Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

திருவள்ளுவர் பிறந்த மண்ணில் ஒரு பயணம்

ன்னியாகுமரி என்றதுமே முக்கடலும் கடலுக்குள் உயர்ந்து நிற்கும்  திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும்தான்  நினைவில் வந்து போகும். படகுத் துறையில் இருந்து திருவள்ளுவர் சிலையைப் பார்க்கும்போது அதன் பிரமாண்டமும் கடலின் மத்தியில் எழுந்து நிற்கும் அழகும் நமக்குள் இனம்புரியா ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். இவ்வளவு பெரிய சிலையை இங்கு வைக்க என்ன காரணம் என்ற கேள்வியும் மனதில் எழும்.

படகு துறையிலிருந்து திருவள்ளுவர் சிலை 
திருவள்ளுவர் என்ற உடனே வரலாற்று ஆய்வாளரும் 'ஆய்வுக் களஞ்சியம்' மாத இதழ் ஆசிரியருமான டாக்டர் எஸ். பத்மநாபன் என் நினைவில் வந்து நின்றார். திருவள்ளுவர் குறித்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் அவர். வள்ளுவரைக் குறித்து கேட்டதுமே "வாங்க வள்ளுவர் பிறந்த ஊரைப் பார்த்து வருவோம்'' என்று அவரது ஸ்கார்பியோவில் அழைத்துச் சென்றார்.

கரை கண்டேஸ்வரர் ஆலயம்
கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் முட்டம் கடற்கரையில் இருந்து  5 கி.மீ. தொலைவிலும் அந்தக் கிராமம் இருந்தது. அதன் பெயர் திருநாயனார்குறிச்சி. எளிமையான கிராமம், மற்ற கிராமங்களைப் போலவே நவீன வடிவம் பூண்டிருந்தது.  அங்கிருக்கும் கரை கண்டேஸ்வரர் ஆலயம் முன் எங்களது கார் நின்றது.

"இதுதான் திருவள்ளுவர் பிறந்த ஊர்" என்றார்.

வள்ளுவர் பிறந்த அந்த புனிதமான மண்ணில் கால் பதிக்கிறோம். மனதுக்குள் ஏதோ ஒரு சிலிர்ப்பு முழுவதுமாக ஆட்கொள்கிறது. பின் காலாற கிராமத்து தெருக்களில் நடந்தோம். பசுமை பூத்துக் குலுங்கும் வயல்களுக்குள் உலாவினோம். மனம் முழுவதும்  வள்ளுவர் பற்றிய பெருமிதம் தொற்றிக் கொண்டிருந்த நேரம்.  அதே வேளை என் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியையும் பத்மநாபன் சாரிடம் நேரடியாகவே கேட்டேன்.

பளிங்கினால் ஆனா யானை சிற்பம் - விவேகனத்தர் பாறை 
"வள்ளுவர் இங்குதான் பிறந்தார்! என்பதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? '' என்று கேட்டேன்.

"நிறைய ஆதாரங்கள் இருந்ததால்தான் மூன்று முதல்வர்களிடம் இதைப்பற்றி என்னால் பேசமுடிந்தது.  எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூன்று பேரிடமும் எனது ஆய்வு குறித்து பேசியிருக்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளாக திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறேன். எனது ஆய்வுகளில் தலைசிறந்தது என்றால் அது 'திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்'  என்ற எனது கண்டுபிடிப்புதான். இதை 1989 டிசம்பர் மாதம் மொரீஷியஸ் தீவில் நடைபெற்ற ஏழாவது அனைத்துலக தமிழ் மாநாட்டில் பேசினேன்.  பின் அதையே புத்தகமாக வெளியிட்டேன். அதை அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் வெளியிட்டார்.

மைலாப்பூர்தான் திருவள்ளுவர் பிறந்த இடம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வள்ளுவருக்காக வள்ளுவர் கோட்டம் அமைத்த கலைஞருக்கு இதை நம்புவது கடினமாக இருந்தது.  ஆதாரங்களோடு நான் எழுதிய தகவல்களை அவரால் மறுக்க முடியவில்லை. அதன் மூலம் வள்ளுவர் பற்றிய பொய்யான பல கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.  அதன்படி திருவள்ளுவர் வள்ளுநாட்டை ஆண்ட மன்னர், வள்ளுவ நாட்டின் ஒரு பகுதியான முட்டத்தை அடுத்துள்ள திருநாயனார்குறிச்சியில் பிறந்து, மதுரையில் சில காலம்  தங்கி, மயிலாப்பூர் சென்று மறைந்தார். இதற்கான ஆதாரங்கள் திருக்குறளிலேயே எனக்கு கிடைத்தன.

கிட்டத்தட்ட திருக்குறளில் 50-க்கும் மேற்பட்ட சொற்கள் இந்தப் பகுதியில் மட்டுமே பேசப்படும் தனிச் சொற்கள் உள்ளன. 'இன்னைக்கு ஒரே மடியா இருக்கு' என்பது சாதாரண பேச்சு மொழி. மடி என்றால் சோம்பல். திருவள்ளுவர் மடியின்மை என்று ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். தமிழகத்தில் வேறெங்குமே சோம்பலை மடி என்று சொல்வதில்லை. இங்கு அது சாதாரண பேச்சுத் தமிழ்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கரைபுரண்டு ஓடும் நீரை மட்டுமே வெள்ளம் என்று சொல்லுவார்கள். குமரி மாவட்டத்தில் மட்டும்தான்  கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர் போன்றவற்றையும் வெள்ளம் என்பார்கள். இதை வள்ளுவர் 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு '  என்று குறிப்பிடுகிறார். இந்த மண்ணில்தான் தாமரை பூத்த தடாகங்கள் அதிகம். குடிக்க வெள்ளம் வேண்டும் என்பது இங்கு பேச்சு வழக்கில் உள்ளது.  மற்ற இடங்களில் இப்படி பேசினால் சிரிப்பார்கள்.  குமரி மாவட்டத்தில் வெள்ளம் என்றால் தண்ணீர் என்று பொருள். இதனை அப்படியே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.

அதேபோல் எழுவாய் உயர்தினையாக இருந்தாலும், பயனிலை அஃறிணையாகக் கூறுவது இந்த மக்களின் வழக்கம்.' அப்பா வரும்', 'அம்மா பேசும்', 'மாமா முடிக்கும்' இப்படி பல. இதை  அப்படியே திருக்குறளில் பயன்படுத்துகிறார் வள்ளுவர். 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன் கண்விடல்'  இந்த குறளில், இதனை இவன் முடிப்பவன்  என்று கூறாமல் முடிக்கும் என்று கூறுவது, குமரித் தமிழ் இங்கு பேசுகின்றது.

அதேபோல் உணக்கின் என்ற வார்த்தையும், ஒரு பங்கு மண், கால் பங்கு ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி  உரம் கூட தேவையில்லாமல் அந்த நிலத்தில் பயிர் செய்யலாம் என்பதை வள்ளுவர் 'நொடி புழுதி கஃசா  உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்' என்று குறிப்பிடுகிறார். இதில் உணக்கின் (காய வைத்தல்) என்ற வார்த்தையை குமரி மாவட்டத்தில் மட்டுமே மக்கள் பேசுகின்றனர்.

மீன்கள் மிணு மிணுப்பிற்கு மயங்கும் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு. முட்டம், கடியப்பட்டினம் மீனவர்கள் தூண்டிலில் ஜரிகையை இணைத்து மீன் பிடிப்பதில் வல்லவர்கள். இப்படி தூண்டிலில் பொன் இழையை வைத்து மீன் பிடிக்கும் வழக்கத்தை 'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்ற தூஉம், தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று' என்று குறிப்பிடுகிறார். இத்தகைய  தூண்டில் முறை திருவள்ளுவர் பிறந்த திருநாயனார் குறிச்சிக்கு அருகில் மட்டும்தான் உள்ளது. வேறு எங்கும் இல்லை. இந்த ஊரின் பழைய பெயர்தான் கடியப்பட்டினம்.

இவற்றையெல்லாம்விட ஓர் அரிய சான்றினை கூறுகிறேன்.  இதுதான் திருவள்ளுவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதற்கு மிக அரிதான சான்று. 'வரைவின் மகளிர்' என்ற தலைப்பில் விலைமகள்களைப் பற்றி கூறுகிறார்.  'பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில், ஏதில் பிணைந்தழீ இயற்று' என்பது அந்தக்குறள்.

வாடிக்கையாளர்களை மிகவும் அன்போடு தழுவுவதாக நடிக்கும் ஒரு விலைமகளின் செயல் இருட்டறையில் முன்பின் தெரியாத ஒருவரின் பிணத்தைத் தழுவுவது போலாகும் என்று கூறுகிறார். பிணம் தழுவுதல் என்பது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்தது. திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அனுப்புவார்கள். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தை தழுவி வரவேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்கள். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கூலிக்காக முன் பின் தெரியாத பெண்ணின் பிணத்தை தழுவிய இளைஞனையும், பணத்திற்காக எந்த உடலையும் தழுவும் விலைமகளையும் வள்ளுவர் ஒப்பிட்டுக் கூறுகிறார். மலை நாட்டிலுள்ள பிணம் தழுவும் வழக்கத்தை வள்ளுவர் தமது நூலிலே குறிப்பிட்டிருப்பது அவர் குமரி மண்ணிலே பிறந்தவர் என்பதற்கான அசைக்க முடியாத சாட்சி'' என்றார் உறுதியான குரலில் பத்மநாபன்.

 வள்ளுவன் கல் பொற்றை
திருநாயனார் குறிச்சியை வலம் வந்த நாங்கள் அடுத்து சென்றது, வள்ளுவன் கல் பொற்றை என்ற இடத்திற்கு.எங்களுடன் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், டாக்டர் சிதம்பரநாதன் ஆகியோரும் சேர்ந்து கொண்டார்கள். இந்த இடத்திற்கும் திருவள்ளுவருக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது.  தடிக்காரங்கோணம்  அருகே உள்ள கூவைக்காடு என்ற இடத்தில்தான் இந்த மலை இருக்கிறது. இது அந்த காலத்திய ஊட்டி, கொடைக்கானல் போல் குளுமையாக இருந்திருக்க வேண்டும்.  இந்த மலையில்தான் திருவள்ளுவரும், அவர் மனைவியும் ஓய்வெடுக்க வருவார்கள். தேனும் தினைமாவும் விரும்பி உண்பார்கள். அப்படி அவர் தங்கி இளைப்பாறிய இடம்தான் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

வள்ளுவன் கல் பொற்றையில் டாக்டர் பத்மநாபன், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், டாக்டர் சிதம்பரநாதன் ஆகியோருடன் நான்
சிறிய மலையின் மீது ஏறிய எங்கள் கார் ஒரு இடத்தில் நின்றது. எங்களுக்கு எதிரில் கருமை நிறத்தில் பெரிய பாறை ஒன்று சிறு குன்று போல் இருந்தது. "அதுதான் வள்ளுவன் கல்பொற்றை''  என்றார் பத்மநாபன். அதன் உச்சியில் பொறிக்கப்பட்டுள்ள பாதம் 'வள்ளுவர் பாதம்' என்று அழைக்கிறார்கள் இங்குள்ள பழங்குடிமக்கள்.

டாக்டர் பத்மநாபன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தும், அதன்பின் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கும் போதும் திருவள்ளுவரைப்பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வந்திருக்கிறார். திருவள்ளுவர் சிலை இங்கு வருவதற்கான காரணத்தை ஆதாரத்தோடு சொல்லி முடித்தார்.

திருவள்ளுவர் பிறந்த ஊரான திருநாயனார் குறிச்சியும், அவர் மலைவாழ் மக்களோடு ஓய்வெடுத்த வள்ளுவன் கல் பொற்றை இரண்டு இடங்களையும் பத்மநாபன் சாரின் துணையோடு பார்த்தப்பின் எனது பயணம் கன்னியாகுமரியை நோக்கி நகர்ந்தது.

விவேகானந்தர் பாறை

கன்னியாகுமரி என்றதுமே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது விவேகானந்தர் பாறை.  இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சிறிய பாறைத் தீவில் விவேகானந்தர் பாறை அமைக்கப்பட்டுள்ளது.  1892-ல் சுவாமி விவேகானந்தர் இங்கு நீந்தி வந்து தவம் புரிந்திருக்கிறார் என்றும்,  அதன் நினைவாகவே விவேகானந்தர் பாறை உருவாகியுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

மிகப் பெரிய தேசிய சின்னமாக விளங்கும் விவேகானந்தர் பாறை ஏக்நாத் ரானடே என்ற தனி மனிதரின் தன்னிகரில்லா உழைப்பின் வெளிப்பாடு.  முதலில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலை நடைபெறும் போதே பிரச்சினை கிளம்பியது. கிறிஸ்துவ மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட குமரியில் புனித சவேரியருக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்பது அவர்களின் ஆசை. அதற்காக மிகப் பெரிய சிலுவை ஒன்றைக் கொண்டு போய் அங்கு  வைத்தார்கள். விஷயம் கோர்ட்டுக்குப் போனது. அதில் இந்தப் பாறை விவேகானந்தர்  பாறைதான் என்று தீர்ப்பு வந்தது.  இரவோடு இரவாக சிலுவையை எடுத்துச் சென்றனர். அதே வேளையில் கலவர சூழ்நிலை உருவானது. அதன்பின் பாறை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு யாரும் நுழை முடியாதபடி பாதுகாப்பு போடப்பட்டது.

தியான மண்டபம்
1963ல் அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் சிறிய நினைவகம் கட்டுவதற்கு அனுமதி தந்தார். மத்திய அரசின் பண்பாட்டு துறை அமைச்சராக இருந்து ஹூமாயூன் கபீர் நினைவுச் சின்னம் அமைத்தால் பாறையின் இயற்கை அழகு போய்விடும் என்று அனுமதி மறுத்தார். இனி வேறு வழியில்லை, பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆதரித்தால் மட்டுமே நினைவகம் எழுப்ப முடியும் என்ற நிலை.

டெல்லியில் மூன்று நாட்கள் முகாமிட்டு 323 எம்பிக்களின் கையெழுத்தை விவேகானந்தர் நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக வாங்கினார் ஏக்னாத்.  ஆனால் 15 அடிக்கு 15 அடி என்ற மிகக் சிறிய அளவில் கட்டுவதற்கு மட்டுமே பக்தவச்சலம் அனுமதி தந்தார்.  அதையும் கடந்து மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளின் நிதி, பொதுமக்களின் நிதியோடு கட்டுமானப் பணியைத் தொடங்கியது.  6 வருடங்களாக உருவான நினைவகம் 1970-ல் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.


ஆறு அறைகள் கொண்ட தியான மண்டபம் ஒன்றும், விவேகானந்தர் நின்ற நிலையில் ஒரு வெண்கல சிலை அமைக்கப்பட்ட சபா மண்டபமும், முக மண்டபமும் அமைக்கப்பட்டன.  இந்தப் பாறையில் குமரி பகவதியம்மன் ஒற்றைகாலில் நின்று தவம் செய்ததாக ஒரு ஐதீகம்  உண்டு. அந்த பாதச் சுவடு பாறையில் இருப்பதால் அதற்கென்று ஸ்ரீ பாத மண்டபம் ஒன்று கட்டுப்பட்டுள்ளது.


விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து உண்டு. தமிழ்நாடு அரசு பூம்புகார் போக்குவரத்துக் கழகம் இவற்றை இயக்கி வருகிறது. இதற்கு இரண்டு வித கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.  சாதாரணக் கட்டணம் ரூ.34. (சிறப்புக் கட்டணம் ரூ.169). இதில் ரூ.29 படகுக்கான கட்டணமாகவும், ரூ.5 திருவள்ளுவர் சிலைக்கான கட்டணமாகவும் சேர்த்தே வசூலித்து விடுகிறார்கள். இதுபோக விவேகானந்தர் பாறைக்கு விவேகானந்தர் மண்டபத்திற்கு நுழைவுக் கட்டணமாக ரூ.20 விவேகானந்தா கேந்தரா மூலம் வசூலிக்கப்படுகிறது.

1970ல் செப்டம்பர் 2-ல் இந்திய ஜனாதிபதி வி.வி.கிரி இதனை திறந்து வைத்தார்.  5 வருடம் கழித்து 1975ல் விவேகானந்தர் பாறை அமைந்திருக்கும் பெரிய பாறைக்கு அருகில் உள்ள சிறிய பாறையில் 8  அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு ஒரு சிலையை எழுப்ப வேண்டும் என்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு ஏக்நாத் ரானடே ஒரு கடிதம் எழுதினார்.  1976ல் சட்டமன்றத்தில் திருவள்ளுவருக்கு 30 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார்.  1979-ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல் நாட்டினார்.  அதன்பின் எந்த வேலையும் நடைபெறவில்லை. மீண்டும் 1990-ல் பணி தொடங்கப்பட்டது. 10 வருடமாக கட்டுமானப் பணி முடிந்து 1.1.2000-த்தில் புத்தாயிரம் ஆண்டில் திருவள்ளுவர் சிலை கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது.


திருவள்ளுவர் சிலை செய்யும் பணி கன்னியாகுமரி, அம்பாசமுத்திரம், சங்கராபுரம் ஆகிய  மூன்று இடங்களில் நடைபெற்றது.  அம்பாசமுத்திரத்தில் இருந்து 5,000 டன் கற்களும், சங்கராபுரத்தில் இருந்து 2,000 டன் உயர்வகை கிரானைட்  கற்களும் கொண்டு உருவாக்கப்பட்டது.   மொத்தம் 3,681 பெரிய கற்களால்  சிலை வடிவமைக்கப்பட்டது.  இதில் 15 டன் வரை கனமான கற்களும்  உள்ளன.  பெரும்பான்மையான  கற்கள்  3 முதல் 8 டன் எடை கொண்டதாக இருந்தன. கற்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்காக 18,000 துளைகள் போடப்பட்டுள்ளன.  இது பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டடம் போன்றது.  உலகத்திலேயே வேறு எங்கும் இப்படியொரு கருங்கல் சிலை அமைக்கப்படவில்லை.


பீடம் 38 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. அது திருவள்ளுவர் கூறும் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலை பொருட்பால்  இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிக்கும் விதமாக கடல் மட்டத்திலிருந்து 30 அடி உயரம் கொண்ட பாறையின் மீது 133 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.  சிலையின் மொத்த எடை 7,000  டன், இதில் சிலையின் எடை 2,500 டன், பீடத்தின் எடை 1,500 டன், பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை 3,000 டன், முகம் 10 அடி உயரமும், தோள்பட்டை அகலம் 30 அடியும் கொண்ட இந்த பிரமாண்ட சிலை தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலை இருக்கும் சிறிய பாறைக்கும் இடையே 200 அடி இடைவெளிதான் உள்ளது. இந்த இரண்டு சிறு தீவுகளையும் இணைக்கும் விதமாக பாலம் கட்ட வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் நெடுநாளைய விருப்பம். இணைப்பு பாலம் இல்லாத காரணத்தால் அங்கிருந்து திருவள்ளுவர் பாறைக்கும் படகில் போகவேண்டியுள்ளது.


தென் பகுதியில் உள்ள இந்தியாவின் கடைசி நிலத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இரண்டு தத்துவ ஞானிகளின் நினைவாக நினைவுச் சின்னங்கள் அமைந்திருப்பது நம் எல்லோருக்கும் பெருமையே...!





34 கருத்துகள்

  1. அவர் கூறிய எடுத்துக்காட்டுகள் அனைத்தும் சரியே என்று தோன்றுகிறது...

    எனது g+ பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி டிடி சார்!

      நீக்கு
  2. அருமை! முற்பகுதி முழுசும் எனக்குப் புதிய தகவல்களே! மனம் நிறைந்த நன்றி.

    நேரம் இருக்கும்போது இந்தச் சுட்டிகளில் பாருங்க. நம்ம பயணம். விவேகானந்தர் பாறை & ஐயன்சிலை வரும் பகுதிகள்.

    http://thulasidhalam.blogspot.com/2009/05/2009-22.html

    http://thulasidhalam.blogspot.com/2009/05/2009-23.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டாயம் பார்க்கிறேன். நன்றி!

      நீக்கு
    2. தங்களின் கன்னியாகுமரி பயணத்தை படித்தேனம்மா. வழக்கம்போல் பிண்ணி எடுக்கிறீர்கள்.
      நன்றி பயண அனுபவத்தை படிக்க தந்தமைக்கு.

      நீக்கு
  3. கலக்கிட்டீங்க. வாய்ப்பு கிடைத்தால் உள்ளே புகுந்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு தான் நகர்வீர்கள் போல. இதில் சொல்லப்பட்ட பல விசயங்கள் புதிது. படங்களின் கோணம் மிக அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜோதிஜி, தொடர்ந்து கருத்துப் பதிவிடுவதற்கு மீண்டும் நன்றிகள்.

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. கீதா (எங்கள் தளத்தில் என் நண்பர் திரு. துளசிதரனும், நானும் சேர்ந்துதான் எழுதுகின்றோம். துளசி பாலக்காட்டில் ஆங்கில ஆசிரியராக இருக்கின்றார். நான் சென்னையில்.)

    ஏன் நீக்கிவீட்டிங்க. உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். காரணம் எந்தப் பதிவையும் படித்து விட்டு விமர்சனம் செய்வதோடு அதை சமூக வலைதளங்களில் பாரபட்சம் இல்லாமல் பகிர்ந்து விடுவதால் பலரின் பார்வைக்கும் சென்று விடுகின்றது. பரந்த உள்ளம். வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே அதில் சில தவறுகள் இருந்தன. அதனால் தான் அதைத் திருத்திட நீக்கினேன். இதோ கொடுத்துவிட்டேன்....நண்பரே!

      நீக்கு
    2. நண்பரே மிக்க நன்றி தங்களின் பாராட்டிற்கு! அதற்குத்தானே நாம் வாசிக்கின்றோம். நாங்கள் வாசிக்க வந்தால் அதை முழுமையாக வாசித்து, துளசிக்கு நேரம் இல்லை எனும் போது அதை நான் அவருடன் பகிர்ந்து கொள்வேன். அதுவும் இப்போது அவருக்குத் தேர்வு சமயம் ஆதலாலும் அடுத்து தேர்வுத்தாள் திருத்தத்தை மேற்பார்வை இடச் செல்ல என்று னேரமின்மை. நல்ல கருத்துக்கள், பதிவுகள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் தானே! நன்றி நண்பரே!

      நீக்கு
  6. முதலில் உங்களுக்கு மிக்க மிக்க நன்றி! எதற்கு? எங்கள் ஊர் பற்றிய பெருமைகளை அதுவும் உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய அந்தப் பெருந்தகை எங்கள் ஊர்தான் என்பதற்கான சான்றுகளை முன் வைத்த டாக்டர் திரு பத்மநாபன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி உரைக்கும் அதேசமயம் அதை இங்கு அறியத் தந்தமைக்குத் தங்களுக்கும்!

    நான் படிக்கும் காலத்திலேயே, 1987 வரை, திருவள்ளுவர் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் பிறந்தார், மைலாப்பூர் அல்ல (நாம் படிப்பது அப்படித்தானே தமிழ் பாட நூலில் இருக்கின்றது! ) என்று பரவலாகச் சொல்லப்பட்டு நானும் அதை பரீட்சையில் எழுதி தவறு என்று திருத்தப்பட்ட அனுபவமும் உண்டு. ஆனால் தகுந்த ஆதாரங்கள் அப்போது சொல்லப்படவில்லை என்பதால் நானும் அதை மனதில் மட்டுமே வைத்துக் கொண்டேன்.

    திருநாயனார் குறிச்சி / திருனைனார் குறிச்சி, கரைகண்டேஸ்வர்ர் கோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். முதுகலை படித்த போது எங்களின் ஒரு ப்ராஜெக்டிற்கா முட்டம் சென்ற போது அதன் அருகில் தானெ இந்த ஊர்... அப்போது திருனைனார் குறிச்சி என்றாலே அவ்வளவாக அறியப்படாத மலையாளக் கவிஞர் திருனைனார் குறிச்சி (திரு மாதவன் நாயர். அப்பொது இந்தப் பெயர் கூட்த் தெரியாது, திருனைனார் குறிச்சி என்று மட்டும்தான்.) பற்றித்தான், அதுவும் சிறிதே தெரியும்.

    திருக்குறளில் சான்றுகளாகச் சொல்லப்படும் வார்த்தைகள், திரு பத்மநாபன் அவர்களால் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகள், ஆம் நாங்கள் பேசும் சொற்கள் தான். மலையாள மொழி வார்த்தைகள். ..எங்கள் தமிழில் மலையாள வார்த்தைகள் கலந்திருக்கும். எங்கள் கலாச்சாரம் கூட மலையாள வாசனை கலந்த்த்தாக இருக்கும். உணவும் கூட. ஏன் எங்கள் ஊர் பழைய கோவில்கள் எல்லாமே கேரள ஆகம முறைப்படிதான் பூஜைகள் நடத்தப்படுகின்றது. மட்டுமல்ல நீங்கள் உன்னிப்பாகக் கவனித்தீர்கள் என்றால், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தமிழ் சப்தம் சிறிது இலங்கைத் தமிழ், மலையாள சப்தம் கலந்ததாகத் தெரியும். கேரளத்திற்கும் இலங்கைக்கும் உடை, உணவு பல ஒற்றுமைகள் உண்டு என்பது தாங்கள் அறியாதது அல்ல.
    கன்னியாகுமரி மாவட்டம் முதலில் கேரள திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தானே இருந்தது. எனவே மலையாள மொழிதான் பெரும்பாலும் பேசப்பட்டது. தமிழும் கலந்து இருக்கலாம் தமிழ் நாட்டை ஒட்டி இருந்ததால். இப்போதும் பல பகுதிகளில் மலையாளம் தான் மிகுதியாக இருக்கும்..அம்மக்களும். பின்னர் தானே தமிழ் நாட்டொடு இணைந்தது. அதனால் அப்போது சொல்லப்பட்டது என்னவென்றால் திருவள்ளுவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அல்லர் அவர் தமிழர் தான் மைலாப்பூரில் தான் பிறந்தவர். கேரளநாடும்/சேரநாடு நம் தமிழ் மன்னர்கள் கீழ் இருந்த்துதானே ஒரு காலத்தில். மட்டுமல்ல மலையாளமே தமிழில் இருந்துதானே வந்தது வட மொழி கலந்து...பின்னர் தானே வடமொழி பிரித்து மலையாள எழுத்துருக்களுடன் மொழியாக மாற்றியவர் எழுத்தச்சன் தானே....(இப்போதும் மலயாள மொழி சமஸ்க்ருதம் கலந்து பேசப்படுகின்றதுதான்.) எனவே இந்தச் சொற்கள் எல்லாமே தமிழ் வார்த்தைகள்தான் என்றும்.

    நான் கூட நினைத்தேன், கலைஞர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வைத்த போது, ம்ம் நம்மூரைச் சேர்ந்தவர் என்பது தமிழ் விற்பன்னர் கருணாநிதி அவர்களுக்கும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்து விட்டதோ அதனால் தானோ என்று. ஆனால், அப்போது அவ்வளவாக, என் அறிவிற்கு எட்டியவரை பேசப்படவில்லை. ஏனென்றால் இன்றும் தமிழ் நாட்டு பாட நூலில் திருவள்ளுவர் மைலாப்பூரைச் சேர்ந்தவர் என்று தான் சொல்லப்பட்டு வருகின்றது....இல்லையோ?

    மிக்க நன்றி நண்பரே! எங்கள் ஊர் பெருமையை இந்த உலகிற்கு எடுத்துச் சொன்னதற்கு!

    -கீதா (எங்கள் தளத்தில் என் நண்பர் திரு. துளசிதரனும், நானும் சேர்ந்துதான் எழுதுகின்றோம். துளசி பாலக்காட்டில் ஆங்கில ஆசிரியராக இருக்கின்றார். நான் சென்னையில்.)
    எங்கள் தளத்தில் கூட எழுத வேண்டும் என்று நினைத்தேன் எங்கள் ஊர் பெருமையை பீற்றிக் கொண்டு..அஹஹஹ் ஆனால் ஆதாரம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை..என்று சொல்வதை விட நானும் அதைத் தெரிந்து கொள்ள முயலவில்லை...இப்போது அதைத் தாங்கள் மிக அழகான பதிவாக்கி உள்ளீர்கள்! மிக்க நன்றி! கூகுள் + செய்துவிட்டேன்...பின்னே எங்க ஊர் இல்லையா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி நண்பர்களே,

      ஒரு பதிவு எழுதும் அளவுக்கு பல தகவல்களையும், சிறு வயது நினைவுகளையும் தொகுத்து தந்துள்ளீர்கள். இப்போது நீங்கள் எப்படி கருத்து எழுதுகிறீர்கள் என்று ஆவலோடு எதிர் பார்க்க தொடங்கியுள்ளேன். அந்தளவிற்கு தங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் நேர்த்தியாக இருக்கிறது.

      நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய இடங்களுக்கு பயணித்திருக்கிறேன். இனி அந்த இடங்களை நினைக்கும் போது உங்களின் பெயரும் என் நினைவுக்கு வரும். அற்புதமான இடங்கள். அருமையான மனிதர்கள்.

      விரிவான பதிவுக்கு மீண்டும் நன்றிகள்.

      நீக்கு
    2. //கன்னியாகுமரி மாவட்டம் முதலில் கேரள திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தானே இருந்தது. எனவே மலையாள மொழிதான் பெரும்பாலும் பேசப்பட்டது. தமிழும் கலந்து இருக்கலாம் தமிழ் நாட்டை ஒட்டி இருந்ததால். இப்போதும் பல பகுதிகளில் மலையாளம் தான் மிகுதியாக இருக்கும்.//

      கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளும், திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியும் இணைந்து வேணாடு என்று அழைக்கப்பட்டதாக படித்திருக்கிறேன். இந்த வேணாடு வித்தியாசமான கலாச்சாரம் கொண்டது. இது முழுமையான கேரளமும் அல்ல, முழுமையான தமிழகமும் அல்ல இரண்டும் கலந்த ஒரு கலாச்சாரம். இரண்டிலும் ஒட்டாத புது பண்பாடு கொண்டதாக இருந்திருக்கிறது. தங்களின் கருத்தைப் படிக்கும் போது இந்த எண்ணம் மேலும் உறுதிபடுகிறது.

      நீக்கு
  7. தகவல்கள் அனைத்தும் அருமை நண்பரே
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே!
      கருத்துக்கும் வாகாளிப்புக்கும் நன்றி!

      நீக்கு
  8. அருமை செந்தில் !டாக்டர் பத்மநாபன் செல்வது ஒரளவு பொருத்தமாகத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஆய்வை ஒத்துக்கொண்ட பின்தான் கலைஞர் கன்னியாகுமரியில் சிலை அமைக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தார், என்று பத்மனதபன் அவர்கள் கூறியிருக்கிறார்.

      நீக்கு
  9. படங்களும் பதிவும் அருமை.தொடர்ந்து பல ஊர்களுக்குச் சென்று பயணக்கட்டுரை,ஆய்வுக் கட்டுரைகளையும் எழுத வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களோடு தொடர்கிறேன் அய்யா!

      நீக்கு
  10. வள்ளுவரைப் பற்றிய பல புனைவுகள் உண்டு. அவரை கிருஸ்துவர் என்றும் முஸ்லிம் என்றும் சைவர், வைணவர், சமணர், பவுத்தர் என்றும் வித விதமாக பல கருத்துக்கள் உண்டு. எனவே நீங்கள் நம்பும் இந்த கன்னியாகுமரி சங்கதியை நான் மற்றொரு வதந்தி என்ற அளவில்தான் மனதில் வைத்துக்கொள்கிறேன். யாருமே இவர் எங்களுடையவர் என்று சொல்லக்கூடிய ஒரு அதிசய மனிதர் வள்ளுவர் என்பது மட்டும் புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வள்ளுவர் சமணர் என்று கொண்டாடுபவர்கள் உண்டு. கிறிஸ்துவ, முஸ்லிம் மதங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட காலம் என்பதால், அவற்றை விட்டுவிட வேண்டும். ஆனால், ஒரு வட்டார மொழியில் இருக்கும் வார்த்தைகளில் 50-க்கும் மேற்பட்டவற்றை ஒரு நூலில் பயன்படுத்திருக்கும் போது அது உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு, என்றே தோன்றுகிறது.

      நீக்கு

  11. அன்புள்ள அய்யா,

    ஆழிப்பேரலையிலும் அழியாமல் நிலையாக நிலைத்து நிற்கும் 133 அடி உயரத்தில் கல்லிலேயே சிலை வடித்திட்டச் சிற்பியை நேரில் பார்த்தேன். இப்பொழுது அவர் மறைந்து விட்டார். 1.1.2000-த்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கம்பீரமாக நிற்கும் வான்புகழ் கொண்ட வள்ளுவன் தமிழுக்கு- தமிழனுக்குக் கிடைத்த பெருமை.

    அதன் அருமையை எண்ணி வியக்கும் அளவிற்கு தாங்கள் எடுத்த புகைப்படங்கள் கண்டு வியந்தேன்.

    விவேகானந்தர் பாறை... மற்றும் பல குறள்களைக் கொண்ட கருத்துகள் அருமை.

    நன்றி.
    த.ம. 7.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஒரு முறை அய்யா கணபதி ஸ்தபதியை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்வில் எனக்கு வாய்த்த பொக்கிஷ தருணங்கள் அவை.
      வருகை தந்து வாயார புகழ்ந்து வாக்களித்த அய்யாவுக்கு நன்றிகள்!

      நீக்கு
  12. மிகத்தாமதமாக வருகிறேன் அய்யா,
    அதனால் உள்ள அனுகூலம் இத்துணை பேருடைய கருத்துகளையும் படிக்க நேர்ந்தது.
    நான் கன்னியாகுமரிக்கும் பத்நாதபுரம் அரண்மனைக்குமெல்லாம் சென்றிருந்தால் கூட உங்களது எழுத்துகளும் படக்காட்சிகளும் நேரில் சென்று எனக்குக் கிடைக்காத அனுபவத்தைத் தருகின்றன.
    தொல்காப்பியர் சேர நாட்டினர் என்பதற்கும் இதுபோல் ஆதாரம் காட்டுவர்.
    திருவள்ளுவர் ஒருவர் அல்லர் என்பதற்கும் ஆய்வுச் சர்ச்சைகள் உண்டு.
    பொதுவாக நாம் கவனிக்க வேண்டிய விடயமாக நான் கருதுவது அன்றிலிருந்து இன்றுவரை நம் தமிழில் இருக்கும் பேச்சு மொழி எழுத்து மொழி என்னும் வேறுபாடு.
    நம்மிடையே பேச்சில் நம்மிடையே வேறுபாடுகள் ( Dialects) இருந்தாலும் எழுத்தில் நாம் ஒரு பொது மொழியையே கையாள்கிறோம்.
    இலக்கியங்களிலும் அப்பொதுமொழிதான் செல்வாக்குற்றுப் பயன்படுத்தப் பட்டு வந்திருக்கிறது.

    அந்தப் பொதுத்தமிழில் சிற்சில வட்டார வழக்குகளின் ஆதிக்கம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

    அதைக் கொண்டு திரு. பத்பநாபன் காட்டும் ஆதாரங்கள் அபாரமானவை.

    வழக்கம் போல் பல்துறை தகவல்களோடு அருமையான பதிவு தங்களிடம் இருந்து.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அய்யா,

      நீங்கள் கூறும் கருத்தை நானும் கேட்டிருக்கிறேன். திருவள்ளுவர் ஒருவரல்ல என்பதும் அதில் ஒன்று. வரலாறு நம்மிடம் சிக்கி தடுமாறுவதற்கு நமக்கு போதிய ஆதாரம் இல்லாததே காரணம். பல ஓலைச் சுவடிகளை அடுப்பெரித்தே காலி செய்துவிட்டோம். அவைகள் நமக்கு முழுமையாக கிடைத்திருந்தால் கூட விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும்.

      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  13. அருமையான தகவல்கள் துல்லியமான படங்கள் அட்டகாசமான பதிவு.
    பொற்சரிகை கட்டி மீன் பிடிக்குமளவுக்கு வளமிக்க மக்கள் ,பிரமிப்பாக உள்ளது.
    வள்ளுவர் எந்த ஊரானாலும், அவர் தமிழர் அதுவே ஈழத்தமிழன் எனக்கும் பெருமை!
    2013 கன்யாகுமரி சென்று சூரிய உதயம் பார்க்க காத்திருந்தும், மழை,காற்றால் கடற் கொந்தளிப்பால் வள்ளுவர் சிலையையோ, விவேகானந்தர் பாறைக்கோ செல்ல முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் ஒரு முறை வாருங்கள் நண்பரே!

      வள்ளுவன் கல் பொற்றையும் அங்கு வாழும் காணி பழங்குடி மக்களும் வித்தியசமனவர்கள். அவர்கள் வள்ளுவரைத்தான் தெய்வமாக வழிபடுகிறார்கள். குளுமையான இடம். ஒரே தொந்தரவு என்னவென்றால் போக்குவரத்து வசதியில்லை என்பதுதான்.

      நீக்கு
  14. ஆச்சரியமான பல தகவல்களை இன்று தான் படித்தேன். எங்கு பிறந்திருந்தால் என்ன இன்னும் நமக்காக எழுதிச்சென்ற திருக்குறள் வடிவில் நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர்களுக்கான நினைவுச்சின்னங்கள் தான் விவேகானந்தர் பாறை என்றும் திருவள்ளுவர் சிலையென்பதும் என்பது என் கருத்து இருப்பினும் ஆராய்ச்சி செய்பவர்களை மதிக்கவும் வேண்டும். எத்தனை ஆண்டு காலம் அவர்களின் தேடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக தாமதமாகத்தான் தங்கள் பின்னூட்டத்தை பார்க்கிறேன். வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒருவர் எங்கு பிறந்திருக்கிறார் என்று குத்துமதிப்பாக கடந்து சென்று விட முடியாது. அவர்களுக்கு துல்லியம் வேண்டும். அதற்கான ஆய்வுதான் இது. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  15. பகிர்விற்கு நன்றி திரு செந்தில், இதன் தொடர்பான என்னுடைய கருத்து எமது தளத்தில் விரைவில்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையும் படித்தேன் அதையும் படித்தேன் . இருவருக்குமே சபாஷ் !

      http://koilpillaiyin.blogspot.com/2015/10/poor.html

      நீக்கு
  16. செந்தில்குமார் அய்யா அவர்களுக்கு வணக்கம் நான் இதுவரை கேள்விப்படாத தகவல்கள், நன்றி. இனி திருவள்ளுவர் பிறந்தது குமரி மாவட்டம் என்று உறுதியாக சொல்வேன்.

    பதிலளிநீக்கு
  17. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த ...வான் புகழ் பெற்ற எங்கள் குமரி கண்டம்.....கன்னியாகுமரி மாவட்டம்....T தனம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை