Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஜெயலலிதாவிடமிருந்து இப்படியொரு பேட்டியா..?!


ந்திய அரசியலின் நெருங்க முடியாத பெண்மணியாக இன்றும் பார்க்கப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக உண்மையான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும்.


Rendezvous With Simi Garewal  என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர்ச்சிவசப்படும், பாட்டு பாடும், ஒரு சராசரிப் பெண்ணாக ஜெயலலிதாவைப் பார்க்கலாம். தன் இளைமைக்காலம் முதலான சுயசரிதம் பற்றி பேட்டியாளரான அவரது தோழியும் அவர் காலத்து இந்தி நடிகையுமான  சிமி க்ரேவல் என்பவரிடம் அவரே கூறும் பேட்டி இது...

இந்த பேட்டியின் தமிழாக்கம் கீழே.

சிமி: உங்கள் அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக துணிச்சலான பயணம். ஆனால் எந்த சினிமா திரைக்கதையை விடவும் அதிக திருப்பங்கள் கொண்டது இல்லையா அது?

ஜெ: அதிக போராட்டங்கள் நிறைந்ததும் கூட. (Its a tempestuous life என்கிறார் ஜெ. இந்த பேட்டி முழுவதுமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மிகத் துல்லியமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து பதில் அளிக்கிறார் ஜெ)

சிமி: வெற்றி, தோல்வி, வழக்கு என்று எதிர்பார்த்திருக்காத வகையிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டது உங்கள் வாழ்க்கை. எப்போதாவது எரிச்சல்பட்டிருக்கிறீர்களா ? பயம் அல்லது, ஆத்திரமடைந்திருக்கிறீர்களா ? அதை வெளிக்காட்டி இருக்கிறீர்களா ?

ஜெ: கண்டிப்பாக. நானும் எல்லோரையும் போலதானே. இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை என்றால்தான் நான் இயல்பாக இல்லை என்று அர்த்தம். ஆனால் நீங்கள் ஒரு தலைவராக இருக்கும்போது உங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுகொள்வீர்கள். வெளிப்படுத்த மாட்டீர்கள்.

சிமி: எப்போது பார்த்தாலும், எந்த நாளில் உங்களை பார்த்தாலும், மிக சாந்தமாக, அமைதியாக இருக்கிறீர்கள். இதற்குப் பின்னால் ஒளிந்திருப்பது என்ன ? என்று நான் தெரிந்து கொள்ளலாமா ?

ஜெ: (வெடித்து சிரிக்கிறார் ஜெ.பின் சிறு இடைவெளி விட்டு பதிலளிக்கிறார்) என்னுடைய உணர்வுகளை எனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறேன். அதை யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. பொது இடங்களில் நிதானம் இழப்பதில்லை. அழுததில்லை. என்னுடைய உணர்வுகள் என்பது காட்சி படுத்துவதற்கல்ல என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

சிமி: இது எப்படி சாத்தியமாகிற்று ?

ஜெ: எனக்கு மனஉறுதி அதிகம். சுயகட்டுப்பாடும்.


சிமி: அரசியல் உங்களை வலிமை வாய்ந்தவராக மாற்றி இருக்கிறதா ?

ஜெ: கண்டிப்பாக. இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப்பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்சமுடைய, அன்னியர்களை சந்திக்க விரும்பாத, அதுவுமில்லாமல், மற்றவர்களால் கவனிக்கப்படுவதை அறவே வெறுத்த பெண் நான்.

சிமி: நிஜமாகவா ? ஆச்சர்யமாக இருக்கிறது.

ஜெ: ஆச்சர்யம்தான். நிஜமாகவே மற்றவர்களின் கவனத்துக்கு ஆளாவதை வெறுத்திருக்கிறேன். ஆனால், நாட்டின் உயரிய இரண்டு பொறுப்புகளை வகித்தது விதியின் வழி. நிஜத்தில் பொறுப்புகளுக்கு பின்னாலிருந்து பணிபுரியவே நான் விரும்பி இருக்கிறேன்.

சிமி: பின்னோக்கி பார்த்தோமானால், உங்களுடைய தற்போதைய வாழ்க்கைக்கும், உங்கள் சிறுபிராயத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறது என்று நினைக்கிறீர்களா ?

ஜெ: கண்டிப்பாக இல்லை. தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த நான்,  மிக பாரம்பரியமான, ஆச்சாரமான முறையில் எனது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட பெண்.

சிமி: நீங்கள் உங்கள் ஆறு வயதில் இருந்து பத்து வயது வரை பெங்களூரில் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தீர்கள் இல்லையா ? உங்கள் அம்மாவை பிரிந்திருந்தது கஷ்டமாக இருந்ததா?

ஜெ: மிக கஷ்டமாக இருந்தது. மிகவும் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது.

சிமி: உங்களைப் பார்ப்பதற்கு அடிக்கடி பெங்களூருக்கு வருவார்களா? ??

ஜெ: அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வருவார்கள். ஆனால், அடிக்கடி என்று சொல்ல முடியாது. எனக்கு ஐந்து வயதிருக்கும். அப்போது பெங்களூரு வரும் என்னுடைய அம்மா , சென்னை திரும்ப நேர்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, நான்  தொடர்ந்து அழுவேன். இதன் காரணமாக, என்னை தூங்க வைத்துவிட்டுத்தான், அம்மா சென்னைக்கு கிளம்புவார்கள்.

ஆனால், அம்மா சென்னைக்குக்  கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக , தூங்கும்போது, அவரது சேலைத் தலைப்பை என்னுடைய கைகளில் சுருட்டி வைத்துகொண்டுதான் தூங்குவேன்.

காலையில் எழுந்திருக்கும்போது, வேறு வழியில்லாமல், என் கையிலுள்ள சேலை தலைப்பை மெதுவாக உருவி எடுத்துவிட்டு, சித்தியின் சேலை தலைப்பை என் கைகளில் சுருட்டிவிட்டு, அம்மா கிளம்புவார்களாம் 

காலையில் எழுந்து அம்மாவைக் காணாது, அழுது, அழுது, ஒரு மூன்று நாட்களுக்காவது சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அழுதிருக்கிறேன். பெங்களூரில் இருந்த நாட்களில் எல்லாம் என் அம்மாவுக்காக  ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி இருக்கிறேன்.

சிமி: ஜெயாஜி, சிறுபிராயம் என்பது நம்முடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது என்பது உங்கள் கருத்தாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமாக அது ஒரு அழுத்தத்தை, வாழ்க்கை ஏற்படுத்தவே செய்கிறது இல்லையா ?

ஜெ: இருக்கலாம். என் வாழ்க்கையை திரும்பி பார்த்தால், வாழ்க்கையில் மிகக் குறைவான காலங்களையே அம்மாவுடன்  கழித்திருக்கிறேன். யோசித்தால், நான் எதிர்பார்த்த முழுமையான அன்பை என் அம்மாவிடமிருந்து  நான் அனுபவிக்கவே இல்லை. நேரம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

அம்மாவுடன்  வசிப்பதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்தபோது, அவர் சினிமாத்துறையில் மிகவும் பரபரப்பாக இருந்தார். நான் எழுவதற்கு முன்னரே அவர் படப்பிடிப்பிற்கு சென்றிருப்பார். பள்ளிக் காலத்தில், ஆங்கில கட்டுரைப்போட்டியில் நான் பெற்ற முதல் பரிசை அம்மாவிடம் காண்பிப்பதற்கே நான் நள்ளிரவு வரை காத்திருந்திருக்கிறேன். மறக்க முடியாத, பொக்கிஷமான நினைவு அது.

சிமி: நீங்கள் கான்வென்ட்டில் படித்தீர்கள் அல்லவா ? பள்ளி மாணவிக்குரிய இயல்பான கனவுகளோ, ஈர்ப்புகளோ இருந்ததா உங்களுக்கு ?

ஜெ: இல்லாமல் எப்படி ?

கிரிக்கட் வீரர் நாரி காண்டிராக்டர் மீது எனக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. அவரைப் பார்ப்பதற்காக மட்டுமே சென்னையில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் மைதானங்களுக்கு செல்வேன்.

ஹிந்தி நடிகர் ஷம்மி கபூர் மீதும் கூட எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் நடித்த “ஜங்லி” திரைப்படம் , தற்போது வரை எனக்கு மிக பிடித்த படம்.”

(இதற்கடுத்த சில நொடிகளில், “ஆஜா சனம்” என்ற பிரபல ஹிந்தி அப்பாடலை ஜெ. பாடுகிறார். சிறு வெட்கத்துடன் )

சிமி: உங்களுடைய அம்மா ஒரு நடிகை என்பதற்காக,  பள்ளியில் உங்களுடன் படித்த மாணவிகள், உங்களை கேலி செய்திருக்கிறார்களா ? அது உண்மையா ?

ஜெ: உண்மைதான். மேல்தட்டு குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் சிலர், பரிகாசம் செய்வார்கள். முன்னணி நடிகையாக, என் அம்மா இல்லாததால்தான் அவர்கள் என்னை கிண்டலடித்தார்கள். அம்மா அப்போது குணச்சித்திர காதாபாத்திரத்தில்தானே நடித்தார். ஒருவேளை அவர் முன்னணி கதாநாயகியாக இருந்தால், அவர்கள் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டிருப்பார்கள்.

அதை எல்லாம் சரிக்கட்டும்விதமாக, அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவியாக  இருந்தேன்.  நான் பள்ளியை விட்டு செல்லும்போது, அனைத்து ஆசிரியர்களும் எனக்கு ஒருமனதாக “Best outgoing student of the year” பட்டம் அளித்தார்கள். என் வாழ்வில் நான் மிகப்பெருமையாக உணர்வதும், இதுவரை பெருமைப்படுவதும் அதற்காகத்தான்.

ஆனால் அப்போதெல்லாம், இந்த பரிகாசங்களை கேட்டு, உடைந்து போய் அழுதது உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. என்னை பரிகசிப்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கற்றிருக்கிறேன். சில நேரங்களில், அவர்கள் பரிகசித்ததற்கு அதிகமாகவே திருப்பி அடிக்கிறேன்.

சிமி: 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள் இல்லையா ? உங்களுடைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது ?

ஜெ: well. என்னுடைய காலத்தில் நான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருக்கிறேன். எனக்கு அந்த துறை பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட பொறுப்பில் மிகச்சிறந்து விளங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கிறேன். நம்பர் ஒன் நடிகையாகவும் இருந்தேன்.

அதேபோல்,  அரசியல் எனக்கு பிடிக்காவிட்டாலும் நான் ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவர் என்று மக்கள் கூறுகிறார்கள். என்னை பார்த்து நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

சிமி: நடனம் ஆடுவது, ஒப்பனை செய்வது, ஒத்திகை பார்ப்பது, இப்படியான சினிமாத்துறை பணிகள் உங்களுக்கு பிடித்திருந்ததா ?

ஜெ: பிடித்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் நடிப்பு எனக்கு இயற்கையாவே வந்தது. நான் ஒரு பிறவி நடிகர் என்றுதான் சொல்லவேண்டும். யாரையும்  பிரதி எடுத்து நடிக்க நான் முயன்றதே இல்லை.

சிமி: உங்களுடைய 23 வயதில், நீங்கள் அம்மாவை இழந்துவிட்டீர்கள். அந்த சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்.

ஜெ: கண்ணைக் கட்டி காட்டுக்குள் விடப்பட்ட ஒரு சிறு குழந்தையைப் போல, திணறிப்போனேன். அதை அப்படித்தான் சொல்லவேண்டும். அம்மாதான் என்னுடைய முழு உலகமும். அவர் என்னைப் பாதுகாத்தாரே தவிர, வேறு எதையும் எனக்கு சொல்லித்தரவில்லை.

எனக்கு குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை. வங்கிக்கணக்கு பற்றியோ, காசோலையில் கையெழுத்து போடுவது பற்றியோ, வருமான வரி கட்டுவது பற்றியோ, ஏன் ? என் வீட்டில் எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றியோ, இப்படி எனக்கு எதுவுமே தெரியவில்லை. நான் என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. மிகுந்த அப்பாவியான குழந்தை ஒன்றை கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டுவிட்டதை போலதான் உணர்ந்தேன்.

கையறு நிலையிலான அன்றைய சூழலலில்,  வெகுளியான, எளிதில் காயப்படக்கூடிய, அப்பாவி பெண்ணாக இருந்த என்னை, சுற்றி இருந்த அத்தனை பேருமே பயன்படுத்திக்கொண்டார்கள்.


சிமி: எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா ? அவர் மீது காதல் இருந்ததா ?

ஜெ: ( அகன்ற புன்னகை ஒன்றுக்குப் பின்) அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்.

சிமி: தனிப்பட்ட மனிதராக எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர் ? அவர் ஒரு புதிரைப் போன்றவர் இல்லையா ?

ஜெ: மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப்  பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.

சிமி: எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா ?

ஜெ: கண்டிப்பாக. அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.

சிமி: உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா ?

ஜெ: (அதே அகன்ற புன்னகை) இருந்திருக்கலாம்.

சிமி: ஜெயாஜி. நிபந்தனையற்ற அன்பை கண்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் ?

ஜெ: இல்லை. கண்டிப்பாக இல்லை. நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை.

புத்தகங்கள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்களில்தான் அது, அந்த நிபந்தனையற்ற அன்பு  இருக்கிறது. உண்மையில், அப்படி ஒன்று இருக்குமானால், அந்த நிபந்தனையற்ற அன்பை நான் இதுவரை சந்தித்திருக்கவில்லை.

சிமி: எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகுதான், அரசியலில், உங்களுக்கு எதிரான பெரும் போராட்டங்களை நீங்கள் சந்தித்ததும், வெற்றி கண்டதும். இல்லையா ?

ஜெ: மிகச்சரி. அவர் இருக்கும்வரை, அவர்தான் கட்சித்தலைவர். அவருடைய அறிவுரையை பின்பற்றுவதுதான் என்னுடைய வேலை. ஆனால் அவருக்குப் பின், நான் தனித்து விடப்பட்டேன். அவருடைய வாரிசாக வருவதற்கான எந்தப் பாதையையும் எம்ஜி.ஆர்  எனக்கு உருவாக்கித் தரவில்லை.

அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை  அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. ராஜீவ் காந்திக்கு அவருடைய தாயார் இந்திரா காந்தி செய்ததை போல, கட்சி தலைமையை பொறுப்பை வகிக்கும் அளவிற்கு  ராஜீவை, தயாராக்கியத்தை போல, என்னை யாரும் தலைமை பொறுப்பிற்கு உருவாக்கவில்லை.

தெற்கு ஆசியாவை எடுத்துகொண்டால், நாட்டின் தலைமை பதவிக்கு வந்த பெண்கள் அனைவருமே, யாரோ ஒரு தலைவரின் மகளாகவோ, அல்லது மனைவியாகவோதான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பு தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு அப்படி இல்லை.

மறைந்த தலைவரின் மனைவியாக இருந்தால், உங்கள் மீது இயல்பாகவே மரியாதை வந்துவிடும். மக்கள் உங்களை மரியாதையோடு விளிப்பார்கள். அணுகுவார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை.

அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது.


சிமி: ஆண்கள் உங்களை பார்த்து பயப்படுகிறார்களா ?

ஜெ:அவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அப்படிதான் நினைக்கிறேன்.
ஆனால், இப்போதெல்லாம் என்னை பார்த்தாலே, ஆண்கள் பீதியாகுகிறார்கள் (சொல்லிகொண்டே சிரிக்கிறார்)

சிமி: ஏன் ?

ஜெ: ஊடகங்கள் அப்படியான ஒரு இமேஜை, என்னை பற்றி கட்டமைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மற்றவர்களின் அபத்தங்களை, முட்டாள்தனங்களை இப்போதெல்லாம் நான் பொறுத்துக்கொள்வதில்லை.

அந்த பழைய,  ஜெயலலிதா இப்போது இல்லை. அதிர்ந்து பேசாத, எப்படி எதிர்த்து பேசுவது என்று தெரியாத, அவமானப்படுத்தினால், வீட்டுக்கு சென்று அறையை பூட்டிக்கொண்டு அழுகிற அந்த பழைய ஜெயலலிதா இல்லை நான் இப்போது.

என்னுடைய இந்த மாற்றம் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

சிமி: ஆண்களை வெறுப்பவரா நீங்கள் ? are you a Man Hater ? ஆண்கள்தான் உங்களின் மோசமான விமர்சகர்கள் இல்லையா ?

ஜெ: இல்லையே. ஆண்களை வெறுப்பவள் இல்லை நான். இன்னும் சொல்லப்போனால், பெண்கள்தான் என்னை மிக மோசமாக விமர்சித்திருக்கிறார்கள்.


சிமி: சசிகலாவுடானன உங்கள் சிநேகம் இத்தனை விமர்சனங்களை சந்தித்த பின்னும், நீங்கள் அதை தொடருவது ஏன் ? சசிகலாவை விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஏன் ?

ஜெ:  என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்ட,  புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர்.எனக்காக அவர் மிக சிரமப்பட்டிருக்கிறார். உங்களுக்கு தெரியுமா ? அவர் ஒரு வருடம் சிறை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள்.

பரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால், அவருடைய குடும்பத்தையும் கவனித்து கொள்வது என்பது இயலாத காரியம். பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள். ஆண்கள்தான் எங்களுடைய நட்பை கொச்சைப்படுத்துகிறார்கள்.

எனக்கான ஷாப்பிங்கை கூட நான் செய்ய முடியாது. எனக்கான பொருட்களை யாராவது எனக்கு வாங்கி வர வேண்டும். என்னுடைய குடும்பத்தை எனக்காக யாராவது நிர்வகிக்க வேண்டும். அதைத்தான் அவர் செய்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை, நிரப்பிய பெண் அவர்.

சிமி: நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை ஜெயாஜி ?

ஜெ:  அப்படி ஒன்று நடக்கவில்லை

சிமி:  திருமணம் செய்து கொள்ளுமளவிற்கு யாரையாவது சந்தித்திருகிறீர்களா ?  இவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எப்போதாவது தோன்றி இருக்கிறதா ?

ஜெ:  இல்லை. அப்படி யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், திருமணம் என்கிற அந்த எண்ணம் எனக்கும் இருந்தது. எல்லா இளம் பெண்களையும் போல, நானும் எனக்கான Prince Charming பற்றி கனவு கண்டிருக்கிறேன்.

என்னுடைய பதினெட்டு வயதில் , என்னுடைய அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தால்,  அது பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, நான் மிக மகிழ்ச்சியாக ஒரு வாழ்க்கையை தொடங்கியிருப்பேன். குடும்பம், குழந்தைகள் என்று அந்த வாழ்க்கையை தொடர்ந்திருப்பேன்வீட்டை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டேன்.ஆனால், எதிர்பார்ப்பதெல்லாம் நடப்பதில்லையே.


சிமி:  ஒரு முழுமையான குடும்பம் உங்களுக்கு இல்லை என்று தோன்றுகிறதா இப்போது ?

ஜெ:  இல்லை.எப்போதும் இல்லை. என்னுடைய சுதந்திரத்தை நான் முழுமையாக அனுபவிக்கிறேன்.

தோல்வியுறும் திருமணங்கள், பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் என்று என்னை சுற்றி நடப்பவை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு திருமணமாகதது குறித்து வருத்தமில்லை. சந்தோஷப்படவே செய்கிறேன்.

இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுக்கும் சுதந்திரத்தை. யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்காத, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழத் தேவையில்லாத இந்த சுதந்திரத்தை, நான் விரும்பவே செய்கிறேன்.

சிமி:  இப்படியான ஒரு மாலை சந்திப்புக்காக மிக்க நன்றி ஜெயாஜி. மிக நேர்மையாக, மிக உண்மையாக உங்கள் மனதை வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சியும் ஜெயாஜி.

ஜெ: எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது.  இது வரை என்னிடம் யாருக்கும் கேட்கத் தைரியமில்லாத கேள்விகளை கேட்டதோடு, அதற்கான பதில்களை வெளிக்கொண்டு வந்ததும் மிக அருமை. உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. நன்றி.

ஒரு சாதாரண கட்டுப்பாடு நிறைந்த தமிழ்க் குடும்பத்திலிருந்து வந்து மிகப் பெரிய அரசியல் சாதனையாளராக சாதித்த பெண்ணின் உண்மை வரலாறு...!!! 



ஜெயலலிதா பேட்டி காணொளியாக 
பாகம் - 1


ஜெயலலிதா பேட்டி காணொளியாக 
பாகம் - 2


இந்தக் காணொளியையும் அதனை தமிழில் மொழிபெயர்த்து அனுப்பிய நண்பருக்கும் நன்றிகள்..!


13 கருத்துகள்

  1. இந்தக் காணொளி பார்த்திருக்கிறேன்...
    இங்கு தமிழ் படுத்தப்பட்டதை வாசித்தேன்...
    துணிச்சல்கார பெண்மணி.

    பதிலளிநீக்கு
  2. இருவருமே சாதனை பெண்மணிகள்தான் !ஒருவர் அரசியலில் நுழைந்து வெற்றி கண்டவர் ,இன்னொருவர் இந்திய திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் நிர்வாணமாய் நடித்து புரட்சி செய்தவராச்சே :)

    பதிலளிநீக்கு
  3. முன்னரே பார்த்து ரசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் நண்பரின் தமிழாக்கத்திற்கும்,தங்களின் பகிர்வுக்கும் நன்றி. இந்த இரும்புப் பெண்மணி கடைசியில் ஒரு குடும்பத்தின் துரும்பாய் போனது ஆச்சரியம்தான்.

    பதிலளிநீக்கு
  5. உண்மையில் மனம் திறந்த பேட்டிதான்.பாசாங்கில்லாத பதில்கள்.

    பதிலளிநீக்கு
  6. மனம் திறந்த பேட்டி
    தரவிறக்கம் செய்து கொண்டேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  7. வாட்சப்பில் வந்தது நண்பரே/சகோ. காணொளியும் பார்த்துவிட்டோம். அதற்கு முன்பே ஒரு சில மாதங்கள் முன்பு...சென்ற வருடன் என்று நினைவு....அப்போது இதைப் பற்றி அறிய வர தேடிப்பார்த்து காணொளி சரியாக வராததால் அப்போது பகிர முடியாமல்...தற்போது வாட்சப்பில் வந்ததும் பகிர நினைத்திருந்தோம். மனம் திறந்த பேட்டி பதில்கள்... அவரது தமிழ் உச்சரிப்பும் நன்றாக இருக்கும்...இதில் ஆங்கில மொழி ஆளுமை நன்றாகத் தெரியும்.... இங்கு தங்கள் தளத்தில் கண்டதில் மகிழ்ச்சி...!!

    பதிலளிநீக்கு
  8. பேட்டிவந்தபொழுது பார்த்திருக்கிறேன். தமிழில் பகிர்ந்ததற்கு நன்றிகள் சகோ

    பதிலளிநீக்கு
  9. மறைந்த ஜெயலலிதா ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி. எம் ஜி ஆர் இறந்தபோதும் சரி, ராஜிவ் இறந்தபோதும் சரி, அதைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர். இந்தப் பேட்டியில் உன்ஐயும் இருக்கிறது சந்தர்ப்பவாத பொயை உண்மையாகப் பூசப்பட்டு மனதறிந்து சொல்லும் பொய்களும் நிறையவே இருக்கிறது. இதில் நீங்கள் எதைப்பார்த்து ஆச்சர்யப் பட்டு ஆச்சர்யக்குறி வைத்துள்ளீர்கள் என்பது மட்டும் எனக்கு விளங்கவில்லைங்க.

    பதிலளிநீக்கு
  10. வித்தியாசமான பேட்டிதான்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு பேட்டி. முன்னரே பார்த்திருக்கிறேன். தமிழில் படிக்கவும் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை