திங்கள், ஜனவரி 02, 2017

புத்தாண்டில் புதிய வீடு.. பூக்கட்டும் புதுப்புரட்சி!


ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக நாட்டின் அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் பாதிப்புக்கு உள்ளானாலும், கிராமப்புற மக்கள், சிறு வணிகர்கள், நடுத்தர வர்க்கம் ஆகிய பிரிவினர் அன்றாடம் அதிக சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்த சூழலில், தற்போது அத்தகைய பிரிவினருக்கான புதிய சலுகைகளை பிரதமர் அறிவித்துள்ளார்.


ஓய்வூதியக்காரர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையில் 10 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு 8 சதவிகித வட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வங்கி வட்டி விகிதங்கள் குறையும் என பேச்சு எழுந்தபோது, ஓய்வூதியம் பெறுவோரின் நிலை குறித்து 'தினவணிகம்' தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது நினைவிருக்கும். மேலும் சிறு, குறு வணிக நிறுவனங்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூபாய் ஆராயிரம் வரை உதவி போன்ற ஜனரஞ்சகமான சலுகைகளும், பிரதமர் மோடியின் புத்தாண்டு உரையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த சில வருடங்களாகவே பெருமளவில் தொய்வு கண்டு வரும் ரியல் எஸ்டேட் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கதக்க வகையில் பிரதமர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது வீட்டு வசதித்துறையில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றால் அது மிகையாகாது.


நகர்ப்புற வீட்டு வசதியைப் பொறுத்தவரையில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் குறை வருவாய் கொண்ட பிரிவினர் ஆகியோருக்கான வீட்டு வசதி திட்டங்களைப் பொறுத்தவரையில் மட்டுமே, 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2 கோடி புதிய வீடுகள் பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கும் சூழலில், இத்தகைய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருப்பு பணத்தைப் பொறுத்தவரையில் ரொக்கமாக வைத்திருப்பதைவிடவும், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் தான் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், குறிப்பாக வீட்டு வசதித் துறையில் மனை மற்றும் வீடுகளின் விலைகள் சந்தை நிலவரத்தை ஒட்டி அமையாமல், மேலதிக நிலையிலேயே தொடர்வதற்கும் கருப்பு பண நடவடிக்கைகளே காரணம் என்றும் கூறப்படுவதுண்டு. மேலும், ரியல் எஸ்டேட் துறை வெளிப்படையான நடவடிக்கைகளுக்கு உகந்தது அல்ல என்பதும், கருப்பு பாதி வெளுப்பு பாதியாகவே இதுகாறும் அத்துறை செயல்பட்டு வந்துள்ளது என்பதும் யாவரும் அறிந்த ஒன்றே.

ஆனால், ரியல் எஸ்டேட் ரெகுலேசன் & டெவலப் மெண்ட் சட்டம் மற்றும் பிராமி டிரான்ஸஷாக்ஷன் சட்டம் போன்ற சட்டங்களின் காரணமாகவும் புதிதாக வரவுள்ள சரக்குகள் மற்றும் சேவைகள்  வரிவிதிப்பின் காரணமாகவும் இத்துறையில் வரும் நாட்களில் மகத்தான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கருப்பு பண விவகாரத்தில் இத்துறையின் செயல்பாடுகள் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைகளின் காரணமாக இத்துறை பெரும் சரிவை கண்டது எதிர்பார்த்த ஒன்றே. தில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆடம்பர வீடுகளின் விலைகள் 30 சதம் அளவிற்கு வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


அதேநேரம், அஃபோர்டபுள் ஹவுசிங் எனப்படும் நடுத்தர மற்றும் குறை வருவாய் பிரிவினருக்கான ஏற்கத்தக்க வீட்டு வசதி திட்டங்களில் ரியல் எஸ்டேட் துறை இதுகாறும் பெருத்த ஆர்வம் காட்டாமல் இருந்து வந்ததும் கண்டனத்துக்கு உரியதே. தற்போது பிரதமர் மோடி, நகர்ப்புறங்களில் 9 லட்சம் ரூபாய் வீட்டு வசதிக்கடன்களுக்கு 4 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கப்படும் என்றும், ரூ.12 லட்சம் வரையிலான கடன்களுக்கு 3 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளதோடு, கிராமப்புறங்களில் இருக்கின்ற வீடுகளில் தேவையான மாற்றங்களை செய்வதற்கான கடன்களுக்கான வட்டி மானியம் 3 சதவிகிதமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது இத் துறையினர் மத்தியில் மட்டுமல்லாமல், நடுத்தர வருவாய் பிரிவினரிடமும் மிகுந்த வரவேற்பைப்பெறக்கூடும்.

வங்கிகளிடம் தற்போது பெரும் அளவு டெபாசிட் கையிருப்பில் உள்ளதன் காரணமாக ஏற்கெனவே வீட்டு வசதி கடன் திட்டங்களில் பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள நிலையில், பிரதமரின் இந்த புதிய அறிவிப்பு நகர்ப்புறங்களில் ஏற்கத்தக்க விலையிலான வீடுகளின் தொகுப்புகளைக் கொண்ட டவுன்ஷிப்புகள்  உருவாவதற்கு வழி வகுக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில், பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். அதேநேரம், ரூ. 9 லட்சம் கடனுக்கு 4 சதவிகிதம் மற்றும் ரூ.12 லட்சம் கடனுக்கு 3 சதவிகிதம் என்பதை ரூ.12 லட்சம் வரையிலும் 4 சதவிகிதம் என்றும், ரூ.15 லட்சம் வரையிலும் 3 சதவிகிதம் என்றும் அரசு மாற்றி அறிவிக்குமானால், அது இத்துறையில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தும் என வீட்டு வசதித்துறை நிபுணர்கள் தெரிவித்திருப்பதையும் அரசு கவனத்தில் கொள்ளுதல் நலம் பயக்கும்.

வீட்டு வசதித் துறையில் ஏற்படும் மறுமலர்ச்சி, கட்டுமான பொருட்களின் உற்பத்தியிலும் பிரதிபலிக்கும் என்பதால், அதிகரிக்கும் வீட்டுக்கடன் வசதிகள் பொருளாதாரத்திலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதும் மிகையல்ல.

எது எப்படியோ, புத்தாண்டில் வீட்டு வசதித்துறை புதிய பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டதையே பிரதமர் அறிவிப்பு காட்டுகிறது என்பது மட்டும் நிஜம்.


கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 12 கருத்துகள்:

 1. எப்படியோ நல்லது நடந்தால் சரி! இந்தியா வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும்.
  பகிர்விற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 2. அறிவிப்புக்கள் அறிவிப்புக்களாக இல்லாமல் அதன் தன்மை உணர்ந்து செயலாக்கம் பெறுமானால் நல்லது தான்.

  நல்ல கட்டுரை.

  பதிலளிநீக்கு
 3. கட்டுமானத்துறைக்கான1சலுகைகள்2பெருமளவில்3பாதிப்பை4ஏற்படுத்துவதில்லை.

  பதிலளிநீக்கு
 4. பயனுள்ள பகிர்வு.. மக்களுக்கு நலமே விளையட்டும். நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 5. சாமானிய மனிதர்களுக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 6. சாமானிய மனிதர்களுக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...