Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 1

யணம் எப்போதுமே அலாதியானது. பயணம் தரும் பரவசம் வேறு எதிலும் கிடைக்காத புதிய அனுபவம். பயணத்தில் நாம் சென்று சேர்ந்த இடங்களை பெருமையாக பேசுகிறோம்..!

என்றைக்காவது நாம் பயணித்த வாகனங்களை பெருமை பேசியிருக்கிறோமா..?

கார், பஸ், ரயில், விமானம் என்று மாறி மாறிப் பயணிக்கிறோம். ஆனாலும், அந்த வாகனங்களை நாம் பெருமைப் படுத்தியதேயில்லை.
அதிலும் பொது வாகனங்களை நாம் கண்டு கொண்டதில்லை. பஸ்ஸும் ரயிலும் நம்மைச் சுமந்து சென்ற இடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் ரயில் எப்போதுமே ஸ்பெஷல்தான்..!

ரயில் ஒரு நகரும் வீடு. ரயிலில் ஓடியாட இடம் இருப்பதால் அது குழந்தைகளுக்குச் சொர்க்கம். கழிவறை இருப்பதால் பெண்கள், முதியவர்களுக்கு அது வசீகரம். படுப்பதற்கும், உட்கருவதற்கும், அரட்டை அடித்து, புத்தகம் வாசிப்பதற்கும் வசதியிருப்பதால் நமக்கும் அது ஆனந்தம். இது மட்டுமா ரயிலைப் பிடிப்பதற்கு... இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.


ரயிலுக்கும் எனக்கும் பால்ய வயது பந்தமுண்டு. சிறுவயதில் இருந்தே ரயில் என் வாழ்வோடு இன்னைந்தே வந்திருக்கிறது. எர்ணாகுளம், போத்தனூர், சங்ககிரி துர்க்கம், சேலம் எனச் சிறுவயதில் நான் குடியிருந்த வீடுகள் எல்லாமே ரயில்வே காலனிக்கு நடுவிலே இருந்தது. அந்த வீடுகளுக்கு முன் ரயில்வே டிராக் இருந்தததால் எப்போதும் ரயில்கள் தடதடவென ஓடிக்கொண்டே இருக்கும்.

காதைக் கிழிக்கும் ரயிலின் விசிலும், பதற வைக்கும் தண்டவாளச் சத்தமும் சிறுவனாயிருந்த எனது இரவு தூக்கத்தை விரட்டி மிரட்டின. ஆனாலும் ரயிலை மனம் விரும்பவே செய்ததது. என்னதான் யானை கரிய பெரிய உருவமாக இருந்தாலும், மிரள வைத்தாலும் சிறு வயது முதலே அதனுடனான ஈர்ப்பு நம்மை விட்டு போவதில்லை. ரயிலும் அப்படித்தான்..!

ரயிலுக்கும் எனக்குமான நெருக்கம் அதோடு நின்றுவிடவில்லை. ரயில் என்ஜினிலும் என்னை பயணிக்க வைத்தது. சிறுவயதில் ரயில் என்ஜினில் பயணிப்பது பிரமிப்பான அனுபவம். என் தந்தை ரயில்வேயில் பணிபுரிந்ததால் இவையெல்லாம் சாத்தியமானது. இப்போதெல்லாம் ரயில் என்ஜினில் டிரைவர்களை தவிர வேறு யாரும் பயணிக்கக்கூடாது என்ற விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று அப்படியில்லை, அதனால் எனது சிறுவயது சாகசப் பட்டியலில் ரயில் என்ஜின் பயணமும் சேர்ந்துக்கொண்டது.

கிட்டத்தட்ட எல்லாவகையான எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணித்துவிட்டேன். ஆனாலும் 'சதாப்தி'யில் பயணிக்க வேண்டும் என்பது எனக்கொரு கனவாகவே இருந்தது. இந்தியாவில் மிக உயர்ந்த சேவை தரும் ரயில்கள் சதாப்தியும் ராஜ்தானியும்தான்.

ராஜ்தானி நீண்ட தூரம் பயணிக்கும் ரயில். ராஜ்தானி என்ற ஹிந்தி வார்த்தைக்கு 'த கேபிடல்' என்று அர்த்தம். தேசத்தின் தலைநகரான நியூ டெல்லியை மாநில தலைநகரங்களுடன் இணைக்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்.

1969-ல் முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நியூ டெல்லியிலிருந்து ஹவுராவுக்கு போகும் போது இந்தியாவின் மிக வேகமான ரயிலாக அதுதான் இருந்தது. 1.445 கி.மீ. தூரத்தை 17 மணி 20 நிமிடங்களில் அனாவசியமாக கடந்து பிரமிப்பை ஏற்படுத்தியது. இன்றைக்கு ராஜ்தானி வேகத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சதாப்தியும் துரண்டோவும் முதல் இரண்டு இடங்களை பிடித்துக்கொண்டன.

தற்போது இந்தியாவில் மிக வேகமான எக்ஸ்பிரஸ் 'போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்'தான். மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் அது செல்கிறது. சதாப்தி என்றால் 100 என்று அர்த்தம். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு விழாவின் நினைவாக 1988 முதல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.


சதாப்தி ஒரு பகல் நேர எக்ஸ்பிரஸ். இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும். முழுவதும் ஏஸி வசதி செய்யப்பட்ட நவீன ரயில் பெட்டிகளைக் கொண்டது. இதன் தூரம் 300 முதல் 700 கி.மீ.க்குள் இருக்கும். ஒரே நாளில் புறப்பட்ட ரயில் நிலையத்திற்கு மீண்டும் வந்து சேரும் விதமாக இயக்கப்படும்.

இப்படிப்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மைசூர் சென்று சேரும் எக்ஸ்பிரஸ் அது. காலை 6 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸில் 5.40-க்கே அமர்ந்துவிட்டேன்.

ஜன்னலோர சீட்.. மிகப் பெரிய கண்ணாடி ஜன்னல், வேடிக்கைப் பார்க்க வசதியாக இருந்தது. வெயில் அடித்தால் அதன் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள கனமான சிவப்பு நிற திரை இருந்தது. எனக்கு பயணத்தில் பராக்கு பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதனால் திரையை ஓரங்கட்டி வைத்தேன்.

ஏசியின் குளுமை அதிகமாகவே சில்லிட்டது. சரியாக 6 மணிக்கு ரயில் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் சுடச்சுட டீ, காபி வந்தது. உணவு வகைகளை பரிமாறுவதற்கென்றே ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் தனித்தனியாக ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் ஸ்நாக்ஸ், உணவு என பயணிகளின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். இதற்கான தொகையை டிக்கெட்டோடு சேர்த்து வாங்கி விடுகிறார்கள்.

                                                                                                                                           -தொடரும்


பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 2


24 கருத்துகள்

  1. ரயில் பயணம் அருமை தொடரட்டும்.
    வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிட்டவுடனே சதாப்தி வேகத்தில் வந்து பதிவிட்டு வாக்களித்த நண்பருக்கு நன்றிகள்.
      வலைச்சரத்தில் அறிமுகமானது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஆர்வத்தை தூண்டியுள்ளது.

      நீக்கு
  2. சதாப்தியில் உணவு வகைகளை நன்றாய் இருக்கும் என்பார்கள் ,எனக்கென்னவோ பிடிக்கவே இல்லை ,ரயில்வே உணவு விசயத்தில் படு மோசம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவை பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் மற்ற ரயில்களில் வழங்கப்படும் உணவைவிட இது பரவாயில்லை என்று சொல்லலாம். சதாப்தி, ராஜ்தானி, துராண்டோ போன்றவற்றில் கொடுக்கும் உணவுகள் வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது என்பதை அனுபவஸ்தர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.
      வருகைக்கு நன்றி ஜி!

      நீக்கு
  3. நானும் கடந்த 16 ஆம் நாள் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு சதாப்தியில் பயணம் செய்தேன். முதலில் எலுமிச்சை பழச்சாரும் பின்னர் பிஸ்கட் மற்றும் காபியும் தந்தார்கள். கூடவே படிக்க நாளேடும் தந்தார்கள். பயணத்தின் போது தரப்பட்ட காலை உணவும் நன்றாகவே இருந்தது. இடையில் எங்கும் நிற்காமல் நேரே பெங்களூருவிற்கு சென்றதால் காலை 10.50 க்கே சென்றுவிட்டேன். மொத்தத்தில் பயணத்தை இரசித்தேன்.தங்களின் பயண அனுபவத்தை அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே!
      முதல் முறையாக எனது வலைப்பக்கத்தில் பதிவிட்டதற்கு நன்றி!
      உண்மையில் சதாப்தி பயணம் இனிமையாகவே இருந்தது.
      தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி!

      நீக்கு
  4. நானும் மூன்று முறை டெல்லிக்கும் இரண்டுமுறை மைசூருக்கும் சென்றுள்ளேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் இனிமையாகவே இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  5. பல முறை சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் சதாப்தியில் பயணித்திருக்கிறேன்.. பல வருடங்களுக்கு முன். நினைவுகளை கிளறிவிட்டீர்கள்.. எனக்கு எப்போதுமே பிடித்த பயணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலரும் நினைவுகள் என்றைக்கும் சுகமானதாகவே இருக்கும்.
      முதல் வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  6. பதில்கள்
    1. அந்த அனுபவமும் நிறைய இருக்கிறது. கண்டிப்பாக எழுதுகிறேன்.
      முதல் வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  7. சதாப்தியில் நாலுமுறை பயணம் செஞ்சுருக்கேன். திங்கக்கொடுத்தே கொன்னுடறாங்க என்பதுதான் ஒரே குறை!

