ஞாயிறு, மார்ச் 22, 2015

பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 2

பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 1  - ன்  தொடர்ச்சி

காலை நேரம் என்பதால் டீ குடித்து முடித்த கையோடு அன்றைய நாளிதழ்களை தந்தார்கள். தமிழ், கன்னடம், ஆங்கிலம், இந்தி நாளிதழ்களில் நமக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ரயிலில் இருக்கும் அனைவர் கையிலும் அன்றைய நாளிதழ்கள் இருப்பது அம்சமாக இருந்தது.

ரயிலுக்கு வெளியே காட்சிகள் வெகு வேகமாக பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன. ரயிலின் அசுர வேகம் எதுவுமே உள்ளுக்குள் தெரியவில்லை. புறப்பட்டு ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. நான்-ஸ்டாப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அரக்கோணம், காட்பாடி போன்ற பெரிய ரயில் நிலையங்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் பின்னால் ஓடின.

வேகத்தையும் வெளிக் காட்சிகளையும் ரசித்துக் கொண்டிருந்த என்னை 'சார்' என்ற அழைப்பு திரும்ப வைத்தது. திரும்பிய என்னிடம் ரயில் வாட்டர் பாட்டிலை கொடுத்தார், ஒருவர். அவருக்குப் பின்னால் இன்னொருவர் காலை ப்ரேக் பாஸ்ட்டை தந்து போனார்.

ஏசி சேர் கார்
மற்ற ஏசி சேர் கார்களில் இருப்பதுபோலவே இதிலும் நமக்கு முன்னால் இருக்கும் இருக்கையின் பின்புறத்தில் சிறிய டேபிள் போன்ற அமைப்பு இருக்கிறது. ஆனால் அவைகளை விட சற்று மேம்பட்ட வடிவத்தில் இது இருக்கிறது. உணவை சாப்பிட வசதியாக இருந்தது.

சதாப்தியில் இரண்டு வகையான வகுப்புகள் உள்ளன. முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் சேர் கார், இது பெரும் பணக்காரர்களுக்கு. அடுத்து வெறும் ஏசி சேர் கார் நம்மைப் போல் வசதி இல்லாதவர்களுக்கு. முதல் வகுப்பில் ஒரு வரிசைக்கு (2+2) நான்கு இருக்கைகள் இருக்கும். காலை நீட்டிக் கொள்ள நிறைய இடம் இருக்கும். சொகுசான வசதிகள் கூடுதலாக இருக்கும்.

சாதாரண ஏசி சேர் கார் கூட மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ளதுபோல் இல்லாமல் சிறப்பாக உள்ளது. மற்றவற்றில் ப்ரவுன் கலர் அல்லது நீல நிறத்தில்தான் இருக்கைகள் இருக்கும். இங்கு பச்சை வண்ணத்தில் பூ வேலைப்பாடுகளுடன் கொஞ்சம் பணக்காரத்தனத்தை காட்டியபடி இருக்கைகள் இருக்கின்றன.

முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் சேர் கார்
சதாப்தி எக்ஸ்பிரஸ் சிலவற்றில் சினிமா பார்க்கும் வசதி இருக்கிறது. இவற்றில் டிவி சேனல்களும் பார்க்கலாம். கலை உணவு முடிந்த சற்று நேரத்தில் லெமன் ஜூஸ் வந்தது. குடித்து முடித்து ரிலாக்ஸ் ஆவதற்குள் வண்டியின் வேகம் குறைந்தது.

காலை 10.45 மணி பெங்களூர் ரயில் நிலையம் வந்தது. நாலேமுக்கால் மணி நேரமாக நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த ரயில் கொஞ்சம் நின்று நிதானித்து இளைப்பாறியது.

நீண்ட தொலைவு பெரிய பெரிய ஊர்களில் கூட நிற்காமல் வந்தது. பெட்டியின் உட்புற அலங்காரம், இடையிடையே நமக்கு வேண்டியதை கொடுத்துக் கொண்டிருப்பது என்று சதாப்தியின் பயணம் சிறப்பாகவே தெரிந்தது.

பெங்களூரில் 10 நிமிடம் நின்ற சதாப்தி மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது. மறுபடியும் வாட்டர் பாட்டில், ஜூஸ், மதியம் மீல்ஸ், ஸ்வீட் என்று வரிசைக் கட்டி வந்தது கொண்டிருந்தன. ரயில் மீண்டும் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

உள்ளே எப்போதும் ஒருவிதமான அமைதி நிலவிக்கொண்டிருந்தது. எனக்குப் பக்கத்தில் ஒரு ஹை-கோர்ட் லாயர் அமர்ந்திருந்தார். பெங்களுரிலிருந்து மைசூர் போவதற்குள் கேஸ்கட்டை முழுவதும் படித்து முடித்துவிட்டார்.

சாதாரணமான மற்ற ஏசி சேர் கார்களில் கூடப் பயணிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்கிறார்கள். இங்கு என்னமோ இனம் புரிய மௌனம் நிலவுகிறது. யாரும் பேசிக் கொள்வதில்லை. எல்லோரும் ஒருவித இறுக்கத்தில் சிக்கிக் கொண்டது போல் இருக்கிறார்கள்.

வசதி கூடக் கூட மனிதனின் பழகும் தன்மை குறைந்து விடும் போல் தெரிகிறது. மிதமிஞ்சிய வசதியும் கூட மனிதனின் ரசனையைக் குறைத்துவிடும் போலத் தோன்றியது.

மதியம் ஒரு மணிக்கு மைசூர் வந்து சேர்ந்தேன். 500 கி.மீ. பயணம் செய்து வந்த அலுப்புக் களைப்பு சிறிதும் இல்லை. அது சதாப்தி கொடுத்த சௌகர்யம்.

டிக்கெட் கவுண்டர்
மைசூர் வந்த பின் அங்கிருக்கும் ரயில் மியூசியத்தைப் பார்க்கவில்லை என்றால் பயணம் முழுமையடையாது. டெல்லியில் தேசிய ரயில் மியூஸியத்தைத் தொடங்கியப் பின், மற்றொரு ரயில் மியூசியம் தொடங்க வேண்டும் என்று நினைத்தார்கள். 1979-ல் கிருஷ்ணராஜா சாகர் ரோட்டில் புதிதாக அதனை அமைத்தார்கள்.

நேரோகேஜ் என்ஜின்
திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மியூஸியத்தில் மைசூரில் முதன்முதலாக இயக்கப்பட்ட நீராவி என்ஜின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கடுத்து ஆஸ்டின் ரயில் மோட்டார் கார் உள்ளது. இது சாலையில் ஓடும் கார்தான். அதை விலைக்கு வாங்கி அதில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி, டயருக்குப் பதில் இரும்பு சக்கரங்களைப் பொருத்தி ரயில் தண்டவாளத்தில் ஓடும் விதமாக மாற்றியிருக்கிறார்கள். உண்மையில் ஒரு கார் தண்டவாளத்தில் ஓடுவது வியப்பான ஒன்றுதான்.

ஆஸ்டின் கார்
மைசூர் மகாராஜா பயணம் செய்த நவீன வசதி கொண்ட இரண்டு ரயில் கோச் இங்குள்ளன. மகாராணிச் செல்வதற்கென்று தனியாக மகாராணி சலூன் உள்ளது. மகாராணிக்காக அலங்கரிக்கப்பட்ட கட்டில், மேக்கப் சாதனங்கள், டைனிங் டேபிள், ராயல் டாய்லெட் எல்லாம் உள்ளன.

மகாராணி சலூன்  
1900-ல் பெங்களூரில் இருந்து தும்கூருக்கு இயக்கப்பட்ட நேரோகேஜ் ரயில் என்ஜின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. ரயில்வே எப்படியெல்லாம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை இந்த மியூஸியத்தில் தெரிந்துக் கொள்ளலாம். திங்கட்கிழமை விடுமுறை. மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மியூஸியம் திறந்திருக்கும். நுழைவுக் கட்டணம் ரூ.10.


இந்தியாவின் இரண்டாவது ரயில் மியூசியத்தைப் பார்வையிடுவது இன்றைய தலைமுறையினருக்கு அவசியமான ஒன்றாகும்.

===
34 கருத்துகள்:

 1. உங்கள் பயணங்களில் உங்களோடு எங்களையும் கூட்டிச் செல்கிறீர்கள்.
  நன்றி
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே!

   தங்களைப் போன்ற தமிழறிஞர்களின் பாராட்டு மேலும் எழுத தூண்டுகிறது.

   முதல் கருத்திட்டு, முதல் வாக்களித்த நண்பருக்கு நன்றிகள்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருக நண்பரே!

   எராளமான வசதிகள் இருக்கின்றன. இதைவிட மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற ஒரு ரயிலில் பயணம் செய்தால் நீங்கள் உண்மையிலே மகாராஜா போல் உணர்வீர்கள். அதை பற்றி இன்னொரு முறை எழுதுகிறேன்.

   முதல் முறையாக எனது தளத்திற்கு வந்து கருத்திட்டதற்கு நன்றிகள்!

   நீக்கு
 3. ரயில் பயணம் அருமையாக வந்தது நண்பரே...
  நண்பரே டயர் என்பதற்க்கு பதிலாக தாயார் என்று இருக்கிறது மாற்றவும். தவறாக நினைக்க வேண்டாம்.
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே!

   தங்கள் சுட்டிக் காட்டிய தவறை திருத்தி விட்டேன். நான் கூகுள் மொழிப் பெயர்ப்பில் தட்டச்சு செய்வதால் இப்படிப்பட்ட தவறுகள் நிகழ்கின்றன.

   வருகைக்கும் சுட்டிக் காட்டியமைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றிகள் நண்பரே!

   நீக்கு
 4. படங்கள் உங்கள் பதிவிற்கு மிகவும் மெருகூட்டி செல்கிறது.. பயணத்தை நானும் தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே!

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
   தொடர்ந்து வந்து கருத்திடுங்கள்.

   நீக்கு
 5. உடன் பயணித்தது போலிருந்தது.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் முறையாக எனது தளத்திற்கு வருகை தந்து கருத்து பதிந்தமைக்கு நன்றி நண்பரே! தொடர்ந்து வாருங்கள்!

   நீக்கு
 6. சுகமா பயணம் உங்களுக்கு ! சுவையாக இருந்தது எங்களுக்கு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் அய்யா!
   புலவர் அய்யாவின் புலமைத் திறன் கருத்துப் பதிவிலும் தெரிகிறது.
   வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி!

   நீக்கு
 7. அசர வைக்கும் படங்கள்... பயணித்தமைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் டிடி சார்!
   வருகைக்கும் வாக்குக்கும் கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 8. உண்மையிலேயே நீங்க குறிப்பிட்டுள்ள மகாராஜா பயணம் குறித்து தான் தெரிந்து கொள்ள ஆசை. தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் ஜோதிஜி!
   மகாராஜா பயணம் அற்புதமாக இருக்கும். டிக்கெட்டுக்கு மட்டும் சில லட்சங்கள் செலவழிக்க வேண்டும். லட்சங்களை நாம் செலவழித்தால் அவர்கள் மகாராஜாவைப் போல் நம்மை தாங்குவார்கள்!
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 9. நானும் மதுரதான்,மகாராஜாவாய் போய்வரலாம் ,எங்கேன்னு சொல்லுங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் பகவான்ஜி!
   மகாராஜா எக்ஸ்பிரஸ் என்பது ஒரு சுற்றுலா ரயில். டெல்லியில் தொடங்கி டெல்லியில் முடியும் ஒரு சர்குலர் ஜர்னி. நிறைய பதிவுகள் இதைப் பற்றியே வந்ததால் இந்த வாரத்திலே மகாராஜா பயணம் பற்றி பதிவிடுகிறேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாகாளிப்புக்கும் நன்றி!

   நீக்கு
 10. சதாப்தி அனுபவம் நிஜமாகவே சுவையான அனுபவம் தான் அலுங்காமல் குலுங்காம.....ஆனா என்ன நீங்க சொல்லறா மாதிரி யாரும் பேசிக்க மாட்டாங்க...ம்ம்ம் அதுதான் அப்பப்பா வாய்க்கும் கைக்கும் வேலை வந்துக்கிட்டே இருக்குமே...அஹ்ஹஹ்

  நல்ல விவரணம்....தொடர்கின்றோம் நண்பரே!

  (எங்கள் வலைத்தளத்தில் நாங்கள் இருவர் எழுதுகின்றோம். துளசிதரன், கீதா (நண்பர்கள்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் துளசிதரன், கீதா அவர்களே,
   வருக வருக

   வணக்கம்,
   தங்கள் வருகை மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.
   உண்மைதான் சதாப்தியில் கைக்கும் வாய்க்கும் அடிக்கடி சண்டை நடப்பதால் பேச்சுக்கு அவசியமில்லைதான்.

   வருகைக்கும் அறிமுகத்திற்கும் கருத்து பதிவுக்கும் நன்றி.

   நீக்கு
 11. மஹாராஜா ரயில் பற்றியும் அறிந்துள்ளோம்...என்ன கொஞ்சம் பர்ஸ் வீக்கமாக இருக்கணும்.....மற்றபடி ராஜ மரியாதைதான்...அது அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர, அவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று....

  படங்கள் அனைத்தும் அற்புதம்..நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம்தான் இது. தற்போது இந்தியர்களின் பர்ஸும் வீங்கிக்கொண்டே போவதால் பாதிக்கு பாதி இந்தியர்களையும் இதில் பார்க்க முடிகிறது.

   நீக்கு
 12. அருமையான பயணம் செந்தில். ரசித்து வாசித்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
   தங்களைப் போல் பயணம் எழுத தனி திறமை வேண்டும்.

   நீக்கு
 13. //வசதி கூடக் கூட மனிதனின் பழகும் தன்மை குறைந்து விடும் போல் தெரிகிறது. மிதமிஞ்சிய வசதியும் கூட மனிதனின் ரசனையைக் குறைத்துவிடும் போலத் தோன்றியது.//
  நான் கூட அந்த ரயிலில் பயணிக்கும் போது, பயணிகள் வழக்கமான முறையில் இல்லாமல் ஏன் அமைதியாகிவிட்டனர் என நினைத்தேன். நீங்கள் சொல்வது சரியே.மிதமிஞ்சிய வசதி மனிதர்களுக்கு அசதியைக் கொடுத்துவிடும் போல.
  பதிவைப் படிக்கும்போது நானே பயணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே!
   முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்பதற்கும், படுக்கை வசதிகொண்ட பெட்டிகளில் பயணிக்கும் போது உடன் பயணிப்பவர்களிடம் ஏற்படும் ஒரு அந்யோனியம் இங்கு ஏற்படுவதில்லை, என்பது வருத்தமே.

   நீக்கு
 14. ரயில் ஆசையினால் ஒரு சமயம் தில்லிக்கு ஜி டியில் போறோம். கிட்டத்தட்ட ரெண்டுநாள் பயணம். எங்க கூபே யில் ஒரு பஞ்சாபி குடும்பம். ரெண்டு பிள்ளைகளுடன். வாழ்க்கை வெறுத்துப் போகுமளவு பண்ணிட்டாங்க. முதல்முறை இந்தக் களேபரத்தைக் கண்டு என் பத்து வயசு மகள் திகைச்சுப்போயிருந்தாள். முக்கால்வாசிப் பயணமும் நாங்கள் நடைபாதையில் கதவுக்கருகில் நின்னு சமாளிச்சோம். தில்லி போனதும் முதல் வேலையா ரிட்டர்ன் டிக்கெட்டை கேன்ஸல் செஞ்சுட்டு ப்ளேனில் டிக்கெட் எடுத்தோம். அப்புறம்தான் ஊர் சுற்றிப் பார்த்தது எல்லாம்.

  கூடப்பயணம் செய்யும் மக்களைப் பொறுத்துத்தான் அந்நியோன்யம் எல்லாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது நிச்சயமான உண்மைதான், உடன் பயணிப்பவர்களை வைத்துதான் பயணம் சிறக்கும். ஆனால் சதாப்தியில் மயான அமைதி நிலவுவது வித்தியாசமாக தெரிகிறது.

   நல்ல கருத்தையும் அதற்கேற்ற ஒரு உதாரணத்தையும் பதிவிட்ட துளசியம்மாவுக்கு நன்றிகள்.

   நீக்கு
 15. ஒரே கூட்டம் கூச்சல் இது தான் ரயில் பயணம் என்று நினைத்திருந்தேன். இப்போது படங்களுடன் தங்கள் பகிர்வு இப்படியான ரயில் பயண ஆர்வத்தை ஏற்படுத்தும்.

  பதிலளிநீக்கு
 16. நீங்க மார்ச்சில் எழுதிய சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு பதிவுகளை திரு இராமன் அவர்களின் தளத்தில் பெற்று கொண்ட தகவலினால் இப்போ தான் படித்தேன்.சிலர் சதாப்தி பற்றி நேரில் சொல்லியிருந்தாலும், உங்கள் சதாப்தி பற்றிய தமிழ் பதிவுகளை எல்லாம் படிக்கும்போது தான் அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையே ஏற்படுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா!
   பயணித்துவிடுங்கள்!

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...