கடந்த வாரம் 'சுவடிகளைத் தேடி' என்ற தலைப்பில் கரந்தையார் எழுதிய போதே இவரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.
பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்ற பெயர் கொண்ட இந்த ஆங்கிலேயத் தமிழறிஞரை யாருக்கும் தெரியாது. தமிழகத்தின் பெரு நகரங்களில் கே.கே.நகர், அண்ணா நகர் போல எல்லீஸ் நகரும் இருக்கும்.
அதுவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கிய குடியிருப்புகளுக்கு இந்த பெயரை வைத்திருப்பார்கள். வைத்தவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
எல்லீஸ் என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் ஒருவர் இருந்தார். 'சகுந்தலை' போன்ற படங்களை இயக்கியவர். எல்லீஸ் ஆர் டங்கன் அவர் பெயர். அவருடைய பெயரில் தான் இந்த நகரங்கள் அமைந்திருக்கின்றன என்பதுதான் பலரின் எண்ணம். அந்தளவுக்கு இந்த அறிஞரை யாருக்கும் தெரியாது.
இங்கிலாந்தில் பிறந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ் ஒரு ஆங்கிலேயர். சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக விளங்கியவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்த் துறை செயலாளராக சென்னைக்கு வந்தார்.
எட்டாண்டுகள் அந்த வேலையைச் செய்தார். அதன்பின் சென்னை கலெக்டராக பதவி உயர்வு பெற்று 10 ஆண்டுகள் பணியாற்றினார். சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதற்காக பல இடங்களில் கிணறுகளை தோண்டினார். அந்த கிணற்றின் அருகே தமிழில் கல்வெட்டு அமைத்தார். அதில் 'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு' என்ற நீரின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பொறித்திருந்தார்.
இவரது பொறுப்பின் கீழ் இருந்த நாணயச்சாலையில் திருவள்ளுவர் உருவம் பதித்த இரண்டு நாணயங்களை வெளியிட்டார். பிரிட்டிஷ் மகாராணிகளின் உருவம் மட்டுமே பதித்து வரும் அந்தக் காலக்கட்டத்தில் இது பெரும் புரட்சி.
கலெக்டரான பின் அவர் பல இந்திய மொழிகளை கற்றார். அந்த மொழிகளில் அவருக்கு தமிழே மிகவும் பிடித்திருந்தது. 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் இவர்தான்.
தமிழ் மொழியை தெரிந்து கொண்டதோடு அவர் நின்று விடவில்லை. தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளுக்கு விரிவான விளக்கம் எழுதினார். அதை முழுதாக முடிக்கும் முன்னே மரணத்தைத் தழுவினார்.
அவரின் திருக்குறள் விளக்கவுரை அரைகுறையாகவே அச்சிட்டு வெளியிடப்பட்டது. யாரும் சொல்லாத பல விளக்கங்களை புதுமையாக சொன்ன அறிஞர் என்று தமிழறிஞர்கள் இவரை பாராட்டினர்.
தமிழ் மீது தணியாத தாகம் கொண்ட எல்லீஸ், பண்டைய இலக்கியங்களை சேகரித்து பாதுகாக்கவும் செய்தார். குறிப்பாக வீரமாமுனிவர் எழுதிய நூல்களை சேகரிப்பதற்காக தனது சொத்துக்களின் பெரும்பகுதியை விற்று செலவு செய்தார். அப்படி அவர் தேடும் போது கிடைத்த பொக்கிஷம்தான் 'தேம்பாவணி' என்ற காவியம். இவரது முயற்சி இல்லையென்றால் இந்த காப்பியம் நமக்கு கிடைக்காமலே போயிருக்கும்.
தமிழரின் சிறப்புகள் பற்றி பல ஆய்வுக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். அந்தக் காலக்கட்டத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. அதற்காகவே சென்னையிலிருந்து மதுரை வந்தார். தமிழோடு தொடர்பு கொண்ட பல இடங்களைப் பார்த்தார். இங்கும் ஏராளமான சுவடிகளைச் சேகரித்தார்.
அதன்பின் ராமநாதபுரம் சென்றார். அங்கிருந்த தாயுமானவர் சமாதியை கண்டுருகினார். அப்போது அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது. அது எதிரிகளால் வைக்கப்பட்டதா என்ற விவரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக சுய உணர்வை இழந்தார்.
மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் மதுரைக்கு வரும் முன்னே மரணம் அவரைத் தழுவிக்கொண்டது. 1819 மார்ச் 10-ல் மதுரையைப் பார்க்க வந்த எல்லீஸ் மீண்டும் சென்னை திரும்பவே இல்லை.
சென்னையிலும் மதுரையிலும் அவர் சேகரித்து வைத்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் கேட்பாரற்று கிடந்தன. பெரிய அறைகளில் மலை போல் குவிந்திருந்த ஓலைச் சுவடிகளை ஏலம் விட ஆங்கிலேய அரசு முடிவு செய்தது.
அந்த சுவடிகளின் மகத்துவம் அறியாத தமிழர்கள் யாரும் அவற்றை விலை கேட்க முன்வரவில்லை. பல மாதங்கள் பயனற்றுக் கிடந்த சுவடிகளை செல்லரிக்கத் தொடங்கின.
பல ஆண்டுகள் அலைந்து திரிந்து, சொத்தை விற்று, சேகரித்த பொக்கிஷங்கள் எல்லாம் சென்னையிலும் மதுரை கலெக்டர் பங்களாவிலும் பல மாதங்கள் விறகாக எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
தமிழின் பெருமை உணர்ந்து, அதற்கு தொண்டாற்றிய எல்லீஸின் கனவும் சுவடிகளோடு சுவடியாக எரிந்து போனது. அவரை மறக்கக் கூடாது என்பதற்கு தான் எல்லீஸ் நகர் என்று அரசு பெயர் வைத்தது. ஆனால் யார் அந்த எல்லீஸ் என்று யாருக்குமே தெரியாததுதான் வேதனையின் உச்சம்..!
அய்யா வணக்கம்.
பதிலளிநீக்குநீங்கள் எல்லீஸைப் பற்றிக் கூறியிருப்பது அருமை. இவர் பற்றி திருக்குறள் கற்பிதங்கள். புனைவு எண். 1 என்னும் பதிவில் சாம் அண்ணாவின் பின்னூட்டத்தில் இவரை நினைவு கூர்ந்தேன்.
“வடமொழிக்கு ஒரு மாக்ஸ்முல்லர் என்றால் தமிழுக்கு கார்டுவெல்.
ஆனால் கார்டுவெல்லுக்கு முன்பே தமிழ் தனித்தன்மை உடைய மொழி, சமஸ்கிருதத்தில் இருந்து கிளைத்ததல்ல என்னும் கருத்துடன் திராவிட மொழிக்குடும்பத்தை ஆராய்ந்த பிரான்ஸ் ஒயி்ட் எல்லீஸின், 40 வயதிற்குப் பின்புதான் நூல்களை வெளியிடுவது என்ற கொள்கை தமிழுக்குக் கிடைத்த சாபமாய்ப் போயிற்று.
42 ஆம் வயதில் அவன் இறந்து போனான்.
A.C.Burnell இன் “The Aindra School of Sanskrit Grammarians.“ என்ற நூலுக்கு எல்லீஸ் எழுதிய முன்னுரை ஒன்று போதும் அவனது மொழி ஆய்வை விளக்க..!
அவன் நூலெழுத எடுத்து வைத்திருந்த,பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட குறிப்புகள், அவன் இறப்பிற்குப் பின் அவன் பட்லருக்கு சமையலுக்கு, அடுப்பெரிக்கப் பயன்பட்டதுதான் உச்சகட்ட சோகம்......! “
நேரமிருப்பின் கண்டு கருத்துரைக்க வேண்டுகிறேன்.
காலச்சுவடு பதிப்பகம் மொழிபெயர்த்து வெளியிட்ட தாமஸ் டிரவுட்மனின் “ திராவிடச்சான்று “ என்னும் நூல் எல்லீஸின் வாழ்க்கைக் குறிப்புகளையும், கார்டுவெல்லுக்கு முன்பே அவர் கணித்த திராவிட மொழிக் குடும்பம் என்னும் சித்தாந்தத்தையும் அறியத் துணைசெய்யும்.
பல்வேறு சுவைகளையுடைய பதிவுகளால் எல்லார் மனதிலும் எளிதாக இடம்பிடிக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
நன்றி.
தங்களின் கருத்துப்பதிவால் எல்லீஸ் பற்றி மேலும் பல தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி
நீக்குஎல்லீஸ் எழுதிய முன்னுரை ஒன்று போதும் அவனது மொழி ஆய்வை விளக்க..! அவன் நூலெழுத எடுத்து வைத்திருந்த,பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட குறிப்புகள், அவன் இறப்பிற்குப் பின் அவன் பட்லருக்கு சமையலுக்கு, அடுப்பெரிக்கப் பயன்பட்டதுதான் உச்சகட்ட சோகம்......! “
நீக்குஆய்வின் மதிப்பை உணராத மடமையர் வேறென்ன செய்வார்கள். தமிழர்களுக்கே அதன் அருமை தெரியவில்லை. அன்றைக்கும் கூட ஏராளமான பணக்காரர்கள் இருந்தார்கள். யாரவது எல்லீஸ் சேகரித்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளை ஏலம் எடுத்திருந்தால், தமிழுக்கு எவ்வளவு அரிய நூல்கள் கிடைத்திருக்கும். நம்மவர்களுக்கே அக்கறை இல்லாத போது மற்றவர்களை என்ன சொல்வது ?
இதுவரை நான் அறியாத விடயங்களை தந்தமைக்கு நன்றி நண்பரே...
பதிலளிநீக்குத.ம 3
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி நண்பரே!
நீக்குஎல்லீஸ் பற்றி தங்கள் மூலம்தான் அறிகின்றேன் நண்பரே
பதிலளிநீக்குஎல்லீஸின் வாழ்நாள் உழைப்பு , வாழ் நாள் சேகரிப்பு அனைத்தையும்இ,
அதன் மகத்துவம் அறியாமல் , ஏலம் எடுக்கக் கூட முன் வர வில்லை என்பதும்,
அடுப்பிற்காக எரிக்கப் பயன்பட்டது என்பதும் வேதனையான நிகழ்வுகள் .
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் தமிழின் அருமை அறிந்தார் யாருமில்லை என்பது வருத்தத்திற்கு உரியதுதான். தற்பொழுதுள்ள மதுரைத் தமிழ்ச் சங்கம் கூட, பாண்டித் துரைத் தேவர் மதுரையில் திருக்குறள் நூலே எவரிடத்தும் கிடைக்காதது கண்டு, மனம் நொந்து, இந்த இழி நிலையினை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப் பட்டதுதான்.
நன்றி நண்பரே
இப்பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு
மீண்டும் என் நன்றி
தம +1
உண்மைதான் நண்பரே! அரிய பொக்கிஷங்களை இழந்து விட்டோம். தங்களின் பதிவு மூலமே இவரைப் பற்றி எழுதும் எண்ணம் தோன்றியது. அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நீக்குஎல்லீஸ் பற்றிய சிறப்புகளை அறிந்தேன்... நன்றி...
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சார்!
நீக்குஅப்புறம் pop-up face book தேவையா..? என்று யோசிக்க வேண்டுகிறேன்...
பதிலளிநீக்குதங்களிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும்போதே அது பாதகமானதாகத்தான் இருக்கும். நீக்கி விடுகிறேன்.
நீக்குஇதுவரை நான் அறியாத செய்தி! எல்லீஸ் பற்றி பலரும் அறிய செய்தீர்! மிக்க நன்றி!
பதிலளிநீக்குபொதுவாக நமது நகரங்களில் இருக்கும் இடங்களின் பெயர்கள் தமிழ் பெயர்களாகவே இருக்கும். அப்படி இல்லையென்றால், அது மதம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். எல்லீஸ் என்ற பெயர் மதம் சம்பந்தமானதாக இல்லை. அப்படியென்றால், யார் இந்த எல்லீஸ் என்று தேடிய போது தான் மனதை உருக்கும் இந்த மனிதர் பற்றி தெரிய வந்தது அதை பகிர்ந்துக்கொண்டேன்.
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
அவரின் ஒளிப்படம் எதுவும் இருக்கா?
பதிலளிநீக்குஅவரின் ஒளிப்படம் எதுவும் இருக்கா?
பதிலளிநீக்குகருத்துரையிடுக