Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மன்னன் மனம் வென்ற முதல் சித்தர்


து மதுரை மாநகர், பாண்டிய மன்னனின் அரண்மனை, அந்தப்புரத்து நந்தவனத்தில் மன்னன் அபிஷேக பாண்டியன் தன் காதல் மனைவிகளோடு ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

    நந்தவனத்தில் உள்ள தென்னை மரங்கள் திடீரென்று பனைமரங்களாக மாறின. பின்னர் தென்னை மரமாக பழைய வடிவத்திற்கே வந்தன. பறவைகள் விலங்காகவும், விலங்குகள் பறவைகளாகவும் மாறி மாறி அதிசயம் செய்தன. ஒன்று மற்றொன்றாக மாறிக்கொண்டிருந்தது. மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை.

    மறுநாள். அரசவையைக் கூட்டினான்.

    “அமைச்சரே, அந்தபுர நந்தவனத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவும் என்னை குழப்பமடைய செய்துள்ளன.. இதற்கு என்ன காரணம்?

   
    “மன்னா! நந்தவனம் என்றில்லை. நாடு முழுவதுமே இந்த விபரீத நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. நீண்ட சடையும், நெற்றி நிறைய விபூதியும் அதன் மீது திலகமும், இரண்டு செவிகளில் குண்டலங்களும், படிக மாலையும், புலித்தோல் ஆடையும் அணிந்து, ஆண்மை வடிவம் கொண்ட ஒரு மனிதர் பல அற்புதங்களை செய்து வருகிறார். பருவப் பெண்கள் அவரை பார்த்த மாத்திரத்தில் மையல் கொள்கிறார்கள். இளைஞர்களோ தாம் பெண்ணாகப் பிறக்க வில்லையே என்று ஏக்கம் கொள்கிறார்கள்”.

    “அவர் திடீரென்று ஓரிடத்தில் இருந்து மறைந்து மற்ற இடத்தில் காட்சியளிப்பார். தூரத்தில் இருக்கும் மலையை பக்கத்தில் கொண்டு வருவார். அருகில் இருக்கும் மலையை தூரத்தில் மாற்றியமைப்பார். மழலை மொழி பேசும் குழந்தைகளை முதியவர்களாக மாற்றிக்காட்டுவார். கிழவர்களை குழந்தையாக மாற்றுவார். ஆணை பெண்ணாக்குவார், பெண்ணை ஆணாக்குவார். மலட்டுப் பெண்ணுக்கு மகப்பேறு தருவார். கூன், குருடு, செவிடு, ஊமை போன்ற குறைகளை போக்கிடுவார்.”

    “வைகை ஆற்றில் வெள்ளம் நிரம்பி ஓடச் செய்வார். மீண்டும் ஆற்றை வற்ற வைப்பார். சுவையான நீர் கொண்ட பொய்கையை உப்பு நீராக மாற்றுவார். கடல் நீரை நன்னீராக்குவார். மந்திரக் கோலை அந்தரங்கத்தில் மிதக்க வைத்து, அதன்மீது ஒரு ஊசியை நிலை நிறுத்தி வைப்பார். அந்த ஊசி மீது கால் பெருவிரலை ஊன்றி ஆடுவார். சூரியனை இரவில் வரவைப்பார். சந்திரனை பகலில் தோன்றச் செய்வார். வயோதிகர்களைத் தன் கைப்பிரம்பால் தடவி வாலிபனாக மாற்றுவார். அதற்கு ஏற்ப அவர்களின் முதுமை மனைவிகளையும் இளம்பெண்ணாக மாற்றி, அவர்கள் கர்ப்பம் தரிக்க விபூதியும் அளிப்பார்” என்று அமைச்சர் நீண்ட பட்டியல் போட்டு சொல்லச் சொல்ல.. அபிஷேகப் பாண்டியனுக்கு அந்த அற்புத மனிதனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பெருக்கொடுத்தது.

    உடனே அரண்மனை காவலர்களை அழைத்து “அந்த வித்தக மனிதரை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்!” என்று ஆணையிட்டு அனுப்பிவைத்தார். அவர்களும் அந்த மாமனிதரைப் பார்க்க வேண்டும் என்று அடக்கமுடியாத ஆவலோடு சென்றனர்.

    சென்றவர்கள் நெடுந்நேரம் கடந்தும் வராததைக் கண்ட பாண்டிய மன்னன் சில அமைச்சர்களை அனுப்பி வைத்தான். அமைச்சர்கள் அவரை தேடி வந்த போதுதான் தெரிந்தது அந்த மனிதரை அழைக்க வந்த காவலர்கள், அவரின் திருவிளையாடலில் தன்னை மறந்து நின்றுவிட்டனர்.

    அமைச்சர்கள் அந்த மனிதரை சந்தித்து வணங்கினர். “தங்களைக் காண மன்னர் மிகவும் ஆர்வமுடன் இருக்கிறார். தாங்கள் மன்னர் இருப்பிடம் வரவேண்டும்” என்றனர். “எனக்கு மன்னரிடத்தில் ஆக வேண்டிய காரியம் ஒன்றுமில்லையே? நான் ஏன் மன்னரைப் பார்க்க வேண்டும்?” என்று கூறி வர மறுத்துவிட்டார்.

    அமைச்சர்கள் சோகத்தோடு மன்னனிடம் சென்றனர். நடந்ததை கூறினர். “உண்மைதான் இறைவனின் திருவருளைப் பெற்றவர்கள், இந்திரன், பிரம்மன், திருமால் போன்றவர்களையே மதிக்க மாட்டார்கள். அப்படியிருக்கையில் சாதாரணமாக மண்ணாளும் இந்த மன்னனையா மதிக்கப் போகிறார்கள். நான் அது தெரியாமல் அவரை அவமதித்துவிட்டேன். இது என் அறியாமையால் நேர்ந்துவிட்டது. அவர் என்னைத் தேடிவர அவருக்கு என்ன குறை இருக்கிறது? எனவே, நானே அவரை நாடிச் சென்று காண்கிறேன்” என்று மனதில் நினைத்த அபிஷேகப்பாண்டியன் நேராக கோவிலுக்கு சென்றான்.

    மதுரையின் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளை வணக்கினான். வணங்கி முடித்த மன்னன் இறைவனை வலம் வந்தார். அந்த பாதையில் புலித்தோல் ஆசனத்தில் ஐம்புலன்களையும் வென்ற அந்த மனிதர் இறுமாப்புடன் அமர்ந்திருந்தார்.

    அரசன் அருகில் வரவர வழியில் இருந்தவர் விலகி வழிவிட்டனர். அந்த மனிதர் மட்டும் சிறிதும் அச்சமின்றி மரியாதை கூட கொடுக்காமல் அமர்ந்திருந்தார். காவலர்கள் அவரை அப்பால் போகும்படி கூறினர். அவர் சிரித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார்.

    அந்தப் புன்னகை பாண்டியனை சிந்திக்கத் தூண்டியது. மெதுவாக அவர் அருகில் வந்த மன்னன் “உன் பெயர் என்ன? எதற்காக இங்கு வந்திருக்கிறாய்? உன் நாடு எது? ஊர் பெயர் என்ன?” என்று அதிகாரமாகக் கேட்டான்.

    “அப்பா! நாம் எந்த நாட்டிலும் இருப்போம். எந்த நகரிலும் திரிவோம். எல்லா ஊரும் நம்மூரே. எல்லா மக்களும் நம் மக்களே! ஆனாலும் இப்போது யாம் இருக்கும் தலம் காசி மாநகரமாகும். வாழ்வில் எந்த பற்றும் இல்லாமல் பிச்சை வாழ்வு மேற்கொள்ளும் அடியார்களே நமது சொந்த பந்தங்கள். வித்தைகள் பல செய்து சித்து வேலை காட்சித் திரியும் சித்தர் யாம். இங்குள்ள சிவத்தலங்களை தரிசிக்கவே வந்தோம்”

    “ஞான ஒளி பரவும் மதுரை மாநகரில் வாழ்பவர்களுக்கு எமது திருவிளையாடல்களை நிகழ்த்தி, அவர்கள் விரும்பும் சித்திகள் பலவற்றையும் அருளுவோம். வேதம் முதலான அறுபத்து நான்கு கலைகளையும் கைவரப் பெற்றோம். உன்னிடத்தில் நாம் பெறக்கூடியது ஒன்றுமில்லை பாண்டியனே!” என்று கூறி புன்னகைத்தார்.

    அந்த மனிதனின் செருக்கும், இறுமாப்பும், பெருமிதமும் அபிஷேகபாண்டியனை சினம் கொள்ளச் செய்தது. அந்த நேரம் பார்த்து கிராமத்து விவசாயி ஒருவர் நன்கு விளைத்த ஒரு கரும்பினை கொண்டு வந்து மன்னிடம் கொடுத்து வணங்கி நின்றார். நல்ல விளைச்சல் கண்ட பொருளை மன்னனுக்கு கொடுத்து பரிசு பெறுவது அந்தக் கால மரபு. அதற்காகவே அந்த விவசாயியும் வந்திருந்தார்.

    “உலகில் உள்ள தெய்வங்கள் அனைத்தையும் விட நீயே உயர்ந்தவன் என்பது போல் பேசும் மனிதனே! உமக்கு வல்லமை இருந்தால், இந்த தூணில் இருக்கும் கல்யானையிடம் இந்த கரும்பினைக் கொடுத்து உண்ணச் செய் பார்ப்போம். அவ்வாறு நீ செய்தால் உன்னை எல்லாம் வல்ல சித்தர் என்று நான் ஒத்துக்கொள்கிறேன். அது மட்டுமல்ல மதுரையை அருளாட்சி செய்து வரும் சோமசுந்தரர் கடவுளும் நீயே என்பதை ஒப்புக்கொண்டு நீ விரும்பியதெல்லாம் தருவேன்” என்று மன்னன் உரைத்தான்.

    “பாண்டியனே, என்னருகே வா. நீ கொடுத்து பெறும் நிலையில் நானில்லை. உனக்கு என்ன தேவையோ தயங்காமல் கேள். நான் உனக்குத் தருகிறேன். இதோ உன் கண் முன்பே இந்தக் கல்யானை கரும்பு தின்பதை பார்த்து பரவசம் கொள்!”

    அந்த மனிதரின் அருகில் இருந்த மண்டபத்தூணில் கல்லிலே ஒரு யானை கம்பீரமாக செதுக்கப்பட்டிருந்தது. அந்த கல்யாணையை கடைக்கண்ணால் பார்த்தர். எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்தக் கல்யானையின் கண் திறந்தது. மண்டபமே அதிரும் வண்ணம் வாய்திறந்து பிளிறியது. துதிக்கையை மேலே நீட்டி பாண்டியன் கையில் இருந்த கரும்பினை பிடித்து இழுத்து கடைவாயில் இட்டு சாறு ஒழுகுமாறு கடித்து மென்று தின்றது. கரும்பினை முழுவதுமாக தின்றதும். கல்யானை பாண்டியன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை எட்டிப்பிடித்து இழுத்தது. இதனைக் கண்டு கோபம் கொண்ட காவலர்கள் யானையை அடிப்பதற்காக வந்தனர். அதற்குள் யானை முத்து மாலையை வாயில் போட்டு விழுங்கிவிட்டது. மன்னன் அந்த மனிதர் மீது கோபம் கொண்டான். மன்னனின் மெய் காப்பாளர்கள் அந்த மனிதரை அடிக்க ஓடிவந்தார்கள். மென்மையான புன்னகைப் புரிந்த அவர் தன் கையை மேலே தூக்கி...

    “நில்லுங்கள்….!” என்று ஆணையிட்டார். ஓடி வந்த வீரர்கள் அப்படியே சிலையாக நின்றனர்.

    பாண்டியன் நெடுஞ்சான் கிடையாக அந்த மனிதரின் காலில் விழுந்து “அறியாமல் நான் செய்த பிழையை பொறுத்தருள வேண்டும்” என்று மனமுருக வேண்டினான்.

    அன்புக்கு அடிபணியும் கருணைக் கடவுளாகிய அவர் சித்தர்களுக்கெல்லாம் முதன்மை சித்தரான, சித்தர்களின் தலைவரான சிவபெருமான் என்பது யாருக்கும் தெரியவில்லை.

    பாண்டியனைப் பார்த்து முதல் சித்தரான அவர் “வேண்டும் வரம் கேள்!” என்றார். உடனே அபிஷேகப்பாண்டியன் “நல்ல புத்திரர்கள் கிடைக்க வரம் தர வேண்டும்” என்று வேண்டினான். சித்தரும் அவ்வண்ணமே அருள்புரிந்தார்.

    தனது கரத்தை யானை மீது வைக்க… உடனே அந்த யானை தனது துதிக்கையை நீட்டி முத்து மாலையைப் பாண்டியனிடம் கொடுத்தது. பாண்டியனும் அதைப் பெற்றுக் கொண்டான். அப்படி பெறும் போது இவ்வளவு நேரமும் அங்கிருந்த சித்தரை காணவில்லை. மாலையை பெற்றுக்கொண்டதும் யானையும் கல்லாக மாறியது.

    “முற்றும் உணர்ந்த முதல்வனே! அறியாமையால் உம்முடைய திருவிளையாடலை நான் அளந்தறியத் தொடங்கினேன். நான் எவ்வளவு பெரிய முட்டாள்” என்று மனமுருக மன்னிப்பு கேட்டு வணங்கினார்

    சித்தரின் அருளாள் அபிஷேகபாண்டியன் விக்கிரமன் என்ற மகனை பெற்றெடுத்தான். உரிய காலத்தில் வந்ததும் விக்கிரமனுக்கு முடிசூட்டி, அரசினையும் அளித்து சித்தரின் திருவருளில் கலந்து பேரின்பம் அடைத்தான்.



2 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை