• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், ஜனவரி 03, 2017

  ஓலை வரும்நேரம் டும்...டும்... டும்... ஓயாது அலைகள்இனி டும்...டும்...டும்...


  புழக்கத்தில் இருந்த ரூ.15.5 லட்சம் கோடி ரூ.500 மற்றும் 1000 நோட்டுகளில் கிட்டத்தட்ட 14.93 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்குள் வந்துவிட்டதாக சொல்லப்படும் சூழலில், கருப்பு பணம் எங்கே என்கிற கேள்வி பூதாகரமாக எழுப்பப்படுவதன் காரணமாக வங்கிகளுக்குள் வந்துள்ள ரொக்கத்தில் அதனைத் தேடவேண்டிய கட்டாய சூழலுக்கு வரித்துறை,  தள்ளப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.


  இந்நிலையில், வரும் நாட்களில் ஓயாத அலைகளாய் கிளம்ப இருக்கும் வருமான வரித்துறையின் நோட்டீஸ்கள் குறித்தே பொதுமக்களின் கவனம் திரும்பக்கூடும். ஏற்கெனவே கிட்டத்தட்ட 60 லட்சம் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் வகையிலேயே ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாகவும் ரூ.80 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரையிலும் கூட பெருவாரியான நபர்கள் டெபாசிட் செய்துள்ளதாகவும் முதற்கட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில், இவற்றில் ஓரளவுக்கேனும் கணக்கில் வராத பணம் புதைந்திருக்கும் என மத்திய அரசுதிடமாக நம்புவதாகத் தெரிகிறது.

  அதாவது, வரும் நாட்களில் வருமான வரித்துறை இத்தகைய கணக்குகளை ஆராய்ந்து நோட்டீஸ்கள் அனுப்பும். ஒரு வகையில் இது ஏற்கத்தக்க நடைமுறையே என்றாலும், இரண்டரை லட்சம் ரூபாய் வரையில் டெபாசிட் செய்திருப்பவர்கள் குறித்து கேள்வி கேட்கப்படாது என முன்னர் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையை மாற்றி, ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ள டெபாசிட்டுகள் சந்தேகத்துக்கு உரியவையாக இருந்தால் அவற்றின் மீதும் விசாரணை நடத்தப்படும் என செய்திகள் வருவது ஒரு வகையில் ஏமாற்றம் அளிப்பதாகும்.

  2008-ம் ஆண்டு சர்வதேச பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியக் குடும்பங்கள் சேமித்து வைத்த தங்கம், ரொக்கம் மற்றும் வங்கி சேமிப்புகளே இந்தியாவுக்கு பக்கபலமாக இருந்தது என பலமுறை கூறப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.  ஆனால் தற்போது குடும்பத்தலைவிகளும் கூட தாங்கள் சேமித்து வைத்திருந்த ரொக்கத்தை வங்கிகளில் செலுத்தியுள்ள நிலையில், எந்த அடிப்படையை வைத்து, யாருக்கு வரித்துறை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.


  உதாரணமாக, கடந்த சில வருடங்களாக ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் காட்டி, வருடம் ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வரி செலுத்தி வரும் ஒரு நபர், தற்போது தன்னிடமுள்ள இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான ரூபாயை டெபாசிட் செய்திருப்பார் என்றால் அதனை வரித்துறை எவ்வாறு கையாளும். உண்மையில் ரூபாய் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக அவர் டெபாசிட் செய்திருந்தாலும்கூட, கணக்குக் காட்டிய வருமானத்தின் சேமிப்பில் ஒரு பகுதியாகத்தான் அது இருக்கும் என்பதால், அது யதார்த்தத்தில் நியாயமான வருமானமாகவே கருதப்படவேண்டும். ஆனால், வருமான வரித்துறை அதை ஏற்குமா? ஏற்கெனவே வீண் சங்கடங்களையும், துன்புறுத்தல்களையும் வருமான வரித்துறை மேற்கொள்வதாக பொதுவான குற்றச்சாட்டு உண்டு.  நிதி ஆயோக் அமைப்பின் உப தலைவர் அரவிந்த் பனகரியாவும்கூட அதனை அறிந்திருப்பார் போலும். அதனால், மிகப்பிரமாண்டமான அளவிற்கு வருமான வரி கணக்குகளை சோதனை செய்ய வேண்டிய நிலையிலுள்ள வரித்துறையினருக்கு சில ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றே.

  வரி செலுத்துவோரை பெருமளவில் துன்புறுத்தாத அளவிற்கு விதிமுறைகள் தெளிவாக வகுக்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளது யதார்த்தத்தை உணர்ந்த காரணத்தினாலேயே என்பது புலனாகும்.


  ஏற்கெனவே இருக்கின்ற ஒரு விதியை, வேறு வேறு வரித்துறை அதிகாரிகள் வேறு வேறு வகையில் அர்த்தம் கற்பிக்கும் சூழலில், அத்தகைய போக்கிற்கு இடம்தராத வகையில் தெளிவான வகையில், எளிமையான முறையில் நடைமுறைகளை மத்திய அரசு விரைந்து அறிவித்தல் அவசியமாகும். அதேநேரம், நீண்டகால அடிப்படையில் பயன்பெறத்தக்க வகையில், வரித்துறையில் சீர்திருத்தங்களை  மேற்கொள்வது மூலமாகவும், வரி கட்டமைப்புக்குள் அதிகம் பேர்களை கொண்டுவரும் வகையிலும், அதே நேரம் வரி வருவாய் குறைந்துவிடாத வகையிலும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அரவிந்த் பனகரியா வலியுறுத்தியுள்ளதும் ஏற்கத்தக்கதே.

  அதுமட்டுமல்லாமல், தவிர்க்க இயலாத சில கணக்குகளைத் தவிர ஒரு குறிப்பிட்ட அளவிற்கும் கீழே டெபாசிட் செய்யப்படும் ரொக்கத்திற்கு வருமான வரித்துறை கேள்வி எழுப்பாது என்பதை உறுதிசெய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளது பொருத்தமானதே.  இரண்டாவதாக முன்னர் சொன்னது போல் கடந்த வருடங்களில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த அடிப்படையில் அதில் ஒரு குறிப்பிட்ட அளவை குடும்பத் தலைவிகளின் சேமிப்பாக கருதி அத்தகைய டெபாசிட்டுகளுக்கும் கேள்வி எழுப்பாமல் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதும் உண்மையில் மிக மிக வரவேற்கத்தக்கதே.

  இருக்கின்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு, மிகப்பெரும் எடுப்பிலான டெபாசிட்டுகளை ஆராய்வது என்பது முற்றிலும் இயலாத காரியம் எனும் போது, அரவிந்த் பனகரியா கூறியதுபோல், தெளிவான நடைமுறைகளை வகுத்துக்கொண்டால், வங்கிகளுக்குள் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பெருவாரியான ரொக்கம் அத்தகைய வகைகளுக்குள் வந்துவிடும் என்பதால், வருமான வரித்துறையின் வேலைப்பளுவும் குறையும் என்பதோடு, வரி செலுத்துவோர் அனாவசியமாக துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரிடாது என்பதும் பொதுவாகவே ஏற்கக்கூடியதே.


  கட்டுரையாளர்: .எம்.ஜே.வாசுதேவன் 


  * * * * * * * * * * * * * * * * * * * *


  புகைத் தற்கொலைகள் 

  புகைப்பிடித்தலால் ஏற்படும் அபாயங்களை விலாவாரியாக ஆய்வுத்தகவல்களாக பேசுகிறது இந்த காணொலி. இந்த பதிவு கண்டு ஒருவரேனும் புகைப்பிடித்தலில் இருந்து மீண்டு வந்தால் அதுவே இதற்கான பாராட்டாக இருக்கும்.   8 கருத்துகள்:

  1. கட்டுரை நல்ல கட்டுரை...

   காணொளி பயமுறுத்துகிறது....

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்