Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வளையல் அணிவித்த சிவபெருமான்

       அந்த காலத்தில் தாருக வனம் என்ற ஒரு வனம் இருந்தது. அங்கு ரிஷிபத்தினிகள் நிறைந்திருந்தனர். அவர்கள் கற்பு நிலையில் மேன்மையோடு இருந்தனர். தங்கள் மனைவியரின் கற்பு மீது அசைக்கமுடியாத பெருமை கொண்டிருந்தனர் ரிஷிகள். இந்த ரிஷி பத்தினிகளின் கற்பு நிலையை அளந்துகாட்ட வேண்டும் என்று ஆர்வம் கொண்டார் சிவபெருமான்.

    அதற்காகவே பிட்சாடனர் கோலம் கொண்டார். மன்மதனே வந்து நின்றானோ என்று எண்ணும் அளவுக்கு அவர் மேனி எழில் கொண்டிருந்தது. அவரின் அழகும், திருவுருவமும், பாடும் அமுத கீதமும் கேட்பவரை மதி இழக்க வைத்தது. அழகோ மங்கையர்களை மையல் கொள்ள செய்தது.

    தாருகவனத்தில் நுழைந்த பிட்சாடனரைப் பார்த்து ரிஷிபத்தினிகள் தங்கள் நிலை மறந்தனர். பிச்சையிடுவதற்கு அருகில் வந்த பெண்கள் தவமூர்த்தியின் வசீகரம் கண்டு மதிமயங்கி காதல் கொண்டனர். 

காமத்தால் மோகனச்சிறைப்பட்ட பத்தினிகள் அவரின் பிச்சைப் பாத்திரத்தில் பிச்சையுடன் தங்கள் வளையல்களையும் போட்டுவிட்டனர். நாணம் இழந்து நின்றனர். இடுப்பில் அணிந்திருந்த மேகலையும் நழுவியது. மேலாடைகள் நெகிழ்ந்து அவிழ்ந்தன.

    ஆடைகள் கூட பாரமாக இருந்தது. அதிலிருந்து விடுபட்ட ரிஷிபத்தினிகள் பெருமானை நெருங்கி நின்றனர். இமைக்காமல் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். என்ன அழகு! எத்தனை அழகு…! என்று புகழ்ந்தனர். அனைவரும் கரம் குவித்தனர். திருவடியில் விழுந்து வணங்கினர்.

    “இனி எங்களுக்கு எல்லாமே நீங்கள்தான்…!” என்று மோகத்தோடு கூறினர். அருகே சென்று அவரை ஆவலோடு கட்டித் தழுவ முயன்றனர். இறைவன் அவர்கள் கையில் சிக்காமல் விலகிச் சென்றார்.

    மீண்டும் மீண்டும் பெண்கள் முயல… இறைவன் விலகி விலகியே சென்றார். இறுதியில் தோற்றுப்போன ரிஷிபத்தினிகள், “எங்கள் தவிப்பை தீர்த்து வைப்பீர்கள், என்று பார்த்தால் நீங்கள் எங்களை தழுவாது ஏமாற்றம் தருகிறீர்களே! ஆனாலும் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

 இருந்தாலும் தங்களைப் பார்த்த மாத்திரத்தில் நழுவி விழுந்த மேலாடைகளையாவது எங்களுக்கு உடுத்தி விடுங்கள். கையில் இருந்து கழன்று விழுந்த வளையல்களை எங்கள் கைகளிலாவது இட்டு விடுங்கள். எங்களின் தவிப்பை மேலும் கூட்டாதீர்கள்…!” என்று பரிதாபமாக வேண்டி முறையிட்டனர். 

    இறைவன் சிரித்துக் கொண்டே “எல்லாவற்றையும் நாளை வந்து இடுவோம்!” என்று கூறி மறைந்தார்.
    தாருகவனத்துப் பத்தினிகள் பிச்சைமூர்த்தி கவர்ந்து சென்ற நாணத்தையும் மனத்தையும் மீட்க முடியாமல் தவித்தனர். ஆடைகளும் வளையல்களும் இல்லாமல் நின்றிருந்தனர். வெளியில் சென்றிருந்த ரிஷிகள் தங்கள் இருப்பிடம் திரும்பினர். தங்கள் மனைவியர் நின்றிருந்த அலங்கோல நிலையைக் கண்டு அதிர்ந்தனர். 

என்ன நடந்தது? என்பதை தங்கள் ஞான திருஷ்டியால் உணர்ந்தனர். தங்கள் பத்தினிகளை கவர்ந்து சென்றது இறைவனான சோமசுந்தரப் பெருமானே என்பதை தெரிந்து கொண்டனர்.

    இருந்தாலும், கற்பு நிலையில் தவறிய தங்கள் மனைவியின் செயலை ரிஷிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “பத்தினிகளே! நீங்கள் உங்கள் நிலை மறந்தீர்கள்! மதி மயங்கினீர்கள்! பெண்களின் உயர்ந்த நெறியில் இருந்து தவறினீர்கள்! அதனால் நீங்கள் ரிஷி பத்தினிகள் என்ற உயர்ந்த நிலையில் இருந்து, சாதாரண மனிதர்களாக பிறக்கப் போகிறீர்கள். மதுரை மாநகரில் வாழும் வணிகர் குல மகளிராய்ப் பிறப்பீர்கள்!” என்று சாபம் இட்டனர். 

    ரிஷி பத்தினிகளும் தங்கள் தவறை உணர்ந்தனர். அதற்கு இந்த சாபம் சரியான தண்டனைதான் என்று நினைத்தனர். ஆனால் சாபம் என்று ஒன்றிருந்தால் அதற்கு விமோசனம் என்ற ஒன்றும் இருக்கும்.

    “சுவாமி! அறியாமல் மனதை பறிகொடுத்துவிட்டோம். மதியிழந்துவிட்டோம். இது எங்களின் மாபெரும் தவறுதான். இதற்காக தாங்கள் கொடுத்த சாபத்தை ஏற்கிறோம். ஆனால் இந்த சாபத்தில் இருந்து நாங்கள் விமோசனம் பெறுவது எப்போது?” என்று வேண்டி கேட்டனர்.

    “மதுரை மாநகரத்து இறைவனாகிய சோமசுந்தரப் பெருமான் எப்போது நேரில் வந்து உங்கள் கைகளைத் தொடுகிறாரோ அன்று நீங்கள் சாபம் விலகப் பெருவீர்கள்” என்று கூறினர் ரிஷிகள்.

    ரிஷிபத்தினிகள் அனைவரும் சாபத்தால் மனம் தளர்ந்தார்கள். மதுரை மாநகரில் வணிகர்; குலத்தில் பெண்களாய்ப் பிறந்தனர். வருடங்கள் உருண்டோட வளர்ந்து பருவ வயதை அடைந்தனர். அழகும் இளமையும் பூத்துக் குலுங்கும் மங்கைகளாக திகழ்ந்தனர்.

    அப்போது குல பூஷண பாண்டியன் மதுரையை ஆட்சி செய்துவந்தான். அந்தப் பெண்களின் அழகு மதுரை நகர் முழுவதும் பேசும் பேச்சாக இருந்தது. இந்த மகளிரின் மனம் கவர்ந்து செல்லும் ஆணழகன் யாரோ என்று ஏக்கம் கொண்டனர்.

    எல்லாம் அறிந்த சிவபெருமான் பண்டைய ரிஷி பத்தினியர் பெற்ற சாபத்தை நினைவு கூர்ந்தார். அவர்களுக்கு கருணை காட்ட திருவுளம் கொண்டார். தனது தெய்வீக திருமேனியை மறைத்துக்கொண்டார். சாதாரணமான வளையல் விற்கும் வணிகராக வேடம் புனைந்தார். வணிக மகளிர் ரிஷி பத்தினியாக இருந்த போது அவர்களிடம் இருந்து கவர்ந்து வந்த அதே வளையல்களை மீண்டும் அவர்களிடமே சேர்ப்பது என்று எண்ணம் கொண்டார். அந்த வளையல்களையெல்லாம் ஒரு பட்டுக் கயிற்றில் ஒன்றாக கோர்த்துக் கொண்டார்.

    உலகையே காக்கும் இறைவன் ஒரு சாதாரண வணிகனாக மதுரை வீதிகளில் வலம் வந்தார். வேதம் கூறும் தம் திருவாயில் “வளையல் வாங்கலியோ, வளையல்” என்று உரக்கக் கூறிக் கொண்டே சென்றார்.

    வணிகர் குலப் பெண்கள் இருக்கும் பகுதிக்கு வந்தார். அம்மானை ஆடிக் கொண்டிருந்த பெண்கள் காந்தமாய் ஈர்க்கும் அந்தக் குரலைக் கேட்டு மெய்மறந்து நின்றனர். குரலிலே இத்தனை வசீகரம் என்றால், அவர் உருவம் எவ்வளவு எழில் மிகுந்ததமாக இருக்கும் என்று தாபம் கொண்டனர். வீதிக்கு ஓடிவந்தனர். குரல் வந்த திசையைப் பார்த்தனர். அங்கு வளையல் விற்பவராக சிவபெருமான் வந்து கொண்டிருந்தார். 

மன்மதனையே மிஞ்சும் பேரழகு கொண்டிருந்தார். பருவ மங்கையர் அவர் மீது வைத்த பார்வையை மீட்க முடியாமல் போராடினர். தங்களை அறியாமலே மனம் மோகமுற்று, காதல் வயப்பட்டு, காமம் கொண்டதை தடுக்க முடியவில்லை.

    முதலில் அச்சம் முதலான நான்கு குணங்களும் வந்து மோகத்தை தடைபோட்டு நிறுத்தின. ஆனால் அந்த தடை வெகுநேரம் நிலைக்கவில்லை. பலாவை மொய்க்கும் ஈக்களாக வளையல் வியாபாரியை பெண்கள் மொய்த்தனர். மருதாணி இட்ட கைகளுக்கு வளையல் போட்டுவிடுமாறு கெஞ்சி நின்றனர். தங்களின் மங்கலக் கைகளை அவர் முன்னே நீட்டினர். 

    வணிகப் பெருமானும் தனது திருக்கரத்தால் மங்கையரின் மெல்லிய கைகளை மென்மையாகப் பற்றினார். கரங்களைத் தொட்ட மாத்திரத்தில் காதல் மயக்கம் கொண்டனர் பெண்கள். பற்றிய கைகளை இதமாக இறுக்கி வளையல்களை இட்டால். வலியில்லாமல் வழுக்கியபடி வளையலுக்குள் கை சென்றது. இதுநாள் வரை வளையல் போடுவது வலி மிகுந்த ஒன்றாகவே அந்தப் பெண்களுக்கு இருந்தது.

    இப்போதுதான் வலியில்லாத வளையல் அணிவிப்பை அனுபவித்தனர். மங்கையரின் கைகளைப்பற்றி முகிழ்ப்பித்துப் பலவகையான நல்ல வளையல்களைப் போட்டுவிட்டார். பெருமானின் திருக்கரத்தின் இதமும் மென்மையும் மங்கையருக்குள் காதலைப் பெருக்கிறது.

    வளையல் அணிந்து திரும்பிச் சென்ற மங்கையர் மனம் இழந்தவராக மீண்டும் ஏதாவது ஒரு காரணம் கூறி வணிகரிடம் திரும்பத் திரும்ப வந்தனர். யாருமே அவரை விட்டு அகலவில்லை. விலகிச் செல்லவும் மனமில்லாமல் அருகிலேயே நின்றனர். அவர்களின் மனமும் நெகிழ்ந்தது.

    “வணிகரே! நாங்களும் எவ்வளவோ வளையல்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாங்கள் கொண்டுவந்திருக்கும் வளையல் மட்டும் இதுவரை நாங்கள் பார்க்காததாக இருக்கிறது. இந்த வளையல்கள் எல்லாம் எங்களைப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது. உங்களை விட்டுப்பிரிய எங்களுக்கு மனமில்லை. நாளையும் நீங்கள் வளையல் போட வரவேண்டும். அப்போதுதான் எங்கள் மனம் நிம்மதி பெறும். கொஞ்சம் பொறுங்கள். நாங்கள் வாங்கிய வளையலுக்கான விலையைத் தருகிறோம். பெற்றுக்கொள்ளுங்கள்” என்றனர்.

    வசீகரப்புன்னகை சிந்திய வணிகர் “அதற்கென்ன? நாளை வந்து விலையை வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி மறைந்தார்.

    நகர வீதிகளில் வளையல் விற்ற வணிகரைப் பற்றிய பெருமை மக்கள் மத்தியில் பரவியது. வணிக மங்கையரின் சிந்தை கவர்ந்து சென்றவர் சிவபெருமான்தான் என்பதை உணர்ந்தனர். பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஆனந்தம் கொண்டனர்.

    சிவபெருமானே தனது திருக்கரத்தால் பெண்களின் கரம் தொட்டு வளையல் அணிவித்ததால் வணிககுல மங்கையர்கள் அனைவரும் கர்ப்பம் தரித்தனர். முருகப் பெருமானை போன்ற அழகும் அறிவும் கொண்ட நல்மக்களை பெற்றனர். அவர்கள் அனைவரும் வளர்ந்து வாலிபர்களாகி எல்லோரும் பெருமைப்படும்படியான வீரமும், வெற்றியும் களிப்பும் கொண்டு வாழ்ந்தனர். வணிக மாதர் அனைவரும் சிவபெருமான் திருவருளால் மண்ணில் சில காலம் வாழ்ந்து பின்னர் சிவலோகம் சென்றனர். 

1 கருத்துகள்

  1. புதுப்புது திருவிளையாடல் கதைகளை படிக்கிறேன். மிக்க மகிழ்ச்சிங்க சகோ.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை