Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நடராஜரை சிலை வடித்த சித்தர்



கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர் கருவூரார். போகரின் சீடர்களில் ஒருவர். கருவூராரின் தாய், தந்தை ஒவ்வொரு ஊராகச் சென்று அங்குள்ள கோவில்களுக்கு விக்ரகங்களை செய்து கொடுத்து வந்தனர். அதில் கிடைத்த வருவாயில் முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது அவர்கள் வழக்கம்.

    சிறுவயதிலிருந்தே சித்தர்களின் பழக்கம் ஏற்பட்ட காரணத்தால், மிகக்குறைந்த வயதிலேயே மனித வாழ்வின் நிலையாமையை உணர்ந்து சித்தராக மாறினார் கருவூரார். அவர் பல திசைகளுக்கும் சென்று அங்குள்ள சிவாலயங்களுக்கு தங்கத்தால் ஆன சிவலிங்கங்களை உண்டாக்கினார்.

    போகரின் சீடர்களில் கருவூர் சித்தர் பிரதான சீடராக இருந்தார். ஒருமுறை சோழ மன்னர் ரணியவர்மன் தீர்த்த யாத்திரை சென்றிருந்தார். பல புண்ணிய தலங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்துவந்தார். இறுதியாக தில்லை நகரை வந்தடைந்தார். அங்கிருந்த சிற்றம்பல குளத்தில் நிறைந்திருந்த சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடினார். அப்போது தண்ணீருக்குள் மனதை ரம்மியமாக்கும் இனிய ஓங்கார நாதம் ஒலித்தது. மன்னனுக்கு ஒரே ஆச்சரியம்! தண்ணீருக்குள் இருக்கும் வரை அந்த ‘ஓம்’ என்ற நாதம் கேட்டது. தண்ணீரை விட்டு வெளியே வந்தவுடன் நாதம் கேட்கவில்லை. மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கினால் அதே இனிய நாதம் ஒலித்தது.

    இந்த இனிய ஒலி எங்கிருந்து வருகிறது? என்பதை தெரிந்து கொள்வதற்காக மீண்டும் நீருக்குள் மூழ்கினார். அங்கு ஆடல் நாயகனின் அற்புத நடனத்தைக் கண்டார்.

மெய்சிலிர்த்து போனார். 

மீண்டும் மீண்டும் கண்டு பரவசப்பட்டார். பின்புதான் கண்ட அற்புதக் காட்சியை ஓவியமாக வரைந்தார். உலக மக்கள் அனைவரும் அந்தக் காட்சியைக் காண வேண்டும்.  அதற்கு என்ன வழி என்று சிந்தித்தார். கடைசியாக அந்த அற்புத வடிவத்தை சொக்கத் தங்கத்தில் விக்கிரகமகாச் செய்து எல்லோரும் தரிசனம் செய்யும்படி அமைக்க முடிவு செய்தார்.

    நாட்டின் தலைச்சிறந்த சிற்பிகளை தேர்ந்தெடுத்தார். அவர்களிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டி “கை தேர்ந்த சிற்பிகளே! நான் தீர்த்த நீராடும் போது ஓர் அற்புத காட்சியைக் கண்டேன். அதை அப்படியே ஓவியமாக வடித்துள்ளேன். இந்த ஓவியத்தை அப்படியே தூய்மையான தங்கத்தால் விக்கிரகமாக வடிவிக்க வேண்டும். அதில் ஒரு துளி செம்போ வேறு உலோகமோ கலந்துவிடக்கூடாது. 48 நாட்களுக்குள் அந்த விக்ரகத்தை தயார் செய்ய வேண்டும்” என்று மன்னர் சிற்பிகளுக்கு அன்பு கட்டளையிட்டார்.

    சிற்பிகள் தங்குவதற்கு இடம், உணவு போன்ற வசதிகள் செய்யப்பட்டன. அனுபவம் நிறைந்த அந்த சிற்பிகள் எவ்வளவோ முயன்றும் கூட விக்கிரகத்தை தூய்மையான தங்கத்தால் உருவாக்க முடியவில்லை. மன்னர் கொடுத்த கெடுவில் 47 நாட்கள் எந்த பயனுமில்லாமல் போய்விட்டன. மறுநாள் மன்னருக்கு என்ன பதில் சொல்வது என்று கையைப் பிசைந்த கொண்டு நின்றனர்.

    அதே வேளையில் சித்தர் போகர் தனது சீடரான கருவூராரை அழைத்தார். “கருவூரா! தில்லையில் நடராஜர் திருவுருவை அமைக்க சிற்பிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர். நீ உடனே அங்கே போ! விக்கிரகம் செய்ய வேண்டிய வழிமுறைகளை நான் உனக்கு கற்றுக்தந்திருக்கிறேன். நீ போய் அந்த வேலையை செய்து முடி!” என்று கூறி தனது சீடரை அனுப்பிவைத்தார்.

    நாற்பத்தெட்டாவது நாள்.

    சிற்பிகளுக்கு மன்னர் கொடுத்த கடைசிநாள். 

என்ன நடக்கும்? என்பதை யாராலும் யூகிக்க முடியாத மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முன் கருவூரார் போய் நின்றார்.

    “கவலைப்படாதீர்கள் சிற்பிகளே! மன்னரின் விருப்பப்படி நடராஜரின் விக்கிரகத்தை நான் செய்து தருகிறேன்” என்று ஆறுதல் கூறினார். ஆனால் சிற்பிகள் யாருக்கும் கருவூரார் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.

    “அனுபவம் நிறைந்த எங்களாலேயே முடியாத போது தங்களால் மட்டும் எப்படி முடியும்?" என்றனர். அதற்கு “என்னால் முடியும்” அதுவும் ஒரு மணி நேரத்தில் இதை செய்து முடிக்கிறேன்” என்றார். 

எல்லோரும் ஆச்சரியத்தோடு கருவூராரைப் பார்த்தனர். அந்த பார்வையை கண்டு கொள்ளாமல் கருவூரார் விக்கிரகம் செய்ய வேண்டிய அறைக்குள் நுழைந்து தாழிட்டுக்கொண்டார். ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் கதவை திறந்து வெளியே வந்தார்.

 “விக்கிரகம் மிக அழகாக வந்துள்ளது. எல்லோரும் போய் பாருங்கள்”. எல்லா சிற்பிகளும் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் அறைக்குள் நுழைந்தார்கள். அங்கு நடராஜரின் திருவுருவச்சிலை தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது.

    அதைப்பார்த்து மதி மயங்கிய சிற்பிகள் கருவூராரை அலட்சியப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டனர். அவர்களுக்கு சிற்பகலை நுணுக்கங்களை உபதேசித்துவிட்டு மடத்தை நோக்கி சென்றார்.

    மறுநாளும் வந்தது. மன்னர் விடிவதற்குள் வந்துவிட்டார். பக்தி பரவசத்துடன் காணப்பட்ட மன்னர் நேராக சிலை இருந்த அறைக்குள் சென்றார். சிலையின் அற்புத அழகில் மனம் சொக்கிப் போனார். அங்குலம் அங்குலமாக சிலையைப் பார்த்து பரவசப்பட்டார். தனது ஓவியத்தில் காணப்படாத ஒரு அருள்சக்தி இந்த சிலையில் இருப்பதை உணர்ந்தார். மன்னனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

    “இறைவா! என் மனக்கண்ணில் தோன்றிய உன்னை உருவகப்படுத்திவிட்டேன். இந்த நிமிடம் உலகை வென்ற மகிழ்ச்சி எனக்கு!” என்று கூறி, சிற்பிகள் பக்கம் திரும்பினார். “அபாரம்! சோழநாட்டு சிற்பிகள் கலைகளுக்கு பேர் போனவர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். உங்கள் திறமைக்கு ஏராளமான சன்மானம் கொடுக்கப்போகிறேன்” என்றார்.

    அதற்குள் அமைச்சர் “மன்னரே! அவசரம் வேண்டாம். சிலையை சோசித்துப் பார்த்து பின் வெகுமதி தரலாமே!" என்றார். மன்னரும் “சிற்பிகளே! விக்கிரகம் செய்யும் போது கீழே விழுந்து சிதறிய தங்கத்துகள்களை எடுத்து வாருங்கள் சோதித்து விடுவோம்” என்றார். சிற்பிகளும் கொண்டு வந்து கொடுத்தனர்.

    சோதனை செய்தப்பின் மன்னரின் முகம் கொடூரமாக மாறியது. “சிற்பிகளே, உங்களை நம்பித்தானே இந்த வேலையை ஒப்படைத்தேன். எனது நம்பிக்கைக்கு விரோதமாக நடந்து கொண்டீர்களே… சிலையில் சிறிது செம்பை கலந்து என்னிடம் நம்பிக்கை மோசடி செய்துவிட்டீர்கள்.” என்று கோபமாகக் கேட்டார்;.

    சிற்பிகள் பயந்து நடுங்கினர். “மன்னா! எங்களை மன்னியுங்கள். நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். எங்களால் சிலையை உருவாக்க முடியவில்லை. ஒரு அடியார்தான் இந்த சிலையை உருவாக்கினார்” என்றனர்.

    மன்னருக்கு ஒரே திகைப்பு “அடியார் செய்தாரா?” என்றவர். “அழையுங்கள் அந்த அடியாரை, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை ஒன்றுதான். அடியார் என்பதால் விதிவிலக்கு இல்லை” என்று கட்டளையிட்டார்.

    நான்கு திசைகளிலும் சென்ற காவலாளிகள் கருவூராரைக் கண்டு, கைது செய்து அழைத்துவந்தனர். கருவூராரை உற்றுப்பார்த்த மன்னர் “இவரை சிறையில் அடையுங்கள். மோசடி செய்த இந்த அடியாருக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதை நாளை யோசித்து சொல்கிறேன்” என்றார். மன்னர் ஆணைப்படி கருவூரார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மன்னருக்கு நடராஜர் சிலையின் அழகு மனதை வசியப்படவைத்தது. நடராஜர் விக்கிரகத்துடன் அரண்மனைக்கு சென்றார். அங்கு இருந்த ஒரு பீடத்தின் மீது விக்கிரகத்தை வைத்தார். அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். மனதுக்கள் பரவசநிலை ஏற்பட்டது. கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.


     "இறைவா! இந்த அற்புதத்தை காணத்தான் கண்களைப் படைத்தாயா…!இந்த பரவசத்தை அனுபவிக்கத்தான் மனதைப் படைத்தாயா…! காலமெல்லாம் உன் திருவுருவை தரிசித்துக் கொண்டிருந்தாலே போதுமே...! அடியேனுக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்” என்று மனமுருகி இறைவனிடம் மானசீகமாக உரையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது மன்னர் முன் பிரகாசமான ஒளி ஏற்பட்டது. கண்ணை கூசச் செய்யும் ஒளியில் மன்னர் பிரம்மித்துப் போனார்.

மன்னனின் முன்னால் தோன்றிய பிரகாசமான ஒளி மறைந்ததும் அந்த இடத்தில் சித்தர் போகர் தோன்றினார்.

போகரின் பின்னால் அவரது சீடர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு மூட்டை இருந்தது. மூட்டைக்குள் தங்கம் நிறைந்திருந்தது. ஒரு சீடர் கையில் தராசை வைத்திருந்தார்.

போகரும், அவரது சீடர்களும் மன்னன் முன்பு திடீரென்று தோன்றியதில் அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எழுந்து நின்று கைகளை குவித்து வணங்கினான்.

    “மன்னா! என் சீடன் என்ன தவறு செய்தான்? அவனை ஏன் சிறையில் அடைத்து வைத்திருக்கிறாய்? யாருக்கும் கெடுதல் நினைக்காக அவனை சிறையில் அடைத்ததுதான்.. உன் ஆட்சியின் லட்சணமா…?" என்று போகர் கேட்க.

    “சுத்தமான தங்கத்தில் சிலையை செய்ய வேண்டும் என்பதுதான் நான் சிற்பிகளுக்கு இட்ட கட்டளை. ஆனால் தங்கள் சீடரோ தங்கத்தில் செம்பை கலப்படம் செய்து சிலையை உருவாக்கி உள்ளார். இது மோசடிதானே…! அந்த மோசடிக்குத் தண்டனையாகத்தான் சிறையில் அடைத்தேன்!” என்றார் மன்னர்.

    “மன்னா! உலோகங்களின் தன்மையறியாமல் பேசாதே! நூறு சதவீதம் தூய்மையான தங்கத்தில் யாராலும் விக்கிரகம் செய்யமுடியாது. அதில் கொஞ்சம் செம்பைக் கலந்தால் தான் செய்ய முடியும். அப்படி கலக்கச் சொன்னதே நான்தான்! அதற்கு காரணமும் இருக்கிறது. தூய தங்கத்தில் சிலை செய்து வைத்தால் அதிலிருந்து கிளம்பும் ஒளி, நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே போகும். அது பார்ப்பவர்கள் கண்களையே குருடாக்கிவிடும். இந்த அறிவியல் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.

    இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் எனது சீடன் கருவூரான் பலவிதமான மூலிகைச்சாறுகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டி விக்கிரகமாக வடிவமைத்திருக்கிறான். இந்த உண்மையெல்லாம் யாருக்கும் தெரியாது. ஏன் உனக்கும் கூட தெரியாது. சரி, நடந்தது நடந்துவிட்டது. இப்போது விஷயத்துக்கு வருகிறேன். நீ விக்கிரகம் செய்யக் கொடுத்த தங்கத்தைவிட கூடுதலாகவே சொக்கத் தங்கத்தை கொடுத்துவிடுகிறேன். அளவிட்டு எடுத்துக்கொள்” என்று கண்கள் சிவக்க கோபமாகக் கூறினார போகர்.

    தராசை மன்னனின் முன்னால் வைத்தார்கள் சீடர்கள். நடராஜர் சிலையை ஒரு தட்டில் வைத்தனர். மற்றொரு தட்டில் மூட்டைகளில் கொண்டு வந்திருந்த தங்கத்தைக் கொட்டினர். தங்கம் தட்டில் விழவிழ அந்த தட்டு கீழே நடராஜர் சிலை இருந்த தட்டு மேலே சென்றது.

    “மன்னா! தராசைப் பார்த்துக்கொள். இரண்டில் எது அதிகம் என்பது உனக்கே தெரியும். நீ கொடுத்த தங்கத்தை விட நான் கூடுதலாகவே உனக்கு சொக்கத் தங்கத்தை கொடுக்கிறேன். அதை எடுத்துக்கொள். என் சீடன் அற்புதமாக வடிவமைத்த நடராஜர் சிலையை நான் என்னோடு எடுத்துச் செல்கிறேன்” என்று கூறிய போகர் நடராஜர் சிலையை எடுத்துக்கொண்டு புறப்படத்தயாரானார்.

நடந்த எல்லாவற்றையும் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்த மன்னன் போகரின் முடிவைக் கண்டு திடுக்கிட்டான். ஓடோடிச் சென்று போகரின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி மன்றாடினான்.

    “மன்னா, எழுந்திரு! நடராஜரை உனக்கேத் தருகிறேன். கவலை கொள்ளாதே! என் சீடனை எனக்கு நீ திருப்பித்தர வேண்டும்” என்றார். அதைக் கேட்ட மன்னன் உடனே கருவூராரை சிறையில் இருந்து விடுதலை செய்யும்படி உத்தரவிட்டான்.
   
    சிறைச்சாலைக்கு சென்ற காவலர்கள் பதட்டத்தோடு ஓடிவந்தனர். “மன்னரே! சிறையில் கருவூரார் இல்லை!” என்றனர். மன்னன் குழம்பிப் போனான். பூட்டிய பூட்டு பூட்டியபடியே இருந்தது. அப்படியிருக்கும் போது இவரால் எப்படி வெளியே செல்லமுடியும் என்று திகைத்துப் போனார்.

    “மன்னா! கலங்காதே! எனது உத்தரவு இல்லாமல் என் சீடன் எங்கேயும் செல்லமாட்டான். கருவூரா.. கருவூரா..!” போகர் குரல் கொடுத்தார். “குருவே! நான் எங்கும் செல்லவில்லை. இங்கேதான் இருக்கிறேன்." 

சிறைக்குள் இருந்து கருவூரார் குரல் மட்டும் கேட்டது.மாயமாய் இருக்கும் சித்தரின் குரல் மட்டும் கேட்கிறதே என்று ஆச்சரியப்பட்டான் மன்னன். 

“இது சித்தர்களின் சக்தி மன்னா! சித்தர்கள் மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாமல் மறைந்திருப்பது, காலங்காலமாக நடந்து வரும் அற்புதம்தான். கருவூரா  மறைந்திருந்தது போதும். எல்லோர் கண்களுக்கும் புலப்படும் விதமாக வா” என்றார்.

    உடனே அனைவரும் காணும் விதமாக கருவூரார் வெளியே வந்தார். போகர் அரசரிடம் “அரசே! உலகில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதங்காகவே நியமிக்கப்பட்டன் என் சீடன் கருவூரான். அவன் மூலமாக மக்கள் இறைவனை உணர்வார்கள். இந்த நடராஜர் சிலையை நீயே வைத்துக்கொள்” என்று மன்னரிடம் ஒப்படைத்தார்.


மேலும் கோயில் அமைய வேண்டிய முறை எந்த தெய்வங்கள் எந்த இடத்தில் எப்படி வைக்க வேண்டும். நடராஜரை எங்கு பிரதிஷ்டை செய்து எவ்வாறு புஜை செய்ய வேண்டும் என்ற அனைத்து விவரங்களையும் கருவூரார் மன்னனுக்குச் சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

    கருவூரார் சிறிது காலம் யாருடனும் பேசாமல் மவுனமாக இருந்தார். மவுனமாக இருக்கும் கருவூராரை பார்த்து ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர். மக்கள் தாங்களே வலியச் சென்று அவருடன் பேசினர். அவர்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார். 

“வீணாக நேரத்தைக் கழிக்காதீர்கள். எப்போது வேண்டுமானாலும் இந்த உடலுக்கு எமனால் தீங்கு ஏற்படலாம். வழிபாடு மூலம் தெய்வத்திடம் உயிரை ஒப்படையுங்கள்”.

    கருவூராரின் இந்த உபதேசத்தைக் கேட்க மக்கள் தயாராக இல்லை. 

“வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்றால் நன்றாக சம்பாதிக்க வேண்டும். அதை விட்டு விட்டு சதா சர்வ காலமும் அம்மனை வழிப்பட்டுக் கொண்டிருந்தால் மழைதான் பெய்திடுமா, பயிர்கள்தான் விளைந்திடுமா. வழிபாடு செய்வதால் எந்த பயனும் இல்லை” என்றனர்.
   
    இந்த வாதம் கருவூராருக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தியது. வழிபாட்டின் மகிமையை இந்த மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அந்த மக்களிடம் “இது வெயில் வாட்டி வதைக்கும் கோடை காலம் இந்த காலத்தில் மழை பொழியாது. இப்போது மழை பொழிந்து, அம்மன் கோயில் தானாக திறந்து பூஜை வழிபாடு நடந்தால், நீங்கள் தினமும் அம்மனை வழிபடத்தயாரா?!" என்று கேட்டார்.

    மக்கள் கருவூரார் சொன்னதைக் கேட்டு ஏளனமாக சிரித்தனர். “இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மழை பொழியப் போகிறதாம்! வேடிக்கை…!” என்று பரிகாசம் செய்தனர். கருவூரார் மனதுக்கள் வெதும்பி வேதனையாகச் சிந்தார்.

    “தாயே! தேவியே! அறியாமையில் இருக்கும் இந்த மக்களுக்கு நல்வழி காட்ட மாட்டாயா? உடலை வளர்ப்பதும் அதற்காக உணவு தேடுவதும், அந்த உணவுக்காக பொருள் தேடுவதும் மட்டும்தான் வாழ்க்கை என்று இருக்கும் இவர்களுக்கு ஞானத்தை தரமாட்டாயா?" என்று உள்ளம் உருகினார்.

    சூரியன் நடுவானில் இருக்கும் நன்பகல் அது. உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அந்த கோவில் மேலே திடீரன்று வானம் கருத்தது. 

மேகம் திரண்டது. 

மழை கொட்டோ கொட்னென கொட்டி தீர்த்தது. பூட்டிக்கிடந்த கோயில் கதவுகள் தானாக திறந்து கொண்டன. 

மணல் மட்டுமே தகித்துக் கொண்டிருந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவிலில் தானாகவே பூஜைகள் நடந்தன. இதையெல்லாம் பார்த்து மக்கள் வாடைத்து நின்றனர்.

    இந்த அற்புதங்களுக்கு இடையே கருவூரார் பூதங்களை தமக்கு குடைபிடித்து வரச் சொல்லி அந்த ஊர் மக்களை சந்தித்தார். 

“மானிடர்களே! தெய்வசக்தி மிக உயர்ந்தது. தெய்வத்தின் அருள்தான் எல்லாவற்றையும் நடத்திவைக்கிறது.  நீங்கள் முடியாது என்று சொன்னவற்றை நான் செய்து முடித்து விட்டேன். இனியாவது தேவியை வழிபாடு செய்யுங்கள்” என்று கூறிவிட்டு புண்ணிய தலங்களை தரிசிக்கச் சென்றுவிட்டார்.

    கருவூரார் பல புண்ணியத் தலங்களை வணங்கி வந்து கொண்டிருந்த போது, அவர் முன் ஒரு காகம் வந்து அமர்ந்தது. அதன் அலகில் ஒரு ஓலை இருந்தது. அதை அவர் முன்வைத்து அந்த ஓலை தன் குருநாதர் போகரிடம் இருந்து வந்திருப்பதை தெரிந்து கொண்ட கருவூரார் எடுத்துப் படித்தார். கண்களில் ஏற்றிக்கொண்டார்.

    அதில் “கருவூரா! உடனே தஞ்சைக்கு வந்து சேர்” என்று எழுதப்பட்டிருந்தது. 

கருவூராரும் தஞ்சை நோக்கிப் புறப்பட்டார். தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் பெரிய சிவாலயம் ஒன்றை நிர்மானித்தான். தனது பெயரை வரலாற்றில் கம்பீரமாக பதிவு செய்யும் நோக்கத்தில் அற்புத சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த சிவாலயத்தை கட்டி முடித்தான்.

    அந்த ஆலயத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும் போது பந்தனம் செய்யமுடியாமல் கட்டு அவிழ்ந்து கொண்டே இருந்தது. அதன் காரணம் புரியாமல் சோழ மன்னன் குழம்பினான். கண்ணீர் விட்டு அழுதான். கூட்டத்தில் ஒருவராக மறைந்து நின்ற போகர் இதைக்கேட்டுக் கொண்டிருந்தார். உடனே தனது சீடனை வரச்சொல்லி ஓலை அனுப்பினார்.

    கருவூராரும் வந்தார். லிங்கத்தை பந்தனம் செய்ய முடியாததற்கான காரணத்தை ஞான திருஷ்டியால் பார்த்தார். அதைத் தடுத்துக் கொண்டு ஒரு பிரம்ப ராட்சஷி நிற்பதைக் கண்டார். உடனே மனதுக்குள் மந்திரம் ஜெபித்தார். ராட்சஷி மீது எச்சிலைக் காறி உமிழ்ந்தார்.

    கருவூராரின் எச்சில் பட்டதும் பிரம்ம ராட்சஷி கருகிச் சாம்பலானாள். அதன் பிறகு கருவூராரே முன்னின்று அஷ்டபந்தனம் செய்து சிவலிங்க பிரதிஷ்டையும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் செய்து வைத்தார். கும்பாபிஷேகமும் சிறப்புற நடந்து முடிந்தது. கருவூராருக்கு நன்றி செலுத்தும் விதமாக தஞ்சைப் பெரிய கோவிலில் கருவூராரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    கடைசியாக கருவைறக்குள் சென்ற கருவூரார் அங்கிருக்கும் சிவலிங்கத்தை தழுவினார் என்றும், எந்தக் கருவிலும் ஊறுதல் செய்யாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார் என்றும் ‘கருவூரன் மூப்பு சூத்திரம்’ கூறுகிறது.

சித்தர்களில் பல அற்புதங்களை நடத்திய பெருமை கருவூராருக்கு உண்டு.

1 கருத்துகள்

  1. தங்களின் ஒவ்வொரு பகிர்வையும் மெய்மறந்து படிக்கும் படி எழுதியிருக்கிங்க.
    கருவூரார் சிலையை தஞ்சையில் காணும் ஆவலை எழுப்பிய பகிர்வு. எங்கும் மனம்தான் சென்று வரும் போல...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை