செவ்வாய், டிசம்பர் 30, 2014

பழிச்சொல்லிருந்து பாண்டியனை காப்பாற்றிய சிவன்


    மதுரையைச் சுற்றிலும் கடம்பவனங்கள் சூழ்ந்திருந்த காலம் அது. பக்கத்து ஊர்களில் இருந்து மதுரைக்கு வருவதென்றால் கூட அடர்ந்த வனங்களை கடந்துதான் வரவேண்டும். அப்படித்தான் வனத்தைக் கடந்து கொண்டிருந்தான் ஒரு பிராமணன். அவன் தன்னுடன் மனைவியையும் கைக்குழந்தையையும் அழைத்துச் சென்றான்.

    திருப்பத்தூரில் இருந்து புறப்பட்ட அவர்கள் மதுரையில் இருக்கும் அவனின் மாமா வீட்டிற்கு போய்க் கொண்டிருந்தார்கள். நினைத்தது போல் பயணம் சுலபமாக இல்லை. கடினமான அந்தப் பயணம் இளம் மனைவியை களைப்படைய வைத்தது. நா வறண்டு தண்ணீருக்காக ஏங்கியது.
   
    நேரம் போகப் போக அந்தப் பிராமணப் பெண்ணால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாமல் ஒரு ஆல் மரத்தினடியில் அமர்ந்துவிட்டாள். மனைவியின் தாகத்தைப் போக்குவதற்காக நீரைத் தேடி அந்த பிராமணன் புறப்பட்டுப் போனான். கணவன் சென்ற சற்று நேரத்தில் களைப்பின் மிகுதியால் கண் அயர்ந்தாள் அந்தப் பெண் அருகே அவளின் குழந்தை தவழ்ந்து கொண்டிருந்தது.

    தண்ணீரைத் தேடி வெகு தூரம் சென்றவன். ஒரு ஓடையில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு மனைவி இருக்கும் இடம் நோக்கி விரைந்தான்.
   
    மனைவியைப் பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவளின் மார்பில் அம்பு தைத்திருந்தது. ரத்த வெள்ளத்தில் அவள் இறந்து போயிருந்தால். அருகே குழந்தை தவழ்ந்து கொண்டிருந்தது.


    கண்கணில் கண்ணீர் பெருக்கெடுக்க… மனைவியின் உடலைக் கையில் ஏந்தி…

    “என் காதல் மனைவியைக் கொன்றவன் எவன்?” காடே அதிரும் வண்ணம் கத்தினான். சுற்றும் முற்றும் பார்த்தான். மரத்திற்கு பின்னால் ஒரு வேடன் வில்லோடு நிற்பதைக் கண்டான். அந்த வேடன் தான் தன் மனைவியை கொலை செய்தவன் என்று முடிவு செய்து…

    “வேடனே! ஏன் என் மனைவியைக் கொன்றாய்? அவள் உனக்கு செய்த தீங்கு தான் என்ன?” என்று கேட்டான்.

    “அந்தணரே! இந்த பாதகத்தை செய்தவன் நானில்லை, என்னை நம்புங்கள்!” என்றான் வேடன்.

    “பொய்யுரைக்காதே…! இங்கே உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. வா… என்னோடு…! மன்னனிடம் நியாயம் கேட்போம்..!” என்ற பிராமணன். இறந்த தன் மனைவியை நோளிலே தூக்கிக் கொண்டான். குழந்தையை இடுப்பிலே ஏந்திக் கொண்டான். வேடனை தன்னோடு இழுத்துக் கொண்டு, கண்ணீர் தாரை தாரையாக வழிய, துக்கத்தை சுமந்த நெஞ்சோடு வேகமாக மதுரையை நோக்கி நடந்தான்.

    குலோத்துங்க பாண்டியன் திறம்பட மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்தான். நாள் தவறாமல் சோமசுந்தரப் பெருமானை பக்தியுடன் வழிபடும் வழக்கத்தை கொண்டிருந்தான். குலோத்துங்கனின் அரண்மனையை அடைந்த பிராமணன் இறந்த மனைவியை தரையில் கிடத்தி அழுது நின்றான்.
   
    “நான் என்ன செய்வேன்? திருமணம் முடிந்து இரண்டு வருடம் கூட ஆகாத எனது இளம் மனைவியை இந்த வேடன் கொலை செய்துவிட்டான்” என்று கதறினான்.

    இதனைக் கேட்டுப் பதறிய வாயிற்காப்பாளர்கள் வேகமாக சென்று மன்னனிடம் நடந்ததை சொன்னார்கள். மன்னனும் நிலைகுலைந்து போனான். வாசல் வந்த வேந்தன், அந்தணனின் அவல நிலையைக் கண்டு மனம் வருந்தினான்.

    “அரசே! என் நிலையைப் பாருங்கள்! மனைவிக்காக தண்ணீர் கொண்டு வர அவளைத் தனியாக விட்டுச் சென்றேன். அதற்குள் இந்த வேடன் என் மனைவியைக் கொன்றுவிட்டான். பால்குடி மறக்காத கைக்குழந்தையை வைத்துக்கொண்டு இனி நான் என்ன செய்வேன்?” என்று வேடன் மீது குற்றம் சாட்டினான்.

    வேடன் வேந்தனையை பார்த்து நின்றான் “மன்னா! நான் இளைப்பாறுவதற்காகத்தான் மரத்தினடியில் நின்று கொண்டிருந்தேன். நான் கொலை செய்யவில்லை மன்னா! இறந்துகிடக்கும் இந்தப் பெண்ணையும் நான் கவனிக்கவில்லை. கொலை செய்தவனையும் பார்க்கவில்லை. நான் ஒரு பாவமும் அறியாதவன் மன்னவா! இது எனது குல தெய்வத்தின் மீது சத்தியம். எனக்கு தர்மம் நழுவாத நீதியை தாங்கள் தான் தர வேண்டும். அரச பெருமானே!” என்று மன்னனிடம் மண்டியிட்டு கெஞ்சினான் வேடன்.

    “நீ சொல்வது உண்மையென்றே வைத்துக்கொள்வோம்! வேடன் என்று உன்னைத்தவிர யாரும் இல்லாத போது, அந்தப் பெண்ணின் உடலில் அம்பு பாய்ந்தது எப்படி? என்று கேட்டனர்.

    “அதுதான் மன்னா! எனக்கும் தெரியவி;ல்லை. என்னை நம்புங்கள் மன்னா! நான் குற்றமற்றவன்” என்று மன்றாடினான்.
   
    மன்னன் நம்பவில்லை.

    “உண்மையை சொல்லும் வரை இந்த வேடனுக்கு தண்டனைக் கொடுத்துக் கொண்டே இருங்கள்.” என்று மன்னன் ஆணையிட… விதவிதமான தண்டனைகளை கொடுத்தும் வேடன் ஒரே பதிலையே திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். பாண்டிய மன்னனுக்கோ மேலும் குழப்பம் ஏற்பட்டது.

    ‘இது மனிதனால் தீர்க்கப்படும் பிரச்சனை அல்ல, தெய்வம்தான் இதற்கு தீர்ப்பு சொல்ல வேண்டும்”. என்று கருதிய மன்னன் அந்த அந்தணனிடன் அவனது மனைவிக்கு ஈமக்கடனை செய்யும்படி கூறினான். வேடனை சிறையிலிட்டான். மன்னனின் கட்டளை ஏற்று தனது மனைவிக்கு எல்லாவித ஈமக்காரியங்களையும் செய்துவிட்டு, மீண்டும் அரண்மனைக்கு வந்துவிட்டான்.

    பிராமணனை அரண்மனையிலே இருக்க வைத்துவிட்டு சோமசுந்தரப்பெருமானை நாடி திருக்கோவிலுக்கு சென்றான் பாண்டிய மன்னன்.

    “பெருமானே! என்னால் அந்தணனின் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை. அந்த பிராமணப் பெண்ணை கொன்றது வேடனா? அல்லது வேறு யாருமோ? தெரியவில்லை. இது விஷயத்தில் எனக்கு சாஸ்திரங்களும் துணை புரியவில்லை. இறைவா! இந்தப் பிரச்சனையைத் தீர்த்து எனக்கு அருள்புரிய வேண்டும்” என்று வணங்கி நின்றான் மன்னன்.

    “குலோத்துங்க பாண்டியனே! கேள். இந்நகரின் வெளியில் உள்ள ஒரு வீட்டில் இன்று இரவு ஒரு திருமணம் நடைபெறும். அங்கு உனது குழப்பத்திற்கு விடை கிடைக்கும். மனம் தெளிவடையச் செய்வோம்” என்று அசரீரி குரல் கூறியது. மன்னனும் இறைவனின் விருப்பப்படி நடக்க முடிவெடுத்தான்.

    மாலை நேரம் வந்தது.

    மன்னன் மாறுவேடம் மேற்க்கொண்டான். தன்னோடு அந்த பிராமணனையும் அழைத்துக் கொண்டு திருமண வீட்டிற்கு சென்று ஒரு ஓரமாக இருவரும் அமர்ந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு அருகே இருவர் பேசிக் கொண்டிருந்தனர். இருவருமே எமதூதர்கள். பொதுவாக அவர்கள் பேசிக்கொள்வது மனிதர்களுக்கு கேட்காது. கடவுளின் அருளால் அவர்கள் பேசுவது இவர்கள் இருவருக்கு மட்டும் கேட்டது.
   
    “இங்கே மணக்கோலத்தில் அமர்ந்திருக்கும் மணமகன் உயிரை எடுத்துவரும்படி நமது எமதர்மராஜா ஆணையிட்டிருக்கிறார். ஆனால் மணமகனோ நல்ல திடகாத்திரமாக நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார். நாம் என்ன செய்வது? அவனின் உயிரை எப்படி எடுப்பது?” என்று ஒருவன் கேட்க… மற்றொருவனோ…

    இதில் நமக்கென்ன கஷ்டம் இருக்கிறது? ஆரோக்கியமானவர்கள் உயிரை எடுக்கக் கூடாது என்று நமக்கு எதுவும் விதி விதிக்கப்படவில்லையே..! இன்று காலை கூட ஆலமரத்தின் அடியில் படுத்துக்கிடந்த பிராமணப் பெண்ணை என்றோ, யாரே ஒரு வேடனால் எய்யப்பட்டு மரத்தின் கிளைகளில் சிக்கியிருந்த அம்பை கீழே விழ வைத்து, அந்த அம்பை அந்தப் பெண்ணின் மார்பில் பாயச் செய்து உயிரை வாங்கவில்லையா? அதே போல் இப்போதும் செய்துவிடுவோம். வீட்டிற்கு வெளியே ஒரு மாடு நிற்கிறது. தாலி கட்டும் வேளையில் கெட்டி மேளம் சத்தமாக ஒலிக்கும். அந்த சத்தத்தில் மாட்டினை மிரள வைப்போம். அந்த மாட்டின் மூலம் மணமகனின் உயிரை எடுப்போம்” என்று யோசனை சொன்னான்.
   
    மன்னன் பிராமணனைப் பார்த்தான். தங்களின் குழப்பத்துக்கு விடை கிடைத்தது. இருந்தாலும் மேற்கொண்டு என்ன நடக்கிறது? என்று தெரிந்து கொள்வதற்காக அங்கேயே அமர்ந்திருந்தனர்.
   
    திருமண வீடு ஏகப்பட்ட ஆரவாரத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. வேதியர்கள் மங்கலம் முழங்கினர். மணமகன் கையில் மாங்கல்யம் தரப்பட்டது. மணப்பெண்ணின் கழுத்தில் கட்ட தயாரான போது கெட்டு மேளம் சத்தமாக முழங்கியது. பேரொலி கேட்ட பசுமாடு மிரண்டது. கத்தியபடி திமிறியது. கட்டியிருந்த கயிற்றை அறுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தது. கூடியிருந்த கூட்டனத்தினர் பயந்துபோய் விலகினர்.
   
    மாடு வேகமாக வருவதைப் பார்த்த மணமகன் அதை அடக்குவதற்காக மாடு மீது பாய்ந்தான். மாடு தனது கொம்புகளால் ஆவேசமாக மணமகனை குத்தி தூக்கியெறிந்தது. மணமகன் அந்த இடத்திலேயே பிணமானான். வாழ்த்து முழக்கம் மாறி அழுகை ஓலம் நிறைந்தது. என்ன செய்வது? விதி வென்றது.

    தனது மனைவி மரணமடைய வேண்டும் என்பது விதி. அதனால் அவள் இறந்தாள். இதைத் தெரியாமல் குற்றமற்ற அந்த வேடனை பலவாறாக துன்பத்துக்கு உள்ளாக்கியதை நினைத்து பிராமணனும் மன்னனும் வருந்தினர்.

    இருவரும் அரண்மனை திரும்பினர். நடந்த எல்லாவற்றையும் மன்னன் மற்றவர்களிடம் கூறினான். பின்னர் மன்னன் அந்த அந்தணரிடம் “நீ வேறொரு பெண்ணை மணந்து கொள்” என்று கூறி நிரம்ப பொருட்களைக் கொடுத்து அனுப்பிவைத்தான்.

    சிறையில் இருந்த வேடனை விடுதலை செய்தான். நடந்த தவற்றுக்கு வேடனிடம் மன்னன் மன்னிப்பும் கேட்டான். வேண்டிய செல்வங்களை கொடுத்து வழி அனுப்பி வைத்தான்.

    பாண்டிய மன்னன் அதன்பின்னர் திருக்கோவில் சென்று சோமசுந்தரப் பெருமானை வணங்கினான். “எம் பெருமானே! மிகப்பெரும் பழிச்சொல்லுக்கு ஆளாக இருந்தேன். தக்க வேளையில் என்னை வழிநடத்தி நீதி நிலைப்பெறச் செய்தாய்! உன் மகிமையே மகிமை!” என்று கூறி மனம் தொழுதான்.

வியாழன், டிசம்பர் 25, 2014

எனது முதல் சபரிமலை பயணம்

கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே போதும் ஐயப்ப சுவாமிகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். முதல் நாளிலே மாலை அணிந்து, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, கறுப்பு நிற உடையில் அவர்கள் நடமாடுவதே ஒரு தெய்வீக அழகுதான்.

எனக்கும் சபரிமலைக்குமான பந்தம் மிக சிறு வயதில் இருந்தே தொடங்கி விட்டது. அப்போதெல்லாம் சபரிமலைக்கு போவோர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் சபரிமலைக்குப் போக வேண்டும் என்ற ஆவல் தூங்க விடாமல் செய்யும். ஆனாலும் கடுமையான விரத முறைகள் பயத்தைக் கொடுக்கும். ஒருவேளை நாம் சரியாக விரத முறைகளை கடைப்பிடிக்காமல், ஐயப்பன் தண்டித்து விட்டால்... இந்த பயமே என்னை சபரிமலைக்குப் போக விடாமல் தடுத்தது.

வெகுகாலம் கழித்து, அதாவது 20 வருடங்களுக்கு முன்பு தான் மாலையணியாமலும் சபரிமலைக்கு போகலாம் என்பது தெரிய வந்தது. அது போதாதா...! அந்த வருடமே புறப்பட்டு விட்டேன். அதுவொரு பரவச அனுபவம். சிறுவயதிலிருந்தே கேட்டுப்பழகிய ""பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை. சுவாமியே ஐயப்பா, ஐயப்பா சுவாமியே....!'' என்ற பாடல் என் மனதில் தொடர்ந்து ரீங்காரம் இட்டுக் கொண்டே இருந்தது.


சபரிமலைக்கு எந்த பஸ்ஸில் ஏறுவது எங்கு போய் இறங்குவது என்ற எந்த விவரமும் தெரியாது. கடிதமும் ஒரு சில வீடுகளில் உள்ள டெலிபோன்கள் மட்டுமே தகவல் தொடர்பு சாதனமாக இருந்த காலம் அது. அதனால் யாரிடமும் விவரம் கேட்க முடியவில்லை. ஏற்கனவே சபரிமலைக்கு சென்று வந்தவர்களிடம் கேட்கலாம் என்றால், மாலையணியாமல் விரதம் இல்லாமல் அங்கெல்லாம் போகக்கூடாது என்று ஏதாவது ஒரு சுவாமி தடுத்து விடுவாரோ! என்ற பயத்தில் அவர்களிடமும் கேட்கவில்லை.

வெளியாட்களிடம் நான் கேட்டுத் தெரிந்து கொண்டது இரண்டு வி­ஷயங்கள் மட்டும்தான். மதுரையிலிருந்து சபரிமலைக்கு செங்கோட்டை, புனலூர் வழியாக ஒரு பாதையும், கம்பம், குமுளி வழியாக இன்னொரு பாதையும் இருக்கிறது, என்பது மட்டும்தான்.

 குமுளி வழியாக போவது தான் பக்கம். ஆனால் அப்போதெல்லாம் குமுளியிலிருந்து பம்பைக்கு நேரடி பஸ் கிடையாது. மாறி மாறித்தான் போக வேண்டும் என்றார்கள். இல்லையென்றால் ஜீப் போகும் என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொன்னார்கள். என்ன ஆனாலும் சரி. ஐயப்பனை இந்த முறை தரிசித்து விட வேண்டும் என்ற ஆர்வம் குமுளி போகும் பஸஸில் என்னை ஏறிக் கொள்ள செய்தது. 

பஸ்ஸில் நிறைய ஐயப்ப சுவாமிகள் இருந்தனர். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் கூனிக் குறுகிப் போனேன். நான் ஒருவன் மட்டும்தான் மாலை அணியாமல் போவது என்னவோ போல் இருந்தது. என்னை தண்டிக்க ஐயப்பன் கோபத்தோடு காத்திருப்பது போல திரும்பத் திரும்ப தோன்றியது.

பஸ்ஸின் கடைசி வரிசையில் ஒரு சுவாமி தனது ஐந்து வயது மகனுடன் உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

""சுவாமி! சபரிமலைக்கு எப்படி போகணும்? ''

முதன் முதலாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மாலை அணிந்திருக்கும் சுவாமிகளிடமே கேட்டு விட்டேன்.

""குமுளில இருந்து வண்டிப் பெரியார் வழியாப் போகறதுதான் பக்கம். ஆனா பஸ் இருக்காது. அதனால முண்டகாயம் வழியாவோ, எரட்டுபெட்டா வழியாவோ தான் போகணும்'' என்று மூன்று பாதைகளைச் சொன்னார். 

எனது பயம் இன்னும் அதிகமாகி விட்டது. மொழி தெரியாத ஊரில் நடு காட்டுக்குள் மாட்டிக் கொள்ளப் போகிறோம். மாலையணியாமல் வந்த நமக்கு நல்ல தண்டனையைக் கொடுக்கப் போகிறார் ஐயப்பன். 

மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. தவிப்புடனே குமுளி வந்து இறங்கினேன். நேரம் இரவு 12 மணியைக் கடந்திருந்தது. குளிர் என்றால் அப்படியொரு பேய்க் குளிர்! 

தமிழக எல்லையைக் கடந்து கேரளாவுக்குள் நுழைந்தால்... வரிசையாக நேந்திரம் பழ சிப்ஸ் சுடச்சுட போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஐயப்ப சுவாமிகள் அங்கு நின்று கொண்டு சூடாக டீ, காபி, சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 

அங்கு மட்டும்தான் வெளிச்சம் இருந்தது. பஸ் நிலையம் உட்பட மற்ற எல்லா இடங்களிலும் இருள் அப்பியிருந்தது. ஒரேயொரு பஸ் மட்டும் அது பஸ் நிலையம் என்பதற்கான அடையாளத்தை உணர்த்தி நின்று கொண்டிருந்தது.

 அது முண்டகாயம் போகும் பஸ். பம்பைக்கு காலை 7 மணிக்கு தான் அடுத்த பஸ் இருக்கிறதாம். கிடைப்பதில் ஏறிப் பயணத்தைத் தொடர்வது என்று ஏறி அமர்ந்து கொண்டேன். எல்லோரும் போர்த்திக் கொண்டு கூனிக்குறுகி உட்கார்ந்திருந்தார்கள்.

குளிருக்கு வேண்டிய உடைகள் எடுத்து வராததால் எனது உடல் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. பற்கள் தானாக தந்தியடித்தன.

ஒரு மணி நேரம் கழித்து பஸ் புறப்பட்டது. முண்டகாயம் வந்து சேர்ந்த போது பொழுது புலர்ந்திருந்தது. அங்கும் குளிர்தான் என்னை விடாமல் விரட்டிக் கொண்டிருந்தது. 

சூடாக எத்தனை டீ, காபி குடித்தாலும் அந்தக் குளிர் என்னை விட்டு விலகுவதாக இல்லை. அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து பம்பை வந்து சேர்ந்து விட்டேன். காலை 9 மணி ஆகியிருந்தது. இதமான வெயில் குளிருக்கு சுகமாக இருந்தது. பம்பையில் நீராடுவது மிகப் புனிதம் நிறைந்தது. 

நானும் குளிரைப் பொருட்படுத்தாமல் ""சாமியே! சரணம்!'' என்று நதியில் மூழ்கி எழுந்தேன். குளிர் பறந்தோடியது. பூமியில் ஐயப்பன் அவதரித்தது இந்த பம்பை நதிக் கரையில்தான். அந்த நதியில் குளிப்பதும் அதில் கன்னி சுவாமிகள் வாழை மட்டையில் தெப்பங்கள் செய்து விளக்கேற்றி ஆற்றோடு விடுவதும் மெதுவாக ஓடும் நீரில் அலுங்காமல் குலுங்காமல் அந்த தெப்ப தீபங்கள் மிதந்து செல்வதும் அழகோ அழகு.பம்பா நதியில் குளித்த பின் மலை மீது ஏறத் தொடங்கினேன். முதலில் நீலிமலை ஏற்றம் வருகிறது. செங்குத்தாக இருக்கும் இந்த ஏற்றத்தில் ஏறுவதற்குள் மூச்சு வாங்குகிறது. அங்கு நிலவும் குளிரையும் மீறி வியர்த்தது. அதன் உச்சி அப்பாச்சி மேடு.

அதிலிருந்து சற்று தூரம் சென்றால் சமநிலமாக வருகிறது சபரி பீடம். இங்குதான் ராமனை காண்பதற்காக பெண் பக்தை சபரி அமர்ந்த நிலையில் தவம் செய்தாராம். இவரின் பெயரில்தான் இந்த மலையை சபரிமலை என்று அழைக்கிறார்கள். 

சபரி பீடத்திற்கு அருகிலேயே சரங்குத்தி ஆல் உள்ளது. இங்கு கன்னி சுவாமிகள் தங்களுக்கு துணையாக வந்த சரத்தை (அம்பு)  இங்கு விடுவிக்க வேண்டும். (சரம் என்பது எருமேலியில் முதல் முறையாக வரும் கன்னி சுவாமிகளுக்கு கொடுக்கப்படுவது) பல கன்னி சுவாமிகள் தங்கள் குருசாமியர் உதவியால் இதை செய்து கொண்டிருந்தார்கள்.


சரங்குத்தி ஆல் முடிந்தவுடனே ஐயப்ப சுவாமிகளிடம் ஒரு புத்துணர்வு பெற்றது போல் நடை வேகமெடுக்கிறது. தங்களின் தலை மேல் உள்ள இருமுடியை இறுக்க பிடித்தபடி வேகமாக ஓடுகிறார்கள். இந்த வேகத்திற்கு என்ன காரணம் என்பது மெதுவாகத்தான் எனக்கு புரிந்தது. 

சன்னிதானம் அருகில் வந்து விட்டது. என்பதற்கான அடையாளம் இது! மாலை அணிந்த சுவாமிகள் எல்லாம் வரிசைப்படி தான் படியேற வேண்டும். நானும் அவர்கள் வரிசையில் நின்றேன்.

""ஐயப்பா! மாலை போடாதவங்க இங்க நிக்க வேண்டாம். இது 18ம் படி வழியா போறவங்க நிக்கிற வரிசை. நீங்க அப்படியே சைடுல போனீங்கனா சன்னிதானத்துக்கு போயிடலாம்!'' என்று ஒரு சுவாமி சொல்ல அப்படியே செய்தேன். வரிசை மிக நீண்டு இருந்தது. நான் மேல வந்து விட்டேன்.தங்க கூரையில் ஐயப்பனின் சன்னிதானம் தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது. வரிசை மெதுவாக நகர நகர ஐயப்பனை நெருங்கிக் கொண்டே வந்தேன். எல்லையில்லா பரவசம் மனம் முழுவதும் படர்ந்திருந்தது. அமர்ந்த நிலையில் அமைந்திருக்கும் ஐயப்பனின் அந்த உருவம் சட்டென மனதில் ஒட்டிக் கொண்டது.

'தண்டிப்பாரோ!' என்று பயத்துடன் வந்த என்னை சாந்தமாக ஐயப்பன் பார்த்துக் கொண்டிருந்தார். 'நான் இருக்கிறேன். கவலைப்படாதே!' என்று ஆறுதல் சொல்வது போல் ஐயப்பனின் அழகு இருந்தது. 

தரிசனம் முடித்து பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பின்பு சன்னிதானத்திற்கு இடது புறம் இருக்கும் மாளிகைபுர தேவியை வணங்கினேன்.


எல்லாம் நல்லபடியாக முடிந்தது. அதுவரை அடங்கியிருந்த அகோர பசி வயிற்றுக்குள் எழுந்தென்னைத் தாக்கியது. அருகிலேயே அன்னதானம் செய்தார்கள். திருப்தியாக சாப்பிட்டேன். 

இரவு சரியான தூக்கம் இல்லாததும் நடந்த களைப்பும், உண்ட மயக்கமும் ஒன்றாக கலந்து அசத்த அங்கேயே படுத்து தூங்கினேன். எல்லா சுவாமிகளும் அப்படித்தான் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

தூங்கி எழுந்ததும் மீண்டும் ஐயப்பனை தரிசித்தேன். பார்க்க பார்க்க திகட்டாத அழகாக ஐயப்பனின் உருவம் இருந்தது. நடை சாத்தும் வரை அங்கேயே இருந்தேன். 

நடை சாத்துவதற்கு முன்பு 'ஹரிவராசனம்'  பாடல் இசைக்கத் தொடங்கியது. 32 வரிகள் கொண்ட இந்தப் பாடலை ஐயப்பனுக்கான தாலாட்டுப் பாடலாக கருதுகிறார்கள். 

புகழ்பெற்ற பாடகர்கள் பலர் இந்தப் பாடலைப் பாடியிருந்த போதும் ஜேசுதாஸ் பாடிய பாடலே இங்கு ஒளிபரப்பப்படுகிறது.

அமைதியான இரவில் மலையின் குளுமையில் பாந்தமான குரலில் ஒலித்த இந்தப் பாடல்  நம் மனதை என்னவோ செய்கிறது. மலையில் இருந்து கீழே இறங்கினேன். 

வெகுதூரம் வரை 'ஹரிவராசனம்' கேட்டுக் கொண்டே இருந்தது. இதற்குப் பின் பலமுறை சபரிமலைக்கு வந்து போய்விட்டேன். இருமுடி கட்டி 18 படிகளிலும் ஏறி விட்டேன். ஆனாலும் நான் முதன் முதலில் சபரி மலைக்கு வந்த அனுபவத்தை  மறக்கவே முடியாது.


இப்போது பெரிய பாதை வழியாக பயணித்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அதை ஐயப்பன் என்று நிறைவேற்றப் போகிறாரோ..?
        

ஞாயிறு, டிசம்பர் 21, 2014

நடராஜரை சிலை வடித்த சித்தர்கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர் கருவூரார். போகரின் சீடர்களில் ஒருவர். கருவூராரின் தாய், தந்தை ஒவ்வொரு ஊராகச் சென்று அங்குள்ள கோவில்களுக்கு விக்ரகங்களை செய்து கொடுத்து வந்தனர். அதில் கிடைத்த வருவாயில் முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது அவர்கள் வழக்கம்.

    சிறுவயதிலிருந்தே சித்தர்களின் பழக்கம் ஏற்பட்ட காரணத்தால், மிகக்குறைந்த வயதிலேயே மனித வாழ்வின் நிலையாமையை உணர்ந்து சித்தராக மாறினார் கருவூரார். அவர் பல திசைகளுக்கும் சென்று அங்குள்ள சிவாலயங்களுக்கு தங்கத்தால் ஆன சிவலிங்கங்களை உண்டாக்கினார்.

    போகரின் சீடர்களில் கருவூர் சித்தர் பிரதான சீடராக இருந்தார். ஒருமுறை சோழ மன்னர் ரணியவர்மன் தீர்த்த யாத்திரை சென்றிருந்தார். பல புண்ணிய தலங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்துவந்தார். இறுதியாக தில்லை நகரை வந்தடைந்தார். அங்கிருந்த சிற்றம்பல குளத்தில் நிறைந்திருந்த சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடினார். அப்போது தண்ணீருக்குள் மனதை ரம்மியமாக்கும் இனிய ஓங்கார நாதம் ஒலித்தது. மன்னனுக்கு ஒரே ஆச்சரியம்! தண்ணீருக்குள் இருக்கும் வரை அந்த ‘ஓம்’ என்ற நாதம் கேட்டது. தண்ணீரை விட்டு வெளியே வந்தவுடன் நாதம் கேட்கவில்லை. மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கினால் அதே இனிய நாதம் ஒலித்தது.

    இந்த இனிய ஒலி எங்கிருந்து வருகிறது? என்பதை தெரிந்து கொள்வதற்காக மீண்டும் நீருக்குள் மூழ்கினார். அங்கு ஆடல் நாயகனின் அற்புத நடனத்தைக் கண்டார்.

மெய்சிலிர்த்து போனார். 

மீண்டும் மீண்டும் கண்டு பரவசப்பட்டார். பின்புதான் கண்ட அற்புதக் காட்சியை ஓவியமாக வரைந்தார். உலக மக்கள் அனைவரும் அந்தக் காட்சியைக் காண வேண்டும்.  அதற்கு என்ன வழி என்று சிந்தித்தார். கடைசியாக அந்த அற்புத வடிவத்தை சொக்கத் தங்கத்தில் விக்கிரகமகாச் செய்து எல்லோரும் தரிசனம் செய்யும்படி அமைக்க முடிவு செய்தார்.

    நாட்டின் தலைச்சிறந்த சிற்பிகளை தேர்ந்தெடுத்தார். அவர்களிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டி “கை தேர்ந்த சிற்பிகளே! நான் தீர்த்த நீராடும் போது ஓர் அற்புத காட்சியைக் கண்டேன். அதை அப்படியே ஓவியமாக வடித்துள்ளேன். இந்த ஓவியத்தை அப்படியே தூய்மையான தங்கத்தால் விக்கிரகமாக வடிவிக்க வேண்டும். அதில் ஒரு துளி செம்போ வேறு உலோகமோ கலந்துவிடக்கூடாது. 48 நாட்களுக்குள் அந்த விக்ரகத்தை தயார் செய்ய வேண்டும்” என்று மன்னர் சிற்பிகளுக்கு அன்பு கட்டளையிட்டார்.

    சிற்பிகள் தங்குவதற்கு இடம், உணவு போன்ற வசதிகள் செய்யப்பட்டன. அனுபவம் நிறைந்த அந்த சிற்பிகள் எவ்வளவோ முயன்றும் கூட விக்கிரகத்தை தூய்மையான தங்கத்தால் உருவாக்க முடியவில்லை. மன்னர் கொடுத்த கெடுவில் 47 நாட்கள் எந்த பயனுமில்லாமல் போய்விட்டன. மறுநாள் மன்னருக்கு என்ன பதில் சொல்வது என்று கையைப் பிசைந்த கொண்டு நின்றனர்.

    அதே வேளையில் சித்தர் போகர் தனது சீடரான கருவூராரை அழைத்தார். “கருவூரா! தில்லையில் நடராஜர் திருவுருவை அமைக்க சிற்பிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர். நீ உடனே அங்கே போ! விக்கிரகம் செய்ய வேண்டிய வழிமுறைகளை நான் உனக்கு கற்றுக்தந்திருக்கிறேன். நீ போய் அந்த வேலையை செய்து முடி!” என்று கூறி தனது சீடரை அனுப்பிவைத்தார்.

    நாற்பத்தெட்டாவது நாள்.

    சிற்பிகளுக்கு மன்னர் கொடுத்த கடைசிநாள். 

என்ன நடக்கும்? என்பதை யாராலும் யூகிக்க முடியாத மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முன் கருவூரார் போய் நின்றார்.

    “கவலைப்படாதீர்கள் சிற்பிகளே! மன்னரின் விருப்பப்படி நடராஜரின் விக்கிரகத்தை நான் செய்து தருகிறேன்” என்று ஆறுதல் கூறினார். ஆனால் சிற்பிகள் யாருக்கும் கருவூரார் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.

    “அனுபவம் நிறைந்த எங்களாலேயே முடியாத போது தங்களால் மட்டும் எப்படி முடியும்?" என்றனர். அதற்கு “என்னால் முடியும்” அதுவும் ஒரு மணி நேரத்தில் இதை செய்து முடிக்கிறேன்” என்றார். 

எல்லோரும் ஆச்சரியத்தோடு கருவூராரைப் பார்த்தனர். அந்த பார்வையை கண்டு கொள்ளாமல் கருவூரார் விக்கிரகம் செய்ய வேண்டிய அறைக்குள் நுழைந்து தாழிட்டுக்கொண்டார். ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் கதவை திறந்து வெளியே வந்தார்.

 “விக்கிரகம் மிக அழகாக வந்துள்ளது. எல்லோரும் போய் பாருங்கள்”. எல்லா சிற்பிகளும் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் அறைக்குள் நுழைந்தார்கள். அங்கு நடராஜரின் திருவுருவச்சிலை தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது.

    அதைப்பார்த்து மதி மயங்கிய சிற்பிகள் கருவூராரை அலட்சியப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டனர். அவர்களுக்கு சிற்பகலை நுணுக்கங்களை உபதேசித்துவிட்டு மடத்தை நோக்கி சென்றார்.

    மறுநாளும் வந்தது. மன்னர் விடிவதற்குள் வந்துவிட்டார். பக்தி பரவசத்துடன் காணப்பட்ட மன்னர் நேராக சிலை இருந்த அறைக்குள் சென்றார். சிலையின் அற்புத அழகில் மனம் சொக்கிப் போனார். அங்குலம் அங்குலமாக சிலையைப் பார்த்து பரவசப்பட்டார். தனது ஓவியத்தில் காணப்படாத ஒரு அருள்சக்தி இந்த சிலையில் இருப்பதை உணர்ந்தார். மன்னனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

    “இறைவா! என் மனக்கண்ணில் தோன்றிய உன்னை உருவகப்படுத்திவிட்டேன். இந்த நிமிடம் உலகை வென்ற மகிழ்ச்சி எனக்கு!” என்று கூறி, சிற்பிகள் பக்கம் திரும்பினார். “அபாரம்! சோழநாட்டு சிற்பிகள் கலைகளுக்கு பேர் போனவர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். உங்கள் திறமைக்கு ஏராளமான சன்மானம் கொடுக்கப்போகிறேன்” என்றார்.

    அதற்குள் அமைச்சர் “மன்னரே! அவசரம் வேண்டாம். சிலையை சோசித்துப் பார்த்து பின் வெகுமதி தரலாமே!" என்றார். மன்னரும் “சிற்பிகளே! விக்கிரகம் செய்யும் போது கீழே விழுந்து சிதறிய தங்கத்துகள்களை எடுத்து வாருங்கள் சோதித்து விடுவோம்” என்றார். சிற்பிகளும் கொண்டு வந்து கொடுத்தனர்.

    சோதனை செய்தப்பின் மன்னரின் முகம் கொடூரமாக மாறியது. “சிற்பிகளே, உங்களை நம்பித்தானே இந்த வேலையை ஒப்படைத்தேன். எனது நம்பிக்கைக்கு விரோதமாக நடந்து கொண்டீர்களே… சிலையில் சிறிது செம்பை கலந்து என்னிடம் நம்பிக்கை மோசடி செய்துவிட்டீர்கள்.” என்று கோபமாகக் கேட்டார்;.

    சிற்பிகள் பயந்து நடுங்கினர். “மன்னா! எங்களை மன்னியுங்கள். நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். எங்களால் சிலையை உருவாக்க முடியவில்லை. ஒரு அடியார்தான் இந்த சிலையை உருவாக்கினார்” என்றனர்.

    மன்னருக்கு ஒரே திகைப்பு “அடியார் செய்தாரா?” என்றவர். “அழையுங்கள் அந்த அடியாரை, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை ஒன்றுதான். அடியார் என்பதால் விதிவிலக்கு இல்லை” என்று கட்டளையிட்டார்.

    நான்கு திசைகளிலும் சென்ற காவலாளிகள் கருவூராரைக் கண்டு, கைது செய்து அழைத்துவந்தனர். கருவூராரை உற்றுப்பார்த்த மன்னர் “இவரை சிறையில் அடையுங்கள். மோசடி செய்த இந்த அடியாருக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதை நாளை யோசித்து சொல்கிறேன்” என்றார். மன்னர் ஆணைப்படி கருவூரார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மன்னருக்கு நடராஜர் சிலையின் அழகு மனதை வசியப்படவைத்தது. நடராஜர் விக்கிரகத்துடன் அரண்மனைக்கு சென்றார். அங்கு இருந்த ஒரு பீடத்தின் மீது விக்கிரகத்தை வைத்தார். அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். மனதுக்கள் பரவசநிலை ஏற்பட்டது. கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.


     "இறைவா! இந்த அற்புதத்தை காணத்தான் கண்களைப் படைத்தாயா…!இந்த பரவசத்தை அனுபவிக்கத்தான் மனதைப் படைத்தாயா…! காலமெல்லாம் உன் திருவுருவை தரிசித்துக் கொண்டிருந்தாலே போதுமே...! அடியேனுக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்” என்று மனமுருகி இறைவனிடம் மானசீகமாக உரையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது மன்னர் முன் பிரகாசமான ஒளி ஏற்பட்டது. கண்ணை கூசச் செய்யும் ஒளியில் மன்னர் பிரம்மித்துப் போனார்.

மன்னனின் முன்னால் தோன்றிய பிரகாசமான ஒளி மறைந்ததும் அந்த இடத்தில் சித்தர் போகர் தோன்றினார்.

போகரின் பின்னால் அவரது சீடர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு மூட்டை இருந்தது. மூட்டைக்குள் தங்கம் நிறைந்திருந்தது. ஒரு சீடர் கையில் தராசை வைத்திருந்தார்.

போகரும், அவரது சீடர்களும் மன்னன் முன்பு திடீரென்று தோன்றியதில் அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எழுந்து நின்று கைகளை குவித்து வணங்கினான்.

    “மன்னா! என் சீடன் என்ன தவறு செய்தான்? அவனை ஏன் சிறையில் அடைத்து வைத்திருக்கிறாய்? யாருக்கும் கெடுதல் நினைக்காக அவனை சிறையில் அடைத்ததுதான்.. உன் ஆட்சியின் லட்சணமா…?" என்று போகர் கேட்க.

    “சுத்தமான தங்கத்தில் சிலையை செய்ய வேண்டும் என்பதுதான் நான் சிற்பிகளுக்கு இட்ட கட்டளை. ஆனால் தங்கள் சீடரோ தங்கத்தில் செம்பை கலப்படம் செய்து சிலையை உருவாக்கி உள்ளார். இது மோசடிதானே…! அந்த மோசடிக்குத் தண்டனையாகத்தான் சிறையில் அடைத்தேன்!” என்றார் மன்னர்.

    “மன்னா! உலோகங்களின் தன்மையறியாமல் பேசாதே! நூறு சதவீதம் தூய்மையான தங்கத்தில் யாராலும் விக்கிரகம் செய்யமுடியாது. அதில் கொஞ்சம் செம்பைக் கலந்தால் தான் செய்ய முடியும். அப்படி கலக்கச் சொன்னதே நான்தான்! அதற்கு காரணமும் இருக்கிறது. தூய தங்கத்தில் சிலை செய்து வைத்தால் அதிலிருந்து கிளம்பும் ஒளி, நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே போகும். அது பார்ப்பவர்கள் கண்களையே குருடாக்கிவிடும். இந்த அறிவியல் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.

    இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் எனது சீடன் கருவூரான் பலவிதமான மூலிகைச்சாறுகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டி விக்கிரகமாக வடிவமைத்திருக்கிறான். இந்த உண்மையெல்லாம் யாருக்கும் தெரியாது. ஏன் உனக்கும் கூட தெரியாது. சரி, நடந்தது நடந்துவிட்டது. இப்போது விஷயத்துக்கு வருகிறேன். நீ விக்கிரகம் செய்யக் கொடுத்த தங்கத்தைவிட கூடுதலாகவே சொக்கத் தங்கத்தை கொடுத்துவிடுகிறேன். அளவிட்டு எடுத்துக்கொள்” என்று கண்கள் சிவக்க கோபமாகக் கூறினார போகர்.

    தராசை மன்னனின் முன்னால் வைத்தார்கள் சீடர்கள். நடராஜர் சிலையை ஒரு தட்டில் வைத்தனர். மற்றொரு தட்டில் மூட்டைகளில் கொண்டு வந்திருந்த தங்கத்தைக் கொட்டினர். தங்கம் தட்டில் விழவிழ அந்த தட்டு கீழே நடராஜர் சிலை இருந்த தட்டு மேலே சென்றது.

    “மன்னா! தராசைப் பார்த்துக்கொள். இரண்டில் எது அதிகம் என்பது உனக்கே தெரியும். நீ கொடுத்த தங்கத்தை விட நான் கூடுதலாகவே உனக்கு சொக்கத் தங்கத்தை கொடுக்கிறேன். அதை எடுத்துக்கொள். என் சீடன் அற்புதமாக வடிவமைத்த நடராஜர் சிலையை நான் என்னோடு எடுத்துச் செல்கிறேன்” என்று கூறிய போகர் நடராஜர் சிலையை எடுத்துக்கொண்டு புறப்படத்தயாரானார்.

நடந்த எல்லாவற்றையும் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்த மன்னன் போகரின் முடிவைக் கண்டு திடுக்கிட்டான். ஓடோடிச் சென்று போகரின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி மன்றாடினான்.

    “மன்னா, எழுந்திரு! நடராஜரை உனக்கேத் தருகிறேன். கவலை கொள்ளாதே! என் சீடனை எனக்கு நீ திருப்பித்தர வேண்டும்” என்றார். அதைக் கேட்ட மன்னன் உடனே கருவூராரை சிறையில் இருந்து விடுதலை செய்யும்படி உத்தரவிட்டான்.
   
    சிறைச்சாலைக்கு சென்ற காவலர்கள் பதட்டத்தோடு ஓடிவந்தனர். “மன்னரே! சிறையில் கருவூரார் இல்லை!” என்றனர். மன்னன் குழம்பிப் போனான். பூட்டிய பூட்டு பூட்டியபடியே இருந்தது. அப்படியிருக்கும் போது இவரால் எப்படி வெளியே செல்லமுடியும் என்று திகைத்துப் போனார்.

    “மன்னா! கலங்காதே! எனது உத்தரவு இல்லாமல் என் சீடன் எங்கேயும் செல்லமாட்டான். கருவூரா.. கருவூரா..!” போகர் குரல் கொடுத்தார். “குருவே! நான் எங்கும் செல்லவில்லை. இங்கேதான் இருக்கிறேன்." 

சிறைக்குள் இருந்து கருவூரார் குரல் மட்டும் கேட்டது.மாயமாய் இருக்கும் சித்தரின் குரல் மட்டும் கேட்கிறதே என்று ஆச்சரியப்பட்டான் மன்னன். 

“இது சித்தர்களின் சக்தி மன்னா! சித்தர்கள் மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாமல் மறைந்திருப்பது, காலங்காலமாக நடந்து வரும் அற்புதம்தான். கருவூரா  மறைந்திருந்தது போதும். எல்லோர் கண்களுக்கும் புலப்படும் விதமாக வா” என்றார்.

    உடனே அனைவரும் காணும் விதமாக கருவூரார் வெளியே வந்தார். போகர் அரசரிடம் “அரசே! உலகில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதங்காகவே நியமிக்கப்பட்டன் என் சீடன் கருவூரான். அவன் மூலமாக மக்கள் இறைவனை உணர்வார்கள். இந்த நடராஜர் சிலையை நீயே வைத்துக்கொள்” என்று மன்னரிடம் ஒப்படைத்தார்.


மேலும் கோயில் அமைய வேண்டிய முறை எந்த தெய்வங்கள் எந்த இடத்தில் எப்படி வைக்க வேண்டும். நடராஜரை எங்கு பிரதிஷ்டை செய்து எவ்வாறு புஜை செய்ய வேண்டும் என்ற அனைத்து விவரங்களையும் கருவூரார் மன்னனுக்குச் சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

    கருவூரார் சிறிது காலம் யாருடனும் பேசாமல் மவுனமாக இருந்தார். மவுனமாக இருக்கும் கருவூராரை பார்த்து ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர். மக்கள் தாங்களே வலியச் சென்று அவருடன் பேசினர். அவர்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார். 

“வீணாக நேரத்தைக் கழிக்காதீர்கள். எப்போது வேண்டுமானாலும் இந்த உடலுக்கு எமனால் தீங்கு ஏற்படலாம். வழிபாடு மூலம் தெய்வத்திடம் உயிரை ஒப்படையுங்கள்”.

    கருவூராரின் இந்த உபதேசத்தைக் கேட்க மக்கள் தயாராக இல்லை. 

“வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்றால் நன்றாக சம்பாதிக்க வேண்டும். அதை விட்டு விட்டு சதா சர்வ காலமும் அம்மனை வழிப்பட்டுக் கொண்டிருந்தால் மழைதான் பெய்திடுமா, பயிர்கள்தான் விளைந்திடுமா. வழிபாடு செய்வதால் எந்த பயனும் இல்லை” என்றனர்.
   
    இந்த வாதம் கருவூராருக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தியது. வழிபாட்டின் மகிமையை இந்த மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அந்த மக்களிடம் “இது வெயில் வாட்டி வதைக்கும் கோடை காலம் இந்த காலத்தில் மழை பொழியாது. இப்போது மழை பொழிந்து, அம்மன் கோயில் தானாக திறந்து பூஜை வழிபாடு நடந்தால், நீங்கள் தினமும் அம்மனை வழிபடத்தயாரா?!" என்று கேட்டார்.

    மக்கள் கருவூரார் சொன்னதைக் கேட்டு ஏளனமாக சிரித்தனர். “இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மழை பொழியப் போகிறதாம்! வேடிக்கை…!” என்று பரிகாசம் செய்தனர். கருவூரார் மனதுக்கள் வெதும்பி வேதனையாகச் சிந்தார்.

    “தாயே! தேவியே! அறியாமையில் இருக்கும் இந்த மக்களுக்கு நல்வழி காட்ட மாட்டாயா? உடலை வளர்ப்பதும் அதற்காக உணவு தேடுவதும், அந்த உணவுக்காக பொருள் தேடுவதும் மட்டும்தான் வாழ்க்கை என்று இருக்கும் இவர்களுக்கு ஞானத்தை தரமாட்டாயா?" என்று உள்ளம் உருகினார்.

    சூரியன் நடுவானில் இருக்கும் நன்பகல் அது. உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அந்த கோவில் மேலே திடீரன்று வானம் கருத்தது. 

மேகம் திரண்டது. 

மழை கொட்டோ கொட்னென கொட்டி தீர்த்தது. பூட்டிக்கிடந்த கோயில் கதவுகள் தானாக திறந்து கொண்டன. 

மணல் மட்டுமே தகித்துக் கொண்டிருந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவிலில் தானாகவே பூஜைகள் நடந்தன. இதையெல்லாம் பார்த்து மக்கள் வாடைத்து நின்றனர்.

    இந்த அற்புதங்களுக்கு இடையே கருவூரார் பூதங்களை தமக்கு குடைபிடித்து வரச் சொல்லி அந்த ஊர் மக்களை சந்தித்தார். 

“மானிடர்களே! தெய்வசக்தி மிக உயர்ந்தது. தெய்வத்தின் அருள்தான் எல்லாவற்றையும் நடத்திவைக்கிறது.  நீங்கள் முடியாது என்று சொன்னவற்றை நான் செய்து முடித்து விட்டேன். இனியாவது தேவியை வழிபாடு செய்யுங்கள்” என்று கூறிவிட்டு புண்ணிய தலங்களை தரிசிக்கச் சென்றுவிட்டார்.

    கருவூரார் பல புண்ணியத் தலங்களை வணங்கி வந்து கொண்டிருந்த போது, அவர் முன் ஒரு காகம் வந்து அமர்ந்தது. அதன் அலகில் ஒரு ஓலை இருந்தது. அதை அவர் முன்வைத்து அந்த ஓலை தன் குருநாதர் போகரிடம் இருந்து வந்திருப்பதை தெரிந்து கொண்ட கருவூரார் எடுத்துப் படித்தார். கண்களில் ஏற்றிக்கொண்டார்.

    அதில் “கருவூரா! உடனே தஞ்சைக்கு வந்து சேர்” என்று எழுதப்பட்டிருந்தது. 

கருவூராரும் தஞ்சை நோக்கிப் புறப்பட்டார். தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் பெரிய சிவாலயம் ஒன்றை நிர்மானித்தான். தனது பெயரை வரலாற்றில் கம்பீரமாக பதிவு செய்யும் நோக்கத்தில் அற்புத சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த சிவாலயத்தை கட்டி முடித்தான்.

    அந்த ஆலயத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும் போது பந்தனம் செய்யமுடியாமல் கட்டு அவிழ்ந்து கொண்டே இருந்தது. அதன் காரணம் புரியாமல் சோழ மன்னன் குழம்பினான். கண்ணீர் விட்டு அழுதான். கூட்டத்தில் ஒருவராக மறைந்து நின்ற போகர் இதைக்கேட்டுக் கொண்டிருந்தார். உடனே தனது சீடனை வரச்சொல்லி ஓலை அனுப்பினார்.

    கருவூராரும் வந்தார். லிங்கத்தை பந்தனம் செய்ய முடியாததற்கான காரணத்தை ஞான திருஷ்டியால் பார்த்தார். அதைத் தடுத்துக் கொண்டு ஒரு பிரம்ப ராட்சஷி நிற்பதைக் கண்டார். உடனே மனதுக்குள் மந்திரம் ஜெபித்தார். ராட்சஷி மீது எச்சிலைக் காறி உமிழ்ந்தார்.

    கருவூராரின் எச்சில் பட்டதும் பிரம்ம ராட்சஷி கருகிச் சாம்பலானாள். அதன் பிறகு கருவூராரே முன்னின்று அஷ்டபந்தனம் செய்து சிவலிங்க பிரதிஷ்டையும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் செய்து வைத்தார். கும்பாபிஷேகமும் சிறப்புற நடந்து முடிந்தது. கருவூராருக்கு நன்றி செலுத்தும் விதமாக தஞ்சைப் பெரிய கோவிலில் கருவூராரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    கடைசியாக கருவைறக்குள் சென்ற கருவூரார் அங்கிருக்கும் சிவலிங்கத்தை தழுவினார் என்றும், எந்தக் கருவிலும் ஊறுதல் செய்யாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார் என்றும் ‘கருவூரன் மூப்பு சூத்திரம்’ கூறுகிறது.

சித்தர்களில் பல அற்புதங்களை நடத்திய பெருமை கருவூராருக்கு உண்டு.

வெள்ளி, டிசம்பர் 05, 2014

திருப்புவனம்


துரை அருகே இருக்கும் திருப்புவனம் கோவிலில் வேலைப் பார்ப்பவர்கள் பலர். அதில் தேவர் அடியார்களாகவும் பல கன்னிகையர் பணிபுரிந்து வந்தனர். அந்தப் பெண்களில் ஒருத்திதான் பொன்னனையாள். அவள் இறைவன் மீது அளவற்ற பற்றுக் கொண்டவள். இறைவனுக்காக என்னவும் செய்ய சித்தமாக இருந்தாள்.


பெண்களே கண்டு பொறாமைக் கொள்ளும் பேரழகோடு திகழ்ந்தாள். இன்னும் சில பெண்கள் இவளை மணந்துக்கொள்ள தாங்கள் ஆணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்கினர். அழகில் அவள் ரதியாக இருந்த போதும், பாடலிசைப்பதில் அவளுக்கு இணையாக ஒரு பெண்ணைப் பார்க்க முடியாது. பாடிக் கொண்டே நடனம் ஆடுவதற்கு மிகுந்த திறமையும் அனுபவமும் வேண்டும். அது பொன்னனையாளிடம் கொட்டிக்கிடந்தது.

இப்படி அழகிலும் திறமையிலும் திக்குமுக்காட வைக்கும் பெண்களிடம் இயல்பாகவே யாரையும் மதிக்காத ஆணவப்போக்கு இருக்கும். ஆனால் இவளிடம் ஆணவம் இல்லை. அன்பு இருந்தது.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பொன்னனையாள் தினமும் அதிகாலையில் எழுந்து சலசலத்து ஓடும் வைகையில், தனது தோழியரோடு நீராடிவிட்டு தியானத்தில் ஈடுபடுவாள். சிவனை தியானித்தப்பின் சிவ பூஜை செய்வாள். அது முடிந்ததும் நேராக திருப்புவன நாதனை வணங்கி, ஒரு தேவ நடனம் ஆடுவாள். திருத்தமான அந்த நடனத்தில் எந்தக்குறையும் கண்டுபிடிக்க முடியாது. நடனத்தாலே இறைவனை தொழுது முடிப்பாள்.

அதன்பின் தோழிகள் புடைசூழ வீட்டிற்கு வருவாள். தன் இல்லம் தேடி வரும் சிவனடியார்களுக்கு அமுது படைப்பதற்காக சமையல் வேலையைத் தொடங்குவாள். சிவனடியார்களை சிவன் என்றே நினைத்து பாவிப்பாள். அவர்களை மனம் மலர வரவேற்று உணவுப் படைப்பாள். அவர்கள் அனைவரும் சாப்பிட்டு எஞ்சியிருக்கும் உணவை தேவமிர்தமாக உண்டு பசியாறுவாள்.

இப்படி சதாசர்வகாலமும் சிவனையே நினைத்து வாழ்வு நடத்தும் பொன்னனையாளுக்கு மனம் நிறைந்த கனவு ஒன்று இருந்தது. அது திருப்புவனம் கோவிலுக்கு சிவபெருமானின் உற்சவ சிலையை செய்து அளிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நடனம் மூலம் கிடைக்கும் வருமானம் தனது ஆசையை நிறைவேறும் விதமாக இல்லை. வரும் வருமானம் முழுவதும் அடியார் பூஜைக்கே செலவானது. எவ்வளவு முயன்றும் பணத்தை சேமிக்க முடியவில்லை. ப்படியிருக்கையில் எப்படி சிவனின் உற்சவ சிலையை செய்யமுடியும்? அதனால் வருத்தத்தில் இருந்தாள்.

தினமும் சிவனடியார்களுக்கு விருந்து படைப்பது விருப்பமான நிகழ்ச்சியாக இருந்தாலும் மனதுக்குள் சிவனின் சிலையை வடிவமைக்க முடியவில்லை என்ற வருத்தம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் வழக்கம் போல் சிவனடியார்களுக்கு திருவமுது படைக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. எல்லா சிவனடியார்களும் அமுதுண்டு சென்றனர். ஒரேயொரு சிவனடியார் மட்டும் உணவருந்தாமல் யாரிடமும் பேசாமல் தனித்து நின்றிருந்தார்.

தூய திருநீறு அணிந்திருந்த மேனியும் யோக பட்டினைக் கட்டிய இடையும் இடுப்பு ஆடையில் விபூதிப் பையும் கொண்டிருந்த அவர் மகாஞானம் வாய்ந்த சித்தராகவே தெரிந்தார். மற்ற சிவனடியார்களைவிட இவரிடம் தெய்வாம்சம் நிறைந்திருந்தது. அதனாலே எல்லோரின் கவனமும் அவர் மீது திரும்பியது.

சிவனடியார்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த பொன்னனையாளின் தோழிகள் வசீகரமாக தனித்திருந்த அந்த சிவனடியாரிடம் வந்தார்கள். அவரை வணங்கி “அய்யனே! அனைவரும் திருவமுதம் உண்கின்றனர். தாங்கள் மட்டும் எதிலும் கலந்து கொள்ளாமல் தனித்து நிற்கிறீர்களே எங்களின் உபசரிப்பில் ஏதாவது குறையிருந்தால் தாங்கள் பொறுத்தருள வேண்டும். திருவமுது செய்ய இல்லத்துள்ளே எழுந்தருள வேண்டும்!” என்று வேண்டினர்.

அதற்கு அந்த சித்தர் மென்மையாக சிரித்தார். “மங்கையரே! எனக்கு திருவமுது வேண்டாம். அமுதம் போன்ற உங்கள் தலைவி வேண்டும். அவளை இங்கே அழைத்து வாருங்கள்” என்றார்.

சித்தரின் பேச்சு தோழிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நேராக சென்று பொன்னனையாளிடம் “தலைவியே! சிவனடியார்கள் அனைவரும் வந்தனர். வயிறாற உணவருந்தி வாழ்த்திவிட்டு சென்றனர். ஆனால் ஒரு சித்தர் மட்டும் இன்னமும் திருவமுது செய்யாமல் தனியாக நிற்கிறார். அவரிடம் தெய்வீகத்தன்மை நிறைந்திருக்கிறது. ஆனால் அவரது பேச்சில்தான் சற்று செருக்குத் தெரிகிறது. அந்த அடியார் தங்களைக் காண வேண்டும் என்று அழைக்கிறார், வாருங்கள்!” என்று அழைத்தனர்.

கோடி மலர்கள் ஒன்று சேர்ந்து நடப்பது போல் மென்மையாக நடந்து சித்தரின் முன்வந்து நின்றாள் பொன்னனையாள். சித்தர் திருமேனியின் அழகும் வனப்பும் கண்டு மதிமயங்கிய அவள் பேச வார்த்தையின்றி நின்றாள். பின் சுதாரித்துக் கொண்டு சித்தருக்கு ஆசனம் கொண்டு வந்து கொடுத்து அமரச் சொன்னாள்.

திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்தாள். “எல்லாம் வல்ல எம் பெருமானே! தாங்கள் இங்கு எழுந்தருள நாங்கள் என்ன தவம் செய்தோமோ அறியோம்!” என்று கூறி கைக்கூப்பித் தொழுதாள். சித்தரின் அன்புவலையில் பொன்னனையாள் அகப்பட்டாள்.

“பெருமானே! எனது இல்லத்தின் உள்ளே தாங்கள் எழுந்தருள வேண்டும். தங்களின் திருவுள்ளத்திங்கு ஏற்றவாறு தொண்டுபுரிய காத்திருக்கிறேன்” என்று அன்போடு அழைத்தாள். சித்தரும் அவள் அழைப்பை ஏற்று இல்லம் புகுந்தார்.

என்னதான் பொன்னனையாள் மனம் மகிழ்ந்து சித்தரை வரவேற்றாலும் மனதுக்குள் உள்ள சோகத்தை சோமசுந்தரக் கடவுளாகிய சித்தர் உணர்ந்து கொண்டார்.

“பொன்னனையாளே ஏன் உன் முகம் வாட்டத்துடனே இருக்கிறது? என்ன காரணமாக இருந்தாலும் என்னிடம் மறைக்காமல் சொல்! என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்..!” என்று மனம் கனிந்து சொன்னார்.

சித்தரின் திருவடிகளை வணங்கி “எம்பெருமானே! என் மனதினுள் நீண்ட நாளைய ஆசை ஒன்று இருக்கிறது. அது சிவபெருமானின் உற்சவர் சிலையை உருவாக்க வேண்டும் என்பதே. ஆனால் எனக்கு வரும் பொருளெல்லாம் மிச்சமில்லாமல் செலவாகிவிடுகிறது. நிலைமை இப்படியிருக்கையில் எங்கே என் ஆசை நிறைவேறப்போகிறது? என்ற எண்ணம் நாளும் என்னை வாட்டி எடுக்கிறது” என்று கூறிமுடித்தாள்.

பக்தையின் பரிதவிப்பைக் கண்டு இறைவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். “பெண்ணே! நீ அறிவில் சிறந்தவள். இந்த சிறு வயதிலே யாக்கையும் இளமையும் செல்வமும் நிலையில்லாதவை என்று உணர்ந்து வைத்திருக்கிறாய். தர்மம் மட்டுமே நிலையானது என்பதை புரிந்து கொண்டுள்ளாய் தருமங்களுள் சிவதர்மமே சிறந்தது என்றும். அந்த சிவதர்மத்துள்ளும் சிவபூஜையே உயர்ந்தது என்று உணர்ந்து அதற்கேற்ப மகேஸ்வர பூஜை செய்து வருகிறாய். இத்தனையும் உன்னுள் இருப்பதால் நீ இந்தப் பிறவியின் பயனையும் மறுமைப் பயனையும் பெற்றுக்கொண்டாய். அதனால் உன் ஆசை நிறைவேறும் பொன்னனையாள் என்ற உன் பெயருக்கு ஏற்றபடி அழிவில்லாத இறைவன் திருவுருவைப் பொன்னால் செய்யப் பெறுவாயாக. இப்போதே உன் வீட்டில் உள்ள பாத்திரங்கள் அனைத்தையும் இங்கு கொண்டு வா” என்று கூறினார்.

சித்தரின் கட்டளைக்கு இணங்கி வெள்ளி செம்பு பித்தளை ஈயம் இரும்பு என்று வீட்டில் இருந்த அத்தனைப் பொருட்களையும் கொண்டுவந்து சித்தர் முன் வைத்தாள். தனது விபூதிப் பைக்குள் இருக்கும் திருநீறை எடுத்து பாத்திரங்கள் மீது தூவிய சித்தர் “இவையெல்லாம் பொன்னாக மாறுக!” என்றார்.

பிறகு பொன்னனையாளிடம் “இந்த பாத்திரங்களை எல்லாம் இன்றிரவே நெருப்பிலிடு. நெருப்பு பட்டவுடனே இவைகள் பொன்னாக மாறிவிடும். பிறகு இறைவனின் திருவுருவை வார்ப்பித்து உன் ஆசையை நிறைவேற்றுவாயாக!" என்று ஆசிர்வதித்தார்.

“சுவாமி! தாங்கள் இன்றைய இரவு இங்கு தங்கி திருவமுது செய்து அதன்பின் பொன்னாக்கும் இந்த அற்புதத்தையும் செய்து முடித்துவிட்டு பொழுது விடிந்ததும் தாங்கள் தங்கள் இருப்பிடம் செல்லலாமே!” என்று வேண்டினாள்.

“பெண்ணே! சந்நியாசி இரவில் தங்கக் கூடாது”.

“சுவாமி! எனக்கு இத்தனை பேருதவி செய்த தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?”

“நான் மதுரையில் வசிக்கும் ஒரு சித்தர்” என்று கூறிய இறைவன் அங்கிருந்து மறைந்தார்.

சித்தராய் வந்தவர் சிவனான அந்த சோமசுந்தரக் கடவுளே என்பதை உணர்ந்து கொண்ட பொன்னனையாள் இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினாள். சித்தர் கூறியது போலவே பாத்திரங்களை தீயிலிட்டு பொன்னாக மாற்றினாள்.

      பொன்னாக ததும்பிக் கொண்டிருந்த உலோக திரவத்தை எடுத்து எந்த வடிவமும் இல்லாத இறைவனை திருவுருவமாக வார்ப்பித்தாள். சிலை அழகாய் வந்திருந்தது. சிலையின் அழகில் சொக்கிப் போன பொன்னனையாள் கன்னத்தைக் கிள்ளினாள். பின் கிள்ளிய இடம் வலிக்குமே என்று முத்தமிட்டாள். பின்னர் அந்த உற்சவ திருவுருவை திருப்புவனம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து திருவிழாவையும் தேர்விழாவையும் நடத்தினாள்.

      இன்றைக்கும் திருப்புவனம் சௌந்தரநாயகியம்மாள் புஷ்பனேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவனின் சிலையில் கன்னத்தில் கிள்ளிய வடு இருப்பதைக் காணலாம். சித்தர்களுக்கு எல்லாம் முதன்மை சித்தரான சிவனின் திருவிளையாடல்களில் 36வது திருவிளையாடலாக திருவிளையாடற் புராணம் கூறுகிறது.


புதன், டிசம்பர் 03, 2014

விறகு சுமந்த சிவன்

ரகுண பாண்டியன் மதுரையை ஆண்டு கொண்டிருந்த காலம். அப்போது ஏமநாதன் என்கிற யாழ்ப்பாணன் வட இந்தியாவில் பல இசை ஆராதனைகளைச் செய்து ஏகப்பட்ட பரிசுகளை வென்று மதுரை வந்தடைந்தான். மன்னனின் சபை அடைந்ததும் இன்முகத்துடன் வரகுண பாண்டியன் வரவேற்றான். தன்னை வரவேற்ற வரகுணனை பலவாறு புகழ்ந்து பாடினான்.

   பிறகு தனது யாழ் இசைக்கருவியை சுத்தமாகக் கூட்டி இன்னிசை பாடினான். கேட்டவர்கள் தங்களை மறந்தனர். இன்பம் கொண்ட வேந்தன் பரிசுகளை அள்ளி வழங்கினான். எல்லா மன்னர்களிடமும் பரிசு பெற்றுக் கொண்டே இருந்த ஏமநாதனுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருந்தது.

    பாடலில் தன்னை மறக்கச் செய்த ஏமநாதனுக்கு தங்க நகைகளையும், பல பொருட்களையும், உணவுக்கு வேண்டிய நிலத்தையும், தங்கிக் கொள்ள பெரிய வீட்டையும் பரிசளித்தான் பாண்டியன். இத்தனையும் பெற்றுக்கொண்ட ஏமநாதனுக்கு கர்வம் தலைக்கேறியது. பாண்டியனின் பரிசில் அவன் மனம் மகிழ்ச்சி கொள்ளவில்லை.

    “மன்னா! கலைகளில் சிறந்தது பாண்டியநாடு என்று சொல்கிறார்களே! இந்த பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டி போட்டு பாடக்கூடிய பாடகர்கள் யாராவது இருக்கிறார்களா..! அப்படியிருந்தால் என்னுடன் போட்டியிட்டு பாடச் சொல்லுங்கள். அவர் வெற்றி பெற்றால் நான் இதுவரை வாங்கிய அனைத்து பெருமைகளையும், பெற்ற பரிசுகளையும் பாண்டிய மன்னனிடம் ஒப்படைப்பேன். நான் வெற்றி பெற்று உங்கள் பாடகர் தோற்றால் இந்த பாண்டிய நாடே எனக்கு அடிமை என்று பட்டயம் எழுதித் தரவேண்டும். சரியா..!” என்று கர்வத்துடன் கேட்டான் ஏமநாதன்.

    “ஏமநாதரே! உமது பாடல் கேட்டு, பரவசப்பட்டு மகிழ்ச்சியோடு இருக்கும் தருணத்தில் இப்படியொரு முடிவை அறிவிக்கிறீர்கள்! ஆனாலும் பாண்டிய நாடு இதற்கெல்லாம் சளைத்தது அல்ல! எல்லாவித கலை வித்தகர்களும் இங்குண்டு. இசையில் வல்லவராகிய பாணபத்திரர் உங்களுடன் போட்டியிடுவார்” என்று கூறி ஏமநாதனை அவனது தங்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தான் பாண்டியன்.

    பின் பாணபத்திரரை அழைத்து வரச் செய்தான். “பாணபத்திரரே! இசையில் சிறந்த ஏமநாதனோடு நீர் போட்டியிட்டு பாட முடியுமா?” என்று கேட்டான் மன்னன்.

    “மன்னவரே! தங்கள் திருவுள்ள சித்தத்தின்படியும் சிவபெருமானின் அருள் வலிமையாலும் பாடும் வல்லமை பெறுவேன். மிகச்சிறப்பாக பாடி ஏமநாதனின் கர்வத்தையும் போக்குவேன். அவன் பெற்ற வெற்றி விருதுகளையெல்லாம் தட்டிப் பறிப்பேன்” என்று பாணபத்திரன் சூளுரைத்தான். 

    மன்னன் மகிழ்ச்சி கொண்டான்.

    “நல்லது. நீ நாளை அவனோடு போட்டியிட்டு பாட வேண்டும். இன்று அதற்கான சாதகம் செய்! இப்போது போகலாம்” என்று அனுப்பி வைத்தான்.

    பாணபத்திரன் தனது வீடு நோக்கி நடந்தான்.

    ஏமநாதனின் சிஷ்யர்கள் பலரும் நகரின் பல இடங்களுக்கு சென்று ஆங்காங்கே இசை நிகழ்ச்சி நிகழ்த்தினார்கள். அப்படியொரு இசை நிகழ்ச்சியை பாணபத்திரனும் கேட்டான். அந்த இசையைக் கேட்டு வியந்தான்.

     'ஓ! நாம் தவறு செய்து விட்டோமோ...! ஏமநாதனிடம் இசைக் கற்றுக் கொள்பவர்களே இப்படியானால், ஏமநாதன் எப்படி பாடுவானோ? நாளை நாம் பாடி அவன் வெற்றி பெற்றால் என்ன செய்வது? என்னால் இந்த பாண்டிய மண்ணுக்கு ஒரு கலங்கம் ஏற்படுவதை என் மனம் ஏற்கவில்லை நான் என்ன செய்வேன்?” என்று பலவாறு கவலைக் கொண்டான்.

    நேராக திருக்கோவில் சென்றடைந்தான். சிவபெருமானை வணங்கினான். “இறைவனே! எம்பெருமானே! அடியேனுக்கு தாங்கள் திருவருள் புரிய வேண்டும். நாளை நடைபெறும் இசைப்போட்டியில் வெற்றியருள வேண்டும்!” என்று வேண்டினான். இறைவன் மீது தனது பாரத்தை இறக்கி வைத்த திருப்தியில் வீடு நோக்கிச் சென்றான்.

    பக்தனின் குறைகேட்டப் பின்னே பரம்பொருளால் சும்மா இருக்க முடியுமா? உடனே ஏமநாதனை மதுரையம்பதியை விட்டு விரட்ட முடிவு செய்தார். ஒரு விறகு வெட்டியாய் தன்னை மாற்றிக் கொண்டார். இடையில் கந்தைத் துணியை உடுத்திக் கொண்டார். வலது பக்கத்தில் கொடுவாளைச் சொருகிக் கொண்டார். பாதங்களில் தேய்ந்து போன பழைய செருப்புகளை அணிந்து கொண்டார். நைந்து போன பழைய உறையில் யாழை எடுத்து தோளில் தொங்கப் போட்டுக் கொண்டார்.

    தலையில் விறகை சுமந்து கொண்டு வீதியில் நடந்தார். விறகின் விலையைக் கூறி சென்றார். விறகு விற்கும் வித்தகரைக் கண்டு பெண்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. விலைக் கேட்ட பெண்களுக்கு கூடுதலாக விலையைச் சொன்னார். இதனைக் கேட்டு பெண்கள் விறகு வாங்காமல் திரும்பினர். பல தெருக்கள் கடந்தும் விறகு விற்பனையாகவில்லை. 

    களைப்படைந்த பெருமான் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார். தலையில் இருக்கும் விறகு சுமையை ஒரு ஓரமாக இறக்கி வைத்தார். திண்ணையில் இளைப்பாறினார். அப்போது இனிமையான பாடல் ஒன்றை பாடினார். அந்தப் பாடலின் இனிமை வீட்டுக்குள் இருந்த ஏமநாதனையும் சென்றடைந்தது.

    இசையின் நயம் கேட்டு இமைக்க மறந்தான். மனதை உருக்கும் இந்த கானத்தை இசைப்பது யாரோ என்று வெளியே வந்து பார்க்க வினைந்தான். அந்த வேளையில் பெருமான் பாடுவதை நிறுத்தினார். வெளியில் வந்த ஏமநாதன் விறகு வெட்டியைப் பார்த்து, ‘யாரப்பா நீ….!’ என்று கேட்டான்.

    “சாமி! நான் யாழிசையில் சிறந்து விளங்கும் பாணபத்திரரின் அடிமை. அவருக்கு ஏராளமான சிஷ்யர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போல் நானும் இசை கற்றுக் கொள்ள ஆவல் கொண்டேன். பாணபத்திரரைப் பார்த்து கேட்டேன். அவரும் என்னென்னவோ செய்து பார்த்தார். எனக்கு இசை மண்டையில் ஏறவில்லை. உனக்கும் இசைக்கும் சம்பந்தமே இல்லை. நீ எனக்கு மாணவனாகும் தகுதி படைத்தவன் இல்லை என்று கூறி விரட்டிவிட்டார். அதனால்தான் விறகு வெட்டி பிழைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் சிவபெருமான்.

    “அப்படியா…! அப்பனே! நீ பாடிய பாடலை மீண்டும் ஒரு முறை பாடு கேட்போம்” என்றான் ஏமநாதன்.

    இறைவன் தனது யாழை உறையில் இருந்து எடுத்தார். அதன் நரம்பை முடுக்கினார். சுருதி சேர்த்தார். விரலால் மீட்டினார். இனிமையான ராகங்களை இசைத்தார். யாவரும் மனம் லயித்துப் போகும் நல்லிசையை எழுப்பினார். இந்த இசையுடன் தனது குரலிசையையும் இணைத்து பாடினார். பாடலில் பல வகையான சிறப்புகள் மேலோங்கி விளங்கின. இசை தேவகானமாய் எங்கும் பரவியது.

    இந்த தேவகானம் ஏமநாதனின் உடலிலும் புகுந்து கிளர்ச்சியை ஏற்படுத்தியது. மனதை மதி மயங்க வைத்தது. ஆச்சரியம் கொண்ட ஏமநாதன் வியப்பு விலகாமலே “இது…! நான் இதுவரை கேட்டறியாத இசை. இது சாதாரண மனிதனின் இசையில்லை. எல்லாம் வல்ல இறைவனின் இசையாகவே பார்க்கிறேன். இது மிகப்பெரிய ஆச்சரியம்! பாணபத்திரரால் ஒதுக்கி விரட்டப்பட்ட ஒருவனிடமே இப்படியொரு கானம் என்றால், பாணபத்திரரின் இசை…! யப்பா…! நினைத்துப் பார்க்கவே மனம் கலங்குகிறது” என கூறிய ஏமநாதன் மிகுந்த கவலைக் கொண்டான். இனியும் மதுரையில் இருக்க அவன் தயாராக இல்லை. தனது சிஷ்யர்களைப் பார்த்தான். அவர்களும் நிலைக்குலைந்து போனார்கள்.

    தனது பரிசுப் பொருட்கள் எல்லாவற்றையும் கிடந்த இடத்திலேயே விட்டுவிட்டு இரவோடு இரவாக தனது சிஷ்யர்களுடன் ஊரைவிட்டு காலிசெய்து ஓடினான். இரவு நேரம் என்பதால் ஏமநாதன் ஊரைவிட்டுச் சென்றது யாருக்கும் தெரியாது. 

    அன்றிரவு பாணபத்திரருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் சோமசுந்தரப் பொருமான் தோன்றினார்.

    “பாணபத்திரா! நீ என்னிடம் என்ன வேண்டினாயோ அது நிறைவேறியது. உனது வேண்டுகோளை ஏற்ற யாம் விறகு வெட்டியாய் வேடம் கொண்டோம். ஏதநாதனைக் கண்டோம். எம்மை பாணபத்திரனது அடிமை என்று அறிமுகப்படுத்திக் கொண்டோம். சாதாரிப் பண்ணில்  அமைந்த பாடலைப் பாடினோம். பயந்து போன ஏமநாதன் நகரை விட்டே ஓடக் கண்டோம். உன்னைக் காத்தோம்!” என்று கூறினார்.

    கனவு கண்ட பாணபத்திரன் நடந்தது தெய்வச் செயலோ! என்று உள்ளம் பதறி விழித்துக் கொண்டான். அவனது உடல் நடுங்கியது. வியர்த்துக் கொட்டியது. 

    பக்தி பெருக்கெடுக்க கண்களில் கண்ணீர் கொட்டியது. நெக்குருகிப் போன நெஞ்சோடு விடிவதற்குள் திருக்கோயில் சென்றான் பாணபத்திரன். சோமசுந்தரப் பெருமானை மனமுருக வணங்கினான்.

    “எம் பெருமானே! எனது வேண்டுதலுக்கு செவிசாய்த்த இறைவனே! நான் என்ன பாவம் செய்தேன்? என்பொருட்டு தாங்கள் விறகு சுமக்க வேண்டுமா? மாபெரும் உலக மகா சக்தியை சாதாரண மனிதனாக்கி விட்டேனே! மன்னிப்பு கேட்கக் கூட அருகதையற்ற பாவத்தை செய்துவிட்டேனே! நான் என்ன செய்வேன் என் தேவனே! அபசாரம் செய்த என்னை மன்னித்தருள வேண்டும் எம்பெருமானே!” என்று பலவாறு இறங்கி வணங்கி வலம் வந்து வணங்கினான். 

    அதன்பின் அரசனான வரகுண பாண்டியனை சென்று பார்த்து வணங்கினான். பாணபத்திரரைப் பார்த்ததும் பாண்டியன் ஏமநாதனை அழைத்துவர காவலர்களை அனுப்பிவைத்தான். பல இடத்திலும் தேடினர். ஏமநாதனை எங்கும் காணோம்.  
  
    காவலர்கள் ஏமநாதனை தேடுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அறிந்தனர். அவர்களில் சிலர், “காவலர்களே!” ஏமநாதன் நேற்று மாலை வரை இங்குதான் இருந்தான். மாலை வேளையில் ஒரு விறகு வெட்டி வந்தான். தன்னை பாணபத்திரனின் அடிமை என்றான். பின் இனிதான கீதம் இசைத்தான். அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏமநாதன் இரவோடு இரவாக ஓடிச் சென்றுவிட்டான்” என்று கூறினர். இந்த செய்தியினை காவலர்கள் மன்னனிடம் தெரிவித்தார்கள்.

    மன்னனும் வியப்படைந்தான். “ஏன்? ஏமநாதன் ஓடினான்?” என்று பாணபத்திரனிடம் மன்னன் கேட்டான். அதற்கு பாணபத்திரன் நடந்த எல்லாவற்றையும் கூறினான். 

“இது இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் அற்புதமே! இசை வேந்தனே! இறைவனே உனக்காக ஏவல்புரிந்தார் என்றால் நாங்கள் எல்லோருமே உமது ஏவலர்கள்தான், நாங்கள் உமது அடிமை, இன்று முதல் நீங்கள் சோமசுந்தர பெருமானைப் பாடுவதை கடமையாக கொள்ள வேண்டுகிறோம்” என்று வேண்டினான்.

    பாணபத்திரனும் சோமசுந்தரரை நினைத்து பாடல்களை பாடி வாழ்ந்து வந்தார்.

 இறைவன் விறகு வெட்டியாய் வந்து ஏமநாதனை வெற்றிக் கொண்டதில் இருந்து பாணபத்திரன் எந்நேரமும் சோமசுந்தரப் பெருமானின் சன்னதியிலே கிடந்து பக்திரசம் சொட்ட சொட்ட தெய்வீகத் தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தான். 

அரசவையில் பாடி போது கூட அரசனின் வெகுமதிகள் பரிசுகள் என்று தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது. அதனால் வறுமை ஆட்கொள்ளவில்லை.

    ஆனால் இறைவனின் திருவடியை மட்டுமே பாடிக்கொண்டு வேறு எந்த வேலையும் செய்யாததால் பாணபத்திரனின் குடும்பம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. இதைக் கண்ட சோமசுந்தரரால் சிவனே என்று இருக்கு முடியவில்லை. பக்தனின் ஏழ்மையைப் போக்க வேண்டும் என்பதற்காக எல்லாம் வல்ல இறைவன் பாண்டியனின் பொக்கிஷத்தில் இருந்து செல்வத்தை எடுத்து பாணபத்திரன் முன் வைக்கத் தொடங்கினார். தினமும் பொற்காசுகள், மணிகள், நகைகள், தங்கத்தால் ஆன ஆடைகள் சாமரங்களில் இருந்த பொற்பிடிகள், ஆசனத்தில் உள்ள பொன்தகடுகள் என்று பலப் பொருட்களை பாணபத்திரன் பெற்றுவந்தான்.

    இப்படி நடைபெறுவது இறைவனாகிய கள்வனுக்கும் பக்தனாகிய பாணபத்திரனுக்கும் மட்டுமே தெரியும். இந்தப் பொருட்களையெல்லாம் உருக்கி, உருமாற்றி விற்றுவந்தான். அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தன்னைத் தேடி வரும் யாசகர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்துவந்தான்.


    நாள் தவறாமல் ஏதேனும் ஒரு செல்வம் கொடுத்து வந்த சிவபெருமான் சில நாட்கள் சென்றப் பின் எந்த பொருளும்தராமல் இருந்துவிட்டார். பாணபத்திரனும் தினமும் கோயில் சென்று இறைவனை உள்ளம் உருக வணங்கினான். வெறுங்கையோடு திரும்பி வந்தான். மீண்டும் பாணபத்திரன் வாழ்வில் வறுமை வந்து அண்டிக்கொண்டது. பசி நோய் வாட்டி எடுத்தது. பசியோடே ஒரு இரவு தூங்கிப் போனான். அப்போது கனவு ஒன்று வந்தது.

    கனவில் இறைவன் சோமசுந்தரர் தோன்றினார். “பாணபத்திரனே! உன் நிலைமை எனக்கு கவலையளிக்கிறது. இத்தனைக் காலமும் உனக்காக பாண்டியனின் பொக்கிஷத்தில் இருந்து சிறிது சிறிதாக பொருட்களை கவர்ந்து கொடுத்துவிட்டோம். பாண்டியனும் எனது தீவிர பக்தன். அவனது பொக்கிஷத்தைக் காலியாக்குவதும் தர்மமில்லை. தொடர்ந்து பொக்கிஷத்தில் பொருள் குறையும் போது பாண்டியனுக்குச் சந்தேகம் ஏற்படும். களவு போன விஷயம் தெரியவந்தால் குற்றமற்ற காவலாளிகளுக்கும் கொடுமையான தண்டனைக் கிடைக்கும். இதெல்லாம் நடக்க வேண்டாமே என்றுதான் உனக்குப் பொருள் தருவதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் உன் நிலையும் எனக்கு கவலையளிக்கிறது. அதனால் நான் உனக்கு ஒரு திருஓலைத் தருகிறேன். அதை நீ எனது பக்தனான சேரமானிடம் கொண்டுசெல். அவன் உனக்கு உதவி புரிவான்” என்று கூறி மறைந்தார்.

    பாணபத்திரனும் திடுக்கிட்டு எழுந்தான். எழுந்தவன் அருகே ஓலைச்சுருள் இருப்பதைப் பார்த்தான். இறைவனின் கடிதம், ஆட்டமும் பாட்டமும் மனதுக்குள் ஓட… மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான். அந்த ஓலையை ஒரு பட்டாடையில் பத்திரமாக முடிந்துக் கொண்டான்.

    இறைவனின் திருவடியை மனதில் நினைத்து வணங்கினான். நேராக திருக்கோயில் சென்றான். சோமசுந்தரப் பெருமானை வணங்கி விடைபெற்றான். மதுரையில் இருந்து மேற்கு நோக்கிப் பயணப்பட்டான். பலவிதமான நிலங்களைக் கடந்து, வளமான மலை நாடான சேர நாட்டை அடைந்தான். மலை நாட்டின் வளமையும் இயற்கையும் மனதை மயக்கியது. நடந்து வந்த களைப்பெல்லாம் காணாமல் போனது.

    மலைநாட்டின் திருப்பதி என்று அழைக்கப்படுகிற திருவஞ்சைக்களம் போய் சேர்ந்தான். அங்கு தர்மத்தின் தேவதை ஆட்சி செய்தாள். லட்சுமி தேவி திருநடனம் புரிந்தாள். வீரத்தின் உறைவிடமான துர்காதேவி நன்னடம் புரிந்தாள். வடமொழியிலும் தென் மொழியிலும் சிறந்து விளங்கிய இடம் அது. சிறப்புகள் நிறைந்த அந்த ஊரில் இருந்த ஒரு தண்ணீர்ப்பந்தலில் பாணபத்திரன் தங்கினான்.

    அதே வேளையில் சேரநாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் என்ற மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். “சேர மண்ணை ஆண்டு வரும் மன்னனே! யாம் மதுரையைச் சேர்ந்த சித்தராவோம். என் பக்தன் ஒருவன் உன் உதவி நாடி உன்தேசம் வந்து சேர்ந்துள்ளான். அவனை யாமே இங்கு அனுப்பி வைத்தோம். அவனிடம் யாம் கொடுத்தனுப்பிய திருஓலையும் உள்ளது. அவனுக்கு அரிய பொருளைக் கொடுத்து விரைவாக அனுப்பி வைப்பாயாக…. அந்த பக்தனின் பெயர் பாணபத்திரன் என்பதை நினைவில் கொள்!” என்று கூறியதும் கனவில் இருந்து மறைந்தார்.

    சேரமான் பெருமான் வியப்புற்று விழித்தெழுந்தான். தன் மனமெல்லாம் நிறைந்திருக்கும் சிவபெருமான் தன் கனவில் வந்தது சேரமன்னனுக்கு குதூகலத்தை தந்தது. இந்த மகிழ்ச்சிக் கனவை உடனே தனது அமைச்சர்களிடம் பகிர்ந்துக் கொண்டான்.

    “அமைச்சர் பெருமக்களே! என் கனவில் நம்மை காக்கும் எம் பெருமான் தோன்றினார். பெருமானின் திருமுகம் பெற்ற பாணபத்திரன் என்ற பக்தர் என்னை நாடி வந்துள்ளார். அவரைத் தேடிக் கண்டுபிடியுங்கள். எங்கிருந்தாலும் உடனே தெரிவியுங்கள். எம் இறைவனின் உத்தரவை நான் நிறைவேற்ற வேண்டும்” என்று கட்டளையிட்டான்.

    அமைச்சர்கள் மன்னின் ஆணையை ஏற்றுக் கொண்டு, உடனடியாக சேவகர்களுக்கு கட்டளையிட்டனர். சேவகர்களும் நான்கு திசைகளிலும் பாணபத்திரனைத் தேடிச் சென்றனர். பல இடங்களிலும் தேடியப் பின் இறுதியாக தண்ணீர்ப்பந்தலில் தங்கியிருப்பதைக் கண்டனர். உடனே வேகமாக சென்று அரசனிடம் தகவல் சொல்லினர்.

    பாணபத்திரனின் இருப்பிடம் தெரிந்த மன்னன் மகிழ்ச்சிக் கொண்டான். தனது பரிவாரங்களை தயார் செய்தான். ஒரு சக்கரவர்த்தியை குறுநில மன்னன் எப்படி அடிபணிந்து பிரம்மாண்டமான முறையில் வரவேற்பானோ அதே போல் பாணபத்திரனை அழைத்துவர சேரமான் மாபெரும் ஏற்பாடுகளை செய்திருந்தான். தனக்கென சொக்கநாதர் இட்ட கட்டளையல்லவா அது. 

    சேரமான் பெரும் ஆர்பரிப்புடன் பாணபத்திரன் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். பாணபத்திரனைக் கண்டதும் தனது தலைக்கு மேல் கைகூப்பி வணங்கிய மன்னன் ஆனந்த தாண்டவம் ஆடினான். பாணபத்திரனும் பரவசப்பட்டான். இறைவன் மன்னனுக்கு எழுதிக் கொடுத்த திருமுக ஓலையை சேரமானிடம் கொடுத்தான். ஓலையை வாங்கும் போதே கைகள் நடுங்கின. கண்களில் கண்ணீர் பெருகின. திருமுக ஓலையை கண்களில் ஒற்றிக் கொண்டான். 

    இறைவன் எழுதிக் கொடுத்த பாசுரத்தைப் பலமுறைப் படித்துப் பார்த்தான். புளகாங்கிதம் அடைந்தான். எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தான். ஆனந்த கடலில் மூழ்கினான்.

    தெய்வத் திருஓலையை தங்கத்தால் செய்த ஆசனத்தில் வைத்தான். அந்த ஆசனத்தை யானை மீது ஏற்றினான். தங்க ஆசனம் தாங்கி வந்த யானையையும் பாணபத்திரனையும் வழி முழுவதும் மலர்கள் தூவி பாதம் மண்ணில்படாமல் நடக்க வைத்து, தக்க மரியாதையுடன் அழைத்து வந்து அரண்மனை சேர்ந்தான்.

    அரண்மனை சேர்ந்த பாணபத்திரனை அரண்மனை நந்தவனத்தில் நீராடச் செய்தனர் சேவைப் பெண்கள். நீராடிய பாணபத்திரனுக்கு புத்தம் புது ஆடைகளை அணிவித்தனர். பதினாறு வகையான உபசாரங்களைச் செய்து மகிழ்ந்தான் சேரவேந்தன். சோமசுந்தரப் பெருமான் அருளிய திருமுகப் பாசுரத்தில் ஒரு வரி “மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே” என்ற கட்டளையை நன்றாக மனதில் பதித்துக் கொண்டான் மன்னன்.

    அதனால் நேரம் கடத்த விரும்பவில்லை சேரன். பாணபத்திரனை தனது பொக்கிஷ சாலை முழுவதும் இறைந்து கிடந்தது. பிரமாண்டமாக காட்சிதந்த பொக்கிஷ சாலையில் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருந்தது. பொக்கிஷ சாலையின் மையத்தில் பாணபத்திரனை நிற்க வைத்தான் சேரமாவேந்தன். 

    “என் உள்ளம் நிறைந்திருக்கும் இறைவனின் நேசம் பெற்ற சிவநேசரே! இங்குள்ள செல்வங்கள் எல்லாம் உமதே! உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவையும் எடுத்துக் கொள்ளுங்கள்! தடையேதும் இல்லை." மனம் நிறைந்த மகிழ்வோடு கூறினான் சேரன்.

    “மன்னவா! தாங்கள் பெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தியை நான் அறிந்தேன்! நான் யாசகம் பெற வந்தவன். எனக்கு நீங்கள் பொருளைக் கொடுப்பதுதான் முறை. தாங்கள் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் செல்வமே எனக்குப் போதும்!” பாணபத்திரன் பணிவுடன் கூறினான். 

“எல்லா செல்வமும் அவனுக்குரியது. அவனே கட்டளையிட்டபின் மறுப்பதற்கு நான் யார்? அவன் உலகை ஆள்பவன். நானோ அவன் இட்டப்பிச்சையால் ஒரு சிறுபகுதியை ஆட்சி செய்பவன். அதனால் தங்களுக்கு தேவையான செல்வத்தை தாங்கள் எடுத்துக் கொண்டால்தான் என் மனம் மகிழும்” மீண்டும் சேரன் வற்புறுத்தினான்.

“தாங்கள் தருவதே எனக்குப் போதும்” என்று பாணபத்திரனும் பிடிவாதம் பிடிக்க… சேரன் ஏராளமான செல்வங்களை வாரிக் கொடுத்தான். அவ்வளவு செல்வத்தையும் பாணபத்திரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

பாணபத்திரன் தனக்கு வேண்டிய அளவு பொன் அணிகள், காசுகள், ஆடைகள், யானை, குதிரை போன்றவற்றை ஏற்றுக்கொண்டு மதுரையை நோக்கிப் புறப்பட்டான். சேரமான் பெருமானும் நெடுந்தொலைவு பாணபத்திரனுடனே வந்து தனது நாட்டின் எல்லையில் வழியனுப்பிவைத்தான்.

வறுமையில் வாடிய கலைஞனாக சேரநாடு சென்ற பாணபத்திரன் செல்வம் நிறைந்த குபேரனாக திரும்பி வந்தான். மதுரை மாநகர் வந்து சேர்ந்ததும் முதல்வேலையாக திருக்கோவில் சென்று சோமசுந்தரப் பெருமானை தரிசனம் செய்து வணங்கினான். பின்னர் பொருள் வேண்டுவோருக்கு உதவி செய்து தருமங்கள் புரிந்து சிறப்போடு வாழ்ந்தான்.


செவ்வாய், டிசம்பர் 02, 2014

கூகுள் இளவரசன்

ன்றைய இண்டர்நெட்டின் மந்திரச் சொல் கூகுள்தான். இதனிடம் நீங்கள் எதையும் கேட்கலாம்.... எதையும் தேடலாம்... எதையும் பகிரலாம்... இவை எல்லாவற்றையும் கூகுள் உங்களுக்காக செய்யும்.

2006-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் டிக்ஷ்னரியில் கூகுள் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டபோது அது இவ்வளவு பெரிய வளர்ச்சி கண்டிருக்கவில்லை. ஆனால் அதன்பின் விண்ணைத் தொடும் விஸ்வரூப வளர்ச்சிதான். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு தமிழர் இருந்திருக்கிறார் என்பது சமீப காலம் வரை யாருக்கும் தெரியாது. 2013-ல் தான் அவர் பெயர் முதன் முதலாக வெளியுலகில் கசியத் தொடங்கியது.மைக்ரோ சாஃப்டின் CEO-வாக முதலில் அறிவிக்கப்பட்டவர் இவர்தான். அதன் பின்னர்தான் சத்யா நாதெள்ளா வந்தார். மைக்ரோ சாஃப்டிற்கு அடுத்தபடியாக டிவிட்டர்  தனது தலைவராக இவரை நியமித்ததாக டிவிட்டரிலேயே வதந்திப் பரவியது. 

யார் இவர்? எதற்காக ஒவ்வொரு நிறுவனமும் இவரைப் போட்டி போட்டுக் கொண்டு பதவி கொடுக்கத் துடிக்கிறது. இந்த துடிப்புக்குப் பின் அந்த நபரின் வெற்றி ரகசியம் ஒளிந்திருக்கிறது.
அவரின் பெயர் பிச்சை சுந்தர்ராஜன், வயது 45. மதுரையில் 1972 ஜூலை 12-ல் பிறந்தவர், சென்னையில் வளர்ந்து, சென்னையிலேயே பள்ளிப் படிப்பை முடித்தவர். சுந்தர் பிச்சையின் தந்தை ரெங்கநாத பிச்சை ஒரு எலக்ட்ரிக்கல் இன்ஜினியர். தாய் லட்சுமி ஒரு ஸ்டெனோகிராஃபர். 

சென்னை அசோக் நகரில் ஒரு 2 பெட் ரூம் அப்பார்ட்மென்டில் தான் வளர்ந்தார். அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா பள்ளியில் படித்தார். பள்ளி படிப்பை முடித்தப்பின் கோரக்பூர் ஐஐடியில் பி.இ. மெட்டலர்ஜி படித்தார். படித்தது உலோகங்களைப் பற்றித்தான் என்றாலும் அவர் மனம் முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் பக்கமே இருந்தது. உலோக தொழில் நுட்பத்தில் முதல் மாணவனாக தேறினார்.
அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். முடித்தார். அதன்பின் பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற கையோடு  மெக்கன்ஸி கம்பெனியில் சாஃப்ட்வேர் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார்.

2004-ல் தான் கூகுள் நிறுவனத்திற்குள் நுழைந்தார். அப்போதுதான் கூகுளும் சக நிறுவனங்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்து கொண்டிருந்தது. மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ப்ரவுசரை தொடர்ந்து உபயோகித்த கம்ப்யூட்டர் பணியாளர்கள் சலித்து போயிருந்த நேரத்தில், பல மடங்கு வேகம் நிறைந்த குரோம் ப்ரவுசரை அறிமுகப்படுத்தினார். இன்று உலகின் அதிகவேக ப்ரவுசராக குரோம் இருக்கிறது.

கூகுள் டிரைவ் வளர்ச்சிக்கும் சுந்தர் பிச்சை பெரும் பங்கு வகித்திருக்கிறார். அதன்பின் கூகுள் அறிமுகப்படுத்திய ஆண்ட்ராய்ட் சிறப்பான வளர்ச்சி பெற உறுதுணையாக இருந்தார். இந்திய சந்தையை மனதில் வைத்தே 'ஆண்ட்ராய்ட் ஒன்' என்ற திட்டத்தை தொடங்கினார். 50 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்தார்.

இன்றைய இன்டர்நெட் உலகில் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை கூகுள் நிறுவியுள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான 'பேசிக் இன்ஃபர்மேஷ­ன் சென்டர்'களை வைத்துள்ளது. அமெரிக்காவை மையமாக வைத்து உலகின் பல நாடுகளில் கூகுள் செயல்படுகிறது. இதில் 52,000 பேருக்கு மேல் பணியாற்றுகிறார்கள். அத்தனை பேருக்கும் சுந்தர் பிச்சைதான் தலைவர். கூகுளின் இரண்டாவது தலைவர். அதாவது  இளவரசர்.
அப்படிப்பட்ட பெரும் சாம்ராஜ்யத்தில் முதுநிலை துணைத்தலைவராக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

 2011-ல் கூகுள் குரோம் பிரவுசர், ஜி மெயில், ஆப்ஸ் போன்ற பிரிவுகளுக்கான பொறுப்பாளராக சுந்தர் நியமிக்கப்பட்டார். 2013-ல் ஆண்ட்ராய்ட் சாஃப்ட்வேருக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஸ்மார்ட் போன்களில் ஏற்பட்டுள்ள புதுமைகளுக்கு எல்லாம் ஆண்ட்ராய்ட் சாஃப்ட்வேர்தான் காரணம். உலகின் உள்ள செல்போன்களில் 120 கோடி போன்களில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்தப்படுகிறது.

1998-ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் என்ற நண்பர்கள் இருவரும் சேர்ந்து  தொடங்கிய இந்த நிறுவனம் இப்படி பிரமான்ட வளர்ச்சிபெறும் என்று அவர்கள் நினைத்ததில்லை. தொடக்க காலத்தில்  இணைய உலகிலுள்ள தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாக இருந்தது. அதன்பின் தேடுதல் பொறியுடன் ஜிமெயில், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், ப்ளாக்கர், யூ ட்யூப் போன்ற பல பிரிவுகளை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு பிரிவிலும் நம்பர் ஒன்னாகத் திகழ்ந்தது கூகுள்.
அந்நிறுவனத்தின் தலைவரான லாரி பேஜ் சுந்தர் பிச்சையைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார். ""அவர் ஆழமான தொழில்நுட்ப அனுபவம், உற்பத்தி மீதான சிறப்பான கணிப்பு, தொழில் முனைப்பு திறமை ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக இருக்கிறார்'' எனப் பாராட்டுகிறார்.
ஏற்கெனவே கூகுள் ஆண்ட்ராய்ட், குரோம் மற்றும்  ஆப்ஸ் ஆகிய பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த சுந்தர் பிச்சை, இப்போது கூடுதலாக கூகுள் பிளஸ், கூகுள் மேப்ஸ், காமர்ஸ், இன்ஃபிராஸ்டரக்ச்சர், கூகுள் சர்ச், சோஷியல் மீடியா, விளம்பரம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய பிரிவுகள் சுந்தர் பிச்சை கட்டுப்பாட்டில் வந்துள்ளன.


கூகுளின் இன்னொரு பிரிவான 'யூ டியூப் ' லாரி பேஜ் கட்டுப்பாட்டிலே இருக்கும். கூகுள் நிறுனம் அடுத்ததாக ஆண்ட்ராய்ட் கார் தயாரிக்க உள்ளது. இந்த காரிடம் நாம் எந்த ஊருக்கு செல்லவேண்டும் என்ற விவரத்தைச் சொன்னால் போதும் சேட்டிலைட் மூலமாக கூகுள் மேப்ஸ் துணையோடு தானே வழிகளைக் கண்டுபிடித்து சரியான இடத்தில் நம்மை கொண்டு சேர்த்துவிடும்.

மேலும் ஆண்ட்ராய்ட் டிவிக்களையும் கூகுள் தயாரிக்க உள்ளது.  இவற்றில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும். சுந்தர் பிச்சையை மென்பொருள் உலகம் ஆண்ட்ராய்ட் ஜீனியஸ் என்று அழைக்கிறது. சுந்தருக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவரது தந்தை சென்னை ஜிஇசி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார்.

ஒரு தமிழர் இணைய சாம்ராஜ்யத்தின் இளவரசனாக முடி சூட்டியிருப்பது நமக்கெல்லாம் மகிழச்சிதானே! கூகுளின் தலைவராக சுந்தர்பிச்சை பொறுப்பேற்றிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...