    எனக்கும் ரயில்லுன்னா ரொம்பவே பிடிக்கும். இப்பெல்லாம் ஏஸி கம்பார்ட்மெண்ட்ன்னு உள்ளே அடைச்சு வச்சுடறாங்க. டபுள் கண்ணாடி ஜன்னலில் ஒன்னும் சரியா வேடிக்கை பார்க்கமுடியாது. வெளிப்புறம் கண்ணாடியில் அழுக்குப்பிடிச்சுக்கிடக்குது:(

    பழைய கால கூ எஞ்சின் நிலக்கரி எரியும் நீராவி எஞ்சினின் ரயிலில் கதவாண்டை நின்னுக்கிட்டு வேடிக்கை பார்த்தது போல் இப்ப இல்லை:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அப்படி தோன்றவில்லை. கொடுக்கும் உணவு போதாது என்பதுபோல்தான் தோன்றியது. ஒரு வேளை வயது கூடும் போது அப்படி தோன்றுமோ என்னவோ.

      வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றியம்மா!

      நீக்கு
    2. செந்தில் நீங்க நம்ம இனமோ?

      நீக்கு
    3. கொடுத்த பிரியாணியில் இரண்டு கரண்டி அளவுதான் பிரியாணி இருந்தது. வயிற்ருக்கு போதவில்லை. ஆனாலும் பசிஎடுக்காத அளவிற்கு எதையாவது கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

      நாங்கள் சாப்பாட்டில் எப்படி என்பதற்கு மலரும் நினைவு சம்பவம் ஒன்று இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் போது என்.சி.சி. சார்பாக 120 பேர் சைக்கிளில் மதுரை - குற்றாலம் போனோம். மொத்தம் 164 கி.மீ. காலை 7 மணிக்கு சைக்கிளை மிதிக்கத் தொடங்கியவர்கள், இரவு 3 மணிக்குதான் குற்றாலம் போய் சேர்ந்தோம்.

      மறுநாள் மதியம் சாப்பாட்டிற்காக ஒரு ஹோட்டலில் சொல்லியிருந்தோம். அன்லிமிட் சாப்பாடே 5 ரூபாய்தான். காலேஜ் பசங்க கொஞ்சமா சப்பிடுவாங்கன்னு நம்பி 5 ரூபாய்க்கு ஒத்துக்கிட்டார். அருவில மணிக்கணக்கா குளிச்சதுல கபகபன்னு பசி. சின்ன ஹோட்டல் 10 பேர்தான் உட்காரமுடியும்.

      முதலில் ஒரு 10 பேர் போனார்கள். அரைமணி நேரத்துக்கு மேலாகியும் உள்ள போனவங்க வெளியில வரல. நாங்க காத்துகிட்டே இருக்கோம். ஏன் இவ்வளவு லேட்டுன்னு உள்ள போன ஹோட்டல் முதலாளி அழாத குறைய சொல்லறார். 120 பேருக்கு சமச்ச சாப்பட 10 பேரே காலி பண்ணிட்டாங்க. அடுத்து அரிசி வேகப் போட்டுருக்கோம் என்றார் பாருங்களேன்.

      எப்படீ..?

      நீக்கு
  8. பதில்கள்
    1. போய்வாருங்கள் டிடி சார், கிட்டத்தட்ட விமானத்தில் போவது போன்ற உணர்வு ஏற்படும். விமானத்தில் அழகான பெண்கள் பரிமாறுவார்கள். இங்கு எல்லாமே ஆண்கள்தான்.!

      நீக்கு
  9. அடடே, என் ஏரியாக்குள்ள வந்துட்டீங்க போல. இது என்ன செந்தில் எக்ஸ்பிரஸ்ஸா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே,
      எல்லாம் ஒரே ரயில்வே குடும்பம்தானே! எனது தந்தையும் ரயில்வேகாரர்தானே, அதனாலே இந்த அனுபவம்.
      முதல் முறையாக கருத்து பதிவிட்டதற்கு நன்றி!

      நீக்கு
    2. அய்யா நானும் ரயில்வே குடும்பத்தை சார்ந்தவந்தான். என்னை விட்டு விடாதீங்க

      நீக்கு
    3. வாருங்கள் ஒன்றாக ஐக்கியமாவோம்..!

      நீக்கு
  10. இப்படி பயணம் என்றால் நன்றாகத்தான் இருக்கும். ரயில் பயண அனுபவம் எனக்கு குறைவே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை