Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சித்தர்கள் பூமியில் சிலிர்ப்பான பயணம்


ந்திய ஆன்மிக தளத்தில் தவிர்க்க முடியாத பெரும் பங்கு சித்தர்கள்! அவர்கள் இல்லையென்றால் நாம் இன்று வணங்கும் நிறைய கோயில்கள் உருவாகியிருக்காது.

அவர்கள் சொல்லாத கருத்துக்கள் இல்லை. ஈடுபடாத துறைகள் கிடையாது. ஆன்மிகம், மருத்துவம், ஜோதிடம் என எல்லாம் உணர்ந்த ஞானிகளாகத்தான் சித்தர்கள் இருந்தார்கள்.

கடவுளைக் காண முற்படுபவர்கள் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். 

இறைவனை கண்டுணர்ந்த சித்தர்கள் வாழும் பூமிக்கு ஒருமுறையேனும் போய் வந்தால்தான் ஜென்மம் முக்தி அடையும். அந்த இடம் சதுரகிரி.

சதுரகிரி தான் சித்தர்களின் தலைமைப்பீடம். சித்தர்கள் எதைப்பற்றியாவது விவாதம் நடத்த வேண்டும் என்றால் அவர்கள் ஒன்று கூடுவது இந்த சதுரகிரியில் தான்.


சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரி என்ற நான்கு மலைகள் சதுரம் போல் அமைந்து அதற்கு மத்தியில் இருப்பதால் இந்த மலைப்பகுதிக்கு சதுரகிரி என்று பெயர். கிட்டத்தட்ட 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சதுரகிரியின் மையத்தில் சஞ்சீவி மலை உள்ளது.

சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கிப் போகும்போது அதன் ஒரு பகுதி இங்கே விழுந்தது என்றும், அதனால்தான் இந்த மலை மூலிகைகள் நிறைந்த வனமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சதுரகிரி பயணம் சற்று கடினமான பயணம் தான். அனுபவம் வாய்ந்தவர்கள் துணையோடு பயணம் செய்வதே நல்லது. 

எங்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் டவாலியாக பணிபுரியும் சக்திவேல் சாமியார் துணையாக வந்தார். இவரை சாமி என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். 60 முறை சதுரகிரி சென்ற பழுத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டபடி எங்கள் பயணம் தொடர்ந்தது. என்னுடன் நண்பர் முரளி கிருஷ்ணனும் வந்திருந்தார். சொல்லப் போனால் அவர்தான் எனது சதுரகிரிப் பயணத்தின் மூலகர்த்தா!

மதுரையில் இருந்து ஒரு மதிய வேளையில் பஸ்ஸில் எங்கள் பயணம் தொடங்கியது. திருமங்கலம், கல்லுப்பட்டி, கிருஷ்ணன் கோவில், பேரையூர் வழியாக சதுரகிரியின் மலையடிவாரமான தாணிப்பாறைக்கு வந்து சேர்ந்தேன்.

சதுரகிரி பயணத்தின் துவக்கம் தாணிப்பாறை. இது மலை அடிவாரம். இங்கிருந்து சதுரகிரிக்கு 8 கி.மீ. நீண்ட மலைப்பாதையில் நடந்தே போக வேண்டும். நான்கைந்து மலைகளைக் கடந்து சதுரகிரி அடைய வேண்டும். அதனால் மலைப்பாதை ஏற்ற இறக்கம் கொண்டதாக இருக்கும்.


பதட்டமில்லாமல் இயல்பான வேகத்தில் நடக்கக் கூடிய ஒருவர் சதுரகிரியை அடைய சுமார் நான்கு மணி நேரம் ஆகும். மழைக்காலங்களில் இந்தப் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

மலைப்பாதையின் துவக்கத்தில் ஆசீர்வாத விநாயகர் கோவில் உள்ளது. இவரிடம் ஆசிப் பெற்றுதான் புனிதப் பயணத்தை தொடங்க வேண்டும். 

அதன் பின்னர் ராஜயோக தங்க காளியம்மன், பேச்சியம்மன், அத்திரி மகரிஷி, கருப்பண சாமி, கோரக்கர் குகை, இரட்டை சிவலிங்கம், நாவல் ஊத்து, சின்ன பசுகடை, பெரிய பசுகடை நடந்து இறுதியாக பிலாவடிக் கருப்பர் ஆலயத்தில் இந்த யாத்திரை முடிவடையும்.

மழைக்காலங்களில் இந்த ஆலயத்திற்கு முன்பாக காலாங்கிநாதர் உருவாக்கிய பிரம்மதீர்த்தம் ஓடிக் கொண்டிருக்கும். இதில் நீராடி எழுந்து பிலாவடிக்கருப்பரை வணங்கினால், பாவம் தொலைந்து புண்ணியம் வந்து சேரும் என்று புராணம் கூறுகிறது.

பிலாவடி கருப்பர்
சதுரகிரி யாத்திரை என்பது இரட்டை மகாலிங்கம் பிலாவடி கருப்பர், சுந்தர மூர்த்தி, சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய எல்லா தெய்வங்களையும் தரிசித்தால்தான் பூர்த்தியடையும். 

பிலாவடி கருப்பரை தரிசித்தப்பின் சுந்தர மூர்த்தியை வணங்க வேண்டும். சதுரகிரியில் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் சுந்தர மூர்த்திதான்.

 இதை பிரதிஷ்டை செய்தவர் மகாசித்தர் அகத்தியர். அவரைத் தொடர்ந்து பல சித்தர்கள் பூஜித்து வழிப்பட்ட லிங்கம் என்பதால் இதன் சக்தி அபரிவிதமானது. இவரிடம் வைக்கும் எந்தவொரு பிரார்த்தனையும் வீண் போவதில்லை.

சுந்தர மூர்த்தியை தரிசித்தப்பின் சிறிது தூரம் நடந்தால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வருகிறது. இந்த ஆலயத்தில் தினமும் நான்கு வேளை பூஜை நடை பெறுகிறது. காலசந்தி (காலை 6 மணி), உச்சி காலம் (நண்பகல் 12 மணி), சாயரட்சை (மாலை 4 மணி), அர்த்த ஜாமம் (மாலை 6 மணி) பூஜைகள் நடக்கின்றன. அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் அபிஷேகங்களும், அலங்காரங்களும் விமரிசையாக  இருக்கும். ஆடி அமாவாசை மிக ­விஷேசமானது.

சுந்தர மகாலிங்கம்
சுந்தரமகாலிங்கத்தை தரிசித்தப்பின் அடுத்து பக்தர்கள் குவிவது சந்தன மகாலிங்கம் கோயிலுக்குத்தான். 1990-வரை நாணல் செடிகள் அடர்ந்து நிற்கும் வனப்பகுதியாகவே இது இருந்தது. யானை, புலி, கரடி போன்ற விலங்குகள் அடிக்கடி வந்து போகும் பகுதி. அதனால் பல பக்தர்கள் சுந்தர மகாலிங்கத்தை தரிசித்த கையோடு ஊர் திரும்பி விடுவார்கள்.

இப்போது சந்தன மகாலிங்க கோயிலுக்கு படிக்கட்டுகள் அமைந்த அருமையான பாதை அமைத்திருக்கிறார்கள். எந்த வித பயமுமில்லாமல் சந்தன மகாலிங்கத்தை தரிசித்து மகிழலாம். இங்குதான் சட்டநாத சித்தர் வாழ்ந்து தவம் புரிந்த குகை இருக்கிறது. அருகிலேயே ஸ்ரீசந்தன மகாதேவி அம்மன் சந்நிதி உள்ளது.

இங்கிருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தூரம் நடந்தால் வனக்காளி, பரவைக்காளி என்று அழைக்கப்படும் காளிதேவி சிலை இருக்கிறது.

காளிதேவியை வணங்கும் டவாலி சக்திவேல்
 இதன் அருகில் அகத்தியர் மரம் உள்ளது. அந்த மரத்தில் அகத்தியர் நிற்பது போல் இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்தக் காளிதேவியை வணங்கி வேண்டிக் கொண்டால் மலைப்பாதையில் நமக்கு துணையாக வருவாள் என்பது ஐதீகம்.

மரத்தில் அகத்தியர்
சதுரகிரியில் இந்த தெய்வங்களையெல்லாம் தரிசித்தப் பிறகு மீண்டும் மலையேற வேண்டும். இந்த மலையேற்றத்துக்கு அனுபவம் நிறைந்தவர்களை துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாதை மாறிப்போகும். மலைமீது சுமார் 4 கி.மீ. தூரம் நடந்தால் தவசிப்பாறை வருகிறது. கடினமான பாதை இது. எங்களுக்கு துணையாக டவாலி சக்தி வேல் வந்தார்.

தவசி பாறை போகும் பாதை
சந்தன மகாலிங்கம் கோவிலில் இருந்து பார்த்தால் தவசிப் பாறை சிறியதாகத் தெரியும். தவசிப் பாறைக்கு கீழே தவசி குகை இருக்கிறது. இதில் சித்தர்கள் கண்ணுக்கு தெரியாமல் சூட்சுமமாக வந்து போகிறார்களாம்.

தவசிப் பாறை
இரண்டடி உயரம் கொண்ட குகை என்பதால் பத்தடி தூரத்துக்கு தவழ்ந்துதான் போக வேண்டும். அதை கடந்தால் 5 அடி தூரத்துக்கு அமர்ந்தபடி முழங்காலிட்டுப் போகலாம். அதையும் கடந்தால் நின்றபடி நடக்கலாம்.

தவசிக் குகையில் நான்
 சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் கொண்டவர்கள் உள்ளே செல்வதை தவிர்ப்பது நல்லது. 

தவசிப் பாறைக்கு கீழே ஒரு பாறை உள்ளது. இதை 'குளிர் பாறை' என்கிறார்கள். அபாயம் நிறைந்த இந்த பாறையில் அமர்ந்தால் சிலு சிலுவென ஏஸியில் இருப்பது போல் குளிர்ந்த காற்று நம்மை தாக்கும்.

தவசிப்பாறையை சென்ற பின் கீழே இறங்கும் மற்றொரு வழியில் வந்தால் பெரிய மகாலிங்கம், வெள்ளை விநாயகர், மாவூத்து போன்றவற்றை வணங்கி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வந்து சேரலாம்.

இதில் பெரிய மகாலிங்கம் என்பது மிகப் பெரிய பாறையில் இயற்கையாக உருவானது. பார்ப்பதற்கு சிவலிங்கம் போலவே காட்சி தருவதால், பெரிய மகாலிங்கம் என்கிறார்கள். இந்த பாறை கீழே விழுந்துவிடாமல் மரத்தின் வேர்கள் சடை போல் பின்பக்கம் பிடித்து பாதுகாக்கின்றன.


பெரிய மகாலிங்கம்
பெரிய மகாலிங்கம் இருக்கும் மலைப் பகுதியில் ஏராளமான குகைகள் இருக்கின்றன. இங்கு மனிதர்கள் அலையக்கூடாது. சித்தர்கள் அடிக்கடி ஒன்று கூடி சத்சங்கம் நடத்துவார்கள். இதைக் கேட்டதும் சிலிர்த்துப் போனேன். சித்தர்கள் உலாவிய இடத்தில் நானும் உலாவிக் கொண்டிருக்கிறேன்.

சதுரகிரியின் அனைத்து இடங்களையும் பார்த்து முடிக்க குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் தேவை.  இங்கு ஹோட்டல்களோ, தங்கும் விடுதிகளோ கிடையாது. மடங்கள் மட்டும் இருக்கின்றன.

 வத்திராயிருப்பில் இருக்கும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் செயல் அலுவலரிடம் இருந்து கடிதம் பெற்று வந்தால் இந்த மடங்களில் இலவசமாக தங்கலாம். அதுவும் விசேஷ­ம் இல்லாத சாதாரண நாட்களில் தான் அனுமதி கிடைக்கும்.

நாகக் கன்னி
சதுரகிரியில் ஹோட்டல்கள் இல்லையென்றாலும் உணவுக்கு பஞ்சம் கிடையாது. காளிமுத்து கஞ்சிமடம் மிகப் பழமையான மடம். விசே­ஷ­ நாட்களில் இரவு 8 மணி வரை இங்கு அன்னதானம் நடைபெறும்.

அதன்பின் மலையேறி வருபவர்கள் உணவின்றி பசியால் தவித்திருக்கிறார்கள். இந்த அனுபவம் மதுரையைச் சேர்ந்த ஆர்.ஆர் என்கிற ராஜரத்தினத்துக்கும் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் எண்ணத்தில் உதித்ததுதான் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் அமைப்பு.

'அருள்மிகு சுந்தரமகாலிங்கம் யாத்திரிகர் சேவை அறக்கட்டளை' என்ற பெயரில் 2007-ம் ஆண்டு துவங்கப்பட்டது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தொடர்ந்து உணவு வழங்கப் படுகிறது. 12 மணிக்கு மேல் பக்தர்கள் வந்தால், உடனடியாக உணவு தயார் செய்து பரிமாறுகிறார்கள்.

 இதனால் சதுரகிரியில் சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை. சதுரகிரி மலைக்கு நடந்து சென்று தரிசிக்க முடியாதவர்களுக்காக 'டோலி' வசதியும் இருக்கிறது. இதற்காக தாணிப்பாறையில் சில ஆட்கள் இருக்கிறார்கள். சதுரகிரிக்கு போக வர இரண்டுக்கும் சேர்த்து ரூபாய் 4,000 கூலியாக பெறுகிறார்கள். இதன் மூலம் வயதானவர் களும், நடக்க முடியாதவர்களும் மகாலிங்கத்தை தரிசிக்க முடியும்.

சித்தர்கள் உலவும் இந்த மலையில் ஏறி இறங்குவதே ஆரோக்கியம் நிறைந்த சுக அனுபவத்தை தரும்.

சதுரகிரியில் நமக்கு தெரியாத மர்மமான பல பகுதிகள் இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது.


சதுரகிரி பயணத்தில் எடுக்கப்பட்ட காணொளி 






7 கருத்துகள்

  1. சதுரகிரி சென்று தரிசித்த மகிழ்ச்சியினை மிகவும் அழகாகப் பதிவு செய்திருக்கின்றீர்கள்.. உங்களுடன் பயணம் செய்தது போன்றதொரு உணர்வு.. நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ளமுடிந்தது.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அய்யா!
      தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!
      தங்கள் தளத்தை தொடர முயற்சி செய்தேன். முடியவில்லை.
      மீண்டும் முயற்சிக்கிறேன். நன்றி!

      நீக்கு
  2. பத்தடி தவழ்ந்தும் ஐந்தடி முழங்காலிட்டும் அப்பப்பா கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது தாங்கள் சென்று வந்தீர்கள் என்பது வியப்பாகவே இருக்கிறது. சதுரகிரி இதுவரை நான் கேள்விப்பட்டதும் இல்லை. படங்களுடன் பகிர்ந்தது சிறப்புங்க.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா. சதுரகிரி என்றாலே ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வால் ஆட்பட்டு போகும் நான், கடந்த வருடம் ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த போது அதில் சதுரகிரியும் அடக்கம் என்றார்கள். ஆனால் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக மேலே செல்ல முடியவில்லை. ஏக்கத்தோடு வந்தேன். உங்கள் அனுபவ பகிர்வு அருமையாக இருக்கிறது. எங்களோடு பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை