Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மணல் எனும் அற்புத இயற்கை அரண்



றுகள் நமக்கு தண்ணீர் மட்டுமல்லாமல் செழிப்பான வண்டல் மண்ணையும் அள்ளித் தருகின்றன. இதை பாதுகாத்தால் நமக்கு மட்டுமல்லாமல் நமது சந்ததிகளுக்கும் இந்த இயற்கை வளங்கள் தொடர்ந்து கிடைக்கும். ஆனால், யாரும் அப்படி நினைப்பதில்லை. மாறாக இயற்கை வளங்களை சுரண்டுவது மிகப் பெரும் தொழிலாக வளர்ந்திருக்கிறது. இன்றைக்கு நீரும் மணலும் மிக முக்கிய வணிகப் பொருட்கள்.


கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையும் நதிநீரும் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி உருவாக்கிய அற்புதமான மணலை முழுவதுமாக சுரண்டி பணமாக்கிவிட வேண்டும் என்ற வேட்கையில் மணற் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இயற்கை மீதும் அக்கறையில்லை, வருங்காலத் தலைமுறைமீதும் நம்பிக்கையில்லை. 'எப்படியாவது பணம் பண்ணு..!' என்ற நோக்கில் இப்போதைக்கு பணம் சேர்த்தால் போதும் என்று அலைபவர்கள். 


ஆற்று மணல் இப்படியெல்லாம் அரசியல்வாதிகள் கையில் சிக்கி சீரழியும் என்று அன்றே வெள்ளைக்காரர்களுக்கு தெரிந்திருக்கிறது போலும். ஆறுகளை காப்பதற்காக 1884-ம் ஆண்டில் 'ஆறுகள் பாதுகாப்புச் சட்டம்' என்ற ஒன்றை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. அன்று கொண்டுவந்த சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதன்படி ஆறுகளின் இருபுறமும் வெள்ளக் கரைகளுக்கு அப்பால் 100 அடி வரை மண் அல்லது மணல் அள்ளக்கூடாது. அது தனியார் நிலமாக இருந்தாலும் இதே விதிதான். 

அவசியத் தேவைக்காக மணல் எடுக்க வேண்டுமென்றால் அந்த ஆற்றுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட பொதுப்பணித் துறை அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களில் அந்த அலுவலர் மணல் எடுக்க முடிவு செய்துள்ள இடத்தை பார்வையிடுவார். அந்த இடத்தில் மணல் எடுப்பதால் நதியின் பாதுகாப்புக்கு பாதகம் ஏற்படுமா என்று ஆய்வு செய்வார். பாதகம் இல்லையென்றால் அங்கு மணல் அள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவார். 


மணல் எடுப்பதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தம் அதிகாரம் அந்த அலுவலருக்கு உண்டு. அதை மீறினால் சிறைத்தண்டனையும் ரூ.50 அபராதமும் விதிக்கப்படும். அந்தக்காலத்தில் 50 ரூபாய் என்பது பெருந்தொகை. தற்போது இந்த சட்டத்தை யாரும் மதிப்பதில்லை. எவ்வளவு மணலை அள்ளமுடியுமோ அவ்வளவு மணலை அள்ளி ஆறுகளை வறண்டுபோக வைக்கிறார்கள். 


தமிழ்நாட்டில் 33 ஆற்றுப்படுக்கைகள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் வெவ்வேறு அளவுகளில் மணல் அள்ளப்படுகின்றன. இப்படி சகட்டுமேனிக்கு அள்ளப்படும் ஆற்று மணல் நமக்கு என்னென்ன நன்மை செய்கிறது என்று பார்த்தால், அது ஏராளமாய் இருக்கிறது. மணல் துகள்கள் வழியே தண்ணீர் செல்லும்போது நச்சுக்கிருமிகள் அழிந்து விடும். அதனால்தான் ஆறுகளில் இருந்து குடிநீருக்கு நீர் எடுக்கும்போது கிணறு அமைத்து அதன் மூலம் நீரை இறைத்து எடுக்குகிறார்கள். 


ஆற்றில் எவ்வளவுக்கு எவ்வளவு மணல் இருக்கிறதோ அவ்வளவு அதிகம் தண்ணீர் கிடைக்கும். ஆற்றில் இருக்கும் மணல் ஒரு நிலத்தடி நீர்த்தேக்கமாக செயல்படுகிறது. இதனால் நதிக்கரையின் ஓரமாக உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது. ஆற்றில் இருந்து மணல் அள்ளுவதால் நமக்கு மூன்று வழிகளில் ஆபத்து வருகிறது. கிடைக்கும் குடிநீர் அளவு குறையும். தண்ணீர் சுத்தமாவது நடக்காமல் நோய்க் கிருமிகள் நீரில் இருக்கும். குறிப்பாக கோலிபார்ம் என்ற கிருமி தண்ணீரில் அழியாமல் நோய் பரவுகிறது. சுற்றுப்புறக் கிராமங்களில் உள்ள கிணறுகள் வற்றிப்போகின்றன. அப்படியே கிணற்றில் நீர் இருந்தாலும் ஆற்றில் மணல் இல்லாவிட்டால் கிணற்று நீர் மாசுபட்டதாக மாறிவிடும். அதனால் மணல் நம்மை நோயிலிருந்தும் இயற்கை பேராபத்துகளில் இருந்தும் காக்கும் முக்கிய அரணாகும். அதனை உயிர்போல காப்போம். மணற்கொள்ளையை முற்றிலுமாக ஒழிப்போம். 




15 கருத்துகள்

  1. நல்ல பகிர்வு. எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லாது, இன்றைக்கு சம்பாதித்தால் போதும் என்ற எண்ணத்துடன் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்கே சென்று முடியும் என்று நினைத்தாலே பயம் தான்....

    த.ம. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயமாகத்தான் இருக்கிறது.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  2. மணற்கொள்ளை என்பதானது கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டிருக்கிறது. இதைத்தான் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்வது என்று சொல்வார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. அப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கிறது.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  3. மணல் கொள்ளை
    வேதனை நண்பரே
    எப்பபாடு பட்டாகினும் தடுக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. கேரளாவுக்கே இங்கே இருந்துதான் மணல் செல்கிறது ,அங்கே மணல் கொள்ளை தடுக்கப் பட்டுள்ளது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளாவில் இயற்கையின் மீது கைவைக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு அதிகம் உள்ளது. நம்மிடம்தான் அப்படி எதுவும் இல்லையே.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. ஆற்று மணலுக்கு பதிலாக மாற்றுப் பொருள் கிடைக்கும் வரை மணல் கொள்ளை தொடரவே செய்யும்.அரசாங்கம் இதனை முறைப் படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் கனர் கொள்ளையர்கள் முன் செல்லுபடி ஆவதில்லை. நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்துதானே இந்தக் கொள்ளையையே நடத்துகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. சட்டத்தை மாற்றாமல் இப்போதும் சட்டப்படி 50 ரூபாய் (மட்டும்) அபராதம் செலுத்தினாலும் செலுத்துவார்கள் புண்ணியவான்கள். மணற்கொள்ளையை நியாயமான முறையில் செய்ய எந்த கொம்பன் அரசும் முன்வராது. இது ஒரு சாபக்கேடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி வந்தால் வசதியாகப் போய்விட்டது என்று தினமும் அபராதம் மட்டும் கட்டிவிட்டு ஆற்றையே சுரண்டி விடுவார்கள்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  7. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  8. அரசாங்கமும், அரசாங்க ஊழியர்களும் இதனைச் செய்யும் போது சட்டமாவது ஒன்றாவது. தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசின் கையில் தான் இருக்கிறது.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை