல்லை. 

  இருட்டிய பிறகு காட்டுக்குள் இருப்பது ஆபத்து. எந்த விலங்கும் பாகனைக் கொன்று விடலாம் என்பதை உணர்ந்த யானை, மண்டியிட்டு குனிந்து தனது நீண்ட இரண்டு தந்தங்களையும் பாகனின் உடலுக்கு கீழே கொடுத்து அவனை அப்படியே அலாக்காகத் தூக்கிக்கொண்டு பத்திரமாக அவனது வீட்டில் கொண்டு போய் சேர்ந்தது. 

  தன் கண்முன் பாகனை யாராவது துன்புறுத்தினால் யானையால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒருமுறை பாகன் ஒருவன், ஒரு தாதாவிடம் கடன் வாங்கியிருந்தான். அதைக் கேட்க வந்த தாதா பாகனை அடிக்கத் தொடங்கினான். தாதா அடித்ததுமே அவனுடன் சேர்ந்து வந்திருந்த அடியாட்களும் சேர்ந்து பாகனை அடிக்கத் தொடங்கினார்கள். இதை தூரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த கும்கி யானை பார்த்துக்கொண்டே இருந்தது. அதனால் பாகன் அடிபடுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

  இங்கும் அங்குமாக திமிறியது. சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவர முயன்றது. பிளிறியது. ஆற்றாமையால் அழுதது. இறுதியாக பின்னங்காலில் கட்டியிருந்த சங்கிலி அறுந்தது. வேகமாக ஓடிவந்த யானை, மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்தது.

  பாகனை அடித்து முடித்துவிட்டு சற்று தொலைவில் நடந்து போய் கொண்டிருந்தவர்களை நோக்கி வேகமாக ஓடியது. துதிக்கையால் அவர்களை தூக்கி வீசியது. வீடுகளை அடித்து நொறுக்கியது. ஆத்திரம் தீர்ந்ததும், மீண்டும் தனது இருப்பிடம் திரும்பியது. வேதனையோடு சோகமாக அமர்ந்திருந்த பாகனிடம் வந்து படுத்துக் கொண்டது. இப்படி நூற்றுக்கணக்கான கதைகள் முதுமலையில் இருக்கிறது.


  பாகன்களும் பாசத்தில் சளைத்தவர்கள் அல்ல. அந்த யானைக்கு எல்லாமே அவர்கள்தான். ஒரு யானையை நீரோடையில் படுக்க வைத்து குளிப்பாட்ட கிட்டத்தட்ட 3 மணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு கனமான இரும்பு கம்பிகள் கொண்ட பிரஷ்ஷால் யானையின் உடல் முழுவதும் அழுத்தித் தேய்ப்பார்கள். ஒரு அழுக்கு இல்லாமல் எடுத்துவிடுவார்கள். கை வலி பின்னி எடுக்கும். மணிக்கட்டும் தோள்பட்டையும் கழன்று போவதுபோல் வலிக்கும். ஆனாலும் தேய்த்துக்கொண்டே இருப்பார்கள். இது யானைக்கு மசாஜ் செய்வது போல் சுகமாக இருக்கும். 

  கும்கி யானையை பகலில் கட்டிப்போட்டு வைத்திருப்பாரக்ள். இரவில் கட்டவிழ்த்து விட்டு விடுவார்கள். அந்த யானை காட்டுக்குள் சென்று வரும். காட்டு யானைகளுடன் சேர்ந்து திரியும். சில சமயம் பெண் யானைகளுடன் உறவும் கொள்ளும். ஆனால், காலை விடியும் முன்னே மணியடித்தாற் போல் பாகன் வீட்டின் முன்னே வந்து நின்றுவிடும். 

  இப்படி பாகனை தேடி வருவதற்கு காரணம், பாகனின் அன்பு மட்டுமல்ல. தினமும் கிடைக்கும் கரும்பு, வெல்லம். பின்னர் மசாஜ் போல் சுகமான குளியல். இதில்தான் யானைகள் மயங்கி விடுகின்றன. காட்டில் இந்த சுகமும் ருசியும் கிடைப்பதில்லை. அதனால்தான் கும்கிகள் பகலில் நாட்டு யானைகளாகவும், இரவில் காட்டு யானைகளாகவும் வாழ்கின்றன. விளைச்சல் நேரத்தில் காட்டு யானைகள் உணவுக்காக ஊருக்குள் வரத் தொடங்கும். அப்போது அவைகளை கும்கி யானை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடிக்கும். நன்றாக பயிற்சி பெற்ற கும்கி யானை எப்படிப்பட்ட காட்டு யானையையும் அடித்து துரத்திவிடும். கும்கி யானைகள் தங்களின் பாகன்களைத் தவிர வேறு யாரையும் அருகே நெருங்க விடாது." என்று கூறி முடித்தார் ஆர்.செந்தில்குமரன்.     படங்கள்: ஆர்.செந்தில்குமரன் 

  25 கருத்துகள்:

  1. கும்கி யானைகள் பகலில் நாட்டு யானைகளாகவும் இரவில் காட்டு யானைகளாகவும் வாழ்கின்றன என்பது அறிந்திராத தகவல். கும்கிகள் பற்றிய புதிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  2. இன்றுதான் இரு பதிவுகளையும் படித்தேன். செந்தில்குமரனின் பணி அபாரமானது. ஆச்சர்யப்படவைத்தது. பாகனின் அன்பை பரிமாறிக்கொள்ளும் விதத்தை நீங்கள் பகிர்ந்த விதம் அருமை.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இன்னும் விரிவாக நிறைய தகவல்கள் கூறினார். அவற்றையும் எழுதினால் பதிவின் நீளம் அதிகரித்துவிடும் என்று விட்டுவிட்டேன்.
    தங்கள் வருகைக்கு நன்றி அய்யா!

    நீக்கு
  3. இதை அப்படியே ஒரு டாக்குவாக எடுக்கலாம் நிச்சயம் உலக அளவில் விருது பெரும்.

   அப்புறம் தமிழர்கள் யானையை அடுக்குவதில் உலகத்தில் சிறந்தவர்கள் என்பது உண்மைதான் .
   பண்டைய ஆசிவக மெய்யியலில் யானைகளுக்கு பெரிய இடம் உண்டு...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. செந்தில்குமரன் டாக்குவாக எடுத்துக்கொண்டிருக்கிறார்.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  4. உங்களின் அனுபவ பதிவுகள் தனி ரகம்... அருமை.... அருமை...

   பதிலளிநீக்கு
  5. இரண்டையும் சேர்ந்து படித்தேன் நண்பரே நிறைய விடயங்கள் அறிந்தேன்
   செந்தில் என்ற பெயர்க்காரர்கள் திறமைசாலிகள்தான் ச்சே எனக்கும்தான் பெயர் வைத்து இருக்கின்றார்கள்....
   த.ம.5

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இது ஏதோ வஞ்சப்புகழ்ச்சி போல் தெரிகிறதே..!
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  6. இந்த கதைகளை எல்லாம் கேட்டுதான் நல்ல நேரம் படம் எடுத்தார்களோ :)

   பதிலளிநீக்கு
  7. நல்ல தகவல்கள் சகோ. யானைகள் மட்டுமல்ல எல்லா விலங்குகளுமே அதாவது வீட்டு விலங்குகளும் சரி, பழக்கப்பட்ட காட்டு விலங்குகளும் சரி முதலில் நம்மைத் தேடி வருவதற்குக் காரணம் உணவு. அது 50% என்றால் அடுத்து அன்பு! அவை அன்பிற்காக வந்தாலும் முதலில் அவர்களுக்கு நம்மிடம் உணவு கிடைப்பதால்தான் அவை வாலை ஆட்டிக் கொண்டு வருகின்றன நாய் உட்பட...

   பதிலளிநீக்கு
  8. அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
   தமிழ் செய்திகள்

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்